Advertisement

அத்தியாயம் 7
காலை உணவின் பொழுது இடியாப்பமும் கூனிஸ்ஸோ சுண்டலோடு நெத்தலி கறியும் இருக்க, லஹிரு விரும்பி சாப்பிடலானான்.
அவனுக்கு இடியாப்பம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுக்காகவே நெலும் அரிசி ஊறவைத்து, இடித்து, மாவாக்கி, வறுத்து இடியாப்பம் செய்வாள். தேங்காய் சம்பலும் பாலானமும், அல்லது பருப்பு கறியும், தேங்காய் சுண்டலும் இல்லையென்றால் நெத்தலி கறியும், கூனிஸ்ஸோ சுண்டலும் கேப்பான். சில நேரம் அலகொல மெல்லும பண்ணிடுங்க ஆச்சி வேறெதுவும் வேண்டாம் என்பான்.  
நேற்று மாலையே நெலும் சாருவிடம் இதை பற்றி கூறி இருக்க, லஹிரு சாப்பிடும் அழகைத்தான் பார்த்திருந்தாள். “சரியான சாப்பாட்டுராமனா இருக்கான். இப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறான்”
“இதியாப்ப…”
“என்னம்மா” லஹிருவை இவள் “இடியாப்பம்” என்று கிண்டல் செய்திருக்க, அது அவன் காதில் விழுந்தததோ இல்லையோ சுதுமெனிகேயின் காதில் நன்றாகவே விழுந்திருந்தது.
“இல்ல இன்னும் வேணுமான்னு கேட்டேன்” என்றாள் இவள்.
“போதும்மா..” சுதுமெனிகே கைகழுவ செல்ல, நகரப்போன சாருவின் கையை பிடித்து தடுத்த லஹிரு “என்னயா இதியாப்பனு சொல்லுற? நீ ஒரு ஆப்ப அதுவும் முட்டாப்ப” அவளை அப்பம் என்று திட்டினான்.
“இந்த கட்டு கட்டுற? எத்தனை சாப்பிட்ட? எல்லாத்தையும் நீ சாப்பிட்டா? நாங்க சாப்பிட வேணாம்” இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள்.
“நிஜமாகவே உங்களுக்கு சாப்பாடு இல்லையா?” என்னதான் இவர்கள் சாப்பிட்ட பின் வேலையாட்கள் சாப்பிட்டாலும், சாப்பாடு இல்லை என்று ஒருநாளும் ஆனதில்லை.
அது வீட்டில் பொருட்கள் இல்லை என்ற எண்ணத்தில் இல்லை. கருணாவுக்கு வயதாகி விட்டது. உடம்பு முடியாததால் போதுமான அளவு சமைக்கவில்லையோ “ஏன் கருணா ஆச்சிக்கு உடம்பு முடியலையா?”
அவன் முகத்தில் ஏற்பட்ட பதட்டத்தை கண்டதும் சாருவுக்கு ஒருமாதிரியானது. “அவங்களுக்கு என்ன? நல்லாத்தான் இருக்காங்க? நீ கொஞ்சம் அளவா சாப்பிடு. ஏற்கனவே வாய்க்கொழுப்பு அதிகம். உடம்புளையும் கொழுப்பு ஏறி போச்சுன்னா?”
“யாருக்கு வாய்கொழுப்பு அதிகம். உன்ன…” சுதுமெனிகே வருவதை கண்டு அவள் கையை விட்டவன் அவளை நன்றாக முறைத்தான்.
ஏதாவது சொல்லி அவனை சீண்டாமல் இவளாலும் இருக்க முடியாது, இவளை முறைக்காமல் அவனாலும் இருக்க முடியாது.
இருவரும் இப்பொழுது நெருங்கி வந்து விடுவார்கள் என்று ஒவ்வொரு சம்பவமும் நடைபெறும் பொழுதும் லஹிரு சாருவை துரத்தியடிப்பான். அவளே நெருங்கி வந்தாலும், இவன் விடமாட்டான். அப்படித்தான் அடுத்த சம்பவம் அமைந்தது.   
சாருவுக்கு தனியாக அறை கொடுக்கப்பட்டாலும் அவள் சுதுமெனிகேயின் அறையில்தான் தூங்கினாள்.
