Advertisement

அத்தியாயம் 11
தன்னை தாயை போல் கவனித்துக் கொண்ட கவிதாவின் மேல் சுதுமெனிகேவுக்கு என்றுமே கருணையும், பாசமும் இருந்தது.
இந்த வீட்டில் கவிதாவுக்கு நடந்த சம்பவம் இந்த வீட்டில் நடந்த முதல் சம்பவம் கிடையாது. வீரசிங்கவின் கொள்ளுதாத்தா ஒருவர் வீட்டு வேலைக்கு வந்த கீழ்ஜாதி பெண்ணான ஐராங்கனி மீது காதல் கொண்டு திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து பழகி இருக்கிறார்.
ஆனால் திருமணம் என்று வரும் பொழுது அந்த பெண்ணை கைவிட்டு பாரம்பரிய குடும்பத்து பெண்ணை சீதனத்தோடு மணக்க முடிவு செய்தார்.
நியாயம் கேட்டு வந்தவளை கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாது கொலை செய்யவும் ஆள் அனுப்ப அவன் துரத்தியதில் அவள் மலை உச்சியின் கீழ் விழுந்து விட்டாள்.
விழுந்தவள் இறந்து விட்டாள் என்று அவர் நினைத்து கோலாகலமாக திருமணமும் செய்து கொண்டார். பிழைத்து வந்தவள் அவருக்கு மற்றுமன்றி குடும்பத்துக்கே சூனியம் வைத்திருந்தாள்.
முகமூடி அணிந்து “தொவில்” எனும் பேயோட்டும் கபுவாவின் மகள். “ஹதிஹுனியம்” {சூனியம்} செய்வது எல்லாம் அவளுக்கு கைவந்த கலை.
அடுத்தடுத்து குடும்பத்தில் நடந்த மரணங்களால் விழித்துக் கொண்ட அந்த வீட்டு பெரியம்மா பிக்குவை வரவழைத்து சூனியத்தை மந்திரங்கள் ஓதி அகற்றி விட்டாள். அதனால் கோபமடைந்த அந்த பெண் வீட்டு வாசலில் நின்று மண்ணை வாரி எறிந்து சாபமிட்டு தன்னையும் எரித்துக் கொண்டாள்.
அவள் வைத்த சூனியத்தின் மிச்சம் மீதியா? அவள் கொடுத்த சாபமா? இந்த குடும்பத்தின் மூத்த வாரிசை காவு வாங்குது என்று சுதுமெனிகேயின் மாமியார் அவளிடம் கூறிய கதை.
இந்த குடும்பத்துக்கு ஒரு சாபம் போதும் கவிதாவின் சாபமும் வேண்டுமா? என்று அஞ்சியவள்தான் அவளை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்திருந்தாள்.
விதி யாரை விட்டது. அவள் ஒன்று நினைக்க என்னவெல்லாம் நடந்தேறி விட்டது.
அவளுக்கு ஜீவகயின் மேல் சுத்தமாக நம்பிக்கையில்லை. சாருவை ஏதாவது செய்து விடுவானோ என்று அஞ்சித்தான். அவனை பற்றி மறந்து விடு என்றாள்.
ஆனால் அவள் ஜீவகயை பழிவாங்க நினைக்கவில்லை. கவிதாவுக்காக நியாயம் கேட்கவும் நினைக்கவில்லை. தந்தை பாசத்துக்காக ஏங்குகின்றாள் என்பதை புரிந்துகொண்ட சுதுமெனிகே அவளுக்கு உதவி செய்யவும் உறுதுணையாகவும் இருக்க முடிவு செய்தாள். 
கவிதாவுடைய நிலைக்கு தான் அறியா விட்டாலும் தன் மக்கள் காரணமாகி விட்டார்களே என்ற குற்றஉணர்ச்சியும் அவளை பிடித்துக் கொண்டிருந்ததது.
“லஹிருவும் ஹரிதவும் வந்த உடனே நீ யாரு? என்ன? என்ற விஷயத்தை சொல்லிடலாம்” சந்தோசமாக கூறினாள் சுதுமெனிகே.
