Advertisement

அத்தியாயம் 20
அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஜோஷியரிடம் சென்று மீண்டும் சாரு மற்றும் லஹிருவின் ஜாதகங்களை கணித்து அவர்களின் வாழ்க்கையில் எந்த மரண கண்டமும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சுதுமெனிகே நிம்மதியாக வீட்டுக்கு வந்தாள்.
இந்த இரண்டு நாளும் வீட்டிலும் சாருவிடமும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது.
வளமை போல் அவள் லஹிருவை கண்டுகொள்ளவே இல்லை தந்தையோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவனும் அதை பெரிதுபடுத்தவில்லை. பிறந்ததிலிருந்தே தந்தையின் பாசத்தை அனுபவித்திராதவள் தந்தையை கண்டதில் அவ்வாறு நடந்துகொள்வதாக நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்.
ஜீவகயின் கால் கொஞ்சம் சரியாகி இருக்க, தோட்டத்தில் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகில் இருக்கும் மரத்தில் சாரு மல்லிகை பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள். 
ஜீவக மகளிடம் கவிதா மற்றும் அவனுடைய காதல் கதையையும் அவர்கள் இந்த வீட்டில் சந்தித்துக் கொண்டது முதல் எங்கு எல்லாம் இருந்து பேசினார்கள், என்னவெல்லாம் பேசினார்கள் என்று கூறி மகிழ்ந்தான். 
“உங்க அம்மாக்கு இருந்தது எல்லாமே குட்டி குட்டி ஆசைங்கதான். அவ அப்பா சைக்கிளை திருட்டு தனமா ஓட்டுவாளாம். சைக்கிளை எடுத்துட்டு போனது அவன்கண்ணன் சதீஷ் என்று அப்பா கத்த இவ மெதுவா சைக்கிளை கொண்டு வந்து வைப்பாளாம்.
ஒருநாள் கையும் களவுமா மாட்டிகிட்டு அம்மா அடி பின்னி எடுத்துட்டாங்களாம். அந்த அடி இனி சைக்கிளை தொட கூடாது என்று முடிவெடுக்க வச்சிருச்சாம். ஆனாலும் சந்தர்ப்பம் கிடைச்சா திருட்டு தனமா ஓட்டுவாளாம். இங்க வந்த பிறகு சைக்கிள் ஓட்ட முடியலைன்னு வருத்தப்பட்டா.
ஒருநாள் அவளுக்காக நான் என் பிரெண்டோட சைக்கிளை கொண்டு வந்து கொடுத்தேன் செமயா ஓட்டினா. அதோ அங்கதான். ஆச தீர சுத்தி சுத்தி வந்தா” கண்களுக்கு காட்ச்சி விரிய சிரித்தான் ஜீவக.
தந்தை கைகாட்டியதும் அங்கே தலையை திருப்பி பார்த்த சாருவுக்கு அன்னை அங்கிருந்து கையசைப்பது போல் தோன்றியது.
“மிருகங்கள்ன்னா அவளுக்கு உசுரு. பூனகுட்டி நாய்க்குட்டி என்று எல்லாத்தையும் கைல வச்சிக்கிட்டு கொஞ்சிகிட்டே திரிவா அதுங்களுக்கு இவ எங்க போனாலும் பின்னாடி போகும். இவ சாப்பாட்டு வச்சாத்தான் சாப்பிடும். பருந்து ஒன்னு கோழிக் குஞ்சு தூக்கிகிட்டு போச்சு என்று ஒருநாள் முழுக்க அழுதா. ரொம்ப இளகிய மனம் அவளுக்கு”  
ஜீவக கவிதாவை எவ்வளவு நேசித்திருந்தால் அவளை பற்றி அணுவணுவாக நியாபகத்தில் வைத்திருப்பான் என்று சாருவுக்கு புரிந்தது. அவனின் மறந்து போன நியாபகங்கள் தட்டியெழுப்பப்பட்டதில் அவன் வாயில் கவிதாவை தவிர வேறு எதுவும் வரவில்லை. யாரிடம் என்ன பேசினாலும் கவிதாவை பற்றி மட்டுமே பேசினான். 
