Advertisement

அத்தியாயம் 1
இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான நுவரேலியாவில் குளுகுளு குளிரில் தேயிலை தோட்டத்தை கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டில் விடிந்தும், விடியா காலை பொழுதில் சாருமதி இழுத்துப் போர்த்தியவாறு தூங்கிக் கொண்டிருக்க, சமையல்கட்டில் பஞ்சவர்ணம் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தாள்.
ஆங்கிலேயரின் ஆட்ச்சியின் போது நுவரெலியாவின் காலநிலை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் அரசு ஊழியர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் முக்கிய சரணாலயமாக மாறியது. நுவரெலியாவை ஆங்கிலேயர் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்தனர். அந்த காலத்தில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் நரி வேட்டை, மான் வேட்டை, யானை வேட்டை, போலோ, கோல்ஃப் மற்றும் கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது.
குயின்ஸ் குடிசை, ஜெனரல் ஹவுஸ், கிராண்ட் ஹோட்டல், ஹில் கிளப், செயின்ட் ஆண்ட்ரூஸ் ஹோட்டல் மற்றும் டவுன் போஸ்ட் ஆபிஸ் போன்ற பல கட்டிடங்கள் காலனித்துவ காலத்தின் அம்சங்களைத் தக்கவைத்துள்ளன. புதிய ஹோட்டல்கள் பெரும்பாலும் காலனித்துவ பாணியில் கட்டப்பட்டு வழங்கப்படுகின்றன. நகரத்திற்கு வருகை தருபவர்கள் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களைப் பார்வையிடுவதன் மூலம் கடந்த காலத்தின் ஏக்கத்தில் மூழ்கலாம். பல தனியார் வீடுகள் தங்கள் பழைய ஆங்கில பாணி புல்வெளிகளையும் தோட்டங்களையும் பராமரித்து இன்றும் கோடையில் வருவோருக்கு வாடகைக்கு விடுகின்றனர்.
அது மட்டுமல்லாது நுவரெலியா பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகிய நகரம்.
தேயிலை பிரதான தொழிலாக விளங்கும் நுவரெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட சாருமதிக்கு படிப்பு பாடசாலையை தாண்டவில்லை. பஞ்சவர்ணம் அவளுடைய அத்தை. பெண்ணை தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்க அனுப்ப அவளுக்கு இஷடமில்லை. அந்த கண்காணியின் பார்வை சரியில்லை. இவளை ஏதாவது செய்து விடுவானோ என்று உள்ளுக்குள் அச்சம். அதனாலே அவளை வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டரில் இருக்கும் பூக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டிருந்தாள்.
அதை நடத்துவதும். ஒரு பெண்மணிதான். சாருமதியும், அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் வான்மதியும் அந்த கடையில் வேலை பார்ப்பதால் இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்கு சென்று வருகின்றனர்.
“அடியேய் சாரு. எழுந்திருடி… கடைக்கு போக வேணாம்? அம்மா இல்லாத பொண்ணுன்னு பாசம் காட்டினா. தலைல ஏறி உக்காந்து வீட்டு வேல ஒன்னத்தையும் செய்யிறது இல்ல. கேட்டா கடைக்கு போயிட்டு வந்தா டயடா இருக்காம். நான் மட்டும் தேல காட்டுல கொழுந்து பரிச்சிட்டு வரேன் எனக்கு டயடா இல்லையா?” பஞ்சவர்ணம் தனது கீச்சுக்க குரலில் கத்திக் கொண்டே இருக்க,
“சே நிம்மதியா தூங்க விடுறாளா? காலங்காத்தால ஆரம்பிச்சிடுறாளே” முணுமுணுத்த சாருமதி காலுக்கு வைத்திருந்த தலையணையை தூக்கி தலையில் வைத்து, தலையை மூடி படுத்துக் கொண்டாள்.
“கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போனாதான் தெரியும். மாமியார்காரி மண்டையிலையே போட்டு வேல வாங்கும் போது விளங்கும்” வளமை போல் விடாது தூற்றலானாள் பஞ்சவர்ணம்.
