Advertisement

அத்தியாயம் 21-1
தனக்கு ஏதாவது நடந்தால் லாக்கரில் இருக்கும் ஆரஞ்சு கலர் பைலை பார்க்குமாறு சுதுமெனிகே லஹிருவுக்கு கூறி இருக்க, அந்த பைலை வைக்க லாக்கரை திறந்தாள். சொத்து முழுக்க தனக்கு பிறகு லஹிருவுக்கு என்றுதான் முதலில் எழுதி இருந்தாள்.
அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் சொத்தை யார் வேண்டும் என்றாலும் ஆளலாம். இந்த சதிக்காரர்களின் கைகளுக்கு எக்காரணத்தைக் கொண்டு சொத்துக் கிடைக்கக் கூடாது என்று சாருவையும், லஹிருவையும் கொல்ல முயன்ற பொழுதே சொத்துக்களை அவர்கள் இருவரின் பெயரிலும் மாற்றி எழுதும்படி லாயரிடம் கூறி இருந்தாள். அவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் சொத்து முழுக்க அநாதை ஆசிரமத்துக்கு என்றும் எழுதி ஆரஞ்சு கோப்பில் வைத்தாள். எந்த சதிக்காரர்களுக்கும் இந்த சொத்துக் கிடைக்கக் கூடாது என்பதில் சுதுமெனிகே உறுதியாகவே இருந்தாள்.
வீட்டு லாக்கரில் இருப்பதை விட பாக்டரியிலுள்ள லாக்கரில் இன்னும் பாதுகாப்பாக இருக்குமென்று உயிலை பற்றி சாரு மற்றும் லஹிரு விடம் கூறாமல் பாக்டரியிலுள்ள லாக்கரில் கோப்பை வைக்கலாம் என்று வந்தவளுக்கு தள்ளு பட்டுக் கொண்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது. “என்ன இது? கோப்பில் இல்லாமல் தனியாக இருப்பது? என்று கையில் எடுத்துக் பார்த்தவள் அதிர்ந்தாள்.
அது லஹிருவும் சாருவும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அசல். அதை படித்துப் பார்த்தவள் கோபமாக வீட்டுக்கு வந்து லஹிருவும் சாருவும் வரும் வரை காத்திருக்கலானாள்.
சாருவுக்காக வட்டிப்பணம் கொடுத்ததும் சுதுமெனிகேவுக்கு தெரியாது. அந்த பணத்துக்காகத்தான் அவளை வீட்டு வேலைக்கு பேரன் அழைத்து வந்திருந்தான் என்பதும் தெரியாது.
இதில் அவள் தம்பியை காதலிக்கக் கூடாது, திருமணம் செய்யக் கூடாது என்பதற்காக தான் தான் காதலிப்பதாக பொய் கூறி திருமணத்துக்கு சம்மதம் கூறி இருக்கின்றான்.
என்னதான் ஜாதகம் பொருந்தினாலும் மனம் ஒன்றவில்லையானால் திருமண வாழ்க்கை கசந்து விடும். லஹிரு சாருவை காதலிப்பதாக சொன்னதும் நிம்மதியடைந்தாள் சுதுமெனிகே.
ஆனால் இந்த காகிதத்தை பார்த்தால் தான் இறந்த உடனே இவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள் போலல்லவா இருக்கிறது.
அவர்கள் பிரிந்து செல்லாதது போல் தன்னால் உயில் எழுதி வைக்க முடியும். ஆனால் மனமொத்து சந்தோசமாக வாழ்வார்களா?
“தான் பார்த்து வைத்த பெண்ணாக இருந்தால் சேர்ந்து வாழ முயற்சி செய்திருப்பான். வட்டிப் பணப் பிரச்சினையை பணம் கொடுத்து சரி செய்துகொள்ளலாம். இந்த ஹரிதான் பிரச்சினை என்னவென்று தெரியவில்லையே” தான் எடுத்த முடிவு தவறோ என்று அச்சப்பபட்டாள் சுதுமெனிகே.
ஹரிதவை அழைத்து நீ யாராவது பெண்ணை காதலிக்கிறாயா என்று கேட்டால் “அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு அப்பத்தா” என்று சுதுமெனிகேயின் தோளில் விழுந்து அழுது கரைந்தான்.
