Advertisement

அத்தியாயம் 3
லஹிரு என்ன படிக்க வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை கூட சுதுமெனிகேவின் முடிவாக இருக்க, அவனது ஆசாபாசங்களை கேட்கவும் யாருமில்லை. இவனும் யாரிடமும் பகிர்வதும் இல்லை.
அப்பாத்தாவின் மீது அதீத பாசமும், அவளின் தனிமையையும், சூழ்நிலையையும் சிறுவயதிலையே புரிந்துகொண்டமையாளையே அவனது ஆசைகளை குழிதோண்டி புதைத்து விட்டு சுதுமெனிகேயின் ஆசைகளை நிறைவேற்றலானான்.
சுதுமெனிகேவுக்கு ஒரே ஆசைதான் அது தனக்கு பின் லஹிரு சொத்துபத்துகளை கட்டிக்க காக்க வேண்டும் என்பதே.  
ஞாயிற்றுக்கிழமை தேயிலை தொழிற்சாலையில் விடுமுறை. லஹிரு முதலாளி என்பதால் அவன் எப்போ வேண்டுமானாலும் லீவு எடுத்துக் கொள்ளலாம். அது ஒன்றுதான் அவனுக்கு இருக்கும் ஒரே சலுகை.
ஆனால் சுதுமெனிக்கே ஒருநாளாவது லீவ் எடுக்க மாட்டாள் அடுத்து என்ன செய்ய வேணும் என்பதை திட்டமிடுவதில்லையே அவள் நாட்கள் செல்லும். இன்று லஹிரு அவனுக்காகவா லீவ் எடுத்தான் அப்பத்தா லீவு கொடுத்து சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்திருக்க, அப்பத்தாவின் சொல்லை தட்டாது இவனும் வந்திருந்தான்.
கண்டிக்கு வண்டி ஒட்டி செல்ல மூணு மணித்தியாளமாகும். இரவானால் அப்பத்தா தூங்காமல் பாதையை பார்த்தவாறு அமர்ந்திருப்பாள். அதனால் தான் நாலு மணிக்கே கிளம்பினான். ஆனால் பாதையில் இத்தனை கூட்டம் கூடி, வாகனமும் நகராது இருக்க என்ன பிரச்சினை என்று தெரியவில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனின் வண்டிக்குள் சாரு ஏறி வண்டியை பின்னாடி எடுக்குமாறு மிரட்ட, அவளை கண்டு இவனுக்கு கோபம்தான் வந்தது.
“யோவ் என்னய்யா பாத்துகிட்டு நிக்குற சீக்கிரம் வண்டிய எடு” அவள் குரலே மிரட்டும் குரல்தான்.
வண்டியை விட்டு இறங்கிய லஹிரு கார் கதவை திறந்து சாருவின் கையை பிடித்து இழுத்து வெளியே நிறுத்த
“அதோ அவ அங்கதான் நிக்குறா” என்ற குரல் கேட்க சாரு லஹிருவை முறைத்தாள்.
லஹிரு வண்டியில் ஏறப் போக அவனை சுற்றி வளைத்த சிலர் “நீதான் இவளோட ஆளா. நல்ல பசையுள்ள பார்ட்டியாத்தான் புடிச்சி இருக்கா. ஆனா காச மட்டும் கொடுக்க மாட்டேங்குறா” லஹிரு புரியாது முழிக்க, சாரு வாயில் அடித்துக் கொண்டாள்.
மொதுமொதுவென பத்து, பதினைந்து பேர் அவர்களை சுற்றி வளைத்திருக்க, அனைவருமே சிங்களவர்கள். இதுவே கண்டியாக இருந்தால் லஹிருவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நுவரெலியாவில் அவனை தெரிந்தவர்கள் ஒருசிலரே. புஞ்சிநிலமேயின் பெயரை சொன்னாலே போதும். என்ன பிரச்சினை என்று தெரியாமல், அதுவும் இவளுடைய பிரச்சினைக்காக சித்தப்பாவின் பெயரை சொல்லி அது அவர் காதுக்கு போய் ஒரு பெண் சம்பந்த பட்ட விஷயம் என்று பேசப்பட வேண்டுமா என்று யோசித்தான்.
