காதலின் தீபம் ஒன்று..!! – 9
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

அந்தக் கல்லூரியில் மொத்தம் 10 ஸ்டூடியோக்கள் இருந்தன.. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த ஸ்டூடியோக்களுக்குள் அவரவர்க்கென  நியமித்த இசை குழுக்களுடன் தீவிரமாய் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள் அனைவரும்..

தினமும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு வந்தவுடன் யாழினியிடம் காவியா “நான் ப்ராக்டிஸ்க்கு கிளம்புறேன் டி.. ஆர்யன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. டைமுக்கு போலனா அவ்வளவுதான்.. திட்டி திட்டி என் காதே பஞ்சராயிடும்.. வேலை செய்யும் போது அவனோட மூஞ்சியை நீ பார்க்கணும்.. அப்படியே சீரியஸா அந்த நேரத்தை வேஸ்ட் பண்ணினா உயிரே போயிடுங்கற மாதிரி ஒரு எக்ஸ்ப்ரஷன் இருக்கும் அவன் முகத்தில.. ஆனா அவன் அப்படி இருக்கிறது தாண்டி கரெக்ட்.. அப்படி இருக்கறதுனால தான் அவன் வர்க்கோட அவுட் புட்டு அவ்வளவு பெர்ஃபெக்ட்டா இருக்கு.. ஹீஸ் எ வர்க்கஹாலிக்..”

சொல்லிவிட்டு துள்ளி குதித்துக் கொண்டு அவள் பயிற்சி செய்யும் ஒலிப்பதிவு அறைக்கு ஓடி விடுவாள்..

ஒவ்வொரு நாளும் அவள் அப்படி உற்சாகமாக செல்லும் போது யாழினிக்கு மனதிற்குள் சொல்லொணா வலியும் வேதனையும் ஏற்படும்.. அந்த ஒரு வாரத்தில் காவியாவோடு இணைந்து வேலை செய்து கொண்டு இருந்த காரணத்தினாலோ என்னவோ யாழினியின் நினைவு கூட மகிழனுக்கு வரவில்லை.. ஒரு வாரமாக அவளை அவன் சந்திக்க கூட இல்லை என்பது அவளுக்கு இன்னும் விரக்தியையே தந்தது..

போட்டிக்கான நாளும் வந்தது.. எல்லோருடைய இசை படைப்பையும் மேடையில் நிகழ்த்தி முடித்து விட்டிருக்க பிரணவ் மற்றும் மகிழனின் இசை அமைப்பில் உருவான பாடல்கள் பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றிருந்தன..

அதுவும் யாழினியின் குரல் வளத்தை பற்றியும் மகிழனின் இசையமைப்பை பற்றியும் கல்லூரியில் சிலாகிக்காதவர்கள் ஒருவர் கூட இல்லை எனலாம்.. அந்த அளவிற்கு இருவரும் அவரவர் பாணியில் அத்தனை பேரையும் ஈர்த்திருந்தார்கள்..

அப்போது ப்ரணவ்.. யாழினி.. காவியா.. ஆரியன்.. மேலும் அவர்களின் சில நண்பர்கள் என வரிசையாய் ஒரு இடத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க ஆர்யன் பின்னே அமர்ந்து இருந்த ஒரு நண்பன் “மச்சான். நீ சூப்பரா பெர்ஃபார்ம் பண்ணடா.. காவியாவும் நல்லா தான் பாடினா.. ஆனா எனக்கு என்னவோ யாழினியோட வாய்ஸ் இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட மாதிரி இருக்கு.. என்னதான் நீ நல்லா பெர்ஃபாம் பண்ணி இருந்தாலும் யாழினி பாடுனதுனால ப்ரணவ் ஜெயிச்சிருவான் போலயே..”

அந்த நண்பன் சொன்னதை கேட்டு முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான் மகிழன்.. அதை பார்த்த யாழினிக்கோ முகத்தில் கலவரம் மூண்டது.. அந்த நண்பன் சொன்ன வார்த்தை அவனுக்கு ரொம்பவும் கோபத்தை மூட்டிவிட்டதோ என்று அச்சம் கொண்டாள் அவள்..

ஏற்கனவே அவன் நிலை இப்படி இருக்க எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார் போல் நீதிபதியாக இருந்த இசையமைப்பாளர் “ஆக்சுவலா எனக்கு ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு.. மகிழனோட இசையில யாழினி பாடினா எப்படி இருக்கும்னு கேட்கணும்னு ஒரு விருப்பம்.. ஆனா இன்னிக்கு அப்படி நடக்கலைன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு.. எனக்காக அப்படி ஒரு பாட்டை இங்க பாட முடியுமா?”

