Advertisement

அத்தியாயம் 9
அன்றொரு ஞாயிற்றுக்கிழமை லஹிருவும் ஹரிதவும் ஏற்றுமதி விஷயமாக கொழும்புக்கு பயணப்பட்டிருந்தனர். அவன் இல்லாததால் சுதுமெனிகேயும் இன்று பாக்டரிக்கு செல்லவில்லை. சுதுமெனிகேவையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். “அப்பத்தா பாக்டரிக்கு கிளம்பினால் உன்னைத்தான் கேட்பேன்” என சாருவை அழைத்து சுதுமெனிகேயின் முன்னிலையில் மிரட்டாத குறையாக கூற தான் எங்கேயும் செல்ல மாட்டேன் என்றாள் அவள்.
இரண்டு நாள் தங்கி விட்டு வருவதாக உத்தேசம். தம்பியை சாருவோடு தனியாக விட்டு செல்ல அவனுக்கு விருப்பமில்லை. தம்பியை கையேடு அழைத்து சென்று விட்டான்.
அன்று பாக்டரியிலிருந்து வீடு வந்தவள் சுதுமெனிகே எவ்வளவோ சொல்லியும் ஓய்வெடுக்காமல் அனைவருக்கும் உணவு பரிமாறி, வளமை போல் வேலை செய்தது லஹிருவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“கல்நெஞ்சக்காரி. தன்னுடைய குறிக்கோளில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றாள். இவளிடம் ஜாக்கரிதையாகத்தான் இருக்க வேண்டும்” என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் அவளோ இப்படி சோர்ந்து போய் அமர்ந்து விட்டால். அவன் பேசும் ஒவ்வொன்றுக்கும் அழுது கரைய வேண்டியதுதான் என்றே தன்னை மீட்டுக் கொண்டிருந்தாள்.
அடுத்து வந்த நாட்களில் அவனை சீண்டாமல் ஒதுங்கியே இருந்தாலும், அவள் அவளது வேலைகளை சரியாகத்தான் செய்தாள். ஹரிதவோடு சகஜமாகத்தான் பேசினாள். அவனை ஒதுக்க முடியவில்லை. அவனே வந்து பேச்சுக் கொடுப்பான். சிரிக்க வைப்பான். இது லஹிருவின் கண்ணில் பட்டு “நீ அடங்கவே மாட்டியா?” என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு முறைத்து விட்டு செல்வான்.
இவள் மட்டும் அவனிடம் தனியாக சிக்கினால் என்ன செய்திருப்பானோ? சிக்காமல் இவள் சுதுமெனிகேவோடு இருந்ததால் தப்பித்தாள். இருந்தும் அவள் செய்யும் வேலைகளில் குறை கண்டான். அதற்கு இவள் அவனை முறைத்தாள்.
சாரு ஒன்றும் குழந்தை இல்லையே கடைக்கு பூக்கள் வாங்க வரும் ஆண்கள் பூ வாங்க வருகிறார்களா? பூக்களை தொட்டுப் பேசும் சாக்கில் அவளை தொடுகிறார்களா? அவர்களது பார்வை எப்படிப்பட்டது? எந்த மாதிரி எல்லாம் பேசுவார்கள் என்று அறிந்துதான் வைத்திருந்தாள்.
ஹரித அவளை விட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பெரியவன். அவளை விட படித்திருந்தாலும் மனதளவில் அவன் ஒரு குழந்தை. லொடலொடவென இவள் கேளாமலையே அவன் எல்லாவற்றையும் ஒப்பிப்பதே அவன் மனதில் தப்பான எண்ணம் எதுவுமில்லை என்று அவளுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது. அவன் அண்ணன்தான் தம்பியை புரிந்துகொள்ளாமல் தன்னை இம்சை செய்வதாக மனதுக்குள் பொருமினாள்.
அன்று மாலை பக்டரியிலிருந்து வரும் பொழுது சாரு கேக் செய்து கொண்டிருந்தாள். மண்ணால் செய்யப்பட்ட ஓவன் வெளியே இருக்க, விறகு எரித்து கேக்கை உள்ளே வைத்து மரக்கட்டையிலான மூடியால் வாயிலை மூடி, நேரத்தை பார்த்துக் கேக்கை வெளியே எடுத்து வெட்டிக் கொண்டிருந்தாள். வாசனை பிடித்தவாறே ஹரித பின்பக்கம் வந்து சேர்ந்தான்.
