Advertisement

அத்தியாயம் 15
அன்று மாலை லஹிரு பாக்டரியிலிருந்து வரும் பொழுது சாரு தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறே வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவனுக்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை. அங்கேயே அமர்ந்து அவளைத்தான் பார்த்திருந்தான்.
இந்த கொஞ்சம் நாட்களாக அவளை கவனித்ததில் அவனிடமிருந்து முற்றாக ஒதுங்கியேதான் இருக்கின்றாள். இவன் அழைத்து ஏதாவது கேட்டாலும் அல்லது கொண்டு வரச் சொன்னாலும் பதில் சொல்லாமல் தலையசைத்து விட்டு சென்று விடுவாள். இது அவளுடைய இயல்பே இல்லை.
அவனோடு வாயாடும், அவன் முதுகுக்கு பின்னால் பழிப்புக் காட்டும், இவன் சொன்னால் அதை செய்யாமல் இவனை வெறுப்பேத்தும் சாரு எங்கேயோ தொலைந்துதான் போய் இருந்தாள்.
எதோ கனவு கண்டு உளறினாளே அதனால்தான் இப்படி இருக்கிறாளா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. அப்பத்தாவோடும், ஹரிதவோடும் என்றும் போல் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றாள். தன்னிடம் மட்டும்தான் முகத்தை திருப்புகின்றாள்.
பாக்டரியில் கூட அவளோடு வேலை செய்யும் பொழுது பேச்சுக்கு கொடுத்துப் பார்த்தான் வேலையை தவிர அனாவசிய பேச்சுக்கள் அவளிடமிருந்து வெளிப்படவில்லை.
லஹிரு எதையோ இழந்த உணர்வில் இருந்தான். அது என்னவென்று அவனுக்கு புரியவில்லை. அதுதான் அவள் எழுதி கொடுத்து விட்டாளே. இனி அவளால் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. என்றும் போல் இருக்கலாமே. இவன் சகஜமாக பேச முயன்றாலும் அவள் ஒதுங்கிப் போக மனம் வெம்பினான்.
இது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்றே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தவன் பூக்களை பறித்துக் கொண்டு அவள் உள்ளே வரும் பொழுது “சாரு” என்று அவள் பெயரை கூறி அழைத்து தனக்கு தேநீர் கொண்டு வரும்படி கூறினான். அவனை பாராமலையே தலையசைத்து விட்டு சென்றவளை ஆழ்ந்து பார்த்தவன் எழுந்து அறைக்கு சென்று விட்டான்.
தேனிரோடு வந்த சாரு வாசலில் அமர்ந்திருந்த லஹிருவை காணாது தேட அலைபேசியில் அவன் யாருடனோ உரையாடுவது கேட்டு “அறையில் இருக்கிறானா?” என்றவாறே அறைக்குள் சென்றவள் தேநீரை மேசையில் வைத்து விட்டு திரும்ப அறைக்கதவை சாத்தி விட்டு அதில் சாய்ந்தவாறு அலைபேசியை காட்சட்டையில் திணித்துக் கொண்டிருந்தான் லஹிரு.
அவளை அறைக்கு வரவழைக்கவே அவன் சத்தமாக பேசி இருந்தான். அவள் உள்ளே வரும் பொழுது அமைதியாக கதவருகில்தான் நின்றிருக்கின்றான் இவள்தான் கவனிக்கவில்லை. அதற்குள் குளியலறைக்கு சென்றிருப்பான் என்று தேநீர் கப்பை வைத்து விட்டு செல்ல திரும்பியவளுக்கு அவன் செயல் கொஞ்சம் அதிர்ச்சியையும், “எதற்கு?” என்ற கேள்வியையும் கொடுத்திருந்தது.
“ஏன்” என்று கேளாமல் அவனையே பார்த்திருந்தவளின் அருகில் நெருங்கி வந்தவன் “ஏன் இப்படி பண்ணுற?” என்று கேட்டான்.
