காதலின் தீபம் ஒன்று..!! – 2
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
இதோ உன் காதலன் என்று…
விறு விறு விறுவென…
கல கல கலவென…
அடி மன வெளிகளில்…
ஒரு நொடி நகருது கேட்டாயா…
தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நன நன நன நா…
தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நன நன நன நா…
இந்த பாடல்தான் ஒலித்துக் கொண்டிருந்தது யாழினியின் செவிகளில்.. ரயிலின் தடதடக்கும் ஓசை.. அந்த ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகளின் பேச்சு சத்தம்.. “ஏய்.. யாழி..!! யாழி..!!” என்று அவளின் தோழி காவியா அழைத்துக் கொண்டு இருந்த சத்தம் என்று எதுவுமே அவள் செவிகளை எட்டவே இல்லை..
அந்த இளைஞனின் மடியில் தடுமாறி விழுந்தவள் அவன் முகத்தில் இருந்து கண்களை பிரிக்க முடியாமல் இருவிழிகளையும் இமைக்க கூட மறந்து சிலையாகி இருந்தாள்.. அவனின் கையில் பதுமையாய் விழி விரித்தபடி சாய்ந்திருந்தாள்.. அப்படி அவள் மனதில் அழுத்தமான தடத்தை பதித்து நிலையாய் அங்கேயே உறைந்து விட்டிருந்தான் அவன்..
கண்ட நொடியே அவனை தன்னவன் என உணர்ந்தது அவள் மனது.. ரயில் ஏறுவதற்க்கு முன் அவள் தந்தை சொன்னது அத்தனையும் காற்றோடு போய் விட்டிருந்தது.. அவன் முகம் பார்க்கும் இந்த நொடி அவளுக்கு அவர் சொல்லிய வார்த்தைகளில் ஒன்று கூட நினைவில் இருக்கவில்லை..
இப்போது அவள் உலகத்தில் கனவிலும் நினைவிலும் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் அவன் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தான்..
திடீரென தான் உலுக்கப்பட்டது போல் தோன்ற தூக்கத்திலிருந்து விழிப்பது போல் விழித்தவள் அப்போதுதான் அந்த இளைஞன் அவளை தாங்கிய கையால் அவளை உலுக்கியபடி “ஹலோ.. என்ன..? அப்படியே தூங்கிட்டிங்களா..? எழுந்திருக்கிற மாதிரி எதுவும் ஐடியா இருக்கா.. இல்லையா..? பர்த் மேல இருக்கு.. உங்களுக்கு மட்டும் டிக்கெட்டுல அப்பர் பர்த் லோயர் பர்த்னு போடாம ஆரியன் மடில பர்த்னு போட்டு வச்சு இருக்காங்களா.. சும்மா ஜாலியா என் மடியில படுத்துக்கிட்டே ட்ராவல் பண்றீங்க?”
அவன் கேட்ட நொடி சட்டென அவன் மடியில் இருந்து துள்ளி எழுந்து கண்கள் பட படக்க எச்சில் விழுங்கி பயந்தாற் போல் நின்றவளை பார்த்தவனுக்கு ஏனோ சிரிப்பு வந்து தொலைத்தது..
அதற்குள் காவியா “ஹலோ.. அப்படியே நீங்க பெரிய டபுள் குஷன் பெட்டு.. உங்க மடியில வந்து அப்படியே படுத்துக்கிட்டே டிராவல் பண்றாங்க.. அவ விழுந்த அதிர்ச்சியில அப்படியே ஷாக் ஆகி ஒரு ரெண்டு செகண்ட் எக்ஸ்ட்ரா ஃப்ரீஸாகி இருந்துட்டா.. அதுக்காக அவ என்னவோ உங்க மடியில படுத்து ஜாலியா டிராவல் பண்றா.. அது இதுன்னு இப்படித்தான் அசிங்கமா கேட்பீங்களா..? வார்த்தை ரொம்ப தப்பா வருது மிஸ்டர்.. பொண்ணுங்க கிட்ட பேசும் போது பார்த்து பேசுங்க..” சண்டைக்கோழியாய் சிலுப்பிக் கொண்டு நின்றாள் காவியா..
அதற்குள் யாழினி “ஏய் காவி.. நான்தான்டி தப்பு பண்ணேன்.. நீ சண்டை போடாதடி.. கொஞ்ச நேரம் சும்மா இருடி..” என்று சங்கடப்பட்டு காவியாவை அடக்கினாள்..