“ஆஹா…ஆஹா… இதுக்குதான் வீட்டுல ஒரு பொண்ணு இருக்கணும் என்கிறது” அவன் கேக்கை பற்றி பேச வாய் திறந்த நேரம் லஹிரு தம்பியை கத்தி அழைத்திருந்தான். அவனுக்கும் தெரியும் வந்த உடனே அவன் யாரை தேடி சென்றிருப்பான் என்று.
லஹிரு அழைத்தது சாருவுக்கும்தான் கேட்டது. ஆனால் இவனோ கேட்காதது போல் “எனக்கென்னமோ சாரு எங்கண்ணன் உன்ன லவ் பண்ணுறானோன்னு தோணுது?” யோசனையாக சொல்வது போல் பாசாங்கு செய்தான்.
ஆம் அவன் நேரடியாக சொல்ல விரும்பவில்லை. நினைத்திருந்தால் எப்பவோ சொல்லி இருப்பானே. சிலநேரங்களில் லஹிரு நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து ஒருவேளை அவனே அவன் மனதை புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகம் ஹரிதவுக்கு உண்டாக சாருவின் காதிலும் போட்டு வைக்கலாம். அண்ணனின் நடவடிக்கைகளை கவனித்து அவளும் புரிந்துகொள்வாள். அவளிடம்  அண்ணனே சொல்லட்டும் என்றுதான் சந்தேகம் போல் கூறினான். 
“என்ன?” என்றவள் வாய் விட்டே சிரித்திருந்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?”
“அந்த சிடுமூஞ்சி என்ன லவ் பண்ணுதா?” என்றவளின் மனமோ “பண்ணா நல்லா இருக்கும் என்றது”
“எங்க அண்ணன் உனக்கு சிடுமூஞ்சியா? சரி அத விடு. யார் மீதும் கோபப்படாதவரு உன் மீது மட்டும் எதற்கு கோபப்படுறாரு”
“எதற்காம்? நீயே சொல்லேன்” இவன் என்ன சொல்ல விழைகிறான்? கேட்கும் ஆவல் பிறந்தது.
“குறிப்பா நான் உன் கூட பேசினாத்தான் அதிகமா கோபம் வருது. அது ஏன்?”
“ஏன்?” என்றவளுக்கு அவனிடம் அந்த காரணத்தை சொல்ல பிடிக்கவில்லை.
“ஏன்னா எங்க நான் உன்ன லவ் பண்ணிடுவேனோனு பொறாமை, அவரு லவ் பண்ணுற நீ என்ன லவ் பண்ணிடுவியோ எங்குற பொறாமை. இப்ப கூட பொறாமைலதான் கத்துறாரு” ஹரித நிறுத்தி நிதானமாக கூற,
“இதற்கு இப்படியெல்லாம் காரணம் இருக்கிறதா? நன்றாகத்தான் இருக்கிறது” சாரு சத்தமாகவே சிரித்தாள்.
“இத போய் உன் அண்ணன் கிட்ட சொல்லு அவார்டு, ரிவார்டு எல்லாம் கொடுப்பாரு. கைநிறைய வாங்கிக்க” என்றவள் அவன் தலையில் கொட்டி விட்டு செல்ல,
“இவளுக்கு நம்ம அண்ணனை பிடிக்கும் போலயே” தலையை தடவியவாறே யோசித்தான்.
தான் அழைத்தும் தம்பி வராததால் கோபமாக வந்த லஹிரு அடிக்குரலில் சீற, கேக்கை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தவள் அவன் குரலில் அதிர்ந்து பாசியில் வழுக்கி விழுந்து விட்டாள்.
மழை பொழிவதால் அந்த சிமெந்து தரையில் பாசி கட்டி இருந்தது. யாரும் அந்த மண்ணாலான அவனை பாவிப்பதில்லை. இவள்தான் இன்று கேக் செய்ய ஆயத்தமானாள். பாசியில் கால் வைக்காமல் கவனமாகத்தான் சென்றாள். ஹரித கூட தாண்டித்தான் சென்றான். லஹிரு கத்தியதில் இவள் கவனம் சிதறி விழுந்திருந்தாள். 
முட்டியிலும், உள்ளங்கையில் சிராய்ப்பு காயங்கள். கை வேறு பிசகி விட்டது போலும், வலி தாங்க முடியவில்லை. வலியையும் தாண்டி தன் இயலாமையால் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது இவன் முன் அழுது விடக் கூடாது என்று பல்லைக் கடித்தவாறு நின்றிருந்தாள்.
“சாரு பார்த்து” என்று ஹரித கூறியவாறு அவளை நெருங்கும் பொழுதே லஹிரு அவளை நெருங்கி தூக்கி உள்ளே சென்றிருந்தான்.