சாருவைத்தான் சொல்கிறானோ என்று சுதுமெனிகேவுக்கு பிபி எகிறியது.
“சாருவை லவ் பண்ணுனியா?” என்று கேட்டால் “சாரு என் பிரெண்டு” என்றான்.
“அங்கிட்டு போடா அரவேக்காடு. என் உசுர வாங்கிகிட்டு” அவனை துரத்தியடித்தாள். 
அப்பத்தா கோபமாக இருப்பது தெரியாமல் சாவகாசமாக வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான் லஹிரு.
சுதுமெனிகே அமர்ந்திருக்கும் தோரணையே அவள் கோபமாக இருப்பதை உணர்த்த என்னவென்று கேட்கவே சாருவுக்கு அச்சமாக இருந்தது. இதுவரை சுதுமெனிகே கோபப்பட்டு அவள் பார்த்ததே இல்லை. வீட்டில் அவ்வளவு பிரச்சினை நடந்தும் நிதானமாகத்தான் கையாண்டு சதிகாரர்களை கண்டு பிடித்து வீட்டை விட்டு அனுப்பி வைத்தவள் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கும், இந்த குடும்பத்துக்கும் எந்த உறவும் இருக்கக் கூடாதும் என்றும் கூறி இருந்தாள்.  
அப்படிப்பட்டவள் இவ்வளவு கோபமாக இருக்க யார் காரணமாக இருப்பார்கள்? என்ன காரணமாக இருக்கும்? என்று சாருவுக்கு புரியவில்லை. ஆனால் லஹிருவுக்கு அது தான் சம்பந்தப்பட்டது என்று மட்டும் புரிந்தது.
அவன் விஷயத்தில் நிதானமாக முடிவெடுக்கும் சுதுமெனிகே கோபத்தை மட்டும் அவன் மீதுதான் காட்டுவாள் என்று இத்தனை வருடங்களாக கூடவே இருந்த அவனுக்கு தெரியாதா? 
“வீட்டில் என்ன நடந்தது” என்று கையாலையே தம்பியிடம் கேட்டான் லஹிரு.
“அங்க என்ன பேச்சு? ரெண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க” சுதுமெனிகே எழுந்து செல்ல இவர்களும் என்னவென்று அறியாமலே அறைக்குள் சென்றனர்.
சுற்றிவளைக்காமல் சுதுமெனிகே நேரடியாகவே விசயத்துக்கு வந்தாள். தான் எடுத்து வைத்த காகிதத்தை லஹிருவிடம் கொடுத்தவள் “என்ன இது?” என்று கேட்டாள்.
சுதுமெனிகே கணவனிடம் என்ன கொடுத்தாள் என்று எட்டிப் பார்த்த சாருவுக்கு கதிகலங்கியது. அவன் அன்று திருமணத்தை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டிருந்தான். இவள்தான் கோபத்தில் தேவையில்லாத எல்லாவாற்றையும் புகுத்தி இருந்தாள். பாட்டி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று புரியாது முழிக்க வேறு செய்தாள்.
“ஓஹ்… இதுவா நான் சாருவை காதலிக்கிறது நிஜம். உங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணதும் நிஜம். அதே மாதிரி வட்டிப் பணத்தை கழிக்க அவ இங்க வேலைக்கு வந்ததும் நிஜம். பணத்தை அவ கிட்ட நான் வாங்க போறதில்ல என்று அவளுக்கு தெரியாது. திடிரென்று கல்யாணம் நடந்ததால் சாருவுக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று நான் ஒதுங்கி இருந்தேன். அது இல்லாம ஹரிதவும், இவளும் பழகுறத பார்த்து நான் வேற கல்யாணத்துக்கு முன்னாடி என் மனச புரிஞ்சிக்காம பொறாமைல திட்டி விட்டேன். எல்லாத்தையும் போட்டு குழப்பிக்கிட்டவ ஏதேதோ பேசினா. அவ மனநிம்மதிக்காக இப்படியொரு எக்ரிமண்ட் போட்டேன். கூடவே இருந்தா என்ன புரிஞ்சிப்பா இல்ல. எனக்கே புரிஞ்சிக்க டைம் ஆகிருச்சு. அவளுக்கு ஆகாதா? கண்டிப்பா எங்களுக்குள்ள பிரிவு வராது” லஹிரு தன் மனதில் இருப்பதை தற்போதைய நிலைமையை வைத்து  உறுதியாக பேசிக் கொண்டே போக
“அடப்பாவி” எனும் விதமாக அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள் சாரு. சுதுமெனிகேயின் மனம் நோகக் கூடாதென்று பொய் சொல்வதாக வேறு நினைத்தாள்.
