Advertisement

அத்தியாயம் 6
சாரு வீட்டில் இருக்கும் பொழுது குளிரை சாக்காக வைத்து காலை எட்டு மணிவரை தூங்கி பஞ்சவர்ணத்திடம் திட்டு வாங்கி அரக்கப்பரக்க குளித்து சாப்பிட்டு வான்மதியோடு ஒன்பது மணிக்கெல்லாம் கடைக்கு போய் சேர்ந்து விடுவாள்.
ஆனால் இங்கே ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து முகம் கழுவி சுதுமெனிகே முகம் கழுவி வந்த உடன் சக்கரை இல்லாத தேநீர் கொடுத்து தானும் அருந்தி. அவளோடு வீட்டுக்கு வெளியே இருக்கும் புத்தரின் சிலைக்கு பூஜை செய்வாள். காலை ஆறு மணிக்கு ஒரு பூஜை மாலை ஆறு மணிக்கு ஒரு பூஜை என்பதால் தேவையான மலர்களை மாலையே பறித்து சின்ன கூடையில் அடுக்கி வைத்து விடுவாள்.
பஞ்சவர்ணம் இதை பார்த்தால் மயங்கியே விழுந்திருப்பாள். தினமும் அலைபேசி அழைப்பு விடுப்பவள் புத்திமதிகளை மட்டுமே அள்ளி வழங்க கடுப்பான சாரு அவளிடம் பேசுவதையே குறைத்தாள்.
அரளிய, நெலும்{தாமரை} மஞ்சள் பூ, செவ்வரத்தம் பூ என்று தினமும் விதவிதமான பூக்களை பறித்து வைத்திருக்க, சுதுமெனிகேவுக்கு சாருவை ரொம்பவுமே பிடித்து போனது.
காலையில் எழுந்த உடன் பாளி மொழியில் புத்தரை வணங்க மந்திரத்தை ஒழிக்க விடுவாள்.
புத்தங் சரணங் கச்சாமி
தம்மங் சரணங் கச்சாமி
சங்கங் சரணங் கச்சாமி
துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி
துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி
துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி
ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி
ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி
ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி
சுதுமெனிகேவோடு நின்று இவளும் வணங்கி வேண்டிக்கொள்ள லஹிருவுக்கு எல்லாமே நடிப்பாகத்தான் தோன்றியது. அதுவும் அவள் கொடுத்து விட்டு சென்ற தேநீரை பருகியவாறே அவளை சந்தேகப் பார்வை பார்த்தவண்ணம் இருப்பான்.
அவர்கள் பூஜையை முடித்து விட்டு வரும் பொழுது இவன் ஜாகிங் செல்வான். செல்லும் பொழுது இவளை முறைத்து விட்டு செல்ல “காலையிலையேவா” பதிலுக்கு முறைப்பாள் இவள்.
மாலையில் புத்தரின் வாழ்க்கை வரலாறான “ஜாதக கதா” எனும் நூலை படிக்க சொல்வாள் சுதுமெனிகே. சிங்கள மொழியில் இருக்கும் அந்நூலை சாரு மிக அழகாக படிப்பதை கட்டிலில் சாய்ந்தவாறு கேட்டிருப்பாள். சில நேரம் விளக்கமும் கொடுப்பாள்.
சாருவுக்கு வீட்டு வேலை என்று பெரிதாக இல்லை. அவளுக்கு இருப்பதோ சுதுமெனிகேயை கவனிப்பது மட்டும்தான். வீட்டை பெருக்க, துடைக்கவென்று ஒரு ஆளை ஏற்பாடு செய்திருந்தான் லஹிரு. பெண்களால் ஏறியெல்லாம் துடைக்க முடியாதாம்.
“எத்தனை சினிமா பாத்திருக்கிறேன். இவ ஏறி துடைக்கும் பொழுது கீழ விழுவாளாம் நான் தாங்கி பிடிக்கனுமா? காதல் மலர்ந்திடுமா? நீ நினைக்கிறது எதுவும் இந்த வீட்டில் நடக்காது” சாரு சொன்னதையே வைத்து இவன் வேறு சிலபல திட்டங்களை வகுத்து வேலை பார்க்கலானான்.
ஆனால் பாவம் லஹிருவுக்கு தெரியவில்லை. அவன் அவளுக்கு செய்தது உதவியென்று.
