Advertisement

அத்தியாயம்…1

அண்ணா நகரில்   பணக்காரார்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில்  இருக்கும்  பங்களாவில்,  நம்  கதையின் நாயகன்  ஷ்யாம் காலை உணவை உட்கொண்டு இருந்தான்..

“பொறுமையா சாப்பிடு..   இப்படி அவசரமா சாப்பிடாதேன்னு உனக்கு சின்ன வயசில் இருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீ கேட்குறதே இல்ல..” என்று  சொன்ன தனபாக்கியத்தின் பேச்சை காதில் வாங்கினான் என்பதுக்கு ஒரு..

“ம்..” என்று சொன்னவன்,  முன் போல் தான்   சாப்பிட்டுக் கொண்டே எதிரில் அமர்ந்துக் கொண்டு இருப்பவரிடம்..

“ திரும்ப ஏன்ப்பா நீங்க அவனுக்கு அவ்வளவு டைம் கொடுத்திங்க…” என்று  தங்களின் பைனான்ஸில் கடன் வாங்கியவருக்கு ஷ்யாம் அடுத்த வாரம் தந்து விட வேண்டும் என்று சொல்ல…

அந்த ஆள் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசி நாட்களை நீடித்துக் கொண்டான்.. அதன் பொருட்டே   ஷ்யாம் கிருஷ்ண மூர்த்தியிடம் சத்தம் இடும் போதே, அங்கு இருந்த தொலை பேசியின் சத்தம்  கேட்டதில், இவர்களின் பேச்சு தடைப்பட்டு போனது..

தனம்  தொலை பேசியின் அழைப்பை ஏற்க அந்த இடத்தை விட்டு நகர பார்த்தவரின் கை பற்றி தடுத்த ஷ்யாம்..

“ நீங்க இருங்க அம்மா ..” என்று  அவர்களை போக விடாது தடுத்தவன்..  இவர்களை விட்டு கொஞ்சம் தொலைவில், இவர்கள் அழைத்தால் வரும் தூரத்தில் இருந்த  சமையல் அம்மாவிடம்..

“ யாருன்னு பாருங்க..” என்று சொன்னவன் ..

“ என்னை  சொல்றிங்கலேம்மா .. அவசரமா சாப்பிடாதேன்னா கேட்க மாட்டேங்குறேன்னு. நீங்க மட்டும் என்னவாம்… நான் எப்போவிலிருந்து எங்க கூடவே சாப்பிடுங்க என்று சொல்றேன்.. கேட்கிறிங்களா…?” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே ..

அந்த சமையலம்மா  தொலை பேசியை கையில் வைத்துக் கொண்டு..

“ பெரியம்மாவை.. இல்ல பெரிய அய்யாவை  தான் கூப்பிடுறாங்க..” என்று பேசியின் வாயை மூடிய வாறு  அந்த வேலையாள் சொல்லவும்.

நடக்க முடியாது மெல்ல நடந்து அந்த தொலை பேசியின் அருகில்  செல்லும்  தனபாக்கியத்தை , ஷ்யாம் கண்ணில் வலியுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்..

அம்மா  அப்பா  என்று ஷ்யாம் இவர்களை அழைத்தாலும், இவர்கள் ஷ்யாமுக்கு தந்தை வழி தாத்தா பாட்டி ஆவர்…  இந்த வயதில்  தன் பொருட்டு இவர்கள் செய்த தியாகம் என்று வேறு ஏதோ நினைக்க நினைக்க…  முகம் கசங்கி போனது..

தன் தட்டில் இருக்கும் மீத  உணவை அப்படியே விட்டு விட்டு எழுந்தவன் கை அலம்பி ஆபிஸ் கிளம்ப, தன் அறைக்கு சென்று விட்டான்.. அதனை  அவன்  எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த கிருஷ்ண மூர்த்தி வேதனையுடன் பார்த்தார்..  அதன் பின்   அவரும் உணவு தட்டில் கை வைக்காது எழுந்து விட்டார்..

தொலை பேசியில் என்ன செய்தி வந்ததோ தனபாக்கியத்தின்   முகத்தில் பதட்டம்  குடியேறி இருந்தது..

முகம் கசங்க தன் கணவர் கிருஷ்ண மூர்த்தியின் அருகில் வந்தவர் அவரிடம்..  “ கெளசல்யா வீட்டுக்காரர் இறந்து விட்டாராம்.. “ என்று சொன்ன தனபாக்கியம்  ஆபிசுக்கு கிளம்ப  மாடி படியில் இருந்து இறங்கி கொண்டு இருந்த  ஷ்யாமிடம்..

