Advertisement

அத்தியாயம் 16
வீரசிங்கையின் நினைவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, ஜீவக வருவானா? மாட்டானா? என்ற கவலை சாருவையும், சுதுமெனிகேயையும் தொற்றிக் கொண்டிருந்த நேரம் அது.
அனைவரும் பாக்டரிக்கு சென்றிருந்த பொழுது வீட்டு வாசலில் வண்டி வந்து நிற்க, சுமனாவதி வாசலுக்கு ஓடி இருந்தாள்.
ஜீவக குடும்பத்தோடு வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.
சாருவின் வயதில் இருந்த அவன் மகள் செனுரி அப்பத்தாவை கட்டிக் கொண்டு நலம் விசாரிக்க ஒரே மகனான உவிந்துவும் சுமனாவதியை கட்டிக் கொண்டான். 
ஜீவகையும், அவன் மனைவி அனோமாவும் அன்னையிடம் நலம் விசாரித்தவாறே காலில் விழுந்து வணங்கினர். அதை தொடர்ந்து பேரனும் பேத்தியும் விழுந்து வணங்க, டிங்கிரி பண்டா ஓடி வந்து அவர்களின் பயண பொதிகளை உள்ளே எடுத்து சென்றான்.
வீட்டில் உள்ளவர்கள் எங்கே என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான் ஜீவக.
அனைவரும் பாக்டரிக்கு சென்றிருப்பதாகவும், மதிய உணவுக்கு வந்துவிடுவார்கள் என்ற சுமனாவதி அவர்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்து விட்டு பயணத்தை பற்றி விசாரிக்கலானாள்.
மதியம் பாக்டரியிலிருந்து வந்த சாருவுக்கு இவர்கள் யார் என்று தெரியவில்லை. சுமனாவதியை ஜீவக “அம்மா” என்று அழைத்ததும்தான் வந்திருப்பது தந்தை என்று அவளுக்கு தெரிந்தது.
தந்தையை அன்னைதான் அடையாளம் காட்டுவாள். இங்கு தந்தையே “அம்மா” என்று அழைத்ததில்தான் அடையாளம் கண்டு கொண்டாள் சாரு.
பெருக்கெடுத்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் அறைக்குள் ஓடி மறைந்து அழுது கரைந்தாள்.
அன்னை சொன்னது, அத்தை சொன்னது, சுதுமெனிகே சொன்னது என்று எல்லாமே அவள் மனதில் அலைக்கழிக்க தலை வலிக்க ஆரம்பித்தது.
மாமாவின் குடும்பத்தாரை லஹிரு நலம் விசாரிக்க, ஜீவக லஹிருவிடம் “என்ன சொல்லாமல் கொள்ளாமல் திடிரென்று கல்யாணம் செய்து கொண்டாய்?” என்று விசாரித்தான்.
“காதல் திருமணம்” என்று ஹரித அவர்களின் காதல் கதையை இவன் இஷ்டத்துக்கு சொல்லலானான்.
அவன் சொல்ல சொல்ல செனுரி முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணுதான் எங்க கூட ஒரு வார்த்த பேசாம உள்ள போய்ட்டா” குத்தலாகவே கூறினாள் அனோமா.
சிலர் சிலநேரம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் பேசிவிடுவது மனித இயல்புதான். சாருவின் நிலையை அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் மாட்டார்கள்.
“பாக்டரியிலிருந்து வரும் போதே தலைவலி என்று சொன்னா மாத்திரை போட போய் இருப்பா. இருங்க நான் கூட்டிட்டு வரேன்” வீட்டுக்கு வந்தவர்களோடு ஒரு வார்த்தியேனும் பேசாமல் சென்றதில் லஹிருவின் கோபத்தை தூண்டியிருந்தாள் சாரு.