“என்னடி ரெண்டு லட்சம் பணம் வாங்கி ரெண்டு வருஷமாச்சு. ரெண்டு மாசமா வட்டி கொடுக்கல வீட்டுக்கு வந்தா வீடு பூட்டி இருக்கு. உன்ன தேடுறதுதான் எங்க வேலையா?” என்று ஒருவன் கத்த
“பணத்த வாங்கிட்டு இவ இவனோடு ஊரு சுத்துறா” என்றான் இன்னொருவன்.
“டேய் பார்த்து பேசு. யார பார்த்து என்ன பேசுற? நான் இவளோட சுத்துறேனா? நீ பாத்தியா?” எகிறினான் லஹிரு.
“பின்ன இவ இங்க கடைல வேல செய்யிறதா தேடி வந்தா உன் கூட இல்ல வந்து இறங்கினா” என்றான் ஒருவன்.
அதை கேட்டதும் லஹிரு சாருவை முறைக்க, சாரு அவன் புறம் திரும்பவே இல்லை.
“யோவ் உங்க சண்டையை வேற எங்கயாச்சும் போய் வச்சிக்கோங்க வண்டியெல்லாம் வரிசைகட்டி நிக்குது” பஸ் கண்டக்டர் ஒருவர் கத்த
“வண்டிய எடு வண்டிய எடு” என்றவாறு லஹிருவின் வண்டியில் இருவர் ஏறிக்கொண்டு சாருவையும் ஏற்றிக் கொண்டனர்.
“யாரடி நீ உன்ன சந்திச்சதுல இருந்து கிரகம்தான்” முதல் தடவையாக லஹிரு தமிழ் பேச
“இதுக்குதான் நான் அப்போவே வண்டிய எடுன்னு சொன்னேன். என் பேச்சு கேட்டு வண்டிய எடுத்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” தோளை குலுக்கினாள் சாரு.
“உங்க ரொமான்ஸ் எல்லாம் அப்பொறம் வச்சிக்கோங்க இப்போ வண்டிய எடுங்க” என்றான் பின்னாடி அமர்ந்திருந்த ஒருவன். இவர்கள் தமிழ் பேசியது அவனுக்கு புரியவில்லை. காதலர்கள் ஏதோ பேசிக்கொள்வதாக  நினைத்து விட்டான்.
சாருவை முறைத்தவாறே வண்டியை எடுத்தான் லஹிரு.
“இங்குட்டு திருப்பு, அங்கிட்டு திருப்பு என்று பின்னாடி அமர்ந்திருந்த ஒருவன் சிங்களத்தில் கூறிக் கொண்டே வர, போலீஸ் ஸ்டேஷனை பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் வண்டியை உள்ளே விட்டான் லஹிரு.
“யோவ் என்னய்யா நீ வண்டிய இங்க கொண்டு வந்துட்ட” சாரு பதற
“அடோ {டேய்} வண்டிய எடு” பின்னாடி இருந்த இருவரும் கத்த, யார் பேச்சையும் காதில் வாங்காமல் வண்டியை விட்டு இறங்கிய லஹிரு ஸ்டேஷன் வாசலில் நின்ற ஏட்டிடம் இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா என்று விசாரித்தான்.
இதற்கிடையில் லஹிருவின் வண்டியை பின் தொடர்ந்து வந்த இரண்டு வண்டியும் இவன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததை கண்டதும் வெளியேயே நின்று விட்டன.
“என்னடி உன் ஆள் ஸீன் போடுறானா? இன்னக்கி இருக்கு அவனுக்கு” என்றவாறு தங்களது முதலாளிக்கு தகவல் தெரிவிக்க அலைபேசியை எடுக்க அவன் அலைபேசி அடித்தது. 
