Advertisement

அத்தியாயம் 5
காலை ஆறு மணிக்கே சாருவை திட்டியவாறே எழுப்பலானாள் பஞ்சவர்ணம்.
“ஹாமினேவ பார்த்துகிற வேலைக்கு போறாளாம் வேலைக்கு. இங்க இருக்குற கடைக்கு போறதுக்கே நான் எழுப்பாட்டி அனுப்பனும். அங்க எல்லாம் போனா இப்படி  தூங்க முடியுமா? வயசானவங்க வேற நைட்டுல தூக்கம் வராது. அடிக்கடி கக்கூசுக்கு வேற கூட்டிகிட்டு போகணும். காலங்காத்தால எந்திரிக்கணும், நேரத்துக்கு மருந்து கொடுக்கணும். இதெல்லாம் யோசிச்சுதான் ஒத்துக்கிட்டியா?”
“ஆரம்பிச்சிட்டியா? போய் பார்க்க வேண்டிய வேலையெல்லாம் போன பிறகு பார்த்துகிறேன். எதுக்கு இப்போ நீ கத்துற?” அத்தையை பதிலுக்கு திட்டிய சாரு கண்டிக்கு செல்ல தயாரானாள்.
லஹிரு அவளை அவள் வீட்டுக்கு எல்லாம் வந்து அழைத்து செல்வதாக கூறவில்லை. சரியாக எட்டு மணிக்கு புஞ்சி நிலமெயின் வீட்டுக்கு வரும்படி அலைபேசி வழியாக கூறி இருந்தான்.
“ஆமா அவன் கார கொண்டு வந்து நிறுத்த நம்ம வீட்டு முன்னாடி வராண்டாவா இருக்கு? இல்ல கார் வர ரோடா இருக்கு?” நக்கலாக எண்ணிக் கொண்டாள்.
காலனி வீடுகளிலையே இவர்களின் குடியிருப்புதான் இன்னும் ஒழுங்கில்லை. அரசாங்கம் நிலம் கொடுத்து வீட்டுத் திட்டம் என்று இரண்டு அறையோடு வீடுகள் கட்டிக் கொடுத்தாலும், தனியார் நிலங்களில். சொந்த நிலங்களில் இருப்பவரின் நிலைமை மோசம்தான்.
இன்னும் ஊருக்குள் செல்ல பாதை இல்லை. மழை வந்தால் மலை சரிந்து மண்பாதை மூடிவிடும். பயணம் தடைப்படும். சின்ன சின்ன நீர்நிலைகளுக்கு பாலங்கள் இல்லை. குழந்தைகள் பாடசாலைகள் செல்லும் பொழுது இறங்கிக் கடக்க வேண்டும். மழை பொழிந்து நீர் நிரம்பினால் அன்று பாடசாலைக்கு விடுமுறை கொடுக்க வேண்டிய நிலை.
என்ன இருந்தாலும் லஹிரு முதலாளி அவன் இவளை வீட்டு வாசலில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தி ஏற்றிச் செல்வான் என்று எதிர்பார்ப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ரயிலேறி வா என்று விட்டுச் செல்லாமல் அழைத்து செல்வதே பெரிய விஷயம் என்று எண்ணியவாறே குளித்து விட்டு வந்தவள் புஞ்சி நிலமையின் வீட்டுக்கு செல்ல தயாரானாள்.
“எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டியா?” பஞ்சவர்ணம் கேட்க.
“போனுக்கு டோபாப் பண்ணி இருக்கேன். வாரா வாரம் நானே பண்ணிடுறேன். நான் மறந்தா நீ நியாபகப்படுத்து. நீயா போன் கார்ட் வாங்க வெளிய அலையாத”
“ஏன்டா அவ்வளவு பெரிய வீட்டுல ஒரு லேண்ட்லைன் போன் இருக்காதா? அதுல பேசுகிறேன். நீ எதுக்கு காச கரைகிற” முத்துவை முறைத்தாள் சாரு.