அவளது வீடோ ஒரே ஒரு அறைதான். இவன் வீடோ அரண்மனையை விட சின்னது அவ்வளவுதான். ஒவ்வொரு அறையும். அவள் வீட்டை போன்று மூன்று மடங்கு பெரியது. வாசல் மட்டும் பத்து மடங்கு பெரியது.
அரசாட்ச்சியின் போது உபயோகித்த போர் வாள்கள் முதற்கொண்டு ஆங்கிலேயர் காலத்தில் உபயோகித்த துப்பாக்கிகள் வரை சுவரிலும், மேசையில் கண்ணாடிப் பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருக்க, அவற்றை துடைப்பது என்ன? தொட்டுக்க கூட பார்க்கவே சாருவுக்கு பயமாக இருந்தது.
அதை அவனிடம் எப்படி சொல்வது என்று இருந்தவளைத்தான் சொல்ல முன்பே காப்பாற்றி விட்டிருந்தான்.
சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவளை இந்த வேலையை செய்ய வைத்திருப்பான் என்பது வேறுகதை.
வீட்டை துடைக்க, பெருக்க அவன் ஏற்பாடு செய்திருந்த சந்த்ரசேன பயபக்தியோடு அவற்றை கையாள்வதை பார்த்த சாருவுக்கு லஹிரு போன ஜென்மத்தில் எப்படி பட்டவனாக பிறந்திருப்பான் என்று அவள் எண்ணம் செல்ல “ஒருவேளை தளபதியாக பிறந்திருப்பானோ? தொங்கும் வாள்களை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது” தனக்குள் பேசியவள் தலையை உலுக்கிக் கொண்டு “இருக்காது முறைத்துக் கொண்டு திரியும் அவன் நிச்சயமாக அந்த தளபதிக்கே தண்ணி காட்டிய அடங்காத குதிரையாகத்தான் பிறந்திருப்பான்” என்று சொல்லியவள் சிரிக்கலானாள்.
“என்ன இங்க நின்னு சிரிச்சுக்கிட்டு நிக்கிற?” முறைத்தவாறே வந்தான் லஹிரு.
“ஆஹா… வந்துட்டான்யா வந்துட்டான்” அவள் மனம் கேலி செய்ய “இதோ கிளம்பிட்டேன்…” என்றவள் சுதுமெனிகேயின் அறையை சுத்தம் செய்ய கிளம்பினாள்.
வீட்டை சுத்தம் செய்யும் வேலை இல்லை என்றாலும் சுதுமெனிகேயின் அறையை சுத்தம் செய்வது அவள் உணவுகளில் சில மாற்றங்கள் என்று அவளுக்காக எல்லாம் செய்தாள் சாரு.
“எதுக்கு இதெல்லாம் செய்யிற?” சுதுமெனிகேதான் கேட்டாள்.
மாத்திரை சாப்பிடுறீங்க இல்ல. அப்போ இதெல்லாம் சாப்பிடலாமா? உங்க பேரனுக்குத்தான் அறிவில்ல. பகல்ல எது சாப்பிடனும், நைட்டுல எது சாப்பிடணும் என்று கூட தெரியல” கிளுக்கி சிரித்தவளை முறைத்து விட்டு செல்வான் லஹிரு.
அவளை பழிவாங்கவென்றே அவனது குளியலறையை சுத்தம் செய்ய சொல்பவன் துணிகளையும், துவைக்க கொடுத்து கிணத்தடிக்கு அனுப்பி வைப்பான்.
“ஏன்டா… வாஷிங் மெஷின்லதானே போடுவ? எதுக்கு அவ கிட்ட கொடுக்குற?”
“எல்லாம் சேர்த்து போடுறதால சில நேரம் போட்டுக்க துணி கூட இல்ல பாட்டி. இங்க இருக்குற கிளைமட்டுக்கு காய கூட மாட்டேங்குது. டேலி துவைச்சா ஏதாவது போடலாம். அது மட்டுமா? ஒரு வெள்ள துணி போட முடியுதா? சாயம் பட்டு நாஸ்தியாகுது. அதான் இவ இருக்காளே, இவ குளிக்கும் போது என்னோட ரெண்டு துணிய கழுவ மாட்டாளா? அதுக்குத்தானே வந்திருக்கா?”
