Advertisement

அத்தியாயம் 22
“சாரு ஒன்பது மணி நாடகம் போடுவாங்க நான் பார்த்துட்டு வரேன். நீங்க தூங்குங்க” என்ற பஞ்சவர்ணம் முத்துவையும் கிளம்பினாள்.
அவன் இதுவரை வெளியே சென்று நாடகம் பார்த்ததே இல்லை. அன்னை எதற்காக சொல்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல் “நான் பாக்குறத வளமை போல யு டியூப்லயே பாக்குறேன்” என்றான்.
“நாமளும் போகலாமா?” புரியாமல் லஹிரு கேட்க அவன் வாயை பொத்தி இருந்தாள் சாரு.
முத்துவின் காதை திருகி தலையிலும் கொட்டியவாறு வெளியே அழைத்து சென்றாள் பஞ்சவர்ணம். போகும் போது  அரைமணிநேரம் போதுமா? என்று வேறு கேட்டவாறு செல்ல சாரு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
அவள் செய்கைகளை வினோதமாக பார்த்தவன் “எதுக்கு இப்போ என் வாய பொத்தின? எல்லாரும் ஒண்ணா நாடகம் பாக்குறது எவ்வளவு ஜாலியா இருக்கும். உனக்கு என்ஜோய் பண்ணவே தெரியல”
காலனியில் எதற்காக நாடகம் போடுகிறார்கள். யார் போவார்கள். யார் வீட்டில் இருப்பார்கள் என்று நன்கு அறிந்திருந்த சாரு தலையில் அடித்துக் கொண்டாள்.
இவளும் இவனும் நாடகம் பார்க்க போனால் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையே இவர்களே தம்பட்டம் அடித்து கூறியது போல் ஆகாதா?
அவனிடம் விளக்கம் கூற முடியாமல் அவனை முறைத்தவள் அவனுக்கு முதுகு காட்டி சுவர் பக்கம் படுக்கலானாள்.
         
வீட்டில் யாருமில்லாததால் சாருவிடம் பேசி விடலாம் என்று “அடியேய் பொண்டாட்டி இந்த பக்கம் திரும்பு. உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று அவளை திருப்ப,
“என்ன உனக்கு தூக்கம் வரலையா? போ… வெளிய போய் ஒரு தம்ம போட்டு வந்து தூங்கு” என்றாள்.
“ஓஹ்… தம்மு தண்ணிய விட சூப்பரா போதை தரக் கூடிய ஒன்னு என் கிட்ட இருக்கு” என்று சொல்ல
லஹிரு தண்ணியடித்தோ, தம்மடித்தோ பாத்திராதவள் அதிர்ந்தவாறு அவன் புறம் திரும்ப அவள் இதழ்களை கவ்வி இருந்தான் லஹிரு.
குறுகிய இடம் என்பதால் அவளால் அவனை விட்டு விலக முடியவில்லை. அவன் தோளிலும், மார்பிலும் அடித்தவளை லாவகமாக தடுத்தவன் மேலும் முன்னேறினான்.
பேச நினைத்தவனை பேச விடாது எதோ பேசி உசுப்பேற்றி விட்டிருந்தவளுக்கு அவனை தடுக்கும் வழிதான் தெரியவில்லை.
திடிரென்று காலனி குடிமகன்களின் ஒருவரின் வசைபாடல்கள் ஆரம்பமாக திடுக்கிட்ட லஹிரு சாருவிடமிருந்து விலகி இருந்தான்.
தோட்டத்தோடு அமைந்திருக்கும் அவன் வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் பல கிலோ மீட்டர்கள் இருக்க, ஆள் நடமாட்டமும் இருக்காது. அந்நிய மனிதனின் பேச்சுக்கு குரலும் கேட்காது.
அப்படி வளர்ந்தவனுக்கு இந்த சத்தத்தில் தன்னை பொருத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கும்.
