காதலின் தீபம் ஒன்று..!! – 4
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
மின்மினி பூச்சிகள் நட்சத்திரங்களாய் மின்னும் அழகை பார்த்தபடி அவற்றில் ஒன்று இரண்டை பிடிக்கும் ஆர்வத்தில் இரு பெண்களும் இருக்க அந்த புதரின் இன்னொரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு அவர்களை நோக்கி ஊர்ந்து வந்ததை கவனிக்கவே இல்லை தோழியர் இருவரும்..
அதே நேரம் அங்கு இருந்த ஒரு மேட்டு நிலத்திலிருந்து இருந்து இறங்கிய குட்டை கட்டையான ஆள் ஒருவன் எதிர்பக்கத்தில் இருந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..
அப்போது ஊர்ந்து வந்த பாம்பு சரியாக காவியாவின் காலுக்கு பக்கத்தில் தலையை தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது.. அந்த பாம்புக்கே குழப்பம் வருவது போல் காவியாவும் யாழினியும் அந்த மின்மினி பூச்சிகளை பிடிக்க முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி கொண்டு இருந்தார்கள்..
அதற்குள் அந்த ஆள் யாழினியின் அழகை ரசித்த படியே ஒரு காம பார்வையோடு அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.. அந்த இடமோ ரயில் நின்ற இடத்தில் இருந்து ஒரு 500 மீட்டர் தள்ளி இருந்தது..
ஆனால் ரயில் அன்று பகலில் மதியம் தான் கிளம்பும் என்பதால் ரயிலில் இருந்த அனைவரும் (டிடிஆர் ஓட்டுனர் உட்பட) எல்லோரும் நல்ல உறக்கத்திற்கு போயிருந்தார்கள்.. தோழியர் இருவரும் வண்டியை விட்டு இறங்கும்போது இருந்த ஒன்று இரண்டு பேர் கூட இப்போது இல்லை.. அந்த இடமே யாரு மற்ற தீவு போல இருளின் அமைதியோடு சலனமின்றி இருந்தது..
அந்த ஆள் யாழினியிடம் வந்து “என்ன பாப்பா.. மின்மினி பூச்சி வேணுமா? நான் வேணா புடிச்சு தரட்டுமா?” என்று தன்னுடைய அத்தனை கரை படிந்த பற்களையுயும் காட்டி கேட்க அவனைப் பார்த்து பயந்து போனாள் யாழினி..
ஆனால் காவியாவோ வழக்கம் போல தைரியமாய் “யார் உன்னை கூப்பிட்டா இப்ப? மரியாதையா இங்கிருந்து போயிரு.. மின்மினி பூச்சி எல்லாம் எங்களுக்கு புடிக்க தெரியும்.. இப்ப போறியா இல்ல நான் டி டி ஆரை கூப்பிடவா?”
“டி டி ஆரை கூப்பிடுவியா? டிரெயின்ல இருக்கறவங்க யாரும் வர மாட்டாங்க.. ஏன்னா நீ எவ்வளவு கட்டினாலும் அவங்க காதுல விழாது.. அனாவசியமா அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு? நான் புடிச்சு தரேன் கண்ணுங்களா உங்களுக்கு மின்மினி பூச்சியை..”
இப்படிப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென யாழினியின் இடையில் கை வைத்து பிடிக்க அவள் அலறி துள்ளி குதித்து வேறு பக்கம் ஓடினாள்.. “அட உன் இடுப்பில ஒரு மின்மினி பூச்சி இருந்துச்சு.. அதானா உனக்காக அதை புடிச்சு தரலாம்னு பார்த்தேன்.. இப்படி ஓடறியே கண்ணு..”
காவியா சட்டென யாழினியை தனக்கு பக்கவாட்டில் இழுத்து நிறுத்தியவள் அந்த ஆளை நன்றாக வயிற்றிலும் கன்னத்திலும் மாறி மாறி நான்கைந்து குத்து விட்டாள்..
