அன்று காலை வெற்றி எழுந்தபோதே கையில் சிறிய பெட்டியுடன் கிளம்பித் தயாராக நின்றிருந்தாள் அவன் மனைவி. அவ்வளவு நேரமும் அவன் எழுவதற்காகத்தான் காத்திருந்தாள் போலும், அவன் அறையைவிட்டு வெளியில் வந்ததுமே அவளும் வந்திருந்தாள்.
அவன் கேள்வியாய் ஏறிட, “கேரளா போறேன். கொஞ்சநாள் இருந்துட்டு வரேன்” என்றாள்.
“இங்கிருந்தா எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும். ப்ளீஸ்..” என்றவளின் குரல் உடைந்து வரத் தானாக அவன் கை விலகியது.
முதல் படிக்கட்டில் இறங்கியவள் நின்று திரும்பினாள், “நீங்க தூக்கி வச்சிக் கொஞ்சுறீங்களே உங்க செல்ல மகள், அவ எனக்கு உயிர். அவளுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்கோங்க, இல்லைன்னா உங்க உயிரும் திரும்பி வரமாட்டேன்!” என்று விறுவிறுவெனப் படி இறங்கியவள், கீழேச் சென்று தாயிடம் ஒரு தலையசைப்புடன் காத்திருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.
“என்னடி! உனக்கு வர இவ்ளோ நேரமா? ஃபங்ஷனே முடியப்போகுது.” போலியாய் கோபித்துக் கொண்டாள் அவளது தோழி ரம்யா.
அவளது கன்னத்தில் சந்தனத்தை அள்ளிப் பூசிய அம்மு எழிலரசி, “நானாவது வந்தேன். நீ என் கல்யாணத்துக்கு வரவே இல்ல. நீ பேசாதடி!” என்றாள்.
நிறைமாத வயிற்றுடன், கன்னத்தில் பூசிய சந்தனம் தனி அழகைத் தர, முகமெங்கும் பொங்கிய பூரிப்புடன் இருந்த ரம்யாவின் முகம் தோழியின் கூற்றில் சற்றே வாடிற்று.
அதைக்கண்டதும் அம்முவுக்கும் என்னவோபோல் ஆனது. நல்லநாளும் அதுவுமாக வாட வைத்துவிட்டதில், “விடுறீ! மாப்பிள்ளை வெற்றியா இல்லாம இருந்திருந்தா நீ வந்துருப்பன்னு தெரியும். உனக்குதான் தெரியுமே! அவரைத் தவிர யாரையும் என்னால… முடியாதுடி.” கடைசிவரிச் சொல்லும்போது குரல் உடைந்து கண்கள் கலங்கப் பார்க்க,
“அம்மு!” என்று ஆதுரமாய் அழைத்த ரம்யா, இருக்கையில் இருந்தபடியே ஆலம் சுற்றிக் கொண்டிருந்தவளின் கழுத்தோடு அணைத்துக் கொண்டாள்.
அதன்பிறகு உணவின்போதும் சரி, தோழிகள் கும்பலாக அமர்ந்து பேசிச் சிரிக்கும்போதும் சரி அம்முவின் முகம் மற்றும் தெளிவே இல்லாமல் வாடிக்கிடப்பதைக் கண்ட ரம்யா ஒரு முடிவுடன் எழுந்தாள்.
அவளை மட்டும் கைப்பிடித்து தனது அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்றவளை அம்மு புரியாமல் பார்க்க, “பேசாம வாடி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றதும் அவள் இழுத்த இழுப்புக்குள் சென்றாள்.
“என்ன தப்பு செஞ்ச நீ? அவர் ஏன் நம்மை மன்னிக்கனும்?” என்றதுமே ரம்யாவின் விழிகள் வியப்பில் விரிந்து கொண்டது.
“வெற்றி சார் உன்கிட்ட உண்மை எதையும் சொல்லலியா? கல்யாணம் பண்ணினதும் சொல்லி இருப்பார்னுல்ல நினைச்சேன்.” என்றாள் ஆச்சர்யம் விலகாமல்.
“என்ன உண்மை?” என்று அவள் கேட்டு முடிக்கும்முன், தாளிடாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் ரம்யாவின் தங்கை நிஷா.
நிஷாவின் பின்னாடியே, அவளது கரம்பற்றி வந்து நின்ற விஜயைக் கண்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டிருந்தாள் அம்மு.
கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருந்தான் விஜயும். நண்பன் வற்புறுத்தி அழைத்தும், அம்மு தான் வருவதை விரும்ப மாட்டாள் என்றெண்ணி வெற்றியின் திருமணத்திற்குக் கூட வர மறுத்து விட்டவன் அவன்.
‘இதை நான் கண்டு விடக்கூடாதென்றுதான் வரவிடாமல் கணவன் அவ்வளவு தடுத்தானா?’
அவர்கள் இருவரது பிணைந்திருந்தக் கைகளை நம்ப முடியாமல் பார்த்தவள் தோழியின் பக்கம் திரும்ப, ரம்யாவின் முகம் அம்முவை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தது.
“அச்சோ, சாரிக்கா! நீங்க இங்க இருக்கிறது தெரியாமல் இவரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.” என்று அவசரமாக மன்னிப்புக் கேட்ட நிஷா, “ஐ அம்முக்கா நீங்க எப்போ வந்தீங்க?” என்றாள் அப்போதுதான் அவளைக் கவனித்து.
“அம்முக்கா, இவர்தான் நான் கட்டிக்கப்போறவர்” என்று விஜயைக் காட்டி அறிமுகப்படுத்த, அம்முவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
“நான் ஒரு லூசு. பாருங்களேன் இவர்தானே உங்களுக்கு ஐபிஎஸ் பயிற்சிக் குடுத்தவர்? அவரையே உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்று மெல்லமாய் தன் தலையில் தட்டிக் கொண்டாள்.
“அக்கா இங்கதான இருப்பீங்க? கொஞ்ச நேரத்துல வந்திடுவோம் ப்ளீஸ்க்கா…” என்று அம்முவிடம் அனுமதி போலச் சொல்லிவிட்டு, “வாங்க நாம மொட்டை மாடிக்குப் போகலாம்!” என்று சிலையாக நின்ற விஜயை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அவர்கள் சென்றதும், “என்னடி நடக்குது? நிஷா எப்படி அவனோட…? ப்ச்! அவனைப் பத்தி தெரிஞ்சும் நிஷாட்ட ஒன்னும் சொல்லலியா நீ?” என்று கோபமும், அதிர்ச்சியுமாகக் கேட்டவளை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் தலைக் கவிழ்ந்தாள் ரம்யா.
அவள் கண்கள் தாரை தாரையாக நீரை வடிக்க, “நீ ஏன்டி அழுவுற? உன்னால சொல்ல முடியலைன்னா சொல்லு, நிஷாட்ட நான் பேசுறேன்” என்று வெளியேற முயன்ற அம்முவின் கைகளை, ரம்யா பற்றிக் கொண்டாள்.
“அவளுக்கு எல்லாம் தெரியும்” என்றாள் மெல்லியக் குரலில்.
அம்மு அதிர்ந்து விழிக்க
“என்னை மன்னிச்சிருடி!” என்றாள் ரம்யா யாசிப்பாக.
“அன்னைக்கு பயிற்சியின் போது அடிபட்டுக் கீழ விழுந்ததாலத்தான் விஜய்சார் என்னைத் தூக்கிக்கொண்டு ஓடினது. வலி தாங்காமத்தான் நான் அவரோட சட்டையைப் பிடிச்சி இழுத்தேன்.
நீ அதைப் பார்த்துட்டு அறைக்குள்ள ஓடி வந்து பார்த்தப்பவும். அவர் என் காலுக்குப் போட்ட மருந்தோட எரிச்சல் தாங்காமத்தான் அவரை நான் தள்ளி விட்டதும்” என்றதும் அம்மு எழிலரசி விக்கித்து நின்றாள்.
“அப்புறம் ஏன்டி கோர்ட்ல அப்படி ஒரு பொய் சொன்ன? அதைப் பார்த்ததுக்கு சாட்சியா என்னையும் வேற சாட்சிக் கூண்டில நிறுத்தின?” என்றவளின் குரல் கடினப்பட்டு ஒலிக்க ரம்யாவின் வயிற்றுக்குள் குளிர் பரவியது.
இதற்குதானே அவள் பயந்தது. “என்னை மன்னிச்சுருடி அம்மு! என்னை வெறுத்துடாதடி ப்ளீஸ்..” என்றவள் அம்முவின் கைகளைப் பற்றிக்கொண்டு கதறினாள்.
அழுகையினுடு கட்டிலிலிருந்து தடுமாறியவளைத் தாங்கிப்பிடித்து தூக்கி நிறுத்திய அம்முவின் கண்கள் இரத்தமெனச் சிவந்திருந்தது.
