Advertisement

EPILOGUE
சில வருடங்களுக்கு பிறகு
“சீக்கிரம் சீக்கிரம் அந்த பக்கம் வாங்க, பெரஹரா போய்டும்” தன்னுடைய மூன்று வயதே ஆனா குழந்தையை தூக்கிக் கொண்டு ஹரித முன்னால் நடக்க, உவிந்து லஹிருவின் மகளை தூக்கிக் கொண்டு அவனை தொடர்ந்தான்.
பல்லின் திருவிழா என்றும் அழைக்கப்படும் கண்டி எசல பெரஹரா (கண்டி ஸ்ரீ தலதா பெரஹரா ஊர்வலம்) திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஹரிதாவின் மனைவி நிறைமாத வயிற்றை தள்ளிக் கொண்டு “கொஞ்சம் பொறுமையா நடங்க என்னால முடியல” அந்த கூட்டத்தின் இரைச்சலில் கூற அது ஹரிதாவின் காதில் விழவே இல்லை.
“நீ பொறுமையா போ… நான் உன் கூட வரேன்” என்றாள் மகனை கையில் பிடித்தவாறு சாரு.
“அவனை இப்படி கொடுமா” பேரனின் கையை பிடித்துக் கொண்ட ஜீவக “நீங்க ரெண்டு பேரும் பத்திரமா நடங்க” என்றான்.
இலங்கையின் கண்டியில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்த வரலாற்று ஊர்வலம் ஆண்டுதோறும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புத்தரின் புனித பல்லுக்கு மரியாதை செலுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
1815 இல் கண்டிய இராச்சியம் பிரிட்டிஷாரிடம் வீழ்ந்த பிறகு, நினைவுச்சின்னத்தின் காவல் மகா சங்கத்திடம் (பௌத்த மதகுரு) ஒப்படைக்கப்பட்டது. அரசர் இல்லாத நிலையில், நினைவுச்சின்னம் மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பான வழக்கமான நிர்வாக விஷயங்களை கையாள “தியவடன நிலமே” என்று அழைக்கப்படும் ஒரு தலைமை பாமரர் நியமிக்கப்பட்டார்.
இன்று அந்த பதவியை வகித்து பெரஹராவை சிறப்பிக்க, யானையின் மேல் பவனி வந்து கொண்டிருந்தான் லஹிரு. அவனோடு பஸ்நாயக்க நிலமே பதவியை வகிப்போரும் யானைகளின் மேல் பவனி வந்து கொண்டிருந்தனர்.
பெரஹெராவை ஏற்பாடு செய்வது தியவடன நிலமேவின் கடமையாகும். ஜோதிட விஷயங்களின் ஆலோசகரான நெகத் மொஹோட்டலாவிடம் இருந்து சுப நேரத்தைப் பெற்று, பஸ்நாயக்க நிலமேகலை சந்தித்து பெரஹரா நடத்துவது தொடர்பான பல்வேறு சடங்கு கடமைகளை பற்றி ஆலோசித்தித்து பொறுப்புகளை ஒப்படைப்பது விழாவை சிறப்பிப்பது கடமையாகும்.
வெள்ளை பஸ்திரம் அணிந்த பாடகர்கள் குழு, பற்களை சுமந்த கோவில் யானையின் வருகையை அறிவிப்பார்கள். அதை தொடர்ந்து திருவிழா ஆரம்பமாகும்.
இரவு முழுவதும் தெருவில் நடைபெறும் ஊர்வலத்தை கண்டு கழிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தவண்ணம் இருக்க, கோவிலுக்கு அருகே  வந்து சேர்ந்த லஹிருவின் குடும்பத்தார் அவன் யானை மீது ஏறிய பொழுதிலிருந்து அவனை பாத்திருந்தனர்.
“அப்பா யானைல போறாரு பயமில்லையா?” லஹிருவின் எட்டு வயதான மகன் தாருக{thaaruka} கேட்க,
“அப்பா எதற்கு பய பாடணும்? அவர் சொன்னா யான கேக்கும்” என்றாள் ஆறே வயதான மகள் சதலி.{sadhali} 
“காதலிக்கிறேன்னு சொல்லி பின்னால விடாம சுத்தின. கல்யாணம் ஆகி கொழந்த பொறந்ததும் கண்டுகிறதே இல்ல” கணவனை திட்டலானாள் ஹரிதவின் காதல் மனையாள் ருக்ஷானா.
அவனோ மனைவியை பார்த்து புன்னகைத்து கண்சிமிட்டிவிட்டு மகனுக்கு யானைகளை காட்டலானான்.
