Advertisement

அத்தியாயம் 19
இரவு முழுவதும் நடந்த தொவில் அதிகாலையில் நடந்த பிரச்சினை என்று சூரியன் கூட வந்து விட்டான். வீட்டார் ஒரு பொட்டு தூங்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தனர். 
வீடே அமைதியாக காணப்பட சாரு இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். நடந்த பிரச்சினையிலிருந்து கொஞ்சமாக வெளி வந்த பின்தான் ஜீவகயிக்கு மகளை பற்றிய சிந்தனையே வந்தது. 
தூங்கிக் கொண்டிருக்கும் சாருவின் அருகில் சென்று அவள் தலையை தடவியவாறே கண்ணீர் விட்டவன் “என்ன மன்னிச்சுடு. உன் அம்மா எனக்காக காத்துகிட்டு இருந்திருப்பா. அவள நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். எனக்கு மன்னிப்பே இல்ல. நீ பொறந்தது கூட தெரியாம இருந்துட்டேன் இந்த பாவி.
என் அம்மாவ ஏன் விட்டுட்டு போன? ஏன் ஏமாத்தின என்று நாக்கை பிடுங்குற மாதிரி கேக்காம, கால் பிசகினா என்ன போய் நல்ல கவனிச்சசிகிட்ட என் கவி மாதிரியே இருக்கியே. பெத்த பொண்ண கூட அடையாளம் தெரியாத பாவியா இருந்துட்டேனே. எனக்கு மன்னிப்பே கிடையாது”
புலம்பிக் கொண்டிருக்கும் ஜீவகயை பார்க்கையில் லஹிருவுக்கும் பாவமாக இருந்தது. காதலித்த பாவத்துக்காக காதலை மறந்து காதலியையும் இழந்து, மகள் என்று ஒருத்தி இருப்பதையே தெரியாமல் வேறொரு குடும்பத்தை நடாத்திக் கொண்டிருந்திருக்கிறான்.  
சாருவை மகளாக ஏற்றுக் கொள்வான். கவிதா உயிரோடு இருந்திருந்தால் அனோமாவை விவாகரத்து செய்து விட்டு கவிதாவை மனைவியாக ஏற்றுக்கொண்டிருப்பான்.  இதுவே அனோமா நல்லவளாக இருந்தாள் விவாகரத்து செய்யத்தான் முடியுமா? அனோமா சம்மதிப்பாளா? அவள் தந்தைதான் விடுவாரா? முதலில் சாருவை மகளாக ஏற்றுக்கொள்ள அனோமாவின் தந்தை ஒத்துக் கொள்வாரா? எல்லாம் பிரச்சினைதான். இன்று அவன் உயிருக்கு உயிராக நேசித்த கவிதாவும் உயிரோடு இல்லை. அவன் கூட வாழ்ந்த அனோமாவும் அவனுக்கு உண்மையாக இல்லை.
தன்னுடைய குடும்பமே ஜாதி, மதம் என்ற பாகுபாட்டை பார்பதைனாலையே லஹிரு காதல் என்ற சொல்லை வெறுத்தான். காலேஜில் கூட உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறிக்கொள்பவர்கள் பிரிந்து சென்ற கதைகள் ஏராளம் பார்த்தவன் அவன்.  அப்படியே உண்மையாக நேசித்தாலும் கடைசியில் இருவருடைய சந்தோஷத்துக்காக குடும்பத்தில் உள்ளோர் மனக்கஷ்டத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். அல்லது காதலிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனாலயே காதல் என்ற மாயவளைக்குள் சிக்காமல் பார்த்துக் கொண்டான்.
பெற்றோர்கள் இருந்திருந்தால் ஒருவேளை காதலை பற்றி அவனுடைய சிந்தனை மாறி இருக்குமோ? அப்பத்தா வளர்த்ததால் அவளுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்தான். தான் காதலிக்கும் பெண் அப்பத்தாவுக்கு பிடிக்காமல் போனால் அவள் மனம் நிம்மதி கொள்ளாது என்று காதலை ஒதுக்கினான்.
