காதலின் தீபம் ஒன்று..!! – 8

எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

 

ந…ந…நா.. என்ற ஆலாபனையோடு தொடங்கி கணீர் என்ற அதே சமயம் உயிரை உருக வைக்கும் குரலில் யாழினி பாடிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த அனைவரும் மூச்சு விடவும் மறந்தது போல் அத்தனை அமைதியாக இருந்தது அந்த அரங்கம்.. 

 

யாழினியின் குரலும் மகிழனின் கீ போர்டில் எழுப்பிய குழலிசையையும் தவிர வேறு எந்த சின்ன சத்தமும் அந்த அரங்கில் கேட்கவில்லை.. 

 

“எனை என்ன செய்தாய் வேங்குழலே..” என்று அவள் பாடி முடிக்கவும் அடுத்த ஒரு நிமிடம் அந்த அரங்கமே கொண்ட அமைதி தொடர்ந்து கொண்டு தான் இருந்தது..

 

பாடலில் மனத்தை வைத்து கண்ணை மூடி பாடி முடித்திருந்தவள் பாடல் முடிந்தபின் எதிர் வினையாய் எந்த ஒலியும் கேட்காமல் இருக்க யோசனையாக கண்ணை திறந்து பார்க்கவும் அங்கே அத்தனை பேரும் அந்த அரங்கில் அமர்ந்திருந்தார்களே தவிர அவர்கள் வேறு ஏதோ உலகத்தில் இருந்தது போல் இருந்தது அவர்களின் முகபாவனைகள்..

 

ஒரு நிமிடத்திற்கு பிறகு தன் நிலைக்கு வந்தவர்கள் அந்த அரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள்.. 

 

யாழினி தலைவணங்கி கும்பிட்டு தேங்க்ஸ் என்று சொல்லவும் அந்த கல்லூரி முதல்வர் எழுந்து மேடைக்கு வந்து “ஆக்சுவலா.. நாங்க தான் உங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ் சொல்லணும்.. இவ்ளோ அழகா இந்த பாட்டை உங்க ரெண்டு பேரால தான் ரீக்ரியேட் பண்ண முடியும்..  நாங்க எல்லாருமே அந்த கண்ணன் ராதை இருந்த காலத்துக்கு ஒரு நொடி போயிட்டு வந்த மாதிரி இருந்தது.. உன் குரல் மகிழனோட அந்த புல்லாங்குழல் இசையோட சேர்ந்து எங்க காதுகளை துளைச்சுக்கிட்டு உள்ள போய் உயிரை தனியா பிரிச்சு எடுத்து ஒரு தெய்வீகம் நிறைஞ்ச காதல் உலகத்துக்கு கொண்டு போன மாதிரி இருந்தது.. கங்கிராஜூலேசன்ஸ்.. போத் ஆஃப் யூ மேக் அ வன்டர்ஃபுல் பேர்..” என்றார் அவர்..

 

அவரை இருவரும் புரியாமல் பார்க்க “ஐ மீன் பெர்பெக்ட் மியூசிக்கல் கபுள்.. வேற எந்த தப்பான அர்த்தத்திலயும் சொல்லல.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டை பெர்ஃபார்ம் பண்ணும் போது எங்க காதெல்லாம் ஏதோ பல ஜென்மம் இதுக்காக தவம் இருந்து இந்த வரம் கிடைச்ச மாதிரி தோணுது.. அப்படி ஒரு அபூர்வமான இசையை எங்களுக்கு குடுக்கறீங்க ரெண்டு பேரும்.. நீங்க இந்த மாதிரி இன்னும் நிறைய பர்ஃபார்மன்ஸ்.. கான்சர்ட்ஸ் பண்ணனும்னு நான் ஆசைப்படுறேன்..”

 

“அதுக்கு என்ன மேடம்..? பண்ணிட்டா போச்சு.. யாழினி என்னோட ஃப்ரெண்ட்.. காலேஜ் முடிச்சப்பறம் நாங்க என்ன மீட் பண்ணாமயா இருக்க போறோம்.. நிச்சயமா எங்களோட இந்த மியூசிக்கல் ஜர்னி கண்டினியூ ஆகும்..”

 

அவன் சொன்னதை கேட்டு யாழினிக்கோ அதுவரை வருத்தமாக இருந்த மனது கொஞ்சம் ஆறுதல் அடைந்தது போல் இருந்தது.. அதுவே அவள் முகத்தில் ஒரு சிறிய புன்னகையை கொண்டு வர ஆரியனும் அதை கவனித்து விட்டிருந்தான்..

