Advertisement

அத்தியாயம் 2
கார் கண்ணாடியில் கல்லுப்பு பட்டு தெரித்ததும் சாரு வெலவெலத்துப் போனாள். ஆறாயிரம் ரூபாயிற்கே இந்த ஓட்டம் ஓடி வந்தவள் விலை உயர்ந்த கார் கண்ணாடியை வாங்க பணத்துக்கு எங்கே போவாள்?
காரிலிருந்தவன் இறங்கி கல் பட்டதால் கண்ணாடியில் ஏற்பட்ட கீறலை பார்த்து விட்டு  அவளை பார்த்தான்.
அச்சத்தில் அகன்ற அவள் விழிகளை பார்த்தவனுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தாலும் யார் இவள் என்ற ஆராய்ச்சி பார்வைதான் அவனுள் இருந்தது.
அந்த விழிகளை இவன் இதற்கு முன் எங்கேயோ பார்த்த நியாபகம் அவனுள் வந்து போக அதற்குள் அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவளை முறைத்தவாறு அவள் அருகே வந்தவனை “யோவ் கண்ணு தெரியலையா? எங்க பார்த்து வண்டி ஓட்டுற? உன்னால பாரு திருடன் மிஸ் ஆகிட்டான். போச்சு, போச்சு, என் எட்டாயிரம் ரூபா ரோஜா பூ போச்சு. ஓனரம்மா என் சம்பளத்துல கைவைக்க போறாங்க. ஐயோ அத வச்சி தானே கரண்ட் பில் கட்டணும், வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கணும். என்னெல்லாம் பண்ணனும்னு இருந்தேன். உன்னால எல்லாம் போச்சு” அவன் திட்ட முன் இவள் ஆரம்பிக்க அதிர்ந்து நின்றான் நம்ம லஹிரு.
எப்பொழுதும் எதிரியை புத்தி சாதுரியத்தால் வீழ்த்த முடியும் என்பது சாரு கற்ற பாடம். அதனாலே அவன் பேச முன் இவள் பேசி இருந்தாள்.
படபட பட்டாசாக அவள் பேசும் அழகை ஒரு நொடி ஒன்று லஹிரு ரசிக்கவில்லை. இது போன்றவர்களை அவன் வாழ்க்கையில் ஏராளம் சந்தித்திருப்பான் போலும் தோளை குலுக்கியவாறே “இங்க பாரு நான் குறுக்கால வரல நீதான் குறுக்கால வந்து கள்ள விட்டு அடிச்சி என் கார் கண்ணாடியை ஒடைச்சிட்ட” சிங்களத்தில் இவன் சொல்ல
“ஆ…” என்றாள் இவள். இவளுக்கு சிங்கள மொழி தெரியாதாம். அதற்கு தான் இந்த ஆ…
இதுதான் அடுத்த ஆயுதம். காரை விட்டு இறங்கும் பொழுதே அவன் சிங்களத்தில் “என்ன இது” என்று கேட்டிருக்க, அவனா நீயி. இருடா… என்று கருவியவாறே தான் தமிழில் ஆரம்பித்தாள்.
அவனுக்கு தமிழ் தெரியாது. பாஷை தெரியாமல் தடுமாறுவான். இவள் சொல்வது புரியாமல் திண்டாடி கிளம்பிச் சென்று விடுவான் என்று இவள் எதிர் பார்க்க, இவள் என்னெவெல்லாம் பேசினாளோ அதிலிருந்து அவனுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டவன் சிங்களத்தில் பதில் சொல்லி இருக்க, சாரு சிங்களம் தெரியாதது போல் நடித்து இடத்தை காலி செய்ய திட்டமிட்டாள். சாரு சின்ன வயதிலையே மொழியை கொண்டு பலபேரை ஏமாற்றிய அனுபவத்தினால் சட்டென்று எடுத்த முடிவு. இதெல்லாம் அவளுக்கு சர்வசாதாரணம்.
அணிந்திருந்த துணியை கொண்டு அவள் என்ன வேலை செய்கிறாள்? எப்படிப்பட்ட பெண் என்றெல்லாம் அவனால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவள் நடிக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு பச்சையாக தெரிந்தது.
