Advertisement

அத்தியாயம் 4
லஹிருவுக்கு தூக்கமே வரவில்லை. உருண்டு புரண்டு பார்த்தான் இன்று மாலை நடந்த சம்பவமும் அந்த யக்ஷணியின் நியாபகமும்தான் அவனை ஆட்கொண்டிருந்தது.
தான் அடித்தும் சிலை போல் நின்றவளை கொல்லும் கோபம் வர அவள் கழுத்தை நெறிக்க போனவனை சுமித்தான் தடுத்து நிறுத்தினான்.
“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பாரு, பாரு எப்படி நிக்கிறான்னு பாரு. டேய் சுமித் இவள வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுக்க சொல்லு” சிங்கக் குரலில் சீறினான் சிங்களவன்.
“நான் எதுக்கு கையெழுத்து போட்டுக் கொடுக்கணும். அதுவும் வெத்து பேப்பர்ல?” சாரு முறைக்க
“என் காச யாரு உங்கப்பானா கொடுப்பான்? நீதானே கொடுக்கணும். கையெழுத்துப் போட்டுக் கொடு. என்ன எழுதணுமோ நான் எழுதுகிறேன்” என்றான் இவன்.
அப்பாவை பற்றி லஹிரு பேசியதும் சாருவின் முகத்தில் அனல் பறந்தது. நொடியில் முகத்தை மாற்றியவள் “ஆஹா இது நல்ல கதையா இருக்கே பந்துலவுக்கு காச கொடுக்க சொல்லி நான் சொன்னேனா? சொன்னேனா?” கேட்டவாறு அவன் முகத்துக்கு நேராக நின்று முறைக்க பல்லைக் கடித்தான் லஹிரு.
இவன் வண்டியில் ஏறி, இவன் இவளது காதலன் என்று அவர்களுக்கு கூறாமல் கூறியதும் இல்லாமல் சுமித்திடம் ஒப்படைத்து விட்டு சென்றவனின் பிள்ளை தன் வயிற்றில் வளர்வதாக கூறி, வம்பை எல்லாம் இழுத்து விட்டு சொல்லாமல் சொன்னது இவளேதான். நான் சொன்னேனா என்று கேட்டால் லஹிருவுக்கு கோபம் வராதா?
வட்டிக்கு பணம் கொடுப்போரை பற்றி லஹிருவுக்கும் தெரியும். நகை அல்லது நிலப்பத்திரம் இல்லாமல் பணம் கொடுப்பதே அரிது. இப்படி பணம் கொடுத்து ஆளை தேடுபவர்கள் காரணம் இல்லாமல் பணம் கொடுக்கவும் மாட்டார்கள். அதுவும் பெண்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் கற்புக்குத்தான் ஆபத்து என்று புரியாத அளவுக்கு லஹிரு என்ன குழந்தையா?
பத்து, பதினைந்து பேரை அவன் இடத்தில் அடித்துப் போட்டு சாருவை காப்பாற்றி கூட்டிக் கொண்டு வர, அவள் என்ன இவன் காதலியா? இது என்ன சினிமாவா? சமயோகித்துதான் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்குள் விட்டிருந்தான். அதுவும் இன்ஸ்பெக்டர் தனது நண்பன் என்பதால் மாத்திரம். தான் மட்டும் உள்ளே சென்றவன் சுமித்தை சந்தித்து நலம் விசாரித்த உடனே கூறியது தான் ஒரு பிரச்சினையோடு வந்திருப்பதாகத்தான்.
“ஏன்டா நான் இங்க வந்து ஒரு மாசமாகுது. பேஸ்புக்லயும், வாட்ஸ் அப்லயும் அதுவும் குரூப்ல பேசுறதோட சரி. இங்க நீ அடிக்கடி வரியே சும்மாவாச்சும் வந்து எட்டிப் பாக்குறியா?  வந்ததும் வந்த பிரச்சினையோடவா வரணும்” நண்பனை கடிந்த சுமித் பிரச்சினை என்னவென்று கேட்டான்.