“ஆமா… அடுத்தவன் காசுல பேசுவ, சுதந்திரமா பேச முடியுமா? போன நடுவாசல்ல வச்சி இருப்பாங்க. நீ பேசும் போது நாலு பேர் வந்து போவாங்க. உனக்கு அங்க என்ன கஷ்டம் வந்தாலும் வாய திறந்து சொல்லத்தான் முடியுமா? இப்போதான் போன் கைலயே இருக்கில்ல எதுனாலும் டக்குனு போன் போட மாட்டியா?”
பஞ்சவர்ணத்தின் கண்கள் கலங்கியதை அதை இவர்கள் கவனிக்கவில்லை. சட்டென்று வந்து போன பழைய நியாபகங்களை புடவை முந்தியால் துடைத்துக் கொண்டாள். 
“போன் போட்டா மட்டும் பறந்தா வருவ? நுவரெலியாவிலிருந்து கண்டிக்கு வரவே மூணு மணித்தியாலயம். நீ வரும் போது நடக்க வேண்டியது எல்லாம் நடந்து முடிஞ்சிருக்கும்” சிரித்தாள் சாரு.
“ஏய் லூசு ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சே போறியா? எங்கயும் போக வேணாம். இங்கயே இரு” கடுப்பானான் முத்து.
“அட லூசே நீ பேசினத்துக்கு நான் பேசினேன். அந்த கிழவி என்ன என்ன செஞ்சிட போறா? அடங்கு. நான் அங்க போயே ஆகணும்” முடிவாக சொன்னவள் பஞ்சவர்ணத்தோடு கிளம்பினாள்.
பஞ்சவர்ணத்தோடு வந்த சாருவை பார்த்த மெனிகே “உன் பொண்ணா? இங்க எல்லாம் வந்ததே இல்லையே” என்று ஆராய
“என் நாத்தனார் பொண்ணு” என்றாள் பஞ்சவர்ணம்.
“இவ என்ன ஆபீஸ் போறா மாதிரி துணி போட்டுக்கிட்டு வந்திருக்கா? வீட்டு வேலைகா போறா? இல்ல உங்கம்மாவோட கணக்கு வழக்கு எழுத போறாளா?” கணவனின் காதை கடித்தாள்.
காலை வேலை என்பதால் முற்றத்திலிருந்த மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த மரபெஞ்சின்கீழ் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தனர் புஞ்சி நிலமையும் லஹிருவும். அவர்களுக்கு லவரியா எடுத்து நீட்டிக்க கொண்டிருந்தாள் மெனிகே.
பஞ்சவர்ணம் அவர்களுக்கு வணக்கம் வைக்க, சாரு அமைதியாகத்தான் நின்றிருந்தாள்.
லஹிரு பஞ்சவர்ணத்தை பார்த்து புன்னகைத்தததோடு சரி சாருவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“ஏன்டி நீ வேற அதுங்களே இப்போதான் யாரும் கொடுக்குற பழைய துணிய போடாம நல்ல துணியா வாங்கி போடுதுங்க. அழகா டிரஸ் பண்ணுறது ஒரு குத்தமா?”
“அதுக்கில்லைங்க” மெனிகே எதோ சொல்ல வர
“போ… போ… அம்மாக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் பார்த்து எடுத்து வை. அந்த புள்ள சாப்பிட்டிருச்சோ முதல்ல சாப்பிடக் கொடு” மனைவியை விரட்டினான் புஞ்சி நிலமே.
சித்தப்பாவும் சித்தியும் பேசியது லஹிருவின் காதில் விழத்தான் செய்தது. சாருவை பார்த்தால் காலனியில் வாழும் பெண்போல தெரியவில்லை. பெரிய இடத்து பெண்போல்த்தான் தெரிந்தாள். ஆடை என்பது ஒரு மனிதனை எவ்வளவு நேர்த்தியாக்கும். இவள் மட்டும் நன்றாக படித்திருந்தால் நல்ல வேலையில் சேர்ந்திருக்கலாம். இப்படி ஒரு வேலையில் அமர வேண்டியிருக்காது என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“ஆ… ரெண்டு பேரும் அந்த பக்கமாக வாங்க” என்று விட்டு மெனிகே உள்ளே செல்ல லஹிருவை நெருங்கினாள் பஞ்சவர்ணம்.