“இங்கப் பாரு!” என்ற ரம்யா தனது அலைபேசியை எடுத்து சில புகைப்படங்ககளைக் காண்பித்தாள்.
அதில் விஜயின் முன்னாள் மனைவியும் இன்னொருவனும் மிக மிக நெருக்கமாக, கன்னத்தோடு கன்னம் உரசி, ஒரேபோல் நாக்கை வெளியில் நீட்டியபடி ஒரு ஷெல்ஃபி. இடுப்போடு கைக்கோர்த்துக் கொண்டு அலைகளின் நடுவே நிற்பதுபோல், ஒரே குடைக்குள் அமர்ந்தபடி ஒருவர்கால்மேல் ஒருவர் காலைப் போட்டபடி காதலாகக் கசிந்துருகி என்று பல புகைப்படங்கள் இருந்தன.
“இதெல்லாம்தான் வெற்றி சார் எடுத்த ஃபோட்டோ. இதுக்காகத்தானே நீ அவர்கிட்ட கோவிச்சிட்டு இருக்க” என்ற ரம்யா,
“அவ என்னை நல்லா ஏமாத்திட்டா டி” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
தோழியின் அழுகை கொஞ்சமும் அம்முவை கரைக்கவில்லை. அவள் உடைய உடைய இவள் கல்லாக இறுகிக் கொண்டிருந்தாள்.
விஜய் தன்னிடம் அத்து மீற முயன்றான் என்ற தோழியின் பொய்யையே இன்னமும் அவளால் ஜீரணிக்க முடியாமல் இருக்க, அடுத்த அடுத்த இடியாய் அம்முவின் தலையில் இறக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா. அவள் கண்களில், இருட்டில் கதறியபடி தோளில் அடிக்க அடிக்க ரம்யாவை விஜய் தூக்கிச் சென்றக் காட்சி விரிந்தது.
அவர்கள் பயிற்சியின்போதே விஜய்க்கு அவனது அத்தை மகளுடன் திருமணம் நடந்திருந்தது. அதே வளாகத்தின் உள்ளே ஒதுக்கப்பட்ட (குவாட்ரஸ்) வீட்டில்தான் அவன் தனது புதுக்குடித்தனத்தை ஆரம்பித்திருந்தான். அவ்வப்போது பயிற்சி எடுக்கும் மாணவிகள் அவனது மனைவி அனிதாவுடன் பேசுவது வழக்கம். அதில் ரம்யாவும் அனிதாவும் நன்றாக நெருங்கி விட்டிருந்தனர்.
அனிதாவும் விஜயுடன் நன்றாகத்தான் இருந்தாள், அவளது விட்டுச்சென்ற காதலன் திரும்பி வரும் வரை. அவன் வெளிநாடு சென்ற வேளையில் அவசரம் அவசரமாகக் கூடப்பிறந்த தங்கையிடம் பாசத்தைக் காட்டி விஜயை வளைத்துப் போட்டுவிட்டார் அனிதாவின் தந்தை.
நாடு திரும்பியவன் அனிதாவை சந்தித்துக் கண்ணீர் வடிக்க, அவள் கொஞ்சம் கொஞ்சமாக விஜயிடமிருந்து விலக ஆரம்பித்தாள். விஜய்க்குத் தெரியாமல் அவ்வப்போது காதலனைச் சந்தித்து ஆறுதல் சொல்ல என்று ஆரம்பித்தது, இறுதியில் அது கள்ளக்காதலில் முடிய, இருவரின் திருட்டுத்தனம் தொடர்ந்தது.
விஜயை தொட அனுமதிக்காமல் இருக்க நித்தம் ஒரு போராட்டம் நடத்தி அவனுடன் சண்டைப் பிடித்தாள் அனிதா. அந்த மாதிரி நேரங்களில் அனிதாவின் அழுதுச் சிவந்தக் கண்களை ரம்யா அவ்வப்போது கண்டிருக்கிறாள்.
ரம்யா அடிபட்டுக் கீழே விழுந்ததையும் கணவன் தூக்கிக்கொண்டு ஓடியதையும் அனிதாவும் கண்டிருந்தாள். அது குடியிருப்புப் பகுதியின் ஒதுக்குப்புறமானப் பகுதி என்பதால் அங்கு சிசிடிவி கேமரா கிடையாது. இரவுநேரம் தோழிகளுடன் பந்தயம் கட்டி தனியாகப் பயிற்சி செய்கிறேன் என்று வந்த ரம்யா அங்கிருந்த ஆலமரத்தின் வேரைப் பிடித்துத் ஏற, தவறிக் கீழே விழவும், மோசமாக காலில் அடிபட்டிருந்தது.
வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த விஜய் ஓடி வந்து தூக்கிக்கொண்டு முதலுதவி அறையை நோக்கி ஓட, அப்போதுதான் தோழியைத் தேடிக்கொண்டு வந்திருந்த அம்மு அந்தக் காட்சியைக் கண்டிருந்தாள். அப்போதும் பின்னால் ஓட, முதலுதவி அறையிலும் விஜயைப் பிடித்து தள்ளிவிட்ட ரம்யா அடுத்து மயங்கி இருந்தாள். அதில் தோழியிடம் முழு விளக்கம் கேட்கும் முன்னரே தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருந்தாள் விஜயின் மனைவி.
விஜயை நிரந்தரமாகப் பிரிய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவளுக்கு அற்புதமான வாய்ப்பாய் அது அமைந்து போக, தனக்குத்தானே காலில் சூடு போட்டுக் கொண்டவள், ரம்யாவிடம் விஜய் செக்ஸ் டார்ச்சர் செய்து கொடுமைப் படுத்துவதாகக் கண்ணீர் வடித்தாள்.
ரம்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டு, “நீ நினைச்சா இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற முடியும் ரம்யா. அப்பா, அம்மா நெருங்கிய சொந்தம்ங்கிறதால இவனைப்பற்றி நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்றாங்கடீ. ப்ளீஸ்… ஹெல்ப் பண்ணு. இல்ல கூடிய சீக்கிரம் இவன் டார்ச்சர் தாங்காம நான் செத்துருவேன்.” என்று கெஞ்சிக் கதற, ஒத்த வயதினுடையவள் கதறுவதைத் தாங்க முடியாமல், அவ்வப்போது அனிதாவின் அழுதுச் சிவந்த கண்களைக் கண்டிருந்ததில் உண்மையென்று நம்பி, அனிதாவின் மோசமான திட்டத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தாள்.
“அவ சொன்னதை உண்மைன்னு நம்பிதான்டி நான் விஜய்சார் மேல அன்னைக்கு பொய்க் கம்ப்ளைண்ட் குடுத்தேன்” என்றதும் பளார் என்று அறை விழ விக்கித்து நின்றாள் ரம்யா.
“மாசமா இருக்கிறதால இதோட விடுறேன். இதுக்கும் மேல என் மூஞ்சிலயே முழிக்காத! உன்னை நம்பி அவரோட உயிர் நண்பனுக்கு எதிரா என்னையவே சாட்சி சொல்ல வச்சிட்டீல்ல? என்றவள் ரம்யாவைத் திரும்பியும் பாராமல் விறுவிறு என நடக்க, ஓடி வந்து அவளது கையை இறுகப் பற்றி அவள் திமிற திமிற இழுத்து அணைத்துக் கொண்டாள் ரம்யா.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழ, “உண்மையைச் சொன்னா என்னை வெறுத்திடுவியோன்னு ரொம்ப பயந்துட்டேன் டி. கூடப்பிறந்த தங்கச்சிக்கிட்டயே பேசாதவ எங்கிட்ட பேசுவியான்னு ரொம்பவே பயந்தேன்.
அப்பவும் வெற்றி சார்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா என்னை வெற்றி சார்தான் தடுத்திட்டார்” என்றதும் தோழியைப் பிரித்து அவளது முகம் பார்த்தாள் எழிலரசி.
“தன் நண்பனைக் காப்பாற்ற, வெற்றி சார் அனிதா பின்னாடிச் சுத்தி தவறா போட்டோ எடுத்து பொய்யா சாட்சியத்தை உருவாக்கிட்டார்ங்கிறது தானே உன் கோபம்.” என்றதும் நனைந்த விழிகளுடன் அம்மு ஏறிட்டாள்.
“அப்போ அவர் அப்படி செஞ்சிருக்கலன்னா ஒரு மோசக்காரியோட குற்றச்சாட்டுக்கு விஜய்சார் கஷ்டப்பட்டு படிச்சி வாங்கின ஐபிஎஸ் பதவி பறி போயிருக்கும்.
அதோட கேஸ் நடந்தப்பவே இந்த உண்மை எல்லாம் வெற்றி சார் புரியவச்சாலும், என்னைய கோர்ட்ல சொல்ல விடாமத் தடுத்துட்டார். ஏன்னா பொய்யான குற்றச்சாட்டு வச்சதுக்காக என்னோட ஐபிஎஸ் ட்ரைனிங்லருந்து டிஸிப்ளினரி அக்ஷன் எடுத்து என்னை டெர்மினேட் பண்ணியிருப்பாங்க.