என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஆவேசம் பொங்கி எழுந்தாலும் மொட்டையாக கேட்டவனின் கேள்வி அமைதியாகத்தான் ஒலித்திருந்தது.
“இப்போ நான் என்ன பண்ணேன்” பதில் கெவியைத்தான் இவளும் கேட்டாள். தான் இவ்வளவு ஒதுங்கிப் போகிறோமே இன்னும் என்ன? குறையை கண்டாய் என்பது போல் பார்வையை வேறு செலுத்தினாள்.
தான் எது செய்தாலும் இவன் குறை மட்டும்தான் காண்பான் போலும் என்று நினைத்தவள் அவனை முறைக்கவும் தவறவில்லை.
அவள் முறைத்ததும் இவன் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்தது. ஒருநொடியில் பழைய சாருவை பார்த்த சந்தோசம் அவன் புன்னகையில் எதிரொலித்தது.
“இப்போ எதுக்கு இளிக்கிறான்?” புரியாமல் குழம்பியவள் “நான் என்ன பண்ணேன்னு சொல்லுறீங்களா? ஹாமு. நீங்க சொன்னாத்தானே. நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கு தெரியும். திருத்திக்க பாக்குறேன்” என்றதும் அவன் மலர்ந்த புன்னகை காணாமல் போய் இருந்தது.
அவள் எப்பொழுதுமே அவனை முதலாளி என்று கிண்டலாகத்தான் அழைப்பாள். அவளின் ஹாமு என்ற அழைப்பே அவனை அந்நியமாக ஒதுக்கி வைத்திருக்கிறாள் என்று சொல்ல போதுமானதாக இருக்க, “இதோ இதுதான். நீ நீயாக இல்ல. யாரோ போல இருக்க, அது எனக்கு சுத்தமாக பிடிக்கல” அவன் பேச்சில் கோபம் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்து.
“நான் யாரை போல இருக்கேன்? நான் நானாகத்தான் இருக்கேன்” என்றாள் சாரு.
அவள் எப்படி இருந்தாள் இவனுக்கு என்ன? அவள் அவளாக இருந்தால் முறைத்துக் கொண்டு திரிந்தான். ஒதுங்கி போனாள் பிடிக்கவில்லை என்கின்றான். இவனுக்கு என்னதான் பிரச்சினையாம்?
“அப்பத்தாகூட நல்லாதானே பழகுற, ஏன் ஹரித கூடையும் முன்பு போலத்தானே பழகுற. அப்போ என்ன மட்டும் எதுக்கு ஒதுக்கி வைக்கிற? எதுக்கு என்கிட்ட இருந்து ஒதுங்கி போற?” ஒருவாறு கேட்டு விட்டான்.
அவள் அவளாக இல்லையென்று வருந்துகின்றானா? அவன் இயல்பை தொலைத்து விட்டானா? புரியாமல் குழம்பி அவளிடம் விடை காண முயற்சி செய்தான்.
“இதுதான் உன் பிரச்சினையா?” என்பதை போல் பார்த்தவள் “உங்களுக்குத்தான் என்ன பிடிக்காதே. உங்கள பொறுத்தவரைக்கும். நான் திட்டம் போட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தவ, திட்டம் போட்டு உங்கள கல்யாணம் பண்ணிகிட்டாவ, திட்டம் போட்டு எல்லாம் பண்ணுறவ, பேசினா கூட உங்கள மயக்க பாக்குறீங்க என்றுதானே சொல்லுவீங்க. ஒதுங்கி போறதும், ஒதுங்கி இருக்குறதுக்கு பிரச்சினை என்றா நான் என்ன செய்யிறதாம்” குத்தலாகவே பதில் சொல்ல ஆரம்பித்தவள் குரல் கலங்கி ஒலிக்க தன்னை மீட்டுக் கொண்டு, அவனை தாண்டி வெளியே செல்ல நடந்தாள்.
அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன் “அப்படி எல்லாம் ஒதுங்கி இருந்து நீ என்கிட்டே இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்காத”
அவன் என்ன சொல்ல விழைகிறான் என்று சாருவுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் பிடித்திருந்த கையை விலக்கக் கூட தோன்றாமல் அவனையே பார்த்திருந்தாள்.
“இவ்வளவு நாளா என்ன கல்யாணம் பண்ண திட்டம் போட்டு என்ன எல்லாம் பண்ணி என்ன டாச்சர் பண்ண? நீ என்ன டாச்சர் பண்ணலைனா நான் உன்ன டாச்சர் பண்ணுவேன். பழிக்கு பழி வாங்க வேணாம்” என்றவன் அவள் கழுத்தில் கையை நுழைத்து தன் புறம் இழுத்தவன் அவள் இதழ்களை சிறை எடுத்திருந்தான்.
அவள் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்கிறாள் என்று சொன்னவன் முத்தமிட்டது திட்டமிட்டுத்தானோ? 
திட்டமிட்டு செய்யக் கூடிய செயலா இது. அவள் மாறி விட்டாள் தன்னை ஒதுக்குகிறாள் என்றுதான் பேச அழைத்தான். அவள் பேசியதில் தவறு தன் மீது என்று நினைத்தானோ? தான் தான் இவளின் ஒதுக்கத்துக்கு காரணம் என்று நினைத்து இவ்வளவு நெருக்கம் போதுமா? என்று கேட்டானோ?
சாரு அதிர்ச்சியில் உறைந்தது ஒருசில நொடிகள் தான் அடுத்த கணம் அவனை தள்ளி விட்டிருந்தாள்.
அதை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. ஆனாலும் பதட்டத்தில் இருந்தவளின் கைகளில் பலம் இல்லை போலும் லஹிரு இரண்டடி விலகி நின்றிருந்தான்.
தனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருத்தி தான் தான் முத்தமிட்டேனா? ஏன் என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது. 
அதை ஆராய்ச்சி செய்ய சாரு அவனுக்கு நேரம் கொடுத்தால் தானே, தள்ளி விட்டதும் இல்லாமல் அவனை அடிக்க கையை வேறு ஓங்கி இருந்தாள்.
அவள் கையை பிடித்து தடுத்தவன் “முத்தம் கொடுத்தா, திருப்பி முத்தம்தான் கொடுக்கணும் அடிக்கவெல்லாம் கூடாது” என்றான். கூறி விட்டு தான்தானா இப்படி பேசினோம் என்று வேறு யோசித்தான். தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று இவன் யோசிக்க,
“உன் உடம்புல ஆவி, பிசாசு ஏதாவது புகுந்திருச்சா? எதற்கு என்ன இம்ச செய்யிற? என்கிட்டே இருந்து விலகி இரு” பிடிவாதமாக கையை உதறிக் கொண்டாள் சாரு.
“அப்படி எல்லாம் உன்ன விட்டுட முடியாது. நீ பாக்குற வேலைக்கு மாசா மாசம் சம்பளத்தை பிடிச்சுக்குவேன். வட்டியை என்ன பண்ணுறது? அப்போ அப்போ எனக்கு முத்தம் கொடுத்துட்டு போ…”
“என்னது?”
“ஆமா ஒரு முத்தம் நூறு ரூபா இல்ல. இல்ல. இல்ல. ஐம்பது ரூபா…காலைல ஒன்னு நைட்டுல ஒன்னு” சட்டென்று விலைகுறைப்பு செய்து அவள் தன்னிடமிருந்து ஒதுங்கிப் போகாமல் இருக்க வழிவகுத்தான்.
அவன் கூறியதில் அதிர்ந்தவள், முத்தத்துக்கு விலை சொன்னதும் சிரித்து விட்டாள். “அவ்வளவு சீப்பா…”
“வட்டி குட்டி, குட்டியா போடும்… நீ கொடுக்குற. இல்லனா நான் எப்படி பழிவாங்குறது” தான் அவளை நேசிக்க ஆரம்பித்து விட்டோம் அவள் விலகி நிற்பது பிடிக்கவில்லை. அது அவனுக்கு புரியவுமில்லை. அவளை தன்னோடு இருத்திக்கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ பேசி அவளோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான் லஹிரு.