இந்த செய்தியை  எப்படி  சொல்வது…?  என்பதை விட, இவன் இதை எப்படி எடுத்துக் கொள்வான்.. அங்கு போக வேண்டும்.. தங்களை எப்போதும் அவன் தடுக்க மாட்டான் தான்.. ஆனால் அவனும் அல்லவா வர வேண்டும்.. வருவானா..? என்று நினைத்து தன் பேரனை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்..

எப்போதும் போல்.. “ சரிம்மா போயிட்டு வர்றேன். இன்னைக்கு லன்ச் கொடுத்து அனுப்ப வேண்டாம்.. வெளியில் ஒரு வேலை இருக்கு..” என்று சொல்லிக் கொண்டே வாசலை பார்த்து நடந்துக் கொண்டு இருந்த ஷ்யாம், தன் பின் வரும் காலடி ஓசை கேட்காது போக நின்று திரும்பி  பார்த்தான்..

எப்போதும் போல் தான் ஆபிசுக்கு போகும் போது தன்னை வழி அனுப்ப தன் பின் வராது, தான் சொல்லும் போது எங்கு அமர்ந்து இருந்தாரோ, அதே இடத்திலேயே   தனபாக்கியம் அமர்ந்து இருப்பதை பார்த்து, யோசனையுடன் அவர் முகத்தை ஷ்யாம் அப்போது தான் பார்த்தான்..

அங்கு  தெரிந்த வேதனையில்.. அவரிடம் விரைந்து வந்தவன்.. “ அம்மா என்ன…?  என்ன பிரச்சனை..? உடம்புக்கு ஏதாவது செய்யுதா…? “ என்று  அவர் கை பற்றி பதட்டத்துடன் கேட்டான்…

ஷ்யாம்  கேட்டதற்க்கு பதில் சொல்லாது,  அவன் கன்னம் தடவிக் கொண்டு இருந்த அவரின் கை நடுக்கத்தில், அதை கெட்டியாக பற்றிக் கொண்டவன் பக்கத்தில் அமர்ந்து இருந்த கிருஷ்ண மூர்த்தியை பார்க்க, அங்கும் வேதனையின் சாயல் தான்..

“ என்னப்பா.. என்ன விசயம்..” என்று அவரிடம் கேட்டான்..

“ உன்..அ..” என்ற ஆரம்பித்தவர் பின்.. “ கெளசல்யா கணவர் இறந்து விட்டாராம்..” என்றதில் ஷ்யாமின் முகம் சட்டென்று  இருண்டு விட்டது…

பின் எப்போதையும் போல் தன்னை சாதரணமாக காட்டிக் கொண்டவனாக.. “  இப்போ நீங்க போகனுமா..?” என்று  அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டான்..

அதற்க்கு தனபாக்கியம் .. “ கண்ணா நீயும் வருனும்பா.. என்ன தான் இருந்தாலும்,” என்று ஏதோ சொல்ல வந்தவரை அடுத்து பேச விடாது..

“ வர்றேன்ம்மா… தேவையில்லாத பேச்சு எதுக்கு..” என்று சொன்னவன்,  கிருஷ்ண மூர்த்தியிடம்..

“ அப்பா ட்ரைவர் உங்க கூட வருவான்.. அங்கு போய் எந்த டைம் என்று கேட்டு எனக்கு போன் பண்ணுங்க..” என்று சொல்லி விட்டு செல்ல பார்த்தவனின்  கை பிடித்து தடுத்து நிறுத்திய  தனபாக்கியம்..

“ கண்ணா இப்போவே எங்க  கூடா வாப்பா..  “ என்று அவனை  கை பற்றி போக  விடாது தடுத்தார்.. எங்கு அவன் வராது போய் விடுவானோ என்ற பயத்தில்..

“ அம்மா முக்கியமான ஒரு  வேலை இருக்கு.. நான் கண்டிப்பா போகனும்.. புரிஞ்சிக்கோங்க.. நான்   வந்துடுவேன். கவலை படாதிங்க.” என்று சொல்லியும் அவர் ஷ்யாமின் கையை விடாது இருந்தார்..

கிருஷ்ணமூர்த்தி தான்… “ அது தான் சொல்றான்லே   பாக்கியம்  .. அவன் கண்டிப்பா வருவான்..” என்று தன் கணவர் சொல்லவும் தான் தனபாக்கியம்  ஷ்யாமின் கையை விட்டது..

அதன் பின் ஷ்யாம்  ட்ரைவரிடம். “ அம்மா அப்பா வெளியில் போறாங்க.. அவங்க கூட போ..  அவங்களை விட்டுட்டு நீ வந்துடு.. பார்த்து..” என்று சொல்லி விட்டு போனவன்.. அவன் சொன்னது போலவே கிருஷ்ணமூர்த்தி சொன்ன..