வெளியே நிறுத்திருந்த வண்டிகளிலிருந்த ஒருவன் முதலாளிக்கு தகவல் கூறி இருப்பான் போலும் லஹிருவின் வண்டியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டு அவனுக்கு அழைத்திருக்கிறான் முதலாளி. அவன் என்ன சொன்னானோ இவன் “சரி, சரி” என்று மண்டையை ஆட்டினான்.
“இறங்குடி இன்னக்கி ஒருகை பார்த்துடலாம்” சாருவை இறங்குமாறு கூறியவர்கள் தாங்களும் இறங்கி நின்றனர்.
சாருவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் பஞ்சவர்ணத்துக்கு நுரையீரலில் பிரச்சினை என்று அறுவைசிகிச்சைக்கு பணம் தேவைப்படவே போட்டிருந்த கொஞ்சம் நகைகளையும் விற்று, பத்தாததற்கு வட்டிக்கு எடுத்து பஞ்சவர்ணத்தின் உயிரை காப்பாற்றி இருந்தாள். 
சூரியனுக்கு தெரியுமா இவள் பிரச்சினை? நேரம் தவறாமல் விடியலை கொண்டு வந்து சேர்க்க, நாட்கள் உருண்டோடி ஒரு மாதமானதும் வட்டிக்காரன் வீட்டு வாசலில் வந்து நின்ற பின்தான் திகைத்தாள் சாரு.
பஞ்சவர்ணத்துக்கு மாத்திரை மருந்து வாங்குவதா? வட்டிப்பணம் கொடுப்பதா? மூன்று மாதத்துக்கு பிறகு வந்து பணம் கேட்டால் கூட பரவாயில்லை என்று எண்ணாமல் கூட இருக்க முடியவில்லை. நாளை தருகிறேன் என்று வழியனுப்பி வைக்க திட்டியவாறே சென்றான் அவன்.
இது பஞ்சவர்ணத்தின் காதில் விழ கையிருப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
கொடுக்கும் பொழுது “எதுக்கு என்ன காசு கொடுத்து ஆபரேஷன் பண்ண? பெரிய ஆஸ்பத்திரில சேர்த்திருந்தா சும்மாவே ஆப்ரேஷன் பண்ணி இருப்பங்களே. காசு என்ன இங்க கொட்டியா கிடக்குது?” திட்டியவாறுதான் கொடுத்தாள்.
“ஆமா இருமும் போதே பெரியாஸ்பத்திற்கு போய் என்ன? எதுன்னு? டாக்டர் கிட்ட காமிச்சு இருந்தா இவ்வளவு தூரத்துக்கு இழுத்துகிட்டு இருந்திருக்குமா? நோய் முத்திப் போய் ஆபரேஷன் பண்ணுற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்ட. டாக்டர் வேற ஒரு வாரத்துல ஆப்ரேஷன் பண்ணனும் இல்லனா உசுருக்கு ஆபத்துனு சொல்லுறாரு. பெரியாஸ்பத்திரில விசாரிச்சா துண்டு கொடுத்து நாலு மாசத்துக்கு அப்பொறம் வர சொல்லுறாங்க. உன் பொணத்துக்குத்தான் ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கும்” கடுப்பானவள் “இப்போ என்ன வட்டிக்கு நான்தானே பணம் வாங்கினேன் நானே பாத்துக்கிறேன். நீ மூடிக்கிட்டு இரு” பஞ்சவர்ணத்தின் மீது எகிறியவள் வட்டி கட்டுவது எப்படி என்று சிந்தித்தாள்.  
தனது பிரச்சினையை ஓனரம்மாவிடம் கூற, நல்ல உள்ளம் படைத்த அந்த அம்மாவோ “வாழ்த்து அட்டைகள் செய்து விற்கலாம். நீயே முதலீடு செய்து நீயே செய். என் கடையிலே வை. இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யப்படும் தனித்துவமான வாழ்த்து அட்டைகள் வெளிநாட்டவர்களை மாத்திரமன்றி உள்நாட்டவர்களையும் கவரும்” என்று ஐடியா கொடுக்க, சாருவும் அதன்படி செய்ய வான்மதியும் அவளுக்கு உதவ கடையில் கிடைக்கும் சம்பளத்தையும் தாண்டி வாழ்த்து அட்டைகளால் அவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே வருமானம் வர எந்த சிக்கலும் இல்லாமல் வட்டியை கட்டிக் கொண்டுதான் இருந்தாள்.