அவன் விலகியதால் சாரு சுவர் புறம் திரும்பிக் கொள்ள, சத்தமாக சிரித்தவன் விடாது அவளை அணைத்துக் கொண்டு கழுத்து வளைவில் முத்தமிடலானான்.
அவன் புறம் திரும்பி இவள் அவனை தள்ளி விட முயற்சி செய்வதும், அவன் இவளை தடுத்து முன்னேற முயற்சி செய்வதுமாக நேரம் ஓட சாரு என்று அழைத்தவாறு வாசல் கதவை திறக்கலானாள் பஞ்சவர்ணம்.
“அதற்குள்ள நாடகம் முடிஞ்சிருச்சா?” சாருவின் முகம் பார்த்து கேட்டவனை முறைத்தவள் சுவரோரமாக சுருண்டுக்கொண்டாள்.
பஞ்சவர்ணத்தோடு முத்துவும் உள்ளே வர கதவை சாத்தியவள் படுத்துறங்கினாள்.
எதுவுமே நடக்காதது போல் லஹிரு சாருவை அணைத்துக் கொண்டு தூங்க முற்பட அவன் கையை மெதுவாக எடுத்து விட முயன்றாள்.
அவள் சுவரோரம் படுத்ததே இவன் மேல் மோதி விடக் கூடாதென்று நினைத்து. இவனோ அதை பயன்படுத்திக் கொண்டு அவளை ஒட்டி படுக்கலானான்.
அவன் பிடி இரும்புப் பிடியாக இருக்க, சாருவால் அவன் கையை அசைக்கக் கூட முடியவில்லை. பேசினாளோ, சிணுங்கினாலோ சத்தம் கேட்கும், முத்து வயசு பையன். அத்தை என்ன நினைப்பாள்? கையை எடுக்குமாறு கூறவும் முடியாமல் பல்லைக் கடித்தவாறு நின்றாள். 
அவள் அமைதியை தனதாக்கிக் கொண்ட லஹிரு மெதுவாக அவள் கழுத்தில் முத்தமிட, உடல் சிலிர்த்தவள் அவனை தடுக்க அவன் முகத்தை தள்ளி விட்டாள்.
தள்ளிவிட தள்ளிவிட அவன் சில்மிஷங்கள் அதிகமானதே ஒழிய குறையவே இல்லை. பொறுத்தது போதும் பொங்கி எழு சாரு என்று அவள் மனசாட்ச்சி கூவ அவன் மண்டையில் நங் என்று ஒன்று வைத்தாள்.
“அம்மா” என்று இவன் கத்த
“என்ன ஆச்சு?” என்று பதறினாள் பஞ்சவர்ணம்.
“தூக்கத்துல கழுத்துலையே கைய போட்டு கழுத்த இறுக்கி சாகடிக்க பாக்குறா” என்று சமாளித்தான் லஹிரு.
“சரியான கும்பகரணி. கிட்ட படுக்குறவங்க கார்ட் போட்டுக்கிட்டுதான் தூங்கணும்” என்றான் முத்து.
சாருவுக்கு சிரிப்பாக இருந்தாலும் எதுவும் பேசவில்லை. ஆனாலும் லஹிரு விடாமல் அவளை அணைத்துக் கொண்டுதான் தூங்கினான். 
அடுத்த நாள் காலையில் சாரு கண்விழிக்கையில் வளமை போல் அவள் தான் அவனை அணைத்துக் கொண்டு தூங்கி இருந்தாள்.
நன்றாக விடிந்திருக்க, பஞ்சவர்ணம் அவர்களை எழுப்பவில்லை. வேலைக்கு செல்பவர்கள் அவசரமாக குளித்து விட்டு வேலைக்கு செல்வார்கள். கழிவறைக்கு, குளியலறைக்கு வரிசை காட்டும். இவர்கள் எழுந்தாலும் செல்வது சிரமம் என்று எழுப்பாமல் விட்டாள்.