“முத்தமெல்லாம் கொடுக்க முடியாது. வட்டி குட்டி போட்டா வேலை செஞ்சி கழிச்சிக்கிறேன்” இவள் அறையை விட்டு நடையை கட்ட,
“நீ மட்டும் முத்தம் கொடுக்கல எல்லார் முன்னிலையிலையும் நான் கொடுத்துடுவேன். அப்பொறம் உன் மூஞ்ச நீ எங்க கொண்டு போய் வைக்கிறேன்னு பார்க்கலாம்” செல்லும் அவளை மிரட்டி விட்டு இவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவளோடு வாயாடிய சந்தோசத்தில் இருந்தான் லஹிரு.
“சரியான கிறுக்கனா இருப்பான் போல” அவனை வசைபாடியவாறு சென்றாள் சாரு.
இருவருமே சந்தோஷமான மனநிலையில் இருந்ததை இருவருமே உணர்ந்தாலும் அது ஏன் என்று ஆராயத்தான் முயலவில்லை.
  
இரவு உணவுக்கு பின் அடுத்த வாரம் வீரசிங்கையின் நினைவு நாள் பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுதுமெனிகே சுமனாவதியோடு அமர்ந்து பூஜைக்கு தேவையான ஜாமங்களின் பட்டியலை கூற, சாரு எழுதிக் கொண்டிருந்தாள்.
அத்தோடு யார், யாரை அழைக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தாள்.
“உன் பையனுக்கு சொல்லிட்டியா? அவன் வருவானா?” சந்தேகமாகவே கேட்டாள் சுதுமெனிகே.
சாருவை பார்த்தவாறே “குடும்பத்தோடு வரேன்னு சொன்னான். என்னனு தெரியல” என்றாள் சுமனாவதி.
லஹிருவின் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வதாக கூறிய சுமனாவதிக்கு முழங்கால் வலி அதிகமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று தங்கி இருந்தவள் வீரசிங்கையின் நினைவு நாளில் நடக்க இருக்கும் பூஜையில் கலந்து கொண்டதன் பிறகே செல்லலாம் என்று இருப்பதாக கூற, சுதுமெனிகேயும் சரி என்று விட்டாள். 
இவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் அமைதியாக எழுதி முடித்த சாரு தூங்க சென்றாள். 
சுதுமெனிகேயின் அறையும் சமையலறையும் வீட்டின் இடது புறத்தில் இருக்க, லஹிரு மற்றும், ஹரிதவின் அறைகள் வீட்டின் வலது புறத்தில் இருந்தன. சுதுமெனிகேயின் அறையிலிருந்து வாசலுக்கு வர ஒரு நடைபாதை. வாசலிலிருந்து லஹிருவின் அறைப்பக்கம் ஒரு நடைபாதை இருந்தது. அதில் இருந்த சில ஜன்னங்களுக்கு இரும்பு கம்பிகள் மட்டும்தான் இருந்ததே ஒழிய அவைகளை பூட்ட முடியாது. அந்த காலத்தில் காற்றோட்டமாக இருக்க அவ்வாறு அமைத்திருக்கவே இன்றும் அவ்வாறே இருந்தது.
சொந்த வீட்டில் என்ன பயம்? மேலதிகமான மின்குமிழ்களை அனைத்தவாறு சாரு அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்க, ஒரு ஜன்னலிலிருந்து கருப்பு உருவம் ஒன்று கையை நீட்டி அவளை பிடித்திருந்தது.
வெளிச்சம் குறைவாக இருந்தாலும் முகம் முழுக்க முடியோடு நாக்கை நீட்டிக் கொண்டு இருந்தது அந்த கொடூர உருவத்தை சாரு மிக அருகிலையே பார்த்தாள். 