“நீ கவலை படாத சாரு நான் உனக்கு வாழ்க தரேன்” பாதி சவரம் செய்த முகத்தோடு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தவாறு அவள் அத்தை பெத்த ஒரே செல்ல மகன் முத்து அன்னையை மேலும் உசுப்பேற்றி விட்டான்.
“ஆமான்டா நான் சாகுறவரைக்கும் இவளுக்கு சேவகம் செய்யணும் இல்ல. வந்தேன்னாவை சவரம் செய்யிற கத்தியாலையே உன் கழுத்த வெட்டுறேன். எனக்கு மருமகளா வரவேண்டியவ வீட்டு வேல செய்ய கூடியவளா இருக்கணும். இவள மாதிரி சோம்பேறியா இருக்கக் கூடாது” பஞ்சவர்ணம் கத்த
“அத்த கத்தாதே, நான் எல்லாம் உன் பையன கல்யாணம் பண்ண மாட்டேன். வாழ்க கொடுக்குற மூஞ்சிய பாரு. நான் கல்யாணம் பண்ண போறவன் பெரிய பணக்காரனா இருப்பான். பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறேனா இல்லையானு பாரு” போர்வையை உதறியவாறே எழுந்தவள் துண்டையையும், துணியையும் எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று பின்னாடி இருக்கும் குளியலறைக்கு சென்றாள். 
“ஆமா இவ பெரிய மஹாராணி. பணத்துலையே பிறந்து பணத்துலையே வளர்ந்தவ. ராஜகுமாரன் குதிரைல வந்து கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண போறான். பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கா பழைய சோறு சாப்பிடுற கழுத. இவளுக்கு நானே என் பையன கட்டி வைக்க யோசிக்கிறேன். யாரு இவள கட்டிக்க போறானோ? அவன் நிலம பாவம்தான்” உச்சக்கொட்டிவிட்டு மீண்டும் சமயலறைக்குள் நுழைந்தாள் பஞ்சவர்ணம்.  
இது இந்த வீட்டில் தினமும் நடப்பதுதான். என்னதான் பஞ்சவர்ணம் கத்தினாலும், சாருமதியை அவள் கைநீட்டி அடிப்பதில்லை. அவள் மீது பாசம் கொட்டிக் கிடக்க, அதை முழுவதாக காட்டினால் எங்கே இவள் தன் இஷ்டத்துக்கு ஆடுவாளோ என்ற அச்சம்தான் இந்த பேச்செல்லாம்.
சாருமதிக்கும் தன் அத்தையை பற்றி நன்கு தெரியும். என்னதான் திட்டினாலும் அவள் வயிறு வாடாமல் பார்த்துக்கொள்வாள். தீபாவளி, பொங்கல் என்று வந்தால் முத்துவுக்கு துணி எடுக்கிறாளோ இல்லையோ இவளுக்கு எடுத்து வைத்து விடுவாள்.
முத்துவும் சண்டை போடுவான். “அவ பொம்பள புள்ளடா அழகா, வித,விதமா துணி போட வேணாம். உனக்கென்ன கிழிஞ்ச ஜீன்சுக்கு ஒரு டிஷர்ட் தானே வாங்கிடலாம்” என்பாள்.
சாருமதிக்கு இருபத்தி ஒரு வயதாகிறது. அவளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பஞ்சவர்ணத்துக்கு இருக்க, வரன் பார்க்கும்படி தரகரிடம் சொன்னால் இவளோ நல்ல வசதியான வீட்டில் பார்க்கும்படி கூறுகிறாள்.
தெரிந்துதான் கூறுகிறாளா? சீதனம், சீர்வரிசை என்று பஞ்சவர்ணம் எங்கே செல்வாள்? ஒரு நாட்கூலி, அன்றாடம் கஞ்சிதான் நமக்கு வாய்க்கும், புரியாமல் பேசுகிறாளே என்ற கோபமும் சேர்ந்துகொள்ள திட்டும் போது பஞ்சவர்ணத்தின் வார்த்தைகள் தடிக்கும். இதில் முத்து வேறு ஏற்றி விடுவான்.