பாக்டரிக்கு செல்லும் போதும் சரி வீட்டில் இருக்கும் பொழுதும் சரி லஹிருவின் அறையை அவன் தாழிடுவதில்லை. அவன் உள்ளே இருந்தால் கதவை தட்டி அனுமதியோடுதான் யார் என்றாலும் வருவார்கள்.
இன்று அவன் அறைக்கே அவன் கதவை தட்டி விட்டு செல்ல வேண்டுமா? உள்ளே இருப்பது அவன் மனைவி? ஆனால் எதற்காக இவர்களை பார்த்து அவள் உள்ளே சென்றாள் என்று லஹிருவுக்கு புரியவில்லை.
சாரு கதவை பூட்டி இருக்கவில்லை. கதவில் கைவைத்த உடன் திறந்து கொண்டதும், இவன் உள்ளே வரும் சத்தம் கேட்டு பரபரவென அவள் விழிகளை துடைத்துக் கொள்வதும் அவன் கண்களில் விழுந்தது.
“என்னாச்சு?” அவளை திட்ட வந்தவன் அவள் கண்ணீரை கண்டு நிதானமாக விசாரித்தான்.
“இல்ல. கண்ணுல தூசி போயிருச்சு”
கண்ணில் தூசி போனால் கண்கலங்குவதற்கும், அழுதால் கண் சிவப்பதற்கும் வித்தியாசம் கூட அவனுக்கு தெரியாதா?
ஒருவேளை மாமா குடும்பத்தை பார்த்து இவள் குடும்பம் நியாபகம் வந்திருக்குமோ என்று நினைத்தவன் “வீடு நியாபகம் வந்திருச்சா? தாத்தா திதி முடிஞ்சா பிறகு ஊருக்கு போயிட்டு வரலாம்” என்றான்.
அவனின் அனுசரணையான பேச்சு சற்று ஆறுதலை கொடுக்க, சரியென தலையசைத்தவள் “நான் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். வந்தவங்களுக்கு குடிக்க…” என்றவாறு வெளியே செல்ல முற்பட,
“அதெல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சு” என்றவாறே அவள் தோள்களை பற்றி அவளை அவனது குளியலறையின் பக்கம் தள்ளி விட்டான்.
“இல்ல நான் வெளிய…” என்றவளை முறைத்தவன்
“ஏன் வந்தவங்க கிட்ட போய் நாம போட்ட எக்ரிமண்ட்டோட காப்பிய கொண்டு போய் கொடேன். நமக்குள்ள இருக்குற உறவு என்ன மாதிரி என்று தெரிஞ்சிக்கட்டும். அவங்க இங்க இருந்து போறவரைக்குமாவது என் மனைவியா இரு. புரியுதா?” என்றவன் புன்னகைத்துக் கொண்டான்.
அவன் புன்னகையின் அர்த்தம் வில்லங்கமானது என்று இவளுக்கு புரியவில்லை. அவனை முறைத்து விட்டு முகம் கழுவ சென்றாள்.
சாரு குளியலறைக்கு சென்ற மறுகணம் “லஹிரு ஐயே {அண்ணா} என்றவாறு வந்தாள் செனுரி. 
“வா செனுரி படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று இவன் ஆரம்பிக்க
“உங்களுக்கு கேட்க வேற கேள்வியே கிடைக்காதா? எப்ப பார்த்தாலும் இதே கேள்வியைத்தான் கேட்பீங்களா? நான் மெஸேஜ் பண்ணாலும் ரிப்லை பண்ணுறதில்ல. அப்படி என்ன அவசரம் கல்யாணத்துக்கு? நான் வரும் வரைக்கும் வெய்ட் பண்ண முடியாதா? உங்க பொண்டாட்டி என்ன பேரழகியா? என்ன கல்யாணம் பண்ணாம அவளை பண்ணிக்கிட்டீங்க?” படபடவென பொரிய அவள் பேசியதை கேட்டவாறே குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் சாரு.