அந்த ஆளை நன்கு பதம் பார்த்து அவனை கீழே தள்ளி எழ முடியாத அளவுக்கு செய்தாள் காவியா.. அவனிடமிருந்து இரு பெண்களும் தப்பிவிட்டாலும் அப்போதும் அந்த பாம்பை இருவருமே கவனிக்கவில்லை.. அந்த பாம்பு எந்த நேரமும் காவியாவை கொத்தி விடும் என்பது போல் அவள் பாதத்தையே குறி பார்த்து படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது..
சரியாக காவியாவின் காலில் அது கொத்த போகும் நேரம் ஒரு பலமான கை அவள் இடையை வளைத்து அந்த இடத்தில் இருந்து அவளை அப்புறப்படுத்த அவளோடு கீழே விழுந்து உருண்டான் எவனோ ஒருவன்..
முழுவதுமாய் கட்டி புரண்டு உருண்டவர்கள் ஒரு இடத்தில் நிற்கவும் தன்னை அணைத்து அப்படி கீழே தள்ளி உருண்டது யார் என்று நிமிர்ந்து பார்த்த காவியா அவன் யார் என கண்டதும் முதலில் இதயம் படபடக்க அதிர்ந்து தடுமாறியவள் பின்பு சுதாரித்துக் கொண்டு அவனை தன்னில் இருந்து பிடித்து தள்ளி “யோவ்.. என்னயா நினைச்சுகிட்டு இருக்க..? அந்த குண்டாளு வாங்கின மாதிரி உனக்கும் நாலு கொடுக்கவா?” அப்படி சொல்லி அவள் ஆரியனை திட்டிக் கொண்டிருந்த அதே நேரம் யாழினி “காவி பாம்பு டி..” என்று கத்தினாள்..
அப்படி அவள் கத்தியதும் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தவள் பெரிய கருநாகப் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அப்படியே தன் நெஞ்சில் கை வைத்து ஸ்தம்பித்து நின்றாள்..
“ஹலோ மேடம்.. இங்க யாரும் உங்களை ஆசையா கட்டிக்கிட்டு உருளல.. உங்களை நான் அந்த நேரத்துக்கு கரெக்டா பிடிச்சு இழுக்கலைன்னா அந்த பாம்பு ஒரேடியா உங்களை வேற உலகத்துக்கே அனுப்பிச்சிருக்கும்.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல.. உங்களுக்கு நான் இப்படி பண்ணது தான் பிரச்சனைன்னா.. போங்க.. அதோ.. அங்க தான் இருக்கு அந்த பாம்பு.. போய் அதையே கட்டிக்கிட்டு உருளுங்க..”
அவன் சொன்னதைக் கேட்டவள் என்னதான் அவன் தன்னைக் காப்பாற்றி இருக்கிறான் என்ற எண்ணம் தோன்றினாலும் அவன் நக்கல் பேச்சில் அவனிடம் பணிந்து போய் விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் “அதுக்கு இப்படித்தான் கட்டிப்பிடிச்சு உருளணுமா? ஏன்..? அங்க பாம்பு இருக்குது.. தள்ளுங்கன்னு கத்தி இருந்தாலே போதுமே..” வீம்புக்காய் அவனோடு வாதிட்டாள் அவள்..
“அப்படி நான் கத்தி உங்களுக்கு சொல்றதுக்குள்ள அந்த பாம்பு உங்களை போட்டு இருக்கும்.. பரவாயில்லையா?” என்றவன் யாழினி பக்கம் திரும்பி “அவங்களுக்கு தான் அறிவு இல்ல.. இந்த இருட்டுல தனியா வந்து இருக்காங்க.. நீங்க கொஞ்சம் புத்திசாலித்தனமா நடப்பீங்கன்னு பார்த்தேன்.. கடைசியில நீங்களும் அவங்களோட சேர்ந்து இங்க வந்து இருக்கீங்க.. இந்த இருட்டுல எதுக்கு ரெண்டு பேரும் தனியா வந்தீங்க?”
யாழினி “இல்ல.. நான் சொன்னேன் இவகிட்ட.. இந்த இருட்டில தனியா போக வேண்டான்னு.. இவதான் அங்க ரெண்டு மூணு பேர் இருக்காங்களே நம்ம போலாம்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்தா..”