முத்துவுக்கும், சாருமதிக்கும் இடையில் இரண்டு வருடங்கள் வயது வித்தியாசம் இருக்க, இருவருக்குமிடையில் சகோதரர்கள் என்ற உணர்வும், பாசமும் மட்டும்தான். அது மூவருக்கும் தெரியும். தெரிந்தாலும் பேசும் பொழுது அதை சொல்லிக்கொள்வதுதான் இல்லை. 
“என்ன இன்னக்கி அதிசயமா அப்பம் சுட்டு இருக்க? பழைய சோறும் பச்சை மொளகாவும் எங்க?”
“மெனிகே அப்பம் மாவு கொடுத்திருச்சு. எதுக்கு பழைய சோத்த சாப்பிடணும். வா வந்து சாப்பிட்டு போ” ரெண்டு அப்பத்தையும் கொஞ்சம் வெங்காய சம்பலையும் தட்டில் வைத்து நீட்டினாள் பஞ்சவர்ணம்.
“ஆமா அந்த சிங்களத்தி மிச்சம் மீதியை போடுவா நீ அத அருமை பெருமையா வாங்கிட்டு வர, ஏன் அவ அப்பம் சுட்டு கொடுக்க மாட்டாளாமா? மாவுதான் கொடுப்பாளாமா? எப்ப சுட்டலாம் அப்பம்? அந்த புளிச்ச மாவு அப்பத்த உன் பையனுக்கே கொடு எனக்கு பழைய சோறே போதும்” என்றவள் வெங்காய சம்பலோடு பழைய சோற்றை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
பஞ்சவர்ணம் வேலை செய்வது ஒரு சிங்களவரின் தேயிலை தோட்டத்தில்தான். கண்டியில் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த, பௌத்த கோவிலில் பொறுப்புதாரரான ஆண்களை நிலமே என்றும். அவருடைய மனைவியை மெனிகே என்றும் அழைப்பர். 
கண்டியை சொந்த ஊராக கொண்ட இவர்கள் தேயிலை தோட்டம் வாங்கி இங்கேயே குடியேறி பலவருடங்களாகி இருக்க, அவர்களின் உண்மையான பெயர்கள் கூட யாருக்கும் தெரியவில்லை. இங்கே இருப்பவரை அனைவரும் புஞ்சி நிலமே {சின்னவர், சின்னையா} என்று அழைக்கின்றனர். அப்படியாயின் அவருக்கு ஒரு அண்ணன் இருக்க வேண்டும் அவரைத்தான் நிலமே என்று அழைக்க வேண்டும். கண்டிப் பேரகராவின் போது அவர்தான் யானை மேல் செல்வாராய் இருக்கும். அவரைத்தான் தியவடன நிலமே என்றும் அழைக்கின்றனர்.
இந்தம்மாவுக்கு எத்தனை பேர் வேலைக்கு இருந்தாலும் கணவனுக்கு உணவு தயாரிப்பது அந்தம்மாதான். தோட்டத்தின் நடுவே பெரிய வீடு. தேயிலையை பறித்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு பஞ்சவர்ணம் வீட்டுக்கு சென்று ஏதாவது வேலை இருக்கா என்று கேட்பாள்.
வேலை இருந்தால் வேலையாட்களோடு சேர்ந்து கூடமாட ஒத்தாசை செய்ய சொல்வாள் மெனிகே. உதவி செய்தபின் கொஞ்சம் பணமும், எஞ்சிய உணவும் கொடுப்பாள். இல்லையென்றால் நாளை வா என்று எஞ்சிய உணவுகளை கொடுத்து அனுப்பி விடுவாள். நன்றி கடனுக்காக லீவு நாளான ஞாயிற்றுக்கிழமை சென்று வேலை பார்ப்பாள் பஞ்சவர்ணம்.
மாலை ஐந்து மணிக்கு பிறகு சென்று அந்த பெரிய வீட்டில் செய்ய என்ன வேலை இருக்கப் போகிறது என்று பஞ்சவர்ணத்துக்கும் தெரியும் அவள் செல்வதே பகல் எஞ்சிய உணவுகளை எடுத்து வருவதற்குத்தான்.
அதைத்தான் சூடாக்கி இரவு உணவாக உட்கொள்வாள் பஞ்சவர்ணம். காலையில் எழுந்து மதியத்துக்கு சமைத்து முத்துவுக்கும், சாருமதிக்கும் கட்டிக்கொடுத்து விட்டு, தானும் எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வாள். 