அதே போல் தன்னை நெருங்கும் பெண்களை விலக்கினான். சாருவின் விஷயத்தில் அவள் பேராசை படுவதாக நினைத்தான். திட்டமிட்டு அவனை அடைந்ததாக நினைத்தான். அதற்கு ஏதுவாகத்தான் அவளும், வான்மதியும் பேசிக் கொண்டார்கள்.
அவனுடைய சந்தேகத்தை தீர்த்துவைக்க வேண்டிய சாருவும் விளக்கம் கொடுக்கவில்லை. சாரு சொல்ல வேண்டாம் என்றதால் சுதுமெனிகேயும் சாரு வளவ்வேக்கு வந்த காரணத்தை கூறவில்லை. கூறி இருந்தால் லஹிருவின் சந்தேகம் என்றோ தீர்ந்திருக்கும். சாரு யார் என்று இன்று அறிந்து கொண்ட பின் அவள் எதற்காக இந்த வீட்டுக்கு வந்தாள் என்று தெரிந்து கொண்ட லஹிருவுக்கு அன்று இருந்த சந்தேகம் இன்று துளி கூட இல்லை. அது என்றோ காணாமல் போய் இருந்தது. அது அவள் மேல் தோன்றிய காதலால் கரைந்தோடி இருந்தது.
அவன் காதலை உணர்ந்து கொண்ட நொடி கூட அவனுக்கு விநோதமாகத்தான் இருந்தது. அன்று அவன் சாருவை முத்தமிட்ட பின் வெகுவாக யோசித்தான்.
அவளை பிடிக்கவில்லை. அவள் தன்னை திருமணம் செய்ததே தனது சொத்தை அடைவதற்காக என்று தான் நினைத்திருக்க, எந்த புள்ளியில் அவள் மீது காதல் கொண்டேன் என்று யோசித்தால் அவளை பார்த்த உடனே பிடித்திருக்க வேண்டும்.
ஆனால் அவள் வாயில் இருந்த சனிதான் முதலில் அவனுக்கு அவளை பற்றி தப்பாக நினைக்க வைத்திருக்க வேண்டும்.  பிடிக்காமல் போக காரணாமாகவும் அமைந்தது. அதை தொடர்ந்து நடந்து எல்லாமே இருவருக்குள்ளும் கசப்பைத்தான் உண்டு பண்ணியது.
அதையும் தாண்டி அவள் தன் மனதுக்குள் புகுந்து விட்டாள். தன்னை ஆட்டிப் படிக்கிறாள் என்பதை உணராமல் இருந்த நான் எவ்வளவு பெரிய முட்டாள்? ஹரித அவளை காதலிப்பானோ, அவள் சதியில் மயங்கி விடுவானோ என்று நினைத்தது எல்லாம் என் மனம் சொன்ன அல்ப காரணங்கள். நான் அவள் மீது காதல் கொண்டு விடக் கூடாது என்றும் அவர்களின் நெருக்கத்தை பார்த்து பொறாமையில் தான் அத்தனையும் பேசி இருக்கிறேன். காதல் விசித்திரமானதுதான். தான் உணர்ந்தது போல் தான் அவளை நேசிப்பது போல் அவளும் தன்னை நேசிக்கிறாளா? அவள் தான் ஒதுங்கியே இருக்கிறாளே? இதில் எழுதி வேறு கொடுத்து விட்டாளே!
அவள் எங்கே எழுதி கொடுத்தாள் நீதானே எழுதி கொடுக்க வைத்தாய் அவன் மனசாட்ச்சி காரி துப்பியது.
“சரி, சரி” அதை அடக்கியவன். என்ன செய்வது? அவளும் தன்னை நேசிக்க வேண்டும். தன்னுடைய காதலை அவள் புரிந்துகொள்ள வேண்டும். உணர வேண்டும் அதை எவ்வாறு அவளுக்கு உணர வைப்பது என்று இவன் யோசிக்க வீட்டில் நடக்கும் அனானுஷ்யமான நிகழ்வுகள் தடையாக இருந்தது.