அன்றைய நியாபகங்களை ரசனையோடு கூறிக் கொண்டிருக்க, சாருவும் ரசிக்கலானாள்.  
“அம்மா நல்லா சிங்களம் பேசுறாங்களே நீங்கதான் சொல்லி கொடுத்தீங்களா?” “என் சிங்கள குருவே உன் அப்பாதான். நீயும் சிங்களம் கத்துக்கிட்டு அவர் கூட பேசினா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்” என்று கவிதா மகளிடம் கூறியதுதான். இருந்தாலும் தந்தையின் மூலம் கேட்டறித்துக்கொள்வது இன்பத்தைக் கொடுக்கும் என்று கேட்டாள்.
“அவ கூட நான் தமிழ்லதான் பேசுவேன். அவளுக்கு சிங்களம் புரியும். பேசும் போது திணருவா. அத பார்க்கும் போது எனக்கு சிரிப்பா இருக்கும். நான் சிரிச்சா முறைப்பா. சொல்லிக் கொடுக்க சொல்லுவா. ஒரு நாளைக்கு இருபத்தஞ்சி வசனங்களை பாடமாக்க சொல்லுவேன். பத்து சரியா சொல்லுவா. மீதியை மறந்துடுவா” என்றவன் சிரித்தான்.
“ஓஹ்… ஒஹ்… அதையே தான் என்கிட்டயும் ட்ரை பண்ணாங்க” சாருவும் சிரித்தாள்.
சின்ன வயதில் தனக்கு எவ்வாறெல்லாம் பாடம் எடுத்தாள் போதாததற்கு தன்னை சிங்கள ஆசிரியை ஒருவரிடம் வாரம் ஒருநாள் மாலை வகுப்புக்கு அழைத்து சென்று வந்ததையும் கூறினாள்   
“அவ நல்லா பாடுவா. தனியா இருக்கும் போது பாடி நான் கேட்டிருக்கேன். அப்பொறம் நமக்கு கல்யாணம் ஆனா பிறகு பாட சொல்லி கேப்பேன்”
“நிஜமாவா? அம்மா பாடி நான் கேட்டதே இல்ல” தந்தையை எண்ணி அன்னை எந்த மாதிரியான மனநிலையில் இருந்தாள் என்று நினைத்து சோகமான குரலில் சொன்னாள் சாரு.
“அவ பாடுறத நான் ரெக்காட் பண்ணி வச்சிருந்தேன். உங்க அம்மா ஊருக்கு போகும் போது கொண்டு போய் இருந்தா நீ கேட்டிருப்ப. கொழும்புல நாம தங்கி இருந்த வீட்டுல விட்டிட்டு போய் இருந்தா அதெல்லாம் இப்போ எங்க அங்க இருக்கப் போகுது” அந்த கால நினைவுகளுடன் பேசினான் ஜீவக.
செனுரியும் உவிந்துவும் அவர்களை நெருங்கி இருக்க, “அப்பாக்கு அவரோட மூத்த பொண்ணு கிடைச்சதும் நம்மள மறந்துட்டாரு” முகத்தை சுருக்கியவாறு கூறினாள் செனுரி.
ஒரே மகளாக இருந்தவள் திடிரென்று இரண்டாவது மகள் எனறானதை விட தந்தை சாருவின் மீது அதிக பாசத்தை காட்டுவது பொறாமை கலந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்க, அனைவரின் மீதும் எரிந்து விழலானாள்.
“உனக்கு எப்படியோ எனக்கு அக்கா கிடைச்சதுல ரொம்பவே சந்தோசம்” என்றான் உவிந்து. அவனுக்கு செனுரியை சீண்ட இருந்தால் வேறு எதுவும் வேண்டாம் போலும்.
அன்னை இல்லாமல் இருக்க முடியாது என்று செனுரி அடம்பிடித்தாள். “சரி நீ அம்மாவோடு கிளம்பி சென்று விடு. ஆனால் அப்பாவையும் தம்பியையும் மறந்து விடு” என்று ஜீவக கூற, தான் தந்தையோடு இருந்தால் தான் இங்கு நடப்பதை அன்னைக்கு கூற முடியும் என்று அமைதியானாள்.