சாருமதிக்கு இது சுத்தமாக பிடிப்பதில்லை. சின்ன வயதில் என்றால் பரவாயில்லை. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம். இப்போ என்ன விதியா? முத்துவும் சம்பாதிக்கின்றான். நானும் சம்பாதிக்கின்றேன். ஒழுங்கா சாப்பாடு கூட போட மாட்டியா? கொடுக்குற சம்பள பணத்தை என்னதான் பண்ணுற?” எரிந்து விழுவாள்.
பஞ்சவர்ணத்திடமிருந்து அதற்கு மட்டும் பதில் வராது. சாருமதி என்னதான் கத்தினாலும், பஞ்சவர்ணம் தன்னை மாற்றிக்கொள்ளாது இருக்க, சாருமதியும் கோபத்தை அவள் மேல் காட்ட முடியாமல் அவள் கொண்டுவரும் உணவை தொட்டுக்கூட பாராமல் உணவின் மேல்தான் காட்டுவாள். வழமையாக நடப்பதுதான் என்று பஞ்சவர்ணம் எதுவும் பேச மாட்டாள்.
சாரு கோபத்தில் ஏதாவது பேசினால் “நீ சம்பாதிக்கிறது வட்டிக் கட்டவே சரியா இருக்கே” என்பாள். அதன்பின் சாரு எதுவும் பேசமாட்டாள். அது பஞ்சவர்ணத்துக்கும் தெரியும். தெரிந்தேதான் சொல்வாள்.
“அடியேய் சாரு பவ்டர் போட்டது போதும் டி… பஸ்ஸுக்கு லேட் ஆச்சு. வா போலாம்” வாசலில் நின்று கத்தலானாள் வான்மதி.
“இருடி வரேன் கத்தாதே” இவளும் கத்தியவாறே மதிய சாப்பாடை எடுத்துக் கொண்டு பஸ்சுக்காக கிளம்பினாள்.
சாருமதி குடிசையில் வாழும் ஏழைப்பெண்தான். ஆசைகளும் வானளவில் இருக்கும் சாதாரண பெண். பாவாடை தாவணியில் நீண்ட பின்னலோடு பொட்டு வைத்த ஒரு ஏழைப்பெண்ணை கற்பனை செய்திருந்தால் அது உங்கள் தவறு. இவளோ இந்த காலத்துக்கு ஏற்றது போல் ஜீன்சும், டீஷர்ட்டும் அணிந்த நவநாகரீக புதுமை பெண். கையில் இருக்கும் செல்போன் மட்டும் இரண்டாயிரம் ரூபாய் செல்போன். ஸ்மார்ட் போன் எல்லாம் வாங்க வசதியுமில்லை. தேவையென்று அவள் நினைக்கவுமில்லை.
அமைதியான? அடக்கமான? பெண்ணா? அதுவும் இல்லை. கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகளை தவிர வேறு எதுவும் அவள் வாயில் வராது. ஆனால் பாசக்காரி.
கடைக்கு வந்து சேரும் பொழுது காலை ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்களின் கடையோ நகரத்தின் நடுவே அமர்ந்திருந்தாலும். அது மலை பாதை என்பதனால் வளைவில் அமைந்திருப்பதால் கடையின் வலது புறத்தில் மலையோடு ஒரு பெரிய கல்குன்று சேர்ந்திருக்க, இவர்களின் கடை வளைவை தான்டினால்தான் தெரியும். அதுவே அவர்களின் கடைக்கு தனித்துவத்தையும் கொடுத்தது.
நகரத்தில் ஆறு பூக்கடை இருந்தாலும், பெண்டிலிருக்கும் பூக்கடை என்றாலே அனைவருக்கும் தெரியும். கடைக்கு வந்த உடனே செய்ய வேண்டிய முதல் வேலை வெளியே சுத்தம் செய்து படிகள் போன்ற பெஞ்சில் பூக்களை அடுக்கி வைப்பதேயாகும்.
