Advertisement

அத்தியாயம் 13
திருமணமும் நல்ல முறையில் முடிந்தாயிற்று. திருமணம் முடிந்த வீடு போலல்லாது வளமை போலவே அமைதியாக காணப்பட்டது வளவ்வ.
இரவு உணவு மேசையில் அனைவருமே அமர்ந்திருந்தனர். லஹிருவின் அருகில் சாருவும் அமர்ந்திருந்தாள்.
தான் பரிமாறுகிறேன் நீங்கள் அனைவரும் உண்ணுங்கள் என்று சாரு சொல்லியும், புது பொண்ணு வளமை போல் பரிமாறுவதா? உன் புருஷன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடு என்று சுதுமெனிகே அவளை லஹிருவின் அருகில் அமர்த்தினாள்.
லஹிரு அவளை ஒரு தடவை திரும்பி பார்த்து விட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். வெளியே காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும் உள்ளுக்குள் கனன்றுக் கொண்டிருப்பது அவன் மட்டுமே அறிவான்.
சாரு அவன் புறம் திரும்பவே இல்லை. இருவருக்குமே விருப்பமில்லாத திருமணம் அதிலும் அவனுக்கு தன்னை பிடிக்கவே இல்லை. இதில் அவனோடு அவன் அறையில் இருக்க வேண்டும் என்பதை நினைக்கையில் கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.
முறைத்துக் கொண்டே திரிபவன், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்டபடி பேசுபவனோடு இரவு தூக்கம் கண்டிப்பாக நிம்மதியாக இருக்கப் போவதில்லை என்று மட்டும் புரிந்தது.
“ஏன்ப்பா கல்யாணம் ஆனா கையோட ஹனிமூனும் போயிட்டு வந்துடுங்க. நாளாக நாளாக போறதுக்கு தோணாது. அப்பொறம் குழந்தை, குட்டி என்றானா, அது பேமிலி ட்ரிப் ஆகிடும்” என்று சிரித்தாள் சுதுமெனிகே.
“எல்லாரும் நுவரெலியாக்குத்தான் ஹனிமூன் ட்ரிப் போவாங்க. நான் பொறந்து வளர்ந்ததே நுவரெலியால, நான் எங்க போறது பாட்டி? வீட்டுலயே இருந்துடுற்றேன்” லஹிரு பேச முன் மறுப்பது சிறந்தது என்று பேசினாள் சாரு.
“ஏன் சாரு. நுவரெலியாவுக்குத்தான் போகணுமா? பீச் சைட் போகலாமே. உணவடுன போனா நல்லா என்ஜோய் பண்ணிட்டு வரலாம்” என்றான் ஹரித.
“டேய் சின்னவனே அவ உன் அண்ணி பேர் சொல்லி கூப்புடுறத முதல்ல நிறுத்து” என்றாள் சுமனாவதி.
“கல்யாணம் ஆக முன்பாகவே அவ எனக்கு பிரெண்டு. நான் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன் இல்ல சாரு” ஹரித சாதாரணமாக சொல்ல அதற்கும் லஹிரு அவளைத்தான் முறைத்தான்.
“பிரெண்டு பிடிக்கிறாளாம் பிரெண்டு” தன்னை திருமணம் செய்ய முடியவில்லையென்றால் தம்பியையாவது திருமணம் செய்து இந்த வீட்டில் வாழ்வதுதான் இவளது ஒரே குறிக்கோள் அதனால்தான் பெயர் சொல்லி பழகும் அளவுக்கு அவர்களின் நெருக்கம் இருப்பதாக எண்ணினான்.
“வரட்டும். என் ரூமுக்குதான் வரணும் வரட்டும். வச்சிக்கிறேன்” கருவிக்கு கொண்டான்.
“அதுசரி யாரை எங்க வைக்கணும் என்று மறந்தா இப்படித்தான்” முணுமுணுத்த சுமனாவதி அனைவரும் பார்த்த பார்வையில் “இல்ல நான் என்ன சொல்ல வரேன்னா ப்ரெண்ட கல்யாணம் பண்ணா இப்படித்தான். இதுவே தெரியாத இடத்துல கல்யாணம் பண்ணி இருந்தால் மரியாதை தானாக வந்திருக்கும்” சாருவை வீட்டு வேலைக்காரி என்று சொன்னவள் பேச்சை மாற்றியது அங்கிருந்த எல்லோருக்கும் புரியாமல் இல்லை.