என்ன இருக்கும் ஒரே பிரச்சினை முன்புபோல் யாரும் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்புவதில்லை குறைந்து விட்டது. இருந்தாலும் திருவிழா காலங்களில், வேலண்டைன்ஸ் டே போன்றவற்றுக்கு வாங்கத்தான் செய்கிறார்கள். திருவிழாக்கள் இல்லாத மாதங்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவதில்லை. 
மே மற்றும் ஜூனில் வந்த வெசக், போசொன் பெரஹரா, ஆகஸ்டில் வந்த எசல பெரஹரா {திருவிழா} முடிந்து விட்டதால் அடுத்து ஆக்டொபரில் வரும் தீபாவளிதான்.
இடையில் ஜூலை செப்டம்பரில் வருமானம் இல்லை இரண்டு மாதங்கள் வட்டிப்பணம் கொடுக்காததால் இவளை தேடி அலைகிறார்கள். இவளும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள். இன்று இந்த நெட்டையனால் தான் இவர்களிடம் மாட்டிக்கொண்டது மட்டுமல்லாது தன்னை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே என்று பொருமினாள் சாரு. 
ஸ்டேஷனுக்கு உள்ளே சென்ற லஹிரு வெளியே வரும் முன் வட்டிக்கு பணம் கொடுத்த பந்துல {bandhula} வந்து சேர்ந்தான்.
“என்னடி வட்டிக்கு பணம் வாங்கிட்டு காச கொடுக்காம ஏமாத்த பாக்குறியா? போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா நான் பயந்துடுவேன்னு நினைச்சியா? நான் என்ன மீட்டர் வட்டியா வாங்குறேன். நூத்துக்கு அஞ்சு பெர்சன்டைஜ்னு ரெண்டு லட்சத்துக்கு பத்தாயிரம் வாங்குறேன். இதெல்லாம் இந்த போலீஸ்காரங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா? மாசாமாசம் மாமூல் கரெக்ட்டா போகும். வாடி பாத்துக்கலாம்” அடிக்குரலில் சீற சாரு அசராமல் நின்றாள்.
“யோவ் பெருசு. நான் உன் காச கொடுக்க மாட்டேன்னு சொன்னேனா? நானும் எத்தனை நாளாத்தான் வட்டிப் பணத்தையே கொடுக்கிறதாம். வட்டியையும் மொதலையையும் சேர்த்தே கொடுத்துடலாம்னு கொழுத்த பணக்காரனா பார்த்து ஒருதத்தன புடிச்சா உன் ஆளுங்க வந்து காரியத்தையே கெடுத்தானுங்க” என்றாள் இவள்.
“என்னது பெருசா? எனக்கு இன்னும் நாப்புது ஆகல” என்றான் சற்று பதட்டமாக.
“ரொம்ப முக்கியம். பாரு காதோரம் நரைச்ச முடி தெரியுது” கிண்டலடித்தாள் சாரு.
அவளை நன்றாக முறைத்தவன் “இவள் சொல்வதை பார்த்தால் இவள் காதலனிடம் பணத்தை வசூலிக்கலாம் போல் இருக்கே. உண்மையாகவே பணக்காரனை வளைத்து போட்டாளா? பொண்ணு பார்க்க அழகா இருக்கா, பணத்தை கொடுக்க முடியா விட்டால் தூக்கிடலாம் என்று திட்டம் போட்டால் வேலைக்காகாது போல் இருக்கே” பந்துலுவின் மைண்ட் வாய்ஸ் சாருவுக்கு கேட்டிருக்கும்
“கொஞ்சம் பொறு அவன் ஒரு அவசரகுடுக்க, நீதி நேர்மனு பேசுவான். வெளிய வரட்டும் சட்டையை புடிச்சி காச வசூலிச்சுக்க” என்றாள் இவள்.