“நீ இங்கயே இருடா தம்பி. நான் உன்ன பாத்துக்கிறேன்” சாரு கூற
“அப்பா நாம எப்போ மீண்டும் அமேரிக்கா போறோம்” என்று அக்காவை முறைத்தவாறே கேட்டாள் செனுரி
ஏற்கனவே தான் ஆசைப்பட்ட லஹிருவை இவள் திருமணம் செய்து கொண்டாள். தனக்கு அக்காவாகி தன் மீது பாசம் வைத்த அப்பாவையே பறிக்கப் பார்க்கின்றாள் என்ற கோபமும் சேர்ந்திருந்தது.
“இனிமேல் நான் அமெரிக்கா போறதாக இல்ல. இங்கயே ஏதாச்சும் தொழில் செய்யலாம் என்று இருக்கேன்”
“என்ன சொல்லுறீங்க? அங்க அவ்வளவு சொத்தையும் விட்டுட்டு நீங்க எதுக்கு இங்க தொழில் செய்யணும்?”
“அதெல்லாம் உன் அம்மா சொத்து. திரும்ப சொல்லுறேன். உனக்கு உன் அம்மாவும், அவ சொத்தும் தான் வேணும் என்றா நீ தாராளமாக கிளம்பி போகலாம். என்னால உவிந்துவ படிக்க வைக்க முடியும்” அழுத்தம் திருத்தமாக சொன்னான் ஜீவக.  
“அப்பா…” கோபமாக உள்ளே சென்றாள் செனுரி.
“அவ அப்படித்தான். பொறாமை புடிச்சவ” உவிந்து சிரிக்க
“உவிந்து” மகனை அதட்டினான் தந்தை.
சாரு அமைதியாக பார்த்திருந்தாளே ஒழிய சட்டென்று அவர்களின் பேச்சில் இணைய முடியவில்லை. தான் கருத்து சொல்வது அறிவுரை போல் ஆகிவிடுமோ என்று அமைதியாக நின்றிருந்தாள். 
அடுத்து ஜீவக கவிதாவை அடக்கம் செய்திருக்கும் இடத்துக்கு போக வேண்டும் என்றான்.
கவிதாவை நுவரெலியாவில் அடக்கம் செய்திருப்பதால் ஞாயிறு காலை சாரு லஹிருவோடு ஜீவக நுவரெலியாவை நோக்கி பயணம் செய்ய உவிந்துவும் தானும் வருவதாக வலுக்கட்டாயமாக வண்டியில் ஏறி இருந்தான்.
மலை வாழ் மக்களை அடக்கும் செய்யும் இடத்தில்தான் அவளை அடக்கம் செய்திருந்தார்கள். கையேடு கொண்டு வந்திருந்த மலர் வளையத்தையும் வைத்த ஜீவக கவிதாவுக்கு பிடித்த ரோஜாக்களை வைத்தான். சாரு மெழுகுவர்த்திகளை ஏற்றி வணங்க, அனைவரும் வணங்கி பிராத்தனை செய்தனர்.
அவனுக்கு தனிமை வழங்கி மூவரும் வெளியே காத்திருக்க ஜீவக நீண்ட நேரமாக கவிதாவின் சமாதியின் அருகில் இருந்து பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தான் என்பதை விட மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான் என்றே கூறலாம்.
அவன் சமாதியை விட்டு வரும் வழியை காணோம் என்று லஹிருதான் சென்று மழை வரப்போவதாக அழைத்து வந்தான்.    
புஞ்சி நிலமையின் வீட்டுக்கு செல்ல யாருமே நினைக்க வில்லை. ஆனால் சாருவின் பிறந்த வீட்டுக்கு சென்றனர்.
பஞ்சவர்ணத்தால் தொடர்ந்து புஞ்சி நிலமையின் தோட்டத்தில் வேலைக்கு செல்ல இயலவில்லை. அவள் அங்கு வேலைக்கு சென்றதும், வீட்டுக்கு சென்றதும் ஜீவகயை பற்றி தகவல் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கத்தான்.