அவளால் நிச்சயமாக எழுந்திருக்க முடியாது. முயற்சி செய்தாலும் மீண்டும் வழுக்கி விழுந்து விடுவாள். யாராவது கைகொடுத்து உதவி செய்திருந்தாலே போதும், எழுந்து நொண்டி நொண்டி நடந்திருப்பாள். ஆனால் லஹிரு அவளை தொட்டு தூக்குவான் என்று சாரு சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியில் அவனையே பார்த்திருந்தாள்.  
“நீ என்ன பச்சை குழந்தையா? சின்ன சத்தத்துக்கும் பயந்து நடுங்குற? பார்த்து வரத் தெரியாதா?” அவளை திட்டியவாறே கட்டிலில் கிடத்தியவன் கையையும், முழங்காலையும் ஆராய்ந்து அவனே மருந்திட்டான்.
அவள் வலியில் கதற அதற்கும் திட்டு கிடைக்கவே வாய் மூடி கொண்டாள் சாரு. உடனே சந்திரசேனையை அழைத்து பாசி படிந்த இடத்தை நன்கு சுத்தம் செய்யுமாறும் உத்தர விட்டான்.
அண்ணனின் செய்கைகளை அமைதியாக பார்த்திருந்த ஹரித “நான் சொல்லல அண்ணனுக்கு உன் மேல லவ் இருக்குனு. நீ தான் புரிஞ்சிக்க மாட்டேங்குற” என்று விட்டு சென்றான்.
லஹிரு கொழும்புக்கு செல்லும் பொழுது கூட எதையாவது செய்து கை,காலை முறித்துக் கொள்ளாதே, நீ வந்தது அப்பத்தாவை பார்த்துக் கொள்ள என்று திட்டாத குறையாக முறைத்து விட்டுத்தான் சென்றான்.
இவனுக்கு எதையும் அன்பாக சொல்லி பழக்கம் இல்லையோ அவனை மனதுக்குள் வசைபாடினாள் சாரு.
இந்த இரண்டு நாட்களாகத்தான் லஹிருவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றாள். இல்லையென்றால் அவள் எங்கு இருந்தாலும் அவள் காணும் தூரத்தில் கண்கொத்திப் பாம்பாக நின்றுகொண்டு காவல் காப்பவனை என்னவென்று சொல்வது? இவளால் என்னதான் செய்ய முடியும்?  நின்றாள் குற்றம், நடந்தால் குற்றம் என்பது போல் வேலைதான் பார்க்க முடியுமா?
இந்த வீட்டில் உள்ள எல்லா இடத்தையும் பார்த்தாயிற்று. அப்பாவின் ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அந்த பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் அறையில் மட்டும்தான் இன்னும் பார்க்கவில்லை. இன்று அதை சுத்தம் செய்யும் சாக்கில் பார்த்து விட வேண்டியதுதான் என்ற முடிவோடு காலையிலையே வேலையை ஆரம்பித்தாள் சாரு. அவளை தொல்லை செய்ய லஹிருவும் இல்லாதது அவளுக்கு வசதியாக இருந்தது. இருந்திருந்தால் திட்டி இருப்பான். “வேலையும் செய்ய வேண்டும் திட்டும் வாங்க வேண்டும். திட்டுக்கு வட்டியை கழிக்க சொல்லணும்” 
“இப்போதான், கையும், காலும் சரியாகிருச்சு அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா? எதுக்கு இந்த வேலையெல்லாம் நீ பார்க்குற? சந்திரசேனைக்கு சொன்னால் செய்வான்” சுதுமெனிகே தடை உத்தரவு போட,
“போர் அடிக்குது பாட்டி சந்திரசேனையை வைத்துக்கொண்டு சுத்தம் செய்கின்றேன்” என்றவள் ஏதாவது தேவையென்றால் தன்னை அழைக்கும்படி கூறிவிட்டே வேலையில் இறங்கினாள்.
அரசகாலத்திலிருந்து பாவிக்கப்பட்ட பொருட்கள், உடைந்த கைவினை பொருட்கள், தளபாடங்கள் என்று அறை முழுவதும் குவிந்து கிடந்தன.
“வீசாமல் எதற்கு இத்தனையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களோ?” சந்த்ரசேன புலம்ப,
பழமையின் அருமை அவனுக்கு புரியவில்லை. ஆனால் சாருவுக்கு புரிந்தது. பழுதடைந்த பொருட்கள், உடைந்த பொருட்கள் என்று கலைநயம்மிக்க நிறைய பொருட்கள் குவிந்து கிடக்க, “மியூசியத்தில் வைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் இப்படி போட்டு வைத்திருக்கிறார்களே என்னை மிரட்டும் அவனுக்கு கூடவா தோன்றவில்லை” என்று லஹிருவை மனதுக்குள் வசைபாடினாள்.