தான் ஒரு யக்ஷணியிடம் மாட்டிக் கொண்டதாக கூறியவன் அவள் வட்டிக்கு பணம் எடுத்திருப்பதாக கூறி அதை பார்த்து முடித்து விடும்படி கேட்டுக்கொள்ள,
“அவனை பத்தி எனக்கு தெரியும்டா அவன் அந்த பொண்ணுக்கு ஸ்கெட்சு போட்டுட்டான். காச கொடுக்கலனா பொண்ண தூக்கிடுவான்” என்றான் சுமித்.
“என்னடா மச்சான் சொல்லுற?” என்று லஹிரு கேட்க பந்துலுவின் ஜாதகத்தையே சுமித் புட்டு புட்டு வைக்க, சாரு எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை அவளை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த லஹிரு சித்தப்பனை அழைத்து காசு எடுத்து வரும்படி கூறி இருந்தான். யாரோ ஒருத்திக்காக தான் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று லஹிரு கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. விதி அவனை அவளோடு கோர்த்து விட்டிருந்தது.
உள்ளே வந்த சாரு இது எதுவுமே அறியாமல் தேவையில்லாமல் பேச பணத்தோடு வந்த சித்தப்பா தன்னை தவறாக நினைத்து விட்டார். இங்கு நடந்தது எல்லாம் அப்பத்தாவின் காதை எட்டினால் வருத்தப்படுவாளே என்ற கவலைதான் லஹிரு சாருவை அடித்தது.
அவன் கொடுத்த அடியையும் வாங்கிக் கொண்டு சண்டைக் கோழியாய் சிலிப்பிக் கொண்டு நிற்பவளை காணும் போது லஹிருவுக்கு ஐயோ பாவம் என்றா தோன்றும். கொல்லும் அளவுக்குத்தான் கோபம் வரும்.
சாரு அழுது, கண்ணீர் சிந்தி தன்னிலையை புரிய வைத்திருந்தால் ஒருவேளை புரிந்து கொண்டிருப்பான். கண்ணீர் தேவையில்லை. பொறுமையாக கூறி இருந்தாலே லஹிரு புரிந்து கொண்டிருப்பான். இவளோ பந்துலவிடமிருந்து தப்பிக்க இவனை பச்சையாகவே உபயோகித்துக்கொள்ள முயன்றாள்.
இவன் காசு கொடுப்பான் என்றெல்லாம் இவள் எதிர்பார்க்க வில்லை. இவனை வைத்து இன்று பந்துலவிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தாள். 
இவனோ சட்டென்று அவ்வளவு பணத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டு வெற்றுப் காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடு என்றால் இவள் இவனை பற்றி என்ன நினைப்பாள் என்று லஹிரு சிந்திக்கத் தவறினான்.
பணக்காரன் பணத்தை கொடுத்து வெற்று காகிதத்தில் கையொப்பம் கேட்டு தன்னை தேவை இல்லாத எதற்கோ உபயோகிக்க முயற்சி செய்கின்றான். ஏன் சுற்றி வளைக்காமல் அவன் இவளை அவனது படுக்கையறைக்கு அழைப்பான் என்றே எண்ணினாள். இந்த போலீஸ்காரன் வேறு இவன் நண்பன். இதுதான் சாருவின் மனதில் ஓடிக் கொண்டிருக்க, திமிராகவே பேசினாள்.
அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று இவனால் படிக்கவா முடியும்? “இங்க பாரு ஐயோ பாவம் பொண்ணாச்சே வட்டிக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டியேன்னுதான் பணத்தை தூக்கிக் கொடுத்தேன். சும்மா கொடுக்க நான் என்ன முட்டாளா? என் காசு எனக்கு வேணும். அதுக்கு என்ன வழி என்று நீயே சொல்லு” கைகளைக் கட்டிக் கொண்டு கோபத்தை அடக்கியவாறு நின்றான் லஹிரு.