சாருவுக்கு திருமணமாகி பெரிய வளவ்வையில் இருக்க, இவள் இந்த வீட்டில் எப்படி வேலை செய்வாள்?
வயித்து பொழைப்புக்காக வேலை செய்வது ஒன்றும் அவளுக்கு பிரச்சினை கிடையாது. ஆனால் மெனிகேயின் குத்தல் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு வேலை செய்யத்தான் முடியுமா? அதுவும் சாருவை பற்றி தவறாக ஏதாவது கூறி விட்டால் பொறுமை காக்கத்தான் முடியுமா என்பதை யோசித்து அங்கு வேலை செய்வதை நிறுத்தி இருந்தாள்.
முத்துவும் “நீ வீட்டுலையே இரு. நான் ஒருத்தன் சாம்பாதிக்கிறது சாப்பாட்டு செலவுக்கு போதாதா? என்று கேட்டிருக்க”
“உனக்கு கல்யாணம் ஆகி குடும்பம் குட்டி என்றான பசங்க ஸ்கூல் செலவு லொட்டு, லொசுக்கு என்று செலவு அதிகமாகிடும், அப்பொறம் உன் பொஞ்சாதிக்கு இந்த கிழவி பாரமாகிடும் உடம்புல தெம்பிருக்குற வரைக்கும் சம்பாதிக்கணும்” என்றவள் ஒரு பங்களாவில் வீட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.
இதை முத்து சாருவிடம் கூறி புலம்ப “அத்த நீ நம்ம கடைக்கு பூ கட்டிக் கொடு. நா ஓனரம்மா கிட்ட பேசுறேன். வெத்தல மடிச்சு கடைகளுக்கு போடு. நம்ம வீட்டுலையே கொடி இருக்கு. மத்ததெல்லாம் வாங்கிக்க, நோட்டு பை செஞ்சி கடைகளுக்கும், தள்ளு வண்டிகளுக்கு கொடு. வீட்டுல இருந்தே பண்ணக் கூடிய வேலை தானே. என்ன பண்ணுவியா?” என்று கேட்டிருக்க, பஞ்சவர்ணத்துக்கும் அது சரி என்று தோன்ற அந்த வேலைகளில் ஈடுபடலானாள்.
இவர்கள் செல்லும் பொழுது அவள் வீட்டில்தான் இருந்தாள். வந்தவர்களை அமர வைக்க இரண்டே இரண்டு பிளாஸ்டிக் இருக்கைகள் மட்டுமே இருக்க, சாரு சட்டென்று பாயை விரித்து உவிந்துவையும் அவளோடு அமர்த்திக் கொண்டாள்.
லஹிருவும் அவள் அருகில் அமர்ந்து கொள்ள ஜீவகயின் கால் வலியால் அவன் மட்டும் கதிரையில் அமர்ந்திருந்தான்.
சாரு அலைபேசி வழியாக தந்தை வந்து விட்டதாகவும். அங்கு நடந்தவைகளை சொல்லி இருக்க பார்த்து பத்திரமாக இருக்கும்படி கூறிய பஞ்சவர்ணம் இன்று ஜீவகயை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாள்.
அவன் இவளை நலம் விசாரிக்க, இவளும் நலம் விசாரிக்க, சிறிது நேரம் பழைய கதைகளை அளவினார்கள்.
“என்ன சாப்பிடுறீங்க?” தங்களது வீட்டில் இவர்கள் சாப்பிடுவார்களா மாட்டார்களா? என்ற தயக்கத்திலையே கேட்ட பஞ்சவர்ணம். “சோடா வாங்கிட்டு வரவா?” கடையில் வாங்கி வந்தால் சாப்பிடுவார்கள் என்று நினைத்து மீண்டும் கேட்டாள்.
கவிதாவை திருமணம் செய்த பொழுது ஜீவக அவர்கள் வீட்டில் அவளோடு அமர்ந்து உண்டவன்தான். அவளும் இல்லை. காலமும் மாறிப் போச்சு. எண்ணங்களும் மாறி இருக்குமோ? பஞ்சவர்ணத்துக்கு ஒரு வித தயக்கம் இருந்தது. ஜீவக கூட பரவாயில்லை. லஹிரு எப்படிப்பட்டவன் என்று தெரியாதே.