“ஐயா மன்னிக்கணும். சின்ன பொண்ணு தப்புத்தண்டா பண்ணா பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க ஐயா” என்று வணங்கியவாறு அவன் காலில் விழப்போக
என்னதான் வேலை செய்பவளாயினும் வயதில் மூத்தவள் இப்படி வணங்குவது எல்லாம் லஹிருவுக்கு பிடிப்பதில்லை. அதுவும் காலை தொடுவது என்றால்
“என்ன செய்யிறீங்க” இவன் பதற,
“என்ன அத்த பண்ணுற? லூசா நீ” சாரு லஹிருவை முறைத்தவாறு அத்தையை தூக்கி நிறுத்தினாள்.
“நம்ம அத்தைய தொட்டு தூக்கி நிறுத்தினா ஆகாதா?” என்ற கோபம்தான் சாருவுக்கு.
அவன் கையில் கப் மற்றும் சாஸர் இருந்ததால் அவனால் பஞ்சவர்ணத்தை தொட முடியவில்லை. அவன் பதறி விலகியதால் சூடான தேநீர் வேறு அவன் கையில் கொட்டி எரிந்தது. அந்த வலியையும் தாண்டி லஹிருவும் அவளை முறைத்துக் கொண்டுதான் நின்றிருந்தான். அதற்கு காரணம் அவன் ஏற்கனவே அவளை பற்றி நினைத்ததுதான் ஏதுவாக அமைந்தது.
இவள் மட்டும் நன்றாக படித்து நல்ல நிலைமையில் இருந்திருந்தால் இந்தம்மா இப்படி கண்டவங்க காலில் எல்லாம் விழப்  போவாங்களா?” என்ற கோபம் தான்.
“சரி சரி உள்ள போங்க” புஞ்சி நிலமையின் குரலில் தான் இருவரும் தங்களை மீட்டிருந்தனர்.
சாரு கொண்டு வந்த பையை அங்கேயே வைத்து விட்டு பஞ்சவர்ணத்தோடு செல்லும் பொழுதுதான் வீட்டை கவனித்தாள். வேலைப்பாடுகள் கூடிய அழகான வீடு. உள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல் பிறக்க தன் பாட்டுக்கு நடந்தவளின் கையை பிடித்து தடுத்த பஞ்சவர்ணம் பிவாசல் இருக்கும் பக்கம் அழைத்து சென்றாள்.
அவர்களை வாசல் புறமாக உள்ளே வரச் சொல்லவில்லையே பின் வாசல் வழியாகத்தான் வரச் சொன்னாள் மெனிகே.
“என்ன அத்த நாம எல்லாம் முன்வாசல் வழியா உள்ள போனா நிலக்கதவு இடிஞ்சி விழுந்துடுமா என்ன? பின் பக்கமா வரச் சொல்லுறா?”
“சத்த அமைதியாதான் இரேன்டி. இங்கயே பிரச்சினை பண்ணி போற பயணத்தை நிறுத்திடுவ போலயே” போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் இவ்வாறு சொன்னதும் அமைதியானாள் சாரு.
அங்கிருந்த வேலையாளை அழைத்து இவர்களுக்கு குடிக்கவும், சாப்பிடவும் ஏதாவது கொடுக்கும்படி கூறினாள் மெனிகே. சாரு தான் சாப்பிட்டு விட்டு வந்ததாக எதையுமே தொட்டுக் கூட பார்க்கவில்லை.
பஞ்சவர்ணம் கூட “ஏன் டி இது உனக்கே அதிகப்பிரசங்கி தனமா தெரியல? போறது வளவ்வைக்கு அங்க போய் பட்டினி கிடப்பியா? தனியா சமச்சிதான் சாப்பிடுவியா? அவங்க போடுற சோத்தத்தானே சாப்பிடுவ? இங்க சாப்பிட்டாதான் என்னவாம்? ” என்று கூறி அவளின் முறைப்பை பெற்றுக் கொண்டாள். 
“அங்க நான் உழைச்சு சாப்பிடுவேன். சும்மா ஒன்னும் வேணாம்” என்றவளை ஆயாசமாக பார்த்தாள் பஞ்சவர்ணம்.    