“இங்க பாரு. நான் உன்கிட்ட அவனுக்கு காசு கொடுக்க சொல்லி கேட்கவே இல்ல. நீயா கொடுத்த. இப்போ வெற்று பேப்பர்ல கையெழுத்து கேக்குற. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” இவளும் கையை கட்டிக் கொண்டு முகத்தை திருப்பினாள்.
“சே சே சே… என்னம்மா நீ. பந்துல எப்படி பட்டவன்னு நான் சொன்னதுக்கு பிறகுதான் உன்ன காப்பாத்த இவன் காச கொடுக்கலாம்னு சொன்னான். நான்தான் நீ கொடு அந்த பொண்ணுகிட்ட பேசி நான் வாங்கித் தரேன்னு சொன்னேன்” என்றான் சுமித்.
“அப்போ எதுக்கு வெற்று பேப்பர்ல கையெழுத்து கேக்குறான்” லஹிருவை முறைத்தவாறே கேட்டாள் சாரு.
“அட நீ வேறமா… நீ காசு தரணும்னு எழுதிக்கத்தான். இருட்டிருச்சு. நீ கையெழுத்து போட்டுக் கொடுத்தா நாங்க நிதானமா எழுதிக்குவோம். உன்ன வேற வீட்டுல தேடுவாங்க என்ற நல்ல எண்ணத்துதான் பய சொல்லுறான். அத சொல்லத் தெரியாம சொல்லி, பாரு நீ தப்பா புரிஞ்சிகிட்ட” தன்னால் முயன்ற மட்டும் சமாளித்தான் சுமித்.
“ஒஹ். ஓஹ்… இதுதான் விஷயமா? எனக்கு ஒன்னும் அவசரமில்ல. என்ன வீட்டுலையும் தேட மாட்டாங்க. நான் இருந்து எழுதிக் கொடுத்துட்டே போறேன். என்ன எழுதணும்” என்றவாறே சாரு சுமித்தின் மேசையின் அருகில் வர ஒரு இருக்கையை கொடுத்து அவளை அமர வைத்தவன் வேறு வேலை பார்க்க நகர்ந்தான்.
“ஆமா இவள பெத்து ஊர் மேய விட்டுட்டான் இவ அப்பன்” முணுமுணுத்தான் லஹிரு.
“ம்ம் எழுது கண்டி மொல்லிகொட வளவ்வயை சேர்ந்த லஹிரு துஷார வீரசிங்க என்ற நபரிடம் இரண்டு லட்சத்தி இருபதாயிரம் ரூபா பணம் இரண்டு வீத வட்டிக்கு பெற்றுக்கொண்டேன்”
“என்னது ரெண்டு வீத வட்டிக்கா?” எழுதியதை நிறுத்திய சாரு மொல்லிகொட வளவ்வ என்றதும் அவனை முறைத்துப் பார்த்தாள். மாதம் ஐந்து வீதம் வட்டிப் பணம் கொடுத்தவளுக்கு இரண்டு வீதம் வட்டிப் பணம் கொடுப்பது பெரிய விஷயமா என்ன? அவள் மனதுக்குள் பூகம்பம் வெடித்தது மொல்லிகொட வளவ்வையின் பெயரை கேட்டதில் வந்திருக்க, வட்டி விகிதத்தை கேட்டு சமாளித்தாள்.
“பின்ன உனக்கு சும்மா காசு கொடுக்க நீ என்ன என் அத்த மகளா? மாமன் மகளா? எழுது எழுது” அதட்டினான் லஹிரு.  
“மாமன் மகள்” முணுமுத்தவள் “பகல்கொள்ள” முறைத்தவாறே எழுதினாள்.
“லஹிரு என்ன சொல்லுறானோ எல்லாம் செய்வேன். எழுது என்ன முறைக்குற?” எல்லாம் என்றதை இவன் சாதாரணமாக சொல்லி இருக்க, அவளோ படுக்கையறை தான் நினைத்திருந்தாள்.