கடைக்கு, சிங்களவர்கள். தமிழர்கள். தமிழ் மற்றும் சிங்கள மொழியை பேசும் முஸ்லீம்கள் வெளிநாட்டவர்கள் என்று அனைவரும் வந்து செல்ல, சாருமதிக்கு சிங்களம் சரளமாக பேச முடிந்தமையாளையே இந்த கடையில் வேலை கிடைத்தது.
வான்மதிக்கு நன்றாக புரிந்தாலும், சிங்கள மொழியை கொலை செய்து பேசுவாள். ஆங்கிலேயர் வந்தால் மட்டும் ஓனர் அம்மாவிடம் தள்ளி விட்டுவிடுவார்கள். அந்தம்மா கடையில் இல்லையென்றால் இவர்களின் பாடு திண்டாட்டம்தான். ஆனாலும் எப்படியோ வியாபாரத்தை செய்துகொள்வார்கள்.
வான்மதிக்கு இருக்கும் ஒரே சந்தேகம் சாரு எவ்வாறு சிங்கள மொழியை கற்றுக்கொண்டாள் என்பதேயாகும். அதை அவளிடமே கேட்டு நச்சரிப்பாள். “என் கூடத்தான் ஸ்கூல் போன? நீ மட்டும் எப்பிடிடி இவ்வளவு அழகா பேசுற? எங்கடி கத்துகிட்ட?”
“அதுவா கனவுல கிளாஸ் போனேன். தேவதை கிளாஸ் எடுத்தா. மேனிக்கே பேசும் போது கத்துக்கிட்டேன். ஓனர் அம்மா பேசும் போது கத்துக்கிட்டேன்” இப்படி எதையாது சொல்லி வான்மதியை குழப்பத்தில் ஆழ்த்துவாள்.
சாருவும் வான்மதியும் நேற்றிரவு பார்த்த நாடகத்தை பற்றி பேசியவாறு வேலையை பார்க்க ஆரம்பித்தினர். அன்றாடம் இப்படி எதையாவது அலசியவாறு வேலைகளை பார்ப்பது தோழிகளின் இயல்பு.
“இந்த டீவி சீரியல்காரனுக நாடகத்தை ஜவ்வா இழுக்குறானுகடி. அந்தம்மா படில இருந்து இறங்கி வர அஞ்சு நிமிஷம். சோபால உக்கார மூணு நிமிஷம். வீட்டுல இருக்குற மொத்த குடும்பத்தையும் பார்க்க ஆறு நிமிஷம்னு கதையை நகட்டிடு சினிமால ஹீரோ பேசுற டயலாக் எல்லாம் பேசுது” என்றாள் வான்மதி.
“ஆமாடி… இதுல கதையை எப்படி முடிப்பானுங்க தெரியுமா சஸ்பென்ஸ் வச்சி நாம நாளைக்கும் உக்காந்து பார்க்குற மாதிரி முடிப்பாங்க. நமக்கு என்ன வேல வெட்டி இல்லனு நினைச்சி கிட்டு இருக்கானுகளா? வருஷக்கணக்கா ஒரே சீரியல பார்க்க?” கடுப்பானாள் சாரு. ஆனாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அது மட்டும்தானே.
“நமக்கு கல்யாணமாகி கொழந்த பொறந்து அது ஸ்கூலுக்கு போறவரைக்கும் சீரியல் ஓடும்டி…” சிரித்தாள் வான்மதி.
“பேசாம இந்த சீரியல் பாக்குறத விட்டுட்டு வேற வேல பார்க்கலாம்னு நினைக்கிறேன்” சாரு மொழிய
“அடி போடி அரைமணித்தியாலம் சீரியல் பாக்குறோம் அதையும் விட்டுட்டா? ஒரு சினிமாக்கு போறோமா? நம்ம ஊருல பீச் தான் இருக்கா? அந்த அரைமணித்தியாலத்துல நீ என்ன வேல பார்த்து கோடி கோடியா சம்பாதிக்க போற?”
“அடி போடி கூறுகெட்டவளே வேலனா சீரியல் இல்லனா சினிமா” என்றாள் சாரு.
