Advertisement

அத்தியாயம் 12
லஹிருவும் சாருவும் “பொருவ” எனும் மணமேடையில் நின்றிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் திருமணமா? இது கனவா? நனவா? அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் அவர்களை மணமேடையில் நிறுத்தி இருந்தாள் சுதுமெனிகே.
சாரு தான் விருட்சிக ராசி என்று கூறியதும்,  அவளாகவே இந்த வீட்டுக்கு வரவில்லை. லஹிருவுக்காக அவளை புத்தர் அனுப்பி வைத்திருக்கிறாரோ அதை உறுதி செய்துகொள்ளவே ஜோசியரை நாடினாள் பாட்டி.
அவள் நினைத்தது போலவே ஜோசியரும் கூறிவிட கவிதாவுக்கு தன்னுடைய பிள்ளைகள் செய்த பாவத்துக்கு இதுதான் பிராயச்சித்தம் என்று எண்ணியவளுக்கு இவர்களின் சம்மதம் திருமணத்துக்கு ரொம்ப முக்கியம் என்பதை மறந்தாள்.
ஜோசியரிடம் முகூர்த்த நாட்களை குறித்துக் கொண்டு காரில் எறியவளை யோசனையாக பார்த்தாள் சாரு.
ஜோசியர் சொன்னது அனைத்தும் அவள் காதில் விழுந்தாலும் பாட்டி என்ன செய்ய விளைகிறாள் என்று புரியவில்லை.
அமைதியாக வீடு வந்த சுதுமெனிகே அறையை அடைந்ததும் சாருவை தன் அருகில் அமர்த்திக் கொண்டு “நான் சொல்லுறத கொஞ்சம் கவனமா கேளு. உங்கப்பா உன்ன ஏத்துகிறதுக்கும், என் பேரனோட சர்ப்பதோஷம் கழியிரத்துக்கும் ஒரே வழிதான் இருக்கு. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கணும். இத எனக்காக செய்”
பாட்டி சொன்னால் அவள் கிணற்றில் கூட குதிப்பாள். ஆனால் லஹிருவை திருமணம் செய்வது? நடக்கும் காரியமா? அதற்கு அவன் சம்மதிக்க வேண்டாமா? அவன் நிச்சயமாக சம்மதிக்க மாட்டான்.
“நான் அப்பாவோட சேருறதுக்கும், உங்க பேரன கல்யாணம் பண்ணுறதுக்கும் என்ன பாட்டி சம்பந்தம்?” தன் விருப்பமின்மையை இவ்வாறு தெரிவித்தாள் சாரு.
“இப்போ நீ இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்க, உண்மை தெரிஞ்சா யார் வேணாலும் உன்ன வீட்டை விட்டு அனுப்பலாம். ஏன் உன் உயிருக்கே ஆபத்து வரலாம்”
“ஜோசியர் சொன்னதை நினைச்சி பயப்படுறீங்களா?”
“இதுநாள்வரைக்கும் அவர் சொன்னது நடந்துதான் இருக்கு. உன் ஜாதகம் எப்படி லஹிருவ பாதுகாக்குமோ. நிச்சயமாக அவன் உன்ன பாதுகாப்பான். நீ அவன் பொண்டாட்டியானா யாராலயும் உன்ன இந்த வீட்டை விட்டும் அனுப்ப முடியாது”
சிந்தித்துப் பார்த்தால் பாட்டி சொல்வதில் தவறு இல்லை என்றுதான் தோன்றியது “பாட்டி நீங்க எதுக்கும் உங்க பேரன் கிட்ட ஒரு வார்த்த கேட்டுடுங்க. அவர் வேணாம்னு சொன்னா இந்த கல்யாணம் நடக்காது” தெளிவாக கூறினாள் சாரு.
நிச்சயமாக தன்னை திருமணம் செய்துகொள்ள அவன் சம்மதிக்க போவதில்லை என்ற நம்பிக்கையில் சாரு பாட்டியின் மனதை புண்படுத்தாமல் முடிவெடுக்க வேண்டியது லஹிருதான் என்று கூறி விட்டாள்.
தான் எந்த பெண்ணை கைகாட்டுகின்றேனோ அந்த பெண்ணை லஹிரு திருமணம் செய்துகொள்வதாக கூறி இருக்க, அவன் மறுக்க போவதில்லை என்ற தைரியத்தில் தலையசைத்து புன்னகைத்தாள் சுதுமெனிகே.
