காதலின் தீபம் ஒன்று..!! – 1

எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

பார்த்த முதல் நாளே..

உன்னைப்

பார்த்த முதல் நாளே..

காட்சிப் பிழை போலே..

உணர்ந்தேன்

காட்சி பிழை போலே..

ஓர் அலையாய் வந்து

எனை அடித்தாய்..

கடலாய் மாறி பின்

எனை இழுத்தாய்..

என் பதாகை தாங்கிய

உன் முகம் உன் முகம்..

என்றும் மறையாதே..

இரவு 9 மணி.. அருகில் இருந்த டீக்கடையில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க மனிதர்களின்   சரசரவென்ற பேச்சு சத்தமும் எந்த புறம் திரும்பினாலும் அவர்களின் சந்தடி சத்தமும் கூடைகளில் எதை எதையோ வைத்துக்கொண்டு விற்கும் விற்பனையாளர்களின் அறை கூவல்களும் அதை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களின் வளவளக்கும் பேச்சும் என அந்த ரயில் நிலையமே  பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. அந்த ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தார்கள் தந்தையும் மகளும்..

அந்த சந்தடிக்கு நடுவே வெள்ளை நிற பாவாடையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அதற்கு மேலாக சிகப்பு நிற தாவணியும் அவளுடைய மஞ்சள் நிற மேனியின் அழகை இன்னும் பளிச்சென எடுத்துக்காட்ட ஒடிந்து விழுவது போல் மெல்லிய தேகம் முழுக்க கொஞ்சம் பயத்தில் படபடக்க தன் தந்தையின் கையை இறுக பிடித்து ரயில் நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் யாழினி..

“அம்மா யாழு.. ஏம்மா இப்படி பயந்து நடுங்கற? நீ என்ன வெளிநாட்டுக்கா போக போற? இதோ எங்க இருக்கற ஊட்டிக்கு போக போறே.. அதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு பயம்..? பொம்பளை பிள்ளைங்க எதுக்கும் பயப்படக்கூடாது மா.. தைரியமா இருக்கணும்.. அங்க உனக்கு அப்பா அம்மா இல்லனாலும் அதான் உன் ஃப்ரெண்டு காவ்யா உன்னோட அதே காலேஜ்ல படிக்க வர்றா இல்ல? அவ அந்த காலேஜ்ல சேர போறாங்கறதுனால தானே நீயும் அங்கே சேர்ரன்னு சொன்னே..? இப்ப எதுக்கு இவ்வளவு பயப்படுற..? அந்த காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க போறீங்க.. மூணு வருஷம் அப்படியே கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள பறந்து போய்டும்.. அப்பா வாராவாரம் உன்னை வந்து பார்க்கிறேன்.. கவலைப்படாம போயிட்டு வாடா..” அவள் தலையை வருடியபடி அவளுக்கு தைரியம் சொன்னார் யாழினியின் தந்தை குமாரவேலு..

“நான் பயப்படல பா.. ஆனா நம்ம ஊர் மாதிரி அங்க இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட நல்ல விதமா நடந்துக்குவாங்க இல்லப்பா? அது தான்பா ஒரே டென்ஷனா இருக்கு.. காலேஜ்க்கு போனா ராகிங் எல்லாம் நடக்கும்ன்னு சொல்றாங்க.. அப்படி ஏதாவது நடந்தா நான் என்னப்பா பண்ணுவேன்? அதுதான் கொஞ்சம் படப்படன்னு இருக்குப்பா..”

அவளின் கலக்கமான விழிகளை பார்த்தவருக்கு அவளின் பயம் புரிந்தது.. குமார வேலு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இத்தனை நாள் வரை அவருடைய பணிக்கான நியமனம் அவர்கள் சொந்த ஊர் இருந்த அரக்கோணம் தாலுகாவிலும் அதை சுற்றி  இருந்த காவல் நிலையங்களிலுமே இருந்திருக்க யாழினியின் பள்ளி படிப்பு முழுவதும் அங்கேயே சுலபமாக முடிந்திருந்தது.. ஆனால் அவளின் பள்ளி படிப்பு முடிந்த கையோடு குமாரவேலுவுக்கு சென்னை பக்கம் மாற்றல் ஆகிவிட சென்னையில் தனியாக சமாளிக்க முடியாமல் குடும்பத்தோடு அங்கு குடியேறி இருந்தார் அவர்..

