Advertisement

அத்தியாயம் 10
சுதுமெனிகே மாத்திரை அருந்தி தூங்கிக் கொண்டிருந்தாள். சாரு அருகிலையே அமர்ந்து நகராது இருந்தாள்.
இப்படி ஏதாவது ஆகிடும் என்று அஞ்சித்தான் அவள் சுதுமெனிகேயிடம் நேரடியாக தனது தந்தையை பற்றி கேட்கவில்லை.
அன்னை தந்தையை பற்றி தவறாக எதுவுமே சொல்லி இருக்கவில்லை. ஆனால் பஞ்சவர்ணம் “உன் அம்மா ஏமாந்து விட்டாளோ என்று எனக்கு தோணுது அதை சொன்னால் அவள் நம்ப மறுத்தாள். என் புருஷனுக்கு குடியை தவிர வேற சிந்தனை இருக்கவே இல்லை” என்றாள்.
எது உண்மை என்று அறிந்துகொள்ள தந்தையை நேரில் சந்தித்தால் தானே தெரியும். இங்கே எப்படி வருவது? என்ன காரணம் கூறுவது என்று திண்டாடிக் கொண்டிருந்தவளுக்கு லஹிருவின் மூலம் இந்த வீட்டுக்குள் நுழைய வரம் கிடைத்தது.
உள்ளே வந்தவளுக்கு தந்தையின் ஒரு புகைப்படம் கூட இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்தது. அன்னை கூறியது போல் காதல் திருமணம் செய்ததால் அவரை கொன்று விட்டார்களா? கவலையில் இருந்தவளுக்கு தந்தை உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிய வந்ததும் ரொம்ப சந்தோஷமடைந்தாள்.
பஞ்சவர்ணம் கூறியதும் அவள் மண்டையை குடையாமல் இல்லை. “கொல்லுவதென்றால் உன் அம்மாவை தானே கொண்டிருப்பார்கள். அவங்க புள்ளைய, சொந்த ரெத்தத்த கொல்லுவாங்களா?  அவர் உசுரோடதான் இருக்காரு. உங்கம்மாவ அத்து விட்டுட்டாரு. அவதான் காதல் முத்தி போய் லூசாகிட்டா”
“அத்த சொன்னது போல அம்மாவை ஏமாத்திட்டாரா? விட்டுட்டு போய்ட்டாரா? அவர் கிட்டாதான் கேட்கணும். அதற்கு அவர் எங்க இருக்கார்னு தெரியணும். யார்கிட்ட கேட்பது என்று இருந்தவளின் மனதை சுதுமெனிகேயின் பேச்சும் சுக்குநூறாக உடைத்திருந்தது.
தந்தையிடமிருந்து அன்னையை காப்பாற்றி விட்டது போலல்லவா பேசினாள். அப்படி என்றால் அவர் உண்மையிலயே அன்னையை ஏமாற்றினாரா?” சாருவுக்கு தலையே வலித்தது.
கண்விழித்த சுதுமெனிகே சாருவை பார்த்து சோபையாக புன்னகைத்தாள்.
“இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு பாட்டி. என்னால…” என்றவளை கை நீட்டி தடுத்தவள் தன்னை எழுந்தமர உதவி செய்யும்படி கூற, சாருவும் அவளை அமர்த்தினாள்.
“சில விஷயங்கள் நடக்கக் கூடாது என்று நாம நினைக்கிறோம் ஆனா எது நடக்கணும் என்று கடவுள்தான் முடிவு செய்வார். அது நம்ம கைல இல்லையே. நீ உங்கப்பாவை தேடி இங்க வந்தினா அவனை மறந்துடு” தீவீர முகபாவனையோடுதான் கூறினாள்.
“இல்ல பாட்டி. அவர் ஏன் அம்மாவை விட்டுட்டு போனாரு. ஏன் பார்க்க வரல. நான் பொறந்தது கூட அவருக்கு தெரியாதே” அன்னையின் எதிர் பார்ப்பு பொய்த்து விடக் கூடாதே என்று உள்ளம் பதைபதைத்தது.