“ஒன்னும் வேணாம் அத்த வரும் வழிலதான் சாப்பிட்டு வந்தோம்” மறுக்கும் சிரமத்தை ஆண்களுக்கு கொடுக்காமல் தனதாக்கிக் கொண்டாள் சாரு.
“எனக்கு தண்ணி கொடுங்க” லஹிரு கேட்க “எனக்கும்” என்றான் உவிந்து. “எனக்கு சூடா ஏதாவது கொடுமா” என்றான் ஜீவக. இதை சாருவும் எதிர்பார்க்கவில்லை. பாஞ்சவர்ணமும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் பார்வை மாற்றத்திலையே தெரிந்தது.
“அப்பா டீ சாப்பிடுவீங்களா? இல்ல பிளேன் டீ போட்டுத் தரவா?” கேட்டவாறே சாரு எழுந்து கொண்டாள்.
“பிளேன் டீயே கொடுமா…” என்று ஜீவக கூற சாரு உள்ளே சென்றாள்.
“சாரு மதியம் சமைச்சிடுறேனே சாப்பிட்டு போங்களேன்” பஞ்சவர்ணம் கெஞ்சாத குறையாக சொல்ல
“எதுக்கு சிரமம். நேரமும் இல்லையே வேற ஒருநாள் வரோம்” என்றாள் சாரு.
எதோ வீட்டுக்கு வந்ததற்காக தண்ணீரும், தேநீரும் கேட்டார்கள் அதற்காக சாப்பிடுவார்களா?  இந்த அத்தை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாள் என்று பொறுமியவாறே தண்ணீர் எடுத்து சென்று லஹிருவுக்கும், உவிந்துவுக்கும் கொடுத்தாள். 
சாருவின் பேச்சையும் கேளாமல் பலகாரம், கை முறுக்கு எல்லாவற்றையும் ஒரு தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்தாள் பஞ்சவர்ணம்.  
அவள் “எடுத்துக்கோங்க” என்று சொல்லும் வரைக்கும் யாரும் காத்துக் கொண்டு நிற்கவில்லை. உவிந்து முந்திக்கொண்டு அள்ளிக்கொள்ள, லஹிரு மாமனுக்கு நீட்டி விட்டு தானும் எடுத்துக் கொண்டான்.
“வீட்டில் செஞ்சதுதான் அடுத்த வாரம் தீபாவளி வருதில்ல. முறைப்படி வந்து சாருவை அழைக்கலாம்னு இருந்தேன்”
அழைப்பது முறைதான். ஆனால் லஹிரு இந்த வீட்டில் வந்து தங்கவெல்லாம் மாட்டான் என்று தெரியும். அதனாலயே அங்கு செல்ல வேண்டாம் என்று முடிவோடு இருந்தவள் வந்தவர்களிடம் இப்பொழுது ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாமே என்று கூறினாள். இதோ இப்பொழுது வந்தது போல் நேரம் கிடைத்தால் வந்து விட்டாவது செல்வார்களல்லவா.    
“ஆமா சித்தி சாருவை கூட்டிட்டு போக சொல்லி அப்பத்தா சொன்னாங்க. இன்னக்கி மாமா கூட வந்ததால வெறுங்கையோட வந்துட்டோம். மன்னிச்சிடுங்க” என்றான் லஹிரு.
“ஐயோ என்ன மாப்புள நீங்க” அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியானாள்.
சின்ன வீடு என்பதால் இவர்களின் உரையாடல் சாருவின் காதில் தெளிவாக விழுந்தது. “அட நம்ம ராங்கி அத்தைய ஒரேயடியா ஆப் பண்ணிட்டானே” தந்தைக்கு தேநீரை கொண்டு வந்து கொடுத்தவள் தானும் அருந்தலானாள்.
“கவிதாவோட போட்டோஸ் பொருட்கள் ஏதாவது இருக்கா?” மெதுவாக கேட்டான் ஜீவக.