 “ ஐந்து மணிக்கு எடுக்குறாங்க.. நீ இங்கு ஒரு நாளு மணிக்கு எல்லாம் வந்தா தான் நல்லா இருக்கும் ” என்றதும்..

“ம்.. வந்துடுறேன்.. அட்ரஸ் சென் பண்ணுங்க..” என்றவன்.. அவன் சொன்னது போலவே சரியாக கிருஷ்ண மூர்த்தி சொன்ன முகவரியான செங்கல் பட்டில் இருக்கும் அந்த வீட்டின் முன் தன் காரை நிறுத்தியவன்..

அந்த வீட்டுக்குள் நுழையாது ஆண்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து இருந்த இடத்தில் போய் தானும் அமைதியாக அமர்ந்துக் கொண்டான்..

அவன் அமர்ந்ததும் அனைவரின்  பார்வையும் அவன் மேல் தான் படிந்தது..  யார் இவன்..? என்று. முதலில் அவனை  அடையாளம் தெரியாது, யாரோ போல் பார்த்த     அந்த  முதியவர்.. அடையாளம்  தெரிந்ததில்..

ஷ்யாமின் அருகில் தன் வயதையும்   மீறி ஓடி போய் .. “ எப்படி ராசா இருக்க…?” என்று கண்ணில் நீர் வடிய பாசத்துடன் கேட்டவருக்கு..

“ம்..” என்ற பதிலே கொடுத்த  ஷ்யாம்.. அப்போது தான் இறந்தவரின் பூத உடலுக்கு செய்ய வேண்டிய சாங்கியம் செய்ய அவரின் உடலை தூக்கிக் கொண்டு அங்கு ஏற்கனவே  முன் ஏற்பாடாக போட்டு இருந்த ஒரு நீளமான  மரபலகையில்  வைத்தவர்கள். அதன் பக்கத்தில் ஒரு சேரை போட்டு , அதில் இறந்தவரின் மனைவியை  அமர வைத்தனர்..

இறந்தவரின் உடலை அந்த மர பெஞ்சில் போடும் வரை அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த ஷ்யாம், அவர் மனைவியை அழைத்து வர, சட்டென்று தன் பார்வையை அங்கு இருந்து திருப்பிக் கொண்டவனை, அவர் பக்கத்தில் அமர்ந்து இருந்த  முதியவர்  வேதனையுடன் பார்த்தார்..இது அனைத்திற்க்கும் காரணமான ஷ்யாமின் தாய் வழி தாத்தாவான  சொக்கலிங்கம்.. 

ஷ்யாம் வந்ததும் அனைவரின் பார்வையும் யார் இவன்..?  உயரமா ,   வெள்ளையா பார்க்க  தொர கணக்கா  இருக்கான்.. நம்ம வகையாரா போல் இல்லையே,   என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.. அவன் பக்கத்தில் சொக்கலிங்கம்  போனதுமே ஒரு சில பெரியவர்களுக்கு தெரிந்து விட்டது..;

அதனால் தெரியாதவர் பக்கத்தில் அமர்ந்து இருந்தவர் கேட்ட கேள்வியான…” யார்..? பார்க்க வாட்ட சாட்டமா  தொர  கணக்கா இருக்கான்..” என்று கேட்டதற்க்கு,

“ கெளசல்யா    மகன்..” என்றதில்…

கேள்வி கேட்டவர்  “ என்ன பெரியப்பா  தெரியாதுன்னா தெரியாது என்று சொல்.. அத வுட்டு.. செத்த பார்த்திபனுக்கு இரண்டும் பொண்ணு தான்…அதோ அம்மாவின் இரண்டு பக்கத்தில் நிற்குதுங்கல..அதுங்க.. அது இந்த   ஊருக்கே தெரியும்… பெரிய வீட்டு  விவகாரம்  பார்த்து பேசு பெரியப்பா …” என்று அதட்டியவருக்கு..

அந்த முதியவர்.. “ நான் ஒன்னும் அந்த தம்பிய  பார்த்திபன் மகன் என்று சொல்லலேயே..” என்று அவர் சொன்னதும், பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர் பயந்து போய் அக்கம் பக்கம் பார்த்தவர்..

அந்த முதியவரின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டவராய்..

“ இது முந்தைய விட ரொம்ப வில்லங்கம்மா இருக்கு பெரியப்பா.. பார்த்திபன் இறந்துட்டார் .. அவர் மட்டும் உசுரோட இருந்து இருந்தா இது எல்லாம் பேசி இருப்ப.. சும்மா மாறு கால்.. மாறு கை ..வாங்கி இருக்க மாட்டார்.. வேண்டாம் பெரிய வீட்டு  விவகாரம் தெரியாது பேச கூடாது..” என்று அதட்டி விட்டு முன் போல் தான் அமர்ந்து இருந்த இடத்திற்க்கு நகர்ந்து அமர்ந்துக் கொண்டார்..