இனி எல்லாம் சுமூகமாக முடிவடைந்த நிலையில் சாருவுடனான அவன் வாழ்க்கை நிம்மதியாக பயணிக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
சாருவை பார்த்துக்கொள்ளுமாறு ஜீவக வெளியேற அவள் அருகில் வந்தமர்ந்தவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.
அவள் கூந்தலை காதோரமாக ஒதுக்கி விட்டவன் அவளுடனான முதல் சந்திப்பை நினைத்து சிரித்தான்.
“சரியான வாய் டி உனக்கு”
சாரு மெல்ல கண்விழிக்க அவள் கையை பிடித்துக் கொண்டவன் மென்மையாக புன்னகைத்தான்.
“ஏன் அப்பத்தா வீட்டுல இவ்வளவு நடந்திருக்கு. எனக்கு ஒண்ணுமே தெரியல. நான் பாட்டுக்கு செவனேன்னு சாப்பிட்டு தூங்கிகிட்டு இருந்தேனா?” ஹரித சோகமாக கேட்டான்.
“நீ திங்கதான் லாயக்கு. இப்போவாச்சும் உனக்கு புரியுதா?” சுதுமெனிகே அவனை கேலி செய்ய,
“அப்பத்தா உண்மைய சொல்லு. உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல. அதனால் என் கிட்ட சொல்லாம இத்தன திட்டத்தையும் போட்ட இல்ல. இதுல அண்ணனையும் பிரைன் வாஷ் பண்ணிட்ட. சாரு என்னமா நடிக்கிறா. அப்பா…” தன்னையும் வில்லன்களின் லிஸ்டில் சேர்த்திருந்ததையொட்டி கொஞ்சம் கோபம் இருந்தாலும் கேலி செய்தான் ஹரித. 
“உன் கிட்ட சொல்லுறதும் ஒண்ணுதான். ஊருக்கு சொல்லுறதும் ஒண்ணுதான். இத சொன்னா உன் அண்ணன் புரிஞ்சிக்க மாட்டான். அதனாலதான் உன்ன வில்லன் ஆகிட்டேன்” சத்தமாக சிரித்தாள் சுதுமெனிகே.
சுதுமெனிகே சொல்வது உண்மைதான். என்னதான் லஹிரு தம்பிக்கு அனுபவம் போதாது என்று கூறினாலும் குடும்ப விஷயங்களில் அவனை சம்பந்த படுத்தாமல் இருக்க மாட்டான். பெரிய உண்மை விளும்பி போல் எல்லாவற்ருயும் கூறி விடுவான்.
இந்த விஷயத்தில் ஹரித எதையாவது சொதப்பி இருந்தாலோ, அவனது பெற்றோரிடம் உளறி இருந்தாளோ சுதுமெனிகே திட்டமிட்டது எதுவும் நடந்தேறி இருக்காது.
அவள் திட்டமிட்டதை சரியாக நிகழ்த்தி சின்ன மகனுக்கும் சேர்த்தே பாடம் புகட்டி விட்டாளே.
என்ன ஒன்று, யானைக்கும் அடிசறுக்குவது போல் அவள் ஜீவகயை கணிக்கத்தான் தவறினாள்.
“உனக்கு ரொம்பதான் குசும்பு. வா சாருக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம். மயக்கம் போட்டா மாதிரி நடிக்கிறா இல்ல” சிரித்தவாறே லஹிருவின் அறைக்கு சென்றான்.
“அவ நடிக்கலடா உண்மையாலுமே மயக்கம் போட்டுத்தான் விழுந்தா. கடைசியா பேசினது மட்டும் நாம சொல்லிக் கொடுத்தது பேசல. அவளா பேசினா. ஏன் பேசினா என்றுதான் தெரியல” என்ற சுதுமெனிகே சின்ன பேரனோடு நடந்தாள்.