 

“ஆனா ஆரியன் எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும்.. அந்த காம்பெட்டிஷன்ல பார்ட்டிசிபேட் பண்றதுக்கு நீ யாழினி வேண்டாம்னு சொல்லி காவ்யாவை செலக்ட் பண்ண.. அதுக்கு காரணம் உன்னுடைய சாங் கிளாசிக்கல் பேஸ்ட் சாங்னு சொன்னே.. ஆனா இப்போ உன்னை யாழினியோட பர்ஃபார்ம் பண்ண சொன்னப்ப நீங்க ப்ரெசன்ட் பண்ணது ஒரு கிளாசிக்கல் பேஸ்ட் சாங்.. அண்ட் ஐ திங்க் இதைவிட பெர்ஃபெக்டா இந்த பாட்டை வேற யாராலயுமே பாட முடியாதுன்னு.. உன்னோட காம்படிஷன்ல பண்ற கம்போஸிஷன்க்கு வோகல்ஸ்க்கு நீ யாழினியையே சூஸ் பண்ணி இருக்கலாமே..”

 

“மேம்.. யாழினி ஏதோ கிளாசிக்கல் மியூசிக்னா நல்லா பாட மாட்டாங்கன்னு யாரும் நினைச்சுடக்கூடாது இல்ல..? அதுக்கு தான் இன்னிக்கி நான் இந்த கிளாசிக்கல் சாங்கை சூஸ் பண்ணேன்.. யாழினி எந்த பாட்டு கொடுத்தாலும் நல்லா தான் பாடுவாங்க.. அவங்களோடது ரொம்ப மெலோடியஸ் வாய்ஸ் அதே சமயம் அவங்க வாய்ஸ் மாடுலேஷன்ஸ் அடுத்தவங்க மனசை அசைச்சு பார்க்கற அளவுக்கு ரொம்ப பவர்ஃபுல் ஆனது.. அவங்க பேஸ் ல பாடும்போது கூட அவங்க வாய்ஸ் கொஞ்சம் ரொம்ப ஸ்வீட்டா தான் இருக்கும்.. ஆனா காவியா அப்படி இல்ல.. அவங்க பாடும்போது பேஸ் நோட்ஸ் கணீர்ன்னு அதே சமயம் ஒரு ஸ்ட்ராங்க் வாய்ஸ் கிடைக்கும்.. ஆப்கர்ஸ் யாழினி அளவுக்கு காவ்யாவால ஹையர் ஆக்டேவ்ஸை ரீச் பண்ண முடியாது.. ஆனா ப்ளீஸ் நோட்ஸ்ல அவங்களோட வாய்ஸ் ஸ்ட்ரென்த் எனக்கு வேணும் நெனச்சேன்.. அந்த வாய்ஸ் எனக்கு வேண்டி இருக்கு.. அதனால தான் காவியா செலக்ட் பண்ணேன்.. யாழினி காவியா ரெண்டு பேருமே இந்த பாட்டை நல்லா தான் பாடுவாங்க.. ஆனா ரெண்டு பேரும் பாடிக் கேட்கும் போது ரொம்ப டிஃபரண்டா இருக்கும்.. அந்த காம்பெட்டிஷன்ல காவியா என் மியூசிக்ல பாடும்போது அதை  நீங்களே ஃபீல் பண்ணுவீங்க..”

 

“புரியுது.. தேங்க்ஸ் ஃபார் திஸ் ப்யூட்டிஃபுல் ரென்டிஷன்..” என்றவர் எல்லோரையும் கலைந்து போக சொல்ல அத்தனை பேரும் கலைந்து போயினர்..

 

யாழினி அருகில் வந்தான் மகிழன்..

 

“யாழி.. நான் காவ்யாவை செலக்ட் பண்ணதுக்காக நீ ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டியா? இங்க வந்து காவியா தான் என் மியூசிக்ல பாட போறான்னு சொன்னதுல இருந்து உன் முகமே நல்லா இல்ல.. உனக்கு நான் உன்னை செலக்ட் பண்ணலைன்னு கஷ்டமா இருக்கா..?”

 

சட்டென தன் முகத்தை மாற்றியவள் நிமிர்ந்து அவனை பார்த்து “அப்படியெல்லாம் இல்ல.. நான் பாடுனா என்ன.. காவியா பாடுனா என்ன? அவளும் நல்ல சிங்கர் தான்.. அதெல்லாம் நான் ஒன்னும் ஃபீல் பண்ணல.. கொஞ்சம் தலைவலியா இருந்துச்சு.. அதனால தான்..”

 

“அதானா..? நான் கூட நான் உன்னை செலக்ட் பண்ணலன்னு நீ ஏதோ ரொம்ப கோவமா இருக்கியோன்னு நெனச்சேன்..”