பந்துலாவின் பார்வை சரியில்லை. இவளை போன்ற அன்றாடம் காட்ச்சிக்கெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வட்டிக்கு பணம் கொடுக்கவே மாட்டான். முத்து சென்று கேட்டதுப் பார்த்த பொழுது இவளை வர சொல்லி தகவல் அனுப்பி இருந்தான்.
“இவன நம்பி எல்லாம் பணம் கொடுக்க முடியாது. உன்னை நம்பித்தான் பணம் கொடுப்பேன்”  எனும் பொழுது பணம் கிடைத்தால் போதும் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வந்தாள். 
முத்துவோ “எனக்கு ஏதோ தப்பாக இருக்கு பொதுவா பெண்கள் திருமணமாகி வேறு ஊருக்கு கூட செல்லலாம். பசங்கள நம்பித்தான் பணம் கொடுப்பாங்க. இவன் ஏதோ திட்டம் தீட்டுறான்” என்றான்.
“பணம்தான் கிடைச்சிருச்சே பேசாம வா” என்றாள் இவள்.
வட்டிப் பணம் கொடுக்க தாமதமானால் யார் என்ன என்று கூட பாராமல் அவன் எவ்வாறெல்லாம் பேசுவான் என்று எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்க, இவளுக்கு மட்டும் “சரி சரி பணத்தை அடுத்த வாரம் கொடு” என்பான்.
வந்தவரைக்கும் லாபம் என்ற சாரு முத்து சொல்வதையும் காதில் வாங்காது ஜூலை மாதம் காசு கொடுக்க முடியாமல் போக அதை ஆகஸ்டில் கொடுத்து சமாளித்தாள்.
பந்துலவை பற்றி விசாரித்த முத்து அவன் ஒரு கீழ் ஜாதிக்காரன் என்றும் பணம் கொட்டிக் கிடந்தாலும் உயர் ஜாதி பெண்ணை கட்டிக் கொடுப்பார்களா? இவனோ கட்டினால் உயர்ஜாதி பெண்ணை கட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களை கடத்தி விட்டதாகவும், எந்த மதமானாலும் பரவாயில்லை. அழகான பெண்ணை திருமணம் செய்தே ஆகா வேணும் என்று கங்கணம் கட்டி அலைகிறான் என்று சாருவிடம் வந்து கூற, பந்துல தன் பெயரில் பணம் கொடுத்ததில் பின்னணி காரணம் இப்பொழுதுதான் இவளுக்கு புரிந்தது.
அவன் வட்டிப்பணத்தை கொடுக்காமல் அவன் கண்ணிலும், கையிலும் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தவளைத்தான் லஹிரு போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு வந்து நிறுத்தினான்.
“இன்ஸ்பெக்டர் எல்லாரையும் உள்ள வரச் சொன்னார்” ஏட்டு சொன்னதும் பந்துலவும் அவனின் அல்லக்கைகள் அனைவரும் உள்ளே நுழைய முட்பட “எல்லாரும்னா எல்லாருமா? பிரச்சினைக்கு சம்பந்தமானது யாரு”
“நான்தான் சார்” சாரு கையை தூக்க
“என் கிட்ட தான் சார் இவ பணம் வாங்கினா” அவளை முறைத்தவாறுதான் கூறினான் பந்துல. பணம் கிடைதால் அவள் கையை விட்டு சென்று விடும் கோபம்தான்.
“அப்போ நீங்க ரெண்டு பேர் மட்டும் உள்ள வாங்க. மத்த எல்லாரும் கேட்டுக்கு வெளிய போங்கப்பா” ஏட்டு துரத்த அனைவரும் வேறுவழியில்லாது வெளியேறினர்.