தூசி தட்டி, துடைத்து அந்த விசாலமான அறையையே மியூசியம் போல் அலங்கரித்தவளின் கண்களுக்கு அந்த பழைய பெட்டி சிக்கியது.
இரண்டடி உயரம், இரண்டடி அகலமான இந்த பெட்டியில் அப்படி என்ன போட்டு வைத்திருப்பார்கள் புரியாமல் அதை தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தவள் அதை திறக்க முயல அது சாவி கொண்டு பூட்டப்பட்டது தெரியவே “தொறப்பு போட்டு பூட்டி இருக்காங்கன்னா அவ்வளவு பத்திரமான பொருட்களோ? ஆனா இப்படி போட்டு வச்சிருக்காங்க?” புரியாது முழித்துக் கொண்டிருந்தவள் தோளில் கைவைத்திருந்தாள் சுதுமெனிகே
“என்ன பெட்டி இது?”
“தெரியல பாட்டி. அந்த ரூம்ல இருந்தது”
“அதோ அந்த கபோர்ட் ட்ராயர்ல பழைய சாவி எல்லாம் போட்டு வச்சிருக்கோம் இதோட சாவியும் இருக்கும். பாரு”
ஏகப்பட்ட சாவிகளுக்கு இடையே சின்னதாய் இருந்த சாவி அவளை கவர்ந்தது மட்டுமல்லாது அந்த பெட்டியின் சாவித் துவாரத்துக்குள் நுழையக் கூடிய சாவி இதுதான் என்பது போல் குட்டியாக இருந்ததை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.
“கண்டு பிடிச்சிட்டியா? இங்க கொடு” சுதுமெனிகே சாவியை வாங்க சாரு அருகில் அமர்ந்துகொண்டாள்.
“ஏன் பாட்டி கல்யாணமாகி வந்து நீ இந்த வீட்டுலதான் இருக்க? இந்த பெட்டி இங்க இருக்குறது உனக்கு தெரியாதா?”
“இந்த வீட்டுல எவ்வளவு சம்பவங்கள் நடந்திருச்சு. சில சம்பவங்கள் என் மனச ரொம்பவும் காயப்படுத்திருச்சு. அதற்கு பிறகு நான் பெருசா எதுலயும் தலையிடுறதில்லை. இப்போ நான் வாழறதே என் பேரனுக்காக. அவன் மட்டும் கல்யாணம் பண்ணட்டும் நான் நிம்மதியா கண்ண மூடுறேன்” சிரித்தவள் பெட்டியை திறந்திருந்தாள்.
“என்ன இருக்கு உள்ள?” சாரு எட்டிப்பார்க்க, பழைய புகைப்படங்கள்.
“பொக்கிஷமா வைக்க வேண்டியதெல்லாம் இப்படி போட்டு வச்சது யாரு?” அந்தக்காலத்து கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் மற்றுமன்றி கலர் படங்களும் அதில் இருக்க, ஒவ்வொன்றாக பார்கலானாள் சுதுமெனிகே.
ஒரு புகைப்படத்தில் அவள் பார்வை குத்தி நிற்க “யார் பாட்டி இது?” என்று அந்த புகைப்படத்தை வாங்கிய சாருவுக்கு அதிர்ச்சசியில் கண்ணீரே வந்தது.
அது அவள் அன்னை கவிதாவின் புகைப்படம். இரட்டை ஜடையை மடித்துக் கட்டி குட்டை கவுனில் சிங்களப் பெண் போல் இருந்தாள்.
“கவிஷா இப்போ எங்க இருக்காளோ? குடும்பம் குட்டியா நல்லா இருந்தா சரி” பெருமூச்சோடு சொன்னாள் சுதுமெனிகே.
கவிதாவை சுதுமெனிகே கவிஷா என்றே அழைத்தாள். அவள் வாயில் பெயர் நுழையவில்லையா? அல்லது சிங்கள பெயர் கொண்டு அழைக்க ஆசை கொண்டாளா? தெரியவில்லை.
கள்ளம் கபடம் இல்லாமல் அழகாக சிரித்துக் கொண்டு புகைப்படத்தில் இருந்தவள் இப்பொழுது தன்னோடு இல்லை என்றதும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சாரு.
