Advertisement

வயது – 7

வருடங்களே  கண்மூடி கண் திறப்பதற்குள் ஓடுகின்றது,மாதங்கள் ஓடாதா அதிலும்  நாட்கள் இறக்கை கட்டியல்லவா  பறக்கின்றது.அதோ இதோ என்று இன்னும் ஐந்து நாட்கள் என்ற நிலையை எய்தியது செழியன் – ஆராதனா கல்யாண வைபோகம்.

நாட்கள்தான் அவனை நெருங்கி கொண்டு வந்தது,அதற்கு நேர்மாறாக அவனும் அவன் மனமும் அனைவரிடம் இருந்தும் தன்னை தூர படுத்திக் கொண்டது.

அனைத்தையும்  அனுராதாவும் அவரின் குடும்பமும் தான் பார்த்துக் கொள்வது.எப்போது செழியன் திருமணத்துக்கு சம்மதம் (?!) சொல்லி நாள் குறிக்கப்பட்டதோ  அப்போதிலிருந்தே அவர் ரெக்கை கட்டி பறக்கும் பட்டாம் பூச்சி போல் ஆகிவிட்டார்.தன் வயதை மறந்து ஓடத் தொடங்கி விட்டார்.

திவாகருக்கு அந்த ஜோசியர் சொன்னதில் கொஞ்சம் குழம்பி இருந்தாலும் பின் தன்னை தெளிவு படுத்திக் கொண்டார்.இதை சொல்வதால் என்ன நடக்கப்போகிறது வீண் மனக் கஷ்டம் தான். இப்பொழுது தான் தங்கள் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு நடக்க இருக்கும் சமயம் இதை சொல்லி அதை கெடுக்க அவருக்கு விருப்பமில்லை.மேலும் தாங்கள் யாருக்கும் கெடுதல்  செய்யவில்லை,நினைக்கவில்லை என்ற போது தங்களுக்கு அது போல் நடக்காது என்று நம்பினார்.

ஏனோ எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தாலும் செழியன் எதையும் கண்டும் காணாமல்,எதிலும் ஒட்டி கொள்ளாமல் இருப்பது சற்று நெருடலாக அனுராதாவிற்கு  இருந்தது.அதை அவர் நினைக்கும் போதெல்லாம் திவாகர் தான் ” என்று கூறி தேற்றினார்.

 சென்னையில் பெரும் மண்டபத்தை பிடித்ததில் இருந்து போட்டோகிராபர்,கேட்டரிங்,டெக்கரேஷன் மேளம் தாளம் என்று அனைத்தையும் திவகார் மற்றும் அரவிந்த்  பொறுப்பேற்று செய்ய அனுராதா  மேற்பார்வை மட்டும் செய்தார்.அவருக்கு பத்திரிக்கை தேர்வு செய்வதில் இருந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதிலும் நேரில் சென்று கொடுப்பதிலும் என்று தேதி குறித்த நாளில் இருந்து இன்று வரை பம்பரமாக தான் சுற்றினார்.

கை நிறைய பைகளுடன் முகத்தில் களைப்பையும் மீறிய சந்தோஷத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்  அனிஷா.வீட்டிற்குள் நுழைந்தவுடன் நடு ஹாலில் நின்று அனைவரையும் வர சொல்லி ஏலம் போட்டாள்.அவள் போட்ட காட்டு கத்தலில் தன் காதை பொத்திக் கொண்டு வந்தார் அனுராதா.

“ஏன்டி இப்படி கத்துற?! என்ன விஷயம்?!” என்று கேட்டார் கல்யாணத்திற்கு எடுத்து வைத்திருந்த நகைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த வேளை தடைபட்டு விட்டதே என்று கோபத்துடன்.

“உன்னை மாதிரி எல்லாரும் வேட்டியா இருப்பாங்கன்னு நினைச்சியா” என்று கேட்டபடி வந்தான் அனிஷாவின் அண்ணன் அரவிந்த்.

“வேலையை பற்றி நீ சொல்லுறியா ?! போடா தடியா” என்று பதிலுக்கு அவள் சீற 

“ஹேய்!!! குட்டச்சி நீ அடங்கு… இப்போதான் அம்மா விட்டுப்போன எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்து வந்தாங்க…நானும்,அப்பாவும் சில விஐபி க்கு பத்திரிக்கை கொடுத்து ப்ரொடெக்க்ஷன் பத்தி பேசிட்டு  வந்தோம்”

 “அப்பா எல்லாம் பண்ணி இருப்பாரு…நீ சும்மா அவருக்கு குடை பிடிக்க போய் இருப்ப அதுக்கு  இவ்வளவு சீனா…”

“அடிங்கக….” என்று அவளை அடிக்க அரவிந்த் முற்படும் போதே  அவர்களின் தந்தை அங்கு பிரசன்னமானார்.