அவள் உள்ளே இருப்பாள் என்று இவள் எதிர்பார்க்கவில்லை போலும் சட்டைன்று பேச்சை நிறுத்தியவள் என்ன சொல்வதென்று முழித்தாள்.
அனோமாவின் தந்தை அமெரிக்காவில் தொழில் செய்து கொண்டிருக்க அவள் அங்கேதான் பிறந்து வளர்ந்தாள். ஜீவகயை திருமணம் செய்த பின் அவள் தந்தையுடைய கம்பனி இவன் வசமானது.
திருமணத்துக்கு பின் மருமகள் தங்களோடு இருப்பாள் என்று சுமனாவதி எண்ணி இருக்க, மருமகள் மகனை அழைத்துக் கொண்டு அமேரிக்கா சென்று விட்டாள்.
இதனால் சுமனாவதிக்கு அனோமாவை கண்டாலே ஆகாது. ஆனால் பேத்தியையும், பேரனையும் ரொம்பவே பிடிக்கும்.
அலைபேசி வழியாக உறவு இருந்தாலும் விடுமுறை கிடைத்த உடன் ஜீவகயிடம் கெஞ்சிக் கூத்தாடி இலங்கைக்கு வந்து அப்பத்தாவிடம் செல்லம் கொஞ்சி விட்டுத்தான் போவார்கள்.
சுமனாவதிக்கும் செனுரியை லஹிருவுக்கு திருமணம் செய்து வைத்து பேத்தியை இலங்கையிலையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை சாடைமாடையாக மகனிடம் கூறி இருந்தாள்.
அதை அறிந்த அனோமா செனுரி லஹிருவை திருமணம் செய்தால் வருங்காலத்தில் அமெரிக்காவில் இருக்கும் தங்களது சொத்துக்களை இருவரும் கட்டிக்காப்பார்கள் என்று அவள் ஒரு திட்டம் போட்டாள்.
அலைபேசி வழியாக இருந்த உரையாடல்கள் செனுரியின் காதில் விழுந்து தான் லஹிருவை திருமணம் செய்ய போகிறோம் என்று கனவில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.
திடிரென்று அவன் திருமணம் நிகழ்ந்ததை அறிந்து அழுது கரைந்ததுமில்லாமல் வீட்டையே ரணகளப்படுத்தி விட்டுத்தான் விமானம் ஏறி இருந்தாள்.
அவள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதே லஹிருவுக்கு தெரியவில்லை. அவள் பேசியது அவனுக்கு கேலி செய்வதற்காகத்தான் தோன்றியதே ஒழிய அதிர்ச்சியாக இருக்கவில்லை.
ஆனால் இதை சாரு எவ்வாறு எடுத்துக்கொள்வாளோ என்று இவன் யோசிக்க, அவள் தான் இவனுக்கு அதிர்ச்சி கொடுத்தாள்.
“நீ எனக்கு தங்கச்சியா? சக்காளத்தியா? இவன் என்னடான்னா நான் இவன் தம்பிய கரெக்ட் பண்ணிடுவேன்னு பயந்தான். இவ இவனுக்கு ரூட்டு விடுறா. நல்ல குடும்பம்டா சாமி” இருவரையும் முறைத்தவள் “என் வால் மாதிரி இப்படி பின்னாலே அலையாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டீங்களா? பாக்குறவங்க தப்பா நினைக்க போறாங்க என்று எத்தனை தடவ சொல்லுறது? போங்க போய் பேசிகிட்டு இருங்க நான் வரேன்” லஹிருவை அதட்டிய சாரு.       
“நீ என்னமா இங்க பண்ணுற? பசிக்கலயா? வா” லஹிருவை கண்டுகொள்ளாது செனுரியை கிளப்ப முயன்றாள்.