“போய் நிம்மதியா கட்டில்ல தூங்கு நான் கருணாவ அழைச்சிக்கிறேன்” என்றாள் சுதுமெனிகே
“கருணாவ பார்த்துகிறதுக்கே ரெண்டு பேர் வேணும். நான் வந்த வேலைய நானே பாக்குறேன்” என்றாள் இவள்.
அவள் சொன்ன விதம் லஹிருவுக்கு சிரிப்பை மூட்டினாலும் அடக்கிக் கொடு இருந்தான். சுதுமெனிகே சொல்லாமலே அவள் அறையில் தனிக்கட்டில் சாருவுக்காக போடப்பட்டது.
அது அவன் வேலைதான் என்று இவளுக்கு புரிய அவன் முன் சென்று நின்றாள். லஹிரு கணனியில் கணக்கு வழக்குதான் பார்த்துக் கொண்டிருந்தான். 
“ஸ்தூதி” 
தன் முன் இருந்த பாதங்களை பார்த்தவன் தலையை தூக்கி பாராமலே அது யார் என்று அறிந்துகொண்டு “உன் நன்றியை போய் குப்பைல போடு. யாருக்கு வேணும் உன் நன்றி. ஒழுங்கா அப்பத்தாவ பாத்துக்க. நன்றி சொல்லிக்கிட்டு ஒட்டலாம்னு பாக்குறியா? வகுந்துடுவேன்” இவன் மிரட்ட
“போடா…” என்றவள் கெட்டவார்த்தைகளை முணுமுணுத்தவாறே சென்றாள்.
செல்லும் அவளை தலைநிமிர்ந்து பார்த்தவன் உதடு வளைத்து “யக்ஷணி” மெல்ல முணுமுணுத்தான்.
வீட்டில் கீழே தூங்குபவள்தான். குளிர் கூட அவளுக்கு புதிதில்லை. தனக்கா இவன் இதை செய்தானே என்றுதான் நன்றி சொன்னாள். அதற்கும் மிரட்டினால் இவளும்தான் என்ன செய்வாள். கோபத்தை எத்தனை நாள்தான் அடக்குவாள்.
அவளிடமிருந்து பணத்தை வசூலிக்கும்வரை அவளை இங்கிருந்து அனுப்பவும் முடியாது. அதே சமயம் அவள் திட்டம் அவனை அடைவது என்றால் அதற்கு அவன் ஒருபொழுதும் இடம் கொடுக்கக் கூடாது. அவளை தன்னிடம் நெருங்கவே விடக் கூடாது. என்ற முடிவில் இருந்தான் லஹிரு. அவன் வண்டியில் கல்லை விட்டு எரிந்தது முதல், வண்டியில் ஏறி போலீஸ் ஸ்டேஷன் வந்து பிரச்சினையாகி இன்று வீடுவரை அவள் வந்தது எல்லாமே அவளது திட்டம் என்றே நினைத்தான். ஆனால் அவள் செய்தது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைந்தது மட்டும்தான்.
லஹிருவின் மனதில் என்ன ஓடுகிறது? இவளை பற்றி அவன் என்ன நினைக்கின்றான் அதை பற்றியெல்லாம் சாருவுக்கு கவலையுமில்லை. சிந்திக்க நேரமுமில்லை. அவள் இங்கு வந்த நோக்கம் நிறைவேறுமா? அதுதான் அவளின் பெரும் கவலையாக இருந்தது.
வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த மொத்த புகைப்பாடத்திலும் சுதுமெனிகேயின் இறந்து போன கணவனின் புகைப்படமும், அவரின் பெற்றோரின் புகை படமும், அவரின் தங்கை மற்றும், தங்கை கணவரின் ஒரு திருமண புகைப்படமும், சுதுமெனிகேயின் திருமண புகைப்படமும். லஹிரு மற்றும் ஹரிதவின் பெற்றோரின் திருமண புகைப்படங்கள் என்று முக்கியமான நிகழ்வுகள் மட்டும்தான் இருந்தன.