” டேய்!!! என்னடா என்னோட அனி  குட்டியோட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க” என்று திவாகர் கேட்க 

“கரெக்டா வந்துட்டாரு அவர் செல்ல பொண்ணுக்கு சொம்பு தூக்க” என்று முனகினான்  

“என்னடா சொன்ன? வாய்க்குள்ளே முனகிக்குற?!”

” ஒன்னும் இல்ல சார்!!!” என்று அவரின் ஜூனியராக பம்மினான்.

“போதும்டா …இந்த நடிப்பெல்லாம் கோர்ட்லயும் ஆபீஸ்லயும் வச்சுக்கோ” என்று அவனை வார  அதில் மகிழ்ந்து போன அனிஷா தன் தந்தையுடன் hi-fi கொடுத்து கொண்டாள்.

“ஐயோ…எல்லாரும் அமைதியா இருக்கீங்களா? உங்க அரட்டை கச்சேரியை எல்லாம் போதும்…எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு.ஏன்டி இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னு சொல்ல போறியா?இல்லையா?”

“அதானா எதுக்கு கூப்பிட்ட?!” என்று அரவிந்த் வினவ 

“வெயிட் வெயிட்…எல்லாரும் வந்துட்டீங்க ஆனா முக்கியமான ஆள் இன்னும் வரல…மாம்ஸ் எங்கமா”

” உன்னை எல்லாம் மதிச்சு வரணுமானு நினைச்சுட்டு விவரமா மேல ரூமிலே இருக்காரு போல”

“நீ மூடுடா தடியா” என்று முறைப்புடன் கூறிவிட்டு மாடி அறையை நோக்கி “மாமா கீழ வாங்க சீக்கிரம்” என்று கரடியாக கத்த தொடங்கினாள்.

 கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம்  என்ற நிலை இருக்கும் போதே அனுராதா  வற்புறுத்தி தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லிவிட்டார்.கல்யாணத்தை வைத்துக்கொண்டு அவன் 

தனியாக இருப்பது சரியானதாக தோன்றவில்லை.

அதிலும் இன்றிலிருந்து அடிக்கடி வெளியே செல்லக்கூடாது.அலுவலக வேலையை  வீட்டிலிருந்தே செய்யுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார்.

தமக்கைக்காக திருமணத்திற்கு சம்மதம் சொன்னவன் இதற்கு ஒன்றும் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை.அனைத்திற்கும் உடன்பட்டான்.

அனிஷாவின் கத்தலின் பலனாக அவன் கீழே இறங்கி வர,அவன் கையை பிடித்து இழுத்தவாறே ஹாலின் நடுவில் கொண்டு வந்து சேர்த்தாள்.

பின் அனைவரையும் பார்த்தபடி “எல்லோரும் உங்க வேலையை சொன்னீங்களே…ஆனா ஒன்னு மறந்துட்டீங்க…நான் தான் இந்த கல்யாணத்தில் மெயின் காண்ட்ரிபியூஷன் கொடுத்து இருக்கேன்.நான் இல்லன்னா கல்யாணமே ரொம்ப கஷ்டம் ” என்று சட்டையில்லாத காலரை தூக்கிவிட்டு அவள் சொல்ல 

அதில் கடுப்பான அரவிந்த் “ஏன் மாம்ஸ் வோட சிப்ப ஒளிச்சு வச்சு இருக்கியா?” என்று நக்கல் சிரிப்புடன் கேட்டான்.

“ஓஹ்…சோ ஃப்ன்னி” என்று கடுப்படித்து விட்டு “பொண்ணு மாப்பிள்ளைக்கு நான் டிரஸ் டிசைன் பண்ணி தரலைனா என்ன பண்ணுவீங்க சார்…ரெண்டு பேரோட ட்ரெஸ்ஸும்  ரெடி அதைத்தான் கொண்டு வந்து இருக்கேன்”

“அடிப்பாவி நீ இதை தான்  முன்னாடியே சொல்லணும்.அதை விட்டுட்டு எல்லாரோடையும் வீண் அரட்டை வேற” என்று அவளின் அம்மா கண்டிக்க

 உடனே தன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு “சொல்லுவ  சொல்லுவ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ எல்லாம் பார்த்து பார்த்து நைட் ஃபுல்லா முழிச்சு இந்த பத்து நாள் வேலையை பார்த்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”

“சரி சரி!!! புலம்பாத எடுத்து எங்களுக்குக் காட்டு” என்று அனுராதா அவளிடம் தழைத்து போக 

தான் கொண்டு வந்த இரண்டு பெரிய கவரில் ஒன்றைத் திறந்து ஆராதனாவிற்கு என்று எடுக்கப்பட்ட திருமண உடையை எடுத்து அனைவருக்கும் காட்டினாள். டார்க்கும் இல்லாத லைட்டும் இல்லாத வகையில் பிங்க் நிறத்தில் வாடாமல்லி நிறத்தில் முந்தானை இருந்தது.புடவை முழுவதும் அன்னப்பறவையும் அரச இலையும்  நிறைந்து காணப்பட்டது.

