Advertisement

அத்தியாயம் 14
போகம்பர ஏரி எனும் கண்டி ஏறி 1807 இல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரால் கட்டப்பட்டது. இதற்கு பாற்கடல் என்று மற்றுமொரு பெயரும் உண்டு. ஏரியிலிருந்து மெல்லிய காற்று வீச வாகணங்களின் ஓசையையும் தாண்டி மரங்களின் சலசலப்பும் மெதுவாக கேட்க, அதை ரசித்தவாறே சாரு லஹிருவோடு மெதுவாக நடந்தாள்.
தென்றல் உடலை குளிர்விக்க அவள் உள்ளமும் சில்லென்று இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் லஹிரு மனம் மாறி அவளை ஏற்றுக்கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. 
“அப்படியாயின் ஹரித கூறியது போல் இவனுக்கு என் மேல் விருப்பம் இருந்திருக்கு. அவன் என்னோடு பேசுவதால் பொறாமை கொண்டுதான் அவ்வாறெல்லாம் பேசினானா? பாசத்தை காட்ட தெரியாமல்தான் கோபத்தை காட்டுகின்றானா? என்ன டிசைனோ?” ஒரு நொடியில் ஒரே நொடியில் லஹிரு பேசிய எல்லாவற்றையும் மறந்து மன்னித்து விட்டாள் சாரு.
அத்தோடு நிற்காமல் அவன் கைகோர்த்து அவன் தோள் சாய அவள் உள்ளம் பரபரக்க, இடமும் ஏற்றதாக இருந்தாலும் சூழ்நிலை ஏற்றதாக இருக்கவில்லை. கோவிலுக்கு வந்த கூட்டம் குளத்தை சுற்றி வந்து கொண்டிருக்க, அவன் கையை பிடிக்க அவளுக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது.
“என் புருஷன் கைய நான் பிடிச்சி நடக்க போறேன். யார் பார்த்தால் எனக்கென்ன?” என்று கூட அவள் எண்ணம் செல்ல
“வா அப்படி உக்காந்து பேசலாம்” ஒரு மர நிழலில் இருந்த பெஞ்சை கைகாட்டிய லஹிரு சென்று அமர்ந்து கொண்டான்.
“பேசுறதுக்கா அழைத்துக் கொண்டு வந்தான்? என்ன பேச? மன்னிப்புக்கு கேட்கவா?” புன்னகைத்தவள் அவன் முகம் பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.
இரண்டு நிமிடங்கள் ஏரியை வெறிக்க, வெறிக்க பார்த்திருந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருப்பான் போலும். சாரு அவனை ரசித்துக் கொண்டிருந்தாளே ஒழிய தொந்தரவு செய்யவில்லை.
சட்டென்று அவன் இவள் புறம் திரும்ப இவள் சுதாரித்து நேராக அமரவும் “நீ நேற்று சொன்னது எல்லாம் உண்மைதானே” என கேட்டான்.
“என்ன சொன்னேன்? நான்தான் என்னென்னமோ சொன்னேனே? எத சொல்லுறீங்க?” இவள் கோபத்திலோ, பேச்சு வாக்கிலோ எதையோ சொல்லி இருப்பாள் இவன் எதை சொல்கிறான் என்று அவளுக்கு எப்படி நியாபகம் இருக்கும்? இதைத்தான் என்று உடைத்து சொன்னாள் தானே இவள் ஒரு முடிவுக்கு வர முடியும்.
“அதான் நேத்து நைட்டு சொன்னியே…” இவன் இழுக்க
“என்ன சொன்னேன்?” அவள் பேசியதை கேட்டு இவன் மனம் மாறி விட்டான் அதைத்தான் இவன் கூற தயங்குகிறான் என்று புரிய அவனே சொல்லட்டும் என்று தெரியாதவள் போல் கேட்டாள்.
“அதான் அப்பத்தா உசுரோட இருக்கும்வரைக்கும்தான் நீயும் நானும் ஒண்ணா ஒரே வீட்டுல இருக்க போறோம். அப்பொறம் நீ உன் வழில போறதா சொன்னியே” ஒருவாறு லஹிரு சொல்லி முடிக்க, அவனை முயன்ற மட்டும் முறைத்தாள் சாரு.
