Advertisement

சுமனாவதி எதற்காக இதையெல்லாம் செய்கின்றாள்? என்ற கேள்வி சுதுமெனிகேயின் மனதுக்குள் தோன்ற சாரு தான் தான் கவிதாவின் மகள் என்று ஜீவகயிடம் கூறக் கூடாது அதற்காகத்தான் இந்தனை ஆட்டத்தையும் ஆடி இருக்கின்றாள்.

அன்று சுமனாவதியிடம் சாரு உன் பேத்தி. ஜீவக கவிதாவை காதலித்த விஷயம் தெரியுமா? தெரியாதா? சாருவுக்கு இருப்பது உன்னுடைய அன்னையின் கண்கள் என்றும், அதுவே போதும் சாரு ஜீவகயின் மகள் என்றும் சுதுமெனிகே கூறிய பொழுது விழித்துக் கொண்ட சுமனாவதி. “என்ன சொல்லுற நீ? என் பையன் தமிழ் பொண்ண காதலிச்சானா? என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்” கோபமாக சொன்னாள்.

ஆனால் அவள் மனமோ “தெரியும். ஆனா குழந்தை…” என்றவளுக்கே அது அபத்தமாக தோன்றி இருக்கும். “அவனுக்கு பொறந்த ஒன்னு கூட எங்க வீட்டு சாயல்ல இல்லனு புலம்பி இருக்கேன். எவளுக்கோ பொறந்த ஒருத்தி அம்மா சாயல்ல இருக்கா. அவ கண்ணும் அம்மா மாதிரியே இருக்கு. அவன் கண்டிப்பா ஏத்துப்பான்” சாருவை எவ்வாறு துரத்துவது என்று யோசிக்கலானாள்.

அவள் எதை செய்திருந்தாலும் சுதுமெனிகே மன்னித்திருப்பாள் நாகங்களை விட்டு சாருவையும், லஹிருவையும் கொல்ல துணிந்ததை மன்னிக்கவே மாட்டாள்.

ஐராங்கனியின் பேய் என்றா நாடகம் ஆடுகிறாய் அவள் பேயே உன் மகனை காவு வாங்குவாள் பார் என்று சாருவிடம் நடப்பதை புரிய வைத்து ஐராங்கனியின் ஆவி உடம்பில் புகுந்ததை போல் நடிக்க சொன்னாள் பாட்டி.

எத்தனை டீவி சீரியல் பார்த்திருப்பாள் பின்னி பெடலெடுக்க மாட்டேனா? என்று களத்தில் இறங்கிய சாருவுக்கு பெத்த மகன் என்றும் பாராமல் தந்தையையே கொல்ல துணிந்து விட்டார்கள் என்றதும் அதிர்ந்தாள்.

“எது வேண்டுமானாலும் நடக்கலாம். எடுத்த பாத்திரத்தை சரியாக நிறைவேற்று” என்பதுதான் சுதுமெனிகேயின் உத்தரவாக இருக்க, சாருவின் கண்களுங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. லஹிரு கண்களையே அதட்ட சுதாரித்தவள் சிறப்பாக நடித்தாள். இறுதியில் மயங்கியே விட்டாள்.

“என்ன அத்த சொல்லுறீங்க?” கோபமாக அன்னையை முறைத்தவாறே ஜீவக கேட்க, லஹிரு கேமரா காட்சிகளை ஓட விட்டான்.

“அப்போ சாரு கொல்ல முயற்சி செஞ்சதா கதை கட்டி என் பொண்ண கொல்ல பார்த்ததும் நீங்கதானா?” அனோமா கேட்டாள்.

கணவன் வேறொரு திருமணம் செய்திருந்தான் என்பது அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அவனோடு சண்டை போடுவாள் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவளோ அமைதியாக பேசினாள்.  

அவள் பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில் என்பதினாலையே என்னவோ அதை அவள் சட்டென்று புரிந்து கொண்டு, அதுவும் ஜீவகயின் மேல் எந்த ஒரு தப்பும் இல்லை என்ற பட்சத்தில் கணவனோடு சண்டையிடுவது முட்டாள்தனம் என்று விளங்கிக் கொண்டு அவனிடத்தில் எந்த கேள்வியையும் கேட்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.   

“பெத்த மகனையே கொல்ல பார்த்த உங்களுக்கு பேரன் பேத்தி எம்மாத்திரம்” வெறுப்பை கக்கினாள்.

“இல்ல நான் செனுரிய கொல்ல முயற்சி செய்யல. அது சாரு என்று நினைச்சிதான்” சுமனாவதியின் வாயிலிருந்து உண்மை தானாகவே வெளிவந்திருந்தது.

தாங்கள் பாசம் வைத்திருந்த அப்பத்தாவா இது என்று செனுரியும், உவிந்துவும் அதிர்ச்சியாகவே பார்த்திருந்தனர்.  