“என்ன எல்லாம் செய்வேன்? செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க. என்ன என்னனு நினைச்ச?” இருக்கையை தள்ளியவள் அவனை அடிக்க கையோங்க லஹிரு அவள் கையை பிடித்து தடுத்தான். 
“என்னம்மா பிரச்சனை” சுமித் கத்த
“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துகிட்டே தப்பா பேசுறான். உங்க நண்பன் என்று கண்டுக்காம இருக்கீங்களா?” அவன் கையை இழுத்து கடித்து வைத்தாள் இவள்.
உரிமை இருந்தும் இல்லாத உறவு இவன். நெருங்கிப் பழக் கூடாத உறவு இவன். விலக நினைத்தாலும் விதி ஒன்று சேர்க்க நினைக்கும் உறவு இவன். சாருவின் மனம் சொல்ல விலகி நின்றாள்.
கையை உதறியவன் “யக்ஷணி வலிக்குதுடி” அவளை முயன்றமட்டும் முறைத்தவன் “நான் என்ன தப்பா பேசிட்டேன்” புரியாது கேட்டான் இவன்.
“இவன் இப்படித்தான்மா எதையும் விலாவாரியா சொல்ல மாட்டான் அரைகுறையா சொல்லி அடிவாங்குவான். என்னடா…” என்றவாறு சுமித் இவர்களை நெருங்கி இருந்தான்.
“நான் சொல்லுற வேலையெல்லாம் இவ செய்யணும்”
“என்ன வேல?” சாரு முறைத்தவாறு கேட்டாள் என்றால், சுமித் புரியாது கேட்டான்.
என்ன சொல்வது என்று ஒரு நொடி  முழித்தான் லஹிரு.
“என்னடா?” என்று நண்பனை உலுக்கினான் சுமித்.
“என்ன வேலனா? என் அப்பத்தாவ பாத்துக்கணும். மாசம் இருபதாயிரம் சம்பளம். அத டீடைலா எழுதணும் அதுக்குதான் கையெழுத்து போட்டுக் கொடுக்க சொன்னேன்” என்றான் இவன்.
“ஓஹ்…” என்றாள் இவள். கணக்கு வழக்க பத்தி விலாவரியாக இவளுக்கு என்ன தெரியும். இருபதாயிரம் சம்பளம் கூடவே சிடுமூஞ்சி பேரனோட பாட்டிய பாதுகாணுமோ? அந்த கிழவி இன்னும் உசுரோடதான் இருக்குதா? நல்லா இருக்கிறாளோ? என்ன பண்ணுறாளோ?” தான் இதுவரை பார்த்தே இல்லாத சுதுமெனிகேவை பார்க்கும் ஆவல் பிறந்தது.
“இது நல்ல ஐடியாவாதான் எனக்கு தோணுது” வாயை விட்டான் சுமித்.
உண்மையில் லஹிருவுக்கு அப்பத்தாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாருவிடம் கொடுக்க விருப்பமும் இல்லை. அவன் நினைக்கவுமில்லை. “என்ன? என்ன?” என்று நண்பனும், சாருவும் கேட்டதில் வாயில் வந்ததை உளறி இருந்தான். அது பொய்யுமில்லை. அப்பத்தாவை பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை அவன் தேடிக் கொண்டுதான் இருக்கின்றான் அது நிச்சயமாக சாரு போன்ற பெண் இல்லை.
இது தெரியாமல் சுமித் ஒன்று சொல்ல, சாரு ஒன்று நினைத்தாள்.
“இல்ல இல்ல. நான் கடைல மாசம் பதினைஞ்சாயிரம் சம்பளம் வாங்கினாலும், கிரீட்டிங் கார்ட்ஸ் செஞ்சி மாசம் பத்தாயிரம், இருபதாயிரம் சம்பாதிப்பேன். அத வச்சி உன்… உங்க பணத்தை கொடுத்திடுறேன்”
ஒருமையில் பேசியவள் அவன் பணம் கொடுத்து உதவியதால் சட்டென்று மரியாதை பன்மைக்கு மாறி இருந்தாள். அது எல்லாம் லஹிருவின் கவனத்தில் இல்லை. அவள் குரலும், பேச்சும் அவனுக்கு திமிராகத்தான் தெரிந்தது. இவ்வளவு நேரமும் அவள் இவனிடம் அப்படித்தானே பேசினாள்.