பாக்டரியிலிருந்து லஹிருவும், ஹரிதவும் வந்து சேர, அவர்களுக்கு தேனிரோடு சிற்றுண்டியும் வழங்கினாள் சாரு.
அவளுடைய குழப்பமான முகம் கண்டு லஹிருவுக்கும் குழப்பம் தொற்றிக்கொண்டது. அவனை சிந்திக்க விடாமல் சுதுமெனிகே அவனோடு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வந்தமர்ந்தாள்.
காலையில் பாக்டரிக்கும் வரவில்லை. இவளும் குழப்பமான முகபாவனையை கொடுக்கிறாள் என்னவாக இருக்கும் என்று யோசனாகவே அப்பத்தாவை ஏறிட்டவனுக்கு பேச வேண்டிய முக்கியமான விஷயமே அவனுடைய திருமணத்தை பற்றி என்றதும் கடுப்பானான்.
நேற்று இவள் பேசினாள். இன்று அப்பத்தா. ரெண்டு பேரும் பேசி வைத்து என்னிடம் வந்து பேசுகின்றார்களா? அல்லது இவள் என்னிடம் பேசியது போல் அப்பத்தாவிடம் பேசி அவளுடைய மனதை மாற்றி விட்டாளா? சாருவை தான் முறைத்தான்.
“என்னது அண்ணனுக்கு பொண்ணு பாத்தீங்களா? அப்பத்தா நானும் சாருவும் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” இடையில் குறுக்கிட்ட ஹரித சாருவை பார்த்தவாறு கண்களால் கெஞ்சினான்.
இதை பார்த்த லஹிருவின் வயிறு பற்றி எரிந்தது. உள்ளம் கொதித்தது நெற்றி இரவு இவள் என்னிடம் தைரியமாக பேசியதற்கு காரணம் இவன் சம்மதம் கிடைத்து விட்டதா? ஒருகாலமும் நீ நினைத்ததை நடக்க விடமாட்டேன் சாருவை முறைத்தான் “அப்பத்தா நீங்க வேற எந்த பெண்ணையும் பார்க்க வேணாம். நான் சாருவை லவ் பண்ணுறேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் எழுந்து அறைக்கு சென்று விட்டான்.
அப்பத்தா அண்ணனுக்கு யாரோ ஒரு பெண்ணை பார்த்து விட்டார். அவன் சாருவை காதலிக்கின்றான். அவன் இன்னுமே சாருவிடம் தன் காதலை கூறாததால் அப்பத்தா பார்த்த பொண்ணையே திருமணம் செய்துகொள்ள சம்மதம் கூறி விடுவான். சாருவும் அவனை விரும்புகின்றாள் இவளாவது அப்பத்தாவிடம் பேசினால்தான் உண்டு. அதனால்தான் சாருவிடம் பார்வையால் கெஞ்சினான் தம்பி. தான் சொல்வதாக கூறியது அண்ணனுடைய மனதை. அண்ணன் சாருவை காதலிப்பதாக அப்பத்தாவிடம் கூற முயன்றான்.
அதற்குள் அவசரப்பட்ட லஹிரு தான் சாருவை காதலிப்பதாக கூறி தம்பியை காப்பாற்றி விட்டதாக எண்ணி சாருவின் மீது கோபத்தை காட்டவும் முடியாமல் இடத்தை காலி செய்தான்.
சுதுமெனிகேயும் ஹரிதவும் சந்தோசத்தில் மிதக்க அதிர்ந்தது சாருதான்.
“என்ன சாரு இப்போ சந்தோசம் தானே” என்ற சுதுமெனிகேயிடம் உண்மையை சொல்ல முடியாமல் புன்னகைத்து வைத்தாள் சாரு.
இருவரினதும் சம்மதம் கிடைத்ததில் சுதுமெனிகே வேறு யாருடைய சம்மதத்தையும் கேட்கவில்லை. முதலில் செய்தது “நெகத்” எனும் முகூர்த்த நாளை குறித்ததுதான்.   
இதை அறிந்த புஞ்சி நிலமையும் மெனிகேயும் கடுமையாக எதிர்த்தனர். வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதா? அதுவும் மாற்று மதத்தை சேர்ந்தவளை. ஒருகாலமும் முடியாது. அப்பாவும், அண்ணனும் இருந்திருந்தால் கொலையே விழுந்திருக்கும் என்று அன்னையிடம் காய்ந்தான்.