இவர்கள் செல்லும் பொழுது நொண்டியவாறே கலங்கிய கண்களோடு வெளியே வந்து கொண்டிருந்தான் ஜீவக.
“என்னடா உன் மகளை பார்த்தியா?” சுதுமெனிகே கேட்க
“அத்த…” என்றவன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான். 
கவிதாவை திருமணம் செய்திருக்கிறான் என்று அறியும் வரைக்கும் ஜீவகயோடு நல்ல முறையில் தான் பேசினாள் சுதுமெனிகே.
சாருவின் மூலம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டாளோ ஜீவகயின் மீது சுதுமெனிகேவுக்கு வெறுப்பும், கோபமும் சேர்ந்துதான் இருந்தது. அவன் வீட்டுக்கு வந்த பொழுது சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஆனால் இன்று அந்த வெறுப்பும், கோபமும் கரைந்தோடி போய் இருந்தது.
சுதுமெனிகே அவன் தோளில் கைவைக்க, “என்ன மாமா சின்ன குழந்தை மாதிரி அழுறீங்க” அவனை அழைத்து வந்த ஹரித சோபாவில் அமர்த்தினான்.
“ரொம்ப நன்றி அத்த. என் பொண்ண லஹிருவுக்கு கல்யாணம் பண்ணி வச்சி யாராலயும் அவளை இந்த வீட்டை விட்டு பிரிக்க முடியாதபடி பண்ணிடீங்க ரொம்ப நன்றி” சுதுமெனிகேயின் கைகளை பற்றியவாறு கூறினான் ஜீவக.
“லஹிருவோட ஜாதகத்தோட அவளோட ஜாதகம் பொருந்திருச்சு அதனாலதான் கல்யாணம் பண்ணி வச்சேன். அதுவும் புத்தரோட ஏற்பாடுதான். ஏன் உன் பொண்ணு கல்யாணத்த பார்க்க முடியலையே என்ற வருத்தம் இல்லையா உனக்கு” என்றாள் சுதுமெனிகே.
நிச்சயமாக அவனுக்கு அந்த கவலை இருக்கு. அதை விட அத்தையும் லஹிருவும் அவளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதனாலயே அவன் அதை பற்றி கூறவில்லை. சுதுமெனிகேயே அதை பற்றி பேசவும் மனம் குமுறினான்.
“நான் பெரிய பாவம் பண்ணி இருக்கேன். அதான் புத்தர் என்ன தண்டிச்சிட்டாரு. என் கவிதாவை பிரிஞ்சி. என் கவி செத்தது கூட தெரியாம. நான் பாவி, நான் பாவி. என் கையாள தூக்கி கொஞ்ச வேண்டிய பொண்ணு பொறந்தது கூட தெரியாம. அவ எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாளோ. அவ கல்யாணத்த பார்த்தா மட்டும் மனம் நிம்மதி அடையுமா ” தலையிலையே அடித்துக் கொள்ளலானான்.
இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்தவனுக்கு தெரியாதா? எப்படிபட்ட சொர்க்கத்தை இழந்து விட்டான் என்று. அவன் இழந்தது கொஞ்சமா? நஞ்சமா? அதை விட சாரு எவ்வளவு இழந்தாள் என்று கணித்தால் அதை இப்பொழுது அவனால் ஈடு செய்ய முடியுமா? தந்தையாக எந்த கடமையையும் அவனால் செய்ய முடியவில்லையே. அவளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் இனியும் அவள் வாழ்க்கையில் அவனால் நுழையத்தான் முடியுமா? அவன் உரிமையெல்லாம் பறிக்கப்பட்டு லஹிருவின் கையில் கொடுத்தாகி விட்டதே.
பிறந்ததிலிருந்து தொட்டு தூக்காத, பேர் கூட வைக்காத, தன்னுடைய பெயரையே கொடுக்காத மகளுக்காக உரிமை கூறி சண்டைதான் போட முடியுமா? அழுது கரைந்தான் ஜீவக.