லஹிரு என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. சாருவை இழுத்து அணைத்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு “இப்படி மத்தவங்க முன்னாடி என்ன அதட்டக் கூடாது என்று உனக்கு எத்தனை தடவ சொல்லுறது? சொன்ன பேச்சு கேக்க மாட்டியா? நான் செய்யக் கூடாது என்று சொல்லுறதையே செஞ்சா உனக்கு இதுதான் தண்டனை. நீ தினமும் எனக்கு முத்தம் கொடுக்கணும். இப்போ பாரு நான் கொடுக்க வேண்டியதா போச்சு. அதிகமா பேசாத கன்னத்துல கொடுத்ததை உதட்டுல கொடுத்துடுவேன்” கண்சிமிட்டியவாறே அறையை விட்டு வெளியேறினான்.
அவன் செயலில் பெண்கள் இருவருமே அதிர்ந்து நின்றனர்.
சாருவை பற்றி செனுரி அறிந்து வைத்தது வீட்டு வேலைக்கு வந்த பெண் என்றும், லஹிருவுக்கு இருக்கும் சர்பதோஷத்தின் காரணமாகத்தான் சாருவை சுதுமெனிகே அவனுக்கு இவளை திருமணம் செய்து வைத்திருக்கிறாள்.
அப்படி என்றால் இவர்களுக்குள் எந்த ஒட்டும் உறவும் இருக்காது, லஹிருவோடு பேசி தான் அவனை திருமணம் செய்யலாம் என்றுதான் பேச வந்தாள் செனுரி. அவன் சாருவைய் முத்தமிட்டதை பார்த்ததும் ஹரித சொன்னது கதையல்ல என்று புரிந்துகொண்டாள். 
செனுரி பேசியதற்கு லஹிரு ஆதரவு தெரிவிக்கவுமில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை. அவளை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தது இவள் ஹரிதவை திருமணம் செய்ய கூடாது என்று எடுத்துக் கொண்டாலும்,  செனுரியை காதலிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கவுமில்லை. காதலித்திருந்தால் நிச்சயமாக இவளை திருமணம் செய்திருக்கவும் மாட்டான் என்று சாருவுக்கு நொடியில் புரிந்து போனது. அதனாலயே தைரியமாக சாரு அவ்வாறு பேசி இருந்தாள்.
ஆனால் அவன் எதற்கு முத்தம் கொடுத்தான் என்று குழம்பியவள் செனுரியின் முன்னால் தான் ஒரு நாடகத்தை அரங்கேற்ற, அது அவனுக்கு சாதகமாக இருந்ததால் சேர்ந்து நடித்து விட்டு சென்று விட்டான் என்று நினைத்தாள்.
சாருவை முறைத்த செனுரி அன்னையை தேடி சென்றாள்.
“எங்கடி போன? வந்த உடனே சுத்த ஆரம்பிச்சிட்டியா?” என்ற அன்னையை கட்டிக் கொண்டு லஹிரு சாருவை விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பித்தாள்.
“அவங்க ரெண்டு பேரும் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன? அவனுக்குத்தான் சர்ப்பதோஷம் இருக்கே. அல்பாயுஸுல போக போன்றவன பத்தி எதுக்கு யோசிக்கிற? அவன் செத்துப் போய்ட்டா மொத்த சொத்தும் ஹரிதவோட பேர்ல வந்துடும். நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா ராணி மாதிரி ஆளலாம். அந்த வேலைக்காரிய துரத்துறது பெரிய விஷயமா?” அனோமா மகளை மூளை சலவை செய்தாள்.
லஹிரு திறமையானவன்தான். சொத்தும் இருக்கு. ஆனால் என்று அவனுக்கு சர்ப்பதோஷம் இருக்கு என்று அறிந்து கொண்டாளோ அன்றே அவள் கணக்கு மாறிப்போனது. லஹிரு இறந்தால் எல்லா சொத்தும் ஹரிதவுக்கு வந்து விடும். அவனை மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும். அதற்காகத்தான் குடும்பத்தோடு இந்த தடவை இலங்கைக்கு வந்திருக்கிறாள் அனோமா.