“ஜாதி பாக்குற என் புருஷன் வேற மதத்து பொண்ண கல்யாணம் பண்ண சம்மதிப்பானா? அதுவும் எங்க கிட்ட வேலை பார்த்த பொண்ண? கல்யாணம் பண்ணி வச்சிடுவானா? கல்யாணம் பண்ணிக்கிட்டா உசுரோடதான் விட்டுடுவானா? உன் அம்மாவ கல்யாணம் பண்ணது என் புருஷனுக்கு தெரிஞ்சிருக்காது என்றுதான் எனக்கு தோணுது.  உன் அப்பன்…” என்றவள் அமைதியானாள்.
அன்னை சொன்னதும் உண்மைதான். சுதுமெனிகே சொல்வதும் உண்மைதான் என்பது சாருவுக்கு இப்பொழுது தெள்ளது தெளிவாக புரிந்தது.
கவிதா பித்துப் பிடித்தவள் போல் ஆனா பின் திடிரென்று ஒருநாள் நல்ல முறையில் பேசுவாள் அப்படி பேசும் பொழுது அவள் சாருவிடம் கூறியதாவது, எட்டு மாத கருவை சுமந்து கொண்டு பஞ்சவர்ணத்துக்கும் தெரியாமல் இவள் நுவரெலியாவிலிருந்து கண்டிக்கு வந்திருக்கின்றாள்.
கவிதா வந்த நேரம் வீரசிங்கேயும், சுதுமெனிகேயும் சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் இருந்தது லஹிருவின் அன்னை ஹிருனிகாவும் தந்தை அசேலயும் மட்டும்தான்.
லஹிருவின் அன்னைக்கோ இவள் யாரென்று தெரியவில்லை. இதற்கு முன் வேலை பார்த்த பெண் என்று கருணா ஆச்சி சொல்ல, கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறாளே ஐயோ பாவம் என்று அவள் சாப்பிட ஏதாவது கொடுக்க சொல்லி ஹிருனிகா கூறினாள்.
“ஐயோ அம்மா” அலறியவாறு வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்திருந்தாள் கவிதா. கவிதாவை எட்டி உதைத்திருந்தான் அசேல.
“என்ன தில்லிருந்தா மாறுசாதி நாயி நீ. எங்க வீட்டு வாசல்ல வந்து உக்காந்திருப்ப?”
“என்னங்க என்ன இது?” ஹிருனிகா பதற,
“வாய மூடு” மனைவியை அதட்டியவன் “யாரை எங்க வைக்கணும் என்று ஒரு விவசத்த இல்லையா? வீட்டை கழுவு போ.. போ..” மனைவியை துரத்தினான்.
வராண்டாவிலிருந்த மூன்று படிகளிலும் திபுதிபுவென இறங்கியவன் கவிதாவை தூக்கி இழுத்துக் கொண்டு கேட்டுக்கு வெளியே நிறுத்தி “எங்க அப்பா மட்டும் வீட்டுல இருந்திருந்தா உன்ன உசுரோட கொன்னிருப்பாரு. அவர் வரதுக்குள்ள இங்கிருந்து போய்டு. மறந்தும் இந்த பக்கம் வந்துடாத. அவனை மறந்துடு. உன் வயித்துல இருக்குற புள்ள ஜீவகையுடைய புள்ளன்னு சொல்லிக்கிட்டு திரியாத. அவனுக்கும் உன் புள்ளைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்பொறம் நீ எவன் கூட எல்லாம் படுத்த என்று லிஸ்ட்டு போட வேண்டி வரும்”
கவிதா காதை பொத்திக்கொள்ள, “சேரில வாழுற நாய் நீ. உனக்கு எங்க மதத்துல அதுவும் உயர்ந்த ஜாதில மாப்புள கேக்குதோ. ஈஸியா சொகுசா வாழ வழி தேடுறீங்கடி… காசு கொடுத்து போக கூட உங்கள எல்லாம் தொடக் கூடாது என்று இருக்குற இனம்டி நாங்க. எங்க இனத்தோட சேரலாம்னு நினைக்கிறீங்களா? ஆனாலும் அவன் செஞ்சத பாராட்டணும் டி… பழிவாங்க இது கூட நல்ல வழிதான். சாகுற வரைக்கும் வலிக்குமில்ல” கோபத்திலும் இளக்காரமாக சிரித்தான் அசேல.