லஹிருவுக்கு கூட அவள் பேச்சு பிடிக்கவில்லை. அவன் எதோ சொல்லப் போக அவனை கண்களையே அடக்கிய சுதுமெனிகே
“இவன் ஒருத்தன் எத பேசினாலும் நடுவுல பேசிகிட்டு. கூட கூட பேசிகிட்டு. அறிவு கெட்டவன். நீ சொல்லுப்பா எங்க போக போறீங்க?” ஹரிதாவை திட்டும் சாக்கில் நாத்தனாரை திட்டினாள்.
கொஞ்சம் நாட்கள் ஆகும் வரை சாரு இந்த வீட்டில் இந்த மாதிரியான பேச்சுக்கள் கேட்டுத்தான். ஆகா வேண்டும். அவளுடைய பேராசைக்கு அவள் இதை கேட்டுத்தான் ஆகா வேண்டும். அவள் பொறுத்துதான் ஆகா வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் லஹிரு.  
“திடிரென்று நடந்த கல்யாணம் இல்ல அப்பத்தா. திடிரென்று போக முடியாது. இருக்குற வேலையெல்லாம் முடிச்சிட்டு நிதானமா தான் போகணும். தாத்தாவோட நினைவு நாள் வேற வருதில்ல” காரணங்களை அடுக்கினான் பேரன்.
“வேலை பார்க்க போனா அது முடியவே முடியாதுடா… நீங்க போயிட்டு வாங்க நான். இவன வச்சி பார்த்துகிறேன்” சின்ன பேரனை கைகாட்டினாள் அப்பத்தா.
“இவனுக்கு அனுபவம் இல்லையே. நான் போயிட்டு வர்றதுக்குள்ள சொதப்பி வச்சிருப்பான். கொஞ்சம் நாள் போகட்டும். நீ என்ன சொல்லுற சாரு” தான் சொல்வதை அப்பாத்தா கேட்பதில்லை என்றதும் மனைவியிடம் ஆலோசனை கேட்பது போல் கேட்டான் லஹிரு. இதைத்தான் அப்பத்தாவும் பெரிதும் எதிர்பார்ப்பாள் என்று அவனுக்கும் தெரியும். இவள் மட்டும்தான் நடிப்பாளா? உன்னை ஓட விடுறேன் பார் என்பது போல் இருந்தது அவன் செயல். அத்தோடு சுமனாவதியின் பேச்சுக்கு பதில் கூறியது போலும் ஆகிற்று.
தன்னிடமா கேட்டான் என்று சாரு அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. இவ்வளவு நேரம் மறுத்துக் கொண்டிருந்தவன் அப்பத்தாவிடம் தன்னை மறுத்து பேசுமாறுதான் கூறுகிறான் என்று புரியாத அளவுக்கு அவள் ஒன்றும் பச்சை குழந்தையல்லவே.
“ஆமாம் பாட்டி. கொஞ்சம் நாள் ஆகட்டும்” என்றதோடு அமைதியானாள்.
“சரிப்பா உங்க இஷ்டம்” அத்தோடு சுதுமெனிகே ஹனிமூன் செல்லுமாறு வற்புறுத்தவில்லை. 
இரவு சாப்பாட்டுக்கு பின் சாரு சுதுமெனிகேயின் அறைக்கு வர, சுமனாவதி அவளுடைய கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“நீ என்ன இங்க பண்ணுற? உனக்குத்தான் என் பேரனோட கல்யாணம் ஆகிருச்சே போ போய் அவன் ரூம்ல தூங்கு” சுதுமெனிகே அவளை விரட்ட,
“அதுசரி என்னதான் நாய கழுவி நடு வீட்டுல வச்சாலும் அது அதோட இடத்துலதான் தூங்குமாம். அது மாதிரிதான் இவளும். வீட்டு வேலைக்கு வந்த அந்த வேலையை தானே பார்க்கணும்” குத்தலாகவே பேசினாள் சுமனாவதி.