பேரன் தன்னிடம் பொய் சொல்ல மாட்டான். எதையும் மறைக்க மாட்டான் என்று நினைத்திருக்க சாருவுக்காக பணம் கொடுத்ததையே அவன் தன்னிடம் கூறாமல் மறைத்து விட்டான். அதிலிருந்தே தெரிகிறது அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது. சாருவை விரும்பவில்லையென்றால் பணத்தை தூக்கி கொடுத்திருக்க மாட்டான்.
ஆனாலும் இது என்ன விளையாட்டு என்று சுதுமெனிகேவுக்கு கோபம் தீரவில்லை.
“நீ என்ன சொல்லுற?” சாருவிடமும் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.
சுதுமெனிகேயிடம் பொய் சொல்ல அவளால் முடியவில்லை. பொய் சொல்வதால் அவளை மேலும் ஏமாற்றுவது போல் ஆகி விடாதா? என்று நினைத்தவள் ஆரம்பத்திலிருந்து என்ன நடந்தது லஹிரு எவ்வாறெல்லாம் நடந்து கொண்டான். எப்படி எல்லாம் பேசினான் என்பதை கூறியவள், லஹிரு அவள் மனம் நோகக் கூடாதென்று பொய் கூறியதாக வேறு கூறினாள். சுதுமெனிகே கொஞ்சம் நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“அதான் சொன்னேனே நான் என் மனசையே புரிஞ்சிக்காம பேசிட்டேன்னு” சாரு உண்மையை கூறும் பொழுது லஹிரு அவளை தடுக்கவில்லை. உண்மையை கூற அவளுக்கு முழு உரிமை இருக்கிறது. அப்பத்தா தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிக்கிட்டான்.
தான் அப்பத்தாவின் மனம் நோகக் கூடாதென்று கொஞ்சமாக பொய் கூறியதாக சாரு நினைத்தாலும் சாருவை காதலிப்பது பொய்யல்லவே. அதை அவன் இப்பொழுது சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை. அதை அவன் உணர்த்தினால் தான் உண்டு.
சாரு கூறியவற்றை பொறுமையாக கேட்ட சுதுமெனிகேவுக்கு ஒருவிஷயம் தெளிவாக புரிந்தது. பேரன் கூறியது பொய்யல்ல தன் மனதை புரிந்துகொள்ளாமல் நடந்து கொண்டான் என்று ஏற்றுக் கொண்டாள். அதே போல் சாரு தன்னையறியாமல் அவனுக்காக வக்காலத்து வாங்குகிறாள் அவள் இன்னும் தன் மனதையறியாமல் இருக்கின்றாள். லஹிரு கூறியது போல் அவளுக்கு கால அவகாசம் தேவை என்பதையும் புரிந்து கொண்டாள். 
லஹிரு சேர்ந்து வாழும் மனநிலையில் இருக்கின்றான். சாரு என்ன முடிவில் இருக்கின்றாள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?      
“சரி இப்போ என்ன முடிவு பண்ணி இருக்க?”
“என்ன பாட்டி?” சாரு முழிக்க,
“உன் கிட்டாதான் கேக்குறேன். என்ன முடிவு பண்ணி இருக்க? இவன் கூட சேர்ந்து வாழுரியா? இல்லையா?” கோபமாகவே சுதுமெனிகே கேட்க அரண்டாள் சாரு. 
உண்மையிலயே சுதுமெனிகேவுக்கு அவள் மீண்டும் கேட்டதில் கோபம் வரவில்லை. இப்படி இருக்கிறாளே என்று எண்ணுகையில் தான் கோபம் வந்து கத்தி இருந்தாள்.
ஒருவேளை லஹிருவுக்கு இவளை பிடிக்கவில்லையென்றால் பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலையல்லவா உருவாகி இருக்கும். இப்படி இருந்தால் எப்படி குடும்பம் நடாத்துவது என்ற கோபம்தான். இப்படி இருக்கும் பெண்ணை ஏமாற்றித்தான் கணவன் வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்வார்கள். காலம் கடந்து அழுது கரைந்து என்ன பிரயோஜனம்? ஆரம்பத்திலையே சுதாரித்துக்கொள்ள வேண்டாமா என்ற கோபம். அவள் வாழ்க்கையின் அனுபவமும் சேர்ந்துகொள்ள மொத்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அது இருந்தது.  