அவர் அப்படி நுண்பேசியில் சொன்னது தான் உடனே அங்கே சுற்றி இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து யாழினி ஆர்யன் என்று கத்தி உற்சாகப்படுத்த யாழினி அமைதியாக உடனே மேடை ஏறி வந்தாள்..

ஆரியனோ சிறிது நேரம் அங்கேயே மௌனமாக நிற்கவும் “உங்களுக்கு இந்த மியூசிக் பண்றதுல இஷ்டம் இல்லையா?” என்று அந்த இசை அமைப்பாளர் கேட்டார்..

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்.. இதோ வரேன்.. ஆனா இப்போ புதுசா போட்ட மியூசிக் எதுவும் என் கையில அவெய்லபிளா இல்ல.. எந்த லிரிக்ஸூம் இல்லை.. ஏற்கனவே மூவிஸ் ல வந்த மியூசிக் ஏதாவது அவங்க பாடுனாங்கன்னா நான் கீ போர்டுல அந்த மியூசிக்கை 100% ரீகிரியேட் பண்றதுக்கு ட்ரை பண்றேன்”

மேடை மேலே சென்றவன் கீ போர்டு முன்னால் அமைதியாய் யாழினியை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருக்க அவள் அவன் என்ன பாடல் என்று சொல்வான் என்று காத்திருந்தாள்.. அவன் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கீபோர்டையே பார்த்தபடி அமர்ந்திருக்க அவளுக்கு இன்னும் சங்கடமாகி போனது..

ஒருவேளை அவனுக்கு  இப்போது தன் பாடலுக்கு ஏற்ப இசையை வாசித்து கோர்ப்பதில் விருப்பமில்லையோ.. விருப்பமில்லாமல் வாசிக்க சொன்னதில் அவன் கோபம் கொண்டு விட்டானோ என்று மிகவும் பதட்டப்பட்டாள்.. ஆனால் அவ்வளவு பேர் முன்னிலையில் அதை காண்பித்துக் கொள்ள முடியாமல் அவளாய் ஒரு பாடலை பாடத் தொடங்கினாள்..

எவனோ ஒருவன்
வாசிக்கிறான்
இருட்டில் இருந்து
நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து
யோசிக்கிறேன்
அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான்
கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ
அறியவில்லை
காட்டு மூங்கிலின்
காதுக்குள்ளே
அவன் ஊதும்
ரகசியம் புாியவில்லை..

புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி..
உள்ளே உறங்கும்
ஏக்கத்திலே உனக்கும்
எனக்கும் சாிபாதி

கண்களை வருடும்
தேனிசையில் என் காலம்
கவலை மறந்திருப்பேன்..
இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ
இறந்திருப்பேன்

உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா..?
இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா..?

எந்தன் சோகம்
தீா்வதற்கு இதுபோல்
மருந்து பிறிதில்லையே..
அந்தக் குழலை
போல் அழுவதற்கு
அத்தனை கண்கள்
எனக்கில்லையே..

அந்த கடைசி வரிகளைப் பாடும்போது யாழினியின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் பெருக்கெடுத்து வர சட்டென தலையை குனிந்து மற்றவருக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அவள்..

அமைதியாக வாசித்துக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் அங்கு ஏனோ அமர முடியாமல் சட்டென அங்கிருந்து எழுந்து விறுவிறுவென மேடையிலிருந்து இறங்கி எங்கோ விடுவிடுவென நடந்து போய் விட்டான்.. இசையமைப்பாளர்.. கல்லூரி முதல்வர்.. அங்கிருந்த பேராசிரியர்கள் உட்பட அத்தனை பேரும் அவன் செய்ததை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..

யாழினிக்கோ இன்னமும் கண்கள் கலங்கி போயின.. அவன் அங்கிருந்து வேறு ஒரு தனி இடத்திற்கு சென்றதும் அவன் பின்னாலேயே ஓடினாள் காவியா..

“என்னாச்சு இவனுக்கு.. ஏன் இப்படி பிஹேவ் பண்றான்?” என்று அவனின் விசித்திரமான நடவடிக்கை பற்றி எண்ணியபடியே அவன் போன திசையில் போனவள் அவன் அந்த கல்லூரியின் பின்னால் இருந்த ஒரு காலி திடலில் இருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து அந்த சிமெண்ட் இருக்கையை ஓங்கி ஓங்கி கையால் குத்திக் கொண்டிருந்ததை பார்த்து பதறி போனாள்..