சாரு எதற்காக இந்த வீட்டில் இருக்கின்றாள் என்று அவளுக்கு நியாபகப் படுத்துகின்றானாம். மனதை அலைபாய விடக் கூடாதாம். அது மட்டுமல்லாமல் குளியலறையில் வரும் சுடுநீரில் குளிக்க விடாமல் அவளை கிணற்றில் குளிர் நீரில் குளிக்க அனுப்பி பழிவாங்கியது போலும் ஆகிற்று.
அனால் அவனுக்கு எங்கே தெரிய போகிறது நுவரெலியாவில் ஊற்று நீரிலையே காலை எட்டு மணிக்கு குளிப்பவளுக்கு இந்த கிணற்று நீர் ஒன்றும் அவ்வளவு குளிராக இருக்கப் போவது இல்லையென்று.
“ஏம்மா நீ பாட்டுக்கு காலையிலையே வாளியை தூக்கிட்டு போயிடாத, தண்ணி குளிரும்” சுதுமெனிகே அறிவுறுத்த.
“இல்ல பாட்டி நீங்க பாக்டரிக்கு போன பிறகு போறேன்” என்றாள்.
துணி துவைக்கும் பொழுது அவனையே அடிப்பது போல் கல்லில் அவன் துணியை அடி அடி என்று அடித்து துவைப்பாள். “இதை மட்டும் அவன் பார்த்தன் செத்தேன்” என்று வேறு சொல்லிக்கொள்வாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தவன் “தோட்டத்து பக்கம் என்ன அது வித்தியாசமாக சத்தம் கேக்குது?” தோட்டக்காரனை அழைத்து கேட்க, அவனோ சிரித்தவாறு சாரு கிணற்றடியில் துணி துவைப்பதாக கூறினான்.
“போச்சு, போச்சு… என் ஷார்ட் பட்டன் எல்லாம் போச்சு” என்றவாறு ஓடியவன் நெலும் படுக்கை விரிப்பை அடித்து துவைப்பதையும், சாரு வேறொரு கல்லின் மேல் அமர்ந்திருப்பதையும் கண்டு அசடு வழிந்தான்.
கிணற்று நீர் குளிர் அதிகம், வயதானவர்கள் வேறு என்று யாரையும் கிணற்றில் குளிக்க சுதுமெனிகே விடுவதில்லை. அதனாலயே லஹிருவுக்கு நெலுமின் துணி துவைக்கும் ஸ்டைல் தெரிந்திருக்கவில்லை.
“என்ன ஹாமு…” என்று நெலும் கேட்டாள். 
“இல்ல என் ட்ரவுசர் பாக்கெட்ல ஒரு பேப்பர் வச்சிருந்தேன்” என்று சமாளித்தான்.
அவன் முகத்தை பார்த்தே ஊகித்த சாரு “கழுவும் பொழுது கரைஞ்சி போச்சு” கண்சிமிட்டி புன்னகைக்க, அவளை முறைத்தான்.
“நிஜமாலுமா” அவன் கேட்டதும் பொய் இவள் சொன்னதும் பொய் என்று அறியாமல் பதறியது நெலும் தான்.
“பரவால்ல பில்லுதான். நான் பாத்துக்கிறேன்” என்றவன் விரல் நீட்டி அவளை மிரட்டி விட்டு அகன்றான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டில் இருப்பான் என்று சாருவுக்கு தெரியாதா? அடக்கியே வாசித்தாள். அதனால் அவனிடம் சிக்கவில்லை.
சுதுமெனிகே காலை உணவுக்கு பின் லஹிருவோடு பாக்டரிக்கு கிளம்பிச் சென்று விடுவாள். மதிய உணவுக்கு வருபவள் மீண்டும் செல்ல மாட்டாள். உணவுண்டு விட்டு லஹிரு மாத்திரம் செல்வான்.
கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நான்கு நாய்கள் வளர்க்கப்பட அவைகள்  பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சாருவுக்கு அருகில் செல்ல பயம் அதை பார்த்த லஹிரு வேண்டும் என்றே நாய்களை அவள் மேல் ஏவி விடுவான்.