ஒருவாறு சாரு லஹிருவோடு கிளம்ப பஞ்சவர்ணம் அழுதவாறே விடை கொடுத்தாள்.
சாருவின் கண்களில் கண்ணீர் முணுக்கென எட்டிப்பார்த்திருந்தாலும் அவள் அழவில்லை. அதற்கு இடம் கொடுக்காமல் பின்னாடி உக்கார போனவளை “நான் என்ன உனக்கு டைவரா? வந்து முன்னாடி உக்காரு. நேத்து மட்டும் பொண்டாட்டி மாதிரி உரிமையா முன்னாடி உக்காந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த” பட்டென்று கூறியவன் ஓட்டுநர் இருக்கையின் பக்கம் சென்றிருந்தான்.
“உன் வாயில வசம்பை வச்சி தேய்க்க” முணுமுணுத்த சாரு முன்னாடி அமர்ந்து கொண்டாள்.  
“என்னங்க இது? என்னமோ இவ அவன் பொண்டாட்டி மாதிரி முன்னாடி உக்காருறா, பின்னாடி உக்கார சொல்லுங்க” மெனிகே கணவனிடம் பொரும
“நீயே கண்டதையும் பேசி அவங்களுக்கு கல்யாணத்த முடிச்சிடுவ போலயே பேசாம இருடி” என்றான் புஞ்சி நிலமே.
வண்டி புஞ்சி நிலமையின் வீட்டை தாண்டவில்லை. லஹிரு அப்பத்தாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பிக்க,
“இதுக்குதான் என்ன முன்னாடி உக்கார சொன்னியாடா… இதுக்கு நான் பேசாம ரயில்லயே வந்திருப்பேன்” சாரு பல்லைக் கடித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.
பிரதான பாதைக்கு வந்து சேரவில்லை வண்டியின் குறுக்காக வந்து நின்றாள் வான்மதி.
அவள் சாருவின் தோழி என்று சரியாக அடையாளம் கண்டுகொண்ட லஹிரு “போ போய் பேசிட்டு வா” என்றான்.
சாரு இறங்கி வான்மதியிடம் செல்ல லஹிருவும் இறங்கி அலைபேசியோடு ஐக்கியமானான்.
“ஏன்டி ஊருக்கு போறியே சொல்லிட்டு போகணும்னு தெரியாதா?” கத்த ஆரம்பித்தாள் வான்மதி.
இருந்த பிரச்சினையில் தோழியிடம் சொல்ல வேண்டும் என்று கூட சாருவுக்கு தோன்றவில்லை. “ஏன்டி நான் தான் போறேன்னு தெரியுமில்ல. வீட்டுக்கு வர மாட்டியா? இப்படி நடு ரோட்டுலயா வந்து நிற்ப?” தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பது போல் பேசினாள் சாரு.
“ஆமாம் டி அந்த முத்து பய வேற வீட்டுக்கு வந்து கத்திட்டு போனான். உன் வீட்டுக்கு வந்து அவன் மூஞ்ச வேற நான் பார்க்கணுமோ? ஏன் நீ வந்து பயணம் சொல்ல மாட்டியா?” சண்டை போட சாரு ரெண்டு கெட்டவார்த்தை சொல்லி திட்டிய பின்தான் வான்மதி அடங்கினாள்.
அலைபேசியை நொண்டியவாறு இவர்கள் பேசியவைகளைத்தான் கேட்டுக் கொண்டிருந்தான் லஹிரு. “என்னதான் நாய குளிப்பாட்டி நடுவீட்டுல கொண்டு வந்து வச்சாலும் குணமும் மாறாது. வாலையும் நிமிர்த்த முடியாது” அவன் அவ்வாறு சொன்னது யார் வேணாலும் துணியை கொண்டு தங்களை உயர்ந்த மனிதர்கள் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால் பழக்க வழக்கங்களையோ பேச்சு வழக்கையே மாற்றிக் கொள்ள முடியாது. அது அவர்களை சரியாக அடையாளப்படுத்தி விடும். அதற்கு சரியான உதாரணம் சாரு என்று நினைத்தான்.
