Advertisement

அத்தியாயம் 18

சாரு கருப்பு உருவம் கையை பிடித்தது என்று சொன்னதும் சுமனாவதியிடம் சாதாரணமாக கூறிய சுதுமெனிகே அதை அப்படியே விடவில்லை. 

அந்த பெரிய வீட்டில் சுவர்களுக்கு காதிருக்கும். இங்குதான் சரியான இடம் என்று பாக்டரியில் லஹிருவை அழைத்து தனியாக பேசினாள்.    

சாரு மற்றும் லஹிருவின் ஜாதக பொருத்தத்தையும் அவர்களுக்கு இருக்கும் ஆபத்தையும் கூறியவள் “ஆபத்து வெளியே இருந்து வரணும் என்று இல்லையே. வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். யாரையும் நம்பக் கூடாது. என்னையும் சேர்த்துதான் சொல்லுறேன்” என்றாள்.

“என்ன சொல்லுறீங்க?” அப்பாத்தா எதை சொன்னாலும் நம்பும் லஹிருவுக்கு அவள் கொஞ்சம் ஓவராக நினைப்பதாக தோன்றியது.

“யாராச்சும் என் குரல்ல பேசி கூட உன்ன ஏமாத்தலாம். ஆமா சாரு ஒரு கருப்பு உருவத்தை பார்த்ததாக சொன்னாளே அத பத்தி நீ என்ன நினைக்கிற?”

சுதுமெனிகே வயதுக்கு அனுபவம் அதிகம்தான் இதை செய் என்று கூறாமல் பேரனிடம் ஆலோசனை கேட்டு தான் எதையும் செய்வாள். அவன் கருத்தை மதிப்பாள். கேட்பாள். இதில் சாருவும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சிந்தனையிலையே தான் பேசிக் கொண்டிருந்தாள்.

“அவ எல்லாத்துக்கும் பயப்படுறவ. அவ எதோ கண்டாளாம். நீங்க பெரிய விஷயமா அத பத்தி பேசுறீங்க” கடுப்பானான் லஹிரு.

“நான் காரணம் இல்லாம எதையும் பேச மாட்டேன். சுமனாவதி அது ஐராங்கனியோட ஆவினு சொல்லுறா” என்றவள் ஐராங்கனி யாரு என்ன என்று தெளிவாகவே கூறினாள்.

“சுத்த பைத்தியக்காரத்தனம்” மனிதர்களால் கூட ஆபத்து வரலாம். ஆவி, பிசாசை அவன் நம்பத் தயாராக இல்லை.

“ஆவி டிங்கிரி பண்டாட கண்ணுல சிக்காம இருக்கலாம். நம்ம நாய்களோட கண்ணுல சிக்காம இருக்குமா? சிக்கினா குரைகாதா?” சிரித்தாள் சுதுமெனிகே.

அமானுஷ்ய உருவங்கள் மனிதர்களுடைய கண்களுக்கு தெரியாது மிருகங்களின் கண்களுக்கு தெரியும், அது தவிர இந்த பரம்பரைக்கே சாபம் இருக்க, வீட்டை பாதுகாத்துதான் வைத்திருக்கிறாள். அப்படி இருக்க இவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அவள் உறுதியை புன்னகையாக வெளிப்படுத்தினாள்.

“அப்போ வீட்டுல இருக்குற யாரோ தான் சாருவை பயமுறுத்தினதா சொல்ல வாரீங்களா?” வீட்டில் என்னதான் நடக்கிறது என்று லஹிருவுக்குமே ஆயிரம் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. சாருதான் கருப்பு உருவத்தை பார்த்து கதிகலங்கி கத்துவாளே ஒழிய வேறு யார் கண்களிலும் அந்த கருப்பு உருவம் இதுவரை சிக்கவில்லையே

“நிச்சயமா”

“யாரா இருக்கும் என்று நினைக்கிறீங்க?”

“தெரியல” சுதுமெனிகேயின் வாய் வார்த்தை தெரியாது என்று கூறினாலும் ஆதாரம் இல்லாமல் எதையும் கூறக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தாள்.