அலறியவள் தலை தெறிக்க ஓடி மோதி நின்றது லஹிருவின் மேல்தான். இவள் போட்ட சத்தத்தில் தூங்காமல் இவளுக்காக காத்துக் கொண்டிருந்த அவனும் இருட்டில் ஓடி வந்திருக்க, இவன் மேல் மோதியவள் மேலும் கத்திக் கூப்பாடு போடலானாள்.
“நான்தான், நான்தான் என்ன ஆச்சு?” லஹிரு அவளை ஆசுவாசப்படுத்த முயல, குறைந்த வெளிச்சத்தில் அவனை கண்டு கட்டிக்கொண்டவள் அச்சத்தில் அழவே ஆரம்பித்தாள்.
ஹரித மின்விளக்கை போடவும், சுதுமெனிகே, சுமனாவதி மற்றும் வீட்டில் வேலை செய்யும் மூன்று பெண்களும் அங்கே வந்திருந்தனர். 
“என்னாச்சு?” அனைவரினதும் கேள்விகள் ஒன்றாக இருந்தாலும் சுதுமெனிகே பதற, மற்றவர்கள் புரியாமல் குழம்பித்தான் போய் இருந்தனர்.
“ஒன்னும் இல்ல ஏதாவது பார்த்து பயந்திருப்பா…” லஹிரு சொல்ல
“அங்க அங்க… ஜன்னல் கிட்ட கருப்பா ஒரு உருவம், என் கைய பிடிச்சது” நடுங்கியவாறே கதறினாள் சாரு.
“யாரும் வர மாட்டாங்க. கேட்ட திறந்தாவே சத்தம் கேட்கும், வேலியை தாண்டி வரத்தான் முடியுமா? நாய்கள் வேற இருக்கே” லஹிரு புரியவைக்க முயல.
“இல்ல இல்ல நான் பார்த்தேன். கொடூரமா நாக்கை தொங்க போட்டுக்கிட்டு நின்னது” சொல்லும் போதே அவள் உடல் அச்சத்தில் வெடவெடவென நடுங்கியது.
“என்னம்மா சொல்லுற?”
“கொஞ்சம் நாளாவே கனவுல உளருறா… தூங்கினா சரியாகும்” லஹிரு அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு செல்ல, அவன் கையை உதறியவள் அறைக்கு சென்று தன்னுடைய இடத்தில் படுத்துக்க கொண்டாள்.
அவள் தான் சொல்கிறாளே என்ன எது என்று பார்க்கலாம் என்று சுதுமெனிகே கூற டிங்கிரி பண்டாவை அழைத்து தோட்டத்தை ஆராய யாரும் வந்து சென்றதற்கான சுவடே இருக்கவில்லை.
“நான் தான் சொன்னேனே அவ எதையோ பார்த்து பயந்து, வீணா நம்மள பய முறுத்தறா. போங்க போய் தூங்குங்க” என்ற லஹிரு அறைக்கு சென்றால் சாரு தூங்காமல் கதவை பார்த்தவாறுதான் இருந்தாள்.
 அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டவன் “சாரு எந்திரி வந்து கட்டில்ல தூங்கு. திரும்ப கனவு ஏதாவது கண்டு பயந்தினா?”
“பரவால்ல, தண்ணி குடிச்சிட்டு திரும்ப தூங்கிடுறேன்” அவன் புறம் திரும்பாமலையே கூறினாள் சாரு.
“எப்படி? வெளில போய் தண்ணி குடிச்சி, வெளில வாஷ் ரூம் போயிட்டு, திரும்ப பயந்து கத்த போறியா?”