அவள் தேடி வந்த நபரின் புகைப்படம் ஒன்று கூட இல்லை. இருந்தால் கூட தன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? அவள் மனம் கேட்க “நிச்சயமாக முடியும்” என்றாள் இவள். 
“ஆனால் அவர் உன்னை அடையாளம் கண்டு கொள்வாரா? இப்பொழுது அவர் எங்கே இருக்கிறாரோ? உயிரோடு இருக்கிறாரா? தெரியவில்லை?” அவளின் மனதின் இந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வர பெருமூச்சோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 
சாரு கண்டிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அவள் வந்த காரணம்தான் இன்னும் நிறைவேறவில்லை. ஓரிரண்டு தடவை லஹிருவும் சுதுமெனிகேயும் அவரோடு அலைபேசியில் உரையாடியதில் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டாள். அவர் இங்கு வரவே மாட்டாரா? அவரை பார்க்கவே முடியாதா? இப்பொழுது எங்கு இருப்பாரோ? வேலையாட்களிடம் கேட்கலாமா? இல்லை இவர்கள் விசுவாசிகள். பாட்டியிடம் சொன்னால் பரவாயில்லை அந்த லேம்போஸ்டிடம் சொன்னால் அவன் வேறு குதிப்பான். அதற்கு பேசாம பாட்டியிடம் கேட்கலாம்.  கேட்டால் சந்தேகப்பட மாட்டாளா? எப்படி கேட்பது புரியாமல் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவளுக்க யாரோ வாயிலை திறக்கும் சத்தம் கேட்டது.
பழைய வாயில்தான். அதனாலயே அவ்வளவு சத்தம். திருடர்கள் வரும் என்ற அச்சம் எல்லாம் சுதுமெனிகேவுக்கு இல்லை. இருந்திருந்தால் காவலாளியை வைத்திருப்பாள். அதற்கு அவசியமே இல்லாதது போல் விடிந்ததிலிருந்து டிங்கிரி பண்டா தோட்டத்தில்தான் எதையாவது செய்து கொண்டிருப்பான். இரவில் தூங்குவதும். தோட்டத்தில் கட்டியிருக்கும் குடிசையில். போதாததர்கு  நான்கு நாய்களை வேறு சதா உலா வந்துகொண்டு இருக்கின்றனவே. 
வேகமாக நடந்து வந்தவள் வாயிலை பார்க்க அது பூட்டிதான் இருந்தது. பிரம்மையோ என்று பார்த்திருந்தவளின் கண்ணில் விழுந்தது கொய்யா மரத்தின் கீழ் இருந்த பை. “யார் பை இது” என்றெண்ணியவாறே நெருங்கியவள் மரத்திலிருந்த ஆடவனைக் கண்டு ஒருநொடி அதிர்ந்து மறுநொடி காய் பறிக்கும் குச்சியை கையில் எடுத்துக் கொண்டு “கீழே இறங்குடா திருட்டுப் பயலே, யார் வீட்டுக்குள்ள வந்து காய் பறிக்கிற? இன்னைக்கி நீ செத்தடா…” என்று சிங்களத்தில் கத்த
கொய்யாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் “எவ அவ?” என்று பார்த்து விட்டு “யார் நீ” என்று கேட்டான்.
“நீ யார்டா” குச்சியாலையே அவனை அடிக்க
“பார்த்து கத்தி கீறிடும்” குச்சியின் நுனியில் கூரான ஆயுதம் காய்களை பறிப்பதற்காக கட்டப்பட்டிருந்தது. 
“முதல்ல கீழ இறங்கு” இவள் சொன்னால் அந்த வானரம் கேட்குமா? இன்னும் சில காய்களை பறித்துக் கொண்டுதான் கீழே குதித்தான்.
“புஞ்சி ஹாமூ…”{சின்னையா…} தோட்டத்தை பார்த்துக்கொள்ளும் டிங்கிரி பண்டா இவனை கண்டு ஓடிவந்து நலம் விசாரிக்க இவனும் பதில் சொன்னவன் சாரு யார் என்று கேட்டான்.
தான் சுதுமெனிகேவை பார்த்துக்கொள்ள வந்திருப்பதாக சாருவே சொல்லியவாறு குச்சியை கீழே போட்டாள். 