“அந்த கதையைத்தான் நாங்களும் கேக்குறோம். நீங்க ரெண்டு பேரும்தான் இன்னைக்கி வரைக்கும் சொல்ல மாட்டேங்குறீங்க” கிண்டலாகவே கூறினாள் சாரு.
செனுரியை திருமணம் செய்யுமாறு சுதுமெனிகே ஹரிதவிடம் பேசிய பொழுது, அவன் மறுத்த ஒரே காரணம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண் ஒரு முஸ்லீம் பெண் மாத்திரமன்றி ஆளும் கட்ச்சியின் அமைச்சரின் மகள் என்பதுமேயாகும்.
“என்னடா திடிரென்று சொல்லுற? இதெல்லாம் சரிப்பட்டு வருமா?” அமைச்சர் பிரச்சினை செய்வார் என்று தம்பிக்கு புரிய வைக்க முனைந்தான் லஹிரு.
“இத்தனை நாளா அவ சம்மதம் கிடைக்கல, இப்போதான் சரினு சொல்லி இருக்கா அவ வீட்டுல பேசுறது அவ பொறுப்பு. பிரச்சினை பண்ணா நான் பாத்துக்கிறேன்” சிரித்து பேசும் விளையாட்டுத் தனமான ஹரிதவை அந்த பேச்சில் காண முடியவில்லை.
பிரச்சினை செய்வார் என்று எதிர்பார்த்த அமைச்சர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஹரிதவை மதம் மாறக் கூட கூறவில்லை. அவர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தமைக்கான காரணம் அதிகமான ஓட்டு சிங்களவர்களின் ஓட்டாக இருப்பதாக அரசல்புரசலாக பேச்சு அடிபட்டாலும், “மகளின் சந்தோசம் முக்கியம் என்று நினைத்தார் அவர்தான்யா பெரிய மனுஷன்” என்று இளசுகளின் மத்தியில் நல்ல பெயர் இருந்தது.
ஆனால் புஞ்சி நிலமேவுக்கும், மேனிகேவுக்கும் இதில் சுத்தமாக விருப்பம் இல்லை. தங்களின் ஒரே மகன் ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்வதா? என்று மகனிடம் சண்டை போட்டாலும், ஆளும் கட்ச்சி அமைச்சரிடம் சண்டை போட முடியவில்லை. பல அமைச்சகர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. அமைதியாக திருமணத்தை நடாத்தி வைத்தனர்.
திருமணம் கூட சிங்களவர்கள் முறைப்படியும், முஸ்லீம்களின் முறைப்படி என்று இரண்டு விதமாக நடைபெற்றது தனி சிறப்பு.
“நீ எப்போ லவ் பண்ண? உன் லவ் ஸ்டோரி தான் என்ன?” என்று கேட்டால் ஹரித பதில் சொல்லாமல் நழுவிக் கொண்டே இருந்தான். அவன் மனைவியும் “அதை அவரிடமே கேளுங்கள்” என்பாள்.
அதைத்தான் இன்று சாரு கேட்டிருந்தாள். சிரித்து சமாளித்த ருக்ஷானா “யானை வருது, யானை வருது” சாருவின் கவனத்தை பெரஹராவின் பக்கம் திருப்பி விட்டாள்.
கோவில் யானைகளுக்கென அலங்கரிக்கப்பட்ட ஆடைகளில் யானைகள் ஊர்வலம் வர, யானைகளை தொடர்ந்து நடனக் கலைஞ்சர்களும் நடனமாடிய வண்ணம் வந்து கொண்டிருந்தனர்.
சாரு இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான் முத்து.
“என்னடா வான்மதி வரமுடியாது என்று சொல்லிட்டாளா?” சாரு சிரிக்க,
“கூட்டம் என்றாலே அவளுக்கு அலர்ஜி. அவளை அம்மாவோட இருக்க சொல்லிட்டு நான் மட்டும் வந்தேன்” என்றவன் லஹிருவை வியந்தவாறு பார்கலானான்.
லஹிரு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, புஞ்சி நிலமே காலனி மக்களுக்கு மேலதிகமாக நிலங்களையும் கொடுத்து, வீடுகளையும் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யலானான்.
கண்டியில் ஒரு மொபைல் கடையை திறந்து அதை முத்துவின் பொறுப்பில் ஒப்படைத்த லஹிரு அங்கு ஒரு வீட்டை வாங்கி திருமணப்பரிசாக வான்மதிக்கும், முத்துவுக்கும் கொடுத்து விட்டான்.
கடையைத்தான் கொடுக்க போகிறான் என்று சாரு நினைக்க, வீட்டை கொடுத்தது அவளை கேள்வி கேட்க வைத்தது.