இதில் அனுஷாவின் கைவண்ணம் புடவையின் முந்தானையை பிங்க்  மற்றும் தங்க நிற நூலால் ராமர்- சீதை கல்யாண வைபோகம் படத்தை நீளவாக்கில் சிறிதாக அதில் செய்திருந்தால் மற்றும் சரிகையின்  ஓரத்தில் செழியன் ஆராதனா பேர் போட்டு  இதயத்தை நடுவில் நெய்திருந்தாள்.மேலும் ஜாக்கெட்டில் முத்து மற்றும் மரகதக் கற்களை வைத்து கை முழுவதும் கொடிபோல படரவிட்டு பின் புறத்தில் ராணியை பல்லக்கில் கூட்டி செல்வது போலவும் வடிவமைத்திருந்தாள் .

அனைவரும் அதை பார்த்து அசந்து தான் போனார்கள் ஒருவனைத் தவிர அவனோ ஆரம்பத்திலிருந்தே அனைவரும் பேசுவதை சுவாரசியமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தவன்.முகூர்த்த பட்டை  பார்த்ததும் அவனுக்கு நினைவு 20 நாட்கள் முன்னோக்கி சென்றது. அதிலும் இந்த புடவை எடுத்த போது நடந்த விஷயங்களை மனது அசை போட்டது.

தேதி குறித்த நாள் அன்றே அனுராதா வரிசைப்படுத்திய வேலைகளையும்,அவரின் பட்டியலையும் கேட்டு மலைத்த செழியன்  தன் அக்காவிடம் “அக்கா…ப்ளீஸ் கல்யாணம் ரொம்ப சிம்பிள் ஒரு கோவில் இல்லை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சுக்கலாம்” என்க 

கொதித்து எழுந்து விட்டார் அனுராதா “ஏன்டா அவ்ளோ கஷ்டப்பட்டு அங்க போய் பண்ணனும் பேசாம நம்ம வீட்டு போர்டிகோல பண்ணிக்கலாமா?!” என்று அவனை பார்த்து பல்லை கடித்து கொண்டு கேட்டார்.

அனிஷாவும்,அரவிந்த்வும் தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் பலமாக சிரித்து விட்டனர். செழியனின் முறைப்பை  பார்த்த பின்தான் அவர்களின்  சத்தம் ஓய்ந்தது.அவர்களுக்கும் தங்கள் மாமாவின் திருமண செய்தி மகிழ்ச்சியை அள்ளித் தந்தது.தங்கள் அம்மாவின் போராட்டத்தை சிறுவயதிலிருந்தே பார்ப்பவர்கள் ஆச்ச….அவரின் நம்பிக்கைக்கு கஷ்டத்திற்கும் இன்று பலன் கிடைத்துவிட்டதே.

“அக்கா நான் அதுக்கு சொல்லல…இதைப்போய் கிராண்டா பண்ணனுமா…சில பேரு இதை விமர்சிக்க தான் இருப்பாங்க…அதுவும் இல்லாம எனக்கு இப்படி விமர்சையா பண்றதுல இஷ்டம் இல்ல “

“அட  போடா…அந்த நாலு பேரு நாலு விதமா பேசுற பேச்சுக்காக நம்ம நம்மளோட முடிவை மாத்திக்கனுமா?!” அவங்க நம்ம எப்படி இருந்தாலும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க…நீ சொல்ற மாதிரி சிம்பிளா கோவில் பண்ணிக்கிட்டாலும்  ஏதோ தப்பு நடந்திருக்கு அதான் காதும் காதும் வச்ச மாதிரி பண்ணிகிட்டாங்க தான்  சொல்லுவாங்க…அதுவும் இல்லாம இது என்னோட பல நாள் கனவு எப்படி அனிஷா கல்யாணத்தை பத்தி எனக்கு ஆசை இருக்கோ அதை விட அதிகம் உன்னோட கல்யாணத்த பத்தி எனக்கு இருக்கு…அதனால இதை  ஒரு திருவிழா மாதிரி பண்ண போறோம்” என்று கூற 

“ஆமாம் மாம்ஸ் இத  நம்ம கிராண்ட் செய்ய போறோம்.அதை விட நீங்க சொன்ன மாதிரி எதுவுமே இல்லை.’ யு ஆர் பெர்ப்ஃட் மேரேஜ் மெட்டீரியல் ‘”

“நூற்றுக்கு நூறு உண்மைதான்…கல்யாணத்துக்கு வர்றவங்க எல்லார்கிட்டயும் போய் எனக்கு இது தான் பிரச்சனை நீங்க போய் சொல்லாத வரைக்கும் யாருக்கும் எதுவும் இல்ல மாமா ” என்று அரவிந்த் கூட்டணிக்கு வலிமை  சேர்க்க