 

“நோ.. நோ. நாட் அட்டால்.. காவியாவும் உன் ம்யூசிக்ல நல்லா பாடுவா.. ஆல் தி பெஸ்ட் உங்க ரெண்டு பேருக்கும்.. ஓகே.. காலைல இருந்து காம்படிஷனுக்கு ரிகர்சல் ஆரம்பிக்கணும்.. இன்னைக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்து ஃப்ரெஷா பாடலாம்.. பாவம் ப்ரணவ.. அவனுக்கும் நான் நல்லா பாடி கொடுக்கணும் இல்ல..?”

 

“அதுவும் கரெக்ட் தான்.. ஒரு விஷயம் யாழி.. இத்தனை நாள் நீ பாடின எல்லா இடத்திலயுமே நீ தான் வின் பண்ணி இருப்ப.. ஆனா இந்த முறை கொஞ்சம் அந்த ஹிஸ்டரி மாற போகுது.. சாரி ஃபார் தட்.. என்னோட மியூசிக் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.. நிச்சயமா என் மியூசிக் தான் ஜெயிக்கும்..”

 

அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல அவளோ மெல்ல சிரித்து “எனக்கு பிரணவ் மியூசிக் பத்தி தெரியாது.. ஆனா நான் என்னோட மேக்ஸிமம் கொடுப்பேன்.. அவனோட ம்யூசிக்கை ஜெயிக்க வைக்கிறதுக்கு என்னோட முழு உழைப்பை குடுப்பேன்.. அதுக்கப்புறம் மத்த விஷயங்களை பார்க்கலாம்.. என் குரலால பிரணவ்வை ஜெயிக்க வைக்க முடியுமான்னு எனக்கு தெரியாது.. ஆனால் நிச்சயமா நான் இதுவரைக்கும் பாடின ஒவ்வொரு பாட்டையும் எவ்ளோ ஈடுபாட்டோட பாடுவேனோ அதே லெவல் ஆஃப் டெடிகேஷன் இந்த பாட்டுக்கும் குடுப்பேன்.. பார்க்கலாம்.. அன்னிக்கு என்ன நடக்குதுன்னு..” சொன்னவள் “சரி மகிழ் எனக்கு தலைவலி அதிகமாயிட்டே இருக்கு.. நான் ஹாஸ்டலுக்கு போறேன்.. பாய்..” என்று விடுதியை நோக்கி நடந்தாள் யாழினி..

 

ஆரியன் அருகில் வந்த காவியா “எனக்கு கூட நீ என்னை செலக்ட் பண்ணி தப்பு பண்ணிட்டியோன்னு தோணுது.. நான் நல்லா பாடுவேன் தான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா நீ யாழினியை சூஸ் பண்ணி இருந்தேனா கன்ஃபார்ம்டா உனக்கு தான் டிராஃபி கிடைச்சிருக்கும்..  என்னால யாழினி அளவுக்கு பாட முடியுமான்னு தெரியல.. ஆனா யாழினி சொன்ன மாதிரி நானும் என் ஃபுல் எஃபர்ட்டை இந்த பாட்டுக்கு கொடுப்பேன்.. அதுக்கப்புறம் உன் தலையெழுத்து..”

 

அவள் உதடை பிதுக்கி தோளை உயர்த்தி கையை இரு பக்கம் விரித்து சொல்ல “அதை பத்தி நீ கவலைப்படாத.. நான் பார்த்துக்கிறேன்.. ட்ராஃபி நமக்கு தான்..” என்றான்..

 

அவன் அப்படி சொல்லும் போது அவன் முகத்தில் கொஞ்சம் கர்வம் எட்டி பார்த்ததை கவனித்தாள் காவியா..

 

“இதைதான் வித்யா கர்வம்னு சொல்லுவாங்களோ.. இதெல்லாம் நல்ல திறமை இருக்கிறவங்களுக்கு தான் இருக்கும் போல.. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.. சரி.. நானும் ஹாஸ்டல்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்து உன்னோட பாட்டு பிராக்டிஸ் பண்ண ஆரம்பிக்கிறேன்”

 

*அதெல்லாம் நீ நல்லா பாடிடுவே.. எனக்கு எந்த டவுட்டும் இல்ல.. ரிலாக்ஸ்டா போயிட்டு வா..”

 

விடுதியில் தன்னறைக்கு வந்த யாழினி தன் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.. அவள் பின்னாலே வந்த காவியா “ஏய் யாழி.. உனக்கு என்னடி ஆச்சு? ஏன் இப்படி ரொம்ப டல்லா இருக்க? ஏதாவது ப்ராப்ளமா? என் மேல ஏதாவது கோவமா டி..?”