“என்ன..? ரொம்பத்தான் சப்போர்ட்டா வரிஞ்சு கட்டிட்டு வரீங்க உங்க ஃப்ரெண்டுக்கு.. அவங்க என் மேல வந்து விழுந்தது தான் உங்களுக்கு தெரியும்.. அதுக்கு முன்னாடி பேக்கை மேல வெக்கறப்போ நல்லா செருப்பு காலால என் கால போட்டு நறநறன்னூ மிதிச்சுக்கிட்டு இருந்தாங்க.. ஒருத்தர் கால் மேல நின்னுட்டு இருக்கோம்கறது கூட தெரியாம அவங்க பாட்டுக்கு கூலா பேக்கை வச்சுட்டு மிதிச்சதுக்கு சாரி கூட கேட்காம என் மடியில வேற வந்து விழறாங்க.. இதுக்கு நீங்க வேற வக்காலத்து வாங்கிட்டு வரீங்களா?” அவனும் காவியாவோடு எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான்..
“ஐயோ.. சாரி சார்.. உங்க காலை மிதிச்சது நிஜமாவே எனக்கு தெரியல.. தெரிஞ்சிருந்தா அப்பவே காலை எடுத்துருப்பேன்..”
“அது சரி..” என்று அவன் தலையாட்டியபடி சொல்ல காவியாவோ மறுபடியும் பெரிதாய் சண்டை போட ஆரம்பித்தாள்..
“என்ன..? சாரி கேக்கல.. சாரி கேக்கலன்னு சொல்றீங்க.. அதான் நீங்களே சொல்றீங்களே.. உங்களை மிதிச்சிட்டு இருந்தது அவளுக்கு தெரியலன்னு.. ஆமா கடவுள் தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய வாயை கொடுத்து இருக்கிறார் இல்ல..? இப்ப நல்ல வாய்க்கு சண்டை போட தெரியுது இல்ல..? என் கால் மேல நின்னுட்டு இருக்கன்னு மிதிக்கும்போதே கத்த வேண்டியது தானே..? இப்ப இவ்வளவு பேச்சு பேசுறீங்க..? அப்ப என்ன வாயில கொழுக்கட்டை வச்சுக்கிட்டு இருந்தீங்களா..?” வரிந்து கட்டிக்கொண்டு சண்டை இட்டாள் காவியா..
“ஓ.. அவங்க கால மிதிச்சது தப்பில்லை.. ஆனா நான் இப்போ அதை சொல்லாதது தான் தப்பா ஆயிடுச்சு..” அவன் விடாகொண்டனாய் சண்டையை வளர்க்க காவியாவும் கொடாகொண்டாளாய் மேலும் பேசினாள்..
யாழினிக்கு கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.. கொஞ்சம் கொஞ்சமாய் அழும் நிலைக்கு போயிருந்தாள் அவள்..
“ஹலோ பொம்பளைங்க கிட்ட எப்படி பேசறதுன்னு கூட தெரியல.. நீங்க சாரி கேக்குற மேனர்ஸ் பத்தி எல்லாம் பேச வந்துட்டீங்களா?”
“நானும் இவ்வளவு நேரம் லேடீஸ் ஆச்சேன்னு தான் பொறுமையா பேசிட்டிருக்கேன்.. இல்லைன்னா இங்கே நடந்திருக்கிறதே வேற.. ஆனா பொம்பளைங்க மாதிரி பேசினா பொறுமையா பேசலாம்.. உங்களை மாதிரி திமிர் பிடிச்சு பேசுறவங்க கிட்ட எல்லாம் இப்படித்தான் பேசணும்..”
“ஓ.. அ..ப்புடி.. இதான் நீங்க பொறுமையா பேசின லட்சணமா?”
அவன் ஏதோ பதில் பேச தொடங்க அதற்குள் யாழினி “காவி.. போதும்டி.. உட்காருடி ப்ளீஸ்..” என்றவள் அவன் பக்கம் திரும்பி “சார்.. ரொம்ப சாரி சார்.. தெரியாம தான் பண்ணிட்டேன்.. இனிமே உங்க வம்புக்கு வரமாட்டேன் சார்.. ப்ளீஸ்.. எனக்காக அவ பேசினதெல்லாம் மறந்துருங்க. என் மேல தான் தப்பு.. ரொம்ப சாரி..” பணிவாய் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு காவியாவை அடக்கி அவள் இருக்கையில் அமர வைத்தாள்..