“அப்படி ஒன்னும் தெரியலையே. நீ இந்த வீட்டையும், தோட்டத்தையும் சேர்த்து இல்லை பார்த்துகிற” இவன் கிண்டலாகவே சொல்ல டிங்கிரி பண்டாவும் ஆமோதித்தான்.
வீட்டுக்கு வந்தவனை உபசரிக்க வேண்டாமா? குடிக்க ஏதாவது வேண்டுமா என்று சாரு கேட்க, அவனோ “பண்டா நல்ல இளநீரா பார்த்து வெட்டி கொண்டு வாயேன்” என்று அனுப்பி விட்டு இவளிடம் திரும்பினான்.
“ஆமா நீ எங்க ஊராமே. பாரேன் உன்ன ஒரு தடவ கூட பார்த்ததில்லை. நா எல்லாம் நுவரெலியால பொறந்தோம்னு சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்” கண்களை சிமிட்டி, தோளை குலுக்கி,  சினிமா ஹீரோ போல் ஏதேதோ செய்தான்.
அவன் செய்தவைகளை எல்லாம் குழந்தை தனமாகத்தான் சாருவுக்கு தெரிந்தது. “என்ன வழியிரியா?” பொய்யாய் முறைத்தாள்.
“ஓஹ்… பச்சையா தெரியுதா…”
“ஆமா தொடச்சிக்க. பாட்டி வர்ற நேரமாச்சு. வால சுருட்டி வச்சிக்க, இல்லையா ஒட்ட நறுக்கிடுவேன்” மிரட்டி விட்டு சாரு உள்ளே செல்ல
“இண்டரெஸ்டிங். அப்பா சொன்னதுக்காக வந்தேன். நல்லா பொழுது போகும் போலயே” என்றவன் பையோடு உள்ளே நுழைந்தான்.
குளித்து விட்டு வந்தவனிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்க, “இன்னும் கொஞ்சம் நேரத்தில் அப்பத்தா வந்துடுவாங்களே சேர்ந்து சாப்பிடுறேன். ஒன்னும் வேணாம். ஆமா இங்க போர் அடிக்கலையா?”
“இல்லை. ஏன்”
“எனக்கு செமையா போர் அடிக்கும்”
“நிஜமாவா? வந்த உடனே மரத்துல தாவினத பார்த்ததும் ரொம்ப பிடிக்கும்னு இல்லை நினச்சேன்” இவள் கிண்டல் செய்ய
அசடு வழிந்தவன் “அது சின்ன வயசுல பழகின பழக்கம் அதெல்லாம் அவ்வளவு ஈஸியா மறந்துடுமா?” சின்ன சிரிப்போடு கேட்டவனை சாருவுக்கு கொஞ்சம் பிடிக்கத்தான் செய்தது.
காலேஜில் நடந்த சுவாரச்யமான கதைகளை சாரு கேட்காமலே அவன் கூற இவள் சிரிக்க நல்ல தோழமை உருவாக்கிக் கொண்டிருக்க, லஹிருவின் வண்டி சத்தம் கேட்டது.
ஹார்ன் அடித்ததும் சாரு சென்று வாயிலை திறக்க, அவள் முகத்தில் இருந்த அதீத புன்னகையை யோசனையாக பார்த்த லஹிரு அவள் பின்னால் நின்றிருந்த தம்பியை கண்டதும் முகம் மாறினான்.
“இவன் எப்பொழுது வந்தான்? வரேன்னு சொல்லவே இல்லையே” லஹிருவின் மனதில் உதித்ததை கூறியவாறே சுதுமெனிகே இறங்க சாரு ஓடிவந்து கையை பற்றிக் கொண்டாள்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” முணுமுணுத்தவாறே லஹிரு இறங்க “அண்ணா…” என்று கட்டிக் கொண்டான் ஹரித. 
அவன் வந்த பிறகு அந்த வீட்டுக்கே ஒரு கலை வந்தது. லஹிரு அதிகம் பேச மாட்டான். சிரிக்க மாட்டான். அவனுக்கு நேரெதிர் ஹரித. எதை சொன்னாலும் சிரிக்கும் விதமாகத்தான் சொல்லுவான். சாருவால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட லஹிரு அவளை முறைத்தவன் அவளுக்கு வேலைகளை ஏவி துரத்தியடிக்க அவள் என்ன செய்தாலும் ஹரித அவளோடு நின்று பேசிக்கொண்டே இருந்தான்.