அவைகளும் அவள் காலை சுற்றுவதும், அவள் மேல் தாவுவதும், அவளை கீழே போட்டு நாக்கால் முகத்தை நக்குவதும் என்று சேட்டைகள் செய்யும்.
“ஐயோ அம்மா” என்று இவள் கத்துவதும்.
“சூட்டி… எளியட பலயன்”
“பொடி… வெளிய போ…”
“பெடியா… வெளியே போ..”
“பபா வெளிய போ…” என்று சுதுமெனிகே துரத்துவதும் வாடிக்கையானது.
அவை லஹிருவை கண்டால் ஓடிவருவதும், இவன் கொஞ்சுவதும், உணவு வைப்பதும். அவன் கட்டிலில் தூங்குவதும் என்று பிள்ளை போல் வளர்க்க, சாருவுக்கு பொறாமையாகவும் இருந்தது.
அவன் இல்லாத நேரத்தில் தோட்டத்தை பார்த்துக்கொள்ளும் டிங்கிரி பண்டாவோடு சேர்ந்து கொண்டு நாய்களுக்கு உணவு வைத்து அவைகளை தொட்டுத், தடவி ஒருவாறு அவைகளின் தோழியாகி இருந்தாள்.
சுதுமெனிகே பக்டரிக்கு சென்றபின் கிணத்தடிக்கு செல்லலாம், தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாம் என்றவளுக்கு தடையாக இருந்தது நாய்கள்தான். இத்தனை நாளாக கிணத்தடிக்கு நெலுமை அல்லது கருணாவை அழைத்துக் கொண்டுதான் சென்றாள். ஆனால் இப்பொழுது நாய்கள்தான் அவளுக்கு காவல்.
இதை பார்த்த லஹிருவுக்கே சற்று ஆச்சரியம்தான். “ரொம்ப தைரியமானவள் தான்” உள்ளுக்குள் புன்னகைத்தவனுக்கு அவள் பேசியவைகள் நியாபகம் வர “ஆமாம் இல்லையென்றால் அவள் நினைத்ததையெல்லாம் எப்படி நடாத்திக்கொள்வாள்? கோபமும் வந்தது. வளமை போல் அவளை முறைத்துப் பார்த்தான்.
அவனுடைய நண்பர்கள் தன்னுடைய நண்பர்கள் ஆனதால் பொறாமையில் பொசுங்குவதாக எண்ணி சிரித்தாள் சாரு.
அத்தோடு விடாமல் அவைகளோடு சேர்ந்து கூத்தடிப்பது, சேட்டை செய்வது என்று அவனுக்கு பழிப்பு காட்டி வெறுப்பேற்றுவாள்.
அவன் நாய்களை பெயர் சொல்லி அழைப்பான். அவைகளும் அவனிடத்தில் செல்லும். செல்லம் கொஞ்சும் மீண்டும் இவளிடத்தில் ஓடி வந்து விடும். அவைகளோடு விளையாடும் இவளை அவைகளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
“நாய்களை கூட விட்டு வைக்காமல் வசியம் பண்ணிட்டாளே யக்ஷணி” கடுப்பில் கத்துவான்.
யக்ஷணியை பார்த்தால் நாய் குறைக்கும். விளையாடாது என்று இவனுக்குத்தான் புரியவில்லை.
தோட்டத்தில் விதவிதமான பழ மரங்கள் காய்த்து தொங்க, பறவைகளும், விலங்குகளும் வந்தவண்ணமும், சாப்பிட்டவண்ணமும் இருந்தன.
இவளும் சென்று மரத்தில் தொங்கியும், ஏறியும், குச்சை வைத்தும் பறிப்பாள். அவள் செய்பவைகளை நாய்களோடு விளையாடுவது போல் ரசிப்பான் லஹிரு.
“லேனா..{அணில்} கிரவி{பெண் கிளி}.. மைனா…” என்று இவளை அழைப்பான்.
“சாப்பிடுறது பாரு. முன்ன பின்ன பழத்தை பாத்திராதது போல” 
இவள் பார்த்தால் மரத்தில் இருப்பதை பார்ப்பது போல் பாசாங்கு செய்வான். சாருதான் குழம்புவாள்.
பறவைகளுக்கு போட்டியாக இவள் சாப்பிடுவாள். சாப்பிடும் நேரத்தில் அவன் என்ன சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டாள்.