சாரு தங்களுடைய அக்கா என்ற அதிர்ச்சி ஒரு புறம் தந்தையை தாத்தாவே கொல்லப் பார்த்தார் என்ற அதிர்ச்சி ஒரு புறம் என்று அவர்கள் மிரண்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தனர்.

“ஆஹ்… சினிமாலதான் உன்ன மாதிரி வில்லி எல்லாம் பாத்திருக்கேன். நீ வீட்டுக்குள்ளேயே இத்தனை வேல பாத்திருக்க. இதுல முழங்கால் வலி என்று நடிப்பு உன்ன என்ன செய்யலாம்” ஹரித சுமனாவதியின் கழுத்தை நெறிப்பது போல் கைகளை கொண்டு செல்ல புஞ்சி நிலமே அவனை அதட்டினான்.

“நான் பெத்தவனுங்க மட்டும் யோக்கியமானவனுகளா? இதோ இவன் அப்பன் ஆரம்பிச்சி வச்ச பிரச்சினைதான் இது எல்லாம்” என்று லஹிருவை கை காட்டிய சுதுமெனிகே “நீயும் கவிதாவை கொல்ல கங்கணம் கட்டி அலைஞ்சவன் தானே. அவ பொண்ணையே நான் இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்துட்டேன். அவன் என் பேரன் பொண்டாட்டி. இப்போ கொல்லு பார்க்கலாம்.

நீ செய்வடா. சொத்துக்காக உன் அண்ணன் பையனையும் கொல்லுவ அவன் பொண்டாட்டியையும் கொல்லுவ” ஆவேசமாக கத்தினாள் சுதுமெனிகே.

“அத்த… என்ன பேசுறீங்க? சொத்து முக்கியம் தான். ஜாதி, மதம் கூட உயர்ந்ததாக பாப்போம் அதற்காக சொந்தத்த கொல்லுற அளவுக்கு நாங்க தரம் தாளல” சீறினாள் மெனிகே

“நீ சொல்லுற. உன் புருஷன பாரு கமுக்கமா இருக்கான்” பெத்த மகனையே சாடினாள்.

“யோவ் என்னய்யா பேசாம இருக்க. பேசுயா. அவனும் எங்களுக்கு மகன்தான்னு சொல்லுயா” மெனிக்கே கணவனை உலுக்க, புஞ்சி நிலமே அழுதே விட்டான்.

ஜாதி, மதம் என்று பார்ப்பவன்தான். அவன் அண்ணன் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதே பாசம் அண்ணன் மகன் மீதும் இருந்தது. அன்னையே சந்தேகப்பட்டு பேசியது அவனால் தாங்க முடியவில்லை. எதுவும் பேசாமல் மனைவியை அழைத்துக் கொண்டு அமைதியாக சென்று விட்டான்.

மெனிகே கத்திக் கொண்டே அவன் பின்னால் செல்ல, லஹிரு அவர்களை தடுக்க முயற்சி செய்தான்.

சுதுமெனிகே அவனை தடுத்து “இனிமேலாவது அவன் ஜாதிவெறி, மதவெறி இல்லாம மனுசனா வாழ்வான்” என்று பெருமூச்சு வீட்டுக் கொண்டாள். 

“ஐ ஜாலி அப்போ நான் முஸ்லீம் பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று ஹரித கேலி செய்ய சூழ்நிலை புரியாமல் அவன் கேலி செய்வதை யாரும் ரசிக்கவில்லை. ஆனால் செனுரி அவனை முறைத்தாள்.

“இன்னும் நீ இங்க என்ன செய்யிற? என் உசுர எடுத்த பிறகா இங்க இருந்து போக போற?” ஜீவக அன்னையை பார்த்து கத்த

“அட கொஞ்சம் இருங்க மாமா சாரு உங்க பொண்ணுன்னு தெரியக் கூடாது என்று இத்தனையும் பண்ணினாங்க. ஆனா சின்ன வயசுல இருந்து என் மேல அவ்வளவு பாசமா இருக்கும் சுமனா பாட்டி மனசாட்ச்சியே இல்லாம என்ன எப்படி கொல்ல பார்த்தாங்க என்று யோசிச்சேன். நீ என் அண்ணன் போலவே இருக்கடா. அண்ணன் போலவே இருக்கடா என்று என்ன பாக்குறப்போ எல்லாம் சொல்லி திருஷ்டி கழிச்சவங்க, அவங்க அண்ணன் மேல வச்ச அதே அளவு பாசத்தை என் மேலயும் வச்சிருக்குறவங்க கண்டிப்பா என்ன கொல்ல நாகங்களை போட்டிருக்க மாட்டாங்க என்று எனக்கு தோன்றியது”  என்று லஹிரு சொல்ல

“என்னடா சொல்லுற? ஆனா மல்காந்திய வச்சுதான் எல்லாம் பண்ணா. மல்காந்தி தானே நாகங்களை போட்டது. சொல்லு சுமானா லஹிருவோட படுக்கையறைக்கு பாம்பை போட்டு அவனை எதுக்கு கொல்ல பார்த்த?” சீறினாள்  சுதுமெனிகே.