லஹிருவுக்கு எட்டு மணிக்கே விழிப்பு தட்டியிருந்தது. மலையோடு சார்ந்த பகுதி என்பதால் சூரியன் இப்போதைக்கு இந்த பக்கம் வர மாட்டான். பனி மூட்டத்தால் எட்டு மணி கூட ஆறு மணி போல்தான் இருந்தது. பனி விலகி சூரியன் உதிக்க பத்து மணியாகவும் என்று கணித்தவன் தன்னை கட்டிக் கொண்டு தூங்கும் மனைவியை பார்த்து புன்னகைத்தான்.
அவன் வீட்டில் என்றால் இந்நேரம் அவள் எழுந்து சென்று காலை உணவை தயார் செய்து கொண்டிருந்திருப்பாள். அவள் வீடு என்றதும் எப்படி தூங்குகிறாள்.
இப்போதைக்கு அவள் எழுந்துகொள்ள போவதில்லை என்று புரிய அவளை அணைத்துக் கொண்டு தூங்கியவன் மீண்டும் கண்விழிக்கையில் மணி ஒன்பதை தாண்டி இருந்தது.
சாரு அவன் மேல் ஒரு காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கி இருக்க அலைபேசியில் மெதுவாக படம்பிடித்து வைத்தான். அவளை அணைத்துக் கொள்ளாது அவள் கண்விழிக்கும் வரைக்கும் காத்திருந்தான். 
நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கி விழித்தாள் சாரு. வளமை போல் லஹிருவை கட்டிக் கொண்டு தூங்கியதை பார்த்தவள் தன்னையே திட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“தினமும் நீ இந்த வேலையைத்தான் பாக்குறியா? இத்தனைநாளா இது தெரியாம போச்சே” என்ற கணவனின் குரலில்
“போச்சு போச்சு மானமே போச்சு” மனதுக்குள் கூறிக் கொண்டவள் “இடம் சின்னதா இல்ல இருக்கு, கை, கால் மேல படத்தான் செய்யும், நீதான் விலகி படுக்கணும்” என்றாள்.
“ஓஹ்… அப்படியா?” என்று புன்னகைத்தவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
சாரு படுக்கையை விட்டு எழுந்துகொள்ள போக “எங்க ஓடுற? என் மேல கையையும் காலையும் போட்டு கொண்டு தூங்கினதுக்கு வட்டிக் கொடுத்துட்டு போ”
“இவனுக்கு பணத்தை தவிர வேற எதுவும் தோணாதா?” என்று இவள் முறைக்கும் பொழுதே அவளை இழுத்து முத்தமிடலானான்.
திமிறி விலக்கியவளை இவன் இழுக்க “பொருக்கி பொருக்கி விடுடா என்ன?”
சாருவின் சத்தம் கேட்டு “சாரு எந்திரிச்சிட்டீங்களா? காப்பியா? டீயா?” பின்னாடியிருந்து குரல் கொடுத்தாள் பஞ்சவர்ணம்.
அவள் குரலில் லஹிருவின் பிடி சற்று தளர அவனை தள்ளி விட்டு அத்தையிடம் ஓடியிருந்தாள் சாரு. 
“என்னடி பேய பார்த்தா மாதிரி வர?” என்ற அத்தையை முறைத்தவள் “எனக்கு டீ கொடு” என்றாள்.
அவளுக்கு லஹிருவின் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான்? தன்னை பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டு இப்படியா நடந்து கொள்வான். இன்றே பேசி அவனை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.
“உன்னைத்தான் கேக்குறேன். உன் புருஷனுக்கு”
“அவன் கிறீன் டீ தான் குடிப்பான். அதெல்லாம் இங்க இல்லனு சொல்லு போ” அத்தையின் மேல் சீறிப் பாய்ந்தாள்.
“எனக்கும் டீயே கொடுங்க அத்த” என்றவாறு வந்த லஹிரு “காலை உணவுக்கு என்ன பண்ணி இருக்கீங்க? ஏதாவது வாங்கிட்டு வரணுமா?”