“ஏன்டா நீயே காதலிச்சுதான் கல்யாணம் பண்ண. நீ பண்ண ஏத்துக்கணும். என் பேரன் பண்ணா எதிர்க்கணுமா?”
“நான் ஒன்னும் வேற மதம் கிடையாது” கழுத்தை நொடிக்காத குறையாக மெனிக்கே மாமியாரிடம் வாயாட, புஞ்சி நிலமையும் தாங்கள் எந்த தவறும் செய்யாதது போல் ஒத்தூதினான்.
“என் பையன் கூட நான் பேசிகிட்டு இருக்கேன். நடுவுல நீ யாரு?”அதன்பின் மெனிகே மாமியாரிடம் பேச முடியுமா? இப்படித்தான் மருமகளின் வாயை அடைப்பாள் சுதுமெனிகே. இதனாலயே மாமியாருக்கும், மருமகளுக்கும் ஆகாது.
“இங்க பாரு நான் எத செஞ்சாலும் யோசிச்சுதான் செய்வேன். சாரு ஜாதகம் லஹிரு ஜாதகத்தோட பக்காவா பொருந்துது. அதனாலதான் நான் சம்மதிச்சேன். எனக்கு என் பேரன் உசுரு முக்கியம்” என்று சின்ன மகனின் வாயை அடைத்தாள்.
வீரசிங்கையின் தங்கை சுமனாவதியும் அலைபேசி வழியே இதை பற்றி விசாரிக்க, ஜாதகத்தை காரணம் கூறியே சமாளித்தாள்.
திருமணத்தை சுதுமெனிகே வீட்டில்தான் ஏற்பாடு செய்திருந்தாள். நெருங்கிய சொந்தபந்தம் என்று மொத்தமாக ஐம்பது பேர் கூட திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திடீர் திருமணம் ஒரு காரணம் என்றால், சிலர் வெளிநாட்டில், சிலருக்கு வேலை என்று அலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
சாரு பாரம்பரிய கண்டி பெண்களை போன்று “ஒசரிய” அணிந்திருந்தாள். கண்டிய மணமகள் மற்றவர்களிடமிருந்து தனித்துவமானவள். சாருவையும் அவ்வாறே அலங்காரம் செய்திருந்தனர். ஆனால் அவள் முகத்தில் குழப்பரேகைகளுக்கு குறைவே இருக்கவில்லை.
தான் இந்த வீட்டுக்கு வந்ததே தந்தையை தேடி. ஒருவாரு அவரை காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்த தருவாயில் இந்த திடீர் திருமணம் அவசியமா? லஹிருவுக்கு தன்னை சுத்தமாக பிடிக்காது. அவன் ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு இந்த திருமணத்தை செய்ய முனைக்கின்றான் என்று அவளுக்கு தெரியும் அவனை பற்றிய கவலையை விட தந்தையால் கலந்துகொள்ள முடியாத திருமணம் அவசியமா? என்ற குழப்பம்தான் அவளை ஆட்டிப்படைத்தது.
“சாரு நீ சிங்களத்தி மாதிரியே இருக்கடி” வான்மதிதான் தோழியை வியந்து பார்த்தாள். 
தலையில் நலல்பட {நெத்திச் சுட்டி} சூடி. வகிடெடுத்து வாரி சூரியன் மற்றும் சந்திர ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
“இதப்பாரேன் உன் பேர்ல மதி இருக்கு உன் புருஷன் பேர்ல சூரியன் இருக்கு எங்குறத்துக்காக தலைலயா வைப்பாங்க” வான்மதி கிண்டல் செய்ய சாரு தோழியை முறைத்தாள்.   
மணமகள் முறையாக ஏழு மாலைகளை அணிவாள். அதில் முக்கியமானவை பீடி மாலை, பெட்டி மாலை. பீடி மாலை மிக நீளமானது மற்றும் மீதமுள்ளவற்றைச் சுற்றி வருகிறது. பெட்டி மாலை என்றால் பூக்கள் அல்லது இதழ்களின் மாலை.