அவன் அருகில் வேகமாக சென்று அவன் அப்படி குத்தாமல் அவன் கையைப் பிடித்து தடுத்தவள் “டேய்.. பைத்தியமா டா உனக்கு? என்னடா கோபம் உனக்கு? எதுக்குடா இவ்வளவு கோவப்படுற? யாழினி நல்லா பாடறான்னு எல்லாரும் சொன்னதை கேட்டு உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது? நம்ம இந்த காலேஜுக்கு முதல் முதல்ல ட்ரெயின்ல வரும்போது நீயே அவ நல்லா பாடறான்னு சொல்லி இருக்கியேடா..”

ஒரு நிமிடம் அவளுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்தவன் சில நொடிகள் அமைதியாய் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்து விட்டு கண்ணை திறந்தவன் “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீயும் நல்லா தானே பாடினே.. எல்லாரும் ஃபுல் க்ரெடிட்டையும் அவளுக்கே கொடுக்குறாங்க.. ப்ரணவ் மியூசிக் போடலனா அவ எப்படி நல்லா பாடி இருக்க முடியும்? அது மட்டும் இல்லாம என் மியூசிக்கை பாராட்டுறவங்க நீ பாடுனதை பத்தி கண்டுக்கவே இல்ல.. நீ பாடாம என் மியூசிக் மட்டும் தனியா எப்படி நல்லா இருந்திருக்க முடியும்..? எனக்கு அதுதான் கொஞ்சம் கோவமா வந்தது.. வேற ஒன்னும் இல்ல.. காவி.. என்னை கொஞ்ச நேரம் தனியா விடு ப்ளீஸ்..”

அவன் அப்படி சொல்லவும் “ஏய் அவனும் நானுமே அதுக்கு ஃபீல் பண்ணல.. நீ எதுக்குடா இவ்ளோ கோவப்படுற? ஆனா யோசிச்சு பாரு.. நிஜமாவே யாழினி எவ்வளவு நல்லா பாடறா? அவளோட நான்லாம் போட்டி போடவே முடியாது.. நான்லாம் அதிக பட்சம் ஒரு லோக்கல் சிங்கர் ஆகலாம்.. அவ்வளவுதான்.. ஆனால் யாழினி அப்படி இல்லடா.. அவ நெனச்சா இந்த உலகம் முழுக்க அவ குரல் எல்லா பக்கமும் ஒலிக்கும்.. அவளோட குரல்ல ஒரு பாட்டு இந்த காலேஜை விட்டு வெளியே ஒலிச்சாலே அவ அவ்ளோ ஃபேமஸ் ஆயிடுவா..”

அவள் சொன்னதைக் கேட்டவன் அவள் தலையை ஆதுரமாய் வருடி “நீ ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் காவியா.. உன்னை மாதிரி நல்ல ஃப்ரெண்ட் கிடைக்க யாழினியும் சரி.. நானும் சரி.. ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. சரி.. நீ போ.. நான் இங்கேயே இருக்கேன்.”

அவன் அப்படி சொல்லவும் அவளோ பிடிவாதமாய் “அது எப்படி நாங்க எல்லாம் அங்க இருப்போம்.. சார் மட்டும் இங்க இருப்பீங்களா? உனக்கு தாண்டா ஃபர்ஸ்ட் ப்ளேஸ் கிடைக்கும்.. அதை அனவுன்ஸ் பண்ணும்போது நீ அங்கே இல்லைன்னா எப்படி? நீ இப்ப வரியா இல்லையா?”

அவனோ அதற்கு மேல் அவளிடம் மறுக்க முடியாமல் தலையை முன்னிருந்து பின்னாக கோதியவன் “வரேன்.. ஒரு 2 மினிட்ஸ் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் இருடி..” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்..

“உனக்கு இவ்ளோ கோவம் எல்லாம் வருமாடா? நீ கோபப்படுறதை முதல் தடவையா பார்க்கிறேன்.. அதுவும் நீ எனக்காக கோவப்பட்டது ரொம்ப பிடிச்சிருக்கு டா எனக்கு..” அவள் அவன் கன்னத்தைக் கிள்ளி சொல்ல அவனும் ஒரு சிறிய புன்னகையை சிந்தினான்..

