Advertisement

அத்தியாயம் 17
இரவு உணவின் போது அனைவருமே அமர்ந்து உன்ன சாரு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“அவவங்க போட்டு சாப்பிடுவாங்க நீ உக்காந்து சாப்பிடு” சுதுமெனிகே சொல்ல சாரு தங்களோடு அமர்ந்து சாப்பிடுவது அங்கிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாகவே முகத்தில் காட்டியும் இருந்தனர்.
“உக்காராளாமா? வேண்டாமா?” என்று சாரு யோசிக்க,  “இங்க வந்து உக்காரு” என்று லஹிரு அவளை அவன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
அவள் கணவன் அவளுக்குண்டான மரியாதையை கொடுத்தால் மற்றவர்களால் என்ன செய்ய முடியும்? அமைதியாக உன்ன ஆரம்பித்திருந்தனர்.
“நல்லா நடிக்கிறான்டா” முணுமுணுத்த சாருவும் அமைதியாக உண்டாள்.
அவள் வேலைகள் முடியும் வரைக்கும் லஹிரு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
“என்ன நடிக்கிறான்னு சொல்லி சொல்லியே இவன் நடிப்பு உலகநாயகனையே மிஞ்சிடும் போலயே” முணுமுணுத்தவாறு சாரு வேலைகளை பார்த்தாளே ஒழிய அவனோடு எதையும் பேச முனையவில்லை.
“எல்லா வேலையும் முடிஞ்சிருச்சா?” அவள் கைகழுவுவதை பார்த்தவாறே கேட்டான் லஹிரு.
“ஆ… முடிஞ்சிருச்சு”
“நிம்மதியா தூங்கலாம்ல. தண்ணி எடுத்தியா?” கேள்வி அவளிடத்தில் இருந்தாலும் அவன் கண்களோ நாளா புறமும் சுற்றி வந்தவண்ணம்தான் இருந்தது.
“அப்போவே வச்சிட்டேன்” வழமையாக இரவில் குடிக்க தண்ணீர் வைப்பது தானே ஏன் கேட்கின்றான் என்று புரியாமலே கூறினாள் சாரு.
“எப்போ ஈவ்னிங் வச்ச தண்ணியா? எனக்கு சுடுதண்ணி வேணும்” என்றவன் வலுக்கட்டாயமாக அவளிடம் தண்ணீர் எடுக்குமாறு கூறி அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.
மறக்காமல் தாழிட்டவன் அவள் தலையணையால் அணைக் கட்டுவை பார்த்து சிரித்து விட்டு தூங்க ஆரம்பித்தான். வளமை போல் படுத்த உடன் அவன் தூங்கி விடவில்லை. நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவன் மனதில் வந்து வந்து செல்ல சுதுமெனிகே சொன்னவைகளும் மனதில் வந்து வந்து போனது. சாருவை பார்த்தால் அவள் தூங்கி இருந்தாள்.
அவள் புறம் திரும்பி தலையணைகளை அகற்றியவன் மெதுவாக அவள் கன்னம் தொட ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டது. “சாரு ஜன்னலை பூட்ட மறந்தாளா? காற்றில் திறந்து கொண்டதா?” என்று ஜன்னல் புறம் பார்த்தவனுக்கு அது காற்றில் திறப்பது போல் தெரியவில்லை. மெதுவாக யாரோ திறப்பது போன்ற சத்தமாக இருக்கவே டாச்லைட்டை ஜன்னல் புறம் அடித்தான்.  ஒரு கை இரண்டு நாகங்களை ஜன்னிலிருந்து உள்ளே விட்டுக் கொண்டிருந்தது.  
இரவு மின்குமிழ் எரிந்தாலும் கரண்ட் போனால் தேவைப்படும் என்று ஒரு டார்ச்லைட்டை கட்டிலுக்கு அருகில் வைத்துக்கொள்வான்.