“என்னமா பேசுற? நீங்க எல்லாரும்தானே நான் லஹிரு அத்தானை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொன்னீங்க” செனுரி சண்டை போட
“சொன்னோம் தான். அதற்காக செத்து போன்றவன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? இல்ல அவன் செத்த பிறகு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறியா? ஆனா இப்போ அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு. அவனை மறந்துட்டு ஹரிதவின் பக்கம் கவனம் செலுத்து. வீட்டுல ரெண்டாக்கி அதகளப்படுத்திட்ட, இங்க வந்தும் ஆரம்பிச்சிடாத. புத்திய தீட்டு. நல்லவேளை இது உன் அப்பாக்கு தெரியல”
அன்னையின் அறிவுரையை கேட்டு பெருமூச்சு விட்ட செனுரியின் முகம் தெளிவானது.
சாருவுக்கு தந்தையை காண ஆசையும், ஆர்வமும் இருந்தது என்னமோ உண்மைதான். தான் யார் என்றே தெரியாதவரிடம் என்ன பேசுவது? தன்னை எப்படி அறிமுகப்படுத்துவது? என்று தெரியாமல் சோகமாக இருந்தாள். ஆனாலும் ஜீவகயை விழுந்து, விழுந்து கவனித்தாள். சாருவை கவனித்த சுதுமெனிகே திதி முடியட்டும் பொறுமையாக பேசிக்கொள்ளலாம் என்றாள்.
உவிந்து சாருவோடு கொஞ்சம் ஒன்றி இருந்தான். விதவிதமாக கிராமிய உணவுகளை சமைத்துக் கொடுத்தால் யார் தான் அன்பு காட்டாமல் இருப்பார்கள்.
ஜீவகையும் சாருவின் கைப்பக்குவத்தை வெகுவாக புகழ்ந்தான். சாருவுக்கு தந்தையுடனான இந்த நெருக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தது.
சுதுமெனிகே சொன்னது போல் தந்தையை வில்லனாக அவளால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. உண்மையை சொன்னால் அவளை ஏற்றுக் கொள்வாரோ, இல்லையோ, ஏற்றுக்கொண்டால் லஹிருவை பிரிந்த பின் தந்தையோடு சென்று வாழலாம் என்று இருந்தவளின் மனம் மாறி இருந்தது. “மகளே” என்று அவளை ஒரே ஒரு தடவை அழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டாள். அவருக்கென்று அழகான குடும்பம் இருக்க தன்னால் எந்த பிரச்சினையும் வந்து விடக் கூடாதென்று அவரோடு செல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.  
வீரசிங்கையின் நினைவு நாளுக்கு முந்தையநாள் இரவு புத்தகோவிலிலிருந்து ஒரு பிக்கு வரவழைக்கப்பட்டு பிரசங்கம் நிகழ்த்தப்பட்டு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரசிங்கையின் நினைவு நாளன்று புத்தகோவிலிலிருந்து பிக்குகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒற்றைப்படையில் இருந்தனர்.
பிக்குகள் அனைவரும் வெள்ளை துணி போர்த்தப்பட்ட கதிரையில் அமர்ந்திருக்க, அவர்களின் முன்னால் ஒரு மேசையில் தண்ணீர் நிரப்பப் பட்ட ஒரு பாத்திரமும் வைக்கப் பட்டிருந்தது.
வீரசிங்கையின் குடும்பத்தார் அனைவரும் கீழே அமர்ந்து வணங்கியவாறு அவர்கள் ஓதும் மந்திரங்களை செவிசாத்தவண்ணம் இருந்தனர்.
முதலில் அமர்ந்திருந்த பிக்கு ஒரு வெள்ளை நூலை பிடித்திருக்க, வரிசையாக எல்லா பிக்குகளும் அந்த நூலை பிடித்துக் கொண்டு அப்படியே தொடர்ந்து கீழே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரினதும் கையிடுக்கின் வழியே சென்று கடைசி நபர் வரை சென்றிருந்தது.