இவன் அவளை ஆராய அவளும் இவனை ஆராய்ந்தாள். ஜீன்ஸ் டீஷர்ட்டில் கலராக இருந்தவன் இவளுக்கு இளிச்சவாயனாகத்தான் தெரிந்தான். 
அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவன் பார்க்க தமிழ் பெண்ணா? சிங்களப்பெண்ணா? என்று அடையாளம் தெரியாமல் திண்டாடினான். சாருதான் பொட்டு கூட வைத்திருக்கவில்லையே!
“யோவ் என்னய்யா பாக்குற? முன்ன பின்ன பொம்பள புள்ளய பார்த்தது இல்லையா? கண்ணு ரெண்டையும் நொண்டி விடுறேன்” அவன் கண்களை குறிபார்த்து இரண்டு விரல்களையும் குத்துவது போல் கொண்டு செல்ல அவள் கையை பற்றிப் பிடித்துக் கொண்டான் இவன்.
அவள் கையை பற்ற வேண்டும் என்ற எண்ணமோ, அவளை சீண்ட வேண்டுமென்றோ, அவளோடு விளையாட வேண்டுமென்றோ அவன் நினைக்கவில்லை. அம்பியாக இருந்தவள் ஒரே நொடியில் அந்நியனாக மாறியதும் அவனுக்கு இவள் உண்மையிலயே தமிழ் பெண்ணா? இல்லை சிங்களப்பெண்ணா? தன்னிடமிருந்து தப்பிக்க நடிக்கிறாளா? என்ற சந்தேகம் உருவாகவே கையை பிடித்திருந்தான்.
“யோவ் கைய விடுயா… என்னய்யா பண்ணுற?
“என் கண்ணாடியை ஒடச்சல்ல காச கொடு விட்டுடுறேன்”
அவன் கையை பற்றிய அதிர்ச்சியில் தான் மொழி தெரியாமல் நடிக்க வேண்டும் என்பதையே மறந்து “ஒடைக்கல சின்னதா கீறல்தான் விட்டிருக்கு. அதுக்கு எதுக்கு என் கைய பிடிச்சி வம்பு பண்ணுற? கத்தி ஊரக் கூட்டினேன்னு வை. உன் மானம் மரியாதை காத்துல பறந்துடும்” அவன் சிங்களத்தில் பேச இவள் தமிழ்தான் பதில் சொன்னாள்.
“அப்படி வாடி வழிக்கு. சிங்களம் தெரியாதது போல நடிச்ச இல்ல. இப்போ மட்டும் எப்படி புரியுதாம்” அவள் கையை பின் பக்கமாக வளைத்து பிடிக்க அவன் நெஞ்சோடு சாய்ந்து நின்றிருந்தாள் இவள்.
பாதையில் செல்லும் வண்டிகளில் சிலர் இவர்களை பார்த்தவாறு செல்ல, அதையெல்லாம் இவன் கண்டுகொள்ளவே இல்லை. “யோவ் நடுரோட்டுல என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்க? போறவாறவங்க எல்லாம் எங்களைத்தான் பாக்குறாங்க. முதல்ல கைய விடு எதுவான்னாலும் பேசி தீர்த்துக்கலாம்” அவன் நெருக்கம் இவளுக்கு அவஸ்தையாக இருக்க சரணடைந்தாள்.
ஒரு பெண்ணை நடு ரோட்டில் அணைத்துக் கொண்டு நிற்கின்றோம் என்று புரிய அவள் கையை விட்டான். அவன் முறுக்கியத்தில் வலித்த கையை நீவி விட்டவாறே அவனை முறைக்கலானாள் சாரு.
“இப்படித்தான் மொழி தெரியாத மாதிரி நடிச்சி ஏமாத்துவீங்களா? எங்க உன் கூட்டு களவாணி? என் கார் கண்ணாடியை ஒடச்சி வண்டிய நிறுத்தி வழிப்பறி பண்ண பாக்குறீங்களா?” ஓடியவன் இவளுடைய ஆள் என்று இவன் இஷ்டத்துக்கு பேச சாருவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஆமா இவர் வண்டி நிறைய, தங்கமும், வைரமும் கடத்துறாரு, நாங்க கல்லெறிஞ்சி வழிப்பறி பண்ணுறோமாக்கும். நல்லா வாயில வருது. வேணாம்”
“செய்யிறதையும் செஞ்சிட்டு கோபம் வேற வருதா உனக்கு. நட போலீஸ் ஸ்டேஷனுக்கு” மிரட்டினான் லஹிரு.