“இல்ல பாட்டிமா வேணாம். முதல்ல அப்பா வரட்டும். அவர் என்ன பொண்ணா ஏத்துக்கிட்டதும், அவர் வாயால சொல்லும் போதே தெரிஞ்சிக்கட்டும்”
“சரிடா… போ.. போய் சமயல் எல்லாம் தயாரா என்று பாரு” என்று அவளை அனுப்ப இவளும் அப்பாவை பார்க்க போகும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவாறே சென்றாள்.
லஹிருவிடம் சொல்லலாமா? வேண்டாமா? மீண்டும் யோசித்துப் பார்த்தாள்.  இல்லை வேண்டாம். ஹரித சொல்வது போல் லஹிரு கோபத்தை காட்டுவது பொறாமையினால் என்றால் அப்பா வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் அவன் தன்னை விரும்புகின்றானா? இல்லையா என்று தெரிய வரும்.
ஜாதி மதம் பார்க்காமல், தான் அவனுடைய வேலைக்காரி என்ற நிலையில் இருக்கும் பொழுதே தன்னை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணியே இப்போதைக்கு உண்மையை சொல்ல கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
சுதுமெனிக்கே நாத்தனாரை அழைத்து அடுத்த மாதம் கணவனின்  நினைவு நாள் வருவதாக கூறி பூஜை செய்ய குடும்பத்தார் அனைவரும் இருந்தால் நல்லது. அவர் வேறு கனவில் வந்து கண்கலங்குகிறார் என்று ஒரு பொய்யை சொல்ல அலைபேசியிலையே கண்ணீர் வடிக்கலானாள் ஜீவகாயின் அன்னை சுமனாவதி.
“சரியான பாசமலர் படம் ஓட்டுவாங்க” திட்டியவாறே அலைபேசியை அனைத்திருந்தாள் சுதுமெனிகே.
இரவு எட்டு மணியாகும் பொழுதே லஹிருவும், ஹரிதவும் வீடு திரும்பி இருந்தனர்.
புன்னகை பூத்த சாருவின் முகம் கண்டு லஹிருவுக்கு யோசனையாகவே இருந்தது.
“அப்பத்தா ஒன்னும் பிரச்சினை இல்லையே” சுதுமெனிகேயை குடைந்தவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
“இவ முகத்துல பல்ப் ஏரியிறத பார்த்தா எதுவோ சரியில்லையே” என்று புலம்பியவனுக்கு அது என்னவென்றுதான் கண்டு பிடிக்க முடியவில்லை.
அதை அறிந்துகொள்ளாமல் தூக்கமும் வராது. அவள் கண் பார்வையிலையே லஹிரு தவம் கிடக்க, நாய்களை கொஞ்சியவாறு அதை கவனித்த ஹரித
“ரெண்டு நாள். ரெண்டே நாள்தான்  வீட்டுல இல்ல. அதுக்காக இப்படியா பின்னாடி அலைவாரு. கேட்ட லவ் பண்ணலன்னு சொல்லுவாங்க. நான் தான் முட்டாள். வாங்கடா நாம அங்கிட்டு போய் விளையாடலாம் இவங்க ரொமான்ஸ் பார்த்தா நம்ம கண்ணு அவிஞ்சிடும்” நாய்களோடு அகன்றான்.
சாருவும் அவனை கவனித்தாள் தான். முன்பு என்றால் வளமை போல் தன்னை கண்காணிக்கின்றான். வந்த உடனே சி.ஐ.டி வேலையை ஆரம்பிச்சுட்டான் என்று அவனை மனதுக்குள் வசைபாடிவிட்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி இருப்பாள்.
இப்பொழுது அவளுடைய பார்வையும் மாறி இருந்தது. அவனை இவளும் குறுகுறுவென பர்களானாள்.
கருணாவும், நெலுமும் தூங்க சென்றிருந்தனர். இல்லையென்றால் அவர்கள் சமையல்கட்டை விட்டு நகரமாட்டார்கள். அவர்கள் சென்ற பின்னரும் அலைபேசியை பார்த்தவாறு அங்கேயே லஹிரு நிற்க, சாருவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“தான் ஏதாவது திருடி சாப்பிட்டுவிடுவேனோ என்று காவல் காக்கின்றானா?” கிண்டலாக எண்ணியவள் “கேமரா பிக்ஸ் பண்ண சொல்லிட வேண்டியதுதான்” என்றெண்ணிக் கொண்டு “என்ன லஹிரு முதலாளி ஏதாவது வேணுமா” வீட்டில் எல்லோரும் ஹாமு என்று அழைக்க, பாக்டரியில் அனைவரும் அவனை முதலாளி என்று தான் அழைத்தனர். இவள் கிண்டலாகத்தான் அவ்வாறு அழைப்பாள். அதுவும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.