சுமனாவதி தன்னுடைய அப்பாவின் அன்னை. சொந்த அப்பத்தா. தன்னை பார்த்த உடனே சுதுமெனிகேவுக்கு இயல்பில்லையே வந்த பாசம் கூட இவளுக்கு வரவில்லை. இவள் இந்த வீட்டு பையனை திருமணம் செய்து இருக்கின்றாள் கொஞ்சம் மரியாதையாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. திருமணத்தின் போதும் ஒதுங்கி இருந்து தன்னுடைய விருப்பமின்மையை வெளிப்படையாகவே காட்டினாள். அன்பாக ரெண்டு வார்த்தை பேசி வாழ்த்து கூட கூறவில்லை.
இத்தனை வயதாகியும், ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு, ஜாதி-மதம் என்ற பாகுபாட்டை பார்த்துக் கொண்டு திரியிது இந்த கிழவி என்ற கோபம்தான் சாருவுக்கு வந்தது.
“ஆமாம் பாட்டி என்ன செய்ய? இந்த வீட்டு பையன கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று கடமையை மறக்க முடியாதே. இத்தனை நாள் பாட்டி கூடத்தான் தூங்கினேன். இன்னக்கி அவங்க தனியா தூங்கணும். நைட்டுல அவங்களுக்கு ஏதாவது தேவைப்படுமா? என்று பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அதான் நீங்க இருக்கீங்களே. இனி எனக்கென்ன பயம்? நீங்க பார்த்துக்கொள்ள மாட்டீங்களா?” குதர்க்கமாகவே பேசினாள்.
சுமனாவதியே சுதுமெனிகேயை விட இரண்டு வயது பெரியவள். யார் யாரை பார்த்துக்கொள்வது?
சுமனாவதியை கண்டுகொள்ளாது பாட்டிக்கு மாத்திரை கொடுத்தவள் காலுக்கு என்னை தடவி தூங்குமாறு சொல்லி விட்டு லஹிருவின் அறைக்கு சென்றாள்.
அவள் நினைத்திருந்தால் சுமனாவதிக்கு ஏதாவது தேவையா? என்று கேட்டு செய்திருக்கலாம். தன்னை சுதுமெனிகேயின் வேலைக்காரி என்று பார்த்தால் தான் அவளுக்கு மட்டும்தானே பணிவிடைகள் செய்ய வேண்டும். இவளுக்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லையே. பாசம் என்பது இயல்பாகவே வர வேண்டியது. கட்டாயப்படுத்தி வருவதல்ல. சுமனாவதிக்கு ஏதாவது தேவையா என்று கூட சாரு கேட்கவில்லை. கேட்க தோன்றவும் இல்லை. அவள் மனதில் லஹிருவின் அறைக்குள் செல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் இருந்தது.
சாரு இப்படி பட்டென்று பேசுவாள் என்று சுமனாவதி கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள். வேலைக்கு வந்தவளுக்கு வீட்டில் இடம் கொடுத்தால் இப்படித்தான் பேசுவாள் என்று மனம் சொன்னாலும் அதை சொல்லி சுதுமெனிகேயிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள அவள் தயாராக இல்லை.
“பொண்ணு பார்க்க சாயல்ல எங்க அம்மா மாதிரி இருக்காளே பார்க்க மட்டும் அம்மா மாதிரி இருந்தா நல்லவளா இருந்திடுவாளா? குணத்திலும் நல்லவளா இருப்பாளான்னு பார்த்தேன். பரவாயில்லை மாறு சாதியானாலும் நல்ல குணவதியாதான் இருக்கா” சுமனாவதி கட்டிலில் சாய்ந்தவாறு சொல்லி சமாளித்தாள்.
நாத்தனாரே ஆரம்பித்த பின் தான் எதற்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று “உங்கம்மா ரெத்தம் உன் உடம்புல ஓடுறது போல அவ உடம்புளையும் ஓடுதில்லை அதுதான்” சுதுமெனிகே இதை விட தெளிவாக கூற முடியாது என்பது போல் கூறி விட்டு படுத்துக்க கொண்டாள்.
“என்ன சொன்ன? எனக்கு புரியல” எழுந்து அமர்ந்தே விட்டாள் சுமனாவதி.