“மலைக்கு கீழ ஹோட்டல்ல இடியாப்பம் வாங்கினேன். சொதியும், சம்பலும் கொடுத்தாங்க. முட்ட அவைச்சி வச்சிருக்கேன். வேற ஏதாச்சும் வேணுமா?”
“போதும் அத்த போதும் போதும்”
“சரியான இடியாப்பத்துக்கு பொறந்தவன்” சாரு முணுமுணுக்க,
“இந்தாங்க டீயை குடிச்சிட்டு ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” பஞ்சவர்ணம் இருவரையும் விரட்ட லஹிரு அவள் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டான். 
குளிக்க சென்றால் பஞ்சவர்ணம் லஹிருவுக்காக வைத்த சுடுநீரில் சாரு குளித்து விட்டு அவனை குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தாள்.
“என்னயா கிணத்துல கூல் தண்ணில குளிக்க சொல்லுவ. இப்போ நீ குளி” பொறுமியவள் அவனிடம் எதுவும் பேசாமல் பஞ்சவர்ணம் அளவி இருந்து சுடுநீரில் குளிக்க இதையறியாத லஹிரு அவளை சைட் அடித்தவாறு குளிந்த நீரில் குளிக்கலானான்.
அவனுக்கும் குளிந்த நீரில் குளித்து பழக்கம்தான். நீர்வீழ்ச்சி. ஆறு, குளம் என்று நீச்சலடித்து, கரனமடித்து குளித்தவனுக்கு இந்த ஊற்று நீர் ஒன்று அவ்வளவு குளிராக இருக்கவில்லை.
இவர்கள் இருவரும் குளித்து முடிக்கும் வரை காலனியில் உள்ள ஒருசில பெண்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் வெளியே நின்றவாறு கதை பேசிக் கொண்டிருந்தனர்.
புதிதாக திருமணமான இவர்களை பற்றித்தான் பிரதான கதையாக இருக்க, அது இவர்களின் காதிலும் விழத்தான் செய்தது.
அதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை படாமல் கேலியும், கிண்டலும் செய்து சிரிக்க, சாருவுக்குத்தான் காது கூசிப் போனது.
இவர்கள் சொல்வதற்கு சிரித்தவாறே லஹிரு சாருவின் மேல் தண்ணீரை அடிக்க சுடுநீரில் குளித்துக் கொண்டிருந்தவளுக்கு குளிர் நீர் பட்டதும் கத்தி இருந்தாள்.
இதை லஹிருவும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன நடந்தது என்று அவன் இவளை பார்க்க வெளியே இருந்தவர்களோ “என்ன சாரு நைட் டைம் பத்தலையா? இங்க வந்து ஆரம்பிச்சிட்ட?” ஒருத்தி சொல்ல 
“உன் வீட்டுலதான் முத்து இல்லையே, வர்ணத்தை சாக்கு போக்கு சொல்லி வெளியே அனுப்பிடு” என்றாள் ஒருத்தி.
“ஆமா ஆமா பகல்ல அக்கம் பக்கம் கூட யாமில்லை” என்று சத்தமாக சிரிக்க லஹிரு புரிந்தும், புரியாமலும் முழிக்க சாரு தலையில் அடித்துக் கொண்டு அவசர அவசரமாக குளித்து விட்டு வெளியே செல்லலாம் என்று வர, லஹிரு அப்பொழுதுதான் சோப் போட்டுக் கொண்டு இருந்தான்.
“இவன விட்டுட்டு போனா அதுக்கும் பேசுவாளுங்க. இவன் கிட்ட பேச்சு கொடுத்து ஏதாவது போட்டு வாங்க பார்ப்பாளுங்களே”
“என்ன? சைட் அடிக்கிறியா?”
“ஐயே சீக்கிரம் குளி. வெளியே ஆட்கள் காத்துகிட்டு இருக்காங்க”
“ஆமா ஆம்பளைங்க பொம்பளைங்க எல்லாரும் குளிக்க இந்த ஒரு இடம் மட்டும்தான் இருக்கா?”