“என் வீடு நான் எங்க வேணாலும் இருப்பேன். அத கேக்க நீ யாரு?” கண்ணை சுருக்கி சாரு கேட்டவிதத்தில் தான் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்று எண்ணி சமாளிக்க முயன்றான்.
“இந்த வீடு யார் பேர்ல இருந்தா எனக்கென்ன?” முணுமுணுத்தவள் “குட்டி போட்ட பூனை போல் அங்கிட்டும் இங்கிட்டும் நடக்குறீங்களே ஒரு வேல வயித்து வலியோ? ஓவரா சாப்டீங்களோ? அசமோதகம் {ஓமம்} தரவா? வயித்து வலி பறந்துடும்”
“ஆமா இவ பேராதெனிய யூனிவர்சிட்டில எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு வந்திருக்கா. ஒருத்தன் நடக்குறத வச்சியே வயித்து வலின்னு கண்டு பிடிக்கிறா. லூசு யக்ஷணி” இவனும் முணுமுணுத்தான்.
சமயலறைக்கு சாப்பாட்டறைக்கும் நடுவில் ஒரு அறை. ஜன்னல் திறந்துதான் இருந்தது. அந்த காலத்து ஜன்னல் காற்றோட்டமாக இருக்க வேண்டி இரும்பு கம்பிகள் மட்டும் பொருத்தி இருக்க, கதவுகள் பொறுத்த படாததால் பூட்ட முடியாது. இவ்வாறான ஜன்னல்கள் இந்த வீட்டில் ஏராளம். ஜன்னலினூடாக நிலவு வேறு இவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பூச்சிகளின் சத்தம் வேறு இரவின் நிசப்சத்தை குழைத்துக் கொண்டிருக்க, காற்றும் குளிருக்கேற்றது போல் வீசிக் கொண்டிருந்தது.
இவனை தனிமையில் சந்திப்பது அரிது. இதுதான் சமயம் பேச வேண்டியதை பேசிவிடுவது உசிதம் என்று “நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்” மெல்ல ஆரம்பித்தாள். அதை சொல்லும் போது கூட அவன் முகத்தை பார்க்கவில்லை. தோட்டத்தில் பிடுங்கிய மரவள்ளிக் கிழங்கைத்தான் பொரிப்பதற்காக ஆய்ந்து கொண்டிருந்தாள்.  
மேசையில் ஒரு பலகையின் மீது வெட்டிய மரவள்ளிக் கிழங்குகள் ஒருபுறம். வெட்டி ஒரு தட்டில் அடுக்கி வைக்கப்பட்டது கொஞ்சம், தோலுரித்தது கொஞ்சம் என்று மேசையே மரவள்ளி மயமாக இருந்தது.
“இவ நம்ம கிட்ட என்ன பேச போறா? ஒருவேளை இவளோட அதீத சந்தோஷத்துக்கு அதுதான் காரணமோ?” யோசனையாகவே பார்த்தவன் அமைதியாகவே நின்றிருந்தான்.
“ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க? பாட்டி உங்கள நினைச்சிதான் ரொம்ப கவலை படுறாங்க. இது உங்களுக்கு புரியலையா? இந்த வயசுலயும் அவங்கள படுத்துறீங்களே” கொஞ்சம் முறைப்போடு சொல்லி முடித்தவள். “இல்ல யாரையாச்சும் காதலிக்கிறீங்களா? பாட்டியா பார்த்தா காதலுக்கு எதிரி மாதிரி தெரியலையே. ஒருவேளை உங்களுக்கு சர்ப்பதோஷம் இருக்குறதால கல்யாணம் பண்ண பயப்படுறீங்களா? அத பத்தி எல்லாம் எதுக்கு யோசிக்கிறீங்க? அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நம்மள ஏமாத்துறாங்க” அவனுக்கு ஆறுதலாக பேச எண்ணி கூடுதலாக கொஞ்சம் சேர்த்து வேற பேசி இருந்தாள். 
அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலும் இருந்தது. என்னை காதலிக்கின்றாயா என்று நேரடியாக கேட்கவும் முடியாது. காதலிப்பதாக இருந்தால் அவனே கூறுவான். இல்லையென்றால்?