நளபதா பதக்கமானது மிகப்பெரியது அதை சாருவின் இதயத்திற்கு அருகில் அணிவித்திருந்தனர். அதை தவிர அகஸ்தி மாலை, ஹன்சா மாலை {அன்னம் சின்னம் பொறிக்கப்பட்ட மாலை}  அணிந்திருந்தாள்.
வான்மதி சரியாக ஏழு மாலைகள் இருக்கின்றனவா என்று எண்ணிப் பார்க்க, “அங்கிட்டு போடி உன் கண்ணே போதும் கொள்ளிக் கண்ணு” பஞ்சவர்ணம் அவளை தள்ள
“என் கிட்ட நகையெல்லாம் நீ எதிர் பார்க்காத அத்த. வெறுங் கைய வீசிக்கிட்டுதான் வருவேன். வேணும்னா உன் புள்ளைய வாங்கி போட சொல்லு” பஞ்சவர்ணத்தை வெறுப்பேத்தினாள் வான்மதி.
கையில் பழங்களின் விதைகளால் மற்றும் கம்பியில் கட்டப்பட்ட கெடி வளலு எனும் வளையலும், செரி வளையல் எனும் சிறிய மூன்று வளையல்களை இணைத்த வளையளையும் துரதிர்ஷ்டத்தைத் தடுக்க கை பட்டைகள் மற்றும் பாசுபண்டுகளை அணிந்திருந்தாள். இதையெல்லாம் பார்த்தேயிராத பஞ்சவர்ணம் தொட்டுப் பார்த்தவாறே “ஆமாம்டி… நீ வெறுங்கைய வீசிக்கிட்டு வருவ நான் புறங்கையை நக்கிகிட்டு நிக்கணும் பாரு. எல்லாம் நான் பெத்து வச்சிருக்குறவன சொல்லணும் சாரு கல்யாணம் முடியட்டும் உங்க ரெண்டு பேரையும் கவனிக்கிற விதத்துல கவனிக்கிறேன்” அங்கே வான்மதியின் அன்னையும் இருக்கிறாள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் இவர்களின் பேச்சு இருந்தது.
சிங்கள வரலாற்றின் கண்டி காலத்திலிருந்து ஒற்றைப்படை எண்கள் எப்போதும் அதிர்ஷ்டமாக கருதினர். ஒவ்வொரு சிங்கள நிகழ்விலும், உணவு முதல் நகைகள் வரை, பாரம்பரியத்தில் ஏழு என்ற எண் ஒரு மந்திர எண்ணாகக் கருதப்படுகிறது.
“சாரு தயாராகிட்டியா? முகூர்த்த நேரத்துல மேடையில இருக்கணும்” என்றவாறு வந்தாள் சுதுமெனிகே
லஹிரு நிலமே உடையில் தயாராகி நின்றிருந்தான்.
நிலமே ஆடை மிகவும் உயர்ந்த வர்க்க பாரம்பரிய இலங்கை குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டு அல்லது ஷேக் ஜவுளிகளில் உட்பொதிக்கப்பட்ட நகைகள் மற்றும் விரிவான எம்பிராய்டரி வேலைகளுடன் செய்யப்பட்டது. பண்டையகாலத்தில் அதன் நிறம் அணிந்தவரின் வேலை மற்றும் சமூகத்தின் நிலையை விவரித்தது. காலப்போக்கில் இந்த ஆடை விசேஷங்களுக்கு மட்டும் அணியும் ஆடையாக மாறி இருந்தது.
லஹிரு அணிணிந்திருந்த தொப்பியின் நான்கு மூலையில், தங்கம் மற்றும் வெள்ளி நூலால் பெரிதும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கிரீடம் போன்ற வடிவம் இருந்தது. தொப்பியின் மையத்திலிருந்து மேல்நோக்கி நீட்டப்பட்ட தங்க மரம் போன்ற ஆபரணத்தையும் அது கொண்டிருந்தது,
ஜாக்கெட் மற்றும் தொப்பி ஒரே துணியில் ஒரே நிறத்தில் இருந்தன. சரிகை வேலை செய்யப்பட்டு அதன் தரமும் விலையை பற்றியும் பறைசாற்றியது.
“சே உன்ன பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு. நா சாருவுக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தேன் நீ முந்திகிட்ட” ஹரித சோகமாக சொல்வது போல் சொன்னான். தான் சாருவோடு பேசினால் அண்ணன் பொறாமை படுவதாக எண்ணியே இவ்வாறு கூறினான் தம்பி.  