“நீ நல்லா பாடுறேன்னு சொல்லி யாழினியை கண்டுக்கலைனாலும் நான் இதே தான் பண்ணி இருப்பேன்.. என்னை பொறுத்த வரைக்கும் என் மியூசிக் நல்லா இருக்குன்னு சொன்னா அதுக்கு நான் மியூசிக் போட்டது மட்டும் காரணமா இருக்காது.. அதுல ஒரு பார்ட் உன் குரல்.. சோ.. அது எப்படி என் ம்யூசிக்கை பாராட்டுறவங்க உன் குரலை பாராட்டாம இருப்பாங்க..? தட்ஸ் சோ ரூட்..”

அவன் தலையை விளையாட்டாய் கலைத்து விட்டவள் “போதும்டா சாமி.. சரியான துர்வாச முனிவர் போல நீ.. எவ்வளவு கோவப்படுற..? சரி வா.. போலாம்.. இப்படியே உக்காந்து இருந்தா உன் கோபம் இன்னும் இன்னும் அதிகம் தான் ஆகும்.. என்னோட வா..” என்றபடி அவன் கையை பிடித்து மறுபடியும் போட்டி நடந்த இடத்திற்கு இழுத்துச் சென்றாள்..

காவியாவோடு அவன் அங்கு மீண்டும் வந்ததும் அவனைப் பார்த்த யாழினிக்கோ அவன் கொஞ்சம் அமைதி அடைந்திருந்தாலும் இன்னும் சற்று கோபமாகவே இருப்பது போல் தோன்றியது..

“ஏன்டா.. ஏன் இவ்ளோ கோவமா இருக்க? என் மேல தான் கோவமா இருக்கியா? ஐயோ கோவப்படாதடா.. ப்ளீஸ்.. அதை என்னால தாங்கிக்கவே முடியல.. நீ என் பக்கம் திரும்பியே பார்க்கலைன்னா கூட பரவால்ல.. தயவு செஞ்சு உன் வெறுப்பை என்கிட்ட காட்டாத.. எனக்கு ரொம்ப வலிக்குதுடா..”

மனதில் இருந்து அவன் விழிகளை பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள் யாழினி.. அவனோ அவளையே தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அந்தப் பார்வையில் அவளால் அவனின் மனநிலையை அறியவே முடியவில்லை.. கோபமாக இருக்கிறானா வருத்தமாக இருக்கிறானா அல்லது சலனமற்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறானா எதுவுமே புரியவில்லை அவளுக்கு.. ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது.. அவன் மகிழ்ச்சியாய் இல்லை.. அது அவளை இன்னும் துன்பத்திற்குள் ஆழ்த்தியது..

நிகழ்ச்சி நிறைவடைய போகும் நேரம் தீர்ப்புகளை வழங்க போட்டியின் நீதிபதி மேடை ஏறி வரவும் எல்லோருமே ஆவலுடன் மேடையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

அங்கே வந்த நடுவர் “ம்ம்.. இங்கே இருக்கிற எல்லாருக்கும் இங்க நடந்த பர்ஃபாமென்ஸ் எல்லாம் பார்த்து ஓரளவுக்கு எந்த எந்த மியூசிக் டாப் பிளேசஸ் புடிச்சிருப்பாங்கன்னு தெரிஞ்சிருக்கும்.. ஆனா உங்களுக்கு இந்த காம்படிஷன்ல முதல் பரிசு வாங்க போறது யாருன்னு குழப்பம் இருக்கா?”

அவர்களில் ஒரு சாரார் “யாழினி.. யாழினி..” என்று கத்த இன்னொரு சாரார் “ஆர்யன்.. ஆர்யன்” என்று ஒரு சேர கூச்சலிடவும் “ஆரியன்.. யாழினி.. ஆர்யன்.. யாழினி.. ஆரியன்.. யாழினி..” என்று திரும்பத் திரும்ப அவர்கள் இருவரின் பெயரே அந்த அரங்கம் அதிர எதிரொலிக்க நீதிபதியாய் வந்திருந்த இசை அமைப்பாளர் சற்றே சிரித்து விட்டு “இங்க போட்டி மியூசிக் டைரக்ஷன்க்கு.. நீங்க என்ன..? ஒரு மியூசிக் டைரக்டர் பேரையும் ஒரு சிங்கர் பேரையும் சொல்றீங்க..? ஆர்யன் பிரணவ்ன்னு தான நீங்க சொல்லணும்? ஓகே.. இப்ப அதை விட்டுடுவோம்.. இந்த ரெண்டு பேர்ல யாரு முதல் பரிசை வாங்குவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க..?”