அவள் நேற்றிரவு அவ்வளவு பேசியும் இவன் அவளை சுத்தமாக நம்பவில்லை என்று மட்டும் தெளிவாக அவளுக்கு புரிந்து போனது. தான் தான் வீணான கற்பனைகளை வளர்த்துக் கொன்டு கனவு காண்பதாக எண்ணியவள் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தாள்.
“என்ன அமைதியாகிட்ட? அப்போ நேத்து சொன்னது எல்லாம் பொய்யா? அத்தனையும் நடிப்பா?” என்று ஆரம்பிக்க…
கைநீட்டி அவனை தடுத்தவள் “நான் பேசினத உன் காதாலதானே நீ கேட்ட. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். அதற்காக எழுதி சைன் போட்டா கொடுக்க முடியும்” கோபத்தில் சீறினாள் இவள்.
இவள் கோபத்தியெல்லாம் அவன் மதிப்பானா? “ஆமா போட்டுக் கொடுத்தா தான் என்ன?” அவள் முகம் பார்த்து கேட்டான் லஹிரு.
அவனை புரியாது பார்த்தாள் சாரு.
“நீ நேத்து நைட் பேசினது அத்தனையும் உண்மையாக இருந்தா இதோ இந்த பேப்பர்ல சைன் போட்டுக் கொடு” என்றவன் கால்ச்சட்டை பாக்கட்டில் இருந்து சுருட்டி வைத்த காகிதத்தை எடுத்து நீட்டினான்.
வினோத பிறவியாக இருக்கானே என்றெண்ணியவாறே சாரு அதை வாங்க “சிங்களம் வாசிக்க தெரியுமா?” என்றும் கேட்டுக் கொண்டான்.
இவளும் தலையசைத்தவாறு அதை படிக்க ஆரம்பித்தாள். அப்பத்தாவின் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நிகழ்ந்ததாகவும். அவர் இல்லாத பட்சத்தில் தாங்கள் சேர்ந்து வாழ விரும்புவதில்லையென்றும் லஹிருவின் சொத்துக்களுக்கும், குடும்ப நகைகளுக்கும் சாரு எந்த உரிமையும் கோருவதில்லையென்றும் அதில் எழுதியிருப்பதைக் கண்டு சாருவுக்கு கோபம் வருவதற்கு பதிலாக அவன் மீது வெறுப்புதான் வந்தது.
நேற்றிரவு அவள் அவ்வளவு சொல்லியும் இவன் அவளை நம்பவில்லையென்றால் இவனெல்லாம் மனிஷ பிறவியே கிடையாது என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவனை மனதுக்குள் வசைபாடலானாள்.  
தன்னை இவன் நம்பாததற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சாரு யோசிக்கவில்லை. ஏன் என்று கேட்டு அவனுக்கு விளக்கம் கொடுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் லஹிரு இவ்வாறுதான் நடந்துகொள்வான்.  
ஒன்றும் பேசவில்லை. அவனிடம் காகிதத்தை நீட்டியவள் “முதலில் நீ சைன் பண்ணு” என்றாள்.
“நான் எதற்கு சைன் பண்ணனும்?” முழித்தான் அவன்.
“எக்ரிமண்ட் என்றாவே ரெண்டு பேரும் சைன் பண்ணனும். இது பேசிக் ரூல். அப்பத்தா இறந்த நேரம் ஒருவேளை உன் மனசு மாறி என் கூட வாழனும் என்று ஆசைப்பட்டு இத நீ கிழிச்சு போடக் கூட வாய்ப்பிருக்கு இல்ல. அப்போ என் கிட்டயும் ஒரு காபி இருந்தா உன் கிட்ட இருந்து நான் எஸ்கேப் ஆகலாம் பாரு. உன்ன மாதிரி ஒருத்தன் கூட யாரு வாழுறதாம்” என்றாள் இவள்.
மனதுக்குள் ஆயிரம் முறை சுதுமெனிகே நீண்ட ஆயுளோடு நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்று பிராத்தனை வேறு செய்யலானாள்.  