“உன்னாலதான்டா எல்லாம். இல்லனா நான் எதுக்கு அவளை கல்யாணம் பண்ண போறேன். அப்பத்தா வேற ஜாதகம், ஜோசியம்னு கல்யாணத்த வச்சிட்டாங்க. இல்லனா அவளை ஏதாவது காரணம் சொல்லி ஊருக்கு அனுப்பி வச்சிருப்பேன். தொல்லை ஒழிஞ்சிருக்கும்” மனதுக்குள் பொறுமியவன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தான்.
புஞ்சி நிலமே வந்து முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது என்று லஹிருவை அழைத்து சென்றான்.  
மகுல் போருவ ‘இளம் தேங்காய் இலைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட மர மேடையாகும், இது ஒரு வகையான பட்டு குடை போல தோற்றமளிக்கும் ஒரு கூரையை கொண்டுள்ளது. அதை கட்டவும் நெகத{முகூர்த்தம்} பார்த்திருந்தனர்.
குவளைகளில் தென்னம் பூ நிரப்பப்பட்டு அலங்கரிப்பட்டு மேடையை சுற்றி வைக்கப்பட்டிருந்தன.
மலர்கள் சந்தர்ப்பத்திற்கு அழகு சேர்க்கின்றன மணமேடையும் மல்லிகையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
லஹிருவின் மொத்த குடும்பத்தாரும் மணமேடையில் வலது புறத்தில் கூடி இருக்க, சாருவின் சார்பாக, பஞ்சவர்ணமும், முத்துவும், வான்மதியின் குடும்பத்தாரும் வருகை தந்திருக்க, அவர்கள் இது புறத்தில் நின்றிருந்தனர்.
தினமும் ரெத்தை, ஹெட்டையில் வலம் வரும் கருணாவும், நெலும் கூட ஒசரிய அணிந்து அவர்களை வாழ்த்தினர்.
ஒவ்வொரு சடங்குக்கும் நல்ல நேரம் இருக்க, மணமேடைக்கு ஏறும் நேரம் வரும்வரை அதற்குண்டான கவிதைகள் பாடப்பட்டன.
மங்கள வாத்தியங்கள் முழங்க லஹிரு மணமேடைக்கு சித்தப்பாவின் உதவியோடு ஏற, முத்துவின் உதவியோடு சாரு இடது புறத்தில் ஏறிய உடன் மந்திரங்கள் ஓதப்பட்டன.
மணமேடையில் மணமகன் வலது புறத்திலும் மணப்பெண் இடது புறத்திலும் இருப்பதற்கு காரணம் முந்தைய காலத்தில் தன் மனைவியை காக்க வாளோடு செல்லும் வீரன் வலது கையில் வாளை ஏந்தி இடது கையினால் மனைவியை பிடித்தவாறுதானான் சென்றான். அதை நினைவு கூறும் விதமாகத்தான் இன்றும் சடங்காக கடைபிடிக்கப்படுகிறது.
முத்து சாருவின் வலது கையை லஹிருவின் கையில் கொடுக்க, ஹரித ஒரு நாணயத்துடன் ஏழு வெற்றிலை இலைகளுடன் ஒரு தட்டை லஹிருவின் கையில் கொடுத்தான்.
லஹிரு ஒவ்வொரு வெற்றிலையையையும் சாருவின் கையில் கொடுக்க, அவள் அதை முத்துவின் கையில் கொடுத்தாள். அதே போல் ஒரு தட்டு அவள் கையில் கொடுக்கப்பட அவள் ஒவ்வொரு வெற்றிலையையாக லஹிருவுக்கு கொடுக்க அவன் அதை ஹரிதவிடம் கொடுத்தான். அவைகள் அனைத்தும் அவர்களை சுற்றி வைக்கப்பட்டிருந்தன. ஏழு தலை முறையையும் நியாபகப்படுத்தி அவர்களின் ஆசீவாதங்களை வேண்டியே இந்த சடங்கு செய்யப்படுகிறது.
பின்னணியில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வைரத்திலான ஒரு மாலையை சாருவின் கழுத்தில் போட்டு அவளை தன் துணைவியாக்கிக் கொண்டான் லஹிரு.