“ஐயோ இவன் நம்மல விட மாட்டான் போலயே” மனதுக்குள் புலம்பியவள் “சார் சார் என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க சார். அவன் திருட்டுப்பய சார். என் பூங்கொத்த திருடிட்டு போய்ட்டான் சார்” இவள் புரிய வைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஓடிய திருடனை காதை திருக்கியவாறு பிடித்து இழுத்துக் கொண்டு அவனை வசைபாடியவாறு வந்து கொண்டிருந்தாள் வான்மதி.
“இவன துரத்திட்டு போன நீ என்னடி இங்க கடல போட்டுக்கிட்டு இருக்க” தோழியை முறைத்தவாறே திருட்டு பயலின் மண்டையில் ரெண்டு கொட்ட,
தோழிக்கு பதில் சொல்லாமல் “இவன நீ எப்படி புடிச்ச” இவள் ஒரு கேள்வியை கேட்டாள் 
இவர்கள் நடிக்கிறார்களா? நாடகமாடுகிறார்களா? சுவாரஸ்யமாக பார்த்திருந்தான் லஹிரு.
எந்த சந்துல புகுந்து ஓடினாலும் மெயின் ரோட்டுக்கு வந்துதானே ஆகணும். கப்புனு புடிச்சிட்டேன்” என்றாள் வான்மதி.
“ஏன்டா திருடுற? ஸ்கூல் போற வயசுல திருடுறியா?” ஒரு கெட்டவார்த்தையோடு அவனை திட்ட முகம் சுளித்தான் லஹிரு.
“அப்போ ஸ்கூல் முடிச்சிட்டு திருடவா” திருட்டுப்பயல் கேட்க
“என்ன எங்களை பார்த்தா காமடி பிசா தெரியுதா?” அவன் தலையில் கொட்டியவள் அவன் பெயரை கேட்க, “பிரபு” என்றான்.
“சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு பேர பாரேன் பிரபுவாம் பிரபு” கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே அவன் மண்டையில் கொட்ட
“சும்மா சும்மா அடிக்காத அக்கா” கதறினான் பிரபு.
“நான் உனக்கு அக்காவா? திருட்டுபயலே நான் உனக்கு அக்காவா?” அதற்கும் நான்கு கெட்டவார்த்தைகளை உபயோகிக்க லஹிரு காதை குடைந்தான்.
அவன் ஒருவன் அங்கே இருக்கின்றான் என்ற எந்த கூச்சமும் இல்லாமல் பெண்கள் இருவரும், வசைமழையை வாரி வழங்க சின்னப்பையன் அழவே ஆரம்பித்தான்.
“ஏன்டா நாங்களே சோத்துக்கு கஷ்டப்படுறவங்க. எங்க பொளப்புல கைய வைக்கிற. இதோ ஏசி கார்ல போற இந்த மாதிரி மகராசன் கிட்ட உன் கைவரிசையை காட்ட வேண்டியதுதானே” என்று சொல்ல
“புதுஅம்மோ” {buduammo அடிப்பாவி} சத்தமாகவே கூறி இருந்தான் லஹிரு.
கெட்டவார்த்தைகளை சரளமாக பேசும் இவளெல்லாம் ஒரு பெண்ணா என்று பார்த்திருந்தவன். பிரபு அவள் பொருளை திருடியதுதான் குற்றம். இவனிடம் திருடியிருந்தால் குற்றமே இல்லையென்று பேச இவ மனிஷியே இல்ல என்ற எண்ணம் அவன் வாய் திறந்து அந்த வார்த்தையை கக்க வைத்திருந்தது.
அவன் என்ன சொன்னாள் அவளுக்கு என்ன? அவள் ரோஜா செண்டு கிடைத்திருக்க, பிரபுவை திட்டியவாறும், கொட்டியவாறும் வான்மதியுடன் இடத்தை காலி செய்திருந்தாள்.