அவனிடமிருந்து எந்த பதிலும் வறாது போகவே தலையை திருப்பி அவனை பார்த்தாள் சாரு.  
ஏற்கனவே அவளை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. அவள் பேச ஆரம்பிக்கும் பொழுதே அமைதி காத்ததன் காரணம் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறியத்தான் என்பது போல் நின்றிருந்தவன் அவள் திரும்பிப் பார்த்ததும் முறைத்தவாறே
“ஓஹ். ஒஹ்… இதான் விஷயமா? என் கல்யாணம் நடக்குறதுல உனக்கு என்ன பெனிபிட் இருக்கும்?” சுவற்றில் சாய்ந்து நாடியை தடிவியவாறு யோசனை செய்யலானான் லஹிரு.
உண்மையிலயே அவன் யோசனை செய்கின்றானா? இல்லையே. அவள் இப்படித்தான் என்று முடிவு செய்து விட்டு யோசனை செய்வது போல் பாசாங்கு அல்லவா செய்கின்றான்.
“இவன் என்ன சொல்கின்றான்? தான் ஏதாவது தப்பாக பேசிவிட்டேனா? அதிகப்படியாக ஏதாவது கூறி விட்டேனா?” புரியாது முழித்தது சாருதான்.
“ஆமா இருக்கில்ல எனக்கு கல்யாணம் ஆனா தானே என் தம்பிக்கு கல்யாணம் ஆகும். எனக்கு கல்யாணம் ஆனா உன் ரூட்டு க்ளியராகும். இருக்கே எவ்வளவு பெரிய ஸ்கெச்சு” தனக்குள் பேசிக் கொள்பவன் போல் இவன் பேச
“அடப்பாவி… நான் என்ன சொல்லுறேன் நீ என்ன சொல்லுற?” என்பதை போல் பார்த்தவள் “நான் கேட்டது உங்க கல்யாணத்த பத்தி உங்க தம்பியோட கல்யாணத்த பத்தி இல்ல. “மரமண்ட மரமண்ட” மனசுக்குள்ளேயே வையலானாள்.
சாருவுக்கு புரியவில்லை. லஹிரு என்ன சொல்கின்றான் என்று அவளுக்கு புரியவில்லை. அவன் இவளை பற்றி கணித்து வைத்திருப்பதை இவள் சாதாரணமாக எண்ணிக் கொண்டிருந்தாள். தான் யார் என்று தெரிந்தாலே இந்த எண்ணம் மாறும். அதுவரைக்கும் என்று கேட்ட அவள் மனதுக்கு தான் ஹரிதவோடு எந்த நோக்கத்தோடும் பழகவில்லையே இவனுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இவன் லூசுத்தனமாக நினைத்தால் நான் என்ன செய்ய என்று கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாள். ஆனால் அது ஆழமாக வேரூன்றி போன விஷம் என்று அவளுக்கு புரியவில்லை.
தனக்கு அவன் மீது விருப்பம் இருப்பது போல் ஹரித கூறியதை வைத்து அவனுக்கும் தன் மீது விருப்பம் இருப்பதாக எண்ணி விட்டாள். அவன் வாய்மொழி வார்த்தைகளை அறிந்து கொள்ளும்வரையில் அவள் தெளிவு பெற மாட்டாள்.
“அதான் யக்ஷணி… நானும் சொல்லுறேன்.  உனக்குத்தான் புரியல” என்று இவன் ஆரம்பிக்க,
“என்ன யக்ஷணி என்று சொல்லாத” கையில் கத்தியோடு திரும்பி முறைத்தாள் சாரு. அவன் எவ்வளவு பேசினான். அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் “யக்ஷணி” என்றதில் இரத்தம் சூடாக்கினாள்.
அவள் கோபமுகம் அவனை இன்னும் சீண்டியது. தன்னிடம் வேலை செய்பவள். எவ்வளவு திமிர் இருந்தால் வீட்டுக்கே சொந்தக்காரியாகலாம் என்று திட்டம் தீட்டுவாள்.