“என்ன சொல்லுற? அவன் என் அண்ணனோட பேரன். அவனை நான் எதுக்கு கொல்ல போறேன்” சொந்த பேத்தி மீது இல்லாத பாசம் தன்னுடைய ஜாதி என்றதும் அண்ணன் பேரன் மீது சுமனாவதிக்கு இருந்தது. ஆனாலும் சொத்துக்காக கொல்ல முயற்சி செய்திருப்பாளா? என்ற சந்தேகம் லஹிருவுக்கு இருந்தது. உண்மையை அவரவர் வாயிலிருந்தே வெளியே கொண்டுவர வேண்டிய கட்டாயம் வேறு இருக்கல்லவா. அதனாலயே அமைதியாக பேசிக் கொண்டிருந்தான்.  

“நீ சொல்லாமல்தான் மல்காந்தி இத்தனையையும் செய்தாளா?”

மல்காந்தி உட்பட வீட்டு வேலையாட்கள் அத்தனை பேரும் அங்குதான் நின்றிருந்தனர்.

“பேய் போல டிரஸ் கூட சாதாரணமாக கடையில வாங்கலாம். ஆனா மிருகங்களை போல ஒலி எழுப்பக் கூடிய கருவிகளை படிக்காத மல்காந்தி எங்க இருந்து வாங்கி இருப்பா என்ற சந்தேகம் எனக்கு முதல்ல வந்தப்போ சுமனா பாட்டிக்கும் இத பத்தி தெரியாது என்று எனக்கு விளங்கிருச்சு” என்றான் லஹிரு.

“கொஞ்சம் பொறு, பொறு, ஆரம்பத்துல சுமனாவுக்கு சாரு இந்த வீட்டை விட்டு போனா மட்டும் போதும் என்றுதான் எல்லாம் பண்ணா. ஆனா ஜீவக வந்த பிறகுதான் கொல்ல பார்த்தா. ஆனா லஹிருவும் சாருவும் சாகனும் என்று நினைச்சது வேற ஒருத்தங்க” என்றாள் சுதுமெனிகே.

“என்ன அப்பத்தா ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு துப்பு துலக்குற. யாரு அது சீக்கிரம் சொல்லு என் மண்டையே வெடிச்சிடும்” என்றான் ஹரித. 

“மல்காந்திய சுமனாவதியோட வேலைக்காரியா நியமிச்சது அனோமா. அவதான் இந்த வேலைய பார்த்திருக்கா” பட்டென்று போட்டுடைத்தாள்

அனோமா மறுத்து பேச முனைய அவளை இழுத்து ஒரு இருக்கையில் அமர்த்திய லஹிரு “மூச் எதுவும் பேசக் கூடாது. செனுரிய தண்ணீரிலே மூழ்கி கொல்ல பார்த்தது சுமனா பாட்டிதான் என்று உங்களுக்கு அப்போவே தெரியும். தெரிஞ்சும் அன்னைக்கு அமைதியா இருந்துட்டு இன்னைக்கு அவங்க மேல பழியை போட்டு நீங்க தப்பிக்கலாம் என்று பாக்குறீங்களா? நீங்க பண்ணது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. இப்போ நாங்க பேசுறோம் அமைதியா கேளுங்க” என்றதும் அவனை முறைத்தவாறு அமைதியானாள்.

“மல்காந்திய வேலைக்கு வைக்கல வேவு பார்க்க வைச்சிருக்கா. இங்க நடக்குற அத்தனை விஷயங்களையும் மல்காந்தி மூலம் அனோமாவுக்கு செய்தி போய்டும். லஹிருவுக்கும் செனுரியிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று நினச்சவ அவனுக்கு சர்ப்பதோஷம் இருக்குறது தெரிஞ்சதும் வேற திட்டம் போட்டா. அதுதான் செனுரியிக்கு ஹரிதவ கல்யாணம் பண்ணி வைக்கிறது” என்னதான் மெனிகே செனுரிக்கும், ஹரிதவுக்கும் பேசி முடித்த பின் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறி இருந்தாலும், மனம் கேளாமல் புஞ்சி நிலமே அன்னையின் காதில் விஷயத்தை போட்டிருந்தான். அனுபவம் நிறைந்த சுதுமெனிகே சுதுமெனிகேவுக்கு அனோமாவின் திட்டம் இதுதான் என்று புரிந்து போனது. 