“வந்த உடனே இவன மயக்கிட்டாளா?” கடுப்பானான் லஹிரு
இரவு உணவுக்கு பின் பரமபதம் விளையாடலாம் என்று ஹரித அனைவரையும் அழைக்க சுதுமெனிகே “நீங்க விளையாடுங்க நான் பார்க்கிறேன்” என்று தனது கட்டிலில் சாய்ந்துகொள்ள, இவர்கள் தரையில் அமர்ந்து விளையாட ஆயத்தமானார்கள்.
லஹிரு முறைப்பதையும் பொருட்படுத்தாது “அதான் பாட்டியே சொல்லிட்டாங்க உனக்கு என்னடா? போடா” என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள் ஹரிதவோடு உக்கார பல்லைக் கடித்தவாறு லஹிருவும் அமர்ந்துகொண்டான். 
சாருவுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கும் அவள்தான் முன்னால் போய்க் கொண்டிருந்தாள். லஹிருவை இரண்டு தடவைகளை பாம்பு கடிக்க அவன் பின்னடைந்தான்.
“உனக்கு சர்ப்பதோஷம் இருக்குடா…பார்த்து” என்றாள் சுதுமெனிகே.
அவள் அதை சும்மா சொல்லவில்லை. அவன் ஜாதகத்தை கணித்த ஜோசியர் கூறியதுதான். “ஹாமினே தம்பிக்கு சர்ப்பதோஷம் இருக்கு உங்க ஜாதகம் அவரை பாதுகாக்கும். கல்யாணம் பண்ணும் பொழுது அவருக்கு உங்க ஜாதகத்தை போல ஒரு ஜாதகக்காரிய பாருங்க”
இதை கேட்டதிலிருந்து சுதுமெனிகேவுக்கு இரவில் தூக்கம் பறிபோனது. டிங்கிரி பண்டாவிடம் சொல்லி எப்பொழுதும் தோட்டத்தை சுத்தமாகவே வைத்திருக்க சொன்னாள். பாம்பு புத்து ஏதாவது இருந்தால் அதை உடனடியாக அகற்ற சொன்னாள்.
லஹிருவுக்கு இந்த விஷயம் அவனது  பதினாறாவது வயதில் தெரிய வந்தது. அதுவும் தோட்டத்தில் இருந்த கிணற்றில் குளிக்கப் போனவனின் மீது சாரை பாம்பு ஊர்ந்து செல்ல, இவன் அதை கையால் பிடித்து தூக்கிப் போட்டிருந்தான்.
அதை தூரத்தே இருந்து பார்த்த டிங்கிரி பண்டா கத்திக் கூச்சலிட்டு ஓடி வந்திருக்க, வீட்டில் இருந்தவர்களும் ஓடி வந்திருந்தனர்.
“ஐயோ உனக்கு சர்ப்பதோஷம் இருக்கே. இப்படி பாம்பை கைல பிடிக்கிறியே கடிச்சிருந்தா என்னவாகி இருக்கும்” சுதுமெனிகே  அழ,
“அது சாரை” என்று லஹிரு எவ்வளவோ சொல்லியும் விசுவாசி டிங்கிரி பாண்டா அதை கொன்றொழித்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தான்.
டிங்கிரி பாண்டா இந்த வயதிலும் தோட்டத்தை பராமரிப்பதற்கு காரணம் விசுவாசம் மட்டுமல்ல, மொல்லிகொட வளவ்வையின் தலை வாரிசுக்கு ஆயுள் கம்மி. அது ஊர் அறிந்த இரகசியம். அவனது தந்தை அவனுக்கு கூறியதாவது இந்த பரம்பரையில் வந்த “யாரோ பெரிய பாவத்தை செய்து விட்டார்கள். அந்த சாபம்தான் தலை வாரிசை காவு வாங்குது. எது எப்படியோ. நமக்கு சோறு போடும் குடும்பம் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றான் 
அவனுக்கு லஹிருவை ரொம்பவே பிடிக்கும். சர்ப்பதோஷம் இருப்பதை அறிந்ததிலிருந்து இங்கேயே தங்கி விட்டான்.