“யக்ஷணிக்குத்தான் அதிகம் கோபம் வரும். இப்படியே போய் கண்ணாடில முகத்தை பாரு. நான் சொல்லுறது உண்மையா? பொய்யான்னு புரியும்” கேலியாக உதடு வளைத்தவனை கையில் கத்தி இருப்பதையும் மறந்து அடிக்க கையை ஓங்கி இருந்தாள் சாரு. உரிமை உள்ளவனிடம் உரிமையாக சண்டை போடும் போது தன்னிலை மறந்து விட்டாள். 
ஓங்கிய கையை லாவகமாக பிடித்து தடுத்தவன் “என்ன ஒரேயடியா என்ன போட்டுத் தள்ளிட்டு என் தம்பிய கல்யாணம் பண்ணி சொத்தெல்லாம் ஆட்டைய போடலாம்னு பாக்குறியா?” கண்கள் சிவக்க சீறினான்.
கத்தி கையில் இருப்பதே அப்பொழுதுதான் உணர்ந்தாள். “சே அவசரபட்டிட்டியே சாரு” தன்னையே நொந்துகொண்டவள் அவன் கையை இறுக்கியத்தில் கத்தி யார் காலிலாவது விழுந்து கீறிவிடுமோ என்று அஞ்சி மறுகையால் பற்ற முயற்சிக்க, அவனே கத்தியை பற்றி தூர போட்டிருந்தான்.
அவள் கத்தியை பற்றி யோசித்துக் கொண்டிருக்க அவன் என்ன சொன்னான் என்று கிரகித்தவள் என்ன என்று அவனை ஏறிட
“திமிர் திமிர் உடம்பு பூரா திமிர். யார் கொடுக்கும் தைரியம் இவளுக்கு” இவளை இப்பொழுதே அடக்கி வைக்க வேண்டும். அவன் பேச்சு இவள் இதயத்தை குத்திக் கிழிக்க, இவனோ அவள் கழுத்தை நெறிக்கலானான்.
“நீ திருந்தவே மாட்டியா? உன்ன இங்க இருக்க விட்டா தானே ஆடுவ நாளைக்கே நீ ஊருக்கு கிளம்பனும். நீ வேல பார்த்து கிழிச்சது எல்லாம் போதும். பெட்டி படுக்கையை கட்டு. ஆமா இருக்கிறதே ரெண்டு செட்டு துணி. அள்ளி போட்டுக்கிட்டு போடி” என்றவாறே அவளை தள்ளி விட சாரு கீழே விழுந்திருந்தாள்.
தான் அவனை விரும்புகிறோம் என்பது இரண்டாவது. தான் இங்கு எதற்காக வந்தோம். தன்னுடைய தந்தையை பற்றி ஏதாவது தகவல் கிடைக்காதா என்றுதானே? தந்தை எங்கே இருக்கின்றார். அடுத்த மாதம் அவர் அவர் இங்கே வருவார். அவரை காணப்போகிறோம் என்று ஆசையிலும், ஆவலுமாக இருந்தால் “இவன் என்னை ஊருக்கு அனுப்புகின்றாமே” சாருவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“நான் உன் தம்பிய கல்யாணம் பண்ணுவேன். இல்ல. என் மனசுக்கு பிடிச்ச யாரையோ கல்யாணம் பண்ணுவேன். உனக்கென்ன? நீ எதுக்கு இதெல்லாம் கேக்குற?” மரியாதை பன்மை காற்றில் பறந்திருந்தது.
“என்னடி சொன்ன?” கீழே விழுந்தவளை அடிக்க கையோங்கினான் லஹிரு.
“சாரு இன்னும் வேலை முடியலையா? காலைல பண்ணிக்கலாம். வச்சிட்டு வாம்மா…” சுதுமெனிகேயின் குரலில் தன்னை மீட்டுக் கொண்ட லஹிரு அங்கிருந்து விறுவிறுவென கிளம்பினான்.
அவன் கோபம் அடங்கவே இல்லை. தன்னிடமே சொல்வாளா? தம்பியை திருமணம் செய்து இந்த வீட்டில் ஆட்சி செய்வதாக தன்னிடமே சொல்வாளா? நாளைக்கு காலைல முதல் வேல இவளை ரயில் ஏற்றி விட வேண்டும்” அவன் அவனது அறையில் பொருமிக் கொண்டிருந்தான்.