மந்திரம் ஓதிய பின் இறந்தவருக்கு பிராத்தினையும், நினைவாஞ்சலியும் செய்யப்பட்டது.
வெள்ளை நூல் வெட்டப்பட்டு அனைவரினதும் பாதுகாப்புக்காக கைகளில் கட்டிவிடப்பட்டது.   
அதன் பின் பிக்குகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதோடு விடைபெறும் பிக்குகளின் காலில் ஒவ்வொருவராக விழுந்து வணங்கி உணவு மற்றும் இன்னும் சில பொருட்களையும் கொடுத்து வழியனுப்பினார்.
மந்திரம் ஓதப்பட்ட நீரை வீடு முழுக்க தெளிக்க சொன்னதால் சாரு அந்த வேலையில் ஈடுபட அவளுக்கு உதவுமாறு ஜீவக செனுரியை அனுப்பி வைத்தான்.
பின்பு குடும்பத்தார் அனைவரும் வீரசிங்கவை அடக்கம் செய்த இடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து விளக்கேற்றி வணங்கி விட்டு வீடு திரும்பினார்.
இரண்டு வண்டிகளில் சென்றதால் ஒரு வண்டியை லஹிருவும், ஒரு வண்டியை ஹரிதவும் ஓட்டிச் சென்றிருந்தனர்.    
வரும் பொழுது ஒரு வண்டியை ஜீவக ஓட்டிக் கொண்டு வர அமெரிக்காவில் இடது புறத்தில் வண்டி ஓட்டி பழகியவனுக்கு இங்கே வலது புறத்தில் ஓட்ட வேண்டும் என்பதால் கொஞ்சம் சிரமமாக இருந்திருக்க, ஒரு வளைவில் திருப்பி கல்லில் மோதி இருந்தான்.
நல்லவேளை அனைவரும் இருக்கை பட்டி அணிந்திருந்தபடியால் பெரிதாக அடி ஏதும் இருக்கவில்லை. ஜீவகயின் கால் மட்டும் கொஞ்சம் பிசகி இருந்தது.
உடனே லஹிரு மாமனை அழைத்துக் நாட்டு வைத்தியரிடம் சென்று காலுக்கு மருந்து கட்டிக் கொண்டு வந்தான்.
ஒரு வாரத்துக்கு காலை அசைக்கக் கூடாது என்று மருத்துவர் கூறி இருக்க, நாளை அன்னையோடு ஊருக்கு செல்லலாம் என்று இருந்த பயணம் தடைபட்டது.
ஆனால் அனோமாவுக்கு புஞ்சி நிலமையும் மெனிகேயும் இருப்பதால் செனுரி மற்றும் ஹரிதவின் திருமணத்தை பேசி முடிவு செய்துகொள்ளலாம், ஒத்துக்கொண்டால் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.
அதற்கு அவர்கள் ஊருக்கு செல்லாமல் இருக்க வேண்டும். சென்றால் அங்கு சென்றல்லவா பேச வேண்டி இருக்கும். அதற்கு தனியாக செல்ல முடியாது கணவனோடு செல்ல வேண்டி இருக்கும். கால் சரியாகும்வரை எங்கும் செல்ல முடியாது. இவர்களை ஊருக்கு செல்ல விடாமல் எப்படி தடுப்பது என்று யோசிக்கலானாள்.
அதே சமயம் பின்னாடி கருணா ஆச்சி கத்துவது கேட்கவும் அனைவரும் அங்கு விரைந்தனர்.
பின் பக்கம் சில காகங்கள் இறந்து கிடக்க அனைவருமே அதை பார்த்து அதிர்ந்தனர்.
“என்னைக்கி இவள கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு வந்தீங்களோ அன்னைல இருந்து இந்த வீட்டுல அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. இவள வீட்டுல இருந்து துரத்துங்க எல்லாம் சரியாகும்” புஞ்சி நிலமே சாருவை வீட்டை விட்டு துரத்துமாறு கத்த ஆரம்பித்தான். 