“ஆமா நீ சம்பாதிக்கிற லட்சணம் தான் தெரியுதே. ஒழுங்கா வட்டிப் பணத்தை கொடுத்திருந்தா அவன் எதுக்கு உன்ன துரத்தி இருப்பான். உன்ன நம்ப முடியாது. நீ என் கண் பார்வையிலையே இருந்து வேல பார்த்தாதான் என் காச நான் வசூலிக்க முடியும்” அவள் மீதிருந்த கோபத்தில் இவன் ஏதோ பேசி வில்லங்கத்தை வெத்தலை, பாக்கு வைத்து வீட்டுக்கே அழைத்தான்.
“அட கிரகம் புடிச்சவனே!” மனதுக்குள் அவனை வசை பாடியவள் கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டு “வட்டி பணம் பற்றி மட்டும்தான் இதுல எழுதணும். வேறு ஏதாவது எழுதின வகுந்துடுவேன்” என்று விட்டு கிளம்பினாள்.
“ஏய் ஒருநிமிஷம் இரு. உன் அட்ரெஸ். போன் நம்பர் யார் கொடுப்பா” என்று இவன் முறைக்க,
“அதெல்லாம் பேப்பர்ல எழுதி இருக்கேன். கண்ண தொறந்து பாருடா…” சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் சொந்தக்காரனை பார்த்த சந்தோசத்தில் இருந்தாள் சாரு.   
“டாவா… வாடி வா… உனக்கு வைக்கிறேன் ஆப்பு” கருவிக்கு கொண்டான் லஹிரு.
“கொஞ்சம் வாயாடியா இருந்தாலும் பொண்ணு அழகா இருக்கா இல்ல” சுமித் வழிய
“போலீஸ்காரனா இருந்துகிட்டு இதெல்லாம் ஓவர். நான் கிளம்புறேன்”
“டேய் இருடா டின்னர் ஒண்ணா சாப்பிடலாம்”
“இங்கேயா? நீ வேணா சித்தப்பா வீட்டுக்கு வா” என்றவாறே நகர்ந்தவன் செல்லும் வழியில்லையே அப்பத்தாவை அழைத்து தான் நாளை காலைதான் வருவதாக கூறினான்.
அதற்கே பதறிய சுதுமெனிக்கே “ஏன்பா வண்டி எக்சிடன் ஆகிருச்சா? உனக்கு அடியேதும் படலயே. உண்மையை சொல்லுப்பா” குரலில் நடுக்கத்தை கூட்டி இருந்தாள்.
ஒருநாள் இரவு சித்தப்பன் வீட்டில் தங்குவதாக கூறியதற்கே பதறுபவள் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை அறிந்தால் மயங்கியே விழுவாள் என்று புரிந்துக் கொண்டு
“வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னியே அப்பத்தா. ஒரு பொண்ணு கிடைச்சா. நைட்டு அவ கூட ட்ராவல் பண்ண வேணாம்னு சித்தப்பா சொல்லுறாரு. வயசு பொண்ணு வேறயா காலைலயே கிளம்பி வரலாம்னு நானும் இருந்துட்டேன். இதுக்கு போய் நீ இம்புட்டு பதறணுமா?” கேலியும், கிண்டலுமாகவே பதில் சொல்ல 
பேரனின் குரலை வைத்தே அவனுக்கு ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்ட சுதுமெனிகே ஆசுவாசமடைந்து அதிகாலையில் கிளம்பி வராமல் பொறுமையாக வருமாறு கூறி விட்டு அலைபேசியை துண்டித்தாள்.  