பழையகாலத்து ஜன்னல் திறக்கும் பொழுதே சத்தம் எழுப்பியதால் சாருவை பயமுறுத்தும் உருவம்தான் ஜன்னலில் வந்திருக்கும் என்று நினைத்து இரவு மின்குமிழின் வெளிச்சம் பத்தாது. தான் எழுந்து மின் குமிழை எரிய விடும் நேரத்துக்குள் சென்று விடுமோ என்று டாச்சடித்து பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்தான்.
பாம்பை விடும் கையை கண்டவன் சத்தம் எழுப்பவில்லை. ஆனால் பாம்பை விட்டவன் டாச் வெளிச்சத்தை பார்த்ததும் கண்டிப்பாக ஓட்டம் பிடித்திருப்பான். அதை பத்தியும் லஹிரு கவலையடையவைல்லை. கட்டிலில் இருந்தவாறே ட்ரையரை திறந்து அமோனியாவில் ஊறவைக்கப்பட்ட துணிப்பையை பாம்புகளின் பக்கம் தூக்கிப் போட்டு அவை இரண்டும் கட்டிலின் பக்கம் வராதவாறு பார்த்துக் கொண்டவன் அலைபேசியை எடுத்து டிங்கிரி பண்டாவை அழைத்தான்.
மெதுவாக இறங்கி மின்குமிழை எரிய விட்டவாறே விஷயத்தை கூறி பாம்பை பிடிக்க தேவையான பொருட்களோடு வருமாறு கூறியவன் அலைபேசியை அணைக்க,
மின்குமிழ் எரியவும் தூக்கம் கலைந்த சாரு “இன்னும் தூங்காம என்ன செய்யிறீங்க” என்று கேட்டாள்.
“பாம்பு பிடிக்க போறேன்” என்றவனை “லூசா நீ” என்பது போல் பார்த்தவளை “பயப்படாதே” என்று நாகங்களை காட்டினான்.
நாகங்களை கண்டதும் அச்சத்தில் தாவி அவனை கட்டிக் கொண்டவள் “பாம்பு எப்படி உள்ள வந்தது. தோட்டத்துல கூட பாம்பு வராம இருக்க பண்டா மருந்து வைப்பாரே” என்றாள்.  
“உனக்கு கூட தெரிஞ்சிருக்கு. அது தெரியாம ஜன்னலால கொண்டு வந்து உள்ள போட்டிருக்காங்க” என்றவன் அலைபேசியைத்தான் நோண்டிக் கொண்டிருந்தான்.
“என்ன சொல்லுறீங்க? நான் தான் ஜன்னலை பூட்டினேன். யார் திறந்திருப்பாங்க” என்றவளை புன்னகையோடு பார்த்தவன் வீட்டில் நடக்கும் அத்தனை அமானுஷ்யமான விடயங்களுக்கும் விடை கிடைக்கும் என்பது போல்
“கண்டு பிடிக்கலாம். இங்கேயே இரு நான் கதவை திறந்து பண்டாவை கூட்டிகிட்டு வரேன்” என்று லஹிரு கட்டிலை விட்டு இறங்க போக
“எனக்கு பயமா இருக்கு. இரண்டு பாம்பு தானா? இல்ல கட்டிலுக்கு கீழ இன்னும் இருக்கா? அதுங்க மேல வந்துட போகுது” அச்சத்தில் விழிகளை உருட்டினாள் சாரு.
“மருந்து பைய போட்டதுனால பாரு சுவரோரமா நெளிஞ்சிகிட்டு இருக்குது. என்ன கேட்ட எத்தனை பாம்பா? அவசரத்துக்கு ரெண்டுதான் கிடைச்சதாம்” சிரித்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு சென்று கதவை திறக்க, டிங்கிரி பண்டா கோணிப்பையும், ஒரு குச்சியோடும் உள்ளே வந்தான்.
“யாரு ஹாமு இந்த வேலைய பண்ணாங்க?” அவன் முகத்தில் கோபத்தோடு தான் காவல் இருக்கும் வீட்டில் தன்னை மீறி இப்படி ஒரு காரியம் நடந்தேறி விட்டதே என்ற ஆதங்கமும் இருந்தது.