அவள் அதை சொன்னது உண்மையிலயே இவன் மனம் மாறுவான் என்ற எதிர்பார்ப்பெல்லாம் இவளுக்கு கிடையாது. இவன் மூக்கை உடைக்க வேண்டும் என்றுதான் கூறினாள். சொல்லும் பொழுதே கோபத்தில் மூக்குநுனி சிவந்திருந்தாள். வார்த்தைகளில் வெறுப்பை கொட்டினாள்.  
தான் அவளுக்கு பொருத்தமில்லை என்றது அவனை கொஞ்சம் சீண்டி இருந்தது. “நீ இங்க வந்தது வீட்டு வேலைக்கு. ஏன் வந்த என்று நியாபகம் இருக்கா? உன் வட்டிப் பணத்தை நான் கொடுத்தேன். அத நீ எனக்கு திருப்பிக் கொடுக்கணும் அதற்காக வந்த” அதை நியாபகப்படுத்தி அவளை வெறுப்பேற்றினான்.
“ஓஹ்… அப்போ அதையும் இதுல எழுதிக் கொடு” அலட்டிக் கொள்ளாமல் காகிதத்தை அவனிடம் கொடுக்க கோபமாகவே எழுதலானான் லஹிரு.
அதை படித்துப் பார்த்தவள் “இப்போதான் சரியா இருக்கு. ம்ம்.. இல்லையே தப்பா இருக்கே” அவனை போலவே நாடியை தடவியவாறு  யோசனை செய்வது போல் பாசாங்கு செய்தாள். 
தன்னை பார்ப்பது போல் இருப்பதை பார்த்து ஒரு நொடி திகைத்தாலும் “கைதேர்ந்த நடிகைதான்” அவள் ஏன் அவனை போல் இமிடேட் செய்தாள் என்று யோசிக்காமல் உதடு வளைத்தவன் “அப்படி என்ன நான் மறந்துட்டேன்?” கேள்வி எழுப்பினான்.
“இது ஒரு நல்ல கேள்வி. உன்ன டிவோர்ஸ் பண்ண பிறகு நான் வேற கல்யாணம் பண்ணலாம்ல?” இவளும் கேள்வியாக கேட்க
“லூசு யக்ஷணி” மனதுக்குள் நினைத்தவன் “தாராளமா” கைகளையும் விரித்தே கூறினான். 
“உன் தம்பிய கல்யாணம் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்று விட்டு அவன் முகம் பார்க்க லஹிரு அவளை முறைத்தான்.
“என்ன முறைக்கிற? இது உனக்கு தோன வேண்டிய டவுட்டு. எனக்கு தோணியிருக்கு. இதையும் இப்போவே எழுது. இல்லனா நீ திரும்ப வந்து எழுத சொல்லுவ. அழிச்சி அழிச்சி எழுத இது என்ன ஸ்லேடா? எதுனாலும் ஒரு தடவைதான். அழிக்கவும் முடியாது, மாத்தவும் கூடாது” சினிமா வில்லி போல் பேசி சிரித்தாள்.
எத்தனை சீரியல் பார்த்திருப்பாள் சமயத்தில் உதவாதா?
அவளுக்கு இவன் சொத்துதான் வேண்டும் என்றால் இவனை விவாகரத்து செய்து இவன் தம்பியை திருமணம் செய்திருக்கலாம். எனக்கு உன் சொத்தும் வேண்டாம், உன் தம்பியும் தேவையில்லை என்றுதான் இவ்வளவும் பேசினாள் அதை இவன் புரிந்து கொள்வானா?
அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் அதையும் எழுதி அவளிடம் காதிதத்தை கொடுத்தான். “இப்போதான் கரெக்ட்டா இருக்கு” குத்தலாகவே சொல்லி கையொப்பம் போட்டவள் அவனையும் போட சொன்னாள். அவனும் கையொப்பம் போட்ட மறு நொடி காகிதத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“எங்க போற? என்று இவன் அவள் பின்னால் நடக்க, அவனை கண்டுகொள்ளாது சுற்றிலும் பார்த்தவாறு நடந்தாள் சாரு. அவள் நடையில் வேகத்தோடு கோபமும் சேர்ந்திருந்தது.