“அவ உன் பேத்தி. உன் பையனுக்கு பொறந்தவனு சொன்னேன். உன் பையன் என்ன பார்த்துக்க வந்த தமிழ் பொண்ண காதலிச்ச விஷயம் உனக்கு தெரியுமா? தெரியாதா?” படுத்த வாக்கிலே சுதுமெனிகே கேட்க சுமனாவதியின் கண்ணுக்குள் பல காட்ச்சிகள் வந்து போனது.
கவிதாவும் ஜீவகையும் காதலித்த விஷயம் தனக்கு மட்டும்தான் தெரியும். அவர்களை பிரித்து கவிதாவை ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்ததாக சுதுமெனிகே நினைத்திருக்க, சாரு என்றொருத்தியே பிறந்திருக்கின்றாள் என்றால் யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் தெரியுமோ? என்னவெல்லாம் மறைத்திருக்கிறார்களோ? அதனாலயே தெரியுமா? தெரியாதா? என்று கேட்டாள்.
“என்ன சொல்லுற நீ? என் பையன் தமிழ் பொண்ண காதலிச்சானா? என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்” கோபமாக சொன்னாள் சுமனாவதி.
“உங்க அம்மாக்கு இருக்குற அந்த கண்ணு. உன் அண்ணனுக்கும் இருக்கு. உன் பையனுக்கும் இருக்குறது அதே கண்ணுதான் சாருவுக்கு இருக்கு. கண்ணு ஒன்னு போதாது சாரு உன் பையனோட பொண்ணு என்று சொல்ல. என்ன உன் பையன்தான் அவளை பொண்ணா ஏத்துக்கணும்” சுதுமெனிகே சொல்ல
“என் பையன் வரட்டும். நானே அவன் கிட்ட கேட்கிறேன். நீ சொல்லுறத நான் நம்ப மாட்டேன்” என்ற சுமனாவதி யோசனையில் ஆழ, சுதுமெனிகே தூங்கி இருந்தாள்.
“சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது இதுதானோ?’ புலம்பியவாறே சாரு லஹிருவின் அறைக் கதவை மெதுவாக திறக்க, அவனோ தூங்காமல் கட்டிலில் சாய்ந்து இவள் வரும்வரைக்கும் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
கட்டில் அலங்காரம் எதுவும் இல்லை. வேண்டாம் அவசியமில்லை என்றுவிட்டான் லஹிரு. திருமணம் நடப்பதுதான் முக்கியம் என்று சுதுமெனிகே இதில் எல்லாம் கவனம் செலுத்தவுமில்லை.
ஹரிததான் “காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறீங்க. ரொமான்டிக்கா இருக்க வேணாமா?” என்று ஆரம்பிக்க லஹிருவுக்கு சர்வமும் புரிய ஆரம்பித்தது.
ஆரம்பத்திலிருந்தே இவளுடைய திட்டம் என்னை திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் ராணி போல் வாழ்வதுதான். என் காரை வழி மறித்து கண்ணாடியை உடைத்து, வட்டிப் பிரச்சினையை வைத்து என்னை பணம் கொடுக்க வைத்து வீட்டுக்குள் நுழைந்தததும் இல்லாமல் தம்பியை காதலிப்பது போல் நடித்து என் வாயாலையே நான் அவளை காதலிப்பதாக சொல்ல வைத்து திருமணத்தையும் நடத்தி விட்டாள் இந்த யக்ஷணி. இவள் நினைத்ததை நடக்கவே விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் லஹிரு.  
லஹிருவின் எண்ணங்கள் இவ்வாறு இருக்க, ஹரித அறையை அலங்கரிக்க உள்ளே செல்லலாம் என்று போக, “எதுவும் வேணாம் போ” அவனை துரத்தியடித்த சாரு “நான் அந்த கட்டிலில் தூங்கினால்தானே” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
லஹிருவின் திட்டமும் அதுவாகத்தான் இருந்தது. அவள் வருவாள். கட்டிலில் தூங்குவாள் அதை வைத்து சண்டையை தொடங்கலாம் என்று காத்திருந்தான்.