“வெளிய இருந்து யாராவது வந்திருந்தா நாய்கள் குரைச்சு இருக்கும். இது உள்ளாளுங்கதான். எத்தனை நாள்தான் பண்ணுவாங்க பார்க்கலாம்” லஹிருவின் குரலில் கோபம் கொப்பளித்தாலும் அப்பத்தா சொன்ன “நிதானம் தவறாம வேலை செய்” என்ற மந்திர வாக்கியம் காதில் ஒலிக்க அமைதியானான்.
“உங்கள கொல்ல சதியா? யாரு? என்னால நம்பவே முடியல” சொந்தங்களே இப்படி செய்வார்களா? என்ற அதிர்ச்சி பண்டாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிய
முகம் இறுகிய லஹிரு “எவ்வளவு கொடிய விஷமான பாம்பு என்று தெரியல பண்டா பார்த்து” என்றான்.
“பாம்பை விட கொடியவங்க கூட இருக்குறவங்க” சாரு கோபத்தில் கூற, அவள் கையை பிடித்து அமைதி படுத்தியவன் “இந்த விசயத்த நான் அப்பத்தாகிட்ட சொல்லிக்கிறேன். நீ சொல்லி அவங்கள பயமுறுத்தாதே” என்றான்.
தினமும் இரவில் ஆந்தைகளின் அழுகுரல்களும் பூனைகளின் அலறும் குரலும் அனைவரையும் தூங்க விடாது பயமுறுத்த வேறு செய்தது.
ஆசையாக அனைவரும் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றிருக்க, செனுரியை சாரு நீரில் மூழ்கடித்து கொல்ல முயற்சி செய்ததாக அவள் கத்திக் கூப்பாடு போடலானாள்.
தான் எதற்கு அவ்வாறு செய்ய போகிறேன். தனக்கும் அவளுக்கும் எந்த பகையுமே இல்லையே என்று சாரு கூற, அனோமாவும் விடுவதாய் இல்லை.
சாரு இருந்ததே என்னோடுதான். அவள் எவ்வாறு செனுரியை கொல்ல முயற்சி செய்திருக்க முடியும் என்று லஹிரு கேட்க, சாரு உடுத்தியிருந்த துணியைத்தான் நீருக்கடியில் பார்த்ததாக கூறினாள் செனுரி.
சாரு லஹிருவோடு இருந்தால் செனுரியின் அருகில் குளித்தது யார்? என்று அனைவரும் குழம்பினர். 
எல்லாம் செய்வது ஐராங்கனியின் பேய்தான் என்று வீட்டார் பேச ஆரம்பித்தனர்.
எல்லா கேள்விகளுக்கும் விடையாக அடுத்த இரண்டு நாட்களில் சாருவை ஐராங்கனியின் பேய் பிடித்திருக்க, யாராலயும் அவளை நெருங்க முடியவில்லை. யார் அருகில் சென்றாலும் சீரிப் பாய்ந்தாள்.
அவளை லஹிருவின் அறையிலையே கட்டிப் போட்டு வைத்திருக்க, லஹிரு, சுதுமெனிகே தவிர யாருமே அறைக்கு செல்லவில்லை.
ஐராங்கனியின் பேயை ஓட்டுவதுதான் இதற்கு ஒரேவழியென்று சுதுமெனிகே சொல்ல தொவில் எனும் பேயோட்டும் சடங்கும் அதை தொடர்ந்து பாதுகாப்பு தேடும் சன்னி சடங்கையும் செய்யலாம் என்று முடிவு செய்தனர்.
தொவில் எனும் பேயோட்டும் சடங்கு இரவில் நிகழ்த்தப்படுவதோடு தற்காலிக பலிபீடம் மற்றும் உடைகள் முக்கியமாக நார் மற்றும் இலைகள் போன்ற இயற்கை பொருட்களால் ஆனவை.
மரம் மற்றும் பிற இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட வண்ணமயமான முகமூடிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரவு நேர நிகழ்வுகளில் விலங்கு பலிகள் மற்றும் பிற காணிக்கைகள் அடங்கும்.