காவியாவோ முணுமுணுவென அவனை வாயில் போட்டு அரைத்துக் கொண்டு இருக்க “ஏய்.. நீ கொஞ்ச நேரம் சும்மா இரேன்டி.. ஏன்டி இப்படி சண்டை போடுற? நான் தானே தப்பு பண்ணேன்.. என்னை தானே திட்டினாரு.. விடு..” அவளை அடக்கிய படியே இருந்தாள் யாழினி.. விட்டால் எங்கே மறுபடியும் அவனோடு சண்டைக்கு போய்விடுவாளோ என்ற பயம் இருந்தது அவளுக்கு..
அவனோ யாழினி மன்னிப்பு கேட்ட பிறகு அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றாது தான் வாங்கி வந்த உணவு பார்சலை பிரித்து உண்ண தொடங்கினான்..
அதற்குள் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த வயதானவர் “ஏம்பா.. அந்த புள்ள தான் உன்னை மிதிச்சது தெரியலன்னு சொல்லி உன் மேல விழுந்ததுக்கும் சேர்த்து அப்புறமா மன்னிப்பு கேட்டுடுச்சு இல்ல.. அதுக்கப்புறம் ஏம்பா அந்த பொண்ணோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கே..?”
“தாத்தா அந்த பொண்ணு யாழினி சாரி கேட்டதோடு அமைதியா இருந்திருந்தா சண்டையே நடந்து இருக்காது.. ஆனா அதோ ஒக்காந்து இருக்காங்களே அவங்க பக்கத்துல.. சரியான பஜாரியா இருப்பா போல இருக்கு.. எப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு என்னோட வம்பு சண்டைக்கு வந்தா பார்த்தீங்க இல்ல?”
அவன் சற்று மெதுவாய் தான் பேசினான் ஆனால் காவியா அவனை மீண்டும் வம்பிழுப்பது போல் “எதுவா இருந்தாலும் தைரியமா முகத்துக்கு நேரா பேசணும் யாழி.. தைரியம் இல்லாதவங்க தான் அவங்க இல்லாதப்போ பின்னாடி பேசுறது.. ரகசியமா இன்னொருத்தங்க கிட்ட பேசறது.. இதெல்லாம் செய்வாங்க..
அவள் ஜாடை மடையாய் அவனைப் பற்றி பேச “யாருக்கு தைரியம் இல்ல? இங்க எதையும் நான் மறைச்சு பேசல.. இங்க நடந்ததை பத்தி தான் தாத்தா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்.. உங்க கிட்ட பேசினா பெரிய சண்டையாக போகுதுன்னு அவர்கிட்ட ரகசியமா பேசிகிட்டு இருந்தேன்.. இல்ல நீ எனக்கு நேரா பேசி சண்டை தான் போடணும்னு சொல்லுங்க.. நானும் ரெடி தான்..”
மறுபடியும் அவன் சிலுப்பி கொண்டு வர யாழினியோ உச்ச கட்ட பதட்ட நிலையை அடைந்தாள்.. இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு திண்டாடினாள் அவள்..
“ஏய்.. நீ உன் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா டி? முதல்ல கிளம்பு.. இங்கிருந்து போகலாம்..” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு நகர ஆரியணை பின்னால் திரும்பி திரும்பி அர்ச்சித்துக் கொண்டே அவளோடு போனாள் காவ்யா.. அந்த பெட்டியின் வாயில் கதவருகில் வந்து கதவில் சாய்ந்தபடி நின்று கொண்டு எதிரில் அவளையும் நிற்க வைத்தாள் யாழினி..
“இங்க பாரு.. உனக்கு இப்ப சொல்றது தான்.. எல்லாரும் தூங்கின அப்புறம் நம்ம உள்ள போலாம்.. அதுவரைக்கும் இங்கேயே வாயை மூடிட்டு இரு..” யாழினி அவளை மிரட்ட அவளோ “ஏய்.. அவன் கிடக்கிறான் டி.. அரைக்கிராக்கு.. அவனுக்கு பயந்துக்கிட்டு நான் இங்க அவ்வளவு நேரம் எல்லாம் நிக்க முடியாது..”