இனிமேல் தான் எது சொன்னாலும் அது இந்த சபையில் எடுபடாது என்று தெரிந்தது.மேலும் அவன் மனசாட்சியே  “டேய்!!! எல்லாமே உன் கை மீறிப் போச்சு இனிமேல் நீ புடுங்க போறது எல்லாம் தேவை இல்லாத ஆணி தான்” என்று காறி துப்ப அதை துடைத்து கொண்டு கிளம்ப முற்பட்டவனிடம் 

“செழியா…நமக்கு இன்னும் நாலு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் நம்ம பண்ணனும் முதல்ல முகூர்த்த பட்டு வாங்கணும் வர ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நல்ல நாளா இருக்காம்.அதனால உனக்கு,ஆராதனாவுக்கும் டிரஸ்வாங்கிடலாம்.நான் சம்பந்தி கிட்ட பேசிட்டேன்.

அவங்களுக்கு கல்யாண தேதியில ரொம்ப சந்தோஷம்.முகூர்த்த பட்டு எடுக்க போறத பத்தியும் சொல்லிட்டேன்.எல்லாரும் வரேன்னு சொல்லிட்டாங்க…நீயும் கண்டிப்பா வரணும் ஏதாவது வேலை  இருக்குனு சொல்லி தப்பிக்க மட்டும் நினைக்காதே”

செழியனோ  சலிப்புடன் “அக்கா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே… நீங்க எதை பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அதை பண்ணுங்க.ஆனால் என்னை கூப்பிடாதீங்க இதெல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.எனக்கு இதில் எல்லாம் சுத்தமா விருப்பம் இல்லை”

“இது ஒன்னு மட்டும் வாடா…வேற எதுக்கும்  கூப்பிட மாட்டேன் எனக்காக வாடா…அதோட பொண்ணு வீட்டுக்காரங்க உன்னை நேர்ல பாக்கணும் இல்ல…நீ அவங்கள பாக்கணும் இல்ல…அதுக்காக வேண்டி வா செழியா “என்று விடாமல் கெஞ்ச 

செழியனின் மனமோ “அவளை பார்க்கிறதில் இருந்து தப்பிக்க தான் நான் வரலைன்னு சொல்லுறேன் இதில் இவள்  குடும்பம் வேறயா” என்று எண்ண அவனின் உண்மையின் உரைகல்லானா  மனசாட்சி கேலி சிரிப்புடன் “அந்த முகத்தை தான் உன் வாழ்நாள் முழுவதும் பார்க்க போற” என்று நக்கல் செய்தது.

“எதுக்காகவும் வரலை… உனக்காக வரேன் ஆனா ஒரு கண்டிஷன் இதுக்கு மேல எதுக்கும்  என்னை கூப்பிடாத அக்கா,கூப்பிட்டாலும் நான் இனிமே எங்கயும் வர தயாரா இல்லை.எனக்கும் சிலதை ஏத்துக்க நேரம் வேணும் அக்கா ப்ளீஸ்”

அவரும் அதற்குமேல் வற்புறுத்தவில்லை அவன் வருவதற்கு சம்மதம் சொன்னதே போதும் என்று தோன்றியது.அவரிடம் விடைபெற்று கிளம்பியவனின் எண்ணம் ஆராதனாவிடம் சென்றது.போன முறை போல உணர்ச்சிவசப்படாமல் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப் போல் பார்க்க வேண்டும் என்று நினைக்க அதற்கு மாறாக உணர்ச்சிக் குவியலாக மாறப்போவது அவனிடம் சொல்ல யாரும் அங்கு இல்லை.

அனுராதா சொன்னது போல அந்த ஞாயிறுகிழமை எல்லோரும் அந்த பிரம்மாண்டமான கடையின்  முகூர்த்த பட்டுப்புடவை செக்ஷனில் இருந்தனர்.

அனைவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருந்தனர்.அனுராதாவும் அனிஷாவும் எந்த மாதிரி,எந்த கலரில் புடவை எடுப்பது  எந்த கலர் ஆராதனாவிற்கு பொருந்தும் என்று பேசி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்க இன்னொருபுறம் இந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் புடவை எடுக்கிறோம் என்று நேரம் காலம் மறந்து இங்கு தங்கி விடுவார்கள் என்று திவாகரும் அரவிந்த்வும் பயந்தனர்.இந்த இரண்டு  பிரிவிடம் இருந்தும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இன்னும் எவ்வளவு நேரம் இங்கு நிற்பது என்ற எரிச்சலோடு இருந்தான்செழியன்.அவர்கள் கடைக்கு வந்த 45 நிமிடங்கள் ஆகிவிட்டது இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல் தன் அக்காவை நோக்கி சென்றான்.