அவனை கண்டுகொள்ளாது பெண்கள் இருவரும் தங்களது உலகத்தில் லயித்திருக்க, “ஏன்டி பெரிய பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணுவேன். லைப்ல செட்டில் ஆவேன்னு வீர வசனம் எல்லாம் பேசுனா? இப்போ என்னடி வீட்டு வேலைக்கு போற?” சட்டென்று வான்மதி கேட்க லஹிரு இவர்களின் புறம் திரும்பி இருந்தான்.
“அது இன்னும் நிலுவைலதான் இருக்கு பார்க்கலாம்” என்றவாறே சாரு லஹிருவை பார்க்க அவனோ இவளை நன்றாக முறைத்தான்.
“ஆஹா இவனுக்கு தமிழ் வேற நல்லா தெரியுமே! பேசினது எல்லாம் கேட்டிருப்பானோ?” சாரு அவனை பார்த்து இளிக்க அவன் முகம் ரௌத்திரமானது.
“இன்னும் எவ்வளவு நேரம்தான் பேசிகிட்டு இருப்ப? லேட் ஆகுது”
“சரிடி நான் கிளம்புறேன்” சாரு தோழியிடம் விடைபெற வான்மதி சோகமாக விடை கொடுத்தாள்.
“வாய் மட்டும்தான் நீளம், வாயை திறந்தால் கெட்டவார்த்தையை தவிர வேறு எதுவும் வராது என்று பார்த்தால் இவள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கிறதா?” ஏற்கனவே அவளை பற்றி நல்ல எண்ணம் இல்லை. அவள் பேசியதை கேட்ட பின் சுத்தமாக பிடிக்கவில்லை.
“முட்டாள் பெண். எவனாவது இவளை ஏமாற்றினால் தான் புத்தி வரும்” மனதுக்குள் திட்டித் தீர்த்தவன் கண்டி சென்று சேரும்வரை சுதுமெனிகேவை சரியாக பார்த்துக் கொள்ளாவிட்டால் சாரு சாகும்வரை வீட்டு வேலைக்காரியாகவே இருக்க வேண்டி இருக்கும் என்பது போல் பேச கடுப்பானாள் இவள்.
“இவன் பாட்டிக்கு இப்பவே என்பது வயசு இருக்கும். இன்னும் எத்தனை வருஷம் உசுரோட இருக்குமோ? நான் சாகும்வரைக்கும் வேலை வாங்கும் மூஞ்சி” அவன் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் இவள் மனதுக்குள்ளேயே பதில் சொல்லியவாறு கண்டியை வந்தடைந்தாள். முகத்துக்கு நேராக கூறினால் பாதியிலையே இறக்கி விட்டு போய்டுவானே.
  
கண்டி நகரத்திலிருந்து கொஞ்சம் தூரம் உள்ளே சென்றால் தேயிலை தோட்டம் ஆரம்பமாகும் இடத்தில் சாதாரண ஒரு இரும்பு கேட். காவலாளி என்று யாரும் இல்லை. இவ்வளவு பெரிய தோட்டத்துக்கு யாரு காவல்? என்ற சிந்தனையிலே சாரு கண்களை சுழற்ற மலை ஏறும் பொழுது அவள் கண்ட காட்ச்சி  தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள்தான்.
பச்சை பசேல் என்று கம்பளத்தை விரித்து போட்டது போல் அழகாக இருந்த தோட்டம் மதியம் நெருங்கியதால் வெயில் காய்ந்து கொண்டிருந்தது.
“வீட்டுக்கு போகாம நாம எதுக்கு பக்டரிக்கு போறோம்” சந்தேகமாக கேட்டாள் சாரு.
“அப்பத்தா இந்த நேரத்துல பக்டரிலதான் இருப்பாங்க” என்றவன் வேறு எதுவும் சொல்லவில்லை.
பாக்டரி நான்கு மாடி கட்டிடம் போல் தோற்றமளிக்க புஞ்சி நிலமையின் பக்டரியை விட இது எவ்வளவு பெரிய பாக்டரி என்று வியந்தவாறே சாரு இறங்க அங்கே இருந்தவர்கள் அவளை குறுகுறுவென பார்க்க ஆரம்பித்தனர்.