“கடையை கொடுத்து சம்பாதித்து வீட்டை கட்டிக்கொள்ள சொல்லி இருக்கலாமே என்று கேட்டாள்.
கடைய முத்து பேர்ல கொடுத்த ஏதாவது பிரச்சினை என்றா வித்துடுவான். திரும்ப பழைய நிலைமைதான். சொந்தமா வீடு இருந்தா ஏதாவது செஞ்சி பொளச்சிப்பான். இப்போ பாரு என் கடை என்றுதான் பொறுப்பா பாத்துக்கிறான். இதுவே அவன் கடை என்றா காலைலயே கடைக்கு போய் இருப்பானா? சொந்த கடை தானே என்று அலட்ச்சியமாக இருந்திருப்பான்”
கணவன் சொல்வது உண்மை என்று புரிய அமைதியானாள் சாரு. இத்தனை வருடங்களில் முத்து கடையை சிறப்பாக நடத்தியதில் கடை அவன் பெயரிலையே மாற்றப்பட்டு விட்டது. முத்துவுக்கும் வான்மதிக்கும் நான்கு வயதில் திவ்யா என்றொரு மகள் இருக்கின்றாள்.  
இலங்கையின் தனித்துவமான அடையாளமாக, ஊர்வலத்தில் பாரம்பரிய உள்ளூர் நடனங்களான தீ நடனங்கள், சவுக்கை-நடனம் என்பன நடை பெற்றுக் கொண்டிருந்தன.
கொடி ஏந்தியவர்கள், பெரமுன ரல (முன்னணி அதிகாரி) என்று அழைக்கப்படும் அதிகாரி. அவரைத் தொடர்ந்து கண்டிய டிரம்மர்ஸ் மற்றும் நடனக் கலைஞர்கள் கூட்டத்தைக் கவர்ந்தனர்.
விடிய விடிய திருவிழாவை கண்டு கழித்தவர்கள் வீட்டுக்கு வர அதிகாலையாகி இருந்தது. குழந்தைகள் பெரியவர்களின் தோளிலையே தூங்கி இருக்க, வீட்டுக்கு வந்த உடன் அவர்களை தூங்க வைத்து பெரியவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள்.
லஹிரு வீட்டுக்கு வர மதியத்தை தொட்டிருந்தது.
“சாப்ட்டியாப்பா?” அவனுக்காக வாசலிலையே காத்திருந்த சுதுமெனிகே கேட்டாள்.
வயதின் முதிர்ச்சியின் காரணமாக அவளால் இப்பொழுது அவளுடைய வேலைகளையும் கூட செய்துகொள்ள முடியவில்லை. அதிக நேரம் வாசலில் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பாள்.
அவள் அருகில் அமர்ந்து கொண்ட லஹிரு “நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா? நேத்து டீவில பெரஹரா பாத்தீங்களா?”
“பார்தேன்ப்பா… ரொம்ப சந்தோசம்” அவன் கையை பற்றிக் கொண்டவள் “குடும்பம் பிள்ளைகுட்டி என்று உன்ன இப்படி பாக்குறப்ப இன்னும் சந்தோஷமா இருக்கு” கண்களில் நீரோடு கூறினாள்.
“சாருவை எனக்கு கல்யாணம் பண்ணி வம்சத்துக்கு ரொம்ப நன்றி அப்பத்தா. இத்தனை வருஷமா என்ன புரிஞ்சி நடந்துகிறா” அப்பத்தாவின் கைகளை பிடித்துக் கொண்டு இவன் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே வண்டிச் சத்தம் கேட்டு தண்ணீரோடு அங்கு வந்தவள் கணவனுக்கு தண்ணீரை கொடுத்து விட்டு
“சாப்பாடு ரெடியா இருக்கு குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்பிடலாம்” என்றாள்.
“பார்த்தீங்களா?” கண்களாளேயே அப்பத்தாவுக்கு மனைவியின் பொறுப்புணர்ச்சியை கூறியவன் “சதலியும், தாருகவும் எங்க?” என்று கேட்க,
“உங்க தம்பி கூடத்தான் கிணத்துல குளிக்க போய் இருக்காங்க. ஆமா நாளைக்கு தானே நீர் வெட்டு விழா? ஏற்பாடெல்லாம் எப்படி போகுது?” 
பண்டிகை பாரம்பரிய தியா-கேபீமா சடங்கோடு முடிவடையும். இது கண்டி கெட்டாம்பேவில் உள்ள மகாவெலி ஆற்றில் நடைபெறும் நீர் வெட்டும் விழாவாகும்.