“என்னாச்சு சாரு?…” புரியாது கேட்ட ஹாமினே “நீ நீ… கவிஷாவோட பொண்ணா? அடிப்பாவி மகளே வந்த அன்னைக்கே சொல்ல வேணாமா?” அவளை கட்டி அணைத்தவள் “ஏன்டி   சொல்லல? உன் அம்மா எப்படி இருக்கா?” முகம் மலர கேட்டவளுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று அன்னை சொன்னது உண்மை என்று சாருவுக்கு நன்றாகவே புரிந்தது.
“அம்மா உயிரோட இல்ல பாட்டி. எனக்கு பன்னண்டு வயசுலயே…” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
அவளை ஆறுதல் படுத்தியவள் “சரி விடு கடவுளுக்கு ரொம்ப பிடிச்சவங்களைத்தான் அழச்சிக்குவான். இல்லையா இங்க பொறுப்புகள் கொடுத்து ஆயுளை கொடுப்பான். அவன் என்ன நினைக்கிறான்னு நமக்கு புரியாது” தனக்கும் சேர்த்துதான் சொல்லிக் கொண்டாள். 
சோபையாக புன்னகைத்தாள் சாரு. “ஏன் பாட்டி… அம்மா இங்க எப்படி வந்தாங்க? யார் கூட்டிட்டு வந்தாங்க?” அன்னை சொல்லி இருந்தாலும் சுதுமெனிகேயின் மூலம் கேக்க ஆசையாக இருக்கவே கேட்டிருந்தாள்.
“அவ வந்ததே என்ன பாத்துகிறதுக்குத்தான். இப்போ நீ என்ன எப்படி பாத்துக்கிறியோ அப்படிதான் அவளும். அப்போ நான் வழுக்கி விழுந்து இடுப்பும், காலும் சுளுக்கிருச்சு. தூக்கி வீல் செயார்ல வைக்க, கழுவ, துடைக்க என்று அருவருப்பே இல்லாம பண்ணா. அன்பா பாத்துக்கிட்டா. அருமையான பொண்ணு. இந்த போட்டோ கூட நான் கட்டாயப்படுத்தி எடுத்தது. எப்படி சிங்கள பொண்ணு மாதிரியே இருக்கா இல்ல” சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தவளின் முகம் சட்டென்று மாறியது.
“என்னாச்சு பாட்டி. அம்மா பண்ண கூடாத தப்ப பண்ணிட்டாங்களா?”
“அப்படி ஒன்னும் இல்ல. ஆமா உனக்கு எத்தனை சகோதர, சகோதரிகள்?” பேச்சை மாற்ற முயன்றாள் வளவ்வே ஹாமினே.
“எங்க அம்மாக்கு நான் ஒரே பொண்ணு. அப்பாக்கு எப்படி என்றுதான் தெரியல. அத தெரிஞ்சிக்கத்தானே இங்க வந்திருக்கேன். அத உங்க கிட்டயே கேட்டுடுறேன். கேட்டா சொல்ல மாட்டீங்களா?” அன்னையை பற்றி பேச்சு வந்து விட்டது. வீட்டில் ஆண்களும் இல்லை. பேசிவிடலாமே என்றுதான் ஆரம்பித்தாள்.
“நீ என்ன சொல்லவர? உன் அப்பா ஜீவக என்று சொல்லுறியா? இங்க பாரு ஜீவகயும் உன் அம்மாவும் காதலிக்கிறாங்க என்று எனக்கு தெரிய வந்ததும் நான் முதல்ல பண்ணது உன் அம்மாவ ஊருக்கு அனுப்பினதுதான்” கோபமாக சொன்னாள் சுதுமெனிகே.
ஜீவக சுதுமென்கியின் கணவன் வீரசிங்கையின் தங்கையின் மகன். மாத்தளை ரேனகல வளவ்வையின் ஒரே வாரிசு. கண்டியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தமையால் மாமா வீரசிங்கவின் வீட்டில் தங்கி இருந்தான்.
அத்தையை பார்த்துக்கொள்ள வந்த தமிழ் பெண் மேல் காதலா? ஆசையா? சுதுமெனிகேயின் துணிகளை துவைக்க தோட்டத்தின் எல்லையில் இருக்கும் கிணத்துக்கு செல்வாள் கவிதா. அவள் செல்லும் நேரத்தில் யாரும் அறியாமல் அங்கு செல்லும் ஜீவக அவளோடு பேசி பழகுவது வீட்டார் யாருக்கும் தெரியவில்லை. தமிழும் சரளமாக பேசினான். அதற்கு அவனுக்கு கல்லூரி நண்பர்களின் தோழமை உதவி இருந்தது.