அரக்கோணத்தில் தன் அன்னை தந்தையின் பாதுகாப்பிலேயே அவர்கள் கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்ந்தவள் யாழினி.. படித்ததும் பெண்களுக்கான பள்ளியில் தான்.. பெண்களுக்கான பள்ளியில் படித்தாலும் கூட யாரோடும் ஒரு அரட்டை… ஒரு வம்பு பேச்சு.. ஒரு சேட்டை என எதுவுமின்றி அமைதியாய் எப்போதும் தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவள் யாழினி.. அதனாலேயே அவளுக்கு அதிகமாக அந்த பள்ளியில் தோழிகள் கிடையாது.. ஒரே ஒருத்தி தான் அவளுடைய நெருங்கிய தோழியாக சிறு வயது முதலே இருந்து வந்தாள்.. அவள் காவியா..

காவியாவின் தந்தை ஒரு வக்கீல்.. பணி நிமித்தமாக குமாரவேலும் காவியாவின் தந்தை இரத்தினசாமியும் அடிக்கடி சந்திக்க நேர்ந்திட இருவரும் குடும்ப நண்பர்கள் ஆகிப் போனார்கள்.. அதனாலேயே யாழினிக்கும் காவியா மட்டுமே உயிர் தோழியாக மாறி இருந்தாள்..

காவியா துரு துரு என்று இருப்பாள்.. யாழினிக்கு அப்படியே நேர் எதிராக இருப்பவள் அவள்.. அவள் இருக்கும் இடத்தில் அரட்டைக் கச்சேரி இல்லாமல் இருக்காது.. வெட்கம் தயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவள்.. காவியாவின் தந்தை அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு சிங்க பெண்ணாகவே வளர்த்திருந்தார்..

யாழினி காவியா இருவருக்குமே படிப்பில் பெரிதாக ஆர்வமில்லை.. ஒரு வழியாக இருவரும் பிளஸ் டூ முடித்து தேறி வந்திருந்தார்கள்.. ஆனால் படிப்பில் இருக்கும் ஆர்வமின்மையை ஈடு செய்வது போல் இருவருக்குமே இசையில் பேரார்வம் இருந்தது.. இருவருமே நன்கு பாட கூடியவர்கள்.. இருவருமே பள்ளி நேரம் முடிந்ததும் தனியாக ஒரு இசை ஆசிரியரிடம் வாய் பாட்டுக்கான பயிற்சியை மேற்கொண்டு இருந்தார்கள்..

இந்நிலையில் குமாரவேலு இரண்டு மாதத்திற்கு முன் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரிக்கு குடியேறி வந்ததும் கல்லூரியில் சேர்வதற்கு இருக்கும் இரண்டு மாதங்களை பயனுள்ளதாய் போக்குவதற்காக யாழினியை வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு இசை பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார் அவர்..

அந்தப் இசை பயிற்சி பள்ளியில் யாரேனும் விடலைப் பையன்கள் அவளிடம் பேச வந்தால் கூட முற்றிலுமாக அமைதி காத்து ஒதுங்கி வந்து விடுவாள் அவள்.. அப்படிப்பட்டவளுக்கு இப்போது இருபாலார் படிக்கும் ஒரு இசை பயிற்சி கல்லூரியில்.. அதுவும் வெளியூரில் இருக்கும் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கப் போகிறோம் என்ற நினைப்பே மிகுந்த பதட்டத்தையும் படபடப்பையும் தந்தது..

என்னதான் குமாரவேலுக்கு அவள் நிலை புரிந்தாலும் அவளை மேலும் பயப்படுத்த விரும்பாமல் தைரியம் கொடுக்கும் விதமாக அவளை தன் பக்கம் திருப்பி தோள்களை பற்றி “இங்க பாரு.. நான் ஒரு போலீஸ்காரன்.. நீ என்னோட பொண்ணு.. நீ போய் இப்படி பயப்படலாமா? ராகிங்கை எல்லாம் ஜாலியா எடுத்துக்கோ.. ரொம்ப எல்லை மீறி போச்சுன்னா உடனே எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு..  நான் பாத்துக்குறேன்.. அப்படி இல்லன்னா உங்க காலேஜ் பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணு.. எதுக்கும் பயப்படக்கூடாது.. எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்.. அப்புறம் நான் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கு இல்ல? இந்த காதல் கத்திரிக்காய் இதெல்லாம் நம்ம வீட்டுக்கு ஒத்தே வராது.. என் பக்கம் சொந்தக்காரங்க உங்க அம்மா  பக்க சொந்தக்காரங்க எல்லார் முன்னாடியும் என்னை தலை குனிய வைக்க மாட்டேன்னு நான் நம்புறேன்.. என்ன?.. நம்பலாம் இல்ல..?”