“எல்லாம் பக்காவா பண்ணிட்டேன். நீ கொடுத்த ஐடியாவால இந்த வருஷம் கண்டியில் மியூசியம் திறந்ததினால ஏகப்பட்ட மக்கள் பார்வையிட வராங்க. போன வருடங்களை விட கூட்டம் அதிகம் என்று போலீஸ் தகவல் சொல்லுது” என்றவாறு அறைக்கு சென்றான் லஹிரு.
“என்னப்பா உன் பொண்ணு பேசினாளா?” அங்கே வந்த ஜீவகயிடம் கேட்டாள் சுதுமெனிகே
செனுரி இங்கே இருக்க முடியாமல் அனோமாவிடம் சென்று விட்டாள். அவளுக்கு திருமணமாகி இருந்தது. என்ன இருந்தாலும் பெற்ற மகள் அல்லவா ஜீவக அழைத்து பேசுவான். இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்தவள் சமீப காலமாகத்தான் தந்தையோடு பேச ஆரம்பித்திருந்தாள்.
“பேசினா அத்த. சிங்கள புது வருஷத்துக்கு வரலாம். இலங்கையோட அரசகால பொருட்கள் சில இங்கிலாந்து மியூசித்துல பார்த்தாளாம். அத பத்தி சொல்லிக்கிட்டு இருந்தா” என்றான் ஜீவக.
“இங்க இருந்து கொண்டு போனதுதான்” என்றாள் சுதுமெனிகே.
வீட்டில் கிடந்த பழங்கால பொருட்கள் அனைத்தையும் அப்படியே போட்டு வைத்தால் காலப்போக்கில் அவை அழிந்து போய் விடும் என்று சாருதான் ஏன் ஒரு மியூசியம் ஆரம்பிக்கக் கூடாது? பாடசாலை மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாகும் என்று கூற, லஹிருவுக்கும் அது நல்ல ஐடியாவாக தோன்றியது.
அது சம்பந்தமாக தலதாமாளிகாவின் பிராதான பௌத்தகுருவை சந்தித்து பேச, அமைச்சரிடம் பேசி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து பொருட்களும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே மியூசியத்தில் சேர்க்கப்பட்டன.
லஹிருவின் இந்த முயற்சியை அறிந்த பல வளவ்வையை சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டில் உள்ள பழமையான பொருட்களை மியூசியத்துக்கு கொடுக்க, இன்று கண்டியில் மிக முக்கியமான மியூசியம் உருவாகி இருந்தது.
“ரொம்ப டயடா இருக்கா?” குளிக்க துண்டை எடுத்துக் கொடுத்தவாறே கேட்டாள் சாரு.
இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தாலும், வீட்டுக்கு வந்து மனைவியை பார்த்ததில் எல்லா சோர்வும் பறந்தோடிய உணர்வில் மனைவியை இழுத்து அணைத்தவன் “அதான் என் எனர்ஜி பூஸ்ட்டா நீ இருக்கியே” என்று முத்தமிட
“போங்க போங்க போய் குளிச்சிட்டு வாங்க” பொய்யாய் முறைத்தவள் அவனை தள்ளி விடக் கூட இல்லை.
இத்தனை வருடங்களில் அவளை அறிந்து வைத்திருந்தவன் “யக்ஷணி என்ன ரொம்பவே ஆட்டிப் படைக்கிற” என்று விட்டு அவள் தோளில் இருந்த துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கதைவடைத்துக் கொண்டான்.
“என்ன யக்ஷணி என்றா சொல்லுற? வெளிய வா உன்ன வச்சிக்கிறேன்” கோபமாக கதவை தட்டியவாறு அவனை வசைபாடலானாள் சாரு.
இத்தனை வருடங்களாகியும் யக்ஷணி என்று அழைத்தால் கோபம் வருவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை. வாயில் வரும் கெட்டவார்த்தைகளை நிறுத்தவும் முடியவில்லை.
இவளிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள் என்று இவளே அஞ்ச, தனியாக இருக்கும் பொழுது அவளை யக்ஷணி என்று அழைத்து கோபப்படுத்தி விட்டு ஓடி விடுவதை வழக்கமாக்கி இருந்தான் லஹிரு.
காதலும், புரிதலும் இருக்கும் தங்களுடைய வாழ்க்கையில் சண்டையே வராததால் வாழ்க்கை போரடிக்கும் என்று அவளை கோபப்படுத்தி பார்கின்றானோ என்னவோ. அவர்களின் வாழ்வு இவ்வாறே தொடரட்டும்.

நன்றி
வணக்கம்

Advertisement