“அக்கா!!! எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது…என்னால இதுக்கு மேல முடியாது….உனக்காக தான் மீட்டிங் எல்லாம் பிரகாஷ் பார்க்க சொல்லிட்டு வந்தேன்” என்று அவன் அனுராதாவை கடிக்க ஆரம்பிக்க

அவர் பதில் சொல்வதற்கு முன்பாகவே அனிஷா “அதோ ஆரா வந்தாச்சு!!!” என்று எதிர் திசையை கைகாட்டி சொல்ல அவள் சொன்ன திசையைப் பார்க்க அங்கு நீலமும் பச்சையும் கலந்த காட்டன் புடவையில் பவ்யமாக சிவராமன்,பார்வதியோடு வந்து கொண்டிருந்தாள் ஆராதனா.

இவர்களை நோக்கி வரும்போது திவாகர் அரவிந்தை பார்த்தவர்கள் அவர்களிடம் சிறிது நலம் விசாரித்து எல்லோரும் சேர்ந்து செழியன் என்ற இடத்திற்கு வந்தனர்.

வந்தவர்களை பார்த்து எந்த உணர்ச்சியும் முகஸ்துதியும் காட்டாத தன் தம்பியை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கையை கொண்டு பக்கவாட்டில் இடிக்க வேறு வழி இல்லாமல் சிவராமன்,பார்வதியைப் பார்த்து சிரித்து  நலம் விசாரித்தான்.அவனுக்கு அனுராதா முன்பே சொல்லியிருந்தார்  ஆராதனாவிற்கு மாமாவும் அத்தையும் மட்டும் தான் வேறு எவருமில்லை என்று அதனால் அவர்களை யார் என்று கேட்காமலே அவர்களை அடையாளம் கண்டு கொள்ள அவனால் முடிந்தது.

அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக ஆராதனாவையும் பார்த்து சம்பிரதாயமாக கண்ணுக்கு எட்டாத ஒரு புன்னகையை சிந்தினான்.பின்னர் அனைவரும் புடவை எடுக்க செல்ல தனக்கு இனிமேல் வேலை இல்லை என்று ஆண்கள் பட்டாளம் சென்ற திசையை நோக்கி செல்ல போன செழியனை “டேய்!!! நீ எங்க போற நீ இங்க வா…நீயும் தான் செலக்ட் பண்ணனும். உனக்கு பிடிச்சதை எடுக்கணும்னு அவளும் ஆசைபடுவாள்” என்று அனுராதா கூறினார்.

அவனால் அவர்கள் அனைவரின் முன்னாலும் தன் தமக்கையை திட்ட முடியாமல் பல்லைக் கடித்தான்.வேறு வழியில்லாமல் அவனும் அவர்களுடன் இருக்க சில பல நிமிடங்கள் கடந்த பின்  அனிஷாவிடமும் பார்வதியிடமும்  ஜாடை காட்டிஆராதனா செழியனிடம்  “நீங்க இங்க பாருங்க நாங்க அந்த பக்கம் போய் வேற ஏதாவது இருக்கான்னு பார்த்துட்டு வரும்” என்று மூவரும் கிளம்பினர்.

ஆராதனாவும்  பணியாளர் போட்ட புடவைகளை பார்ப்பதாக பாவ்லா செய்து கொண்டு செழியனை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ போனையே கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ இது தேறாத கேஸ்’ என்று நினைத்துக் கொண்டு தன் மொபைலில் இருந்த அவனுக்கு மெசேஜ் அனுப்பலாம் என்று நினைத்தாள்.அவளும்  கஜினி முகமது போல விடாமல் படையை எடுத்துக் கொண்டே இருந்தாள்  குறுஞ்செய்தி வழியாக ஆனால் பலன் பூஜ்யம்தான்.

 தன் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தவனிற்கு குறுஞ்செய்தி வந்திருப்பதை காட்ட அது யார் என்று அவனுக்குத் தெரிந்தது. தெரியாமல் இருக்குமா? அவள் தான் தினம்தோறும்  அவனுக்கு வேளை தவறாமல்  அனுப்பி கொண்டு இருக்கிறாளே…அதில் ஒன்றுக்கு  கூட அவன் பதில் அனுப்பியது இல்லை ஏன் சொல்ல போனால் அவள் எண்ணை இன்னும் பதிவு கூட  செய்யவில்லை.ஆனால் தினமும் அதை பார்த்து பார்த்து மனதில் பதிந்து விட்டது.