என்ன முடிவு எடுப்பது என்ற ஒரு நொடி குழம்பினாள் சாரு. அவள் இங்கு வந்தது வட்டிப் பணத்தை கழிக்க வேலைக்கும், தந்தையை தேடியும். தந்தையை பார்த்தாயிற்று. அவருமே அவளை மகளாக ஏற்றுக் கொண்டு விட்டார். பணத்தைக் கொடுக்காமல் அவள் எப்படி திரும்பி செல்வது. லஹிருதான் விடுவானா?
பணத்தை பற்றி மட்டுமே யோசித்தாளே ஒழிய லஹிரு கூறியதில் கொஞ்சமாலும் உண்மை இருக்குமா என்று யோசிக்க தவறினாள். 
“இவளை இன்னும் நீ இந்த வீட்டு வேலைக்காரியாதான் பாக்குறியா?” பேரனின் மீது சீறிப் பாய்ந்தாள் சுதுமெனிகே.
“நான் அவளை கல்யாணம் பண்ண பிறகு என் மனைவியாதான் பார்த்தேன்” சாருவை பார்த்தவாறே கூறினான் லஹிரு.
தந்தை வந்த பின் உண்மைகளை அறிந்து கொண்டதன் பின் தான் அவன் அவளோடு சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பான் என்று எண்ணி அவனை முறைத்தாள் சாரு.
“அப்போ வட்டிப் பணம்”
“அது என் மனைவிக்காக நான் கொடுத்த பணம். அத அவள் எனக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றான்.
“இல்ல நான்…” சாரு எதோ சொல்ல முனைய
“நீ இன்னும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. மருமக. எது பேசினாலும், அத தலைல வச்சி பேசு. புரிஞ்சுதா” அவளை பேச விடாது தடுத்தான் லஹிரு.
“இல்ல பாட்டி…” அவனை கண்டு கொள்ளாது மீண்டும் ஆரம்பிக்க,
“நான் சொல்ல நினச்சத்தைதான் அவன் சொன்னான்” என்று சுதுமெனிகே கடைவாய் ஓரம் புன்னகையை மறைத்தவாறே கூற, சாரு பெருமூச்சோடு அமைதியானாள்.
“நான் செத்துக்கித்து போய்ட்டேனா ரெண்டு பேரும் பிரிஞ்சி போயிட மாட்டீங்கல்ல”
“ஐயோ பாட்டி” பதறினாள் சாரு.
“சரி சரி போய் புள்ள குட்டி பெக்குற வழிய பாருங்க. நான் கண் மூடுறதுக்கு முன்னால கொள்ளுப்பேரன், பேத்தியை பார்க்க வேணாமா?’
“பாட்டி அடுத்த வாரம் தீபாவளி வருது. அத்த ஊருக்கு வர சொன்னாங்க. நான் போயிட்டு வரட்டுமா?” லஹிருவோடு சேர்ந்து வாழணுமா? வேண்டாமா? என்று அவளுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. அதனாலயே ஊருக்கு செல்ல அனுமதி கேட்டாள். 
“சரி போயிட்டு வாங்க. அப்பா லஹிரு போகும் போது நம்ம தோட்டத்துல விளைஞ்சதை எடுத்துட்டு போ”
“இவன் கூடயா?” அதிர்ந்தவள் “பாட்டி நம்ம வீட்டுல இவர் எப்படி இருப்பாரு. நான் மட்டும் போயிட்டு வரேன்” என்றாள்.
“உன்ன கல்யாணம் பண்ணா. உன் கூடத்தான் குடும்பம் நடத்தணும். அப்போ உன் வீட்டுக்குத்தான் போயிட்டு வரணும். என்ன பேசுற? அவன் வருவான். நீ கூட்டிட்டு போற. அவனுக்கு பிடிக்கல. சகிக்கல என்று ஏதாவது சொன்னானா துரத்தியனுப்பு. இப்போ கிளம்புங்க” அவர்களை அறையை விட்டு கிளம்பினாள்.

Advertisement