“என்ன அப்பத்தா ஜாதகம், தோஷம் என்று எதையெதையோ நம்புறீங்க? இந்த நூற்ராண்டில் போய் இதையெல்லாம் நம்புறீங்களே” என்று குற்றப்பார்வையை வீசினான் பேரன்.
“உன் தாத்தாவோட அண்ணன் அல்பாயுசுல போய்ட்டாரு. உங்கப்பாவோட ஜாதகத்துல அவன் அல்பாயுசுல போறதா இருந்துச்சு”
“ஏன் அப்பத்தா அப்போ நீங்க எங்கம்மாவோட ஜாதகத்தை பார்த்துதான் அப்பாக்கு கல்யாணம் பண்ணி வச்சி இருப்பீங்க. அவரு என்னடான்னா அம்மாவையும் சேர்த்து இல்ல கூட்டிட்டு போனாரு” கேலியும் கிண்டலுமாக சொன்னது நடந்தது ஒரு விபத்து. சும்மா மனச போட்டு குழப்பிக் கொள்ளாதீங்க என்றுதான்.
“குறிப்பிட்ட நாட்கள்ல சனி உக்கிரமா இருக்கும் வீட்டுல இருக்க சொல்ல சொல்ல உன் அப்பா என் பேச்சு கேக்காம போய்ட்டான். உன் அம்மாவும் நான் அவர் கூட இருக்கேன்னு போனவதான். நம்மள தனியா விட்டுட்டு போய்ட்டாங்க” என்று அழ லஹிரு அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
“ஹாஹாஹா சர்ப்பதோஷம் எனக்கா?” மூன்று தடவை பகடையை உருட்டி பெரிய ஏணியில் மேலே ஏறி வெற்றியை எட்டி விட்டான். “எந்த தோஷமும் என்னைய ஒன்னும் பண்ணாது அப்பத்தா” என்றவனின் பார்வை முழுவதும் சாருவின் மீதிருக்க, ஹரிதாவின் கண்களுக்கு இந்த காட்ச்சி தப்பாமல் விழுந்தது. விளையாட்டில் மும்முரமாக இருந்ததில் அண்ணன் என்ன சொன்னான் என்பது காதில் விழுந்தாலும் ஏன் சொன்னான் என்று மூளையை எட்டவில்லை. 
“அட போண்ணா எப்ப பார்த்தாலும் நீயே ஜெயிக்கிற” ஹரித நொந்தவாறே சாருவிடம் பகடைக்காயை கொடுத்தான்.
பாம்பு கடித்தால் கீழே இறங்குவதும், ஏணியில் ஏறுவதுமாக இருவரும் ஆட்டத்தில் மூழ்கி இருக்க, ஆட்டம் முடிவடைவது போல் தெரியவில்லை.
கொட்டாவி விட்டவாறே பார்த்திருந்த லஹிருவுக்கு இருவரையும் தனியாக விட்டு செல்லவும் மனம் வரவில்லை. தம்பியை அங்கிருந்து அழைத்து செல்ல தூங்கிவழியும் விழிகளோடு அமர்ந்திருந்தான்.
“என்ன இவன் அசையாம இங்கயே நிக்கிறான்?” அண்ணனை சந்தேகமாக பார்க்க அவன் பார்வை அடிக்கடி சாருவை தொட்டுமீளுவதைக் கண்டவனுக்கோ “ஓஹ்… கதை அப்படி போகுதா… இந்த முனிவருக்கும் காதல் மலருமா? நல்லாத்தான் இருக்கு”          
“அண்ணா நீ போய் தூங்கு நா வரேன்” என்று ஹரித சொல்லியும் அவன் நகராது இருக்க, சாருவை பார்த்து “தூக்கம் வருதா?” என்று கேட்க அவளோ “இல்லை” என்று தலையசைத்தாள். இருவரையும் மாறிமாறி பார்த்த ஹரித தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
அவனுக்கு எங்கே தெரிய போகிறது தன்னுடைய அண்ணன் காதல் பார்வை பார்க்கவில்லை. சந்தேகப் பார்வை பார்க்கின்றான். அதுவும் சாரு தன் தம்பியை உசார் செய்து விடுவாளோ என்று காவல் காக்கின்றான் என்று. இது தெரியாமல் இவன் தன் அண்ணன் காதலில் விழுந்து விட்டதாக நினைத்து விட்டான்.