அவர் கேட்க அங்கே முழுவதுமாக நிசப்தம் குடி கொண்டது.. யாராலுமே இருவரில் எவர் பரிசு வாங்குவார் என்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை.. ஏன் என்றால் இரண்டு இசையமைப்புகளுமே எல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருந்தன..

“சோ.. உங்களுக்கும் தெரியல.. இதே மாதிரி தான் எங்களுக்கும் கஷ்டமா இருந்தது.. இந்த ரெண்டு மியூசிக்ல ஒண்ணை மட்டும் எங்களால செலக்ட் பண்ண முடியல.. ஆர்யனோட பர்ஃபார்மென்ஸ்ல அவருடைய மியூசிக் எல்லார் மனசையும் அப்படியே சரேல்ன்னு எடுத்துட்டு போயிடுச்சு.. ஆனா பிரணவோட மியூசிக் கொடுத்த பாட்டுல யாழினி செஞ்ச இம்ப்ரூவ்மெண்ட்ஸ் அதுல அவங்க கொட்டி இருந்த எமோஷன்ஸ்.. அது எல்லோரோட மனசையும் தொட்ட விதம்.. இதெல்லாம் அந்த மியூசிக்கை எங்கேயோ கொண்டு போய் நிறுத்திட்டது.. ஒரு மியூசிக் டைரக்டர் நல்ல மியூசிக் கொடுத்தா மட்டும் போதாது.. பாடறவங்களுக்கு இப்படி ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து பாட வைக்கிறது ஒரு சக்ஸஸ்ஃபுல் மியூசிக் டைரக்டருக்கான ரொம்ப முக்கியமான அடையாளம்.. அந்த விதத்துல பிரணவ் ஹஸ் மேட் எ வெரி ஸ்மார்ட் சாய்ஸ்.. இப்போ இவங்க ரெண்டு பேரும் ஒரு மியூசிக் டைரக்டரான எனக்கே ஒரு டஃப் ஜாப் கொடுத்து இருக்காங்க.. இவங்களுக்குள்ள யாரு பெஸ்ட்னு என்னால முடிவு பண்ண முடியல.. அதனால நாங்க என்ன டிசைட் பண்ணி இருக்கோம்னா ரெண்டு பேருக்குமே முதல் பரிசு கொடுக்கலாம்னு நாங்க டிசைட் பண்ணி இருக்கோம்.. கங்கிராஜுலேசன்ஸ்.. ஆர்யன் அன்ட் ப்ரணவ்.. வித் ஸ்பெஷல் மென்ஷன் யாழினி..”

அவர் சொன்னவுடன் யாழினி ஆரியனின் விழிகள் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன.. ஆனால் ஆரியன் முகத்தில் இருந்து அவன் என்ன உணர்கிறான் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை யாழினியால்.. சலனமற்று இருந்தது அவன் முகம்.. யாழினிக்கும் தான் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கவே கூடாதோ என்று தோன்ற ஆரம்பித்தது.. ஒருவேளை தன்னால் தான் அவன் தனியாக முதல் பரிசு வாங்கும் வாய்ப்பை இழந்துவிட்டானோ.. அதனாலேயே தன் மேல் கோபமாக இருக்கிறானோ என்று தோன்றியது..

அங்கே மேடையில் பேசிக் கொண்டிருந்த இசையமைப்பாளரோ “அப்புறம் இன்னொரு சந்தோஷமான நியூஸ்.. என்னோட ஒரு மியூசிக்கல் ஆல்பமோட ஷூட்டிங் தொடங்க போகுது.. அதுக்கான மியூசிக் டைரக்ஷன் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல தொடங்கிடுவேன்.. அதுல நான் யாழினியை பாட வைக்கலாம்னு முடிவு செஞ்சு இருக்கேன்.. மிஸ்.. யாழினி.. உங்களுக்கு என் ம்யூசிக்ல பாடறதுக்கு ஓகேவா?” என்று கேட்க அவளும் அழகாய் புன்னகைத்தபடி அமைதியாக “நிச்சயமா சார்.. தேங்க்யூ ஸோ மச்.. என்று வாயசைத்தாள்..

ஆனால் இது எதுவுமே அவளுக்கு முழு இன்பம் தரக்கூடியது இல்லை என்று அந்த இசையமைப்பாளருக்கு புரியவில்லை..

தொடரும்..