ஆனால் அவளோ ஏற்கனவே கொண்டு வந்து வைத்திருந்த அவளது படுக்கைவிரிப்பு, தலையணை என்று அனைத்தையும் கீழே போட்டு தூங்க ஆரம்பமாக குழம்பிப் போனது லஹிருதான்.
ஆனாலும் அவன் சந்தேகப்புத்தி அவனை சும்மா விடாதே. திட்டம் போட்டுத்தான் எல்லாவற்றையும் இவள் செய்து கொண்டிருக்கிறாள். தம்பியை நெருங்கினாள் அதை தடுக்க நான் இப்படியொரு முட்டாள் முடிவை எடுப்பேன் என்று தெரிந்து வைத்திருந்தவள் சரியாக காய் நகர்த்தி இருந்தாள்.
அப்படிப்பட்டவள் நான் சொல்லும் முன்பாகவே கீழே தூங்குவதென்றால் அவள் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? மணமேடையில் பேசிய? குழந்தை திட்டமா?” ஏதேதோ மனதில் அலைக்கழிக்க,
“நீ நினைச்சதை நடத்திட்ட இல்ல” கட்டிலில் அமர்ந்தவாறே அவளை முறைத்தான் லஹிரு.
“ஆரம்பிச்சிட்டான்டா…” அவள் மனம் கூவ “எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம்” அவள் தூங்கலாம் என்று படுக்கையில் சாய போக
நாளே எட்டில் அவளை அடைந்தவன் இழுத்து நிறுத்தி “முதல்ல எனக்கு பதில் சொல்லுடி. உன் அல்டிமேட் பிளான் என்ன அடையுறதுதானே. அதான் துணி மாத்தும் போது உன் பிரெண்டு கூட பேசிட்டு இருந்தியே எல்லாம் நான் கேட்டுட்டேன்”
“இது வேறையா?” என்பது போல் பார்த்தவள் “இப்போ உனக்கு என்ன பிரச்சினை? 
“என் தம்பி கூட நெருங்கி பழகினா நான் கோபப்படுவேன்னு உனக்கு தெரியும். உன்ன இங்க இருந்து அனுப்ப மாட்டேன்னு நினைச்ச. நான் உன்ன ஊருக்கு போக சொன்னதும் என் கிட்டயே என் தம்பிய கல்யாணம் பண்ணுவேன்னு சொன்ன. பாட்டிகிட்ட என் கல்யாணத்த பத்தி பேசி என் ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்குறத தெரிஞ்சிக்கிட்டு, உன் ஜாதகத்தை அதுக்கு ஏத்தது போல மாத்தி கொடுத்திருக்க. தம்பிக்கு ஒன்னென்னா நான் எதுவேனும்னாலும் செய்வேன்னு உனக்கு தெரியும். எல்லாம் உன் திட்டம். நீ நினைச்சதை நடத்திட்ட இல்ல மோகினி பிசாசே” அவள் கழுத்தை இறுக்கினான் லஹிரு.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இவன் இதையே பேசிக் கொண்டு இருப்பான்? இன்றே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவள்
அவன் கையை தட்டி விட்டு “உன் கிட்ட பதில் சொல்லணும் என்ற அவசியம் எனக்கில்லை. சொன்னாலும் நீ புரிஞ்சிக்க போறதும் இல்ல. யார் கூட வேணாலும் வாழலாம். சந்தேகப்புத்தி உள்ள உன் கூட வாழ முடியாது. இப்போ என்ன உன் சொத்துக்காக நான் உன்ன கல்யாணம் பண்ணதாகத்தானே நினைக்கிற?” என்றவள் அவன் கையை பிடித்து இழுத்து சென்று அலுமாரியை திறந்து இரகசிய லாக்கரை திறந்தாள்.
“உண்மைய சொன்னா என்ன சந்தேகபுத்தி  என்றா சொல்லுற?” அவள் மேல் பாய்ந்தவன் அவள் கடவுச்சொல்லை அழுத்தியதை கண்டு அதிர்ந்தான்.