அவள் சொல்லி முடிக்கும் முன் காவியாவோ அவளை இடை மறித்து “என்ன..? என்னை பாத்தா அறிவு கெட்ட தனமா நடக்குற மாதிரி தெரியுதா? நான் ஒன்னும் அறிவு கெட்டவ இல்ல.. நீங்க தான் கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாதவரு.. உங்க மேல ஆக்சிடென்ட்டலா விழுந்த யாழினியை அந்த பேச்சு பேசினீங்க.. ஆனா இப்ப வேணும்னே என்னை கட்டிப்பிடிச்சு இப்படி உருண்டு இருக்கீங்க.. நானும் நீங்க யாழினியை பேசினதை மாதிரியே பேசவா இப்போ..”
“பேசவா.. பேசவான்னு கேட்டுட்டே அதான் எல்லாம் பேசிட்டிங்களே.. அப்புறம் என்ன? இப்ப என்ன.. உங்களை இங்க ஆசையா இதோ அந்த ஆளு மாதிரி கட்டிப்பிடிச்சு உருண்டேன்.. உங்களை காப்பாத்தறதுக்காக தான் அப்படி செஞ்சேன்.. உங்களை காப்பாத்துனதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலன்னா கூட பரவால்ல.. இப்படி என்னை பத்தி கேவலமா பேசுறீங்க..”
“ஏன் மத்தவங்களை கேவலமா பேசுற திறமையை நீங்க மட்டும் தான் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா? நீங்க யாழினியை பேசல? உங்களை பேசுறதெல்லாம் ஒன்னும் தப்பு கிடையாது.. பாம்பு கிட்ட இருந்து என்னை காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ்..”
ஒரு வித அலட்சியத்தோடு சொன்னவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் “இதுக்கு நீங்க தேங்க்ஸ் சொல்லாமயே இருந்துருக்கலாம்” என்றவன் “சிங்கிள் பீஸ் இவ.. ஒண்ணுமே பண்ண முடியாது இவளை.. இவளும் இவ வாயும்.. ஊஃப்” மனதிற்குள் எண்ணியபடி பெருமூச்சை விட்டவன் “யாழினி.. எப்படியும் நான் சொன்னா அவங்க கேட்க மாட்டாங்க.. அதனால உங்களுக்கு சொல்றேன்.. தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி இருட்டில் தனியா வராதீங்க.. நம்ம ஊர்ல பெண் சுதந்திரம் பத்தி நிறைய பேசுறாங்க.. ஆனா அதுக்கான சூழ்நிலையை இன்னும் கூட ஆம்பளைங்க உங்களுக்கு கொடுக்கல.. இப்பதான் என்னை மாதிரி ஒரு சில ஆம்பளைங்க மாற ஆரம்பிச்சிருக்காங்க.. நீங்க நைட் 12 மணிக்கு ரோட்ல தனியா நடந்து போற காலமெல்லாம் வரதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு.. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. நீங்க போக வேண்டாம்னு சொல்லல.. ஆனா அட்லீஸ்ட் எங்க போறீங்கன்னு சுத்தி இருக்கிறவங்க கிட்டயும் உங்களை பொறுப்பா பார்த்துக்கிறவங்க கிட்ட சொல்லிட்டு போங்க.. ஏதாவது பிரச்சனைன்னா அப்பதான் அவங்களால வந்து உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவாவது முடியும்..”
இப்போது அவன் சொன்னது காவியா மண்டையில் உறைக்க அவள் கண்களில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி நிறைந்தது..
“சாரி.. நீங்க எனக்கு ஹெல்ப் தான் பண்ணுனீங்க.. ஆனா நான் தான் உங்களை திட்டிட்டேன்.. நீங்க ரொம்ப நல்லவர் தான்.. போதுமா..? சரி.. இப்ப ட்ரெயினுக்கு போலாம்..” அவள் ரயிலை நோக்கி நடக்க அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கே நின்று கொண்டிருந்தனர் ஆர்யனும் யாழினியும்..