“ஆம்பளைங்க அந்த பக்கம் ஊத்து வர இடத்துல குளிப்பாங்க”
“ஓஹ்… அப்போ நாளைக்கு நான் அங்க குளிச்சிக்கிறேன்” என்றவன் தண்ணீரை ஊத்தலானான்.
தலையை துவட்டியவாறு லஹிரு வெளியே வர பெண்கள் அவனை கிண்டல் செய்து பேச ஆரம்பித்தனர்.
“சாரி என்னால லேட் ஆகிருச்சு” என்று இவன் தமிழில் சொன்னதும் அனைவரும் கப்சிப் என்றாக்கினர். இத்தனை நேரமும் இவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து பேசிக் கொண்டிருக்க, அவர்கள் பேசியது எல்லாமே இவனுக்கு புரிந்தது விட்டது என்றது அனைவருமே அங்கிருந்து ஓட்டம் பிடித்திருந்தனர்.
“என்னாச்சு” என்று லஹிரு சாருவை பார்க்க அவளோ அவனை கண்டுகொள்ளாமல் வீட்டை நோக்கி நடக்கலானாள்.
லஹிரு உள்ளே நுழையும் பொழுதே “சுடு தண்ணி போதுமா இருந்ததா?” என்று பஞ்சவர்ணம் கேட்க,
“என்ன சித்தி?” புரியாது இவன் முழிக்க,
“ஆ போதுமா இருந்திருச்சு” நடுவில் குறுக்கிட்டு கூறினாள் சாரு.
அப்பொழுதுதான் அவனுக்கு சகலவும் புரிந்தது. “அடிப்பாவி சத்தமில்லாம சங்கருக்குறது இதுதானா?” என்பது போல் அவளை பார்த்தவன் எதுவும் கேட்கவில்லை.
பஞ்சவர்ணம் எடுத்து வைத்த உணவை இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே அவன் அலைபேசி அடித்தது. பேசியது புஞ்சி நிலமே தான். வேலைக்கு சென்றவர்களின் மூலம் லஹிரு சாருவின் வீட்டில் இருப்பதை அறிந்து அழைத்திருந்தான்.
“என்னடா மாமியார் வீட்டுல விருந்து ஆகா… ஒஹோ என்று இருக்கோ” கிண்டலாக கேட்டானா? சாதாரணமாக கேட்டானா தெரியவில்லை. லஹிரு அதை ஆராயவுமில்லை.
“இப்போதான் எந்திரிச்சு, குளிச்சு, ப்ரேக்பஸ்ட் சாப்பிடுறேன். நானே உங்களுக்கு போன் பண்ணலாம் என்று இருந்தேன். நீங்களே பண்ணிடீங்க. வீட்டுல தானே இருப்பீங்க. இருங்க சாப்பிட்டு வரேன்” என்றவன் மேற்கொண்டு பேச விடாது அலைபேசியை துண்டித்தான்.
அவனது அலைபேசி அடிக்கும் பொழுதே பேசுவது புஞ்சி நிலமே என்று சாருவுக்கு தெரிந்து விட்டது. சுதுமெனிகே வரும் பொழுதே அங்கு செல்லக் கூடாது என்று கூறித்தான் அனுப்பி வைத்தாள். அப்படி இருக்க, இவன் எதற்காக அங்கு செல்கிறான்? அதுவும் தான் அங்கு சென்று இவனை தங்கிக் கொள்ளுமாறு கூறி மறுத்தவன் இப்பொழுது எதற்கு செல்ல வேண்டும்? 
“அதான் பாட்டி அங்க போக வேணாம் என்று சொன்னாங்களே? இப்போ எதற்கு அங்க போறீங்க?”  முறைத்தவாறே தான் கேட்டாள் சாரு.
“அப்பத்தா ஆயிரம் சொல்லுவாங்க. எது சரி? எது தப்பு என்று நாமதான் டிசைட் பண்ணனும்” என்றவன் கைகழுவ எழுந்து சென்றான்.