“வாய மூடு. அவளை நான் என் பேரனுக்கு எதுக்காக கல்யாணம் பண்ணி வச்சேன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். எந்த காரணத்தை கொண்டும் அவ இந்த வீட்டை விட்டு போகக் கூடாது. அவ இந்த வீட்டை விட்டு போனா, நான் பொணமான பிறகு போகட்டும்” என்றாள் சுதுமெனிகே
“பாட்டி…”
“அப்பத்தா…”
அவர்கள் போட்ட ஒப்பந்தத்தை சுதுமெனிகே படித்தது போல் பேசியதை கேட்டதும் சாருவும் லஹிருவும் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர்.
“இத க்ளீன் பண்ணிடுங்க” சுதுமெனிகே உத்தரவிட்டு லஹிருவை அழைத்துக்கொண்டு அவனது அறைக்கு சென்றாள்.
மெனிகே கணவனிடம் பொருமிக் கொண்டிருக்க, அவர்களை அணுகினாள் அனோமா.
“இங்க பாருங்க. நடக்குற விஷயம் எனக்கும் சரியா படல. அதுக்கு காரணம் அந்த பொண்ணானும் தெரியல. நீங்க ரெண்டு பேரும் இப்படி சத்தம் போட்டு உங்க அம்மாவை கோபப்படுத்தினா சரியா? நிதானமா யோசீங்க”
“என்ன சொல்ல வரீங்க?” மெனிகே கேட்க,
“உங்க அம்மா வயசானவங்க. எத்தன நாள் உசுரோட இருப்பாங்க. அவங்க போன பிறகு நல்லது, கெட்டது எல்லாம் நீங்க தானே பார்க்கணும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கலாமே. உங்க பையன் கல்யாணத்த பத்தி யோசீங்க”
“என் பையனுக்கு இருபத்தி நாலு வயசுதான் ஆகுது. அவனுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” புஞ்சி நிலமே குறுக்கிட
“உங்க பையனுக்கும் கல்யாணம் பண்ணனும் உங்க அம்மா ஜாதகம் ஜோசியம் என்று  கண்டவள உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துட போறாங்க. அத பத்தி யோசீங்க. உங்க குடும்பத்து ஏத்தா மாதிரி நம்ம ஜாதில, சீதனத்தோட நல்லா தெரிஞ்ச பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்த பண்ணிடுங்க.
வரவ உங்க பேச்சு கேட்டு நடக்க கூடியவளாகவும் இருக்கணும். அதே சமயம் குடும்பத்துக்கு எத்தவளாகவும் இருக்கணும்” தனது மகளை விட ஹரிதவுக்கு ஏத்த பெண் இருப்பாளா? என்ற விம்பத்தை உருவாக்கி. அவர்களே பெண் கேட்டு வரும்படி செய்து விட்டு சென்றாள் அனோமா.  
அனோமா பேசி விட்டு சென்றதை யோசித்துக் கொண்டிருந்த இருவருக்கும் பல்ப் எரிந்தது போல் செனுரியை ஹரிதவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
அன்னையிடம் பேசினால் மறுத்து விடுவார். நேரடியாக ஜீவகயிடம் பேசி விட வேண்டியதுதான். அதை இன்றே பேசி விட வேண்டும் என்று அவனது அறைக்கு சென்றனர்.
அங்கு சென்றால் சாரு அவனை கட்டிலில் அமரவைத்து காலை தூக்கி கட்டிலில் வைத்துக் கொண்டிருந்தாள்.
“எங்க போனாலும் இந்த தரித்திரம் விடாது போலயே” மெனிகே முணுமுக்க
இவர்களை கண்டு ஜீவக “உள்ள வாங்க என்ன வாசல்லையே நின்னுட்டிங்க?” என்று அழைத்தான்.