“இங்க பாரு.. நீ இப்ப அங்க போனா நான் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வேற ட்ரெயின் புடிச்சு ஊருக்கே போயிருவேன்.. நம்ம ஊட்டிக்கு போற வரைக்கும் நீ அமைதியா வரணும் சொல்லிட்டேன்..”
“அவன் பேசிக்கிட்டே இருப்பான்.. நான் அமைதியா வரணுமா? போடி போடி இவளே..” அவள் இப்படி பேச பேச யாழினி அவளை முறைத்து பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்..
“சரியான பயந்தாங்கொள்ளி டி நீ.. இவ்வளவு அமைதியா இருந்தேன்னா எல்லாரும் உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சிட்டு போயிடுவாங்க.. நீ நெனச்சது எதையுமே பண்ண முடியாது.. யாழி.. இப்படி இருக்காதடி.. உன்னை ஏதாவது தேவை இல்லாம யாராவது சொன்னாங்கன்னா எதிர்த்து கேக்குறதுக்கு பழகிக்கோ..”
“என் மேல தப்பு இருந்ததினால தானடி அவர் திட்டுனாரு.. அதுக்கு ஏண்டி நீ சண்டைக்கு போன?”
“அதை சொல்றதுக்கு ஒரு முறை இல்லையா யாழி..? எடுத்த உடனே அவன் மடியில என்னவோ நீ ஆசையா போய் விழுந்த மாதிரி உன்னை அப்படி பேசறான்.. போதா குறைக்கு காலம் மிதிச்சிட்டே சாரி கேட்கலைன்னு கம்ப்ளைன்ட் வேற.. மிதிச்சது வலிச்சதுன்னா அப்பவே கத்த வேண்டியதுதானே.. இவன் பெரிய இயேசுநாதரு.. அப்படியே ஒரு காலை மிதிக்க மிதிக்க இன்னொரு காலை காட்டிக்கிட்டு இருந்தானாம்..”
“அடியேய்.. உன்னோட பேசி என்னால முடியலடி.. கொஞ்ச நேரம் அமைதியா வாயேன்..” என்றவள் தன் கைபேசியை எடுத்து அதில் ஏதோ ஒரு பாடலை ஓட விட்டாள்.. சட்டென அதை நிறுத்திய காவியா “இவ்வளவு நல்ல பாடகியை பக்கத்தில் வச்சுக்கிட்டு என்னால செல்ஃபோன்ல எல்லாம் பாட்டு கேட்க முடியாது.. நீயே பாடு..”
“பாட்டா… அய்யோ.. இப்ப தூங்குற டைம் வந்துருச்சு.. அடுத்தது எல்லாரையும் தூங்க விடாம கொடுமை படுத்தறிங்களா.. உங்களுக்கு கொஞ்சமாவது அடுத்தவங்களை பத்தி கவலை இருக்கான்னு கேட்டு அவர் வந்து சண்டை போடறதுக்கா? வேண்டாம்டி.. நாம செல்ஃபோன்லயே பாட்டை லோ வால்யூம்ல வச்சு கேட்டுக்கலாம்..”
“அப்படியா…? அப்படி வந்து கேட்டுடுவானா அந்த ஆளு? அப்ப நீ கட்டாயம் பாடுற.. நீ பாடி தான் ஆகணும்.. தொடங்கு..”
“உன்னை திருத்தவே முடியாது டி..” என்று பெருமூச்சு விட்டு சொன்ன யாழினி “என்ன பாட்டு பாட? அதையும் நீயே சொல்லு..” என்று கேட்க “என்னோட ஃபேவரிட் சாங்.. நீ எப்பவும் பாடுவியே அந்த பாட்டு..”
“அதா.. சரி..பாடறேன்.. ஆனா யாராவது டிஸ்டிபன்சா இருக்குன்னு சொன்னாங்கன்னா நிறுத்திடுவேன்.. ஓகேவா..?” நிபந்தனை வைத்தாள் யாழினி..
“அதெல்லாம் சொல்லும் போது பாத்துக்கலாம்.. இப்ப நீ பாடு..” யாரை பற்றியும் கவலைப்படுவதாய் இல்லை காவியா..