சுதுமெனிகேயின் குரலுக்கு பதில் சொன்ன சாருவுக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது “அப்பா வரட்டும் அவர் கிட்ட சொல்லுறேன். அவர் உன்ன அடிப்பாரு. காத திருகி என் பொண்ணையா தள்ளி விட்டுணு கேப்பாரு” இத்தனை வருடங்களாக தந்தை இல்லாமல் வளர்ந்த கவலையும் சேர்ந்துகொள்ள விழுந்த இடத்திலிருந்து எழாமல் ஏங்கி ஏங்கி அழுதாள்.  
சின்ன வயதில் விழுந்தால் தூக்கி விடவும் யாருமில்லை. அணைத்து ஆறுதல் சொல்லும் மனநிலையில் கவிதாவும் இல்லை. இவள் அழுதாள் முத்துவும் அழுவான். மாமா சதீஷ் குடித்து விட்டு படுத்துக்கொண்டு இருப்பான். அவனிடம் தந்தையை காண முடியவில்லை. பஞ்சவர்ணத்திடம்தான் கண்டிப்பையும், அனபையும் கண்டாள். பஞ்சவர்ணம் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக அவள் நிலமை கேள்விக்குறிதான்.
அழுது ஓய்ந்தவள் வெட்டிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து வைத்தவாறு “இனிமேல் நான் உன்னை நினைக்கவே மாட்டேன்” லஹிருவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் மனம் ஆறும்வரைக்கும் திட்டிக் கொண்டிருந்தாள். சுதுமெனிகே திரும்ப அழைத்த பின்தான் தூங்கவே சென்றாள்.
காலையில் பாக்டரிக்கு செல்ல ஆயத்தமான சுதுமெனிகேவுக்கு தொலைபேசி அழைப்பு வரவே தான் இன்று பாக்டரிக்கு செல்வதில்லை என்று லஹிருவிடம் கூறியவள் சாருவும் இருக்கட்டும் என்றாள்.
அப்பத்தாவை ஆச்சரியமாகவும் யோசனையாகவும் பார்த்த லஹிரு எதுவும் கேட்கவில்லை. தானும் வர மாட்டேன் என்ற ஹரிதவை மட்டும் சாருவை முறைத்து விட்டு இழுத்துக் கொண்டு சென்றான்.
சாரு சுதுமெனிகேயிடம் உடம்புக்கு ஏதும் முடியலையா என்றுதான் கேட்டாள். அதற்கு அவள் இல்லை இன்று என்னை சந்திக்க ஒருவர் வருவதாக கூற சாரு மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
சாப்பிடும் பொழுதே சாரு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை சாடைமாடையாக சொல்லிப் பார்த்தான் லஹிரு.
“அவ தீபாவளிக்கு ஊருக்கு போனா போதும். அதுவரைக்கும் இருக்கட்டும். என்னால தனியாக ஒன்னும் பண்ண முடியல” என்றாள் சுதுமெனிகே
திடிரென்று புது ஆள் எங்கே தேடுவது? இவளை அனுப்பினால் இவள் பணத்தை எப்படி வசூலிப்பது? குழம்பிய லஹிருவும் அதற்குண்டான தீர்வை கண்டு பிடித்த பின்தான் இவளை அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பாவம் அவனே அவளை காதலிப்பதாக சுதுமெனிகேயிடம் சொல்லுவான் என்று அவன் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டான். 
       
பத்து மணியளவில் சுதுமெனிகே சொன்ன நபர் வந்து விட சுதுமெனிகே அவரோடு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
சாரு அவர்களுக்கு அருந்த பழச்சாறு கொண்டு வந்து கொடுக்கும் போது சுதுமெனிகே “எல்லா பொண்ணுங்களும் விருட்சிக ராசியா?” என்று அவரிடம் கேட்பது சாருவின் காதில் விழுந்தது.
“பாட்டி நானும் விருட்சிக ராசிதான்” எதற்கு அவள் கேட்டாள் என்று அறியாமளையே இவள் சொல்லி விட்டு பழச்சாறை கொடுத்து விட்டு சிரித்தவாறே நகர, சுதுமெனிகே அவளை யோசனையாக பார்த்திருந்தாள்.
“யாரு இந்த பொண்ணு ஹாமினே?”