இன்ஸ்பெக்டர் பந்துலய பார்த்ததும் “என்ன பந்துல என்ன பிரச்சினை?” என்று கேட்க
“என்ன பிரச்சினை இருக்கப் போகுது சார்? வழக்கம் போல வட்டிக்கு பணம் கொடுக்காத பிரச்சினை தான். இந்த பொண்ணு ரெண்டு மாசமா வட்டிப் பணம் கொடுக்காம ரெண்டு வாரமா தேடிப்போனாலும் கண்ணுலயே சிக்காம கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறா. இன்னிக்கிதான் சிக்கினா. கூடவே இவ காதலனும்” என்றவாறே சாரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்த காகிதத்தையும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான்.
“என்ன லஹிரு பந்துல என்னென்னமோ சொல்லுறாரு? இதெல்லாம் அப்பத்தாவுக்கு தெரியுமா?” கடைவாயோரமாக தவழும் புன்னகையை மறைத்தவாறு கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“அவன் கேட்டானா? நான் இவ காதலனானு? அவன் கேட்டானா? ஏன்டா நீ வேற” என்றது லஹிருவின் மைண்ட் வாய்ஸ். 
“அவன் ஏதோ உளறுறான்” என்ற லஹிரு “நீ பார்த்து முடிச்சு விடு மச்சான் நான் கிளம்புறேன்” கைக்கடிகாரத்தை பார்த்தான்.
லஹிருவும் இன்ஸ்பெக்டரும் கண்டி யுனிவர்சிட்டியில் ஒன்றாக படித்தவர்கள் நண்பன் இருக்கும் தைரியத்தில்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வண்டியை விட்டு உள்ளேயும் நுழைந்திருந்தான் லஹிரு.
“ஐயோ இவன் போய்ட்டா காரியமே கெட்டுடும்” என்று நினைத்த சாரு லஹிருவின் கையை தன் இரு கைக்கொண்டு பிடித்துக் கொண்டவள் “ப்ளீஸ் ப்ளீஸ் என்ன இங்க தனியா விட்டுட்டு போகாத, ப்ளீஸ்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
கண்களை சுருக்கி அவள் கெஞ்சிய விதம் கல்லையும் கரைத்திருக்கும். ஆனால் லஹிருவை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அவன்தான் அவள் அவதாரத்தை காலையிலையே பார்த்தானே. வாயை திறந்தால் பச்சை பச்சையாக பேசுபவள் இப்படி கெஞ்சவெல்லாம் மாட்டாள்.
அவளிடமிருந்து விடுபட முயன்றவாறே “உனக்கு பயமா இருக்கா? நம்பவே முடியல. ரொம்ப நடிக்காத. இன்ஸ்பெக்டர் என் ப்ரெண்டுதான் அவர் உன்ன கொண்டு போய் வீட்டுல விடுவாரு” என்றவன் கையை உதறி விட்டு நடக்க,
“டாலிங் என்ன விட்டு போறியா டாலிங். என் வயித்துல வளருற நம்ம குழந்தைக்கு இந்த சூழ்நிலை ஒத்து வராது டார்லிங்” இவ்வளவு நேரமும் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவள் சத்தமாக கூற அதிர்ந்து நின்ற லஹிரு அவளை முயன்ற மட்டும் முறைத்தான்.
“அட காரியத்தையே முடிச்சிட்டானா. இவன் போனா பொண்ண எப்படியாச்சும் கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தேன். அடுத்தவன் புள்ளைக்கு அப்பன் ஆகா முடியாது சாமி. எப்படியாச்சும் காச வசூலிக்கனும்” தனக்குள் எண்ணிய பந்துல சாருவுக்கு அண்ணனாக அவதாரம் எடுத்தான்.
“என்ன சார் ஏழை பொண்ணு அதுவும் தமிழ் பொண்ணு, அப்பாவி பொண்ணு என்றதும் ஏமாத்த பாக்குறீங்களா? உங்களை மாதிரி ஆட்களாலதான் நம்ம இனத்துக்கே அசிங்கம். அதுவும் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொள்ளும் உங்களை போன்ற ஆட்களால்தான் எல்லாம்” என்று பேச லஹிருவுக்கு பந்துலுவின் மீது கோபம் வரவில்லை. அவன் பேசக் காரணமான சாருவின் மீதுதான் கோபம் வந்தது.