சுதுமெனிகே கணவன் அறியாமல் உதவி செய்வாள். பெரிய உதவியாயின் கணவனிடம் கேட்டும் செய்வாள். வீரசிங்கவின் குணம் அவர்களுக்கும் தெரியும். உதவி செய்வதால் நன்றி விசுவாசத்தோடு இருக்கின்றனர்.
சுதுமெனிகேயின் உடல் தேறிய பின் தோட்டத்தில் நடக்க ஆரம்பித்த ஒரு நாள் கவிதாவும், ஜீவகயும் சிரித்துப் பேசுவது சுதுமெனிகேயின் கண்ணில் பட்டது.
அவளை கண்டு ஜீவக ஒன்றும் அதிர்ந்து நிற்கவில்லை. “கவிஷா நீ உள்ள போ…” அவளை அனுப்பி விட்டு “எந்த நோக்கத்தோடு இந்த பெண்ணோடு பழகுகிறாய்” என்று நேரடியாகவே மருமகனை கேட்டாள்
அதை அவன் எதிர்பார்த்திருப்பானோ? “சும்மாதான் பேசினேன் அத்த. நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல” சளைக்காமல் பதில் சொன்னான். 
மொச புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியாதா? காதலிப்பதாக இருந்தால் தைரியமாக சொல்லி இருப்பான். அவன் சொல்லவில்லை என்றதும்.
“என்ன பார்த்துக்கொள்ள வந்த பொண்ணு. வேற மதம். தப்பான நோக்கத்துல பழகி ஏடாகூடமா ஏதாவது ஆகிட்டா பிரச்சினை ஆகிடும். ஏற்கனவே நாட்டுல நம்மளுக்கு, அவங்களுக்கும் பிரச்சினை ஓயாம இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் மேலும் நடந்தா நாடே யுத்த பூமியாதான் மாறும். புரிஞ்சி நடந்துக்க” கோபமாக சுதுமெனிகே சொல்ல தலையசைத்து விட்டு சென்று விட்டான் ஜீவக.
சுதுமெனிகே அத்தோடு நிற்கவில்லை. கணவனிடம் தனக்குத்தான் இப்பொழுது உடம்பு குணமாகி விட்டதே கவிதாவின் உதவி தனக்கு தேவைபடாது என்று ஊருக்கு அனுப்புமாறு கூறினாள்.
மனைவியின் முகத்தை கூர்ந்து பார்த்த வீரசிங்க கேட்டது “மூத்தவனா? இளையவனா? குழந்தை உண்டாகி விட்டதா?” என்றுதான்.
சுதுமெனிகே இடுப்பு முறிந்து மாதக்கணக்கில் கட்டிலில் இருந்த பொழுது வீரசிங்க என்ன என்ன கூத்தடித்தார். தோளுக்கு மேல் வளர்ந்த ஆண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வெக்கமே இல்லாமல் ஊரில் எந்த பெண்ணின் வீட்டுக் கதவை தட்டினார் என்பதுவரை சுதுமெனிகேவுக்கு தெரியும். தெரிந்தும் தெரியாதது போல் இருப்பது சண்டை போட்டால் வீட்டிலையே ஆரம்பித்து விடுவார் என்பதினாலையே.
ஜாதிவெறி, மதவெறி ஊறிப்போன வீரசிங்க என்னவெல்லாம் செய்வார் என்று சுதுமெனிகேவுக்கு தெரியாதா?
“என்ன பேசுறீங்க வாய கழுவுங்க நம்ம பசங்கள பத்தி நாமே தப்பா பேசுவதா?” கணவனை முறைத்து விட்டு அகன்றாள்.
வீரசிங்க தன் பிள்ளைகளை எதுவும் செய்யப்போவதில்லை. கவிதாவை ஏதாவது செய்வார் என்று அஞ்சியே அப்படி பேசினாள். 
அதே வீட்டில் தான் வீரசிங்கவின் இரண்டு புத்திரர்களும் இருந்தார்கள். அவர்கள் வீரசிங்கவை போல் ஜாதி, மதம் என்று பார்த்து மனிதர்களோடு பழகக் கூடியவர்கள். வேலைக்கு வந்தவளிடம் அவர்கள் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. வேலையாட்களிடம் ஒரு எல்லையை வகுத்தே பழகி வந்தனர். அதற்கு காரணம் வீரசிங்கவின் வளர்ப்புதான். அதனாலே சுதுமெனிகே தைரியமாக பேசிவிட்டு சென்றாள்.