தோட்டத்தில் பாய் விரிக்கப்பட்டு சாரு முன்னாடி அமர்த்தப்பட்டு அவள் அருகில் லஹிருவும் சுதுமெனிகேயும் அமர்ந்து அவளை பிடித்துக் கொண்டிருந்தனர். அவளோ ஒரு நிலையில் இல்லாமல் ஆடிக் கொண்டே இருந்தாள்.
பேயோட்டும் கபுவா மந்திரங்களை மாத்திரமன்றி இடையிடை நகைச்சுவையான கதைகளினூடாக புத்திசாலித்தனமான கதைகளை கூற, மேளம் அடிக்கப்பட்டது. அதற்கு இசைந்தவாறு பேய் முகமூடிகளை அணிந்த சிலர் நடனமாட ஆரம்பித்தனர்.
முகமூடி பதினெட்டு வகையில் இருந்தாலும் எட்டு வகையான நடனங்களை ஆடி எந்த பேய் சாருவின் உடம்பில் புகுந்திருக்கும் என்று கண்டறிய முட்பட்டனர்.
சாரு உறுமிக் கொண்டிருந்தாலே ஒழிய கபுவாவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. லஹிரு அவள் காதில் எதோ கூறிக் கொண்டிருந்தான்.    
ஒவ்வொரு பேயையும் மந்திரம் ஓதி அழைக்கும் பொழுது பல்வேறு பேய் உருவங்கள் உரையாடல் மற்றும் நடனம் மூலம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தன.
“யார் சொல்லு, இந்த பெண்ணை பிடித்து ஆட்டுவித்து யார்? சொல்லு உனக்கு என்ன வேணும்? என்ன கொடுத்தா இந்த பொண்ண விட்டுட்டு போவ?” என்று தீப்பந்தத்தை எரிய விட்டு அச்சம் காட்டி எச்சரிக்கை செய்தவாறு நடனமாடி, எந்த பேய் என்பதை கண்டறிந்துகொள்ள சாரு வாய் திறந்தாள்.
எதிர்மறை சக்திகளுக்கு எதிராக ஒரு தனிநபரை அல்லது சமூகத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த சடங்கில் பேய்களை நக்கலாக பேசுவதோடு பாதிக்கப்பட்டவரை நோயாளியாக கருதி குணப்படுத்தவே முயற்சி செய்வார் கபுவா.
“உனக்கு என்ன வேணும்? இதோ உன் முன் சேவல் இருக்கிறது? இரத்தம் வேணுமா? சொல் அறுத்து பலியிடவா?” உரத்த குரலில் கத்திக் கொண்டிருக்க, சுற்றி இருந்த அனைவரும் பயபக்தியோடு வணங்கி வேண்டிக் கொண்டிருந்தனர்.  
லஹிரு மற்றும் சுதுமெனிகேயின் பிடியிலிருந்து திமிறிய சாரு அவர்களை உதறி விட்டு எழ முயற்சி செய்தவாறு “இல்லை எனக்கு சேவல் வேண்டாம். மனுஷ பலிதான் வேண்டும்” என்று சத்தமாக சிரித்தாள். 
அங்கிருந்தவர்கள் அதிர்ந்து நோக்க, “மனுஷ உசுருதான் வேணுமா? எத்தனை உசுரு வேணும். வா வந்து அந்த பீடத்துல உக்காரு” என்று கபுவா அழைக்க சாரு உறுமியவாறே மறுக்க, கபுவாவின் கண்ணசைவில் லஹிரு அவளை இழுத்து சென்று அமர வைத்தான்.
அந்த பீடம் முழுவதும் வாழைத்தண்டு, இலைகள், பூக்கள் மற்றும் துணியின் கீற்றுகளால் மற்றும் சடங்கு கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சுற்று அரங்கத்தின் உள்ளே பல்வேறு மேடைகள் மற்றும் பேய்களுக்கான சிறிய மேடைகள் மற்றும் ஆசனங்கள்  இருந்தன. நடுவில்தான் சாரு அமர்த்தப்பட்டிருந்தாள்.
“மனிஷ உசுரு கேக்குதா உனக்கு? வெறிகொண்டு அலையாத. சேவலை பலியிடுகிறேன். அதன் இரத்தத்தை குடித்து விட்டு இங்கிருந்து சென்று விடு” சேவலை கையில் வைத்துக் கொண்டு கபுவா ஆட்டம் ஆட சத்தமாக சிரித்தாள் சாரு.