பந்துல செய்ய இருந்த காரியம் என்ன? அதை எல்லாம் துடைத்து எரிந்து விட்டு இப்பொழுது ரொம்பவும் நல்லவன் போல் பேசுவதை பார்த்து சாரு வாய் பிளந்து பார்த்திருக்க, லஹிருவின் கோப முகத்தை காண தவறினாள்.
சாரு பேசியதை கேட்ட இன்ஸ்பெக்டரான லஹிருவின் நண்பன் சுமித் ஹெட்டிகே அதிர்ச்சியடைவதற்கு பதிலாக சிரித்தான்.
காலேஜ் படிக்கும் பொழுதே லஹிருவின் குடும்பம், குலம், பணம் எல்லாவற்றையும் பார்த்து அவனை சூழ்ந்த பெண்களை எல்லாம் அவன் எவ்வாறெல்லாம் ஒதுக்கினான். காதலுக்கும் அவனுக்கும் எவ்வளவு தூரம். காதலை பற்றிய அவனது கருத்து என்ன? பெண்களை பற்றிய அவன் கணிப்பு என்ன என்றெல்லாம் அறிந்து வைத்திருப்பவன் சுமித்.
அதனால்தான் பந்துல சாரு லஹிருவின் காதலி என்று கூறியதும் “இது உன் அப்பத்தாவுக்கு தெரியுமா?” என்று கேட்டான். அதில் கொஞ்சமே கொஞ்சம் நக்கல் இருந்ததை லஹிரு உணராமலும் இல்லை.
எந்த பெண் வந்து விருப்பத்தை சொன்னாலும் ஒதுக்கித்த தள்ளுபவவனை கடுப்போடு பார்க்கும் சுமித் “வேணும் என்று சொல்லுறவனுக்கு ஒருத்தி வர மாட்டா. வேணாம்னு சொல்லுறவன் பின்னாடி வரிசை கட்டுறாளுங்க. எல்லா இடத்துலயும் இப்படித்தான் போல. ஏன்டா அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்?” பொறுமியவாறே கேட்க
“அவளுக்கு குறைச்சல் என்று சொன்னேனா? அப்பத்தாக்கு புடிச்ச பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன். இது நான் எப்பயோ எடுத்த முடிவோ” சிரித்தவாறுதான் சொன்னான் லஹிரு.
“டேய் அப்பத்தா கொண்டு. எல்லாத்தையும் அப்பத்தாக்காக விட்டுக் கொடுத்துட்டா கல்யாணத்தையுமாடா? நல்லா வருவடா… நல்லா இருப்ப”
அப்படிப்பட்ட நண்பன் ஒரு பெண்ணை காதலித்து பிள்ளையும் கொடுத்து ஏமாற்றினான் என்றால் நம்ப கூடிய விஷயமா?
“மிஸ்டர் லஹிரு உங்க மேல கேஸ் கொடுக்க வேண்டி இருக்கும் போலயே. நீங்க போக முடியாது இப்படி வந்து உக்காருங்க” சுமித் சிரித்தவாறே சொல்ல நண்பனை முறைத்தான் லஹிரு.
“இங்க பாருங்க சார் இவரு இந்த பொண்ண காதலிச்சது. புள்ள கொடுத்தது. எல்லாம் இவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது. முதல்ல என் பிரச்சினைக்கு ஒரு பதில் சொல்லுங்க” பந்துல இன்ஸ்பெக்டரிடம் அவசரப்படுத்த
அவனுடைய காகிதத்தை பரிசோத்தித்த சுமித் “என்னய்யா அஞ்சு வீதம் வட்டி போட்டிருக்க, ரெண்டு லட்சத்துக்கு மாசம் பத்தாயிரம் வட்டி வருமே. ஏம்மா உன் மாச சம்பளம் எவ்வளவு?” என்று சாருவை கேட்க”
“பதினைஞ்சாயிரம் சார்” என்றாள் இவள்
“இதெல்லாம் ரொம்ப அநியாய வட்டி. கேக்க ஆளில்லனு வசூலிக்கிறியா?” சுமித் கர்ஜிக்க
“சார் நீங்க மாமூல் வாங்குறதா என் கிட்டயே சொன்னான் சார்” சாரு போட்டுக் கொடுக்க
“என்னடா இதெல்லாம்?” என்றவாறு பார்த்தான் லஹிரு.