 

அவள் கவலையோடு கேட்க சற்றே நிமிர்ந்த யாழினி “இல்லடி.. அதான் சொன்னேனே.. தலை வலிக்குது ரொம்ப.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போயிரும்..”

 

அவள் மறுபடியும் தலையணைக்குள் முகத்தை புதைத்து படுத்துக் கொண்டாள்.. அவள் கண்களிலோ அவளையும் கேட்காமல் கண்ணீர் முத்துக்கள் வழிந்து கொண்டுதான் இருந்தன..

 

மனதிற்குள்ளே மகிழுடன் நியாயம் கேட்டு சண்டை இட்டு கொண்டிருந்தாள் அவள்..

 

“ஏன்.. மகிழ்.. நான் எவ்ளோ ஆசையா இருந்தேன்.. இந்த காம்படிஷன்க்கு பாடற சாக்குல உன் கூடவே இருக்கலாம்னு.. ஆனா உனக்கு காவியா கூட தான் இருக்கணும்னு ஆசையா..? என்னை பிடிக்கலையா உனக்கு? நான் என்னடா பண்ணுவேன்? எனக்கு எங்க பாத்தாலும் நீ மட்டும் தான் தெரியுற.. என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க.. நீ இல்லனா நான் வெறும் மண்ணு டா.. ஒண்ணுமே கிடையாது.. நீ நடந்துக்குற விதத்தை பார்த்தா பயமா இருக்குடா.. ஒரு வேளை நீ காவியாவை விரும்புறியோன்னு.‌. அதை என்னால தாங்கிக்கவே முடியாது டா.. ஒருவேளை உன் மனசுல காவியா தான் இருக்கானானா நான் என்னடா பண்ணுவேன்? “

 

பக்கத்திலேயே காவியா அவளுடைய படுக்கையில் அமர்ந்திருந்ததால் சத்தமாக கூட அழ முடியாமல் தலையணைக்குள்ளேயே தன் அழுகையை புதைத்திருந்தாள் யாழினி..

 

அன்று மாலை முழுவதும் யாழினி உளம் நிறைய வருத்தங்களூடே படுத்தே கிடந்தாள்.. இரவு உணவு உண்ண காவியா அழைத்த போது கூட அவள் போகவில்லை.. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அறையிலேயே இருந்து கொண்டாள்..

 

காவியா இரவு உணவுக்காக கேண்டினுக்கு சென்ற நேரம் அறைக்குள் கதறி கதறி அழுது தீர்த்தாள் யாழினி.. அவள் ஏன் அப்படி அழுதாள் என்று அவளுக்கே புரியவில்லை.. அவள் மனம் அவளையும் கேட்காமல் மகிழன் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பை அவளுள் அழுத்தமாய் ஆழமாய் விதைத்திருந்தது.. அதை அழிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் பாவை அவள்..

 

மகிழனின் நடவடிக்கைகள் அனைத்தும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விட்டு விலகி செல்வதை பறை சாற்றுவது போலவே அவளுக்கு தோன்றியது..

 

காவியா உணவு உண்ண சென்று இருக்கும்போது அழுது சோர்ந்தவள் அவள் வருவதற்குள் குளியலறை சென்று முகம் கழுவி வெளியே வரவும் காவியா அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது..

 

“ஏய் யாழி.. மூஞ்சி கழுவினியா..? என்ன ஆச்சு?” 

 

“ஆமா காவி.. தலைவலி மூஞ்சி கழுவினா கொஞ்சம் கம்மியாகும் போல தோணுச்சு.. அதான்.. கழுவிட்டு வந்தேன்.. சரிடி.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.. நான் படுக்கிறேன்.. குட் நைட்..” என்று சொல்லி இரவு முழுவதும் மகிழனின் நினைவுகள் அவளை வாட்ட உள்ளுக்குள்ளேயே மருகி மருகி உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள் யாழினி.. 

 

வான்மழை வரும்போது மலை கொண்டு காத்தாய்..

கண்மழை விழும்போது எதில் என்னை காப்பாய்..

பூவின் கண்ணீர் நீ ரசிப்பாய்..

நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா..

அதை நீ காண கண்ணில்லையா.. உன் கனவுகளில் நான் இல்லையா.. 

தினம் ஊசலாடுதென் மனசு.. அட 

ஊமை அல்ல என் கொலுசு..

என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே.. என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே..

கலந்திட வா..

 

கண்ணா மூச்சி ஏனடா.. என் கண்ணா

நான் 

கண்ணாடி பொருள் போலடா.. 

 

தொடரும்..