அவன் தன்னை நம்பவில்லையே என்ற கோபம். அவனுக்கு தன்னை பிடிக்க வில்லை என்ற கோபம். தனக்கு மட்டும் அவனை ஏன் பிடிக்க வேண்டும் என்ற கோபம். மொத்த கோபத்தையும் நடையில்தான் காட்டினாள்.  
“எங்கடி போற? சொல்லிட்டுதான் போயேன்” கடுப்பானான் லஹிரு. “திமிர் திமிர் உடம்பு பூரா திமிர்” அவளை திட்டியவாறே அவள் பின்னால் நடந்தான்.   
ஒரு ஸ்டேஷனரி ஷாப் கண்ணில் பட பாதையை கடக்க போனவள் வண்டியில் மோத போக லஹிரு அவள் கையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான், அவனை உதறி விட்டு பாதையை  கடந்தவள் கடைக்குள் நுழைந்திருக்க, அவள் என்ன செய்கிறாள் என்று புரியாமலே லஹிருவும் நுழைந்திருந்தான்.
கையொப்பமிட்ட காகிதத்தின் இரண்டு பிரதிகளை எடுத்தவள் ஒன்றை லஹிருவிடம் கொடுத்து மற்றதை தான் வைத்துக் கொண்டு அசலை வக்கீலிடமோ, அல்லது இருவருக்கு தெரிந்த நம்பிக்கையான நபரிடமோ கொடுத்து வைக்க வேண்டும் என்றாள்.
“எதற்கு” என்று பார்த்தவனை “உன்னை நம்ப முடியாது. தொலஞ்சி போச்சு, கிழிஞ்சி போச்சு என்று காரணம் சொன்னாலும் சொல்லுவ. அதான்” என்றவளை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்று புரியாது பார்த்தான் லஹிரு.
“வேற எங்கயும் போக வேண்டியது இல்லையே வீட்டுக்கு போலாமா?” இவள் பாட்டுக்கு வண்டியை நோக்கி நடந்தாள். இவனும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி வண்டியை இயக்கினான்.
அவனால் சாருவை கணிக்க முடியாமல் குழம்பினான். நேற்றிரவு அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். இதோ இப்பொழுதும் அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டாள். 
கொஞ்சம் தூரம் செல்லவில்லை ஆர்மி செக்கிங்கில் வண்டியை நிறுத்தலாயினர். கண்டியில் அமைந்திருக்கும் புத்தரின் பற்கள் பாதுகாப்பட்ட இலங்கையின் மிக முக்கியமான பௌத்தக்கோவிலான தலதா மாலிகாவை 1998 ஜனவரி இருபத்தி அந்தம் திகதி விடுதலை புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அன்றிலிருந்து கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டதோடு சமீபத்தில் தேவாலயங்களில் நடந்த தாக்குதலினால் கோவிலுக்கு வருவோர் போவோரை பரிசோதனைக்கு உட்படுத்தலாயினர்.
கோவில் வாசலில் பரிசோதனை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உள்ளே செல்லும் பொழுது அடையாள அட்டை ஏதும் பரிசோதிக்கவில்லை. ஆனால் வண்டியை நிறுத்திய ஆர்மிக்காரரோ லஹிருவின் அடையாள அட்டை, வண்டி ஆவணங்கள் என்று அனைத்தையும் கேட்க சாருவுக்கு உள்ளுக்குள் நடுங்கவே ஆரம்பித்தது.
இத்தனைக்கும் அவள் தமிழ் பெண் என்ற அடையாளமாக பொட்டு கூட வைத்திருக்கவில்லை. அடையாள அட்டையில் இருக்கும் அவள் பெயர் ஒன்று போதாதா? அவள் தமிழ் பெண் என்று கூற, “பௌத்த கோவிலில் உனக்கென்ன வேலை” என்று துப்பாக்கியை காட்டி மிரட்டி ஜெயிலில் அடைத்தது போல் ஒரு நொடி காட்ச்சி கண்ணில் தோன்றி மறைய உள்ளத்தில் அச்சம் ஊடுருவியது. அவளையறியாமல் அவள் கை லஹிருவின் கையை பற்றி இருக்க, சில்லென்று இருந்த அவள் கையையும், வெளிறி இருந்த அவள் முகத்தையும் பார்த்தவனுக்கு அவள் அச்சம் புரிந்து போனது.