தங்கள் முதலாளியின் திருமணத்தை காணும் ஆவலில் இருப்போருக்கு அவன் ஒரு பெண்ணோடு வந்தால் வேறு என்ன நினைக்கத் தோன்றும். இது எதுவும் அறியாத லஹிரு “பை வண்டிலையே இருக்கட்டும். உள்ள போய் அப்பத்தாவ பார்க்கலாம்” சாருவும் அவனை பின் தொடர்ந்தாள்.
காரியாலய அறையில் அமர்ந்து சுதுமெனிகே கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தாள். 
கதவை தட்டிக் கொண்டு லஹிரு உள்ளே நுழையவும் மூக்குக்கண்ணாடியின் வழியே அவனை பார்த்தவள் அவனுக்கு பின்னால் வந்தவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
சாருவோ சுதுமெனிகேவை கண்டு கண்களில் நிரப்பிக் கொண்டவள் ஆனந்தக் கண்ணீரோடு அவள் அருகில் ஓடி வந்து விழுந்து வணங்க, லஹிரு இதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
சுதுமெனிகேயும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை போலும் இருக்கையை தள்ளி எழுந்தவள் “நல்லா இருமா” என்றவாறே அவளை எழுப்பி அவள் பெயரை கேட்க இவளும் கூற, அவர்களுக்கு உரையாடல் ஆரம்பமானது.
சுதுமெனிகே சிங்கள பெண்களுக்கே உரித்தான ஒசரிய எனும் சாரி அணிந்து கம்பீரமாக இருந்தாள்
“கொஞ்சம் நல்ல பண்புகளை கற்று வைத்திருக்கிறாள்” என்று லஹிருவின் உள்ளம் சொன்ன போதிலும் அவள் வான்மதியிடம் பேசியது நியாபகம் வரவே “எல்லாம் நடிப்பு. அப்பத்தாவையே கவுக்க பாக்குறாளா? யாருக்கு ஸ்கெட்சு போடுறா?” என்றவனின் பார்வை எதேச்சையாக இடது புறம் இருந்த பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியில் விழ, தன் விம்பத்தை கண்டவனுக்கு “எனக்கா? கனவுதான் நல்லா காணட்டும்” கொஞ்சம் கொஞ்சமாக அவளை கோபமாக பார்க்க ஆரம்பித்தான்.
“வீட்டு வேலைக்கு ஆள் கூட்டிட்டு வரேன்னு சொன்னவன் தேவதை மாதிரி ஒரு பொண்ண கூட்டிட்டு வந்திருக்கான் பாரேன்” சுதுமெனிகே கிண்டல் செய்ய
“இவள் தேவதையா? யக்ஷணி” என்று முணுமுணுத்தவன் “வீட்டுக்கு போலாமா? அப்பத்தா, பசிக்கலயா? நேரத்துக்கு சாப்பிட வேணாமா?”
“போலாம்டா” சாருவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப வண்டியில் பின்னாடி உட்காந்த சுதுமெனிகேவும், சாருவும் ரொம்ப நாள் பழகியவர்கள் போல் பேச ஆரம்பிக்க லஹிரு தனியாக விடப்பட்டான்.
சுதுமெனிகே யாரிடமும் சட்டென்று ஒட்ட மாட்டாள். ஆளை பார்த்த உடன் கணிக்கும் ரகம்தான். அவள் வயதும் அனுபவமும் அப்படி இருக்க, சாருவை கணிக்க தவறியதாகத்தான் எண்ணினான் லஹிரு.
கணித்திருந்தால் இவளை இப்பொழுதே ஊருக்கு ரயில் ஏற்றி விடு என்றல்லவா சொல்லி இருப்பாள் என்று அவன் மனமும் கேலி செய்தது.
எது எப்படியோ இவள் அப்பத்தாவை நன்றாக பார்த்துக் கொண்டாள் சந்தோசம். அப்பாதாவின் குணத்துக்கு இவள் புரிந்துகொண்டு பைத்தியக்காரத்தனத்தை கைவிட்டால் நிம்மதி என்று சிந்தித்தவாறு வண்டி ஓட்டலானான். எந்த சூழ்நிலையையும் அவளை நம்பக கூடாது என்ற முடிவில் இருந்தான் அவன்.