அசேல கத்துவத்தைக் கேட்டு டிங்கிரி பண்டா ஓடி வந்திருக்க, “இவளை துரத்தி கேட்ட இழுத்து பூட்டு” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.
எந்த மதமாக இருந்தால் என்ன கர்ப்பிணி பெண் வேறு, யாருடைய மனமும் இறங்கும். “போம்மா… போம்மா… ஹாமு வர முன்னாடி போய்டுமா…” என்ன பிரச்சினை என்று அவனுக்கு தெரியவில்லை. அசேல கத்தியதில் பிரச்சினை பெரிதென்று மட்டும் தெரிந்தது.
கவிதா எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அவள் மனம் மேலும் காயமடைந்து, மனநிலை பாதித்தாள். சுதுமெனிகே இருந்திருந்தால் தனக்கு நியாயம் கிடைத்திருக்கும் என்று புலம்பினாள் கவிதா. பாவம் அவளால் மட்டும் என்ன உதவி செய்து விட முடியும்? இப்படியொரு நிலமை கவிதாவுக்கு வந்துவிடக் கூடாது என்றுதானே அவள் கவிதாவை ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
நடந்த எதுவும் சுதுமெனிகேவுக்கு மட்டுமன்றி வீரசிங்கவுக்கும் தெரியவில்லை. வேலையாட்கள் புறணி பேசுபவர்களல்ல. வீரசிங்கவுக்கு கூறினால் அசேல தான் கூறவேண்டும். ஹிருனிகா மாமனாரை நெருங்க கூட மாட்டாள்.
வீரசிங்கவுக்கு விஷயம் தெரிந்திருந்தால் சாரு இந்த பூமியில் ஜனிக்கும் முன்னே கவிதாவை கொன்று புதைத்திருப்பான்.
ஹிருனிகாதான் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாவமே போதும் நடந்ததை சொல்லி அவளை கொன்ற பாவமும் எங்களுக்கு வேண்டாம். என் “பையனுக்கு ஏற்கனவே சர்ப்பதோஷம் இருக்கு. அதுவே உங்கள் முன்னோர்கள் செய்த பாவம் என்று சொல்கிறார்கள். ஒரு கர்ப்பிணியை கொன்ற பாவம் வேறு சேர வேண்டுமா? சத்தியம் பண்ணுங்க. உங்க அப்பா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்க” என்று கணவனிடம் சத்தியம் வாங்கி இருந்தாள்.
இதனால் அசேலவுக்கு தந்தையிடம் கவிதா வந்ததை பற்றியோ, இங்கு நடந்ததை பற்றியோ, அவள் ஜீவகயின் குழந்தையை சுமந்திருப்பதை பற்றியோ கூற முடியவில்லை.
திடிரென்று கவிதா “சுதுமெனிகே அவரை நான் திருமணம் செய்யக் கூடாது என்று என்னை ஊருக்கு அனுப்பி வைத்தது என் உயிரை காப்பாற்றத்தான். நான்தான் அவளை புரிந்துகொள்ளாமல் ஜாதி, மதம் பார்க்கும் கல்நெஞ்சம் கொண்ட காதலுக்கு எதிரி என்று நினைத்து விட்டேன்” என்று கதறுவாள். 
அன்னை பித்து பிடித்து உளரவில்லை. உண்மையைத்தான் கூறி இருக்கிறாள் என்று சாரு நம்பினாள். அதனாலயே தான் என்றுமே பார்த்திராத சுதுமெனிகேயின் மேல் அவளுக்கு அவ்வளவு பாசம் வந்திருந்தது. அவளை பார்த்த நொடி காலிலும் விழ வைத்தது. அவளுக்கு சேவகம் செய்வதை வரமாகவும், தன் கடமையாகவும் எண்ணினாள்.