“போதும் படுங்க” என்று சுதுமெனிகே சொன்ன பிறகுதான் அனைவரும் தூங்க சென்றனர்.
“டேய் அண்ணா நீ சருவை லவ் பண்ணுறியா?” போர்வையை போர்த்தியவாறே தம்பி கேட்டான்.
ஹரிதாவின் குணமே இதுதான். எதுவாயிருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவான். அந்த குணம்தான் லஹிருவையும் அவனையும் இதுநாள்வரை ஒட்டவும் வைத்திருக்கிறது. ஒற்றுமையாகவும் வைத்திருக்கிறது.
“என்னடா? தூக்கம் வரலையா? தூங்கு எனக்கு காலையிலையே வேலை இருக்கு” ஹரித கேட்ட கேள்விக்கு லஹிரு ஒழுங்காக பதில் சொல்லி இருக்கலாம்.
அண்ணன் சாருவை விரும்புகின்றானா? அவனிடமே கேட்கலாம் என்று அதை உறுதி படுத்திக்கொள்ளவே அறைக்கு வந்த உடன் அண்ணனிடம் இது பற்றி நேரடியாகவே கேட்டான்.
என்னதான் இருந்தாலும் சாரு தான் வேலைக்கு அழைத்து வந்த பெண் அவளை பற்றி தானே குறை கூறலாகாது என்றே லஹிரு தம்பிக்கு ஒழுங்கான பதிலை கூறவில்லை.
ஆனால் அதுவே ஹரித அண்ணன் சாருவை காதலிப்பதாக எண்ண காரணமாக அமைந்து விட்டதை அறியாமல் லஹிரு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். 
காதலிப்பவர்கள் காதலியிடம் தன் காதலை ஒப்பிக்காமல் மற்றவர்களிடம் தான் காதலிப்பதாக என்று ஒப்புக்கொண்டார்கள்? அதனால் தான் அண்ணன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி மழுப்புகிறான் என்று எண்ணினான்.
ஹரித அத்தோடு விட்டிருக்கலாம். அண்ணன் காதலிக்கிறான். சாருவிடம் தன் காதலை அவனே கூறட்டும். அதுதான் சரி. முறையும் கூட என்று எண்ணி அமைதியாக இருந்திருக்கலாம்.
இந்த வானரத்துக்கு வால் மட்டும்தான் இல்லை. தன் அண்ணன் எப்பொழுது காதலை சொல்வது. தான் இருவரையும் ஒன்றாக எப்பொழுது பார்ப்பது? யார் காதலை சொன்னால் என்ன? சாரு ஏற்றுக் கொண்டால் சரிதானே அண்ணனுக்காக தூது போக முடிவெடுத்தான். இது மட்டும் லஹிருவுக்கு தெரிந்தால் உப்பு போட்டு ஊறுகாய் போடுவது உறுதி.
அடுத்த நாள் காலை சாப்பாட்டு மேசையில் ஹரித மற்றும் லஹிரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, சுதுமெனிகேவுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சாரு. 
அவளை தன்னோடு அமர்ந்து சாப்பிடும்படி சுதுமெனிகே பலதடவை சொல்லிப் பார்த்தாள் லஹிரு முறைத்த முறைப்புக்கு அவளுக்கு அமர்ந்து சாப்பிடலாமா? என்று கூட தோன்றியது. உரிமை இருந்தும் இல்லாத இவர்களோடு எந்த ஒட்டும், உறவும் வேண்டாம் என்ற முடிவோடு இருப்பவளுக்கு அது அனாவசியமான செயல் என்று கருத்தில்பட மறுத்து விட்டாள்.
“நீயும் பாக்டரிக்கு வா” சாப்பிட்டவாறே லஹிரு சொல்ல
“நான் எதுக்கு?” முகத்தை சுளித்தான் ஹரித.