சுமித்துக்கு வந்த கோபத்தில் “நான் உன் கிட்ட காசு வாங்கினேனா? எப்படா வாங்கினேன்” பந்துலவை சரமாரியாக அடிக்க சாரு நல்லா வேணும் என்பது போல் பார்த்திருந்தாள்.
“சார் சார் நீங்க இல்ல சார். முன்ன இருந்த இன்ஸ்பெக்டர்” கதறியவாறே கூறினான் பந்துல.
சுமித்தின்  கோபம் கொஞ்சம் தனியா “சார் அவர்கிட்ட என் காச கொடுக்க சொல்லுங்க சார் நான் கிளம்புறேன்” லஹிருவை பார்த்தவாறே சுமித்திடம் கெஞ்சலானான் பந்துல 
“நான் எதுத்துக்குடா உன் காச கொடுக்கணும்” எகிறினான் லஹிரு.
“நீ தானே இவ காதலன். உன் புள்ளத்தானே இவ வயித்துல…” பந்துல சொல்லி முடிக்கவில்லை
“டேய் லஹிரு என்னடா இதெல்லாம்” என்றவாறே புஞ்சிநிலமே ஸ்டேஷனுக்குள் நுழைய லஹிருவுக்கு “ஐயோ” என்றானது.
மகனை ஒருபுறம் இழுத்துக் கொண்டு சென்றவர் “டேய் ஏதாவது தப்பு பண்ணிட்டியா? ஒன்னும் பிரச்சினை இல்ல. காச கொடுத்து சரி கட்டிடலாம்” என்று பேச
“ஐயோ சித்தப்பா நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல” சித்தப்பாவுக்கு புரிய வைக்க முயன்றவன். என்ன சொன்னாலும் இப்போதைக்கு அவர் புரிந்துகொள்ள மாட்டார் என்று தோன்ற “நான் கேட்ட காச எடுத்துட்டு வந்தீங்களா?” யோசனையாகவே தான் கேட்டான்.
“இன்னக்கி சனிக்கிழமை இல்ல சம்பளம் கொடுத்துட்டு மொத்த பணத்தையும் பேங்க்ல போடலாம்னு இருந்தேன். நாலு மணிக்கே பேங்க் மூடிடுவானுகளே, லேட் ஆனதுல எ.டீ.எம்ல போடலாம்னு இருந்தேன். நல்லவேளை நேரங்காலத்தோட போடல. நீ காச எடுத்துட்டு ஸ்டேஷன் வரச் சொன்னதும் என்ன? ஏதோன்னு அறக்கப் பறக்க ஓடி வந்துட்டேன்”
“காசு எங்க? எவ்வளவு வச்சிருக்கீங்க?”
புஞ்சிநிலமே சொன்னதும் சுமித்திடம் சென்று பந்துலவுக்கு எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்று கேட்க இந்த மாதம் மொத்த பணம் இரண்டு லட்சத்தி இருபதாயிரம் என்றதும் அதை சாரு கொடுத்ததாக எழுதி வாங்கி கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டு சித்தப்பாவின் காசை கொடுத்து பந்துலவை அனுப்பி வைத்தான்.
நடப்பது கனவா? நனவா சாருவுக்கு புரியவில்லை. ஆவென்று பாத்திருக்க,
“டேய் இப்போவாச்சும் சொல்லுடா? என்ன இதெல்லாம்?” புஞ்சிநிலமே கேட்க
“நான் இன்னக்கி ஊருக்கு போகல வந்து சொல்லுறேன். நீங்க வீட்டுக்கு போங்க” அவரை அனுப்பி வைத்தவன் “எல்லாம் உன்னால் தான்” என்று சாருவை அறைந்திருந்தான்.

Advertisement