லாக்கரின் கடவுச் சொல் அவனுக்கும் அப்பத்தாவுக்கும் மட்டுமே தெரியும். “இவளுக்கு எப்படி தெரியும்? அப்பத்தா அதற்குள் இவளுக்கு அதை சொல்லி விட்டாளா? அப்படி என்ன மாய மந்திரம் போட்டு மயக்கி விட்டாள் இந்த மோகினி?” லஹிரு யோசிக்கும் பொழுதே
“இதோ இதில் பாட்டி கொடுத்த குடும்ப நகைகள் எல்லாம் இருக்கு. நீ போட்ட வைர நகை கூட இதுலதான் இருக்கு. உன் அம்மாவோட நகைகளை கூட பாட்டி கொடுத்தாங்க, அது கூட இதுல இருக்கு. நகை மட்டுமல்ல பாரம்பரிய துணி கூட கொடுத்தாங்க அதுவும் இந்த அலுமாரில தான் இருக்கு. இந்தா இதோட சாவி. நீயே வச்சிக்க. சந்தோசமா? இத நான் திருடிட்டு போய்டுவேன்னு நினச்சா கொண்டு போய் பத்திரமா எங்கயாச்சும் வை.
உன் சொத்தும் எனக்கு வேணாம். நீயும் வேணாம். பாட்டி சொன்னாங்கன்னுதான் உன்ன கல்யாணம் பண்ணேன். அவங்க மனச நோகடிக்க என்னால முடியல. உன் கிட்ட கேட்டாங்க தானே. இந்த வேலைக்காரிய கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்ல வேண்டியது தானே எதற்கு காதலிக்கிறேன்னு பொய் சொன்ன?’ கடைசி வாக்கியத்தை சொல்லும் பொழுது தொண்டையடைத்து குரலும் கமறியது.
எதோ ஒரு வித ஈர்ப்பு அவன் மேல் உண்டு அது அவன் சொந்தம் என்பதனால் வந்தது என்று சொல்லிக் கொண்டாலும், கூடவே வளர்ந்த முத்துவின் மேல் வராத ஈர்ப்பு, சிரித்துப் பேசும் ஹரிதவின் மேல் வராத ஈர்ப்பு இந்த சிடுமூஞ்சியின் மேல் இருப்பது அவளுக்குமே அவள் மீது கோபத்தைத்தான் உண்டாக்கியது.
தன்னை பிடிக்கவில்லை என்பவன் காதலிப்பதாக பொய் கூறி திருமணம் செய்தது அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த பொய் ஒருகாலமும் உண்மையாகப் போவதில்லை என்று நினைக்கும் பொழுதுதான் நெஞ்சம் அடைத்தது. அது ஏன் என்று கூட அவளுக்கு புரியவில்லை.
அங்கிருந்த பாரம்பரிய நகைகள் கோடி ரூபாய் பொரும். அதையே இவள் அசால்டாக வேண்டாம் என்றது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்த வாயடைத்து நின்றான் லஹிரு.
கலங்கிய கண்களை இமை தட்டி, பெருமூச்சு விட்டு, தொண்டையை கனைத்து, எச்சில் விழுங்கி தன்னை மீட்டுக் கொண்டவள் “சும்மா சும்மா என்ன சீண்டாத. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன். என்ன பாட்டி உசுரோட இருக்குறவரைக்கும் தானே நீயும் நானும் ஒண்ணா  இருக்க போறோம். அதற்கு பிறகு ஒரு நிமிஷம் கூட நான் உன் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன் போதுமா? போ போய் தூங்கு. என்னையும் தூங்க விடு” சீரிப் பாய்ந்தவனை சுனாமியாய் தாக்கி விட்டு சென்று படுக்கையில் சரிந்த சாரு மெளனமாக கண்ணீர் வடிக்கலானாள்.
லஹிருதான் தூக்கத்தை தொலைத்து வெறிக்க வெறிக்க சாவிக்கொத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
எதை நம்புவதென்றே அவனுக்கு குழப்பமாக இருந்தது. தான் கண்டத்தையா? கேட்டதையா?
வான்மதியோடு அவள் பேசியதும் உண்மை. இப்பொழுது சாரு நடந்து கொண்டதும் உண்மை.