“சரி நான் ஹரித கூட பேசி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்”

“அவன் உன் தம்பிதான். இந்த விசயத்துல நீ அவனையும் நம்பக் கூடாது. அரசாட்ச்சிக்காக கூட பிறந்தவங்களையே கொண்டிருக்காங்க. சொத்துக்காக என்ன வேணும்னாலும், யார் வேணும்னாலும் பண்ணலாம்” முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் காட்டாது பேசினாள் சுதுமெனிகே

“அப்பத்தா…” அதிர்ச்சியும் கோபமும் கலந்த உணர்வில் இருந்தான் லஹிரு. அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“அப்பத்தா தான் சொல்லுறேன். அவனும் என் பேரன்தான். நான் உன் சித்தப்பனையே நம்ப மாட்டேன். பேரன் எம்மாத்திரம். “

“ஆனா நீங்க கண்மூடித்தனமான சாருவை நம்புறீங்க. கருப்பு உருவத்தை பார்த்ததா அவ பொய் சொல்லி இருக்கலாம்ல. சொத்துக்காக அவளும் ஜாதகத்தை மாத்தி கொடுத்து இந்த கல்யாணத்த நடத்த திட்டம் போட்டிருக்கலாம்ல” லஹிருவுக்கு என்றுமே சாருவின் மீது நம்பிக்கை இருக்கவில்லைதான். அப்பத்தா எல்லாரையும் சந்தேகப்படுவதென்றால் சொத்துக்காக தன்னை திருமணம் செய்த சாருவைத்தானே லிஸ்ட்டில் முதலாவதாக சேர்க்க வேண்டும் என்ற கோபத்தில் கொந்தளித்தான்.

“ஹாஹாஹா பேரான்டி உனக்கு மனிசங்களை கணிக்க அனுபவம் பத்தல. நான் உன் சித்தியோட வாய் சண்டை போடுறத வச்சி எனக்கு அவளை பிடிக்கல. அவ ரொம்ப கெட்டவ என்று நினைக்காத. உன் சித்தப்பன் சரியில்ல. அவன் பேச்சு கேட்டுகிட்டு அவ புத்திகெட்டு அலையிறா.

ஒரு பொண்டாட்டி நெனச்சா புருஷன மாத்த முடியாதா? முடியும். உன் தாத்தாவை போல கொடூரன் எல்லாம் மாத்த முடியாது. உன் சித்தி உன் சித்தப்பன காதலிச்சு தானே கல்யாணம் பண்ணா. இவ அவனை மாத்த முயற்சி செய்யாம இவளும் அவன் கூட சேர்ந்து ஆடுறா.   

என்ன கேட்ட சாருவா? அவள இந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தது நீ. அவ கிட்ட ஜாதகம் இல்ல. நான் தான் ஜோசியர் கிட்ட கூட்டிகிட்டு போய் கணிச்சேன். அவளுக்கு உன் ஜாதகம் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறியா? அவ இந்த வீட்டுக்கு வந்த நோக்கம் வேற. அத என்ன என்று கூடிய சீக்கிரம் உனக்கு தெரிய வரும். அவ வந்த நோக்கம் நிறைவேறக் கூடாது என்றுதான் யாரோ அமானுஷ்ய ஊசலாட்டங்களை ஆரம்பிச்சிருக்காங்க. அவளுக்கு உதவி செய்யிற என்னையும் கொல்ல தயங்க மாட்டாங்க”

அப்பத்தாவின் உயிருக்கும் ஆபத்து என்றதும் “என்ன சொல்லுறீங்க” அதிர்ச்சியும், அச்சமும் கலந்த உணர்வில் இருந்தான் லஹிரு.

“ஆம். அப்படி ஏதாவது நடந்தா லாக்கர்ல இருக்குற ஆரஞ்சு கலர் பைலை பாரு. உன் சர்ப்பதோஷம் எல்லாருக்கும் தெரியும். அத வச்சி உன் உயிரை எடுக்கவும் பார்ப்பாங்க. தூங்கும் போதும் அலார்ட்டா இரு” என்றாள் சுதுமெனிகே.

அப்பத்தா சொன்ன பிறகுதான் லஹிரு யோசிக்கவே ஆரம்பித்தான். கல்யாணம் ஆனா பிறகு கட்டிலில் விழுந்த உடன் தூங்கி விடுகிறான்.