“மாமா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்” லஹிரு கிண்டல் செய்ய
“இருக்கு எடுத்து தரேன்” என்றவள் “சாப்பிட்டுட்டு போறீங்களா?” ஒருவாறு பஞ்சவர்ணம் கேட்டு விட்டாள்.
“நமக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலையா இருக்கு? நீங்க சமைங்க சித்தி. நாங்க சாப்பிட்டுட்டே போறோம்” என்றான் லஹிரு.
“செம பசில இருந்தேன். அது வரைக்கும் முறுக்கு சாப்பிடுறேன்” என்ற உவிந்து தட்டை கையில் எடுத்துக் கொண்டான்.
சாரு கணவனை விசித்திரமாக பார்க்க அவளை இவன் கண்டுகொள்ளாது “ஏதாவது வாங்கிட்டு வரணுமா சொல்லுங்க வாங்கிட்டு வரேன்” என்றான்.
“ஒன்னும் வேணாம் நான் கடைக்கு போறேன். அத்த காசு கொடு” என்றாள் சாரு.
“முதல்ல வந்து அந்த பெட்டியை அப்பாக்கு எடுத்துக் கொடு” இருவரும் சேர்ந்து கவிதாவின் பொருட்கள் இருந்த பெட்டியை எடுத்துக் கொடுக்க ஜீவக அதனுடன் ஐக்கியமானான்.
என்ன சமைப்பது என்று பஞ்சவர்ணம் சாருவிடம் கேட்டு அவளிடம் காசு கொடுக்க அவள் கடைக்கு சென்றாள்.
உவிந்து கைநிறைய முறுக்கை வேறு வைத்துக்கொண்டு மெண்டு கொண்டே வர “உன்ன போய் கூட்டிகிட்டு வந்தேன் பாரு” அவன் தலையை தடவி விட்டு சாருவின் பின்னால் நடந்தான் லஹிரு. அவளுக்கு வேண்டுமானால் இது பழக்கப்பட்ட பாதையாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு அவளை தனியாக அனுப்ப மனம் வரவில்லை.
காலனி இருக்கும் மண்பாதையை கடந்தால் மலைக்கு செல்லும் பாதையும். நகரத்துக்கு செல்லும் பாதையும் வரும். அங்குதான் லஹிருவின் வண்டியையும் நிறுத்தி வைத்திருந்தான். 
இவள் வழமையாக காய்கறிகள் எங்கு வாங்குவாள் என்று தெரியாது. நகரத்துக்கு சென்று வாங்குவதாக இருந்தால் பஸ்ஸில் வேறு செல்ல வேண்டும். பஸ்ஸில் செல்வது என்றால் வண்டியிலையே செல்லலாமே என்றுதான் இவன் கூடவே வந்திருந்தான். 
“என்ன சாரு வந்த உடனே எங்க போற?” காலனியில் உள்ள வயதானவர்கள் சிலர் விசாரிக்க, கடைக்கு போறதாக கூறினாள். இவள்.
“உன் புருஷனுக்கு உன்ன கடைக்கு அனுப்பப் கூட பயமா இருக்கா? பின்னாலையே வராரு” என்று கிண்டல் செய்ய திரும்பிப் பார்த்தவள் லஹிருவை முறைத்தாள்.
பகல் பொழுதில் காலனியில் வயதானவர் மற்றும் குழந்தைகளை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்தவாறுதான் இருப்பார்கள்.
“கைய பிடிச்சி கூட்டிகிட்டு போங்க” ஒவ்வொருவராக ஏதாவது ஒன்றை சொல்ல இவனும் பதில் பேசியவாறு நடந்தான்.
காலனியிலிருந்து வண்டி இருக்கும் இடத்துக்கு ஐந்து மீட்டர் கூட இல்லை. அங்கிருந்து மலையிறங்கியவள் நகரத்துக்கு செல்லும் பக்கம் செல்லாமல் இடது பக்கம் நடந்தாள்.
“இந்த பக்கம் எங்கே போகிறாள்?” என்று லஹிரு யோசிக்க பாதை மாறியவள் வேகமாக நடக்கலானாள். ஐந்து நிமிடங்களில் அடுத்த மலையின் தொடக்கத்தில் சில கடைகள் தென்பட்டன.