“ஏன் பா நடந்து முடிஞ்சத பத்தி யோசிக்கிற? எது நடக்கணும் என்று இருக்கோ அது தானே நடக்கும். அத தடுக்க நம்மளால முடியாது” அவனை சமாதானப் படுத்த முயன்றாள் சுதுமெனிகே. 
“அதானே சாரு இப்போ நம்ம வீட்டு மருமகளாக்கிட்டாளே இனி என்ன கவலை. விடுங்க மாமா. ஆனா நீங்க என்னதான் டீல்ல விட்டுடீங்க. சாருவை மட்டும் இவ்வளவு அழகா பெத்து அண்ணனனுக்காக அனுப்பிடீங்க. எனக்குதான் யாருமில்ல. சரி சரி நான் முஸ்லீம் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” சோகமான முகத்தை வைத்தவாறு கேலி செய்யலானான் ஹரித.
அவன் காதை திருகிய சுதுமெனிகே “விளையாட்டு வினையாகும் நேரம் இருக்கு பேரான்டி. பார்த்து பேசு”
இறுக்கமான சூழ்நிலை அவனால் சற்று இலேசாக ஜீவகயின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
“அத்த எனக்கு கவிதாவோட முகம் நியாபகம் இல்ல. உங்களுக்கு நியாபகம் இருக்கா?”
தெளிவில்லாத காட்ச்சிகளை கனவில் பார்த்திருந்தவன் தன்னை இம்சிப்பவளை அடையாளம் காண முயற்சி செய்யவே இல்லை. அது அவனுடைய காதல் தேவதை என்றதும் அவள் முகம் மறந்து போன கொடுமையை யாரிடம் சொல்வான்.
தான் கண்ட காட்ச்சிகளை நியாபகப்படுத்தி அவள் முகத்தை கண் முன் கொண்டுவர முயற்சி செய்து தோற்றவன் அந்த வேதனையை அதை புரிந்துகொள்ளக் கூடியவளிடம் பகிர்ந்து கொண்டான்.
அவன் கையை தட்டிக் கொடுத்த சுதுமெனிகேவுக்கு தொண்டையடைத்து கண்கள் கலங்கியது. ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வேறொரு சூழ்நிலையில் நட்டுவித்தது போல்தான் அவன் நிலையும். முற்றாக வேறொரு மனிதனாக வாழ்ந்தவனிடம் நீ வாழ வேண்டிய வாழ்க்கை  இதுதான். இத்தனை நாளாய் போலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருக்கின்றாய் என்றால் ஒரு நொடியில் ஒரே நொடியில் கலைந்த சீட்டுக்கு கட்டுக்கள் போல் ஆகிவிடாதா? ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா? வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட்டு வெளிவரத்தான் முடியுமா?
“ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று சுதுமெனிகே புன்னகைத்து விட்டு செல்ல
“இந்த அப்பத்தா இருக்காங்களே சரியான குசும்பு புடிச்சவங்க. எந்த நேரத்துல எதை செய்வாங்க என்றே தெரிய மாட்டேங்குது. எனக்கு என்னமோ எங்கப்பனுக்கு பாடம் புகட்ட எனக்குகொரு முஸ்லீம் பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கனு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க மாமா?”
“டேய் நானும் அப்போல இருந்து பாக்குறேன். இதையே சொல்லுற? உண்மைய சொல்லு. யாராச்சும் முஸ்லீம் பொண்ண லவ் பண்ணுறியா?” தன்னுடைய சோகத்தையும் சட்டென்று மறந்த ஜீவக ஹரிதவின் வயதில் தன்னை நிறுத்தி பேசினான்.
“நான் ஆமான்னு சொன்னா போய் பொண்ணு கேப்பீங்களா? அட போங்க மாமா” ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் மாமனையே சுத்த விட்டான் ஹரித.