தான் பத்திரமாக அனுப்பி வைத்த கவிதா ஜீவகயை திருமணம் செய்து சாரு என்றொரு மகள் இருப்பது என்பதே சுதுமெனிகேவுக்கு இத்தனை அதிர்ச்சியை கொடுக்கும் என்றால் இந்த வீட்டில் நடந்த சம்பவத்தை சொன்னால் அவளுக்கு என்ன ஆகுமோ?
“ஏன் பாட்டி தாத்தாக்கு… அதான் உங்க புருஷனுக்கு தெரிஞ்சா அம்மாவ கொன்றிருப்பார்னு சொன்னீங்களே! அன்னைக்கு கூட உங்க பேரன அவர் பேர சொல்லி திட்டினீங்களே அவர் அவ்வளவு மோசமானவரா?”
“மோசமானவரா? அந்த வார்த்தை கூட சாதாரணம். அவன் ஒரு கொடூரன். அவன் கூட குடும்பம் நடத்தி புள்ளய பெத்திருக்கேன்னு நினைக்கும் போது எனக்கு அருவருப்பாக இருக்கு. எனக்கு ரெண்டு பொம்பள புள்ள பொறந்திருந்தா. ஆம்பள புள்ள வேணும் என்று என்ன ஒதுக்கி வச்சி இன்னொரு கல்யாணம் கூட பண்ணி இருப்பான்.
நானும் வளவ்வையில் பொறந்தவதான். எங்க தாத்தா ஆங்கிலேயருக்கு எதிரா போர் செஞ்சவரு. எங்க பாரம்பரியத்தை கட்டிக் காக்கணும் என்று சொல்லிக் கொடுத்ததோடு மத்த மதத்துக்காரங்களையும், மனிசனுங்களையும் மதிச்சு வாழவும், நடத்தவும் சொல்லிக் கொடுத்திருக்காரு.
என் அப்பாதான் தப்பி பொறந்து காசு காசு என்று அலைஞ்சி, என்ன இந்த கொடூரனுக்கு கல்யாணம் பண்ணிக்க கொடுத்துட்டாரு.
கல்யாணம் பண்ணி வந்த புதுசுல எல்லாம் நல்லா இருக்குற மாதிரிதான் இருந்தது. மூத்தவன் பிறந்த பிறகுதான் அவன் சுயரூபம் தெரிய வந்தது. கீழ்ஜாதிக்காரன் ஒருத்தன் காணி வாங்கிட்டான்னு அவன் காணிய எழுதி வாங்கி அவனை கொன்னுட்டாரு. அவன் பொண்டாட்டி மண்ணைவாரி தூற்றிட்டு போனா. இந்த குடும்பத்துக்கு இருக்குற சாபம் பத்தாது என்று ஊர்ல இருக்குறவங்க அத்தனை பேரோட சாபத்தையும் வாங்கி வச்சிருந்தான். 
தோட்டத்துல வேலை செய்யிற தமிழர்களுக்கு குடைச்சல் கொடுத்துகிட்டே இருப்பாரு. அந்த மக்கள் இழக்குறதுக்கு என்ன இருக்கு? சொந்த நாட்டை விட்டு பஞ்சம் பொழைக்க வந்தவங்க. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒழுங்கா சம்பளம் கொடுக்க மாட்டாரு. அடிப்படை தேவைகளை கூட செஞ்சி கொடுக்க மாட்டாரு. அடிமைகள் மாதிரிதான் நடாத்துவாரு.
பக்கத்து ஸ்டேட் உரிமையாளர் விஜயசூரிய கூட “என்ன இப்படி நடந்துக்கிறீங்க” என்று கேட்கப் போய் வாய்தாக்கமாகிருச்சு. அவரை ஆள் வச்சி கொன்னுட்டான். அவர் வேற உயர் ஜாதியா. அவன் பசங்க இவரை கொல்ல கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சானுங்க. என் பையன் அசேலையையும் மருமகளையும் எக்சிடன் பண்ணி கொன்னது அவனுங்கதான்னு இவரு பழிவாங்க கிளம்பிட்டாரு.