இதில் சம்பந்தப்பட்டது தன்னுடைய தங்கை மகன் என்றாலும் வீரசிங்க கவிதாவை விட மாட்டார் என்று தெரியும். அதனால்தான் ஊருக்கு அனுப்ப முடிவு செய்து பேசி இருந்தாள்.
கவிதா ஊருக்கு செல்லும் முன்பாக எந்த காரணத்துக்காகவும் ஜீவகை சந்தித்து பேசக் கூடாது என்று இருவரையும் கண்காணித்தாள்.
கவிதாவின் அண்ணன் வரும் நாளுக்கு முதல் நாள் பழங்கள், ஏலக்காய், கறுவா, கராம்பு, தேயிலை என மருமகனின் கையில் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தவள் கவிதாவையும் பத்திரமாக அவள் அண்ணனோடு ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
கவிதாவுக்கு திருமணமாகி இருக்கும் அவள் குழந்தைதான் சாரு என்று சுதுமெனிகே நினைத்தால் இந்த சாரு என்ன சொல்கிறாள்? அவள் தந்தை ஜீவகயாமே?
“என்ன விளையாடுகிறாயா? ஜீவக எப்படி உன் அப்பாவாக முடியும்? கவிஷா இங்கு வேலைக்கு வரும் பொழுது என் மூத்த மகனுக்கே திருமண ஆகவில்லை. நீ சொல்வது போல் உன் தந்தை ஜீவக என்றால் நீ லஹிருவை விட வயதில் பெரியவளாக இல்ல இருந்திருக்கணும்”
ஆம் அவள் சொல்வது உண்மைதான் கவிதா இங்கிருந்து செல்லும் பொழுது கர்ப்பமாக இருந்திருந்தால் சாருவுக்கு வயது லஹிருவை விட அதிகமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் நடந்தது அதுவல்லவே.
சுதுமெனிகே கணவனிடம் கவிதாவை ஊருக்கு அனுப்பும்படி கூறியதை கவிதா கேட்டுவிட்டாள். அதை ஜீவகயிடம் சொல்ல அவள் எவ்வளோ முயன்றும் சுதுமெனிகேயின் கண்காணிப்பில் இருந்ததால் அவளால் அவனிடம் பேசக் கூட முடியவில்லை.
தன் மீது அன்பாகவும், பாசமாகவும் இருந்த சுதுமெனிகே காதல் என்று வரும் பொழுது எதிரியாக மாறியதை கவிதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சுதுமெனிகே அவனை ஊருக்கு அனுப்பி வைத்த நிம்மதியில் இவளை கவனிப்பதை தளர்த்த, நடந்ததை கடிதமாக எழுதி அவன் அறையில் வைத்து விட்டுத்தான் கவிதா ஊருக்கே சென்றாள்.
ஊரிலிருந்து வந்த ஜீவகவிற்று கவிதா ஊருக்கு சென்றது அதிர்ச்சியை கொடுத்தது. அவள் எழுதி வைத்திருந்த கடிதம் ஆறுதலைக் கொடுத்தது.
அவளுக்கு கடிதம் எழுதியவன் தன்னுடைய நண்பன் ஒருவனின் விலாசம் கொடுத்து அந்த முகவரிக்கு கடிதம் எழுதும்படி கூறி இருக்க, அவர்களின் காதல் தங்குதடை இல்லாமல் மூன்று வருடங்கள் கடிதம் மூலம் தொடர்ந்தது.
இதற்கிடையில் சுதுமெனிகேயின் மூத்த மகனுக்கு திருமணமும் நடந்து லஹிருவும்  பிறந்திருந்தான்.
வேலையில் சேர்ந்திருந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஜீவக கவிதாவை தேடி அவளது ஊருக்கு வந்து சேர்ந்தான்.
கவிதா ஒரு சிங்களவனை காதலிப்பதை அறிந்து அவளுடைய அண்ணன் சதீஷ் அவளை வெளுத்து வாங்க அவன் மனைவி பஞ்சவர்ணம்தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.
ஜீவக பிடிவாதமாக இருந்து கவிதாவின் அண்ணணனை சம்மதிக்க வைக்க, எங்க முறைப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என்று சதீஷும் பிடிவாதம் பிடிக்க, ஜீவகயும் சம்மதிக்க பதுள்ளையிலுள்ள முருகன் கோவிலில் அவர்களின் திருமணம் சதீஷ் மற்றும் பஞ்சவர்ணத்தின் தலைமையில் நடந்தேறியது.