அவளை நம்பு என்று மனம் சொன்னாலும் மூளையோ சந்தேகப்படுவதை விட மறுத்தது. நிச்சயமாக அவள் திறமையான நடிகையாக இருப்பாள். கொடுக்கிறது போல் எல்லாவற்றையும் கொடுத்தால் தானே என் மனம் மாறும். அப்பொழுதுதான் அவளால் என் கூட வாழ முடியும். அதுதான் அவள் அடுத்த திட்டம். கூடாது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்” அவனுக்கு முதுகு காட்டி தூங்கும் அவளையே பார்த்தவாறு தூங்கி இருந்தான் லஹிரு.
அவன் கண்விழிக்கையில் சாரு அறையிலையே இல்லை. அவள் தூங்கி இருந்த இடத்தில் படுக்கை விரிப்பு, தலையணை கூட மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
“ஆரம்பிச்சிட்டா. நாடகத்தை ஆரம்பிச்சிட்டா” அவளை திட்டியவாறே வாசலுக்கு வர, தேநீரோடு வந்தவள் அவன் கையில் கொடுத்து விட்டு வெளியே சென்றாள்.
இவன் அவள் முகம் பார்த்தும் அவள் இவன் முகம் பார்க்கவில்லை. வேலைதான் முக்கியம் என்பது போல் சென்று விட்டாள்.
“என் முகத்துல முழிச்சா அவ நாள் நல்லா இருக்காதோ? நான் அவ முகத்துல இல்ல முழிச்சேன் என் நாள்தான் நல்லா இருக்காது” புலம்பியவன் வெளியே செல்ல வளமை போல் அவள் சுதுமெனிகேவோடு புத்தரை வணங்கி கொண்டிருந்தாள்.
காலை உணவின் போது “டேய் பேரான்டி ஹனிமூன்தான் போக மாட்டேன்னு சொன்ன. ரெண்டுநாள் லீவு எடு. இப்போதான் கல்யாணம் ஆகி இருக்கு. உன் பொண்டாட்டிய எங்கயாச்சும் வெளிய கூட்டிகிட்டு போயிட்டு வா. வந்ததுல இருந்தே அவ எங்கேயுமே போகல” என்றாள் சுதுமெனிகே.
“ஆமாம் பாட்டி நான் கூட சொல்லணும் என்று நினச்சேன். ஆனா பக்டரில உள்ளவங்களுக்கு இன்னைக்கி மதிய சாப்பாடு ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். அவங்க குடும்பமும் வந்து சாப்பிட்டு போக சொல்லுங்க. மிஞ்சா கொடுத்து விடணும். இத்தனை வேலையையும் தனியா உங்களால பார்க்க முடியாது” என்றான் லஹிரு. எதை சொன்னாலும் மறுத்துப் பேசாமல் எப்படி மறுக்க வேண்டும் என்பதையும் நன்கு அறிந்துதான் வைத்திருந்தான் பேரன்.  
லஹிரு வெளியே கூட்டிக் கொண்டு போக நினைத்தான் என்றதும் மலை உச்சிக்கு அழைத்து சென்று அவளை தள்ளி விடுவது போல் சாருவின் கண்ணில் காட்ச்சி தோன்றி மறைந்தது.
“ஒருவேளை சாப்பாடு கொடுக்குறதுல அவங்க கஷ்டம் காணாம போய்டுமா? காசும் சேர்த்து கொடுக்கலாம்”
“பாட்டி இது நிஜமாலுமே நல்ல ஐடியாவா இருக்கு” பாட்டியை பார்த்து புன்னகைத்தாள் சாரு.
“ஆமா அந்த இனம் தானே இவ. எப்ப பார்த்தாலும் காசு, காசு என்றே அலைவா…” சாருவை முறைத்தவன் “சரி அப்பத்தா அப்படியே செஞ்சிடலாம்” அவனே அதை செய்வான் அவளை திட்ட காரணம் கிடைத்தால் விடுவானா? 
“இதோ வெட்டிப் பய இவன வச்சே நான் எல்லாம் பண்ணிக்கிறேன்” என்று ஹரிதயை சுட்டிக்காட்ட அவன் சுதுமெனிகேயை முறைக்கும் பொழுதே “சந்த்ரசேன இருக்கான், இதோ சுமனாவதி இருக்கா, அவளோட வேலைக்காரி மல்காந்தி இருக்கா நான் பாத்துக்கிறேன்” என்றாள்.