வீட்டுக்கு வந்தவனை சித்தி ஆச்சரியமாக பார்க்க “ஏன்டா வண்டி பஞ்சரானா ஒரு போன் பண்ண மாட்டியா? தனியாகத்தான் எல்லாம் செய்யணுமா?” மனைவியின் பார்வைக்கு பதில் சொன்ன சித்தப்பா பசியோடு இருப்பான் அவனுக்கு உணவு எடுத்து வை என்று அவளை உள்ளே அனுப்பி விட்டு, இவனை இழுத்துக்கொண்டு வெளியே வந்தவன் “ஏன்டா என்னடா பிரச்சினை? அந்த பொண்ண எங்கயோ பார்த்து இருக்கேன். எங்கனுதான் நியாபகம் வரல. இது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சது. ஏன்டா… காலைலதானே உன் கிட்ட யாராச்சும் பொண்ண லவ் பண்ணுறியான்னு கேட்டேன். இல்ல. இல்லனு மண்டைய ஆட்டிட்டு… ஒருவேளை அவளை வச்சிருக்கியா?”
“என்ன சித்தப்பா நீங்க பாட்டுக்கு கற்பனை பண்ணி கண்டதையும் பேசுறீங்க?” என்றவன் சாருவை அவள் வேலை பார்க்கும் கடையில் எதேச்சையாக சந்தித்ததாகவும், அவளுக்கு இரண்டு மொழியும் தெரியுமானதால் அப்பத்தாவை பார்த்துக் கொள்ளும் வேலையில் அவளை இருத்தலாமா? என்று கேட்ட பொழுது அவள் மறுத்து விட்டதாகவும் கூறியவன். அவள் வட்டிக்கு பணம் கொடுத்தவன் பிரச்சினை பண்ணியதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொண்டு, அவள் பணத்தையும் கொடுத்து, அவளை அப்பத்தாவை பார்த்துக்கொள்ளும் வேலையில் இருத்தியதாகவும் கூறினான்.
“ஊருல வேற ஆளே கிடைக்காத மாதிரி அந்த பொண்ணைத்தான் அம்மாவ பாத்துக்க ஏற்பாடு பண்ணனுமா என்ன? என்னமோ சொல்லுற? நீ என்ன பண்ணாலும் சரியா பண்ணுறவன். பாத்து செய்” சித்தப்பா உள்ளே செல்ல, சித்தி சாப்பிட வருமாறு அழைத்தாள்.
சாப்பிட்டு விட்டு கட்டிலில் சரிந்தவனுக்கு தூக்கம்தான் வரவில்லை. “யக்ஷணி. இவள எதுக்கு சந்திச்சேன்னு தெரியல. நல்லவேளை ஒரு நாள்ல ஒருத்திய மூணு தடவ சந்திச்சா அவளோட ஏதோ ஜென்ம பந்தம் இருக்கிறதா சொல்வாங்க. இவள இன்னைக்கி ரெண்டு தடவைதான் சந்திச்சேன். அதுவரைக்கும் சந்தோசம்” நிம்மதி பெருமூச்சு விட,
அவன் மனசாட்ச்சியோ மூணாவது தடவை சந்திக்கிறதுக்குள்ள இருட்டிருச்சு” என்று கேலி செய்தது.
இன்று நடந்தவைகளையே சிந்தித்தபடி லஹிரு தூங்கிப்போக, சாரு அவனோடு பயணம் செய்ய துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“அடியேய் என்னடி சொல்லுற? என்ன விளையாடுறியா? வட்டிப் பணம் கொடுக்க முடியலைன்னா என் கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே. இல்ல முத்து கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே. வாய கட்டி வயித்த கட்டி காச சேர்த்து வச்சதே இப்படி ஒரு சூழ்நிலை உருவானா உதவும் என்றுதானே. விவரம் கெட்டவ” பஞ்சவர்ணம் சாருவை வாங்கு வாங்கு என்று வாங்க, அவளோ அதை காதிலையே வாங்கிக்கொள்ள வில்லை.