‘என்ன?’ என்பது போல அவளை திரும்பிப் பார்க்க அவளோ அதுக்காகத்தான் காத்திருந்தது போல அவனைப் பார்த்து பெரிதாக சிரித்துக் கண்ணடிக்க செழியனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

பின் முறைப்புடன் “உனக்கு என்னதான் பிரச்சனை?” என்று அவன் கேட்க 

“நீங்க தான்…நீங்க இப்படி மூஞ்ச தூக்கி வச்சி இருக்கிறதுதான் பிராப்ளம்.கொஞ்ச நோர்மல் இருக்கலாம்.ஏன் இப்படி ஒரு மாதிரி அப்செட்டா இருக்கீங்க?”

” ஏன் உனக்கு தெரியாதா என்ன? நான் முடிக்க நினைத்ததே நீ ஆரம்பிச்சதால வந்தது”

 “இதுக்கு நான் அப்பவே காபி ஷாப்பில் பதில் சொல்லிட்டேன்…எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இது ஒரு ப்ராப்ளமும் இல்ல…நீங்கதான் தேவையில்லாமல் இது பெருசா மாத்துறிங்க…சொல்ல போனால் உங்களை நீங்களே ஏமாத்திகிறீங்க…”என்று அவள் பேசும் போது

” முதல்ல அதிகப் பிரசங்கித் தனமாக நடந்துக்குறத நிறுத்து அதோடு இந்த திமிர் தனமான பேச்சும்”

” திமிர் தனமா? எனக்கு உங்க லாஜிக் புரியல?”

 “எது உங்களுக்கு திமிரு?! நீங்க ஒரு விஷயத்தை பார்க்கிற கோணத்தையும் புரிஞ்சுக்கிற விதத்திலும் வீண் பிடிவாதமும் தப்பான முடிவு இருக்குனு சொன்னா அது திமிரா?! நீங்க எடுக்கிற முடிவுடன் ஒத்துப்போகலைனா அது திமிரா?! நீங்க போடுற தாளத்துக்கு ஏற்ப நான் ஆடலைனா அது திமிரா ?! என்னை பொருத்தவரைக்கும் இதுக்கு பேர் திமிர் இல்லை என்னோட விருப்பம்…என்னோட சுயம் “

“நீங்க சொல்றீங்களோ அந்த சோ கால்ட் திமிரு அது திறமை இருக்கிற இடத்தில் இருக்கலாம்…வெறித்தனமான அன்பு இருக்குமிடத்தில் இருக்கலாம்…அழகா இருக்குற இடத்துல கூட இருக்கலாம்…வேஷம் இல்லாத உண்மையை மறைக்காது நிஜம் இருக்கிற இடத்தில கூட இருக்கலாம்…என்ன பொறுத்த மட்டில் அந்தத் திமிர் சொல்லப்படுற குணம் இருக்குறதுல  தப்பு இல்லை…அது மத்தவங்களோட நேர்மையும் உண்மையும் குத்தி கிழிக்காத வரைக்கும்” என்று அவள் சொல்லி முடித்து செழியனை பார்க்க 

என்ன சொல்ல முடியும் செழியனால் முகத்தில் அடித்தது போல் சொன்னாலும் அது உண்மைதானே.எதுவும் சொல்ல முடியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள இப்பொழுது இன்னும் கடுப்பான ஆராதனா “சரி இன்னும் ஒன்னு கெட்டு போகல…நான் நேரா என்னோட மாமா கிட்ட உங்க அக்கா கிட்ட போய் எனக்கு இந்த சிடு மூஞ்சிய பிடிக்கல…இந்த வயசான தாத்தாவை பிடிக்கல…சரியான பொறுக்கி போல தெரியுது…அதனால இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு வந்துறேன்” என்று கூறி முடிக்க நெற்றிக் கண்ணைத் திறந்தவனாக  ஆராதனாவை முறைத்து பஸ்பமாக்கினான்.

“என்ன பாஸ்… முறைக்கிறீங்க நீங்கதான் இந்த மாதிரி ஏதாவது சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க ஞாபகம் இருக்கா… நான் வேணா ஞாபகம் படுத்தவா”

” இப்படி ஒரு பிம்பமா  உங்கள காட்டுறது உங்களுக்கே பிடிக்கலை…புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு யாருமே எதிரி இல்லை நீங்களே தான் உங்களுக்கு எதிரி….வேண்டப்படாத எண்ணங்களை நீங்களே உங்களுக்குள் திணிக்கிறீங்க “அவள் பேசி முடிப்பதற்கும் தனிமை கொடுத்து சென்ற பெண்கள் கூட்டம் இவர்களை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது. 

அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் போன் பேசுவதை போல பாவ்லா செய்து கொண்டு செழியன் வேறு பக்கம் செல்ல அங்கு ஆண்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

அவர்கள் அருகில் செல்ல அங்கு திவாகர் “இன்னும் எவ்ளோ நேரம் எடுக்கப் போறாங்கன்னு தெரியல… இன்னும் ஒரு புடவை கூட எடுக்கலை போல வேற நாளா இருந்தா கோர்ட்ல கேஸ் இருக்குனு சொல்லி தப்பிக்கலாம்…என்னோட கெட்ட நேரம் ஞாயிற்றுக்கிழமையா  போச்சு”

 அரவிந்த் “அப்பா அவங்க கூப்பிட்டு எந்த புடவை காட்டினாலும்  நல்லா இருக்குன்னு கண்ண மூடிட்டு சொல்லுங்க இல்லன்னா ஃபேஸ் ரியாக்சன் வச்சு நல்லா இல்லைனு திரும்பவும் புடவை வேட்டையை ஆரம்பிச்சுடுவாங்க” என்று எச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட

 சிவராமன் “நீங்க வேற தம்பி…என்னமோ அவங்க புடவையை செலக்ட் பண்ணி உங்க கிட்ட காட்ட போறது மாதிரி சொல்றீங்க….எனக்கு தெரிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்து இந்த கடையில எந்த புடவையும்  சரி இல்ல வேற கடைக்கு போலாம் சொல்லுவாங்க நினைக்கிறேன் சம்பந்தி” என்று திவாகர்,அரவிந்த் தலையில் இடியை இறக்கினார்.

பேயறைந்தது போல் இருவரும் இருக்க செழியன் “என்ன ஆச்சுடா அரவிந்த்” 

“நாசமா போச்சு மாமா…. ஏதாவது புடவை செலெக்ட் பண்ணினாங்களா?” என்று அவனிடம் வினவ 

 எங்கே அங்கு நடந்த கூத்தும் பேச்சும் தான் செழியனுக்கு தெரியுமே …’இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினான்.

“போச்சு அப்போ நம்ம நிலைமை மோசம்தான்” என்று திவாகர் புலம்ப புரியாமல் செழியன் அரவிந்தனை பார்த்தான் அவன் அனைத்தையும் சொல்ல ‘அப்போ நம்மளும் இங்க தான் இருக்கணுமா….ஐயோ….”என்று அவன் மனம் அலறியது.

பின் யோசித்தவன் புடவை எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தை பார்த்தான்  அங்கு பாவம் அந்த கடையின் வேலையாளை திணற அடித்து கொண்டிருந்தனர்.அதைப் பார்த்தபடியே அவர்கள் அருகில் சென்று நின்று அவன் என்ன நினைத்தானோ அங்கு இருந்த ராக்கை ஆராய்ந்தவன் அந்த பணியாளனிடம் ஒரு புடவையை  காட்டி அதை எடுக்க சொன்னான். திடீரென்று அவன் வந்து புடவைகளை ஆராய்ந்ததில் ஒன்றும் புரியாமல் எல்லோரும் அவனை பார்க்க…அவன் அந்த புடவையை கையில் எடுத்து எல்லோரையும் பார்த்தவாறு “இந்த ஸாரி நல்லா இருக்கு…எனக்கு பிடிச்சிருக்கு… இதை எடுக்கலாமா” என்று வினவினான்.எல்லோருக்கும் அந்த புடவையை பார்க்க ஆராதனா அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

“புடவை செம்மையா இருக்கு மாமா”

 “ஆமாண்டா செழியா ரொம்ப அழகா இருக்கு”

” இந்த புடவை ஆராதனாவிற்கு  எடுப்பா இருக்கும் மாப்பிள்ளை”

 இப்படி எல்லோரும் அவர் அவர்  எண்ணத்தை கூற ஆராதனா எதையும் கூறாமல் அவனையே பார்த்தாள்…ஏனோ செழியனே முன்வந்து “உனக்கு பிடிச்சு இருக்குல?” என்று கேட்க அவள் ஒரு விதமான சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

பின் அந்த கடையின் பெண் ஊழியர்கள் 2 பேர் ஆராதனா மேல் புடவை வைத்து கட்டி காட்ட  எல்லோருக்கும் மிகவும் அழகாகவும்,அவளுக்கு என்று செய்தது போல் நன்றாக பொருந்தியது.அனைவருக்கும் திருப்தியாக இருக்க கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா அதன் வழியே தெரிந்த செழியனின் பிம்பத்தை பார்த்து ‘நல்லா இருக்கா?’ என்று கேட்பது போல தலையை ஆட்ட அவன் எந்த எதிர்வினையும் சொல்லாமல் தலையை ஆட்டினான்.அதில்  முகம் ,அகம்  இரண்டும் மகிழ்ந்து போனவள் திரும்பி அவனைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள்.