“சரி வெளிய போறீங்களே எங்க போக போறீங்க?’ கேட்டது ஹரித.
“தலதா மாலிகாவைக்கு போயிட்டு சாமி கும்பிட்டு…” என்று லஹிரு ஆரம்பிக்கவும்
“அப்படியே பொட்டானிகள் கார்டன் போய்  சுத்திப் பாருங்க. வாயில நல்லா வருது” கடுப்பானான் தம்பி.
“ஏன்டா பன்சலைக்கு {புத்தகோவில்} போறதுல என்ன தவறு. கல்யாணமாகி முதல் முதலா வெளிய போறாங்க. அதுவும் தலதா மாலிகாவைக்கு போறது பாக்கியம்டா… லூசுப்பயலே” சுமனாவதிதான் கடிந்தாள். 
“இங்க பாரு கிழவி. என்ன பேசினா உன்ன நானும் பேசுவேன். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்க சரியா. இப்போ யாரு உன்ன பேச சொன்னது பேசாம பால்சோறு முழுங்கு” சுமனாவதியின் வாயை அடைத்த ஹரிதவை அனைவருமே முறைத்தது மட்டுமல்லாது. பெரியவளிடம் இப்படியா மரியாதையில்லாமல் பேசுவது என்று அட்வைஸ் வேறு செய்து அவன் காதை பஞ்சர் செய்ய ஆரம்பித்தனர். 
“போதும் நிறுத்துங்கப்பா… பேச வேண்டியதை பேசாம எப்பயுமே கண்டதை மட்டும் பேசுங்க” கடுப்பானவன் சாப்பாட்டு தட்டோடு எழுந்து சென்றே விட்டான்.
“ஏன் பாட்டி அவன்தான் ஒரு குழந்தை என்று தெரியுதில்ல. அவனை போய் சீண்டுறீங்க? கூடவே இருந்து வேலைய கத்துக்கிட்டா பொறுப்பு வரும், பொறுப்பு வந்தா சரியாவான். இப்படி ஆளாளுக்கு பேசினா எங்கயாச்சும் ஓடிட போறான். கொஞ்சம் பொறுமையாதான் அவனை ஹாண்டல் பண்ணனும்” என்றாள் சாரு.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்த லஹிரு கைகழுவ எழுந்து சென்றான்.
சுதுமெனிகே சுமானவதியையும் அழைத்துக் கொண்டு ஹரிதவோடு பாக்டரிக்கு கிளம்பி செல்லும்வரை காத்திருந்த லஹிரு “சரி வா கிளம்பலாம்” என்று சாருவை அழைத்தான்.
எதோ பாட்டி சொன்னாங்க. அதற்காக இவன் சொல்லி இருப்பான் என்று நினைக்க, உண்மையிலயே வெளியே அழைத்து செல்கின்றானா? தான் நேற்றிரவு பேசியதன் தாக்கம் அவன் மன மாற்றத்துக்கு காரணமா? சந்தோஷமாகவே அவனோடு வெளியே செல்ல தயாரானாள் சாரு. 
வண்டியில் ஏறும் பொழுது பூஜைக்காக  பழங்கள், பூக்கள், ஊதுவத்திகள் என்று எல்லாமே சாரு கொண்டு வந்திருக்க, “கோவிலுக்கு போறோம்னு உனக்கு எப்படி தெரியும்?”
“சாப்பிடும் பொழுது…” என்றவளுக்கு இவன் சொல்லவே இல்லியே, அப்போ கோவிலுக்கு போகவில்லையா? எங்க போறோம்?” இவள் யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் பூஜை ஜாமங்களை வண்டியில் வைத்திருந்தான்.
    
வண்டியில் கிளம்பி செல்லும்வரை இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. வண்டியை நேராக சென்றது தலதாமாலிகாவை என்ற புத்தகோவிலுக்குத்தான்.
புத்தரை தரிசித்த பின் மனம் லேசாக இருப்பது போல் தோன்ற, “வா அப்படியே கோவிலுக்கு வெளியே இருக்குற குளத்துல ஒரு வார்க்க போலாம்” என்று அவளை அழைத்து சென்ற லஹிரு பேசியதை கேட்ட சாரு கடுப்பானாள்.

Advertisement