மனைவியை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு குடியேறியவன் அங்குதான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்த்தான். திருமணமாகி மூன்று மாதங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகத்தான் சென்றது.
அவசர அவசரமாக வீட்டுக்கு வந்த ஜீவக தான் இன்று அசேலயை {லஹிருவின் தந்தை} சந்தித்ததாகவும் தன் அன்னைக்கு ரொம்ப உடம்பு முடியாமல் இருப்பதாக கூறியதாகவும். தான் உடனே சென்று அன்னையை பார்த்து விட்டு வருவதாக சென்றவன்தான் ஜீவக, ஒருமாதமாகியும் வரவே இல்லை. கணவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
கொழும்பில் வாடகைக்கு இருந்த வீட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் திண்டாடிய கவிதா, கணவனை காணாமல் அழுது அழுது ஓய்ந்து செய்வதறியாது அண்ணனை தேடி ஊருக்கு வந்து விட்டாள். அவனும் மாத்தளைக்கு சென்று ஜீவகயை சந்திக்க முயன்று தோற்றுத்தான் போனான்.
ஏன் கணவன் தன்னை வந்து பார்ப்பதில்லை. தான் என்ன குற்றம் செய்தேன் என்று புரியாமல் சித்தம் கலங்கியவளாக புலம்பலானாள் கவிதா.
பஞ்சவர்ணத்தால் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. கணவனைத்தான் என்ன? எது என்று பார்க்குமாறு துரத்தலானாள்.
இதற்கிடையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் தெரியவரவே பஞ்சவர்ணத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தையை கலைத்து கவிதாவை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமா? என்று கூட யோசித்தாள். ஆனால் சாரு ஐந்து மாத கருவாக அன்னையின் வயிற்றில் இருந்ததால் அவள் பிறப்பை தடுக்க முடியவில்லை.
கவிதா குழந்தையையும் கவனிக்காமல் வாசலையே பார்த்தவாறு கணவனின் பெயரை கூறிக்கொண்டே இருந்தாள். இப்படியே சென்றாள் அவள் மனநிலை பாதிக்கப்படுவதால் என்று மருத்துவரிடம் அழைத்து சென்றாள் அவரோ அவளை இடமாற்றம் செய்ய சொன்னார்.
வேறு வழியில்லாது அவளை அழைத்துக் கொண்டு பஞ்சவர்ணத்தின் சொந்த ஊரான நுவரெலியாவில் குடியேறினார்கள்.
கவிதா ஜீவகவை காதலித்த காலத்தில் எந்த முகவரிக்கு கடிதம் எழுதினாலோ அந்த முகவரிக்கு கடிதம் எழுத ஆரம்பித்தாள். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
காலமும் கடந்தது சாரு வளர வளர அன்னை ஏன் இப்படி இருக்கின்றாள் என்று சாரு அத்தையிடம் கேட்பாள். அன்னையிடம் செல்லவே தயங்குவாள்.
திடிரென்று சுயநினைவுக்கு வந்தால் மகளிடம் அன்பாக நடந்துகொள்ளும் கவிதா கணவனை பற்றி மகளிடம் கூறுவாள். அப்படித்தான் சாருவுக்கு தந்தையை பற்றி தெரிய வந்தது.
கவிதாவின் அண்ண சதீஷோ குடிக்கு அடிமையாகி கேன்சரில் இறந்தே போனான்.
“தன்னை திருமணம் செய்து கொண்டதால் அவரை அழைத்து சென்று கொன்று விட்டார்கள் அதனால்தான் தன்னை பார்க்க வரவில்லை. தனக்கு கடிதம் எழுதவில்லை” கணவனின் நினைவிலையே தினம், தினம் புலம்பி கவிதாவும் மனவேதனையிலையே இறந்து போனாள்.
நடந்த அனைத்தையும் சாரு சொல்லி முடிக்க சுதுமெனிகேவுக்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலியே வந்தது.
“அடிப்பாவி மகளே எது நடக்கக் கூடாது என்று உன்ன பத்திரமா ஊருக்கு அனுப்பி வச்சேனோ, நீயே உன் விதிய தேடிக்கிட்டியே. புதுஹாமுதுருவனே! நான் என்ன பாவம் பண்ணேனோ. இன்னும் உசுரோட இருந்து இதெல்லாம் கேக்க வேண்டி இருக்கே” மூச்சு திணறியவளின் நெஞ்சை நீவிவிட்டு சாரு கத்தி நெலுமை அழைத்து தண்ணீர் கொண்டு வந்து புகட்டி ஆசுவாசப் படுத்தினாள். 

Advertisement