அவன் குரலில் திரும்பிப் பார்த்த சாரு அவர்கள் தன்னை கண்டுதான் உள்ளே வராமல் இருப்பதை புரிந்துக் கொண்டு “நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று வெளியேறினாள்.
“ரொம்ப அருமையான பொண்ணு இல்ல. எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்யிறா. அத்த லஹிருவுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ண எங்க இருந்துதான் தேடி புடிச்சாங்களோ. அவங்க செலெக்ஷன் என்னைக்குமே தப்பாகாது” சுதுமெனிகேயை புகழ, முகம் சுருங்கினாள் மெனிகே.
“யாரை எங்க வைக்கணும் என்று அம்மாக்கு தெரியல. புத்தி கெட்டு எல்லாம் செய்யிறாங்க. வேலைக்கு வந்தவளை வீட்டு மருமகளா ஆகிட்டாங்க. வேற மதம்” அது இது என்று புஞ்சி நிலமே பேச
“எந்த காலத்துல இருக்க? இன்னமும் ஜாதி, மதம் என்று பேசிகிட்டு இருக்க? உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு. நீ இன்னமும் அப்படியே இருக்க. உன் அம்மாவே மாறிட்டாங்க” சிரித்தான் ஜீவக.
“அண்ணா அமெரிக்கால இல்ல இருக்காரு அதான் அவர் எண்ணங்கள் வித்தியாசமா இருக்கு” என்ற மெனிகே பேச வந்ததை பேசாமல் எதையெதையோ பேசி நேரத்தை வீணடிப்பதாக ஜாடை காட்டி கணவனை கண்களாளேயே அடக்கினாள்.
அதை புரிந்துக் கொண்ட புஞ்சி நிலைமையும் “சரி அத விடு உன் கால் வலி எப்படி இருக்கு?” சட்டென்று பேச்சை மாற்ற
“ரொம்ப வலிச்சது. சாரு கை பட்டதும் வலியே இல்ல”
மீண்டும் சாரு புராணத்தை ஆரம்பித்து விடுவானோ என்று “செனுரிக்கு மாப்பிள்ளை பார்க்கலையா?” என்று கேட்டாள் மெனிகே.
“இன்னும் இல்ல. பார்க்கணும்” என்றவன் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.
“என் பையனுக்கும் பொண்ணு பார்க்கணும். ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்தினா மேற்கொண்டு பேசலாமா?” புஞ்சி நிலமே நேரடியாகவே கேட்க, ஜீவகாயிற்கு மறுக்க காரணங்கள் எதுவும் இருக்கவில்லை.
ஆனாலும் முதல்ல பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிக்கணும் அதற்கு முதல்ல ஜாதகம் பொருந்தனனும் என்று விட்டான்.
அவன் சொல்வது நியாயமாக தோன்ற செனுரியிடம் நீ பேசு, ஹரிதவிடம் தாங்கள் பேசுவதாக கூறிச் சென்றனர்.
அதன் பிறகு வீட்டில் நடந்தேறிய சம்பவங்களால் செனுரியிடம் ஜீவகயாலையும் பேச முடியவில்லை. ஹரிதவிடம் புஞ்சி நிலைமை மற்றும் மெனிகேயாலையும் பேச முடியவில்லை.
ஆனால் ஜீவக மனைவியிடம் இந்த விஷயத்தை கூறி இருக்க, அனோமா மகளிடம் தந்தை கேட்டால் சம்மதம் என்று கூறுமாறு கூறி இருந்தாள். அதற்கு செனுரியும் தலையசைத்திருந்தாள். 
ஆனால் மேற்கொண்டு பேச முடியாதபடி சாருவை கருப்பு உருவம் பிடித்துக் கொண்டதை அடுத்து வீட்டில் சாருவுக்கு சிங்களவர்களின் முறைப்படி தொவில் எனும் பேயோட்டும் சடங்கு நடைபெற இருந்தது.

Advertisement