அவன் இல்லாவிடில் டிங்கிரி பண்டாவோடுதான் தோட்டத்தில் பொழுது போகும். அவன் இருந்தால் நாய்களும், அவனும் இவளும்தான். சில நேரம் சுதுமெனிகே இருப்பாள்.
தோட்டத்தை சுற்றி இலவங்கப்பட்டை, கிராம்பு மரங்கள் இடையிடையே நடப்பட்டிருந்தது. இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காதாம். அதை தவிர துணிகளை அம்மோனியாவில் ஊறவைத்து, அவற்றை சீல் செய்யாத பிளாஸ்டிக் பைகளில் வேறு போட்டு வைத்திருந்தான் டிங்கிரி பண்டா. அது கூட பாம்புக்கு பிடிக்காதாம்.
“ஹப்பா அப்போ பாம்பு பயமில்லை. இதையெல்லாம் பறிக்க மாட்டீங்களா?” மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பழங்களை காட்டி கேட்டாள்.
“மேல இருந்து ஆகர்ஸ்ட் வரைக்கும் காய் இருக்கும். சில கடைகாரங்க விலைபேசி ஒரு காய்க்கு இத்தனை ரூபான்னு வாங்கிட்டு போவாங்க. இங்க சாப்பிட யாரு இருக்காங்க? புஞ்சி ஹாமு{சின்னையா} வந்தாதான் மரத்துல ஏறி சாப்பிடுவாரு” டிங்கிரி பண்டா அவன் பாட்டுக்கு பேச
“யார் அந்த புஞ்சி ஹாமு?” நாக்கு நுனியில் கேள்வி இருந்தாலும் சில கேள்விகளை வேலையாட்களிடம் கேட்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம். அதை சாரு அவள் அன்னையின் மூலம் அறிந்து வைத்திருந்தாள்.
“அப்போ இந்த தடவ யாரும் வரலையா?”
“அதோ அந்த சிவப்பு ரமுடன் மரத்தையும், மஞ்சள் ரமுடன் மரத்தையும் வாங்கிட்டாங்க. மங்கா வீட்டுக்கு எடுத்துட்டு மீதியாதான் கொடுப்போம். மென்கூஸ், ஜம்பு எல்லாம் கொடுத்திடுவோம். இந்த தடவ இன்னும் கொஞ்சம் காய் இருக்கு” என்றான்.
“உங்க கைராசிதான் போல. எல்லா காயையும் பறிச்சி கொடுங்க தோசி போடலாம்” என்றவள் கருணா மற்றும் நெலுமொடு சேர்ந்து இரண்டு நாட்களாக அந்த வேலையில்தான் இருந்தாள்.
மாலை தேநீருடன் தினமும் விதவிதமான தோசி வழங்கப்பட அதன் சுவையில் லயித்த லஹிரு “ஆஹா… நெலுமுக்கு இத்தனை வருஷத்துல இப்போதான் இதெல்லாம் பண்ண தோணி இருக்கு” என்று கிண்டல் செய்ய,
“ஐயோ ஹாமு {ஐயா} இதெல்லாம் நான் பண்ணல சாருதான் பண்ணா. அவ கைப்பக்குவம் தனிதான். ஏலக்காய் மட்டும் போடாம பட்டையும், வெண்ணிலாவும் போட்டிருக்கா அதான் இந்த கலர்ல இருக்கு”
“என்னது? இதை அந்த யக்ஷணி பண்ணாளா? கடைசில தோசிய கொடுத்து மயக்கிட்டாளே” புலம்பலானான்.    
முழுங்கியவற்றை துப்பவா முடியும்? கையில் இருந்ததை அப்படியே வைத்து விட்டு, கையை கழுவியவன் தேனீரை அருந்தலானான். அதை கூட அவள்தான் போட்டாள் என்று அவன் புத்திக்கு உரைக்கவில்லை.
தோசியின் சுவை வேறு நாவில் ஒட்டி இருக்க, அதை அகற்ற ரசித்து ருசித்து அருந்திக் கொண்டிருந்தான்.
அவன் வயிறு எரிவதை அறியாத சுதுமெனிகே தொடர்ந்தாள். “ஆமான்டா… பேரான்டி… மயங்காயை கூட காய வச்சி புதுசா எதோ பண்ண போறாளாம்”
“ஊறுகாயா?” கடுப்பாகாகத்தான் கேட்டான்.