“இந்த சேவலை காவு வாங்கவா நான் இன்று இங்கே வந்தேன். எனக்கு அவன் உயிர்தான் வேண்டும். தந்துவிடு. தா… தா…” என்று கத்த அனைவரின் பார்வையும் லஹிருவை பரிதாபமாக பார்த்தன.
ஐராங்கனியுடைய ஆவிதான் லஹிருவின் உயிரை எடுக்க வந்திருக்கிறது என்று அனைவரும் நினைத்தனர்.
தனக்கு கிடைக்காத வாழ்க்கை சாருவுக்கு கிடைத்து விட்டது அதனால் பழிவாங்க வந்து விட்டாள் என்று அனைவரும் பேசலாயினர். தன் கையாலையே சாரு கணவனை கொன்றால் அது ஐராங்கனி காதலித்த ஹாமுவை கொன்றது போல் ஆகிவிடும் என்று ஐராங்கனி நினைத்து விட்டாள் போலும் என்றும் பேசலாயினர்.
ஆனால் அனைவரின் பேச்சையும் பொய்யாக்கி சாருவின் பார்வை லஹிருவின் பக்கம் செல்லாது ஜீவகயின் பக்கம் சென்றிருந்தது. “அவனில்லை. ஹாஹாஹா எனக்கு வேண்டியது அவன் உயிரல்ல. இதோ இவனுடைய உயிர். காதலிச்சு ஒரு பெண்ணை ஏமாத்தினானே அவன். இதோ நான் அவன் பொண்ணோட உடம்புல புகுந்து அவனை பழி கேட்கிறேன். அவனை காவு வாங்காமல் போக மாட்டேன்” என்று சிரிக்க, அதே நேரம் வானத்தில் மின்னல் வெட்டி மறைந்தது.    
“ஐயோ என் பையன். என் பையன ஒன்னும் பண்ணிடாத அவனுக்கு எதுவும் தெரியாது. அவனுக்கு எதுவுமே நியாபகம் இல்ல” அலறியவாறு வந்து சாருவின் காலில் விழுந்தாள் சுமனாவதி.
அங்கே என்னதான் நடக்கிறது என்று சிறியவர்களுக்கு சுத்தமாக புரியவில்லை. சம்பந்தப்பட்ட ஜீவகயிற்கும் சுத்தமாக புரியவில்லை.
சாரு ஜீவகயின் மகள் என்றதில் சுதுமெனிகேயை தவிர அனைவருமே அதிர்ந்து நின்றனர். அதிகமாக அதிர்ந்தது ஜீவகதான்.
“ஐயோ ஐராங்கனி. என் பையன விட்டுடு. அவன் அந்த பொண்ண ஏமாத்தள. எல்லாத்துக்கும் காரணம் நான்தான். என் உசுர எடுத்துக்க” கதறினாள் சுமனாவதி.
சுதுமெனிகே நினைத்தது போல் ஜீவக கவிதாவை ஏமாற்ற அவளோடு பழகவில்லை. அவளை உண்மையாகத்தான் காதலித்தான். அவனுடைய காதல் விஷயத்தில் அவன் அவனை தவிர யாரையும் நம்பவில்லை. அதனாலயே சுதுமெனிகே கவிதாவோடு எந்த நோக்கத்தோடு பழகுவதாக கேட்ட பொழுது முகத்தில் எந்த ஒரு பாவனையையும் காட்டாது, சாதாரணமாக பழகுவதாக கூறிச் சென்றான்.
ஜாதி, மதம் என்று பார்க்கும் மாமனும் அவன் பிள்ளைகளும் கொலையே செய்ய தயங்க மாட்டார்கள் என்று இருக்கும் நிலையில் அத்தை மட்டும் விதிவிலக்காக இருந்து விடுவாளா என்று நினைத்து சுதுமெனிகேயிடம் அவன் கவிதாவை காதலிப்பதாக கூறவில்லை. 