“ஏன்டா சித்தப்பா ஊருக்கு போனா புலம்புறாரு. நீ கண்டுக்காம இருக்க, ஒழுங்கா வந்து தொழிலை கத்துக்க” அமைதியாகத்தான் சொன்னான். தம்பியை தனியாக சாருவோடு விட்டு செல்லக் கூடாது என்ற முடிவில் இருந்தான் லஹிரு.
“அவரு சொல்லுவாரு. எனக்கு இந்த தேல காட்டுல குப்பைகொட்ட முடியாது. நான் வேற தொழில் பண்ணலாம்னு இருக்கேன்”
“டேய் சின்னவனே… குடும்ப தொழிலே இம்புட்டு இருக்கு நீ உன் அப்பனுக்கு ஒரே புள்ள. அத பார்க்காம வேற என்னத்த செய்ய போற?” சுதுமெனிகே கடிய
“நான் சொன்னேனா ஒத்த புள்ளய பெக்க சொல்லி? என்னமோ என்னைய கேட்டு பெத்துக்கிட்டாங்க போல பேசுறாங்க” முணுமுணுத்தவனின் பேச்சு அங்கிருந்தவர்கள் காதில் நன்றாகவே விழ, லஹிரு கோபப்பட்டான் என்றால் சுதுமெனிகே நெஞ்சை பிடிக்காத குறைதான்.
“சார் என்ன தொழில் பண்ண போறீங்க? யார் முதலீடு பண்ணுவாங்க?” கேட்டது சாருதான்.
“நான் ஒரு சிங்கர் தெரியுமா? மியூசிக் ஆல்பம் பண்ணி கோடிகோடியா சம்பாதிப்பேன். முதலீடு அப்பாதான் பண்ணனும்” என்றவனின் குரல் தாழ்ந்து ஒலித்தது.
“அட லூசுப்பயலே” என்ற சுதுமெனிகேவின் கையை பற்றி தடுத்தாள் சாரு.
“அப்போ அப்பா காசத்தான் எதிர்பார்க்குறீங்க? கேட்ட உடனே கொடுப்பாரா?”
“நான் அவருக்கு ஒத்த புள்ள ஏன் கொடுக்க மாட்டாரு” பெருமையாக சொன்னான் ஹரித.
லஹிருவின் புறம் திரும்பிய சாரு “இவரு அப்பா இவருக்கு காச ஒன்னும் சும்மா கொடுக்க வேணாம் சம்பளமா கொடுக்கட்டும். அதுக்கு இவர் அவர் கிட்ட வேல பார்க்கட்டும். ஒரு எக்ரிமண்ட் பேப்பர் ரெடி பண்ணி கொடுங்க. இல்லையா காசு சும்மா வாங்கினா இவர் கோடி கோடியா சம்பாதிக்கிற பணத்துல இத்தனை விகிதம் அப்பாக்கு கொடுக்கணும் என்று எக்ரிமண்ட் போடுங்க” என்றாள்.
அவள் நல்ல எண்ணத்தில் சொல்ல “இவள் யார் நம்ம குடும்ப விஷயத்தில் தலையிட” என்று அதற்கும் லஹிரு அவளை முறைத்துதான் பார்த்தான்.
“இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு. யார் சொன்னா நீ ஸ்கூல் மட்டும்தான் போனனு. சமயத்துல சரியா ஐடியா கொடுக்குற என்ன மாதிரி. நானும் எட்டாம் கிளாஸ் தாண்டல” முத்துப் பற்களை காட்டி சிரித்தாள் சுதுமெனிகே.
“இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல” ஹரித புலம்ப
“சீக்கிரம் நல்லா முடிவா எடு” சின்ன பேரனிடம் சொன்ன சுதுமெனிகே “இன்னைல இருந்து நீயும் பாக்டரிக்கு வர” என்று சாருவுக்கு உத்தரவிட்டாள்.
“அப்போ நானும் வரேன்” வீட்டில் தனியாக என்ன செய்வது என்று ஹரித கிளம்ப அதை தப்பாகவே எடை போட்டான் லஹிரு.

Advertisement