“இப்படி எல்லாத்துக்குமே பயப்படுறாளே. என்கிட்டமட்டும்தான் வீரத்தை காட்டுறா. லூசு யக்ஷணி” மனதுக்குள் அவளை திட்டியவாறே வண்டியின் ஏசியை அதிகப்படுத்தியவன், தண்ணீர் பாடில்லை திறந்து அவளிடம் கொடுத்து விட்டு  அந்த ஆர்மிக்காரரிடம் சகஜமாக உரையாடலானான்.
ஆவணங்களை திருப்பிக் கொடுத்தவர் வண்டியை எடுக்குமாறு கூற, லஹிருவும் வண்டியை மெதுவாக இயக்கினான். வண்டி வேகமெடுத்ததும் தான் சாருவுக்கு உயிரே வந்திருந்தது. பின்னாடி கண்ணாடி வழியாக பார்த்தவள் தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக்க கொண்டாள்.
“இப்போ எப்படி இருக்கு?” அவள் புறம் திரும்பாமலையே கேட்டான் லஹிரு.
“என்ன..” என்றவளுக்கு காற்றுதான் வந்தது.
“அந்த ஆர்மிக்காரரை பார்த்து அப்படி பயந்தியே. அவரை பார்த்து பயந்தியா? அவர் போட்டிருந்த யூனிபோர்மை பார்த்து பயந்தியா? இல்ல கைல இருந்த துப்பாக்கியை பார்த்து பயந்தியா?” கிண்டலாக கேட்பது போல் இருந்தாலும், சின்ன வயதில் நடந்த ஏதாவது சம்பவம் தான் காரணமா என்று அறிந்துகொள்ளவே கேட்டான்.
“அவர்களுக்குத்தான் தமிழர்களை கண்டாவே பிடிக்காதே, சுட்டுக் கொல்லுறாங்களே” இவள் சொன்னதும் லஹிரு வண்டியை நிறுத்தி இருந்தான்.
“என்ன சொல்லுற?”
“அதானே உண்மை அதானே நடந்தது. இப்போ யுத்தம் முடிஞ்சதால கொல்லாம இருக்காங்க” அவள் பேச்சில் கோபம் அனலாய் தெறித்தது.
“என்ன லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க? யுத்தம்னு வந்தா யாரு? என்ன என்று பார்க்காம கொலை செய்வாங்க அதுக்காக மலைல வாழுற உங்க கொன்னாங்களா? வடக்குலதானே யுத்தம் நடந்தது. நீங்க நிம்மதியா தானே இருந்தீங்க. இதோ இப்போ கூட சார்ச்ளையும், ஹோட்டலையும் நாலு முட்டாள் முஸ்லீம் தீவீரவாதிங்க குண்டு வச்சங்களே அதற்காக நான் என்ன என் ப்ரெண்ட்ஸ்ஸ கோவிச்சு கிட்டேனா? இல்ல ஆர்மிகாரங்க வீடு புகுந்து எல்லா முஸ்லீம்களையும் சுட்டு கொன்னுட்டாங்களா? பேசுறாளாம் பேச்சு லூசுத்தனமா. கொஞ்சம் பேர் தப்பானவங்களா இருந்தா எல்லாரையும் தப்புனு சொல்லுவியா? தப்பா பார்பியா? இப்போவே உன்ன புடிச்சி கொடுக்குறேன் உன்ன கொல்லுறாங்களா? விட்டுடுறாங்களானு பார்க்கலாம்” என்று இவன் வண்டியை திருப்ப, சாரு அதிர்ச்சியடையவில்லை. நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஆர்மிக்காரரை கண்டோ, யூனிபோர்மை கண்டு அச்சமில்லை. கையில் ஏந்தியிருந்த துப்பாக்கியை கண்டுதான் அச்சம் என்று அவள் லஹிருவிடம் கூறவில்லை. அதை தெரிந்து கொண்டால் இவன் அவளை கிண்டல் செய்வான் அல்லது அதை வைத்து பயமுறுத்துவான் என்றெண்ணிதான் வாயில் வந்ததை உளறி இருந்தாள்.