சாரு கோழிக் கடையின் பக்கம் செல்ல “நான் கோழி எல்லாம் சாப்பிட மாட்டேன்” என்றான் லஹிரு.
அவனை முறைத்தவள் “நான் வந்தது எங்க அப்பாக்கு கறி வாங்க” என்றாள். 
“உங்க அப்பாக்கு கால் பிசகி மருந்து சாப்பிடுறாரே மறந்து போச்சா?”
என்ன வாங்குறது என்று இவள் யோசிக்க “அக்கா மீன் வாங்கு” என்றான் உவிந்து. அதையும் இவன்தான் கூறி இருந்தான். தனக்கு சம்பந்தமே இல்லை என்பது போல் அமைதியாக நின்றிருக்க, சாரு மீன் வாங்கிக் கொண்டு மரக்கறி கடையின் பக்கம் சென்றாள்.
கத்தரிக்காய் அவள் வளர்த்த செடியிலையே காய்த்திருக்க, அவள் வரும் பொழுது பஞ்சவர்ணம் பிய்த்துக் கொண்டிருந்தாள். வாழை பூ வாங்கலாம் அவியல் பண்ணிடலாம். பருப்பு கறி சமைச்சிடலாம். பருப்பும், தேங்காயும், தக்காளி, வெங்காயம், பச்சை மொளகா என எல்லாவற்றையும் வாங்கியவள் வேறு ஏதாவது விடு பட்டு விட்டதா என பார்த்தாள்.  
லஹிரு அவள் பொருட்கள் வாங்கிய அழகைத்தான் பார்த்திருந்தான். கொண்டு வந்த காசுக்கு தேவையான  பொருட்களை மட்டும் தேவையான அளவுதான் வாங்கினாள்.
கண்ணில் பட்ட எதையும் அவள் வாங்க வில்லை. சிக்கனமாக செலவு செய்தாள். சமையலுக்கு இவ்வாறு செலவழிப்பவள் நிச்சயமாக எந்த ஒரு செலவையும் ஆடம்பரமாக செலவு செய்ய மாட்டாள். தான் அவளை வீணாக சந்தேகப்பட்டு விட்டோம் என்பதை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன் வீட்டுக்கு சென்ற உடனே அவளோடு பேசி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
தேவையானதை வாங்கியவள் வீடு திரும்ப இவர்களும் அவள் பின்னால் நடந்தனர்.
“இங்க கொடு” பையை லஹிரு வாங்கிக்கொள்ள
“அவ்வளவு பாரமா இல்ல. நான் தூக்கிட்டு வரேன்” என்றாள்.
“பாரமில்ல என்று எனக்கும் தெரியும். பாக்குறவங்க பொண்டாட்டிய வேலை வாங்குறான்னு என்னதான் தப்பா பேசுவாங்க”  பையை வாங்க இவன் ஒரு காரணம் கூற,
“அப்போ உண்மையாலும் எனக்கு உதவ இவன் பையை எடுக்கலையா? மத்தவங்களுக்காகத்தான் எடுத்தானா?” முறைத்தவள் வேகமாக வீட்டுக்கு நடந்தாள்.
“எங்கடி கடைக்கு போனவ பைய மறந்து வச்சிட்டு வந்தியா?” பஞ்சவர்ணம் கேலி செய்யும் போதே பையோடு உள்ளே வந்தான் லஹிரு.
அவனை பையோடு பார்த்ததும் சாருவை பார்த்து புன்னகைத்த பஞ்சவர்ணம் கண்களையே அருமையான புருஷன் என்றாள்.
சாருவால் அத்தையை முறைக்க முடியவில்லை. கணவனை நடிப்பதாக மனதுக்குள் வசைபாடினாள்.
பையை பஞ்சவர்ணத்தின் கையில் கொடுத்தவன் அந்த வீட்டையும், இடத்தையும்தான் ஆராய்ந்தான்.
இவள் இந்த வீட்டில் தான் வளர்ந்தாள் என்று நினைக்கும் பொழுது அதற்கு தனது தந்தையும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி லஹிருவுக்கு வந்தது.