வளைவில் மறைந்த அவள் உருவத்தை பார்த்திருந்தவனின் உதடுகள் தானாக “யக்ஷணி” {பிசாசு} என முணுமுணுத்தது. “இந்த மாதிரி பொண்ணுங்கள வாழ்க்கைல சந்திக்கவே கூடாது. மீறி சந்திச்சா… மோகினி பிசாசை கண்டது போல திரும்பி பார்க்கமா போய்டுனும் புதுஹாமுதுறவனே…” என்றவன் கார் கண்ணாடியை தடவிப் பார்த்து விட்டு வண்டியை கிளப்பினான்.
நடந்தது ஒரு விபத்தாக இருக்கும் பட்சத்தில் அவளிடம் பணம் வசூலிக்க அவன் நினைக்கவில்லை. சும்மா மிரட்டத்தான் நினைத்தான். அவள் பேசிய பேச்சுக்களால் உன் சங்கார்த்தமே வேணாம் போ என்று முடிவு செய்திருந்தான். பாவம் அவன் அறியவில்லை. அவள் யக்ஷணிதான் என்று.
லஹிரு துஷார வீரசிங்க. வளவ்வே  ஹாமினே {ஜமீன் அம்மா} என அழைக்கப்படும் சுதுமெனிகேவின் மூத்த பேரன். வயது இருப்பத்தி ஆறு. குடும்பத்தாரை தவிர, யாரையும் எளிதில் நம்பாதவன். தான் உண்டு தான் வேலையுண்டு என்று என்று இருந்தாலும், சுற்றிவர என்ன நடக்கிறது என்று கொஞ்சம் அவதானமாகத்தான் இருப்பான். தாய் தந்தையை இழந்த லஹிருவை அப்பத்தாவான சுதுமெனிகே தான் வளர்த்தாள்.
சுதுமெனிகே இளமையில் பேரழகியாக இருந்திருப்பாள். சுது என்பது சிங்களத்தில் வெள்ளை நிறத்தை குறிக்க, அவள் அழகை குறிக்கவே அவளுக்கு அந்த பெயர் கிடைத்திருக்க வேண்டும். வீட்டை மட்டுமல்லாது கணவனோடு சேர்ந்து தொழிலையும் நிர்வாகிக்கும் பெண்மணியாக மாறி இன்று வளவ்வே ஹாமினே என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்றாள்.
கண்டியிலும் நுவரெலியாவில் பல ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் இருக்க நுவரெலியாவில் இருப்பதை சின்ன மகனுக்கும், கண்டியில் இருப்பதை மூத்த மகனுக்கும் கணவன் இருக்கும் பொழுதே எழுதி வைத்திருந்தார்.
அது போக, கோப்பி, மிளகு, மிளகாய், கராம்பு, தென்னை ஏலக்காய் போன்ற தேசிய பயிர்களை எல்லாம் பயிரிடுவார்கள். அவை வீட்டு தேவைக்கும் எஞ்சியதை சொந்தபந்தத்துக்கும் பகிர்ந்து கொடுப்பாள் சுதுமெனிகே.
இந்த அறுவடையில் கிடைத்த பொருட்களையும், செய்த கருப்பட்டி, சில சிற்றுண்டி வகைகளையும் எடுத்து சென்று சித்தப்பாவை பார்த்து விட்டு வருமாறு பேரனை அனுப்பி வைத்திருக்க, லஹிரு நுவரெலியாவுக்கு வந்த போதுதான் சாருவை சந்தித்தான்.
இத்தனை வருடங்களாக வந்து போகிறான். இதே பாதையில்தான் வந்து போகிறான். இதே வலைவில்தான் இவள் கடை இருக்கிறது. இவளும் இருக்கின்றாள். இத்தனை வருடங்கள் நேராத சந்திப்பு இன்றுதான் ஏற்பட்டிருக்கிறது. இது எதனால்? எதையும் அறியாத அவன் புஞ்சி நிலமையின் வீட்டை அடைந்தான்.
அவனை கண்ட சந்தோசத்தில் நலம் விசாரித்த சித்தியும் சித்தப்பாவும் காலை உணவுண்ண அவனை அழைத்து சென்றனர்.