மணமேடையில் ஏறினால் அதன் சடங்குகளை அதற்குரிய நல்ல நேரத்தில் முடித்து விட வேண்டும் என்று சுதுமெனிகே அவசரப்படுத்திக் கொண்டே இருக்க, கணவனின் மனைவிக்குண்டான கடமையை சுட்டிக் காட்டும் சடங்கான புடவை போர்த்தும் சடங்கை உடனடியாக செய்தவன் சாருவுக்கு தண்ணீரும் புகட்டினான். 
சாருவுக்கு இருமல் கூட வந்தது. அவனோ ஒரு இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே. அந்த புன்னகை கூட சாருவின் முகத்தில் இல்லை. ஒருவித கலக்கமும், அச்சமும் கலந்த உணர்வில் இருந்தாள் அவள்.
அடுத்து இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அவளது இடது கையை பிடித்து மோதிரத்தை போட வேண்டும் இதுதான் அவனுக்கு இருந்த கஷ்டமான வேலை போல் அவனது இடது கையின் நடுவிரலால் அவள் விரலை தாங்கிப் பிடித்து மோதிரத்தை நுழைத்தவன் அந்த விரலையும் அகற்றியவாறுதான் அணிவித்திருந்தான். அணிவிக்கும் பொழுது அவன் கவனமெல்லாம் அவளை தொட்டு விடக் கூடாது என்றதில் இருந்ததில் அவன் பார்வை அவள் முகத்துக்கு செல்லவே இல்லை. அவளோ அவனைத்தான் பார்த்திருந்தாள். 
அவன் செய்கை பிறர் கவனத்தை கவரவில்லை என்றாலும் சாருவுக்கு தெரியாதா? அவன் ஏன் அவ்வாறு செய்கின்றான் என்று. “இந்த திருமணம் அவசியமா?” அவள் மனம் மீண்டும் கேட்க சுதுமெனிகேயின் புன்னகை முகம் கண்டு அமைதியானாள்.
நடந்தவைகளை நினைத்து எதற்கு வருந்த வேண்டும்? திருமணம் நடந்த பிறகு தன்னை புரிந்துகொள்வான். மனம் மாறுவான். அப்பொழுது திருமணத்தின் போது சோகமாக இருந்ததை எண்ணி நானே வருந்தத்தக்க கூடும் என்று நினைத்தவள் வீணாக கலங்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்
அவள் லஹிருவை போல் விரலையெல்லாம் தொட்டு மோதிரத்தை அணிவிக்கவில்லை. அவன் கையை பற்றியே அணிவித்தாள். அதுவும் அவன் முகம் பார்த்து. அவன் அவளை பிறர் அறியாமல் முறைக்க, அவளோ புன்னகை தான் செய்தாள்.
“போட்டோ எடுக்குறாங்க. நாளைக்கு நம்ம பசங்க இந்த ஆள எதுக்கு கல்யாணம் பண்ணீங்க பாருங்க மூஞ்ச எப்படி வச்சிருங்காங்கனு சொல்லுவாங்க. கொஞ்சம் சிரிங்க”
“ஓஹ்.. உனக்கு இந்த ஆச வேற இருக்கா? நான் சொல்ல நீ ஒரு மார்டன் மோகினி என்று” அதற்கும் முறைத்தான்.
அவன் பேச்சு அவள் முகத்தை வாட செய்தாலும் புன்னகைப்பதை விடவில்லை.
அடுத்த முக்கியமான சடங்காக அதபென் வெடிம சடங்கு ஆரம்பமானது. சாரு மற்றும் லஹிருவின் சுலங்கிலி (சிறிய விரல்கள்) வெள்ளை நூலால் கட்டப்பட்டு மந்திரம் உச்சரிக்கும் போது அவர்களின் கைகள் இணைக்கப்பட்டு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு அவர்களை இணைபிரியாத கணவன் மனைவியாக்கி இருந்தனர்.
அந்த சடங்கு முடிந்த உடன் ஒரு தட்டில் சிற்றுண்டி வகைகளை நிரப்பி இருவரின் கையிலும் கொடுத்து ஊட்டிக்கொள்ள சொல்ல இவள் ஊட்ட ஒரு கடி கடித்தவன் போதும் என்றான். அதே போல் இவன் ஊட்டியவன் அவள் போதும் என்று சொல்வதற்குள் தட்டை ஹரிதவன் கையில் கொடுத்திருந்தான்.