அவர் கொஞ்சம் இறுகிய குரலில் கேட்க யாழினியோ “அப்பா.. எனக்கு முதல்ல அங்க எல்லாரோடயும் பேசறது பழகறதை நினைச்சாலே பதட்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா காதல் கத்திரிக்கான்னு என் நெலைமை புரியாம பேசி கிட்டு இருக்கீங்களே பா.. அதுக்கு எல்லாம் சான்சே இல்லப்பா..” தெளிவாய் சொன்னாள் அவள்..

அவளுக்கு என்ன தெரியும் முதல் நாளே அவள் கூற்று தோற்றுப் போகப் போகிறது என்று..

இவள் இப்படி பேசிக் கொண்டே இருக்கும் நேரத்தில் ரயிலில் இருந்த ஒரு பெட்டியின் வாயிலில் இருந்து “ஏய் யாழி.. அங்கிள்.. இங்க.. இங்க.. இந்த பக்கம் பாருங்க..” என்று யாழினி பக்கம் கை நீட்டி கத்திக்கொண்டு இருந்த ஒரு பெண் அவர்கள் அவள் பக்கம் திரும்பி பார்த்தவுடன் “இந்த கம்பார்ட்மெண்ட்ல தான் நம்ம சீட்டு இருக்கு.. சீக்கிரம் வாங்க.. வேகமா வந்த ஏறுடி.. ட்ரெயின் கிளம்ப இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு..” அவளுடைய ஒரே நெருங்கிய தோழி காவ்யா அவளை அந்த ரயில் நிலையத்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் விதமாக சத்தமாக கூவி கூவி அழைத்துக் கொண்டிருந்தாள்..

யாழினியை இழுத்துக்கொண்டு அந்த ரயில் பெட்டியை நோக்கி வேக நடை போட்டார் குமாரவேல்.. சரியாக அந்தப் பெட்டி உள்ளே அவள் ஏறவும் ரயில் வண்டியில் கிளம்புவதற்கான ஹாரன் அடிக்கவும் சரியாக இருந்தது..

“அம்மாடி. பார்த்து நடந்துக்கோ மா.. நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு.. அனாவசியமா யார் கிட்டயும் பேச வேண்டாம்.. எப்பவும் காவியாவை துணைக்கு வச்சுக்க.. ஏதாவது பிரச்சனைனா உடனே அப்பாக்கு ஃபோன் பண்ணி சொல்லு.. நான் உடனே கிளம்பி வந்துடுறேன்.. பார்த்துமா.. ஜாக்கிரதை..”

அவர் சொல்லிக் கொண்டே இருக்கும் நேரம் ரயில் வண்டி நகரத் தொடங்க அவர் கண்கள் ஏனோ கலங்கியது.. அது நாள் வரை தன் பெண்ணை விட்டு பிரிந்ததில்லை அவர்.. முதல்முறையாக அவள் அவரை விட்டுப் பிரியவும் கொஞ்சம் மனம் பாரமாய் தான் போனது அவருக்கு..

அவ்வளவு நேரம் அவளுக்கு தைரியம் சொல்லி பேசிக் கொண்டிருந்தவருக்கு அந்த நொடி அவள் அங்கு போய் தனியாக என்ன செய்வாளோ என்று சிறிது கவலை தொற்றிக் கொண்டது.. ஆனாலும் அதை முகத்தில் காண்பிக்காமல் “போயிட்டு வா தங்கம்.. ஏதாவது வாங்கணும்.. பணம் வேணும்னா உடனே அப்பாவுக்கு சொல்லு.. அப்பா அனுப்பி வைக்கிறேன்..”

அவர் சொல்ல அவளுக்கும் அவர் பேசியதை கேட்டு சிறிது கண் கலங்க தொடங்கியது..

அவள் அவர் கையைப் பிடித்தபடி “அப்பா.. அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்கப்பா.. அவங்களுக்கு வேற கொஞ்சம் உடம்பு சரியில்லை.. நல்லா ஆனதும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லுங்கப்பா..”

இப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில் வேகம் பிடித்தது.. “ஏய் யாழி.. அப்பா விழுந்துட போறாரு.. கையை விடுடி..” என்று காவியா சொல்ல மனமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன் அப்பாவின் கையை விடுவித்து அவரையே பார்த்தபடி அந்த பெட்டியின் வாயிலிலேயே நின்றிருந்தாள் யாழினி..

குமாரவேலுவும் சிறிது தூரம் ரயிலோடு ஓடியவர் ஓரளவுக்கு மேல் ஓட முடியாமல்  தன் மகளை பார்த்து கையை அசைத்தபடி நின்றுவிட்டார்..