அது உளறல் கூட இல்லை. சின்ன வயதில் காலனியில் உள்ள பெரியவர்கள் பேசியது காதில் விழுந்த விஷயங்களில் சில மனதில் பதிந்திருக்க, ஆர்மி என்றாலே தமிழர்களை கொல்பவர்கள் என்று பதிந்து போய் இருந்தது மறுக்க முடியாத உண்மையும் கூட. இவன் சொல்வது போல் எல்லோரும் தப்பானவர்கள் கிடையாதே.       
இவன் குடும்பத்திலையே இவன் தாத்தா, அப்பா, சித்தப்பா என்று அனைவரும் ஜாதிவெறி, மதவெறி பிடித்து அலைபவர்களாக இருக்க, சுதுமெனிகே மட்டும் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக தானே இருக்கின்றாள்.
அவன் பேசப்பேச அவன் அவனுடைய தாத்தாவை போலல்ல, அப்பாவை போலல்லாது அப்பாத்தாவின் குணத்தை கொண்டு இருப்பது சந்தோஷத்தைக் கொடுக்க, “எனக்கென்ன பயம் அதான் என் புருஷன் கூடவே இருக்கானே அவன் பார்த்துப்பான்” என்றவள் அவனை பார்த்து முறைகவும் தவற வில்லை.
லஹிரு வண்டியை திருப்பியது வீட்டுக்கு செல்லும் பாதையில்தான். அவள் முறைத்தவாறே கணவன் என்று கூறியதில் அவள் வேண்டா வெறுப்பாக கூறியதாகத்தான் அவன் நினைத்துக் கொண்டான்.
ஆனால் நல்ல குணமும் இருக்கும் இவன் இப்படி சந்தேகப் புத்தி உள்ளவனாக இருக்கின்றானே என்ற கோபமும், தனக்கு இவனை பிடிக்கிறது என்ற தன்மீதான கோபத்தையும்தான் அவள் அவன் மீது காட்டினாள்.
திருமணம் என்ற சடங்கு நடந்தது அவ்வளவுதான் வீட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. சாருவின் வேலைகளிலும் எந்த மாற்றமும் இல்ல. வளமை போலவே அவள் அவளுடைய வேலைகளை பார்கலானாள். 
நடந்த ஒரே மாற்றம் சாரு வீட்டு வேலைக்காரி என்ற இடத்தில் இருந்து எஜமானி என்ற இடத்துக்கு உயர்ந்ததுதான். அவளை சாரு துவே {மகளே} என்று அழைத்துக் கொண்டிருந்த வேலையாட்கள் சாரு பேபி என்று அழைக்கின்றனர்.
கணவனான லஹிருவிடம் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. அறைக்கு சென்றால் தானே? தூங்க மட்டும்தான் அறைக்கே சென்றாள். இவள் செல்லும் பொழுது சிலநேரம் லஹிரு தூங்கி இருப்பான். அல்லது கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பான். இவள் அவனை பார்க்கக் கூட மாட்டாள் இவள் பாட்டுக்கு விரிப்பை விரித்து படுத்துறங்குவாள். அவன் விழிக்கும் போது இவள் அறையில் இருக்க கூட மாட்டாள். குளிப்பது கூட கிணற்றில் தான்.
இவன் மீது எந்த ஆசையையும் வளர்த்துக் கொள்ளவும் கூடாது. எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ள கூடாது. ஒதுங்கி போவதுதான் தனக்கு நல்லது. நான் இங்கு வந்தது என் அப்பாவை தேடி அவர் வரட்டும். என்னை மகளாக ஏற்றுக் கொள்ளட்டும் நான் அவரோடு சென்று விடுகிறேன். உள்ளத்தில் ஈரம் கசிய, வெறுமையாக புன்னகைத்தாள் கொண்டாள்.