“நாங்க கிண்டல் செய்ய காத்திருந்த இப்படி பண்ணிட்டியே. லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கீங்க. லவ் பர்ட்ஸ் மாதிரி கொஞ்சிகிட்டு இருப்பீங்க என்று பார்த்தா இப்படி போரிங் கப்பலா இருக்கீங்க” ஹரித புலம்ப
தம்பி சொன்னதை வைத்து அவன் சாருவை காதலிக்க வில்லை என்று லஹிருவுக்கு புரிந்து போக மனதுக்கு பெரும் ஆறுதல் அளித்ததோடு இனம்புரியாத இதத்தையும் கொடுத்ததை உணர்ந்தவன் அதை ஆராயத்தான் இல்லை.
“இந்த ட்ரெஸ்ஸோட கஷ்டமா இருக்கலாம்டா… உன் அண்ணி புலம்புறா… அதான் சடங்கு முடிஞ்சா கொஞ்சம் உக்கரலாம்ல” சாருவை கோர்த்து விட்டவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அவள்தான் முறைக்க முடியாமல் நின்றிருந்தாளே.
இருந்த பதட்டத்தில் காலையில் ஒழுங்காக சாப்பிடவில்லை தட்டை பார்த்ததும் இதில் இருப்பதையாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால் காக்க கடி கடித்த உடன் தம்பியின் கையில் கொடுத்து விட்டு கதை வேறு சொல்கிறானே என்ற கோபம்.
ஜெயமங்கலாகாதா எனும் பாடலை சிறுமிகள் ஒன்றாக பாடியபின் ஆசீர்வாத கவிதைகள் பாடப்பட்டன. அதன் பின் மணமேடையிலிருந்து ஒன்றாக இறங்கிய மணமக்கள் வாசலில் இருந்த விளக்கை ஏற்றினார்கள்.
திருமணச்சடங்குகள் முடிவுற்ற பின்னர் அனைவரும் உணவுண்ண செல்ல, சாருவும், லஹிருவும் வெள்ளை துணி போர்த்தப்பட்ட சோபாவில் அமர்ந்திருந்தனர்.
உணவு கூட வாசலில் பூப்பே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
“என்ன கருமமோ இது எங்க வீட்டுல வேலை செஞ்சவ மகள் எங்க வீட்டு மருமகள். அவளோடு சேர்ந்து நாம சாப்பிடணும்” மெனிகே பொரும,
“எல்லாம் எங்க அம்மாவ சொல்லணும்” என்றான் புஞ்சி நிலமே.
அமர்ந்திருந்த சாரு மாறும் லஹிருவின் காதிலும் விழத்தான் செய்தது.
“இவங்க ஏதாவது பேசி, என் அத்த சாப்பிடாம மட்டும் போகட்டும் அப்பொறம் இருக்கு” கருவினாள் சாரு.
“உன் அத்த அவங்க வீட்டுல வேலை செஞ்சாங்கதானே. அவங்க பேசத்தான் செய்வாங்க அத மாத்த முடியாது. நீதான் பொறுமையா இருக்கணும்” யதார்த்தத்தை இவன் சொல்ல, தன்னை பிடிக்காததால் இவன் அவ்வாறு பேசுவதாக எண்ணி அவன் மீது கோபம் கொண்டாள் சாரு. 
“என்ன முறைக்குற நீயும் இந்த வீட்டு வேலைக்காரிதான். அதுவும் மாறாது” இதை அவள் மீதிருந்த கோபத்தில்தான் கூறினான்.
அவனை முயன்ற மட்டும் முறைத்தவள் “அப்பா வரட்டும் உன்ன வச்சிக்கிறேன்” கருவியவள், அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
சாருவின் குடும்பம் எல்லாவற்றிலும் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருந்தனர். ஆனால் சுதுமெனிகே சாருவின் அன்னையாக பஞ்சவர்ணத்தை முன்னிறுத்தியே சடங்குகளை செய்தாள்.
சாப்பிட்டபின் சாருவும், லஹிருவும் போட்டோ எடுப்பதற்காக தோட்டத்துக்கு சென்றிருந்தனர். வருகை தந்ததில் பாதிபேர் அங்குதான் இருந்தனர். 