அப்போது கூட அந்த முதியவர் தன் பேச்சை கை விடாது.. “ பார்த்திக்கும் சரி.. கெளசல்யாவுக்கும் சரி.. இரண்டு பேரும் செய்து கொண்டது இரண்டாம் கல்யாணம்..

பார்த்தி முதல் மனைவிக்கு பிறந்தது.. அதோ கெளசல்யா இடது பக்கத்தில் கொஞ்சம் கால் தாங்கி நிக்குதே தனுஜா அந்த பெண் தான்.. இந்த பெண்ணை ஏழாவது மாசம்  சுமந்து கொண்டு இருக்கும் போது தான், அந்த அம்மா  கால் தடுமாறி படிக்கட்டில் விழுந்து. குறை பிரசவத்தில் இந்த பெண்ணை  பெத்து எடுத்துட்டு அந்த பெண் போய் சேர்ந்துட்டா.. 

அப்புறம் பார்த்திபனுக்கு  இரண்டாம் தாரமா தான் இந்த பெண்  கெளசல்யா  வந்தா.. அதுக்கு அப்புறம்  பிறந்தது தான் அதோ அந்த  வலது பக்கத்தில் நெட்டையா நிற்குதே  ஷைலஜா  அந்த பொண்ணு..

கெளசல்யாவோடு முதல் புருஷன் இதோ இந்த பைய்யன்  பெத்து எடுக்க அம்மா வீட்டுக்கு வந்து சுக பிரசவமா நல்லா தான் பிறந்தான்..இவன் ஏழு மாசமா இருக்கும் போது புருஷன்காரன்  குழந்தைய பார்க்க  சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் போது  விபத்தில் இறந்துட்டார்..

அவ்வளவு தான் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தவ.. கை  குழந்தையோட அங்கேயே இருந்துட்டா… அப்போ அந்த புள்ளைக்கை இருப்பத்தி ஒன்னு  வயசு தான்.. வீட்டுக்கு ஒரே பெண்.. அப்படியே சும்மா விட மனசு இல்லாம அவ குழந்தை இரண்டு  வயசு  ஆகும் போது இடம் பார்க்க ஆரம்பித்தாங்க, அதோ பேரன் பக்கத்தில் இருக்கும்  சொக்கலிங்கம்..

பெரிய வீட்டு பெண்.. சொத்து பத்து எக்க சக்கம்.. அதனால வந்தாங்க தான். கெளசல்யா போலவே  மனைவியை  இழந்தவங்க..

ஆனா பார் வந்தவங்க எல்லோரும் சொல்லி வெச்சது போல்… சொன்னது  இது தான்.. அந்த பைய்யன்  கெளசல்யா கூட வர கூடாதுன்னு… முதல்ல அது எப்படி..?  என்று வேண்டாம் என்று மறுத்த அதோ அந்த சொக்கலிங்கம் அய்யா..

போக போக குழந்தையும் வளர்ந்துட்டு வர்றான்.. பொண்ணுக்கும் வயசு  கூட ஆகிட்டு போகுதேன்னு.. இதோ இந்த பார்த்திபன் ஒரே ஊரு… இவங்களை பத்தி அவங்களுக்கு  தெரியும்.. அவங்களை பத்தி இவங்களுக்கு தெரியும்.. சொத்து பத்திலேயும்  ஈடுன்னு.. சரின்னு ஒத்துக்கிட்டார்..

மத்தவங்கலாவது அந்த குழந்தை கெளசல்யா கூட வர கூடாதுன்னு தான் சொன்னாங்க.. ஆனா  இந்த பார்த்திபன்  சொக்கலிங்கம் அய்யா கிட்ட 

“ஒரே ஊர்  .. உங்க மகள் நாளை அம்மா வீடுன்னு வந்து போக இருக்கும் போது, அந்த குழந்தை உங்க கூட இருந்தா.. அது ஏனோ எனக்கு சரியா படல… குழந்தையோட அந்த தாத்தா பாட்டி நல்லா தானே இருக்காங்க.. 

ஒரே மகன் பரி கொடுத்துட்டு இருக்காங்க.. இந்த குழந்தை அவங்க கிட்ட இருந்தா அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும் பாருங்க.  முடிவு உங்க கையில் ..” என்று ஒரு இனுக்கு வெச்சிட்டு போயிட்டார்..

Advertisement