பாவம் லஹிரு அறிந்திருக்கவில்லை அவள் சூழ்நிலையால் மாத்திரம் இந்த வேலைக்கு வரவில்லை. நீண்டநாள் காத்திருந்து இஷ்டப்பட்டுதான் வந்திருக்கின்றாள் என்று.
வண்டி வீட்டை அடைந்ததும் முதல் ஆளாக இறங்கியவள் கார் கதவை திறந்து சுதுமெனிகேயின் கையை பிடித்து இறக்கி விட்டதோடு அவளை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்து சோபாவில் அமர்த்தி இருந்தாள்.
“இங்கயும் நுவரெலியா போல குளுகுளுன்னுதான் இருக்கு. பேன் தேவைடாது இல்ல மேடம்”
“என்ன மேடம் எங்குற? வாய்நிறைய பாட்டினே கூப்டு” சுதுமெனிகே அன்பாக சொல்ல
புருவம் உயர்த்திய லஹிரு “அவ உங்கள பார்த்துக்கவும், வீட்டு வேலைக்கும் வந்திருக்கா” என்றான்.
“சரிடா இருக்கட்டும். அதனால என்ன?” பேரனை முறைத்தவள் “சம்மர்ல சிலநேரம் வேர்க்கும்டா அப்போ பேன் போட்டுக்கலாம்” சாருவின் கன்னம் தடவ அவள் கையை கண்களில் ஒற்றிக் கொண்டாள் சாரு.
லஹிருவின் வயிறு கபகபவென எரிய ஆரம்பித்தது. “அழகா துணி போட்டிருந்தா மட்டும் நம்ம இனமாக முடியுமா? கீழ்ஜாதி கீழ்ஜாதிதான். நாங்க வேற இவள் வேறதான்” என்றான்.
சுதுமெனிகே பாராம்பரியம், குடும்பம், கலாச்சாரம் என்பதை கட்டிக்காக்க நினைத்தாலும், மனிதர்களை மதிப்பவள். தன்னுடைய பேரனா சின்னப் பெண்ணை இப்படி பேசினான் என்று அதிர்ந்தவள்
சட்டென்று சில நியாபகங்கள் அவள் நியாபக அடுக்கில் வந்து போக “நீ மொல்லிகொட வளவ்வ ரெத்தம்னு நிரூபிச்சிட்ட, வீரசிங்கவுக்கு பேரன் என்று பேசியே சாதிச்சிட்ட. இங்கிருந்து  போ…”
அப்பத்தா அவனிடத்தில் கோபப்பட்டதே இல்லை. இதுவே முதல் தடவை. தான் பேசியதும் அதிகப்படி என்று அவனுக்கு தெரியும். “அப்பத்தா நான் ஏதோ கோபத்துல” லஹிரு புரியவைக்க முயல
“பேசாத என்ன கொஞ்சம் தனியா விடு” எனும் பொழுதே சாரு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை அருந்தியவள் “போய் சாப்பாடு தயாரானு பாரு எனக்கு பசிக்குது” என்று சாருவை அனுப்பி வைத்தாள்.
செல்லும் அவளையே முறைத்து பார்த்தவாறு தனதறைக்கு சென்றவனுக்கு “வந்த மறு நிமிஷமே எனக்கும் அப்பத்தாக்கும் நடுவுல சண்டையை மூட்டி பிரிச்சிட்டியே. உன்ன வச்சிக்கிறேன்டி” கருவிக் கொண்டான்.
லஹிரு பேசியதை சாரு கண்டுகொள்ளவே இல்லை. இந்த இடத்தில் இதற்கு முன்பும் இதே பேச்சை ஒருத்தி கேட்டாள். இவளுக்கும் இந்த பேச்சென்னா? இதற்கு மேலும் கேட்க நேரிடும் என்று தெரிந்ததுதானே வந்திருக்கின்றாள். இதற்கே அதிர்ச்சியடைந்து, கண்ணை கசக்க முடியுமா? சுதுமெனிகே சொன்ன வேலையை செய்தவள் அவள் சாப்பிட்ட பின் அவளுக்கு மாத்திரைகளை தண்ணீரோடு எடுத்துக் கொடுத்து, வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்க, அவளோ முதல்ல போய் சாப்பிட்டு விட்டு வரும்படி அனுப்பி வைத்தாள்.