“யார்டா அந்த பொண்ணு? இந்த ஊரா? ஒரே காலேஜா?” இளமை மெல்ல திரும்பிய நிலையில் இருந்தான் ஜீவக.
“இப்படியே போட்டு வாங்கி அப்பத்தாகிட்ட போட்டுக் கொடுக்கலாம்னு பாக்குறீங்களா? சிக்க மாட்டேன்” சுதுமெனிகே வருவதை கண்டவன் மெதுவாக நகர்த்தான்.
“எங்கடா போற?” அப்பத்தா அமர்ந்தவாறே கேட்க,
“உனக்கு ஆயிரம் இருக்கும். நீ பேசு அப்பத்தா. நான் சாருவை பார்த்துட்டு வரேன்” இடத்தை காலி செய்தான்.
“இவன் ஒரு லூசு” வளமை போல் ஹரிதவை திட்டிய சுதுமெனிகே கையேடு கொண்டு வந்த கவிதாவின் புகைப்படத்தை ஜீவகயின் கையில் கொடுத்தாள்.      
புகைப்படத்தை கையில் வாங்கிய ஜீவக கண்கொட்டாமல் கவிதாவை பார்த்திருந்தான். அவளை நேசிக்க வைத்த அந்த புன்னகை மாறாமல் அந்த புகைப்படத்தில் அவனை பார்த்தவாறு சிரித்துக் கொண்டிருந்தாள் கவிதா.  
“உனக்கு நியாபகம் இருக்கா? கவிதாவை வற்புறுத்தி நான் இந்த போட்டோவை எடுத்தேன்” என்று கூற
கண்கள் கலங்கியவாறு தலையசைத்த ஜீவக கவிதாவின் முகத்தை மனதில் பதியவைக்கலானான்..
அவன் கனவில் கண்ட காட்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் அவள் முகத்தை பொருத்தி பார்த்தவனுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக நடந்த சம்பவங்கள் நியாபகத்தில் வர தலை வலிக்கவே தலையை பிடித்துக் கொண்டான்.
“என்னப்பா பண்ணுது?” பதட்டமடைந்தாள் சுதுமெனகே.
“என்னாலதான் கவி செத்து போய்ட்டா இல்ல அத்த. இல்லனா அவ யாரையாச்சு கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்திருப்பா”
“வாழ்ந்திருப்பா. சந்தோசமா வாழ்ந்திருப்பா என்று நம்மால சொல்ல முடியாதுடா. ஒவ்வொருத்தரரும் பொறக்கும் பொழுதே. இவ்வளவுதான் ஆயுள் என்று கையேடு எடுக்கிட்டுதான் வருவாங்க. அவ உன் கூட இருந்திருந்தா வேற ஏதாவது காரணத்தால இறந்திருப்பா. அதுதான் விதி.
அவளை பத்தி யோசிச்சு. நீ உன்ன வ்ருத்திக்காத. உனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு. சாருவோட சேர்த்து இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க எதிர்காலத்தை பத்தி யோசி” கையை தட்டிக் கொடுத்தவள் தலையையும் தடவி விட்டு அவனுக்கு தனிமை கொடுக்கும் விதமாக எழுந்து சென்றாள்.
ஜீவக கவிதாவின் புகைப்படத்தையே பார்த்திருந்தான்.
அவளை முதன் முதலாக அவன் சந்தித்தது நியாபத்தில் வர “என்ன மன்னிச்சுடு கவி” கண்ணீரோடு புன்னகைக்கலானான்.
சுதுமெனிகே சாருவின் அறைக்கு வரும் பொழுது சாரு எழுந்து அமர்ந்து லஹிரு மற்றும் ஹரிதாவோடு பேசிக் கொண்டிருந்தாள்.
சாரு கண்விழிக்கும் பொழுது லஹிரு மட்டும்தான் அறையில் இருந்தாள். அவனை பார்த்ததும் அசவ்கரியமாக உணர்ந்தவள் மெதுவாக புன்னகைத்தவாறு எழுந்து அமர்ந்தாள்.
அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவன் இப்பொழுது எப்படி உணர்கின்றாய் என்று விசாரிக்க “பரவாயில்லை” என்று தலையசைத்தவள் தந்தை எங்கே என்று கேட்டாள்.
“மாமா இவ்வளவு நேரமும் உன் பக்கத்துல இருந்தாரு. இப்போதான் அவரோட ரூமுக்கு போனாரு. ஏன் நீ ஜீவக மாமாவோட பொண்ணு என்று சொல்லல” லஹிரு ஆதங்கமாகவே கேட்க,
சொன்னால் மட்டும் நீ நம்பி இருப்பியா? என்பதை போல் பார்த்தவள் பதில் கூறாமல் குடித்து முடித்த குவளையை அவன் கையில் கொடுத்தாள்.
அதை மேசையின் மேல் வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டவன் “உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல. நான் கஷ்டப்படுத்தினதும் இல்லாம, இங்க இருக்குறவங்க வேற உன்ன ரொம்ப படுத்திட்டாங்க” மெல்லிய புன்னகையில் வருத்தத்தை தெரிவித்தான்.
அவனை ஆழ்ந்து பார்த்தவள் “உண்மை எல்லாம் தெரிந்த பின் வருத்தப் படுகிறானா? தேவையே இல்லை” என்று சிந்தித்தவள் பதில் பேசவில்லை.
லஹிரு பேசிக் கொண்டே இருந்தான். அவன் மனதில் பாரம் ஏறிக் கொண்டிருந்தது. அவள் யார் என்று அறியும் முன் தன் மனதில் இருப்பதை கூறி இருக்க வேண்டுமோ என்று சிந்தித்து கொண்டிருக்கும் பொழுதுதான் அவள் கண்விழித்தாள்.
அவளும் தன்னை நேசிக்க வேண்டும் என்று பொறுமை காத்ததன் விளைவாக அவள் தன்னை புரிந்து கொள்ளாமல் போய் விடுவாளோ என்று அஞ்சினான்.
என்ன இருந்தாலும் அவள் தன் மனைவி. அவ்வளவு சீக்கிரத்தில் அவளை தன்னிடமிருந்து விலகிச் செல்ல விட்டு விடுவேனா என்றுதான் அவளிடத்தில் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தான். அவள் எதுவுமே பேசாதது அபாய மணியின் அறிகுறி என்று அவனுக்கு புரியாமல் இல்லை.
“எக்காரணத்தை கொண்டும் உன்னை விட மாட்டேன்” என்று எண்ணிக் கொண்டான்.
“என்ன நான் உள்ள வரலாமா?” ஹரிதயின் குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்த்திருக்க, உள்ளே நுழைந்தான் ஹரித.
 உள்ளே வந்தவன் அவர்கள் செய்த காரியத்தை பற்றித்தான் பேசினான் “என்னமா நடிக்கிற? உனக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கும் என்று எனக்கு தெரியாம போச்சே” வியந்தவாறு ஹரித கூற, சாரு லஹிருவைத்தான் பார்த்தாள்.
ஏற்கனவே அவன் இவளை நடிக்கிறாள். வேஷக்காரி என்று திட்டிக் கொண்டிருக்கின்றான். இவன் வேறு ஏற்றி விட்டால் இன்னும் என்ன சொல்வானோ?
“அடங்குடா டேய். சொல்லிக் கொடுத்ததே நான் தான்” என்றான் லஹிரு.
“ஓஹ்… ஓஹ்… அப்படி போகுதா கத. ஆனாலும் என்ன கழட்டி விட்டுட்டு. நீங்க எல்லாரும் நடிச்சது சரியில்ல”
அண்ணனும் தம்பியும் நடந்தவைகளை பற்றி அளவளாவ தான் இவர்களின் மாமனின் மகள் என்றதை அறிந்த பின்தான் இவன் இவ்வளவு இணக்கம் காட்டுவதாக நினைத்தாள் சாரு.