“மோகினி தன்னோட அழகால மட்டும் மயக்க மாட்டா போலயே, வித்தையெல்லாம் கைவசம் வச்சி வீட்டாளுங்களையும் மயக்க பாக்குறாளே. கூடாதே”
“இல்லடா ஏதோ ஸ்வீட்” என்றவள் சாருவை அழைத்து அது என்னவென்று கேட்டாள்.
“ட்ரை மேங்கோ” என்றாள் இவள்.
அது என்ன? என்று அறிந்துகொள்ளவா அவளை அழைத்தான்? “எதுக்கு இந்த வெட்டி வேலையெல்லாம். நீ வந்த வேலை எதுவோ அத மட்டும் பாரு. அப்பத்தாவை பாத்துகிறதுல மட்டும் ஏதாவது குறை வந்தது? அப்பொறம் தொலைச்சிடுவேன்” விரலை நீட்டி சாருவை மிரட்ட சாரு மட்டுமல்லாது சுதுமெனிகேயும் சேர்ந்து அவனை முறைத்தனர்.
“இவள் என்ன உன் அடிமையா? எப்ப பார்த்தாலும் மிரட்டிகிட்டே இருக்க? அவ அவளோட வேலைய சரியாதான் செய்யிறா. நானும் என்ன குழந்தையா? என்ன பாத்துக்க எனக்கு தெரியாதா? அவளை கொஞ்சம் சுதந்திரமா விடு. என்ன பாத்துக்க வந்தவள உன் வேலையையும் வாங்குற? அவளும் சொந்த வீடுபோல எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யிறா. அத குத்தம் சொல்லுற. என் மேல பாசம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படி மத்தவங்க மனச கஷ்டப்படுத்தாதே” பேரனை கடிந்தாள்.
பேரன் தன்மீது இருக்கும் பாசத்தால் சாருவிடம் இவ்வாறு நடந்துகொள்வதாக எண்ணினாள் சுதுமெனிகே. ஆனால் சாருவின் மீதிருக்கும் கோபத்தாலும் வெறுப்பினாலும் மாத்திரம்தான் அவன் அவ்வாறு நடந்துகொண்டிருந்தான். என்பது இரு பெண்களுமே அறியவில்லை.
அப்பத்தா பேசிய பின் லஹிரு ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொண்டான். அது சாருவை யார் முன்னிலையிலும் மிரட்டக் கூடாது. அவளை தனியாகத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது.
அதன் பின் அவன் சாருவை அப்பத்தாவின் முன்னிலையில் திட்டுவது என்ன? முறைத்துக் கூட பார்ப்பதில்லை. அதற்காக அவளிடம் சிரித்துப் பேசவுமில்லை. அளந்துதான் பேசினான். வேலைகளை மட்டும் சரியாக ஏவினான். தாங்கள் இல்லாத நேரத்தில் என்னென்ன வேலைகள் அவள் செய்ய வேண்டும் என்பதைக் கூட பட்டியலிட்டான்.
அவன் சொல்லும் பொழுது அவனது முதுக்கு பின்னாலிருந்து பழிப்பு காட்டுவாள், அவன் அவளது முகம் பார்க்கும் பொழுது மட்டும் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகுனிவாள்.
“நீ சொன்ன உடனே நான் செய்ய வேண்டுமா? போடா டேய்” என்பது போல் எதையும் செய்ய மாட்டாள். அப்பத்தாவோட அந்த வேலையை செய்தேன். அப்பத்தாவோட இந்த வேலையை செய்தேன். என்று காரணம் சொல்வாள்.
அப்பத்தாவின் வேலைதானே முக்கியம் என்று லஹிரு அமைதிகாக்க, அவளோ சுதுமெனிகேயும், லஹிருவும் பக்டரிக்கு கிளம்பி சென்ற பின் தோட்டத்தை சுற்றிப் பார்ப்பது, வீட்டை அலங்கரிப்பது, நெலுமோடு சேர்ந்து சமையல் வேலையில் ஈடுபடுவது என்று தனக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபட்டு ஒருவாறு இந்த வீட்டில் தன்னை பொருத்திக் கொண்டாள்.