அந்த இரவு வேளையில் ரயில் தடதடவென ஓடிக் கொண்டிருக்க வெளியில் இருந்து சில்லென்ற தென்றல் காற்று அவள் மேனியில் பட்டும் படாமல் உரசி கொண்டு போக அந்த இதமான சூழ்நிலையை மனதில் வாங்கிய படி தன் இதழ் பிரித்து இசைக்க ஆரம்பித்தாள் யாழினி.. அவளின் பெயருக்கேற்ப அவள் பாடிய பாடலும் அந்த நிசப்தமான இரவில் இனிமையாக எல்லோரும் செவிகளிலும் தேனருவியாய் பாய்ந்து கொண்டிருந்தது..
என் மேல் விழுந்த மழைத்துளியே.. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
என்னை எழுப்பிய பூங்காற்றே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.. என்னை மயக்கிய மெல்லிசையே.. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.. உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்..
உனக்குள் தானே நான் இருந்தேன்..
அவள் பாடிக் கொண்டே இருந்தபோது உள்ளே இருந்து ஆரியன் நடந்து வருவதை பார்த்தவள் அவனை எதிரில் கண்டதும் வாயை அப்படியே மூடி பாட்டை பட்டென நிறுத்திவிட்டாள்..
கண்களை மூடி அவள் பாட்டை தலையாட்டி தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த காவியா அவள் பாட்டை நிறுத்தியவுடன் “ஏண்டி நிறுத்திட்ட..?” என்று கேட்க காவியாவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆர்யனின் புறம் யாழினி கண்ணை காட்ட மெதுவாக திரும்பிப் பார்த்தவள் அவனைப் பார்த்ததும் இடுப்பில் கையை வைத்து “வந்துட்டீங்களா? நினைச்சேன்.. இன்னும் காணுமேன்னு.. இப்ப என்ன..? இந்த பாட்டு உங்க தூக்கத்துக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கா..? ரயில் பெட்டியில பாட கூடாதுன்னு ஏதாவது சட்டம் போட வந்திருக்கீங்களா..?”
காவியா நக்கலாக கேட்க “இல்ல.. நான் உங்க கிட்ட பேச வரலை..” என்றவன் யாழினியின் பக்கம் திரும்பி “ரொம்ப அழகா பாடுறீங்க.. மெலோடியஸா இருக்கு உங்க வாய்ஸ்.. ப்ளீஸ்.. கன்டினியூயஸா பாடுங்க.. நிச்சயமா நீங்க பாடுற பாட்டு யாருக்குமே டிஸ்டர்பென்ஸா இருக்காது.. தூக்கம் வராதவங்களுக்கு கூட மென்மையா மயில் இறகால வருடுற மாதிரியானன உங்க குரல் தூக்கத்தை வர வெச்சுடும்.. நீங்க நிச்சயமா பெரிய ஃபேமஸ் பாடகி ஆவீங்க.. அப்படி நடக்கும்போது நான் இன்னைக்கு சொன்னதை நினைவில வெச்சுக்கோங்க.. இந்த ஆர்யன் இன்னைக்கு இங்க சொல்றேன்.. இது நிச்சயமா நடக்கும்.. அட்வான்ஸ் கங்கிராஜுலேசன்ஸ்..”
அமைதியாய் சொல்லிவிட்டு காவியாவை ஒரு முறைப்பான பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் அவன் இருக்கைக்கு போய் விட்டான்..
அவன் வந்து யாழினியை பாராட்டி பேசுவான் என்று எதிர்பார்க்காத காவ்யா மனதிற்குள் “பரவாயில்லையே.. இப்பதான் சண்டை போட்டோம்ங்கிற ஈகோ எல்லாம் இல்லாம ஒருத்தங்க டாலெண்டை வந்து ஓபனா அப்ரிஷியேட் பண்றானே.. கொஞ்சூண்டு நல்லவன் தான் போல..” என்றும் மனதுக்குள் நினைத்தபடி அவன் புறம் மெச்சுதலாய் ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தாள்..
அதே நேரம் யாழினி தன் மனம் கவர்ந்தவனிடம் இருந்து வந்த பாராட்டு மழையில் நனைந்த நொடியில் இருந்து தரையில் கால் நிற்காமல் பறப்பது போல் உணர்ந்தாள்.. தான் திடீரென ஒரு அழகான தேவதையாகி விட்டது போல கற்பனை செய்து கொண்டு வெகு நேரம் அந்த கற்பனை உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்..
தொடரும்..