சாப்பிட்டவாறே “ஏன் பா எங்களை பார்க்க அதிகாலையிலையே கிளம்பி வர, மாலையே கிளம்பி போற, ஒரு ரெண்டு நாள் இங்க தங்கினாதான் என்னவாம்” சித்தி குறைபட
“எனக்கும் வேல இருக்கு சித்தி. அது மட்டுமா? அப்பத்தா மட்டும்தான் வீட்டுல தனியா இருக்காங்க. அவங்க கண்டிய விட்டு எங்கயும் போறதுமில்லை. இந்த வயசுலயும் டீ எஸ்டேட்டையெல்லாம் அவங்க தானே நிர்வாகிக்கிறாங்க. அதனாலயே அவங்க வர்றதுமில்லை. அவங்களும் கூட வந்திருந்தா நானும் ரெண்டு நாள் என்ன ஒரு வாரம் கூட தங்கி இருப்பேனே” என்றான் லஹிரு.
என்னதான் அவன் காரணத்தோடு விளக்கம் கொடுத்தாலும், மெனிகேவின் மனம் ஏற்க மறுத்தது. “ஆமா அந்த வீட்டுல புதையல் இருக்குறது போலவும், இந்தம்மா பாம்பு போலவும் காக்குது” மனத்துக்குள்ளே முணுமுத்தாள்.
பௌத்தகோவில் புதையல்களை ராஜநாகம் காப்பதாக பண்டைய காலத்திலிருந்தே நம்பப்பட்டு வருவதால் பழைய வளவ்வகளிலும் புதையல்கள் இருக்கக் கூடும் என்று வதந்திகள் பரவிக் கிடக்க அது உண்மையோ பொய்யோ, மெனிக்கே மாமியாரை பாம்பு என்று சொல்ல உபயோகிப்பாள். அதுவும் ராஜநாகம்.
அது மட்டுமா? லஹிருவின் பெற்றோர் இறக்கும் பொழுது அவனுக்கு எட்டு வயதுதான். அவனை வளர்க்க மெனிக்கே மாமியாரிடம் கேட்ட பொழுது கிழவி கடுமையாக மறுத்து விட, தான் என்ன? கொடுமை செய்யப் போவது போல் மாமியார் இப்படி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டாரே என்று கணவனிடம் புலம்பலானாள் மெனிக்கே.
புஞ்சி நிலமேயும் “அம்மா தனிமையில் இருக்கிறாள். அதனால்தான் மறுக்கிறாள். அண்ணனும் அண்ணியும் இல்லாமல் அவள் மட்டும் வீட்டில் எப்படி தனியாக இருப்பாள்? அவள் மனநிலைமையை புரிந்துகொள்” என்று அறிவுரை செய்ய, மெனிக்கேவிற்கு கோபம்தான் கூடியது. அந்த கோபம் பல வருடங்கள் கடந்தும் மனதுக்குள் இருக்க, அடிக்கடி எதையாவது பேசி தீர்த்துக் கொள்வாள்.
மனதுக்குள் புலம்பியவாறு மெனிக்கே பரிமாற, ஆண்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச, பேச்சு திசை மாறி ஹரிதவின் பக்கம் வந்தது.
“ஹரித எக்ஸாம் முடிஞ்சி ஊருக்கு வரேன்னு சொன்னான். நான் தான் அப்பத்தாவ பார்த்துட்டே வான்னு சொன்னேன். அவன் ஒருத்தன் சொல் பேச்சு கேக்குறதே இல்ல” சித்தப்பா மகனை குறை சொன்னார்.
ஹரித தினெத் வீரசிங்க புஞ்சி நிலமெயின் ஒரே மகன். கடைசி வருடம் காலேஜ் படிக்கின்றான். கண்டி யுனிவர்சிட்டியில் சேரும்படியும், அப்பாத்தாவின் வீட்டிலிருந்து செல்லலாம் என்றும் தந்தை கூறி இருக்க,
“அய்யய்யோ வேற வினையே வேணாம். நான் என்ன படிக்கணும், யார் கூட பழகணும்னு அவங்களே முடிவு பண்ணுவாங்க. என் சுதந்திரம் பறி போய்விடும். நான் கொழும்பு யூனிவர்சிட்டிலயே படிச்சிக்கிறேன். ஹாஸ்டல்லயே தங்கிக்கிறேன்” பிடிவாதம் பிடித்து சாதித்து விட்டான்.
இதை அறிந்த சுதுமெனிக்கே “அம்மாவை போலவே பையன்” என்று ஆடித் தீர்த்து விட. “நான் சொல்லியா? அவன் எல்லாம் செய்கின்றான்” என்று மெனிக்கே கண்ணை கசக்கினாள். 