சொந்த வீட்டில் வீட்டு வேலைதான் செய்ய மாட்டாள் செடி, கோடி வளர்ப்பது, அதை பராமரிப்பது அவளுக்கு கொள்ளை பிரியம். இருக்கும் சின்ன இடத்திலையே வித விதமாக பூந்தொட்டியிலையே வளர்ப்பதால், பஞ்சவர்ணம் கூட “காசு கொடுத்து காய் வாங்க தேவை இல்லை. உன்னால இது ஒண்ணுதான் லாபம்” என்பாள். இங்கே இப்படி ஒரு தோட்டத்தை பார்த்த பின் விடுவாளா?  இங்கு ஆசையாகவும் இஷ்டப்பட்டும் வேலைகள் செய்தாள். அதற்கு ஒரு காரணம் அந்த வீடும், சூழ்நிலையும், இயற்கை கொஞ்சும் அழகும் என்றால் மற்றது அவள் அன்னையும் தந்தையும் சந்தித்துக் கொண்டதும் இதோ இந்த வீட்டில்தான்.
அன்னை சொன்ன அவளது காதல் வாழ்க்கையை கேட்டிருந்தவளுக்கு ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் பொழுது அவர்கள் அங்கே நிற்பது போல் காட்ச்சிகள் விரிய புன்னகைத்து கொள்வாள்.
இது லஹிருவின் கண்ணில் பட்டால் போதும் “என்ன பகல் கனவா?” என்று கேட்பான்.
இவள் விழித்து “என்ன?” என்று கேட்டால்
“நின்னுகிட்டு அதுவும் கண்ண திறந்துகிட்டே பகல் கனவு காணுறியே உனக்கெல்லாம் சலிக்காதா?” முறைப்போடுதான் கேட்பான். அவனுக்குத்தான் முறைப்பது சலிப்பதில்லையே
“நான் என்னவோ பண்ணுறேன் உனக்கென்ன?” என்பது போல் பார்த்தவள் “நான் உங்களை தொந்தரவு செய்யவில்லையே எதற்கு என்னை தொந்தரவு செய்யிறீங்க?” அவள் பெற்றோரோடு இருக்கும் தருணம் அது. அதை இழக்க அவள் விரும்பாமல் கூறினாள்.
“யாரு நான் தொந்தரவு செய்யிறேனா? என் கார் கண்ணாடியை ஒடச்சி, என் கார்ல ஏறி, உனக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்குனு, சம்பந்தமே இல்லாம பேசினது நீ. நான் உன்ன தொந்தரவு செய்யிறேனா? டின் மீன் சைஸ்ல இருந்துகிட்டு என்ன எல்லாம் பண்ணுற? என்ன எல்லாம் பேசுற? வாய தொறந்தா பச்சை பச்சயா பேசுற? காது கொடுத்து கேக்க முடியுமா? இங்க வந்து அடக்க ஒடக்கமா இருக்குறது போல நடிச்சா? அப்பத்தா வேணா நம்பலாம் நான் ஏமாற மாட்டேன். நாய் வால நிமிர்த்த முடியாதுடி. ஒரு நாள் இல்ல ஒருநாள் நீ வசமா சிக்கத்தான் போற, அப்போ இருக்கு உனக்கு”
“நான் சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறேனா? நீ தான் இப்போ லூசு மாதிரி உளறுற” கோபத்தில் சம்பளம் கொடுக்கும் முதலாளி என்பதையும் மறந்து ஒருமையில் பேசி இருந்தாள்.
“ஹாஹாஹா பாத்தியா… இப்போதான் சொன்னேன் நாய் வால்ன்னு. நீ யாரு? எப்பேர்ப்பட்ட ஆளு? உன் திட்டம் என்ன? எனக்கு நல்லாவே தெரியும். நீ என்னதான் ஆட்டம் போட்டாலும் என் கிட்ட உன் ஆட்டம் பலிக்காது. உன்ன விட அழகான பொண்ணுங்க எல்லாம் கடந்து வந்தவன்டி நான். என்கிட்டயேவா…”
“அரலூசு…” அவனை மனதுக்குள் வசைபாடியவள் பேச்சை மாற்றினாள். “ஆமா இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே அது இப்படி?”