நீ செஞ்ச பாவம்தான் வாழ வேண்டியவங்க செத்துட்டாங்கனு நான் சண்டை போட்டேன்.
அதுக்கு அவன் ஜாதக தோஷத்தை பத்தி பேசி என் வாய அடைச்சிட்டான் பாவி.
தினமும் பிரச்சினை, பஞ்சாயத்து. என்னனு கேட்க முடியாது. என்ன என்னை அடிக்க மட்டும் மாட்டாரு. அடிச்சா என் வீட்டாளுங்க அவனை சுட்டே கொன்னுடுவாங்கனு தெரியும். ஏன்னா சீதனமா நான் கொண்டு வந்த சொத்துதானே இங்க இருக்குறது எல்லாமே.
எத்தனை நாள் தான் நானும் பொறுமையா இருக்கிறது? ஒருதடவை எதிர்த்து பேசிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக குளியலறைல எண்ணெயை கொட்டி என்ன வழுக்கி விழ வச்சி என் இடுப்பை ஒடச்சிட்டான். இது எனக்கு தெரியாது என்று நினைச்சி கிட்டு இருந்தான்.
எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தது என் பசங்களுக்காக மட்டும்தான். மூத்தவன் போன பிறகு பேரன் பொறுப்பு என் கைக்கு வந்தது. எங்க இந்த மனுஷன் அவனையும் கெடுத்திடுவானோனு எனக்கு ஒரே பயம். சின்னவன் பொண்டாட்டி தான் வளர்க்குறேன் என்று கேட்டும் நான் அவன கொடுக்கல. இந்த குடும்பத்தோட அடுத்த தலைமுறையின் மூத்த வாரிசு அவன். அவனை ஒழுங்கா வளர்க்கணும். அவனால பல மாற்றங்களை கொண்டு வரணும் என்று நினச்சேன்.
அவன் செஞ்ச பாவம் கை, கால் இழுத்துகிட்டு, மூச்சு போறவரைக்கும் கட்டிலையே கிடந்தது செத்து போய்ட்டான். அது கூட அவன் எதிரிங்க அவனை நேரடியா மோத முடியாம சூனியம் வச்சிட்டாங்க என்று சொன்னாங்க.  அவன் ஆடாத ஆட்டமே இல்ல. கடைசில அவன் வெளிய தள்ளுற கழிவை அள்ள இன்னொருத்தங்க தேவ பட்டது. இதுதான் வாழ்க்கை. இது புரியாமத்தான். சாகும் போது கொண்டு போறது போல சொத்து சேர்ப்பங்க, பூமியில என்ன ஆட்டம் ஆடுறாங்க” விரக்தியோடு சொன்னாள் வளவ்வே ஹாமினே
கேட்கும் பொழுதே சாருவின் உடல் சில்லிட்டது. நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்தவள், அனுபவித்தவள். இவளுக்கு இருக்கும் மனதைரியம் வேறு யாருக்கும் வராது என்று எண்ணினாள் சாரு. 
கோடி கோடியாக சொத்துப்பத்து, வீடு வாசல் இருந்து என்ன பயன்? சந்தோசமான வாழ்க்கை அமையாவிட்டால்? வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு மாடமாளிகையில் வாள்பவர்கள் எல்லோரும் அதிஷ்டக்காரர்கள் என்றுதான் தோன்றும் ஆனால் அவர்கள் நிம்மதியே இல்லாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்று சுதுமெனிக்கே சிறந்த உதாரணம்.
அவளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே கவலை லஹிருவின் திருமணம் என்பதும் சாருவுக்கு தெரியும். அவன் வந்த உடன் பேசி அவனை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அந்த தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தான் இந்த வீட்டில் இவ்வளவு சுதந்திரமாக நடமாடி இருக்க முடியாது என்று மட்டும் புரிந்தது. அவருக்கு மட்டும் என் அப்பா யார் என்று தெரிந்தேன் செத்தேன்.  