“யாரை கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணுறீங்க?” கொதித்தான் ஹரித. 

“டேய் கொஞ்சம் அமைதியா இருடா” தம்பியை அடக்கினான் லஹிரு.

பேரன்களை முறைத்தவாறே தொடர்ந்தாள் சுதுமெனிகே “அனோமா இங்க வரும் முன்பாகவே சாரு ஜீவகயோட பொண்ணு என்று தெரிஞ்சிகிட்டா. மாமியார் அவளை ஊருக்கு அனுப்ப அமானுஷ்யமான விஷயங்களை செய்யப்போறதா தெரிஞ்சிக்கிட்டு மல்காந்திக்கு அமெரிக்கால இருந்து ஒலி எழுப்பும் கருவிகளை அனுப்பி வச்சிருக்கா. லஹிருவும் சாருவும் குடிக்கிற தண்ணீர்ல தூக்க மாத்திரையை கலந்திருக்கா. லஹிருவுக்கு இருக்கும் சர்பதோஷத்த காரணமா வச்சி நாகங்களை அறைக்குள்ள விட்டு கொல்ல பார்த்ததும் மல்காந்திதான். இது எல்லாம் அனோமா சொல்லி செஞ்சது நான் சொல்லுறது சரிதானே” என்றவள் லஹிருவை பார்க்க,

“மல்காந்தி என்னவெல்லாம் பண்ணாலோ எல்லாமே கேமரால பதிவாக்கிருக்கு. நீங்க இல்லனு சொல்லவும் முடியாது. மறுக்கவும் முடியாது. அனோமா அத்தையும் மல்காந்தியும் பேசுறது கேமரால மட்டும் பதிவாகலா வாய்ஸ் ரெகார்ட் கூட பண்ணி இருக்கேன்” என்றான் லஹிரு.

“இவங்க எல்லாரையும் போலீஸ்ல புடிச்சி கொடுங்க” கொஞ்சம் கூட யோசிக்காமல் கூறினான் ஜீவக.

“அப்பா…” கத்தினாள் செனுரி. உவிந்து அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

“நான் வாழ வேண்டியது என் கவிதா கூட என்று எப்போ புரிஞ்சதோ அப்போவே இவளை விட்டு விலகிடனும் என்று நினச்சேன். செத்து போன கவிக்காக இவளை விலக்கி வச்சி தண்டனை கொடுக்குறது சரியா? அந்த குற்ற உணர்ச்சினைல மீண்டும் தத்தளிப்பேனா என்று யோசிச்சேன். இப்போ யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. விவாகரத்துதான்” என்றவன் “அத்த நீங்க என்ன முடிவு எடுக்குறீங்களோ அதுக்கு நான் கட்டுப்படுறேன்” என்றான்.

“போலீசை வரச்சொல்லி இவளை ஜெயில்ல அடைகிறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. உன் பசங்க எதிர்காலத்தை நினைச்சி இவள விட்டுடுறேன். அம்மா ஜெயிலுக்கு போனவ என்று நாளைக்கு ஊரு உலகம் பேசினா அவங்க எதிர்காலம்தான் பாதிக்கும். நீ இவள விவாகரத்து பண்ணுறது உன் இஷ்டம். இனி ஒரு நிமிஷம் இவங்க இந்த வீட்டுல இருக்கக் கூடாது” என்றாள் சுதுமெனிகே

“வக்கீல் நோட்டீஸ் வரும் கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டு. ஏதாவது தில்லுமுல்லு பண்ண இந்த வீடியோ எல்லாம் போலீசுக்கு போய்டும். கிளம்பு கிளம்பு” அனோமாவை துரத்தியடைத்தான் ஜீவக.

அவள் அவனிடம் கெஞ்சுவோ, மன்னிப்பு கேட்கவோ நினைக்கவில்லை. அமெரிக்காவில் தந்தை இருக்கிறார். சொத்து இருக்கிறது தனக்கு என்ன கேடு வந்துவிடப் போகிறது என்ற ஆணவத்தில் கிளம்பினாள்.

“நானும் அம்மா கூட போவேன்” என்று அடம்பிடித்த செனுரியை கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து அறையில் அடைத்தாள் சுதுமெனிகே.

கண்ணீரோடு உவிந்துவை அனோமா பார்க்க அவனோ அன்னையை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

சுமனாவதி மகனை ஏக்கமாக பார்க்க “உனக்கு தனியாக சொல்லனுமா? போ” என்று கத்த சுமனாவதி அழுதவாறே ஊரை நோக்கி பயணப்பட்டாள். 

அவளை யாருமே தடுக்கவுமில்லை. ஜீவகயை யாரும் சமாதானப் படுத்த முயற்சி செய்யவுமில்லை.

Advertisement