அது அவன் கவனத்தில் வந்தது சாரு அவனோடு கட்டிலில் தூங்க ஆரம்பித்த பின்தான். என்னதான் ஆழ்ந்த தூக்கமாக இருந்தாலும் பக்கத்தில் தூங்குபவள் மேலே கைபோட்டால், கட்டியணைத்தால் விழிப்பு தட்டாதா?

அது எதுவும் வேண்டாம். ஒரு மனிதன் கனவு கண்டு விழிக்க மாட்டானா? இயற்கை உபாதை அழைத்தால் விழிக்க மாட்டானா? தாகம் வராதா? சத்தம் கேட்டு விழிக்க மாட்டானா? பக்கத்தில் தூங்குவாள் விழித்தால்? மின்குமிழை ஏறிவிட்டால்? விழிப்பு தட்டாதா?  இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க, லஹிரு தூங்கினால் விழித்தது காலையில்தான்.

சாருவின் திருட்டு முழியால் அவனுக்கு சந்தேகம் தோன்றியது என்னவோ உண்மைதான். ஆனால் என்றுமில்லாமல் தான் அடித்துப் போட்டது போல் தூங்குவது எதனால் என்று அவனுக்கு புரியவில்லை.

சாருதான் தான் தூங்க வேண்டும் என்று தூங்க வைக்க ஏதாவது செய்கிறாளோ என்று அறையில் கேமரா வைத்து பரிசோதித்தான். ஆனால் அவள் அவனை கட்டிக் கொண்டு தூங்கி விட்டு காலையில் விழித்து தலையில் அடித்துக் கொண்டு எழுந்து சென்று விடுவாள்.

அவள் கொடுக்கும் முகபாவனையை பார்த்து அதை நேரடியாக தன் கண் கொண்டு பார்க்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினான். அவள் அந்த முகபாவனையை கொடுக்கும் பொழுது தன் கண்விழித்து அவளை பார்த்தால் அவள் எவ்வாறெல்லாம் பாவனை செய்வாள்? எப்படி எல்லாம் சமாளிப்பாள் என்று மனக்கண்ணில் காட்ச்சி தோன்றி மறைய சத்தமாக  சிரித்தவன் அந்த வீடியோவை மீண்டும் ஓடவிட்டு ரசிக்கலானான்.

அவனுடைய தூக்கத்துக்கு சாரு காரணமும் இல்லை. அவள் நடிக்கவுமில்லை என்று லஹிருவுக்கு புரிய அவள் ஒரு “லூசு யக்ஷணி” என முணுமுணுக்கலானான்.

அவன் தூக்கத்துக்கு யார் காரணம்? யார் என்று கண்டு பிடித்தால்தான் என்ன காரணம்? என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று லஹிரு யோசிக்கும் பொழுது வீட்டில் மேலும் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்க, அந்த கருப்பு உருவம் வேறு அடிக்கடி தோன்றி சாருவை தொல்லை செய்து கொண்டுதான் இருந்தது.

லஹிரு சாருவை அதட்டினாலும் அவளையும் நம்பினான், அப்பத்தா சொன்னதையும் நம்பினான். யாரும் அறியாமல் வீட்டில் எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தி தனது கணனியிலும் அலைபேசியிலும் இணைத்திருந்தான்.

பாக்டரியில் இருக்கும் பொழுது யார் யார் என்னென்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று கண்காணித்தான்.

அப்படி பார்த்ததில் சாருதான் தங்களது அறைக்கு தண்ணீர் எடுத்து வருவாள். சில நேரம் மாலையே கொண்டு வந்து வைப்பாள். சில நேரம் இரவு தூங்க வரும் பொழுது கொண்டு வருவாள்.

அவள் அதை அருந்துவதில்லை அவன் மட்டும்தான் அருந்துவான் அதனாலயே அவன் அடித்துப் போட்டது போல் தூங்கி விடுகிறான்.