அப்பத்தா சொல்வது போல் நடந்தது எதையும் மாற்ற முடியாது. நடப்பவைகளைத்தான் நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதனால் நடந்து முடிந்ததை பற்றி நினைத்து வருந்தத்தக்க கூடாது என்று முடிவு செய்தான். அது அன்று நடந்ததையும், சமீபத்தில் நடந்தவைகளை சேர்த்துதான் சொல்லிக் கொண்டான்.
வெளியே வந்தவன் மலையையும் தான் பார்த்த காலனி சூழலையும் மீண்டும் பார்த்தான். இந்த காலனி தனது சித்தப்பாவின் தோட்டத்துக்குத்தான் சொந்தம். அவர் நினைத்தால் இவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்க முடியும். தனியாக கூட வேண்டாம். அரசாங்கத்திடம் உதவியை நாடி பாதியை செலவளித்திருக்கலாம். பாதையும் கிடைத்திருக்கும்.
இவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள். அவரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். அவரிடம் இதை பற்றி பேச வேண்டும். பேசி தன்னால் ஆனா உதவியை செய்ய வேண்டும் என்று எண்ணினான் லஹிரு
மதிய உணவு தயாராகி இருந்தது. வாழை பூ அவியல். பருப்பு கறி. மீன் கறி. கத்தரிக்காய் பொறித்து கறி. பாவக்காய் சம்பல் கூடவே பஞ்சவர்ணம் ரசம் வைத்திருந்தாள்.
சாப்பாட்டில் பெரிதாக வித்தியாசம் இல்லை. சாருவுக்கு லஹிரு என்ன சாப்பிடுவான் என்று தெரியும். இந்த கொஞ்சம் நாளில் தந்தைக்கு என்ன பிடிக்கும் என்றும் தெரிந்து விட்டது. அதனால் சமைப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
 ரசித்து ருசித்து உண்டவர்கள் ரசத்தை ஆகா ஓஹோ என்று புகுந்தார்கள். லஹிருவும், ஜீவகையும் சொன்ன ஒரே விஷயம். காலேஜில் நண்பர்களின் வீட்டுக்கு போனால் இவ்வாறான உணவுகள் கிடைக்கும் இப்பொழுது ஹோட்டல்களில் கிடைத்தாலும் வீட்டு சாப்பாடு போல் ருசியாக இருப்பதில்லை என்றுதான்.  
“ஏன் சாரு ரசம் எல்லாம் வச்சு கொடுக்க மாட்டியா?”
“இனிமேல் கொடுப்பா. இல்ல சாரு” மனைவியை விட்டுக் கொடுக்காம பேசினான். லஹிரு. 
இங்க வந்தும் நடிக்கணுமா என்று சாரு கணவனை முறைக்க, “முத்துவுக்கு எப்போ கல்யாணம் வைக்க போறீங்க சித்தி” லஹிரு பஞ்சவர்ணத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.
“வரும் தைல வைக்கணும்”
“தைனா ஜனவரிதானே. சிறப்பா செஞ்சிடலாம்”
“என்ன இவன் அசால்ட்டா சொல்லுறான். இவன் கல்யாணத்த ஒரு வாரத்துல பண்ணா மாதிரி என்று நினச்சிட்டானா?” அவளுக்கும் அவனுக்குத்தான் திருமணம் நடந்தது. அவனுக்கு வேறு யாருனுடனோ திருமணம் நிகழ்ந்தது போல் பொறுமியவள் “வான்மதி வீட்டுல எவ்வளவு செலவு இருக்கு. அதெல்லாம் இவனுக்கு எங்க தெரிய போகிறது?” இத்தனை நாளாக லஹிரு இவளை முறைத்துக் கொண்டு திரிய இனி இவள் அவனை முறைக்கலானாள்.
முத்து வரும் வரைக்கும் அவர்களால் அங்கு தாமதிக்க இயலவில்லை. மதிய உணவை உண்ட உடனே ஊரை பார்த்து கிளம்பி இருந்தனர். வீட்டில் காத்திருக்கும் அடுத்த பிரச்சினை என்னவென்று அறியாமல்.

Advertisement