சமயலம்மா ஒரு சிங்கள பெண்தான் அவளோடு இன்னுமொரு பெண் இருந்தாள். கருணா, நெலும் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்களோடு அமர்ந்து உண்டவள் லஹிருவுக்கு உணவை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கதவை தட்டினாள்.
சமயலம்மா என்று நினைத்தவன் “கதவு திறந்துதான் இருக்கு” என்று குரல் கொடுக்க உள்ளே வந்தவளைக் கண்டு “நீ எதுக்கு என் ரூமுக்கு வந்த? ஓஹ்… அப்பத்தாவ பேசி மயக்கிட்ட என்ன மயக்க வந்தியா? உன் மாயத்துக்கு எல்லாம் மயங்குறவன் நான் இல்ல. சாப்பாடு கொண்டு வந்த இல்ல வச்சிட்டு போ” அடிக்குரலில் சீற
“அதைத்தானேடா செய்ய போனேன் ஓவரா பேசுற” அவள் மைண்ட் வாய்ஸ் சொல்ல “ஆமா உன்ன மயக்க வசிய மருந்தை சாப்பாட்டுல கலந்திருக்கேன். நல்லா சாப்பிடு” கேலியாக சிரித்தவாறே வெளியேறினாள். 
இவள் உண்மையை சொல்கிறாளா? விளையாடுகிறாளா? குழம்பினான் லஹிரு. “சே சே இருக்காது” தலையை உலுக்கிக் கொண்டவன் “யக்ஷணி” அவளை திட்ட ஆரம்பித்தான்.
சுதுமெனிகேயின் அறைக்கு செல்ல அவளோ களைப்பில் கட்டிலில் சாய்ந்திருந்தாள். “என்ன பாட்டி என்ன பண்ணுது?” அவளின் கட்டிலுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள் சாரு.
“என்னமா பண்ணுறது? வயசாகிருச்சு. முன்ன மாதிரி வேலை செய்ய முடியிறது இல்ல. கை வலிக்குது கால் வலிக்குது. இரவுல தூக்கம் வர மாட்டேங்குது. இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டா நிம்மதியா போய்டலாம். அதுக்கு இவன் சம்மதிக்கணுமே”
“ஏன் கொள்ளுபேரன் பேத்தியை பார்க்க ஆச இல்லையா?” அருகில் இருந்த கப்போர்டை திறந்து நாட்டு மருத்துவர் கொடுத்த எண்ணெய் பாட்டிலை அவள் கால்களுக்கு பூசி தேய்த்து விட்டவாறே கேட்டாள் இவள்.
“வேதமகத்தையா கொடுத்த எண்ணெய் இங்கதான் வச்சிருக்கு. பூச சொல்லி அவன் சொன்னானா? கோபத்தில் ஏதோ பேசிட்டான் மனசுல வச்சிக்காத அவனுக்கு என் மேல பாசம் அதிகம். எல்லாரையும் நம்பிடுறேன்னுதான் கோபம். என்ன கேட்ட? ஆசையா? மனிச பயலுங்களோட ஆசைக்கு அளவே இல்ல. அது அடங்காதது” இந்த வயதிலும் கறை படாத முத்து பற்களை காட்டி சுதுமெனிகே புன்னகைக்க சாருவுக்கு அவளை கட்டியணைக்க வேண்டும் போல் இருந்தது.  
சாரு மற்றும் சுதுமெனிகேயின் உறவு நல்லவிதமாகத்தான் சென்று கொண்டிருந்தது. அவள் வேலைகளிலும் எந்த குறையும் காண முடியவில்லை. ஆனால் லஹிருவுக்குத்தான் அவள் மீது சந்தேகமாகவே இருந்தது.

Advertisement