“ஆமா எங்க காலனில டீவி இருக்கிறதே ஒரு வீட்டுல. அரைமணித்தியாலம், இல்லனா ஒருமணித்தியாலம் தான் டீவியே போடுவாங்க. கரண்ட் பில்லு யார் கட்டுறதுனு அந்தம்மா கத்தும். உனக்கு மட்டும் சினிமா தனியா போடுவாங்க” வான்மதி கோபமாக முறைக்க,
“ஏன்டி அரைமணித்தியாலம் டீவி ஓடுறது திடிரென்று ஒருமணித்தியாலமாக என்ன காரணம்னு எப்பவாச்சும் யோசிச்சு பாத்திருக்கியா?” சொல்ல வந்ததையும் மறந்து உதட்டில் மலர்ந்த புன்னகையோடு கேட்டாள் சாரு.
தோழியின் புன்னகைக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்று யோசித்தவாறே “இல்லை” என்று தலையசைத்தாள் வான்மதி.
“டீவி பார்க்க யாரெல்லாம் வர்றாங்க?” செய்யும் வேலையை நிறுத்தியவள் புருவம் உயர்த்த
சாரு கேட்ட கேள்விக்கு யோசித்த வான்மதி “பசங்க, பொண்ணுங்க என்று எல்லோரும்தான் வராங்க” என்றாள்.
“அடியேய் மக்கு. பெரியவங்க யாரும் வர மாட்டாங்க” இவள் சிரிக்க,
“ஆமா வேலைக்கு போய் சலிப்பா இருக்குனு வர்றதில்லை” வான்மதியும் யோசனையாகவே பதில் சொன்னாள்.
“அந்த நேரத்துலதான் கிழடுகட்டைங்க வாசல்ல உக்காந்து வெத்தல சாப்பிட்டுக்கிட்டு புறணி பேசும். கவனிச்சு இருக்கியா?”
“ஆமாடி தண்ணி தாகம் எடுக்குதேன்னு தண்ணி குடிக்க வீட்டுக்கு போனா அம்மாச்சி துரத்திரிச்சு” என்று வான்மதி சொன்னதும் சாரு சத்தமாக சிரிக்கலானாள்.
பக்கத்து கடைக்காரன் எட்டிப் பார்க்க “எதுக்குடி சிரிக்கிற?” முறைத்தாள்.
“உன்ன சீரியல் பார்க்க அனுப்பிட்டு அந்த நேரத்துலதான் உன்ன பெத்தவங்க அம்மா அப்பா விளையாட்டு விளையாடுறங்கடி. அதுக்கு உன் அம்மாச்சி காவல்” வாயில் கைவைத்து இரகசியம் பேசுவது போல் குரலை தாழ்த்தி இவள் சொல்ல
“சீ அசிங்கமாக பேசாத” சத்தமாக கூறியவாறே தோழியை முறைத்தாள் வான்மதி.
சாரு சொன்னதுதான் உண்மை. அவர்களின் வீடோ ஒரே ஒரு அறை மட்டும்தான். டாய்லட் கூட பொதுக் கழிவறைகளாக, எல்லா வீட்டுக்கும் ஐந்து கழிவறைகள் என்று வீடுகளை தாண்டி இருபது அல்லது முப்பது மீட்டருக்குள் இருக்கும். இரவில் செல்ல பெண்கள் அச்சப் படுகின்றனர்.
குளிக்க, குடிக்க, தண்ணீருக்கு பஞ்சமே இல்லை. மலையூற்று கொட்டிக் கொண்டே இருக்க, குழாய் போட்டு வீடுகள் இருக்கும் பக்கம் திருப்பி விட்டிருந்தனர். குளிக்க கு குளியலறை கூட சமீபத்தில்தான் கட்டினார்கள். குளியலறை என்றால் நாலு பக்கமாக மறைக்கப்பட்ட சுவர்தான். உள்ளே ஒரு தண்ணீர் டாங்க் இருக்கும்.
சமையல்கட்டு சில வீடுகளில் உள்ளே இருக்கும். சில வீடுகளில் வெளியே இருக்கும். அதுவும் நாலு தடியை ஊன்றி தகரம் போட்ட கூரை. மழை வந்தால் நனையாது. ஆனால் பலமான காற்றடித்தால் தகரக் கூரை பறந்து விடும்.