அவன் சொல்லும் பொழுதே அந்த உருவம் அவள் கண்முன் வந்திருக்க அச்சத்தில் நடுங்கும் உடலை மறைக்க போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
“சொன்னதுக்கே நடுங்குற. சொல்லுறத கேளு வந்து கட்டில்ல படு. எதுக்கு பிடிவாதம் பிடிக்கிற?” லஹிருவுக்கு அவள் மேல் கோபமெல்லாம் வரவில்லை. பயந்து வேறேதாவது நடந்திட போகிறது என்றுதான் இவனுக்கு கவலையாக இருந்தது. 
“உங்களுக்குத்தான் என்ன பிடிக்காதே. உங்க பொருட்களை நான் பாவிச்சா அத எல்லாம் எரிச்சிட்ட மாட்டீங்க. போங்க போங்க போய் போர்வைய போத்திகிட்டு படுங்க” கொஞ்சம் கடுப்பாகத்தான் சொன்னாள் சாரு.
“உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு என்ன சொல்லணும். உன் கிட்ட கெஞ்ச கூடாது” என்றவனோ அவள் திமிரத் திமிர தூக்கி கட்டிலில் கிடத்தி “பேசாம தூங்கு. இல்ல கையையும், காலையும் கட்டிப் போட வேண்டி இருக்கும்” என்று மிரட்டினான்.
“ஆ… கட்டிப் போடுங்க இல்லனா…” என்றவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்
“என்ன?” இவன் அவளையே பார்த்திருக்க,
“இல்ல என் பில்லோவ்ஸ்” என்றவள் அவன் பார்வையை தவிர்த்தாள்.
எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தவன் தூங்க முற்பட இவளோ அவனுக்கும், இவளுக்கும் நடுவில் தலையணையால் அணை கட்டிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்து சத்தமாக சிரித்தவன் அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல் இரவு மின்விளக்கை போட்டு விட்டு தூங்கலானான்.
“சாரு உனக்கு பயமா இருந்தா என் கைய பிடிச்சிக்க”
“ஒன்னும் வேணாம்” என்றவள் வளமை போல் அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொள்ள அவள் முகமோ ஜன்னல் புறம் இருந்தது.
ஜன்னலை பார்த்ததும் அந்த கொடூர உருவம் கண்ணில் வந்து போக, மெதுவாக அவன் புறம் திரும்பியவள் ஆள் காட்டி விரலால் அவன் தோளை தொட
“என்ன தூக்கம் வரலையா? திடிரென்று பஞ்சு மெத்தைல படுத்தா அப்படித்தான். போக போக பழகிடும்” அவளை சீண்ட
“அதில்ல நான் அந்த பக்கம் வரவா. இந்த பக்கம் ஜன்னல் இருக்கு. திரும்ப அந்த பேய் வருமோனு பயமா இருக்கு” மெதுவான குரலில் கூறி இவனை சம்மதிக்க வைக்க முயன்றாள்.
“யக்ஷணியே ஒரு பேய பார்த்து மிரண்டது இதுதான் மொத தடவ இல்ல” கொஞ்சம் சத்தமாகவே சிரித்தவனை சாரு முறைக்க கூட இல்லை. காரியம் ஆகா வேண்டுமே.
“ஆமா ஜன்னல்ல வந்த பேய் கதவை திறந்துகிட்டு வந்தா என்ன செய்வ?” இவன் கேட்ட கேள்வியில் மிரண்டாள் சாரு.
இத்தனைக்கும் ஜன்னல் கட்டிலிலிருந்து ஐந்து அல்லது ஆறு அடி தூரம் இருக்கும். அது எட்டிப் பார்த்தால் தன்னை பிடிக்க முடியாது. கதவு வழியாக வந்தால் தன்னை பிடித்துக் கொள்ளுமே, என்று நினைத்தவள் “சரி சரி நான் இங்கயே தூங்குறேன்” பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது போல் கூறியவள் போர்வையை கழுத்து வரைக்கும் போர்த்திக் கொண்டாள்.