கூறினாலும் இந்த காதல் நிலைக்காது என்று அவள் உதவி இருக்க மாட்டாள். கவிதாவை ஊருக்கு அனுப்பவதில்தான் குறியாக இருந்திருப்பாள்.
அவன் கவிதாவை எவ்வளவு நேசித்தான் என்றால் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தான். மதம் மாறக் கூட தயாராகத்தான் இருந்தான். அதனாலயே அவன் இந்து முறைப்படி அவளை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் நடந்ததை அறிந்திருந்தால் சுதுமெனிகே இருவருக்கும் உதவி இருக்கக் கூடும். விதி யாரை விட்டது.
கொழும்பில் தனியார் நிறுவனத்தில் கொஞ்சம் நாள் வேலை பார்ப்பதாக வீட்டாருக்கு பொய்யுரைத்து விட்டு கவிதாவோடு சந்தோசமாக குடும்பம் நடாத்திக் கொண்டிருந்த ஜீவகயின் திட்டம் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆவதுதான்.
இங்கிருந்தால் நிச்சயமாக தனது குடும்பத்தார் தங்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்று நன்கு அறிந்திருந்த ஜீவக பெற்றோரும் வேண்டாம், குடும்ப சொத்தும் வேண்டாம் கவிதா ஒருத்தியே போதும் என்று அதற்கான முயற்சியில் இருந்தான்.
கவிதாவுடனான திருமணத்தை பதிவும் செய்தான். கடவுச் சீட்டும் வாங்கி அதை கவிதாவிடம் கொடுத்திருந்தான்.
அதற்காக அலையும் பொழுதுதான் லஹிருவின் தந்தை அசேல இவர்களை ஜோடியாக பார்த்து விட்டான்.
கவிதா யார் என்று தெரியா விட்டால் வந்து பேசி இருப்பான். யார் இந்த பெண் என்று விசாரித்திருப்பான். அவள் தங்கள் வீட்டில் வேலை செய்த பெண் என்றதும், அவளோடு இவன் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்று ஜீவகயை பின் தொடர்ந்து அவர்களுக்கு திருமணமானதை அறிந்து கொதித்தான்.
இருவரையும் வெட்டிப் போடும் கோபம் வந்தாலும் தான் இதை தனியாக செய்ய இயலாது என்று தம்பியை அழைத்து விஷயத்தை கூற, புஞ்சி நிலமே தான் சுமனாவதிக்கு உடம்பு முடியவில்லை என்று தகவல் கூறும்படி கூறச் சொன்னான்.
கூடவே சுமனாவதிக்கும், ஜீவகாயின் தந்தைக்கும் இந்த விஷயம் பகிரப்பட்ட கொலை வெறியில் இருந்தனர் அவர்கள்.
அசேல ஜீவகயை எதேச்சையாக சந்திப்பது போல் சந்தித்த நேரம் அவன் அலைபேசிக்கு சுமனாவதி உடம்பு முடியாமல் போய் மரண படுக்கையில் இருப்பது போல் செய்தி வந்ததாக நாடகமாடி ஜீவகயையும், கவிதாவையும் ஊருக்கு வரவழைக்க இவர்கள் திட்டம் போட்டனர்.
ஆனால் ஊருக்கு ஜீவக மட்டும்தான் வந்து சேர்ந்தான். கவிதாவை கொழும்பில் தனியாக விட்டுத்தான் ஜீவக ஊருக்கு வந்தான். அவன் விட்டு வந்ததே அன்னையை பார்த்து விட்டு உடனடியாக கொழும்பு வரவேண்டியே. இவர்களுக்கு உண்மை தெரியும் என்றும் ஜீவகயுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவனும் வந்திருக்க மாட்டான்.
வந்தவனுக்கு குத்துக் கல்லாட்டம் அன்னை சோபாவில் அமர்ந்திருக்கும் பொழுதே இவர்களுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று புரிய பொய் சொல்லி இவனை வரவழைத்ததை பற்றி ஆத்திரம் வந்தாலும், நல்லவேளை கவிதாவை அழைத்து வரவில்லை என்று எண்ணிக் கொண்டான்.