இப்படி பட்ட வீட்டில் பெரிய குடும்பமாக எப்படி வாழ்வார்கள். பெரியவர்கள் புரிந்துகொண்ட நடந்துகொள்ள, சிறியவர்களுக்கு புரியவைக்கவா முடியும்? ஆசையையும், உடல் தேவையையும் கூட அடக்கி அதையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் தவிக்கும் பாவப்பட்ட மனிதர்கள் இவர்கள்.
“நான் என்னடி அசிங்கமா பேசிட்டேன். நடந்தத தானே சொன்னேன். அன்னக்கி எனக்கு வயிறு சரியில்லைன்னு கக்கூசுக்கு ஓடினேன். அம்மாச்சி உக்காந்துகிட்டு இங்க என்னடி பண்ணுற போடி போய் டீவி பொட்டிய பாரேண்டி என்று விரட்டிருச்சு. என் அவசரம் தெரியாம கிழவி கத்துனுனு நானும் திட்டிட்டு போய்ட்டேன். வரும் போது பின் பக்கமா வந்தேனா… எங்க வீட்டை தவிர எல்லா வீட்டுலயும் சத்தமா இருந்துச்சு. என் காதே கூசி போச்சு” பொய்யாய் வெக்கப்பட்டு நடித்தாள் சாருமதி.
“அடிப்பாவி கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாம சொல்லுற” வான்மதி அவளை அடிக்க கையோங்க
“நான் என்ன எட்டியா பார்த்தேன்.” கழுத்தை நொடித்தாள் இவள்.
“நீ பண்ணினாலும் பண்ணுவடி. உன்ன நம்ப முடியாது” வான்மதிக்கு தோழியின் செய்கையை நினைத்து சிரிப்பாக இருந்தாலும், தங்கள் சனத்தை நினைத்து கவலையாகத்தான் இருந்தது.
“அடியேய் சொல்ல வந்தத சொல்ல விடேன்டி. எதை எதையோ பேசி என் உசுர வாங்குறியே” சாரு தோழியை கடிய
“சரிடி சொல்லுடி” என்றவாறே பூக்களுக்கு தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தாள் வான்மதி.
ஓனரம்மா வெளியே வரவும் இருவரும் அமைதியாக அவர் கொண்டு வந்த ரோஜா மலர்செண்டை சாருவின் கையில் கொடுத்து அதற்கு தண்ணீர் தெளித்து வைக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்றார்.
“நான் பேசும் போதுதான் எல்லாரும் டிஸ்டப் பண்ணுறாங்கப்பா” சாரு முணுமுணுக்க 
“வேலைய பாருடி…” வான்மதி கிண்டலடித்தாலும்,
சாருவும் அவளுக்கு முதுகு காட்டியவாறு மற்ற பெஞ்சுக்கு தண்ணீர் தெளித்தவாறே “முத்து புது போன் வாங்கி இருக்கான். அதுல படம் டவ்ன்லோட் பண்ணி பார்க்கலாம்னு சொன்னான். அதைத்தான் சொன்னேன். நீயும் எங்க வீட்டுக்கு வந்துடு. சேர்ந்து பார்க்கலாம்” என்றாள் இவள்.
“என்னது? முத்து கூட சேர்ந்து படம் பார்க்கவா? எங்கம்மா என் தோல உரிக்கும். அது மட்டுமில்ல அவன் பார்வையே சரியில்ல” தோழி முணுமுணுக்க, அது சாருவின் காதில் சரியாகத்தான் விழுந்தது.
“அட இது பாரேன். எனக்கு தெரியாம இங்க ஒரு காதல் ட்ராக் ஓடிக்கிட்டு இருக்கு. இதுக்குதான் பயபுள்ள படம் பார்க்கலாம். நீ யாரை வேணாலும் கூப்பிடுன்னு அத்தனை தடவ சொன்னானா? இருக்கு அவனுக்கு” பொருமினாள் சாரு.
“நான் தான் உனக்கு இருக்குற ஒரே பிரெண்டுனு அவனுக்கு தெரியாதா? நீ என்ன மட்டும்தான் கூப்டுவானும் அவனுக்கு தெரியும். அப்பொறம் என்ன?” வான்மதி சிரிக்க, சாரு முறைத்தாள்.