 அதன்பின் செழியனுக்கு வேஷ்டி,சட்டை எடுக்க வேண்டும் என்று அடுத்த தளத்துக்கு செல்ல தன்னையே சுற்றி சுற்றி வந்த ஆராதனாவிடம் தப்பிக்கும்  மார்க்கமாக வேஷ்டியை பார்க்கிறேன் என்று காரணத்தை வைத்துக் கொண்டு அதிலேயே தலையை உள்ளே விடும் அளவிற்கு ஆராய 

“அண்ணா… அந்த பச்சை கலர் வேஷ்டி அந்த ப்ளூ கலர் வேஷ்டி எடுத்து போடுங்க அண்ணா என்று கடை பணியாளனிடம் அவள் சொல்ல அதில் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் இருவரும் அவளை பார்த்தனர்.

அவளோ “பின்ன கல்யாணத்துக்கு இருக்கிறது ஒரே ஒரு கலர் தான் என்னமோ பல கலர் பல டிசைன் இருக்கிற மாதிரி அப்படியே தலையை விட்டு தேடுறீங்க” என்றாள்.

  செழியன் முறைப்பு மட்டும் பரிசாக தர பின் அவளை “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

 எதற்கு என்பது போல் அவளை அவன் பார்த்தான்.” புடவை செலெக்ட் பண்ணி கொடுத்தற்குத்தான்… நான் எதிர்பார்க்கவே இல்ல அதுவும்  உங்க கிட்ட இருந்து சத்தியமா எதிர்பார்க்கல…நம்ம நம்புறவங்க கைவிட்ட போது நாம எதிர்பார்க்காத இடத்தில இருந்து வர்ற ஒரு சின்ன பாசிட்டிவ் விஷயம் கூட எனக்கு ப்ரீசியஸ் தான்” என்று கூறி கண்ணில் கண்ணீர் தேங்கி நின்ற படி அவனை  பார்த்து சிரிக்க செழியனுக்கு ஏதோ ஒன்று தொண்டையில் அடைத்து கொண்டது போல் தோன்றியது அவன் வாழ்வில் உணர்ந்து கொண்ட உண்மையான கொடிய விஷயமல்லவா இது.

 அவனும் அவளை பார்த்தான் என்ன தோன்றியதோ “நோ ப்ரோப்ளேம்” என்று யாருக்கும் கேட்காத குரலில் சொல்லிவிட்டு கீழே சென்றான்.

 இப்படிப் பழைய நினைவுகளில் பயணித்துக்கொண்டிருந்த நம் நாயகனை நிகழ்  காலத்திற்கு கொண்டு வந்தாள் அனிஷா.

“சொல்லுங்க மாமா…நல்லா இருக்கா…”என்று ஆவலாக கேட்க 

“ரொம்ப நல்லா இருக்குடா” என்றான் செழியன்.

” மாமாவே சொல்லியாச்சு அப்புறம் வேற என்ன” என்று சந்தோசத்தில் குத்தித்தவள் பின் இன்னொரு பையிலிருந்து செழியனிற்கான  உடையை எடுத்தாள்.

 செழியனுக்கு பட்டு வேஷ்டி,பட்டு சட்டை.சட்டையின் இடது புறத்தில் தங்க நிற நூல் கொண்டு ‘A’ என்ற எழுத்தும் அதனை தன்னுள் அரவணைத்து கொண்டு இருப்பது போல் ‘C’ என்ற எழுத்தும் இருந்தது.அதுவும் பார்க்க அழகாக அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.

 அதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வழக்கம்போல் நம் நாயகியிடம் இருந்து குறுஞ்செய்தி வர அதை எடுத்துப் பார்த்தவன் எப்பொழுதும்போல் பதில் எதுவும் கொடுக்காமல் வைக்க  போனவனின் மனம் என்ன சொல்லியதோ மீண்டும் அதை எடுத்து அவள் எண்ணை “Aaradhana” என்று பதிவு செய்து கொண்டான்.

விதியின் கையில் நாம் அனைவரும் கைப்பாகைகள்.தனிமனிதனின் சூழ்நிலையும்,தேவைகள் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் தான் தனக்கு எதிரில் உள்ளவர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தனக்கு சாதகமாக பிரித்து கொள்கின்றோம்.

திமிரு பிடித்தவன்,பிடித்தவள் என்று நாம் மற்றவரை தீர்மானிப்பது அந்த நபர் நம் தேவை வட்டத்துக்குள் பொருந்தாமல் போவதனால் தான்.

தங்கள் விருப்பத்துக்கு உடன்படவில்லை என்று மற்றவர்களை குறை கூறுபவர்கள் அந்த நபருக்கும் விருப்பம் என்ற உணர்வு உண்டு அதை தான் அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்பதை எவரும் உணர்வதில்லை.

இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது,கெட்டவர்களும் கிடையாது.

சூழ்நிலை தான்  சூழ்ச்சி செய்து  ஆட்சி புரிகிறது!!!

” காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய்

பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்

தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே

நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே

வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்

நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே

மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம்

பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே

வர வர வர கரை தாண்டிடுமே “

Advertisement