“ஒத்த புள்ளய பெத்து வச்சிக்கிட்டு அவனை குறை சொல்லுறதே உங்க வேல” சித்தி முறைக்க,
“தம்பி வந்தா நான் பேசுறேன் சித்தப்பா. அவனும் தொழிலை கத்துக்க வேணாமா? விளையாட்டு தனமா இருக்கான். புரிஞ்சிப்பான்” தம்பியை பற்றி அறிந்துவைத்திருந்த லஹிரு கூறினான்.
“நாங்க ரெண்டு பேரும் இங்க தனியா இருக்கோம். அம்மா அங்க தனியா இருக்காங்க. நீயாச்சும் ஒரு கல்யாணத்த பண்ணிக்கோடா. அவங்களுக்கு பேச்சுத் துணையா யாராச்சும் இருக்கட்டும்” என்றார் சித்தப்பா.
 “லஹிருவுக்கு கல்யாண வயசாகிறது தரகரிடம் வரன் பார்க்க சொல்ல வேண்டும். இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது. பொண்ணு பார்த்து வாக்கு கொடுத்த பிறகு எவளாச்சும் இழுத்துட்டு வந்து இவளைத்தான் கட்டுவேன்னு சொல்லக் கூடும். அவனை அனுப்பி வைக்கிறேன். அவன் யாரையாச்சும் விரும்புறானான்னு கேட்டு சொல்லு” என்று அன்னை அலைபேசி வழியாக சின்ன மகனுக்கு உத்தரவு பிறப்பித்திருக்க, அதைத்தான் புஞ்சி நிலமே அமுல்படுத்திக் கொண்டிருந்தார்.
“ஆமா பேசிப்பேசியே அந்த பொண்ண தொரத்திடுவாங்க” முணுமுணுத்தாள் சித்தி.
“கல்யாணமா? எனக்கா? என்ன சித்தப்பா அவசரம்? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என்றான் லஹிரு.
“இல்லடா…  நீ யாரையாச்சும் விரும்பிரியா?” மெதுவாக கேட்க
“ஆமா உங்கம்மா அப்படியே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க” சித்தி சத்தமாகவே சொல்ல லஹிரு சத்தமாகவே சிரித்தான்.
சுதுமெனிகே குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம் என்பதை கட்டிக்காக்க பாடுபடுபவள். கொஞ்சம் பழமை ஊறி இருக்க, மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையில் கொஞ்சம் உரசிக் கொள்ளத்தான் செய்கிறது.
அதற்கு காரணம் லஹிருவின் அன்னையை சுதுமெனிக்கே முறைப்படி பெண் பார்த்து, நல்ல நாள் பார்த்து சாத்திர, சம்பிரதாயத்தின்படிதான் மூத்த மகனுக்கு கட்டி வைத்தாள்.
சின்னமகன் படிக்கும் பொழுது காதலில் விழுந்து கரம் பிடித்ததால் இரண்டாவது மருமகள் பின்வாசல் வழியாக வந்தவள் என்று சுதுமெனிக்கேவே சொல்லுவாள்.
இத்தனைக்கும் மெனிக்கே இவர்களின் ஜாதி பெண்தான். அந்தஸ்துக்கும் குறைவில்லை. வீட்டுக்கும் ஒரே செல்ல மகள் என்று அவள் சொத்துக்கள் எல்லாம் திருமணத்துக்கு பின் இளைய மகனுக்கு வந்து விடும்.
பழைமை, பாராம்பரியத்தில் ஊறிப்போன சுது மெனிக்கேவுக்கு இது என்ன? நம்ம பரம்பரையிலையே யாரும் செய்யாததை இளைய மகன் செய்து விட்டான் என்ற கோபம். அவன் காதலை கடுமையாக எதிர்க்க தூண்டியது. ஆனால் அவள் ஆழ்மனதில் இருந்த காரணம் அவள் மட்டுமே அறிவாள்.       
ஆனால் அவள் கணவன் வீரசிங்க சமயோசித்து மகன் ஆசைப்படி என்று கூறியே திருமணம் செய்து வைத்து சொத்துக்களை கைப்பற்றி இருந்தார்.