சாப்பிட்ட தட்டுக்களை சந்த்ரசேன கொண்டு செல்ல கருணாவும், நெலுமும் கழுவிக் கொண்டிருந்தார்கள் போலும் பஞ்சவர்ணத்தை அழைத்த மெனிகே அவர்களோடு சேர்ந்து தட்டுக்களை கழுவி வைக்கும்படி உத்தரவிட்டு உதடு வளைத்து புன்னகைத்துக் கொண்டாள்.
பஞ்சவர்ணத்தால் மறுக்கவும் முடியவில்லை. சாருவின் திருமணம்தான் என்று சமையலறை பக்கம் செல்லப் போனவளை தடுத்தாள் சுதுமெனிகே.
மருமகள் இப்படி ஏதாவது செய்வாள் என்று அவள் எங்கிருந்தாலும் மருமகளைத்தான் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அவள் நினைத்தது போலவே செய்து விட்டாள். 
பஞ்சவர்ணத்தை சாருவிடம் செல்லுமாறு கூறிய சுதுமெனிகே “அவள் முன்னிலையில் நான் உன்னை அறைந்திருந்தால் உனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தியா? இனியொரு தடவை இப்படி ஏதாவது செய்தால் அறைதான் கிடைக்கும். அவளையே, சாருவையோ அவமானப்படுத்துவதாக நினைத்து நீ தரம் தாழ்ந்து விடாதே! தாழ்வது நம்ம குடும்ப மானம்தான். அதையும் மறந்துடாதே. இன்னைக்கே ஊருக்கு கிளம்பு. நீ இங்க இருக்கக் கூடாது. விஷப் பாம்புகளுக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது” அடிக்க குரலில் சீறி இருக்க, மாமியாரின் கோப முகம் கண்டு கணவனை தேடி ஓடினாள் மெனிகே.
வந்த சொந்தபந்தங்கள் அனைவரும் கிளம்பி இருந்தனர். புஞ்சி நிலமையும் மெனிகேயும் கூட கோபமாகத்தான் கிளம்பினர். ஹரிதவ அழைக்க, அவனோ தான் வரமாட்டேன் என்றான். இழுத்துக் கொண்டு செல்ல குழந்தையா? அவர்கள் சென்றனர்.
ஜீவகயின் அன்னை சுமனாவதி வந்ததற்காக இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வதாக கூற, சந்தோசம் என்றாள் சுதுமெனிகே.
வெளியே வந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க, சாருவின் துணியை மாற்ற உதவிக் கொண்டிருந்தாள் வான்மதி.
“சொன்ன மாதிரியே பெரிய பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆக்கிட்டியேடி” வான்மதி சிரித்தவாறே சொல்ல
“நான் யாரு? சொன்னதை செய்ய மாட்டேனா?” சாரு சிரிக்க, அவர்கள் பேசியதை கேட்டவாறே உள்ளே வந்த லஹிரு கதவின் அருகே அப்படியே நின்றவன்
“அப்போ நீ ஆரம்பத்துல இருந்தே எனக்குதான் ஸ்கெட்ச்சு போட்டியா? தம்பிய பகடைக்காயா உபயோகப்படுத்தி கிட்டியா? இது தெரியாம நான் அவசர பட்டுட்டேனே” அவளை முறைத்தவன் சத்தமில்லாமல் அகன்றான்.
லஹிரு வந்ததும் தெரியவில்லை. சென்றதும் தெரியவில்லை. சாரு துணியை மாற்றிக் கொண்டு வெளியே வர, பஞ்சவர்ணமும் முத்து மற்றும் வானதியின் குடும்பமும் கூட கிளம்ப ஆயத்தமானார்கள் சுதுமெனிகே அவர்களை தங்க சொல்லியும் கூலிவேலைக்கு செல்ல வேண்டும் என்று காரணம் கூற, அவர்களின் நிலைமையை நன்கு உணர்ந்து கொண்டவள் சரி என்றாள்.
“சாரு சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கா அவளை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்க” என்று பஞ்சவர்ணம் சொல்ல, “கண்டிப்பாக” என்றாள் சுதுமெனிகே.
சுமனாவதிக்கும், லஹிருவுக்கும் அந்த பேச்சு வேற வேற அர்த்தங்களை கொடுத்திருக்க, யார் யாரிடம் கேட்டு தெளிவு பெறுவார்கள்?

Advertisement