“உடம்புல கொழுப்பெடுத்த அலையிரியா? அந்த வேலைக்கார நாய போய் கல்யாணம் பண்ணி இருக்க? அதுவும் வேற மதம்” என்றவாறே அவன் தந்தை சேரடிய எனும் கைத்தடியால் பின் மண்டையில் ஓங்கி அடிக்க, தடுக்க முனைந்தவனை தலையிலையே சரமாரியாக அடிக்க இரத்தம் பீச்சி அடித்து மயங்கி சரிந்தான் ஜீவக.
ஜீவக அவர்களுக்கு ஒரே மகன். அவன் சந்தோசம் முக்கியம் என்று நினைக்கவில்லை. பொய் சொல்லி ஊருக்கு வந்தவனிடம் பேசி புரிய வைத்து அந்த பெண்ணை விட்டு விட சொல்லி இருக்கலாம் அதுவும் இல்லை.
ஒரே மகன் அவன் விருப்பத்துக்கு வேற்று மதத்து பெண்ணை திருமணம் செய்தான் என்ற ஒரே காரணத்துக்காக அவனை சாகும் வரைக்கும் அவன் தந்தை அடித்தார்.
சுமனாவதிதான் பிள்ளை பாசத்தில் தடுத்து ஜீவகயை அசேலயின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்திருந்தாள்.
கண்விழித்தவனுக்கு நடந்த எதுவுமே நியாபகத்தில் இல்லை. தான் நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற பொழுது வழுக்கி விழுந்து தலை கல்லில் மோதியது நியாபகம் அதன் பின் என்ன நடந்தது என்று விசாரித்தான்.
நான்கு வருடங்களுக்கு முன் நடந்ததை ஏன் இப்பொழுது கேட்கிறான் என்று சுமனாவதிக்கு புரியவில்லை.
மருத்துவரோ நான்கு வருடங்களாக நடந்த எதுவும் ஜீவகாயிற்கு நியாபகத்தில் இல்லை என்று கூற அனைவருக்கும் சந்தோசம் தாளவில்லை. ஏற்கனவே அனோமாவின் சம்பந்தம் வந்திருக்க, ஜாதகமும் பொருந்தியத்தில் திருமணமும் உடனே நடந்தேறியது.
கவிதாவை மறந்து போன நிலையில் ஜீவக அனோமாவோடு புதியதொரு வாழ்க்கையை தொடங்கி அமெரிக்காவில் வாழ ஆரம்பித்தான்.
அவனுக்கு எல்லாம் மறந்து விட்டது என்று புஞ்சி நிலமைக்கு கூட தெரியவில்லை. கவிதாவை ஏமாற்றத்தான் பழகி இருக்கான் என்று சுமனாவதி கூறி இருக்க, அதைத்தான் அவன் சுதுமெனிகேயிடம் கூறி இருந்தான்.
அவனுக்கு பழைய விடயங்கள் நியாபகத்தில் வருமா? கவிதாவை தேடி செல்வானா? என்று சுமனாவதி அஞ்சாத நாளே இல்லை.
பழைய இடங்களையோ, அவன் பழகிய நபர்களையோ சந்தித்தால் நியாபகம் வர வாய்ப்பிருக்கு என்று மருத்துவர் கூறி இருக்க, ஜீவக அமெரிக்காவில் செட்டில் ஆனதில் அவனது பழைய நியாபகங்கள் அவனுக்கு கிட்டவே இல்லை.
கவிதா என்றொருத்தியே நியாபகத்தில் இல்லாத பட்சத்தில் சாரு என்றொரு மகளை எப்படி அறிந்திருக்க முடியும்?
ஜீவக கவிதாவை காதலித்ததையும், திருமணம் செய்ததையும் அவனுக்கு என்ன நடந்தது என்பதையும் சுமனாவதி கதறியவாறு சொல்லி முடிக்க, அமர்ந்திருந்த ஜீவக தலையை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.
அவனை பிடித்த அனோமாவை கூட அவன் தள்ளி விட்டான். சாருவின் கண்கள் கலங்கி இருக்க லஹிரு கண்களாளேயே அவளை அதட்ட, வெறி பிடித்தவள் போல் சிரித்தாள் சாரு.