அதனாலதான் கீழ விழுந்த அதிர்ச்சியில காப்பாற்றி ட்ரீட்மெண்ட் குடுக்க வந்த விஜய் சாரை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டதா என்னை கோர்ட்ல மாத்திச் சொல்ல வச்சார்.
அதையும் அவர் என்னை மிரட்டிச் செய்ய வச்சதாத்தான் உன்கிட்ட சொல்லச் சொன்னார்” என்றதும் எழிலரசி அதிர்ந்து விழித்தாள்.
“அவ கோபம் என்னோட மட்டும் இருக்கட்டும்மா. அவளுக்கு நெருக்கமானவங்க தப்பு செஞ்சா அவ மன்னிக்கமாட்டா. அந்த துயரம் என்னோடயே போகட்டும்னார். அதோட மன்னிக்கலன்னாலும் ஒருநாளும் அவளால என்னை வெறுக்க முடியாதுன்னும் சொன்னார்டி” என்றவள் தோழியின் நாடிப் பற்றினாள்.
“அவர் ரொம்ப நல்லவர்டி. உன் வாடிக்கிடந்த முகத்தை பார்த்த பிறகும் என் சுயநலத்துக்காக உன்கிட்ட மறைக்க எனக்கு விருப்பம் இல்ல. உன் நட்பு எனக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட உன் வாழ்க்கை எனக்கு முக்கியம்” என்ற ரம்யாவின் குரல் உடைந்து நீர்த் துளிர்த்தது.
“நீ இதுக்கும்மேல என்கிட்ட பேசாட்டியும் பரவால்ல. ஆனா நடந்த சம்பவத்துல வெற்றி சார்மேல எந்தத் தப்பும் இல்ல.
அன்னைக்கு இந்த போட்டோவெல்லாம்கூட கோர்ட்டில் தவிற அவர் எங்கேயுமே காட்டல. அதனாலதான் நீயோ நானோ இந்த கண்றாவி எல்லாம் அன்னைக்குப் பார்க்கல. ஒரு பொண்ணோட வாழ்க்கையைத் தேவை இல்லாத இடத்தில தவறா சித்தரிக்க அவரும் விரும்பல.
ஆனா அந்த அனிதா பேய் அதையும் அவளுக்கு சாதகமாக்கி விஜய்சார் வேணும்னே அவ மேல பழி போடுறதாவும், அதுக்கு வேணும்னே ஒருத்தனை தன்மேல விழவச்சி வெற்றிசார் அசிங்கமான நிலையில தன்னை போட்டோ எடுத்ததாவும் நம்மகிட்ட வந்து நடிச்சா. அவ கையில விசத்தை வச்சிட்டு நாடகம் ஆடவும் நாமளும் நம்பிட்டோம்டி.
இப்போகூட இந்த போட்டோல்லாம், நிஷா கிட்ட விஜய்சார் காமிச்சது. என்னைக்கா இருந்தாலும் உன்கிட்ட உண்மையைச் சொல்லிடணும்னு அவபோன்லருந்து எனக்கு நானே அனுப்பிக்கிட்டேன்.” என்றவள், “ இதோ இதையும் பார்” என்று அனிதாவின் இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்துக் காண்பித்தாள்.
அதில் முன்னால் காதலனை மீண்டும் திருமணம் செய்த புகைப்படத்தைப் பதிவு செய்து இருந்தாள் அனிதா. இவ அப்பா அம்மா கோர்ட் வரைக்கும் விஜய்சார இழுத்ததால, இவ சொன்னக் கதையைத்தான் நம்பிக்கிட்டாங்க. விஜய் சார நம்பல. இந்த போட்டோஸ்லாம் காமிச்சிருந்தா நம்பி இருப்பாங்களா இருக்கும். ஆனா விஜய் சார் அதை விரும்பல, வாழ்ந்துட்டுப் போகட்டும்னு டைவர்ஸ் குடுத்துட்டார்.