“பேய்க்கு என்ன இரையாக்க நல்லவ மாதிரி என்னமா நடிக்கிற? நான் பேய் வருதானே பாத்துகிட்டு தூங்குறேன்” கதவின் பக்கம் திரும்பினான் லஹிரு
தூங்கும் அவனின் முதுகு குலுங்குவதை பார்த்தவாறே தூங்க முயன்றாள் சாரு.
“என்ன சுமனா தூக்கம் வரலையா?” நாத்தனார் யோசிப்பதை பார்த்து கேட்டாள் சுதுமெனிகே.
“அந்த பொண்ணு சொன்னதை கவனிச்சியா? ஏதோ கருப்பு உருவத்தை பார்த்ததா சொல்லுறா. யாருமே வரமுடியாத வீட்டுக்கு யார் வந்திருப்பா?” சாருவை அவள் பேத்தியாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த வீட்டு மருமகளாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவள் பேச்சிலையே தெரிந்தது.
“நீ என்ன சொல்ல வர?”
“அது ஐராங்கனியோட ஆவியா இருக்குமான்னு எனக்கு தோணுது”
“என்ன பைத்தியம் போல பேசுற?” சுதுமெனிகேவுக்கு கோபம் கோபமாக வந்தது.
“கொஞ்சம் யோசிச்சு பாரு. சாரு மாதிரியே ஐராங்கனி ஒரு கீழ்ஜாதி  பொண்ணு. அவ ஆசைப்பட்ட மேல்ஜாதி பையன அவளால அடைய முடியல. அதனால சாருவோட உடம்புல புக நினைக்கிறாளோ என்னவோ”
“முதல்ல சாருவை கீழ்ஜாதி, வேற மதம் என்று சொல்லுறத நிறுத்து. புள்ளைங்கள அப்பாவை வச்சுதான் வம்சாவழி பார்ப்பாங்க. அப்படி பார்த்தா சாரு நம்ம ஜாதிதான். நம்ம இனம்தான். புரிஞ்சுதா? அவ உன் பேத்தி. நீ ஒத்துக்கலைனாலும் அதுதான் உண்மை.
மத்தது ஆவி, பேய் என்று உளறாத,  ஆவி ஜன்னல் கிட்ட வந்து நின்னு கையவா பிடிக்கும்? சாரு எதையோ யோசிச்சுகிட்டு போய் பயந்துட்டா… வேற ஒன்னும் இல்ல. பேசாம படு” நாத்தனாரை அதட்டி சுதுமெனிகேவுக்கு ஜோசியர் சொன்னதுதான் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.
“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். நம்புறதும், நம்பாததும் உன் இஷ்டம்” என்ற சுமனாவதி தூங்கி இருக்க, சுதுமெனிகேதான் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
  லஹிரு கண்விழிக்கும் பொழுது வளமை போல் சாரு அறையில் இல்லை. ஆனால் என்றும் இல்லாத பரவசம் அவன் மனதில் இருந்தது உடனே அவளை பார்க்க வேண்டும் போல் இருக்க குளியலறைக்குள் புகுந்தவன் வெளியே வந்த உடன் சாரு என்று அழைத்து தேநீர்தான் கேட்டான்.
அப்பொழுதுதான் கவனித்தான் அவன் தூங்கி இருந்த பக்கத்தில் ஒரு தலையணை விழுந்திருந்தது. சாரு அதிகாலையிலையே எழுந்து செல்லும் பொழுது கவனித்திருக்க மாட்டாள். பார்த்திருந்தால் அவள் எடுத்து வைத்திருப்பாள் என்று எண்ணியவாறு  அதை எடுத்து கட்டிலில் போட்டவன் “அட இது அம்மணி அணை கட்டிய பில்லோவ்வாச்சே”
தலையணையை தள்ளி விட்டு அவள் இவனை அணைத்துக் கொண்டு தூங்கி இருப்பாளோ? அது கூட தெரியாமல் நான் தூங்கி விட்டேனா? “ஆம் படுத்த உடனே தூங்கி விட்டேன்” தனக்குள் சொல்லிக் கொண்டவன்
சாரு தேநீரோடு வந்ததும் “தலையணையை வீசிட்டு என்ன கட்டிக்கிட்டு தூங்குறதுக்கு எதற்கு அணை காட்டினாய். டைம் வேஸ்ட்”
“நான் கண்ணு முழிக்கும் பொது நல்லா தூங்கிக் கிட்டுதானே இருந்தான். இவனுக்கு எப்படி தெரிஞ்சது?” புரியாது முழித்தவள் “என்ன உளறுற?” என்று கேட்டு அவனையே குழப்பத்தில் ஆழ்த்தினாள்.