தன் தந்தையின் உருவம் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தவளை காவியா “போதும்டி.. இதோ இன்னைக்கு புதன்கிழமை.. சனிக்கிழமை உங்க அப்பா கிளம்பி வந்துட போறாரு.. நாலு நாளைக்கு பாக்காம இருக்கிறதுக்கு ஆனாலும் இவ்வளவு பண்ணக்கூடாது டி நீ.. என்னை பாரு.. ரயிலேத்தி விட எங்க வீட்ல இருந்து ஒரு ஈ காக்கா கூட வரல.. அவங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்காங்க.. இத்தனைக்கும் எனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்கானுங்கன்னு பேரு.. ரெண்டு தடி மாடுல ஒன்னாவது நகரணுமே… நானே தான் பேக் எல்லாம் தூக்கிக்கிட்டு தனியா வந்தேன்.. ஆனா நீ கொடுத்து வச்சவடி.. உங்க அம்மாவும் அப்பாவும் உன்னை அப்படி பார்த்துக்கறாங்க.. உனக்கு என்ன..? நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு.. கூட பொறந்தவங்க வேற யாரும் கிடையாது.. எல்லாமே உன் ராஜ்யம் தான்.. எனக்கு அப்படியா?” அலுத்துக் கொண்டாள் காவியா..

“ஏய்.. உன் அண்ணனுங்கன்னு சொல்லாத.. அவங்க எனக்கும் அண்ணனுங்க தான்.. உன்னை எப்படி பார்த்துக்கறாங்களோ அதே மாதிரி தான் என்னையும் பார்த்துக்கிறாங்க.. அதனால அவங்க நம்ம அண்ணனுங்க..”

“நீ தான் அவனுங்களை மெச்சுக்கணும்.. அதான் அவங்க என்னை பார்த்துக்கற லட்சணம் தெரியுதே.. எப்படா இந்த தொல்லை ஒழியும்ன்னு என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டு இருக்காங்க.. இதுல அவனுங்க பாத்துக்கிறானுங்க.. நீ வேற.. இப்ப நான் வந்துட்டேன் இல்ல..? எங்க வீட்டிலேயே என் ரூம் தான் இருக்கறதிலேயே கொஞ்சம் பெரிய ரூம்.. ரெண்டு தடிமாடுகளும் அந்த ரூமுக்கு போட்டி போட்டு சண்டை போட்டுக்கிட்டு இருப்பானுங்க.. எங்க அம்மா அப்பா நடுவுல பூந்து சமாதானப்படுத்திட்டு இருப்பாங்க.. என்னை பத்தி நினைக்க கூட அவங்களுக்கு நேரம் இருக்காது..” அவள் புலம்பலாகவே சொன்னாள்..

“ஏய்.. அப்படி எல்லாம் பேசாதடி.. அவங்க வெளியில காமிச்சுக்கலைன்னா கூட உள்ளுக்குள்ள உன் மேல அக்கறை பாசம் எல்லாம் இருக்கும்.. உன்னை இண்டிபெண்ட்டா வளர்த்து இருக்காங்க.. இப்ப நீ தைரியமா இவ்வளவு தூரம் வந்திருக்க பாரு.. வெளியூர் போறதை பத்தி உனக்கு ஒரு டென்ஷனும் இல்லை.. ஆனா எங்க அப்பா அம்மா என்னை பொத்தி பொத்தி வளர்த்ததனால எனக்கு எவ்வளவு டென்ஷனா இருக்கு தெரியுமா? இப்போ அங்க யாரு இருப்பாங்களோ எப்படி இருப்பாங்களோ என்ன பண்ணுவாங்களோன்னு ஒரே படபடன்னு இருக்கு.. நீ என்னடானா உங்க வீட்ல இருக்கிறவங்களை எல்லாம் கரிச்சு கொட்டிக்கிட்டு இருக்கே..”

“ம்ம்.. அதுவும் சரிதான் என்னால எல்லாம் நீ அப்படியே உங்க அப்பா சொன்ன சொல்லை மறுக்காம அடங்கி ஊம் கொட்டிட்டு அவர் சொல்றது அத்தனையும் செஞ்சுகிட்டு இருக்கிற மாதிரி எல்லாம் இருக்க முடியாதுப்பா.. எனக்கு வீட்டுக்கு அடங்காத புள்ளன்னு பேரு.. அப்படி இருக்க தான் எனக்கு பிடிச்சிருக்கு.. நம்ம என்ன செய்யணும்னு நம்ம தாண்டி முடிவு பண்ணனும்.. அடுத்தவங்களை முடிவு பண்ண விடக்கூடாது.. அவங்க வேணா அவங்க கருத்தை சொல்லட்டும்.. ஆனா முடிவு நம்மளோடதா இருக்கணும்.. அவங்க சொல்றபடி நாம வாழ்ந்தோம்னா அப்போ நம்ம வாழற வாழ்க்கை நம்மளோடதா இருக்காதுடி.. அவங்களோட வாழ்க்கையா தான் இருக்கும்..”

“ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்.. ஆனா நமக்கு பிடிச்சவங்க நாம மதிக்கிறவங்க நம்ம கிட்ட ஒன்னு சொல்லி அதை நம்ப செஞ்சு முடிக்கறப்ப அவங்க முகத்துல ஒரு திருப்தி தெரியும் பாரு.. அதுக்கு இந்த சுதந்திரத்தை வெலையா கொடுக்கலாம்னு எனக்கு தோணுதடி..”

“அது சரி… இப்படி செஞ்சா அவங்க முகத்துல சிரிப்பு இருக்கும்.. உன் முகத்தில் இருக்குமா? யோசி..” பேசிக்கொண்டே அவர்கள் இருக்கையை தேடி இருவரும் நகர.. ஒருவழியாக அவர்களின் இருக்கைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்..

“ஏய்.. இது தாண்டி நம்ம சீட்டு.. அந்த விண்டோ சீட்டும் அதுக்கு பக்கத்துல இருக்குற சீட்டும்.. ஒரு அப்பர் பர்த்.. ஒரு மிடில் பர்த்.. நம்ம ஹேண்ட்பேக் மேல வெச்சிரலாம்… இந்த லக்கேஜ் எல்லாம் சீட்டுக்கு அடியில வைக்கலாம்” என்ற காவ்யா தன் கைப்பையை அப்படியே எடுத்து மேல் பர்த்தில் வைத்தாள்..

ஆனால் அவர்கள் அமர வேண்டிய இருக்கையில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருக்க இவர்களைப் பார்த்தவுடன் இந்த பெண்மணி “ஓ.. இது உங்க சீட்டா..? அங்க உக்கார்றதுக்கு போர் அடிச்சுது.. அதான் ஓரமா ஜன்னல் சீட்ல வந்து உட்கார்ந்துட்டேன்.. நான் அங்க நகர்ந்துக்கிறேன்.. நீங்க வந்து உட்காருங்க..” என்க “இல்ல பரவால்ல ஆன்ட்டி.. நீங்க அங்கேயே உட்கார்ந்துக்கோங்க.. நாங்க இந்த பக்கம் ஒக்காந்துக்கிறோம்.. ஒன்னும் பிராப்ளம் இல்ல..”

அவர்களிடம் காவியா சொல்லிவிட்டு அந்த இருக்கை பகுதிக்கு வெளியே அப்படியே கால் மடித்து அமர்ந்து தன்னுடைய பெட்டியை அந்த இருக்கைக்கு அடியில் தள்ளி வைத்தாள்..

“ஏய் யாழி.. என்னடி அப்படியே நிக்கிற? உன் பேகை மேல வச்சுட்டு பெட்டியை சீட்டுக்கு அடியில வை..”

அந்த வயதான பெண்மணியின் கணவர் எதிரே இருந்த இருக்கையில் ஜன்னல் அருகில் அமர்ந்திருக்க அவர் பக்கத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்.. எப்போதும் போலவே எவரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் தோழி  சொன்னதை கேட்டு அவள் சொன்ன வேலையில் இறங்கினாள் யாழினி..

இரு பக்க இருக்கைக்கும் நடுவில் நகர்ந்து சென்றவள் மேலே தன் கைப்பையை வைத்துவிட்டு தன் பெட்டியை இருக்கைக்கு அடியில் வைப்பதற்காக அப்படியே கால் மடித்து கீழே உட்கார போனாள்.. தடுமாறி தன் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த இளைஞனின் மடியில் அப்படியே அமர்ந்தார் போல் விழுந்தாள்..

அவனும் ஏதோ ஒரு குழந்தையை தாங்குவது போல் அவளைத் தாங்கி இருந்தான்.. அவன் முகத்தை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தவள் தான் இருக்கும் நிலையில் அப்படியே உறைந்து போயிருந்தாள்..

கல்வெட்டாய் அவன் முகம் அவளின் கண்கள் வழி இதயத்தில் அழுத்தமாய் அழியாத பிம்பமாய் அந்த நொடியே பதிந்து போனது..

தொடரும்..