“உங்க ஃபிரெண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்கிட்ட படபடன்னு பொரிஞ்சுகிட்டு இருந்தாங்க.. அடுத்த நிமிஷமே தேங்க்ஸ்.. சாரி.. எல்லாமே சரளமா வாயில வருது.. எந்த ஏகோவும் இல்லாம தேங்க்ஸ்.. சாரி.. எல்லாம் சொல்றாங்களே.. நல்ல விஷயம் தான்..”
ரயில் ஏற சென்ற காவியாவை பார்த்தபடியே அவன் சொல்ல “நான் தான் அப்பவே சொன்னேனே.. நீங்க நினைக்கிற மாதிரி அவ ஒன்னும் சண்டைக்காரி கிடையாது.. நியாயம்னு தெரிஞ்சா அதுக்காக சண்டை போடுவா.. அவ்வளவுதான் அவ.. ரொம்ப தேங்க்ஸ்.. சமயத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க..”
“தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்.. அவங்களாவது ஒரு ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் போட்டு பாக்குறதுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி இருக்காங்க.. ஆனா அந்த ஆளு உங்க கிட்ட வம்பு பண்ணதுக்கு காரணம் நீங்க டிரஸ் பண்ணி இருக்கிற விதம்.. நான் இப்படி சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க.. இந்த ஹாஃப் சரியில்ல ரொம்ப அழகா இருக்கீங்க.. எல்லாருமே என்னை மாதிரி இவ்வளவு அழகானவங்களை பார்த்துட்டு அமைதியா நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்லமுடியாது… அதுவுமா தனியா இப்படி இருட்டில அவங்ககிட்ட மாட்டிக்கிட்டீங்கன்னா இந்த ஊர்ல பாதி ஆம்பளைங்க இப்படித்தான் நடந்துப்பாங்க..”
அவன் பட்டென ஒரு குறும்பு பார்வையோடு சொல்லிவிட அவளோ அவன் சொன்னதைக் கேட்டு மொத்தமாய் சிவந்து போனாள் வெட்கத்தில்..
“சரி வாங்க போலாம்..” என்றவன் திரும்பி சென்று கீழே விழுந்து கிடந்த அந்த ஆளை காலால் நான்கைந்து முறை மிதிமிதி என மிதித்து எட்டி ஒரு உதை விட்டுவிட்டு “இனிமே ஏதாவது பொண்ணுங்களை பார்த்தா அந்த பொண்ணு கிட்டயும் என்கிட்டயும் இப்ப வாங்கின அடி ஞாபகம் வரணும் உனக்கு..” மிரட்டலாய் சொல்லிவிட்டு யாழினியோடு மறுபடியும் ரயில் ஏறினான் ஆரியன்..
“இங்கே தன் இருக்கைக்கு வந்த காவியாவோ தன் சுய நினைவே இல்லாமல் ஆரியனோடு அவன் அணைப்பில் உருண்டு இருந்த அந்த கணத்திலேயே உறைந்து இருந்தாள்..
“யாழினியும் அவன் தன் அழகை மெச்சி பேசியதை பற்றியே எண்ணி எண்ணி உள்ளுக்குள் சிலிர்த்த படி இருந்தாள்..
ஆரியனும் ஏதோ ஒரு அழகான யோசனையோடு தான் படுத்திருந்தான்.. ஆனால் அவன் யாரைப் பற்றிய யோசனையோடு படுத்திருந்தான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்..
காலை 8 மணி அளவில் இரண்டு பெண்களுடனும் ஆரியன் கிளம்பி டிடிஆர் சொன்ன அந்த டீ கடைக்கு வந்து சேர்ந்தான்.. அந்த கடைக்காரரிடம் மூன்று டீ சொன்னவன் அப்படியே இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி ஆளுக்கு ஒன்றாக அவர்களிடம் தந்தான்..