சேர்ந்து வாழ சுதுமெனிகே சொன்னதை தான் இவன் இவ்வாறு சொல்கிறானோ? என்று அவனை சந்தேகமாக பார்த்தாள் சாரு. 
“சித்தி மதியத்துக்கு எதையாச்சும் சமைச்சி வைங்க. ஆனா கண்டிப்பா ரசம் வைங்க. நா மதிய சாப்பாட்டுக்கு வருவேன்” என்றவன் கிளம்ப, தானும் வருவேன் என்று வந்து நின்றாள் சாரு.
அவளை அழைத்துக் கொண்டு சென்றால் அவளுக்குண்டான மரியாதையை அவர்கள் கொடுப்பார்களா? என்று ஒருநொடி யோசித்தவன்.
“இல்ல. நீ இரு. நான் மட்டும் போயிட்டு வரேன்” என்றான்.
“நானும் வருவேன்” பிடிவாதம் பிடித்தாள் சாரு.
“உன்ன அவங்க ஏத்துக்க இன்னும் கொஞ்சம் நாளாகும். அதுவரைக்கும் நீ பொறுமையா காத்திருக்கணும். நீயா அவங்க வீட்டுக்கு போய் அசிங்கப்பட போறியா? இல்ல அவங்களே அன்பா அழச்ச பிறகு போக போறியா? நீயே முடிவு பண்ணு?” என்றவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருக்க, அவன் சொன்னதில் இருந்த உண்மை சுட “போய் தொல” என்பது போல் அவனுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.
“போயிட்டு வரேன்டி பொண்டாட்டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் கோபமுகத்தைக் கண்டு கொள்ளாமல் வண்டி சாவியோடு கிளம்பி இருந்தான்.
“வாடா என்ன மாமியார் வீட்டுல கவனிப்பு ஆகா ஓஹோ என்று இருக்கோ? இங்க தங்காம அங்க தங்கி இருக்க? அந்த சின்ன வீட்டுல எப்படித்தான் தங்கி இருக்கியோ. அதையெல்லாம் வீடு என்று சொல்லுறேன் பாரு” லஹிரு வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுதே ஆரம்பித்தான் புஞ்சி நிலமே.
உண்மைதான் அவன் அறையை விட அந்த வீடு சின்னதுதான். அவன் அறையில் கூட தளபாடங்கள்  போட்டு நேர்த்தியாக அங்கங்கே அறை காற்றோட்டமாகவும், இடவசதியோடும் இருக்கும். இந்த வீட்டில் அவ்வாறெல்லாம் இல்லை. எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் தான் இருந்தது.
ஒரு பெட்டியில் பஞ்சவர்ணத்தின் துணி இருக்க, ஒரு பெட்டியில் முத்துவின் துணி. படுக்கை விரிப்புகள் தலையணைகள் ஒருபக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, சமையல் பாத்திரங்கள் ஒருபக்கம் என்று வாசல், படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே அந்த வீட்டில் அந்த அறைதான்.
ஆனால் லஹிருவுக்கு அந்த வீடு பிடித்திருந்தது. அது சாருவோடு அவன் இருப்பதினாலையே. இன்று காலை இங்கு வரும் பொழுது தலைவார இருவரும் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் சண்டை போட்டது ஒருநொடி அவன் கண்முன் வந்து போனது.
சுவரில் ஒரு கண்ணாடி நெஞ்சளவுதான் இருக்கும். அது சாருவின் உயரத்தில் இருக்க இவன் குனிந்துதான் தலைவார வேண்டி இருந்தது. இவன் வாரும் பொழுது அவளும் வந்து தலைவார, இருவருக்கும் முட்டிக் கொண்டது. அவள் இவனை தள்ளி விட, இவன் அவளை தள்ளி விட என்று ஐந்து நிமிடங்கள் கரைந்தோடி இருந்தன.