“முறைச்சது போதும். அங்க பாரு ஓனர் அம்மா நம்மள முறைக்குறாங்க” வான்மதி சொல்ல, அவரை பார்த்து இளித்த சாரு வேலையில் மும்முரம் காட்டலானாள்.
வயதான அந்த பெண்மணியோ திட்டுவதெல்லாம் இல்லை. இந்த நேரத்தில் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று வேலை செய்பவர். வேலையை பார்க்காமல் அரட்டை அடித்தால் வேலையை விட்டு தூக்கி விடுவாரோ என்ற அச்சம்தான். பெரிதாக சம்பளம் இல்லையென்றாலும் பெண் பிள்ளைகள் என்று ஐந்து மணிவரை கடையில் வைத்துக்கொள்ளாமல் நான்கு முப்பதற்கே இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார். இப்படிப்பட்ட ஓனரம்மா கிடைக்க மாட்டாரே. அந்த ஒரே காரணம் தான் சாருவும், வான்மதியும் வேறு வேலை தேடாமல் இருப்பதற்கு காரணம். அது மட்டுமா அவர் இவளுக்கு செய்த உதவியை போல் வேறு யாராவது செய்யவும் மாட்டார்கள்.
பூக்களுக்கு தண்ணீர் தெளித்தவர்கள் உள்ளே செல்ல முற்பட பதினாறு வயது இருக்கும் ஒரு வாலிபன் ஒருவன் ஓடிவந்து ரோஜா பூங்கோத்தை தூக்கிக் கொண்டு ஓட. வான்மதி  அதிர்ச்சியில் கத்த ஆரம்பிக்க, சுதாரித்த சாரு அவனை விரட்டிப் பிடிக்க, அவன் பின்னால் ஓடினாள்.
 வகைவகையான ரோஜாக்கள் இருந்தாலும், பெரிய சிவப்பு ரோஜா விலை உயர்ந்தது. ஒரு ரோஜா இலங்கை ரூபாவின் மதிப்பின்படி அறுநூறு ரூபாலிருந்து எட்டுநூறு ரூபாவரைக்கும் செல்லும்.
நேற்று ஒரு வெளிநாட்டுக்காரர் பத்து ரோஜாக்களை கொண்ட பூஞ்சண்டை செய்து கொடுக்கும்படி முன்பணம் கொடுத்துவிட்டு சென்றிருக்க, ஓனர் அம்மா அதைதான் செய்து தண்ணீர் தெளித்து வைக்கும்படி சாருவிடம் கொடுத்திருந்தார்.
கைதேர்ந்த திருடனாக இருப்பான் போலும், சரியாக அதையே நோட்டம் விட்டு தூக்கி இருந்தான். பத்து மணியாகும் பொழுது அந்த வெளிநாட்டவர் வேறு வந்து விடுவாரே. சரியான நேரத்துக்கு கொடுக்க முடியாமல் போனால் வேறு கடையை பார்த்து போய் விடுவார்கள். அது மட்டுமா?  சாருவுக்கு பக்கென்று இருந்தது. அவளது கவனக் குறைவால்தானே திருடு போனது. தனது சம்பள பணம் மொத்தமாக போய் விடுமே என்றுதான் அவள் அவன் பின்னால் ஓடியதற்கு காரணம்.
அவனோ சந்து பொந்தெல்லாம் புகுந்து ஓடிக்கொண்டிருக்க, சாருவும் அவன் டீஷர்ட்டின் கலரை வைத்தே பின் தொடர்ந்தாள்.
ஒரு வளைவில் அவனை நெருங்கியவள் அவனை தடுக்க குனிந்து கல்லை பொருக்கி வீசி எறிய அவனோ வளைவில் மறைய, வளைவில் வந்து கொண்டிருந்த பென்ஸ் கார் கண்ணாடியில் கல்லு பட்டு தெறிக்க, “அய்யோ” என்று அவள் கத்தவும், கார் அவள் முன்னால் பிரேக் போட்டு நிறுத்தவும் சரியாக இருந்தது.
காரிலிருந்து இறங்கியவனோ இவளை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் லஹிரு துஷார வீரசிங்க.

Advertisement