சுதுமெனிகே உள்ளே வரவும் எழ போனவளை கடிந்தான் லஹிரு.
“எதுக்கு இப்போ அவளை திட்டுற?. அவளே சோர்வா இருக்கா பாரு. சின்னவனே நீ போய் நெலும் கிட்ட சொல்லி குடிக்க ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா” என்று ஹரிதவை அனுப்பி வைத்தாள்.
“என்ன மன்னிச்சுடு சாரு. நான் உன் அப்பாவை பத்தி ரொம்ப தப்பா நினைச்சிட்டேன். நடந்தது என்ன என்று தெரியாம பேசிட்டேன்”
சட்டென்று சுதுமெனிகே மன்னிப்பு கேட்கவும் பதறிய சாரு “என்ன பாட்டி நீங்க? என் கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க? அப்பாவும் உங்கள தப்பாதான் நினைச்சிருக்காரு. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விடுங்க” என்றாள்.
“உங்க ரெண்டு பேர் உசுருக்கும் ஆபத்து இருக்கு என்று ஜோசியர் சொன்னதும் இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று கவனமா இருந்ததினால் நல்லவேளை உங்க ரெண்டு பேர் உசுருக்கும் எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கிட்டோம்”
“அவங்க அப்பா மேல இருந்த பாசத்தால் அப்படி எல்லாம் பண்ணி இருக்காங்க” சுமனாவதியை அப்பத்தா என்று மனம் அழைக்க மறுக்க, தலையை தொங்க போட்டவாறே கூறினாள் சாரு.
“உன் அப்பா அவளுக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டான். உன்னையையும் பொண்ணா ஏத்துக்கிட்டான். இப்போ அவன் உன் அம்மா கூட பேசிகிட்டு இருப்பான். அவனே உன்ன பார்க்க வருவான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு” அனோமாவை பற்றி கூறாமல் சுமனாவதியை பற்றி மட்டும் பேசியவள் ஜீவகயின் மனநிலைமையை எடுத்து சொல்ல தலையசைத்தாள் சாரு.
அவள் மயக்கத்தில் இருந்ததால் என்னவோ அவர்கள் பேசியவைகளும் அவள் காதில் தெளிவில்லாமல் விழுந்திருந்தது. அவளும் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை.
“அது சரி. என்ன எழுதி கொடுக்காத வசனமெல்லாம் பேசுற? ஐராங்கனியை பத்தி உன் கிட்ட நான் ஒண்ணுமே சொல்லலையே” யோசனையாகவே கூறினாள் சுதுமெனிகே     
“என்ன பேசினேன்?” புரியாது கேட்டாள்
அவள் கடைசியாக பேசியதை லஹிரு கூற,
“மின்னல் வெட்டினப்போ என் கண்ணு ரெண்டும் இருண்டா மாதிரி இருந்திருச்சு. அதற்கு அப்பொறம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவுமே நியாபகம் இல்ல” என்றாள் சாரு.
“என்ன சொல்லுற?” லஹிரு புரியாது கேட்க, சுதுமெனிகே யோசனையாக பார்த்தாள்.
“நிஜமாலுமே எனக்கு தெரியாது பாட்டி. நான் எப்படி?” என்ற சாருவின் கைகளை பற்றிக் கொண்ட சுதுமெனிகே
“அது நீயா பேசல. ஐராங்கனியே உன் உடம்புல வந்து பேசி இருக்கா. இத்தன வருஷமா அவ ஆவி இங்கதான் இருந்திருக்கு. உன்னால அவளுக்கு மோட்சம் கிடைச்சிருக்கு. அது உண்மையா என்று உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் மீண்டும் ஜோசியர் கிட்ட காட்டி கேட்கணும்” என்றாள் சுதுமெனிகே
லஹிருவுக்கு இதில் நம்பிக்கையே இல்லை. அவன் எதுவும் பேசவில்லை. சாருவுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அமைதியாக பார்த்திருந்தாள். 

Advertisement