அவன் தூங்க யார் என்ன கலந்தார்கள்? யார் என்று தெரியவில்லை. ஒருநாள் மாலை சாரு குடிக்க தண்ணீர் கொண்டு வரும் பொழுது சுதுமெனிகே அழைக்க இவளும் தண்ணீர் குவளையை சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு அவளது அறைக்கு சென்றாள்.

அந்த நேரத்தில் ஒரு கை தண்ணீர் குவளையில் எதோ ஒரு பொடியை கொட்டுவதையும் அது தண்ணீரில் உடனே கரைந்ததையும் கண்ட லஹிரு அதிர்ந்தான்.

அது ஒரு பெண்ணுடைய கை என்றதில் எந்த சந்தேகனும் இல்லை யாராக இருக்கும் ஏன் என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை எல்லோரும் சொல்லுவது போல் ஐராங்கனியின் ஆவியா? ஆவி எதற்கு தண்ணீரில் தூக்க மருந்து கலந்து கொடுக்க வேண்டும்?  அது நிச்சயமாக ஆவியுடைய வேலையல்ல. உயிருள்ள மனிஷியுடைய வேலைதான். இவ்வாறெல்லாம் செய்பவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது? சொத்தா?    

அப்பத்தா சொன்னது உண்மைதான் சொந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை. தூக்க மருந்தந்தை கலந்தவர்கள் விஷத்தை கலக்க மாட்டார்களா? தூக்கத்தில் கூட கவனமாக இருக்க வேண்டும் என்ற அப்பாத்தா எவ்வாறான ஆபத்து இருக்கும் என்று புரியவைக்க முனைந்ததை புரிந்து கொண்டவன். வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் மேலும் கேமராக்களை பொறுத்தினான்.

இன்று மிக கவனமாக தண்ணீர் எடுத்து வந்தவன் கதவை தாழிட்டு தூங்க ஆயத்தமானான். ஆனால் சாரு ஜன்னலை பூட்ட மறந்து இருப்பாள் போலும் அதை பயன் படுத்திக் கொண்டு யாரோ இரண்டு நாகங்களை அறைக்குள் விட்டிருக்க, அது எந்த நேரமும் கட்டிலில் ஏறி இருவரையும் கொத்தி விஷத்தையும் கக்கக் கூடும்.

தூக்க மருந்தை கலக்குபவரின் எதிர்பார்ப்பும் அதுதானாக இருக்க வேண்டும்.

லஹிருவுக்கு ஏற்கனவே சர்ப்பதோஷம் இருக்கு தூக்கத்தில் இருக்கும் அவனால் எதுவும் செய்ய முடியாது. பாம்பு கடித்து இறந்தால் அது ஜாதக தோஷத்தையே சேரும்.

ஆனால் லஹிரு இன்று தூங்கவே இல்லையே!

அவனின் சமயோகித்த புத்தியால் பாம்பையும் பிடித்து விட்டான். சாரு தான் ஜன்னலை பூட்டியதாக கூற, அப்படியானால் யாரோ அறைக்குள் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

யார் என்று கண்டறிய அவன் பொருத்தியிருந்த கேமராக்களை பரிசோதித்தால் அது சுமனாவதியின் வேலைக்கார பெண் மல்காந்தி என்று தெரிய வந்தது.

பாம்பை போட்டதும் மல்காந்திதான். பேய் போல் வேடமணிந்து சாருவை பயமுறுத்துவதும் மல்காந்திதான். இரவில் பூனைகள், ஆந்தைகள் என்று அனைத்து சத்தங்களை அங்கங்கே எழுப்பும் கருவிகளை வைப்பதும் அவள்தான்.

வீட்டில் நடக்கும் எதுவும் அமானுஷ்யம் கிடையாது. எல்லாம் மனுஷ்ய செயல்தான். ஆனால் மல்காந்தி எதற்கு இவைகளை செய்ய வேண்டும்? அவளுக்கும் சாருவுக்கு என்ன முன்பகை இருந்து விடப் போகிறது? என்று வீடியோக்களை அப்பாதாவிடம் காட்டி லஹிரு கேட்ட பொழுது சுதுமெனிகேவுக்கு இது யாருடைய வேலை என்று புரிந்து போனது.

அவளுடைய பின்னாலிருந்து இயக்குவது சுமனாவதிதான்.

Advertisement