“ஏய் நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடி கல்லு முழுங்கினா மாதிரி இருக்க? ஒரு தடவ சொன்னா புரியாதா? இந்தா இருக்குற மலை அங்கனேயே தேல கொழுந்து பறிக்க உன்ன அனுப்பாம கடைக்கு எதுக்கு வேலைக்கு அனுப்பினேனாம்? அந்த கண்காணி பார்வ சரியில்லைன்னுதானே. கிழவியையே விட மாட்டான் வயசு புள்ளனா சொல்லவே வேணாம். கிரகம் புடிச்சவன்.
நீ என்னடான்னா வீட்டை விட்டு கண்காணாத இடத்துக்கு போறேன்னு சொல்லுற? அறிவிருக்கா உனக்கு? போற இடம் யாரு? என்ன? எதுவும் தெரியாது. டேய் முத்து நான் பாட்டுக்கு கத்திக் கிட்டு இருக்கேன். நீ என்னடா சோத்த முழுங்கி கிட்டு இருக்க? இதெல்லாம் உனக்கு தெரிஞ்சிதான் நடக்குதா”
எதோ கோபத்தில் அன்று சாரு வட்டிப் பணம் கட்டுவதாக சொன்னதும் இவளும் வீண் செலவு செய்யாமல் அதையாவது செய்யட்டும் என்று விட்டு விட்டாள். அதற்காக இப்படி காசை கொடுக்க முடியாத சூழ்நிலை என்றால் வீட்டில் சொல்ல மாட்டாளா? சொன்னால் தான் உதவாமல் போவேனா? அந்நியமாக ஒதுக்கி வைத்து விட்டாளே. அதுவும் இவள் யாருக்காக காசு வாங்கினாள் எனக்காகத்தான். என்னிடம் கேட்டிருக்க வேண்டியதுதானே. பஞ்சவர்ணத்தின் மனம் ஆறவே இல்ல. புலம்பியவாறும் முத்துவையும், சாருவையும் மாறிமாறி திட்டிக் கொண்டே இருந்தாள்.
முத்து கோபத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் சாப்பிடும் அழகே அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கின்றான் என்று சாருவுக்கு புரிந்தது.
இவ்வளவு நடந்திருக்கிறது. வட்டிக்காரன் ஒருவாரமாக இவளை தேடி அலைந்திருக்கின்றான். ஒரு வார்த்தை சொன்னாளா இவள். அது போகட்டும் போலீஸ் ஸ்டேஷனில் தனியாக நின்றிருக்கிறாள். ஒரு போன் போட்டால் போக மாட்டேனா? உறவென்று இருப்பது இவள் மட்டும்தானே. இவளுக்கு ஒன்றென்றால் போய் நிற்க மாட்டேனா. வான்மதியின் மேலும் கோபம் கோபமாக வர, போய் அவள் வீட்டு வாசலில் நின்று கத்தி விட்டு வந்து விட்டான். என்னவெல்லாம் நடந்து விட்டது. இவளாவது போன் போட்டு இவனிடம் சொல்லவில்லை என்ற கோபம்தான்.
தன் வீட்டுக்கு சென்று இரு என்று கடையிலிருந்து சாருவை அனுப்பி வைத்ததே அவள்தான். இவள் லஹிருவின் வண்டியில் ஏறி பிரச்சினையை இழுத்துக் கொண்டால் வான்மதி தான் என்ன செய்வாள். இது தெரியாமல் முத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதும் இல்லாமல் கோபமாக சோற்றை வேறு முழுங்கிக் கொண்டிருந்தான். அதுவும் யாருக்காக கோப்பட்டிருக்கின்றான்? சாருவுக்காக. முத்து தனியாக வான்மதியிடம் சிக்கினால் என்ன செய்வாளோ?