நிஷாக்கு எப்படி உண்மையெல்லாம்? என்ற தோழியின் கேள்வியை அவள் அதிர்ந்த பார்வையில் புரிந்து கொண்டவள், “என்னால அந்த குற்ற உணர்ச்சியில இருந்து வெளில வரவே முடியலடி. உன்கிட்ட நிம்மதியா பேசவும் முடியல. அதான் கொஞ்சநாளா உன்கிட்ட பேசாம விலகி இருந்தேன்” என்றவள் வழிந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,
“ஒத்துக்கவே மாட்டேன்னு ஒத்தைக்காலில் நின்ன விஜய்சார வம்படியா காதலிச்சி இப்போ கல்யாணத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கா. அடுத்த மாசம் அவங்க இரண்டுபேருக்கும் கல்யாணம் டி” என்ற ரம்யாவின் முகத்தில் சந்தோஷம் மீண்டிருந்தது.
“என்னாலதான் அவர் வாழ்க்கை அழிஞ்சிட்டோன்னு இருந்த என் குற்ற உணர்ச்சியை நிஷா சுத்தமா தொடைச்சி எறிஞ்சிட்டா. அப்பா அம்மாக்கு இரண்டாம் தாரமான்னு முதல் விருப்பம் இல்ல. ஆனா அவங்களையும் எப்படியோ நாங்க இரண்டுபேரும் பேசிப் பேசியே ஒத்துக்க வச்சிட்டோம்” என்றாள் புன்னகைத்து.
அனைத்தையும் கேட்டு முடித்த அம்மு, “நான் வரேன்டி” என்று விடைபெற, “நிச்சயமா வருவியா? என்றாள் சந்தேகத்துடன். ரம்யாவின் கண்களில் பயமும் ஏக்கமும் விரவிக் கிடந்தது.
தோழியை ஒருமுறை அணைத்து விடுவித்த அம்மு, “கோபம் இருக்கு. இல்லன்னு சொல்ல மாட்டேன். உன் வயித்துல ஜூனியர்க்காக உன்னை விடறேன். அதோட என்னோட இந்தக் குணத்தால நிறைய இழந்துட்டேன்டி. இனிமேலும் இழக்க என்கிட்ட தெம்பில்ல” என்றவள் விறுவிறுவென நடந்தது மொட்டை மாடிக்குத்தான்.
“நீ என்னை அண்ணான்னு சொன்னதே போதும்மா. உன்னைப்பற்றி வெற்றி நிறையச் சொல்லி இருக்கான். சூழ்நிலை அப்படி அமைஞ்சி போச்சி. நீ என்ன தப்புப் பண்ணின? கண்ணால கண்டதைத்தானே கோர்ட்டில் சாட்சியா சொன்ன. இதுல உன்மேல என்ன தப்பு இருக்கு?” என்றதும்,
“இருந்தாலும் சாரி ண்ணா. நீங்க என்னை காலேஜ்ல பார்க்க வந்தப்பவும் பொண்ணுங்களை வம்பிழுத்த நினைவில ரம்யா சொன்னதை நம்பிட்டேன்” என்றாள் உளமாற உணர்ந்து.
“அதையும் வெற்றி சொன்னான் மா. விடு எல்லாம் நேரம்” என்றவனும்
“முடிஞ்சா எனக்காக என் நண்பனை மன்னிச்சுரும்மா” என்றதும் வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
“எல்லாத்தையும் என்கிட்ட மறைச்சிருக்கார். நான் போய் அடிக்கிற அடியில உங்ககிட்டத்தான் வந்து விழுவார். ஒத்தடம் குடுத்து அனுப்பி வைங்க ண்ணா” என்று கன்னத்தில் வழிந்துவிட்ட சந்தோஷக் கண்ணீருடன் சிரித்தவளை, விஜய் போலியாய் முறைக்க,
“அம்முக்கா! அப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னா இந்த பத்திரமாத்துத் தங்கம் எனக்குக் கிடைச்சிருக்குமா சொல்லுங்க! ஒரு கிஸ்ஸுக்கு ஒரு மணி நேராமா போராடுறேன். கல்யாணத்துக்கு முன்னாடி குடுக்க மாட்டாராம்” என்ற நிஷா எம்பி விஜய்யின் கன்னத்தில் முத்தம் பதிக்க அங்கிருந்து ஓடியே வந்திருந்தாள் எழிலரசி.
அதேநேரத்தில் அவளைத் தூக்குவதற்கானத் திட்டமும் தயாராகிக் கொண்டிருந்தது.
(மக்களே! மண்டை ரொம்பச் சூடாகிப் போய்க் கிடக்கேன். கொஞ்சம் பிரேக் வேணும் ப்ளீஸ்… திங்கட்கிழமைதான் அடுத்த யூடி வரும். அடுத்த வாரத்தில் கதையும் முடிந்துவிடும். புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்… நிம்மி)