அவள் கேட்டதும்தான் தான் இவ்வளவு நேரம் அவளோடு தமிழில் உரையாடியதே அவனுக்கு நியாபகம் வந்தது.
யூனிவெர்சிட்டியில் தமிழர்கள், முஸ்லீம்கள் என்று இவனுக்கு நண்பர்கள் இருக்க, அவர்களிடம் கத்துக் கொண்டதுதான். இஷ்டப்பட்டு கத்துக் கொண்டானா? கஷ்டப்பட்டுக் கத்துக் கொண்டான். நம்ம நாட்டுல இருக்குறது ரெண்டே மொழி இது கூட தெரியலைனா எப்படி? அதுவும் நம்ம கிட்ட வேலை பார்க்கிறவர்கள் பேசும் மொழியை தெரிந்து வைப்பதால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ளலாமே என்ற நல்லெண்த்தில் கத்துக்கொண்டது.
அதை அவளிடம் கூற பிடிக்காமல் “என்ன பேச்சை மாத்துறியா? நீ கேட்ட உடனே நான் சொல்லனுமா?”
“எதுக்கு இப்போ முறைச்சிகிட்டே திரியிறீங்க? போன ஜென்மத்துல கரி இஞ்சினா பொறந்திருப்பீங்க” இவள் சிரிக்க, அவன் முறைக்கத்தான் செய்தான்.
அவனோடு சகஜமாக பழக வேண்டும்  என்றுதான் இவளுக்கும் ஆசை ஆனால் அவன் இடம் கொடுத்தால்தானே
“எப்படி எல்லாம் பேசி மயக்க பாக்குற, மோகினி பிசாசு. யக்ஷணி. உன் வேல எதுவோ அத மட்டும் பாரு. வேலைக்கு வந்தவ வேலைய மட்டும்தான் பார்க்கணும் புரியுதா?”
அவளை பிசாசு என்றதில் கடுப்பானவள் “ஆமா நான் பிசாசுதான். ஆனா மோகினி இல்ல. ரிரி யகா {இரத்தக் காட்டேரி] என்றவள் அவன் கையை இழுத்து நன்றாக கடித்து விட்டாள். 
வலியில் துடித்தவன் அவளை தள்ளி விட சுதாரித்தவள் அவன் தோளைபற்றி பிடித்து நின்றிருந்தாள். அவள் தோளில் தொங்கியதில் இவனும் அவள் இடுப்பை பிடித்திருந்தான்.
“ஓவரா பேசின மவனே கைக்கு பதிலா வாய கடிச்சி வச்சிடுவேன்” இவள் மிரட்டினாள்.
“என்ன? என்ன சொன்ன?” அதிர்ந்தவன் அவளை முறைக்க
“ஐயோ சாமி நான் எந்த அர்த்தத்திலையும் சொல்லல” மிரண்டவள் அவனை தள்ளி விட்டு சிட்டாக பறந்திருந்தாள்.
அவள் சொன்ன தொனியும், தோளை தொட்டு நின்றவளின் முகம் மிக அருகிலையே தெரிய அவள் முகம் காட்டிய பாவனையை நன்றாகவே அவனால் படிக்க முடிந்தது.
“யக்ஷணி. கொஞ்சம் நேரத்துல என்னையே கதிகலங்க வச்சிட்டா…” பேச்சுவாக்கில் அவள் அவ்வாறு சொன்னாலே ஒழிய வேண்டுமென்றே சொல்லவில்லை என்று அவள் முக மாற்றத்தை வைத்தே புரிந்து கொண்டான் லஹிரு.
ஒருத்தியால் ஒவ்வொரு நிமிடமும் நடிக்க முடியுமா? அது சாத்தியமா? “இவள் ஒரு லூசு யக்ஷணி” முணுமுணுத்தவன் தலையை கோதிக் கொண்டு அவளை பற்றியே சிந்திக்கலானான். மீண்டும் மீண்டும்  அவள் செய்த பாவனைகள் கண்ணுக்குள் வந்து போக வாய்விட்டே சிரித்து விட்டான்.
அவனுக்கும் அவளுக்கும் நடுவிலிருந்த திரை மெல்ல விலக சந்தேக பனிமூட்டமாய் வந்து சேர்ந்தான் ஹரித தினெத் வீரசிங்க.

Advertisement