இந்து போன்ற குட்டி குட்டி சந்தோசங்கள் இந்த மாதிரியான வீடுகளில்தான் கிடைக்கும். பெரிய வீடுகளில் இவைகளை எதிர்பார்க்க முடியுமா? இதை சொன்னால் இவர்தான் புரிந்து கொள்வாரா? என்று சித்தப்பாவை பார்த்தான். 
“ஏன்டா உன் ரூமை விட அந்த வீடு சின்னது. அதுலயும் நாலு பேர் தங்க முடியுமா? உன் பொண்டாட்டிகிட்ட பேசி இங்க வந்து தங்க வேணாம். அதான் அவ ஜீவக அண்ணாவோட பொண்ணு என்று ஆகிட்டாளே. இன்னமும் எதற்கு அதுங்களோட உறவு வச்சிக்கிட்டு” என்றவாறு வந்தாள் மெனிகே.
இவர்களின் நியாயம் விசித்திரமானது. சாரு அவன் மனைவியாகவே இருந்தாலும் மதிக்க மாட்டார்கள். எதோ தங்களது உறவுக்கார பெண் ஆகி விட்டாள் என்பதனால் ஏற்றுக்கொள்வார்களாம். இவர்கள் அவளை ஏற்றுக்கொள்ள அவள் அவளை சின்ன வயதிலிருந்து தூக்கி வளர்த்த குடும்பத்தை தூக்கி எரிய வேண்டுமாம். அதுவே அவர்கள் பணம், வசதி என்று இருந்தால் இவர்களின் எண்ணம் மாறி இருக்குமோ? லஹிருவுக்கு கோபம் வந்தாலும் பொறுமையை விடாமல் அமைதியாக சித்தப்பாவின் முன்னால் அமர்ந்தான்.
“அப்பத்தா இங்க வரக் கூடாது, உங்க கூட பேசக் கூடாது. மீறி பேசினா என்னையும் வீட்டுல சேர்க்க மாட்டேன் என்று சொல்லித்தான் சாரு கூட அனுப்பி வச்சாங்க. அதற்காக நான் உங்க கூட பேசாம இருக்கேனா? இங்க வராமதான் இருந்தேனா? இதோ இப்ப கூட சாரு கூட சொல்லிட்டுதான் வந்தேன். அவளும் போயிட்டு வாங்க என்று வழியனுப்பி வச்சா. உங்கள பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தா ஏன்டா வந்தோம் என்ற அளவுக்கு பேசாதீங்க” என்றதும் இருவரும் அமைதியானார்கள்.
“எனக்கு ஒன்னுனா கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் இருப்பீங்க என்று தெரியும். அதனாலதான் முக்கியமான விஷயம் பேச வந்தேன்” என்றவனை மீண்டும் சுமனாவதி அல்லது அனோமா பிரச்சினை செய்கிறாளா என்று கோபமாக கேட்டான் புஞ்சி நிலமே. 
“எதுனாலும் சொல்லு வெட்டி சாச்சிடுறேன்”
“கொலை பண்ணிட்டு ஜெயில்ல களி சாப்பிடவா? நான் வந்த விஷயமே வேற” என்றவன் காலனி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டிய அவசியத்தையும், அது புஞ்சி நிலமையில் கடமை என்றும் கூறினான்.
“ஏனடா அவளுங்க உன் மாமியார் வீடு என்றானதும் வீடு கட்டிக் கொடுக்க யோசிக்கிறியா?” கோபமாக சீறினான் சித்தப்பா.
“புரியாம பேசாதீங்க சித்தப்பா. சாருவுக்கு இருக்கிறது அத்தையும் அவங்க பையனும் மட்டும்தான். அவனுக்கு ஒரு நல்ல வேலைய போட்டுக் கொடுத்து வீட்டை கட்டிக் கொடுக்க என்னால முடியாதா? அப்படிக் கொடுத்தா அவளும் சந்தோஷப்படுவா. அவங்க வாழ்க்கை தரமும் உயர்ந்திடும். நான் அவங்களுக்காக மட்டும் பேசல, உங்களுக்காகவும்தான் பேசுறேன்.