ஹரிதவோடும் சகஜமாகத்தான் பழகினாள். முன்பு போல் தம்பியோடு பழகாதே என்று இவனாலும் சொல்ல முடியவில்லை. அவன் தான் சென்று இவளோடு நின்று பேசுறானே ஒழிய இவளாக சென்று பேசுதில்லையே. முன்பு சொன்னதை போல் என் தம்பியை மயக்க பாக்கின்றாயா என்று கேட்பது அபத்தம். ஹரிதவின் மனதில் சாருவை பற்றிய எந்த எண்ணங்களும் இல்லையென்று புரிந்து விட்டது. சாருவும் எழுதிக் கொடுத்து விட்டாள். எதை சொல்லி பேசக் கூடாது, பழகக் கூடாது என்று சொல்வது? அவ்வாறு கூறினால் தான் தன் மனைவியையும், சகோதரனையும் சந்தேகப்படுவது போல் ஆகாதா?
தலையை உலுக்கிக் கொண்டவன் தான் என்ன நினைக்கிறோம்? என்ன செய்ய வேண்டும் என்று கூட புரியாமல் குழம்பினான்.
வழமைபோல் அனைவரும் சாப்பாட்டு மேசையில்தான் கூடி இருந்தனர்.
“ஏம்மா என்னையும் பாத்துகிற, வீட்டையும் பாத்துகிற, இப்போ உன் புருஷனையும் பாத்துக்கணும். எல்லா வேலையையையும் தனி ஒருத்தியா உன்னால பார்க்க முடியுமா?” சுதுமெனிகே கவலையாக சொல்ல
லஹிருவை ஒரக் கண்ணால் பார்த்தவாறே “வளமையா பண்ணுற வேலைதானே பாட்டி. எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை” அவள் வேலை செய்து தானே வட்டிப் பணத்தை கழிக்க வேண்டும். அதைத்தானே அன்று எழுதிக் கையொப்பமிட்டு கொடுத்தாள். பாட்டி சொல்வதைக் கேட்டு இவன் வேலைக்கு ஆளை வைத்தால் இவள் வட்டிப் பணத்தை எவ்வாறு கொடுப்பது?
“ஏன் உன் அப்பா வந்துடுவாரே, அவர் கிட்ட காச வாங்கி உன் புருஷன் மூஞ்சில விட்டெறியேன்” அவள் மனம் ஓலமிட்டது.
“காசு வாங்கினது நான். அத கொடுத்தது என் புருஷன் நடுவுல என் அப்பாவ இழுக்கக் கூடாது” தனக்குள் சொல்லிக் கொண்டாள். 
“மல்காந்திதான் இருக்காளே வேறு யாரும் வேணாம்” சுமனாவதி சொல்ல
“நீ போகும் போது அவ உன் கூட போய்டுவா, அப்பொறம் யாராச்சும் வேணும் இல்ல” என்றாள் சுதுமெனிகே.
“வேலைக்கு ஆள் வைக்கிறீங்க இந்த தடவ கொஞ்சம் வித்தியாசமா ஒரு முஸ்லீம் பொண்ண வேலைக்கு வைங்க. நல்லா வாய்க்கு ருசியா பிரியாணி சாப்பிடலாம்” என்றான் ஹரித.
“ஆமான்டா அண்ணன் தமிழ் பொண்ண கட்டினான். நீ முஸ்லீம் பொண்ண கட்டுவியா? வேலைக்கு ஆள் கூட்டிட்டு வாரீங்களா இல்ல உங்களுக்கு ஜோடி தேடுறீங்களா?” யார் மீதோ இருந்த கடுப்பை ஹரிதவின் மேல் கொட்டினாள் சுமனாவதி.
“இது கூட நல்ல ஐடியாதான். ஜாதி மதம் பார்க்காம கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த பிரச்சினையும் வராதில்ல. இப்போவே ஒரு முஸ்லீம் பொண்ண பாக்குறேன் உசார் பண்ணுறேன். நீதான் ஐடியா கொடுத்தனு அப்பாகிட்ட சொல்லுறேன்” தீவிரமாக பேசினான் ஹரித.
“இவன் என்ன கொலை பண்ணாம விட மாட்டான் போலயே” சுமனாவதி தலையில் கைவைக்க
“டேய் ஏடா கூடமா ஏதாச்சும் பண்ணி தொலைச்சிடாதடா” பதறினாள் சுதுமெனிகே.  