“ஏன் பாட்டி. எல்லார் போட்டோவும் இந்த வீட்டுல இருக்கு. எங்கப்பா போட்டோ மட்டும் இல்லையே” சோகமாக கேட்டாள் சாரு.
“அவன் போட்டோ எதுக்குமா என் வீட்டுல இருக்கணும். அவன் போட்டோ அவன் வீட்டுல இல்ல இருக்கும்” சிரித்தாள் கிழவி.
“இல்ல பாட்டி ஒன்னு கூட இல்லையே, பழைய போட்டோ கூட… அதான் கேட்டேன்” எப்படி புரிய வைப்பது என்று இவள் முழித்தாள்.
“என் பசங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியல ஒருநாள் அவன் போட்டோ எல்லாத்தையும் எரிச்சிட்டாங்க” என்ற சுதுமெனிகே ஜீவகயை சாருவின் தந்தை என்று கூறவே இல்லை. அதை சாருவும் கவனித்தாள்.
எப்போ என்று இவள் கேட்க சுதுமெனிகே கூறியதை வைத்து அன்னையுடனான திருமணத்தை அறிந்து கொண்ட பின்தான் போட்டோக்களை எரித்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
அப்படியாயின் யார் அன்னையின் போட்டோவை அந்த பெட்டியில் பூட்டி பத்திரப்படுத்தினார்கள்? அந்த கேள்விக்கு பாட்டியிடம் பதில் இருக்குமா? அவளிடம் கேட்டும் பார்த்தாள் சாரு.  
சுதுமெனிகே யோசனையில் ஆந்திருந்த நேரம் நெலும் இரவு உணவு என்ன சமைப்பது என்று கேட்க வந்தாள். 
வந்தவள் அங்கிருந்த பெட்டியை பார்த்து “இது ஜீவக அய்யாவோட பெட்டியாச்சே. அவர் இங்க இருக்கும் போது பாவிச்சது. இப்போ இங்க வர்றதே இல்ல” என்றாள்.
“எங்கப்பா…” என்ற சாருவை இடை மரித்த சுதுமெனிகே நெல்லுமிடம் இரவு உனக்கு லஹிருவும், ஹரிதவும் வந்துவிடுவார்கள் என்று கூறி அவர்களுக்கும் சேர்த்தே இடியப்பம் சமைக்கும் படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தாள்.
“ஏன் பாட்டி என்ன பேச விடல?”
“நீ ஜீவகயிக்கு பிறந்தவளாக இருக்கலாம். ஆனா அப்பான்னு உன்னால உரிமை கொண்டாட முடியாது” திட்டவட்டமாக கூறினாள். 
“ஏன் நான் வேற மதத்து பொண்ணுக்கு பொறந்தேன் எங்குறதாலையா?” மூக்குநுனி சிவந்தாள் சாரு.
“ஏன்னா அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க. உன்ன அவன் பொண்ணா ஏத்துக்க மாட்டான்”
“அப்படி என்றால் அவர் எங்க அம்மாவ ஏமாத்திட்டார் என்று சொல்லுறீங்களா?  ஏன் அவர் வீட்டுல ப்ளாக்மெயில் செஞ்சி அவரை வேற கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமே”
“அவன் குழந்தை பாரு கைய,கால கட்டி கல்யாணம் பண்ணி வைக்க, கொழுத்த சீதனத்தோட பொண்டாட்டி வந்ததும் கட்டிக்கிட்டான். உங்கம்மாவை கழட்டி விட்டுட்டான்” சலனமே இல்லாமல் சொன்னாள் சுதுமெனிகே.
“எது ஆனாலும் நான் அவர்கிட்ட நேரடியாகவே கேட்கிறேன்”
“கேட்டு? உன்ன அவன் பொண்ணா ஏத்துக்க சொல்லி பிரச்சினை பண்ண போறியா?”