“சொந்தகார பொண்ணுதான் தரகரே. சரி இந்த ஜாதகங்களை நான் ஜோஷியர்கிட்ட காட்டி ஏதாவது பொருந்தினா உங்களுக்கு தகவல் சொல்லுறேன்” என்றவள் தரகருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
வந்திருந்தது தரகர் தான். அதுவும் லஹிருவுக்கு ஏற்றது போல் சில வரங்களை கொண்டு வந்திருந்தார். லஹிருவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதால் ஜோஷியரோ அவன் ஜாதகத்தை கணித்து அவனுக்கு விருட்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் ஒரு பெண்ணை பார்க்கும்படி கூறி இருந்தார்.
என்னதான் லஹிரு திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்றாலும் திருமணம் செய்ய தயாராகும் பொழுது பெண் தயாராகி இருக்க வேண்டாமா? அதனால் அவனுக்கு தெரியாமல் பெண் தேடித் கொண்டுதான் இருந்தார் சுதுமெனிகே.
சுதுமெனிகே எதையும் மறைக்கவில்லை. லஹிருவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதை கூறியே பெண் தேடினாள். ஒரு சிலர் அதை நம்பி வேண்டாம் என்றாலும் பலர் அதை நம்பாமல் ஜாதகங்களை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவள் எதிர்பார்பது போன்ற ஜாதக்காரியைதான் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“சாரு ஒரு இடத்துக்கு போகணும் தயாராகு. ஆமா உன் ஜாதகம் இருக்கா?”
“ஜாதகமா? அதெல்லாம் எனக்கு இல்ல. பாக்குறதும் இல்ல”
“அப்போ ராசிய மட்டும் எப்படி சரியா சொன்ன?” சந்தேகமாக கேட்டாள் சுதுமெனிகே
“அதுவா பாட்டி காலைல ரேடியோல ராசி பலன் சொல்லுவாங்களே. அப்போ ஒரு நாள் அத்த கிட்ட கேட்டேன். அவங்கதான் என் பிறந்த திகதி நேரம் எல்லா சொல்லி சொன்ன்னாங்க”
“உன் அத்தைக்கு ஜோசியம் கூட பார்க்க தெரியுமா?” ஆச்சரியமாக கேட்பது போல் கிண்டல் செய்தாள் சுதுமெனிகே.
“அத்தைக்கு தெரியாது. மலைக்கு கீழ ஒரு ஜோசியர் இருக்குறாரு நான் பொறந்தப்போ அவர் கிட்ட கேட்டு வச்சிருந்தாளாம்” இவளும் கிண்டல் செய்வது கூட புரியாமல் வெளியே செல்ல தயாரானாள்.
ஒருவாறு இருவரும் தயாராகி வெளியே வரவும் “இந்தா வண்டி சாவி வண்டிய எடு” என்று பழைய அம்பாசிடர் கார் சாவியை சாருவிடம் கொடுக்க, அவளோ திருதிருவென முழித்தாள்.  
அவளுடைய பயணம் எல்லாம் அநேகமாக நடைப்பயணம்தான். தூர பயணம் செல்வதென்றால் இருக்கவே இருக்கு அரசாங்க பஸ். சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதவளிடம் கார் சாவியை கொடுத்தால் வேறு எப்படி முழிப்பாள்?
“ஐயோ பாட்டி எனக்கு கார் எல்லாம் ஓட்ட தெரியாது”
“ஓஹ்.. ஒஹ்.. அப்போ பிளைட் மட்டும்தான் ஓட்டுவியா?” சாரு மீது பாசம் எப்பொழுதும் இருந்தது. சொந்த பேத்தி என்றதும் உரிமையும் சேர்ந்துகொள்ள இஷ்டத்துக்கு அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் சுதுமெனிகே.
“என்ன பாட்டி நக்கலா? உன் வயசுலதான் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நம்ம நாட்டுக்கு பிரதமராக இருந்தாங்க. அயன் லேடி அவங்க. நீயும் இருக்கியே. இந்த தோட்டத்தை கட்டிக்கிட்டு”
“இப்போ நீ வண்டி எடுக்க போறியா இல்ல நான் எடுக்கவா?”
“என்னது நீ ஓட்ட போறியா? கடைசியா எப்போ ஓட்டின?” சந்தேகமாகவே கேட்டாள் சாரு.
“என்ன ஒரு இருப்பது இருபத்தி அஞ்சு வருஷம் இருக்கும்” யோசிப்பது போல் பாவனை செய்து கூறினாள் சுதுமெனிகே.