“நான் உளறுறேனா? இன்னக்கி நைட் தெரியும்” உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் “அப்போ நான் கனவுதான் கண்டேனா? சரி சரி” என்று விட்டு நகர, சாருவுக்கு மூச்சே வந்திருந்தது.
ஆனால் லஹிரு சொன்னதை செய்ய அவனால் முடியவில்லை. அறைக்கு வந்து கட்டிலில் சரிந்தாள் சில நிமிடங்களில் தூங்கி விடுகிறான். சாரு அவன் மேல் உருண்டாளா? புரண்டாளா? அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அவள்தான் அறையை பூட்டி விட்டு தூங்குகின்றாள்.
“சரியான கும்பகர்ணனா இருக்கானே” என்று இவள் அவனை வசைபாடாத குறைதான்.
அது மட்டுமில்லாமல் வீட்டில் அமானுஷ்யமான விடயங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்திருந்தன.
கிணற்றில் பூனை செத்துக் கிடந்தது. வீட்டை சுத்தி காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன.
எதோ ஒரு வகையான பூச்சிக்கள் வேறு வீட்டாரை தொல்லை செய்ய ஆரம்பித்திருந்தன.
வீட்டை சுற்றியும், தோட்டத்திலும் வித்தியாசமான கால் தடங்கல் காணப்பட்டன.
டிங்கிரி பண்டாவை தாண்டி யாரும் தோட்டத்தில் நுழையவும் முடியாது. நாய்களும் மோப்பம் பிடித்து விடும்.
இதையெல்லாம் பார்த்த சுமனாவதி “இது ஐராங்கனியின் ஆவியின் வேலைதான், சாரு இங்கே இருக்கக் கூடாது உடனடியாக அவளை ஊருக்கு அனுப்பும்படி” என்று ஆடி நின்றாள்.
சுதுமெனிகேவுக்கு ஆவியின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனாலும் ஜோசியர் சொன்னது மனதுக்குள் உறுத்தவே வீரசிங்கவின் நினைவு நாளன்று பிரித்தும் ஓதி வீட்டுக்கும், குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அதற்கும் ஏற்பாடு செய்யலானாள்.
லஹிருவை அழைத்து ஜோசியர் கூறிய விஷயங்களை கூறியவள் சாருவை அவனோடு வைத்துக் கொள்ளும்படி கூறி இருக்க, சாருவும் காலை அவனோடு பாக்டரிக்கு சென்றால் மதியம் சுதுமெனிகேயோடு இருப்பதால் பாதுகாப்பாக இருந்தாள்.
அப்படி இருந்தும் சில நேரம் அந்த கொடூர உருவம் அங்கங்கே அவள் கண்களுக்கு காட்ச்சிக் கொடுத்து அவளை மிரட்டிக் கொண்டுதான் இருந்தது.
“நாயை கண்டும் கத்துறா? பேயை கண்டும் கத்துறா? ஆனா அதுங்க இந்த யக்ஷணிய பார்த்து கத்த மாட்டேங்குது. அத வச்சே தெரிஞ்சிக்க வேணாம் இவ அவங்க கூட்டாளி என்று” கிண்டல் செய்து சிரிப்பான் லஹிரு.
சாரு அவனை முயன்ற மட்டும் முறைத்து விட்டு செல்வாள்.

Advertisement