காவியா “ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டையும் எங்ககிட்ட கொடுத்துட்டீங்க.. நீங்க என்ன சாப்பிடுவீங்க?” என்க அவனோ அவளை ஆச்சரியமாக பார்த்து “ஏங்க.. ஒரு பாக்கெட் பிஸ்கட்டை ஃபுல்லாவா சாப்பிட போறீங்க? உடம்புக்கு ஒத்துக்காதுங்க.. ஒரு நாலு பிஸ்கட் எனக்கு தருவீங்கன்ற நம்பிக்கைலதானே கொடுத்தேன்..?”
அவன் அப்படி சொன்ன நொடி களுக்கென சிரித்தாள் யாழினி..
“ஐயோ நீங்க குட் டே பிஸ்கட் வாங்கி இருக்கீங்க.. அவளுக்கு அந்த பிஸ்கட் னா ரொம்ப உயிர்.. அதுலருந்து உங்களுக்கு ஒரு பிஸ்கட் கூட கிடைக்காது.. என்ன ஆனாலும் பரவால்லன்னு ஃபுல் பாக்கெட்டை அவளே தின்னுடுவா.. ஆனா நான் உங்களுக்கு கொடுக்கிறேன்.. கவலைப்படாதீங்க..” யாழினி காவியாவை கிண்டலாய் பார்த்தபடி சொன்னாள்..
“ஏய்.. ஓவரா பேசாதடி.. எனக்கு குட் டே பிஸ்கட் கொஞ்சம் புடிக்கும்.. என்ன ரெண்டு பிஸ்கட்டை சாப்பிடுறதுக்கு பதிலா நாலு பிஸ்கட்டா சாப்பிடுவேன்.. அவ்வளவுதான்.. அதுக்காக ஒரு பாக்கெட் ஃபுல்லாவா சாப்பிடுவேன்? இப்படியா அசிங்கமா என்னை போட்டு கொடுப்ப..?”
அவர்கள் இருவரும் பேசியதை கேட்டு சத்தமாய் சிரித்த ஆர்யன் “என்ன யாழி.. உங்க ஃப்ரெண்டை இப்படி மொக்கை பண்ணிட்டீங்க? பாவம்.. அவங்களுக்கு இப்ப அவங்க தலையை கொண்டு போய் எங்க புதைச்சுக்கிறதுன்னு கூட தெரியல..” அவனும் காவியாவை பார்த்தபடி கிண்டலாய் சொல்ல அவளோ முகத்தில் பொய் கோபம் காட்டி “நான் அந்த பக்கம் தனியா போய் சாப்பிட்டுக்கிறேன்.. ரெண்டு பேரும் என்னை ரொம்ப கலாய்க்கிறீங்க..”
சொல்லிவிட்டு வேறு புறம் சென்று அந்த பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாக டீயில் நனைத்து சாப்பிட “நான் எங்க உங்க கிட்ட அந்த பிஸ்கட்டை வாங்கிட போறேன்னு தானே அந்த பக்கம் போய் சாப்பிடுறீங்க? பயப்படாதீங்க.. நான் கேட்க மாட்டேன்.. நீங்க இங்கேயே வந்து சாப்பிடுங்க.. என்று ஆரியன் கத்தி சொல்ல அவளோ அது காதில் விழாதது போல் எதிர்பக்கம் திரும்பி மும்முரமாய் சாப்பிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்..
சற்று நேரத்தில் யாழினியும் ஆர்யனும் டீ பிஸ்கட் சாப்பிட்டு முடிக்க அப்படியும் யாழினியின் பிஸ்கட் பாக்கெட்டில் இன்னும் நாலு பிஸ்கட்டுகள் மீதம் இருந்தன..
ஆனால் பிஸ்கட்டை உண்டு டீயை குடித்து விட்டு வந்த காவியா கையில் இருந்த பாக்கெட்டில் இரண்டு பிஸ்கட்டுகள் தான் மீதம் இருந்தன..