“நா எதுக்கு பிரச்சினை பண்ண போறேன். அதுதானே உண்மை” 
“உனக்கு நான் சொல்லுறது புரியல. அவன் உன் அம்மாவை ஏமாத்தத்தான் பழகினான். அவனுக்கு நீ உண்டானது தெரியல. தெரிஞ்சிருந்தா நீ பொறந்து கூட இருக்க மாட்ட”
“என்ன பாட்டி என் அப்பாவை சினிமா வில்லன் ரேஞ்சுக்கு பேசுறீங்க” சாருவுக்கு சிரிப்பாக இருந்தது.
“இது சிரிக்கிற விஷயம் இல்ல சாரு. அவன் மூத்த பொண்ணுக்கு உன் வயசு”
“என்ன சொல்லுறீங்க?” சாருவுக்கு புரியவே இல்ல.
“உங்கம்மாவை விட்டுட்டு வந்தது அவன் கல்யாணத்துக்கு. உனக்கும் அவளுக்கு சில மாசங்கள்தான் வித்தியாசம்” என்றது சாரு அதிர்ந்தாள்.
பொய்த்து பொய் விட்டது. அன்னையின் எதிர்பார்ப்பு எல்லாம் பொய்த்து போய் விட்டது. தன் கணவன் தன்னை காதலிப்பதாக எண்ணி அவள் மாண்டது அவளுக்கு நிம்மதிதான். இந்த உண்மை மட்டும் தெரிந்திருந்தால் தினம் தினம் செத்திருப்பாள். இது எதுவுமே தெரிய வரும்முன் அவள் இறந்தது நல்லது.
“இப்போ நீ என்ன பண்ண போற? ஜீவகய பழிவாங்க போறியா? இல்ல. நீதான் அவன் மூத்த பொண்ணு என்று அவன் வாயாலையே சொல்ல வைக்க போறியா? உன் அம்மாக்கு நியாயம் வாங்கிக் கொடுக்க போறியா?”
சுதுமெனிகே கேட்ட கேள்வியில் திகைத்தாள் சாரு. தந்தை ஏமாற்றி இருப்பார் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லையே.
தான் யாருக்காக போராட வேண்டுமோ அவளே உயிரோடு இல்லை. அவள் இறக்கும்வரைக்கும் தன் கணவனை நம்பினாள். அவர் நலனுக்காகத்தான் பிராத்தித்தாள். அவளுக்கு எந்த தீங்கையும் இழக்கவில்லை. தன்னை நன்றாக பார்த்துக் கொண்டார் என்றுதான் சொன்னாள். அவளை பொறுத்தவரையில் அநீதி இழக்கப்படவில்லையே. போராடி என்ன பயன்?
பழிவாங்குவதா? அதுவும் சொந்த தந்தையை. தன்னால் முடியுமா? அம்மா இருந்திருந்தால் மன்னிச்சு விட்டிட்டு என்றுதான் சொல்லுவாள்.
“என்னம்மா அமைதியாகிட்ட?”
“எனக்கு தெரியல பாட்டி. நான் என்ன செய்யணும் என்று எனக்கு தெரியல. அப்பாவை பார்க்கணும் அம்மாவை ஏன் விட்டுட்டு போனீங்க? ஏன் திரும்ப வரல என்று கேட்கணும். இதுதான் என் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது.
சத்தியமா அப்பா அம்மாக்கு துரோகம் செய்திருப்பார் என்று நான் நினைக்கவே இல்ல. அவர்கிட்ட போய் நான் என்னனு கேட்கிறது? எனக்கு தெரியல” கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெறுக, அதை துடைக்க கூட மனம் இல்லாமல் அமர்ந்திருந்தாள் சாரு. 
தொலைபேசியை கையில் எடுத்த சுதுமெனிகே சின்ன மகனை அழைத்தாள்.
“என்ன அம்மா இந்த நேரத்துல? ஏதாவது பிரச்சினையா?” அண்ணன் மகனும் தன் மகனும் கொழும்பு சென்றிருப்பது அறிந்ததே அதனாலயே பதட்டமானான்.
“நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. ஜீவகயிக்கும் என்ன பார்த்துக்கொள்ள வந்த அந்த தமிழ் பொண்ணு கவிஷாக்கும் என்ன தொடர்பு?”
“என்ன அம்மா? எப்பயோ நடந்த சம்பவத்தை இப்போ கேக்குறீங்க?” என்றவன் தான் உளறியதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.
“சம்பவம் நடந்தது இல்ல. அது என்னனு என்று என் கிட்ட சொல்லு. உண்மைய சொல்லாம மழுப்பினா நான் இப்போவே கண்டிக்கு வரேன்” என்று மிரட்ட
லஹிருவும் இல்லாத நேரத்தில் வண்டியோட்டிக் கொண்டு வந்து ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அஞ்சிய புஞ்சி நிலமே உண்மையை ஒப்பித்தான்.
கவிதாவுக்கு ஜீவகயின் மேல் காதல். அதை அவன் பயன்படுத்திக் கொண்டான். சமயம் பார்த்து அவளை அத்து விட்டுட்டான். ஆனா அவ அவன் புள்ளய சுமந்துக்கிட்டு நம்ம வீட்டுக்கே வந்துட்டா… என்று ஆரம்பித்து அசேல கவிதாவை கண்டபடி பேசி துரத்திய கதையை கூறினான்.
“அவ்வளவுதானா?” என்ற சுதுமெனிகேயின் முகம் இறுகி இருந்தது.
“அது வந்து… அவ உசுரோட இருக்கக் கூடாது என்று அவ சொந்த ஊரான பதுள்ளைல போய் தேடினோம் அவ அங்க இருக்கல. அண்ணன் இறந்த பிறகு நானும் தேடுறத விட்டுட்டேன்” என்றான் புஞ்சி நிலமே.
“என் முதுகுக்கு பின்னால அண்ணனும், தம்பியும் செய்ய வேண்டிய அத்தனை பாவத்தையும் செஞ்சி இருக்கீங்க இல்ல. நான் உனக்கு போன் பண்ணதோ கவிஷாவை பத்தி கேட்டதோ எதுவும் ஜீவகயுக்கு தெரியாக் கூடாது” என்றவள் தொலைபேசியை வைத்திருந்தாள்.
“புத்தர் பழிவாங்க கூடாது என்றுதான் போதித்தார். அநியாயம் நடக்கும் போது சில நேரம் பொங்கி ஏழனும். இல்லனா நீதி கிடைக்காது. உனக்கு என்ன தோணுதோ அதை செய். நான் கூட இருக்கேன்” என்றாள் சுதுமெனிகே.
இவ்வளவு நேரமும் சாருவை விலகி இரு என்பதை போலவே பேசிக்கொண்டிருந்தவள் திடிரென்று இப்படி பேசவும் சாருவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“பாட்டி…” என்று அவளை கட்டிக்க கொண்ட சாரு கூறியது “எனக்கு அப்பாவை பழிவாங்க எல்லாம் வேணாம் பாட்டி. அவர் என்ன அவரோட பொண்ணா ஏத்துக்கிட்டா போதும்”
“அதற்கு அவன் இங்க வரணும் வர வச்சிடலாம்” என்றாள் சுதுமெனிகே.
“எப்படி…?”
“அடுத்த மாசம் என் புருஷனோட நினைவு நாள் வருது. பூஜைக்கு ஏற்பாடு செய்யிறோம்னு சொன்னா வந்திடுவான்”
“என்னது அடுத்த மாசமா?” இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்ற கவலை அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“அமெரிக்கால இருக்குறவன வரவழைக்க காரணம் வேணாமா?”
“உங்க புருஷன் மேல அவ்வளவு பாசமா?”
“அவனுக்கு இல்ல. அவன் அம்மாக்கு. அம்மா சொன்னா கேட்பானில்ல. வரட்டும்”
தந்தையை காணா ஆவலாக காத்திருந்தாள்  சாரு.

Advertisement