அவற்றை விற்று நுவரெலியாவில் தேயிலை தோட்டம் வாங்கி சின்ன மகனை குடியேற்றி பெரிய மகனுக்கும் அதில் பங்கு கொடுத்தார் வீரசிங்க.
இதெல்லாம் பெண்களுக்கு தெரியாது, கேட்டாலும் சொல்ல மாட்டார் வீரசிங்க. அவர் எடுக்கும் முடிவு இறுதி முடிவானதால் யாரும் எதுவும் பேச முடியாது.
நல்லவேளை மாமனார் சொத்துக்களை பிரித்துக் கொடுத்தபின் இறந்து விட்டார். இல்லையென்றால் மாமியார் இந்த ஜென்மத்தில் சொத்துக்களை பிரித்துக் கொடுத்திருக்க போவதில்லையென்று பேசி கணவனிடம் வாங்கிக் கட்டியும் கொள்வாள் மெனிக்கே.
குடும்பத்திலிருக்கும் உட்பூசல் எல்லாம் லஹிருவுக்கும் தெரியும். பெண்களின் விஷயத்தில் அவனோ, ஹரிதவோ, சித்தப்பாவோ தலையிடுவதில்லை.
என்னதான் மாமியார் வில்லி என்றாலும், அவள் அனுப்பும் பொருட்களை இங்கே உள்ளவர்களிடம் காட்டி என் மாமியாரை போல் தங்கமான பெண்மணி இந்த உலகத்திலையே பார்க்க முடியாது என்று மெனிகேயும், ஊருக்கு வந்தால் சுதுமெனிகேவுக்கு காலுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதிலிருந்து, அத்தனை வேலையையும் மெனிகே பார்க்க என் மருமகளை போல் வருவாளா? என்று சுதுமெனிகேயும் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
என்னதான் அவர்கள் வாய் சண்டை போட்டுக்கொண்டாலும் பிறர் முன்னிலையில் அவர்களை போல் ஒற்றுமையான மாமியார் மருமகள் இந்த ஊரிலையே இல்லை என்பது போல் தான் நடந்துகொள்வதை பார்த்து வீட்டு ஆண்கள்தான் விழிபிதுங்கி நிற்பர்.
இவர்கள் ஒருவருக்கு பரிந்து பேசினால் இவர்களுக்குத்தான் திட்டு விழும். அவர்களை புரிந்துகொண்டபின் எதற்குடா வம்பு என்று இவர்களும் கண்டுகொள்வதில்லை.
“இவ ஒருத்தி எப்ப பார்த்தாலும் எங்கம்மாவையே குறை சொல்லிக்கிட்டு” புஞ்சி நிலமே திட்ட
“நான் உங்க அம்மாவ ஒன்னும் சொல்லைங்க. சாத்தற சம்பிரதாயம், நல்ல நேரம்னு பார்த்து தானே இவங்க அம்மாவ உங்க அண்ணனுங்க்கு கட்டி வச்சாங்க. ரெண்டு பேருமே அல்பாயுசுல போகலையா?” லஹிருவின் முகம் மாறுவதையும் கவனிக்காமல் மெனிக்கே தொடர்ந்தாள்.
“என்னமோ நான் குடும்பத்து ஆகாதவன்னே பேசுறாங்க. இத்தனை வருஷமா உங்க கூட குடும்பம் நடாத்துறேனே. குத்துக் கல்லாட்டம் நல்லாதானே இருக்கீங்க”
“வாய மூடு டி. சாப்பிடுற நேரத்துல என்ன பேசுற? போ… போய் கட்ட சாம்பல் எடுத்துட்டு வா” மனைவியை துரத்தினான்.
“இவள் ஒரு கூறுகெட்டவ மகனே நீ சாப்பிடு” மகனின் முக மாற்றை கவனித்து பேசினான் சித்தப்பா.
புருவம் உயர்த்தி பெருமூச்சு விட்டு தன்னிலைக்கு வந்த லஹிருவும் புன்னகைத்து விட்டு சாப்பிடலானான்.