மகன் விழுந்ததும் சுமனாவதி அவனிடம் ஓடி இருந்தாள். 
“இந்த உலகத்துல காதலுக்கு யார் யாரோ எதிரியா இருப்பாங்க. ஜாதி, மதம், பெத்தவங்க ஏன் காதலிச்சவன் கூட எதிரியா இருந்திருப்பான். ஆனா உன் காதலுக்கு நீயே எதிரி… நீயே எதிரி… நீயே எதிரி…” சத்தமாக சிரித்த சாரு “உன் மூலமாகவாவது சரித்திரத்தை மாத்தலாம்னு நினச்சேன். உன் பொண்ணு மூலம் மாத்திட்டேன். நான் கொடுத்த சாபத்தை நான் வாபஸ் வாங்கிக்கிறேன். இனிமேல் இந்த குடும்பத்துக்கு எந்த சாபமும் நிகழாது” ஐரங்கனியாக மாறிய சாரு கர்ஜனை குரலில் கூறி விட்டு மயங்கி சரிய லஹிருவுமே ஒரு நொடி துணுக்குற்றான்.
கபுவா சில சடங்குகளை செய்து முடித்த பின் சாருவை வீட்டுக்குள் அழைத்து சென்று படுக்க வைத்தான்.
“ஏன் அப்பத்தா சாரு ஜீவக மாமா பொண்ணு என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” சுதுமெனிகே அவனோடு பேசியவைகளை வைத்து கேட்டான் லஹிரு.
“அவ இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சி கிட்டேன். அவ ஜாதகம் பொருந்தியதாலதான் உனக்கு கட்டி வச்சேன். இப்போ அது இல்ல பிரச்சினை ஜீவக அவ உன் பொண்ணு. அவளை நீ ஏத்துக்கிறியா?” சாரு இங்கு வந்ததே அவனை தேடி என்பதை கூறினாள் சுதுமெனிகே.  
லஹிரு நாடியை தடவியவாறு யோசிக்க ஆரம்பித்தான்.
“எனக்கு கனவுல நான் கவிதா கூட வாழ்ந்த மாதிரியும், அவளை சந்திச்சது, காதலிச்சது என்று எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நியாபகத்துல வந்தது. முகம் தெளிவில்லாம இருக்கும், சில நேரம் கனவுல பார்த்தது சரியா நியாபகத்துல இருக்காது. கனவுதான் என்று சில நேரம் கண்டுக்காம விட்டுடுவேன். அப்படியே விட்டாலும், அது உண்மையாக நடந்த மாதிரி ஒரு பீல கொடுக்கும்.  உடம்பெல்லாம் சிலிர்க்கும். எதுக்கு இந்த கனவு வருது என்று தெரியாம பலநேரம் குழம்பிப் போய் இருக்கேன். ஆனா அது கனவல்ல நிஜம் என்று தெரியிறப்போ நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழாம ஏதோ ஒரு வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு நினைக்கிறப்போ, இத விட பெரிய தண்டனையை நான் அனுபவிக்க முடியாது” கதறலானான் ஜீவக.
சுமனாவதி மகனை நெருங்க “என்ன தொடாத. யார் முதல்ல சாவாங்களோ தெரியல. நான் உனக்கு கொடுக்குற தண்டனை சாகுற வரைக்கும் நீ என் முகத்துல முழிக்க கூடாது. நீ செத்தாலும் நான் வர மாட்டேன். நான் செத்தா நீ வராத” ஆவேசமாக கத்தினான் ஜீவக.
“ஜீவக என்ன மன்னிச்சிடுப்பா……” சுமனாவதி கதற
“புள்ள பாசம் இருக்க வேண்டியதுதான். அதற்காக சொந்த பேத்தியையே கொல்ல பார்த்தியே உன்ன என்ன செய்யலாம்” சுதுமெனிகே சுமனாவதியை அறைய, இது என்ன புதுக் கதை என அனைவரும் பார்த்தனர்.

Advertisement