“அத நீ வேற சொல்லனுமா? கார பார்த்தாலே தெரியுதே. காய்லாங்கடைல நிக்க வேண்டியதெல்லாம் வீட்டு வாசல்ல நிக்குதேன்னு சந்தேகப்பட்டேன். சென்டிமென்ட்டா இருக்கும் என்று கேட்காம விட்டது என் தப்புதான்”
“பாட்டி பேரன் கல்யாணத்த பார்க்க ஆச இருக்கு இல்ல. பேசாம வீட்டுல இருப்போம். உன் பேரன் வந்ததும் போலாம்” இவள் பின்வாங்க,
“அவனோட போனா காரியமே கெட்டுடும்டி… அவன் பக்டரில இருந்து வர முன்னாடி போயிட்டு வரலாம் வா.. வா..” இவள் கையை பிடித்து இழுக்காத குறையாக வண்டியில் ஏறினாள் சுதுமெனிகே.
வண்டி பழசுதான் இன்ஜின் புதுசு என்பது சாருவுக்கு தெரியாதே. அவள் அப்பாவிடம் இது போல் கார் இருந்ததாக அடிக்கடி கூற பழைய கார் சேலில் அப்பத்தாக்கு பரிசாக லஹிரு வாங்கிய கார் இது.
“என்ன பாட்டி பின்னாடி ஏறி உக்காந்துட்ட வண்டிய யாரு எடுக்குறதாம்?” சாரு முறைக்க, சந்த்ரசேன ஓடி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமரவும் “உனக்கு சரியான குசும்பு கிழவி” தமிழில் முணுமுணுக்க,
“எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று தமிழிலையே சுதுமெனிகே சொல்ல,
“திட்ட கூட முடியாதே” புலம்பினாள் சாரு.
வண்டி சென்றது ஜோசியரின் வீட்டுக்கு. சாரு என்ன? எது? என்றெல்லாம் பாட்டியை குடையவில்லை. பத்திரமாக கூட்டி சென்று உள்ளே அமர வைத்தாள்.
அவர் ஹதஹன்{ஜாதகம்} மட்டும் பார்க்கவில்லை புஸ்கொல பொத் {ஓலை சுவடி} யிலும் பார்த்துதான் எதுவேண்டுமானாலும் கூறுவார்.
ஜோசியர் சுதுமெனிகேவுக்கு வணக்கம் வைத்து புதிதாக ஜாதம் வந்திரிருக்கா என்று கேட்க, “நான் வந்தது என் பேத்தியோட ஜாதகத்தை கணிக்க ஆனா அவளோட ஜாதகம் என் கிட்ட இல்ல” என்றாள்.
“பிறந்த திகதி, மாதம், வருஷம் தெரியுமில்ல. கூடுதலா நேரமும். நேரம் தெரியலைனா பரவால்ல”
“ஏன் பாட்டி எனக்கா…” சுதுமெனிகேவின் காதை கடித்த சாரு ஜோசியர் கேட்ட தகவல்களை கொடுத்தாள்.
முதலில் அவளுடைய ஜாதகத்தை எழுதியவர். அதை கணித்தார், பின் ஓலை சுவடிகளை பார்த்து விட்டு “ஆஹா… ஆஹா.. அற்புதம். உங்க பேரனுக்கு பொருத்தமான ஜாதம் இதுதான். அடுத்த முகூர்த்ததுலையே கல்யாணம் பண்ணிடுங்க. மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணலைனா ரெண்டு பேருக்கும் கல்யாணமே நடக்காது. ஒரே ஒரு பிரச்சினை இருக்கு ரெண்டு பேர் உசுருக்கும் ஆபத்து இருக்கு”
“என்ன சொல்லுறீங்க?” பேரன் உயிருக்கு மட்டும்தான் ஆபத்து. இவள் ஜாதகம் பொருந்தினால் திருமணத்துக்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தால் பிரச்சினை தீராது போலவே கவலையாக அவரை நோக்கினாள் சுதுமெனிகே. 
“சில விஷயங்களை நாம தடுக்க முடியாது. முயற்சிதான் செய்ய முடியும்” குதர்க்கமாகவே பேசினார் ஜோசியர்.
சாருதான் இங்க என்ன நடக்கிறது என்று புரியாமலே பார்த்திருந்தாள்.

Advertisement