அதை பார்த்த யாழினி “அடிப்பாவி.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு நாலு பிஸ்கட் மிச்சம் இருக்கு டி.. நீ எவ்ளோ பிஸ்கட் டி சாப்பிட்ட? ரெண்டு பிஸ்கெட் தான் மீதி இருக்கு.. ஊருக்கு போறதுக்குள்ள வயிறு சரியில்லாம போகப்போகுது.. ட்ரெயின் வேற இப்போதைக்கு கிளம்பாது.. ஏன்டி இப்படி பண்ற?”
“எனக்கு அதெல்லாம் சாப்பிட்டு பழக்கம் தான்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் சாப்பிடுறதை கண் வைக்காதே” என்று உதட்டை சுழித்து சொன்னவளை பார்த்து சத்தமாக சிரித்தான் ஆரியன்..
அவன் சிரிப்பதையே பசித்துப் பார்த்துக் கொண்டிருந்த யாழினி “ஆமா.. உங்க பேரு ஆரியான்னு இருக்கே.. இது நம்ம சைடு வைக்கிற பெயர் கிடையாதே.. நீங்க நார்த் இந்தியனா?” என்று கேட்க “என்னோட ஃபுல் நேம் மகிழன் ஆர்யன்.. எங்க அம்மா நார்த் இந்தியன் தான்.. மகாராஷ்ட்ரியன்.. எங்க அப்பா ஒரு தமிழ் வாத்தியார்.. ரெண்டு பேரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. ரெண்டு பேரும் எனக்கு பேர் வைக்கணும்னு போது எங்க அம்மா ஆர்யன்னு எனக்கு பேர் வைக்கணும்னு சொல்லி இருக்காங்க.. எங்க அப்பா சுத்தமான தமிழ் பெயர் வைக்கணும்னு சொல்லி இருக்காரு.. ரொம்ப சண்டை போட்டு வாக்குவாதம் பண்ணி அப்புறம் ஒரு காம்ப்ரமைசுக்கு வந்தவங்க என் பேரை மகிழன் ஆர்யன்னு வச்சாங்க.. உங்களுக்கு ஆர்யன்ற பேர் பிடிக்கலைன்னா என்னை மகிழன்னும் கூப்பிடலாம்..”
அவன் புன்னகைத்தபடி சொல்ல யாழினி “எனக்கு மகிழன்ற பேர்தான் புடிச்சிருக்கு.. நான் உங்களை மகிழ்ன்னு கூப்பிடவா?” என்று கேட்க ஆரியனும் “தாராளமா கூப்பிடுங்க.. எங்க அப்பா என்னை அப்படித்தான் கூப்பிடுவார்” என்று சொல்லி தலையாட்டினான்..
காவியா “ஆர்யான்ற பேரு தான் ட்ரெண்டியா இருக்கு.. எனக்கு அதுதான் புடிச்சிருக்கு.. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்..” என்றாள்..
யாழினி “யாழினி மகிழன்” என்று அவள் பெயரை மனதிற்குள் உச்சரித்து பார்த்து மயங்கி போய் நிற்க காவியாவோ “காவியா ஆர்யன்” என்று அதே நேரத்தில் அவள் பெயரையும் உச்சரித்து தேன் உண்ட வண்டாய் அந்தப் பெயரின் இனிமையில் திளைத்திருந்தாள்..
அதைக் கேட்ட அவனோ “எந்தப் பேர் வெச்சு கூப்பிட்டா என்ன? கூப்பிட்டா ஓகே தான்..” என்று இருவரையும் ஒரு குறும்பு பார்வை பார்த்து முணுமுணுக்க இருவரின் காதலும் அது தெளிவாய் விழ இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்..
“எதுக்கு முறைக்குறிங்க ரெண்டு பேரும்..? அதான் இனிமே அடிக்கடி கூப்பிட வேண்டி இருக்குமே.. மூணு பேரும் ஒரே காலேஜ்ல தான படிக்க போறோம்..”
அவன் சொல்ல இரண்டு பெண்களுக்குமே அதை நினைத்து உள்ளுக்குள் குதூக்கலமாக தான் இருந்தது..
யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்…
என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்
எனக்காகவே பிறந்தான் இவன்…
எனை காக்கவே வருவான் இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
தொடரும்..