முணுமுணுத்தவாறே சித்தி வந்து சம்பலை வைக்க “சித்தி வீட்டு வேலைக்கு ஆள் வேணும். நல்லா வேலை செய்யக் கூடிய வயசு பொண்ணா இருந்தா நல்லா இருக்கும். வயசானவங்களைக்கொண்டு போய் அவங்களுக்கு உடம்பு முடியாம போனா, அப்பத்தா அவங்கள கவனிக்க ஆரம்பிச்சிடுவாங்க. தமிழ் பெண்ணா இருந்தாலும் பரவாயில்ல நல்ல சிங்களம் பேச கூடியவங்களா பாருங்க” எனோ அதை சொல்லும் பொழுது அந்த யக்ஷணியின் முகம் அவன் கண்முன் வந்து போனதை அவனால் தடுக்கத்தான் முடியவில்லை.
“ஏன்டா… வேலைக்கு இருந்த பொம்பளைங்க எங்க?” சித்தப்பா யோசனையாக கேட்டான்.
“பத்மாவதி ஆச்சி இறந்ததும் பிறகு வீட்டு நிர்வாகம் சரியில்லைன்னு அப்பத்தா புலம்புது. கருணா, மற்றும் நெலும் ரொம்ப வயசாகிட்டாங்க. டிங்கிரி பண்டா தான் இன்னமும் தோட்டத்தை பாத்துக்கிறான். அவனுக்கும் அறுபதுக்கு மேலாகுது.
அப்பத்தா என்னடான்னா ஏன் உன் பையன் வேலைக்கு வர மாட்டானான்னு கேக்குறாங்க. அவன் பையன் ஸ்கூல் டீச்சர். ஏதோ விசுவாசத்துக்கு அவன் இன்னமும் எங்க வீட்டுல வேலைக்கு இருக்கான். இது அப்பத்தாக்கு புரிய மாட்டேங்குது. நானும் வேற தோட்டக்காரன பார்க்கலாம்னு பார்த்தா பண்டா நா செத்த பிறகு பாருங்கன்னு சொல்லுறான். சரி அப்பாதாவ பாத்துக்க ஒரு பொண்ண ஏற்பாடு பண்ணலாம்னு யோசிச்சேன்” என்றான் லஹிரு. 
“நல்லதுதான். நான் பாக்குறேன்” என்றாள் சித்தி. என்னதான் இருந்தாலும் மாமியார் வயசானவங்க ஏதாவது ஆகிவிட்டால் தாங்கள் பார்க்க வில்லை என்ற அவப்பெயரும் சேர்ந்துகொள்ளும், யாரையாவது பார்த்துக்கொள்ள வைப்பது நல்லது என்ற சுயநலமும் மெனிக்கேவுக்கு இருந்தது.
காலை உணவுக்கு பின் சித்தப்பாவோடு தேயிலை தோட்டத்தை பார்வையிட சென்றவன், நிறை குறைகளை அலசி விட்டு மதிய உணவுக்கு வீடு வந்து தம்பி ஹரிதாவோடும் அலைபேசியில் உரையாடினான்.
“அப்போ நான் கிளம்புறேன்” சித்தப்பா என்றவனை “இருடா… இங்க தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளை பறிக்க போய் இருக்காங்க கொண்டு வந்ததும் எடுத்துட்டு போ… அது வரைக்கும் கொஞ்சம் தூங்கு மூணு மணித்தியால பயணம் தானே” என்று சொல்ல கொஞ்சம் கண்ணயர்ந்தான் லஹிரு.
சரியாக நான்கு மணிக்கு தேனிரோடு அவனை சித்தி எழுப்பி இருக்க, ஹெலபவும், தேநீரும் சாப்பிட்டவன் அவர்களிடமிருந்து விடைபெற்று கண்டியை நோக்கி பயணித்தான்.
காலையில் யக்ஷணியை சந்தித்த வளைவில் வண்டியை திருப்பும் பொழுது அவளின் நியாபகம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. தலையை உலுக்கியவாறு வண்டியை செலுத்தியவனுக்கு அடுத்த வளைவில் கூட்டம் கூடி பாதையை அடைத்துக் கொண்டிருக்க, வண்டி நகருமா? நகராதா? என்ற கேள்விதான் எழுந்தது.
சட்டென்று அவன் கார் கதவை திறந்து ஏறி அமர்ந்த சாரு “யோவ் வண்டிய பின்னாடி எடுயா… அவனுங்க கைல மாட்டினேன். நான் செத்தேன்” என்று கூற,
“யக்ஷணி முதல்ல வண்டில இருந்து இறங்கு” என்றான் லஹிரு.

Advertisement