நாப்பது அம்பது வருஷத்துக்கு முந்தைய காலத்துல கொடுத்த காணில தீப்பெட்டி போல வீட்டை கட்டிக் கொடுத்துட்டாங்க. புள்ளைகுட்டி என்று குடும்பம் பெருசானா எப்படி வாழ்வாங்க? சுகாதாரம் என்ற ஒன்னு வேணாம்? மெயின் ரோட்டுக்கும் காலனி மண்பாதைக்கும் வெறும் அஞ்சி மீட்டர் தான் அந்த ரோடு எப்படி இருக்கு? வெறும் கால்ல நடக்க முடியுதா? கல்லும், வளைவுமா இருக்கு.     
எதோ பொறந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்காங்க. அவங்க பலம் என்ன என்று அவங்களுக்கு தெரியல. போராட்டம் என்று இறங்கிட்டா நாளை பின்ன உங்களுக்குத்தான் பிரச்சினை”
“ஓஹ்… நீயே சொல்லிக் கொடுத்து வழியனுப்பி வைப்ப போலே” அவன் சொல்வதை புரிந்து கொள்ளாமல் சீறினான் நிலமே.
ஆனால் லஹிரு பொறுமையை கைவிடவில்லை. “நான் சொல்லுறது உங்களுக்கு இன்னுமா புரியல? அரசாங்கம் மனை திட்டம் என்று ஆரம்பிச்சி ரோடு போடுறது, வீடு கட்டிக் கொடுக்கிறது என்று எல்லாம் பண்ணுறாங்க. தனியார் நிறுவனங்கள் கூட அரசாங்கத்தோடு உதவியோடு வீடுகளை கட்டிக் கொடுக்குறாங்க. நீங்க கண்டுக்காம விட்டீங்கன்னா மத்தவங்க உசுப்பேத்தி போராட்டம், அது இது என்று உங்களுக்கு வீணான தலைவலி வந்துடும். அதற்கு முன்பாக நீங்களே வீடுகளை கட்டிக் கொடுக்கிறத பத்தி யோசீங்க. அது மட்டுமில்ல. மேற்கால மண்சரிவு வந்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி வந்தா மண்ணு மட்டும் வருமா? கல்லும் வந்து காலனி மொத்தமும் அழியுமா? தெரியாது. அப்படி ஏதாவது நடந்தா எவ்வளவு பெரிய பிரச்சினை என்று நான் சொல்லி நீங்க தெரிய வேண்டியது இல்லையே! நான் சொல்லுறத சொல்லிட்டேன். அப்பொறம் யாருமே சொல்லல என்று சொல்லாதீங்க”
எது செய்தாலும், அன்னையிடமும், அண்ணன் மகனிடமும் ஒருவார்த்தை கேட்டுக் கொள்வது புஞ்சி நிலமையின் வழக்கம் தான். அவன் சொல்வதில் உண்மை இருக்க அமைதியானான்.
மெனிகே கொண்டு வந்து கொடுத்த இளநீரை அருந்தியவன். தான் கிளம்புவதாக எழுந்து கொண்டான்.
“இருப்பா… சாப்பிட்டுட்டு போ…” என்றாள் மெனிகே
“என் பொண்டாட்டி எனக்காக சமைச்சி சாப்பிடாம காத்துகிட்டு இருப்பா நான் வரேன்” என்றவன் கிளம்பி இருந்தான்.
“கல்யாணமான புதுசுல எல்லாம் அப்படித்தான் இருப்பாளுங்க. நாளான எல்லாம் மாறும் மகனே” மனைவியை கிண்டலாக பார்த்தவாறு சொன்னான் புஞ்சி நிலமே
அவர்களின் வாக்குவாதம் ஆரம்பமாவதுக்குள் வண்டியை கிளப்பி இருந்தான் லஹிரு.

Advertisement