“வேலைக்கு ஆள் எல்லாம் வேணாம் அப்பத்தா அதான் சாருவே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாளே” என்றவன் கைகழுவ எழுந்து சென்றான். 
“சாரு சமையலறை வேலையெல்லாம் மல்காந்தி பார்த்துப்பா நீ என் காலுக்கு எண்ணெயை பூசிட்டு போய் தூங்கு” சுதுமெனிகே சொல்ல
“சரி பாட்டி” சிரித்தவள் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள். 
லஹிரு எல்லா வேலையை முடித்து தூங்க ஆயத்தமாகியும் சாரு அறைக்கு வரவில்லை. அவள் தூங்கும் இடத்தை பார்த்தவனுக்கு அவள் இல்லாமல் தூக்கம் வருமா? என்றிருந்தது.
சாரு அறைக்குள் நுழைந்ததிலிருந்து என்னவெல்லாம் செய்வாள் என்று லஹிருவுக்கு அத்துப்படி. அறைக்குள் நுழைந்த உடன் கதவை தாழிடுவாள். படுக்கை விரிப்பை விரிப்பாள் பாத்துறங்குவாள். ஐந்து நிமிடங்களில் தூங்கியும் இருப்பாள்.
இவளுக்கு மட்டும் எப்படித்தான் நிம்மதியான தூக்கம் வருகிறதோ என்று கூட யோசிப்பான். காலையிலிருந்து அத்தனை வேலைகளையும் பார்ப்பவள் படுத்த உடன் உறங்கி விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.
அன்று காகிதத்தில் கையொப்பமிட்டு கொடுத்ததிலிருந்து அவளை பார்க்கின்றான். அவனிடமிருந்து ஒதுங்கித்தான் போகின்றாள். அவனை சீண்டுவதுமில்லை. அவனை தான் திருமணம் செய்து கொண்டாளே. அவள் கனவுதான் நிறைவேறி விட்டதே காகிதத்தில் நான் எழுத யோசிக்காதவைகளை கூட எதற்கு எழுத வைத்தாள். ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.
இவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்தவள் தூங்கி இருந்தாள்.
வழமை போல் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு தூங்குபவளை பார்த்தவாறு தூங்கலானான் லஹிரு.
நடு இரவில் முனகல் சத்தம் கேட்டு விழித்தவன் சாரு கனவில் முனகுவதை உணர்ந்தவன் மின்விளக்கை எரிய விட்டு அவளை நெருங்க
“அம்மா… அம்மா…” என்று ஏதோ உளறிக் கொண்டிருந்தவள் வியர்வையில் குளித்திருந்தாள்.
அவளை உலுக்கி எழுப்பியவனை கண்டு மிரண்டவள் என்னவென்று கேட்க, அவள் கனவு கண்டு உளறியதை இவன் கூற எழுந்து அறை கதவை திறக்க சென்றாள்.
“எங்க போற?”
“தண்ணி குடிக்கணும்”
“தண்ணி தானே இங்க இருக்கு” மேசையில் வைத்திருந்த குவளையை காட்ட
“இல்ல வாஷ்ரூம் கூட போகணும்” என்றவள் கதவை திறந்துகொண்டு வெளியே சென்றிருந்தாள்.
லஹிருவின் புத்தியில் அப்பொழுதுதான் நன்றாகவே பட்டது அவள் தன்னை திருமணம் செய்து கொண்ட பின்னும் இந்த வீட்டு வேலைக்காரியாகத்தான் இருக்கின்றாள் என்று.
அப்பத்தா எதுவும் கேட்டு விடக் கூடாது, சந்தேகப் படக் கூடாது என்றுதான் ஒன்றாக அமர்ந்து உணவு உண்கின்றாள்.
அவன் அறையில் தூங்கிறாள் அதை தவிர அவன் பொருட்களை உபயோகிப்பதுமில்லை. தண்ணீர் கூட அருந்துவதில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கி இருக்கிறாள். “இவள் எப்படி தப்பானவளாக இருக்க முடியும்?” அவன் மனம் கேட்க “நடிக்கிறாளா?” மூளை கேள்வி எழுப்ப மீண்டும் அவன் சந்தேகப்புத்தி விழித்துக் கொண்டது.

Advertisement