“நான் இவ்வளவு கத்திக் கிட்டு இருக்கேன். இவனுக்கு சோறு முக்கியம். நீ என்னடான்னா போறதுலையே குறியா இருக்க. எக்கேடும் கேட்டு தொலைங்க. என் கவலை எல்லாம் இவள பெத்தவளுக்கு நான் வாக்கு கொடுத்தேனே அத காப்பாத்த முடியாம போய்டுவேனோன்னுதான்” மூக்கை சிந்தினாள் பஞ்சவர்ணம்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சாருவின் மனதை அம்மா என்ற வார்த்தை கரைத்தது. பஞ்சவர்ணத்தின் அருகில் வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
“அம்மா என்னய ஏன் அத்த பொம்பள புள்ளையா பெத்தாங்க? ஆம்பள புள்ளையா பெத்திருக்க கூடாது?” தொண்டையடிக்க பேசினாள் சாரு. அன்னையின் நியாபகங்கள் அடிக்கடி வந்தாலும் அவள் யாரிடமும் அன்னையை பற்றி பேசுவதில்லை.
“ஏன்டி தங்கம் உனக்கென்னடி குறைச்சல்?” இவ்வளவு நேரமாக கத்திக் கொண்டிருந்த பஞ்சவர்ணமும் கண்களில் நீரோடு அவள் தலையை தடவலானாள்.
“நான் போறது சுதுமெனிகேவ பார்த்துக்கொள்ள. அதுக்கு மட்டுமா? அவரையும் பார்த்து பேசணும்” என்றவளுக்கு பழைய நியாபகங்கள் வந்திருக்க வேண்டும் “அம்மா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் இல்ல அத்த” என்றவாறே கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“உங்கம்மாக்கு என்ன நடந்தது என்று தெரிஞ்சும் நீ அந்த சிங்கள வளவ்வைக்கு வேலைக்கு போகணுமா?” கொஞ்சம் கோபக் குரலில் தான் கேட்டாள் பஞ்சவர்ணம்.
“நான் போறது மொல்லிகொட வளவ்வைக்கு. ஏன் நீ இங்க புஞ்சி நிலமையின் வீட்டுக்கு போகலையா? ஏன் அம்மாக்கு நடந்ததை தெரிஞ்சும். அதற்கு காரணமானவங்க வளவ்வகாரனுங்கதான்னு தெரிஞ்சும் நீ மெனிகேக்கு சேவகம் செய்யிறியே. நான் போனாதான் என்னவாம்?”
தான் எதற்காக போகிறோம் என்பதை கூறாத பஞ்சவர்ணம் “நீ போறது எனக்கு பிடிக்கல. பேசாம முத்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கயே கெட” மடியில் படுத்திருந்தவளை தள்ளியே விட்டாள்.
இதுதான் பஞ்சவர்ணத்தின் குணம். பாசம் முழுக்க மனதில் கொட்டிக் கிடந்தாலும் கோபத்தைத்தான் பட்டென்று காட்டுவாள்.
“ஹாஹாஹா உன் பையன் என்னவோ சீமதொரை போல அவனை எனக்கு கட்டி வைக்க மாட்டேன்னு சொன்ன? இப்போ மட்டும் என்னவாம்? அடியேய் அத்த உன் பையன் வான்மதிக்கு ரூட்டு விடுறான். அவளையே கட்டி வை. அவ இல்லனா செத்துடுவான். இல்லடா” முத்துவை பார்த்து பழிப்பு காட்டினாள்.  
“அடி செருப்பால நாயே. பொம்பள சோக்கு கேக்குதோ தொரைக்கு” கையில் என்ன கிடைத்ததோ முத்துவின் மேல் வீசி அடிக்க அவன் சாருவை முறைத்தவாறே நகர்ந்தான்.
இவர்களின் வாழ்க்கை முறையே இவ்வாறுதான் ஒருநொடி சந்தோசமாக இருந்தால் மறுநொடி சோகமாக இருப்பார்கள்.
எதற்க்காக சந்தோசமாக இருக்கிறார்கள் என்றும் தெரியாது. எதற்காக அழுதார்கள் என்றும் மறந்து விடுவார்கள்.  
இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் கலந்து வாழும் மனிதர்கள் இவர்கள்.

Advertisement