காதலின் தீபம் ஒன்று..!! – 3

எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

 

மண்ணை திறந்தால் நீர் இருக்கும்.. என்

மனதை திறந்தால் நீ இருப்பாய்..

ஒலியை திறந்தால் இசை இருக்கும்.. என்

உயிரை திறந்தால் நீ இருப்பாய்..

வானம் திறந்தால் மழை இருக்கும்.. என்

மனதைத் திறந்தால் நீ இருப்பாய்..

இரவை திறந்தால் பகல் இருக்கும்.. என்

இமையைத் திறந்தால் நீ இருப்பாய்..

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

இலையும் மலரும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ..

அலையும் கரையும் உரசுகையில்

பேசும் பாஷை பேசிடுமோ..

மண்ணும் விண்ணும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ..

பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்

பாஷை ஊமையாய் விடுமோ..

என் மேல் விழுந்த மழைத் துளியே..

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே..

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

 

யாழினி பாடலை பாடி முடித்த நேரம் அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவருமே வேறு ஒரு உலகத்தில் இருந்தனர்.. அவ்வளவு மெல்லிய அதே சமயம் ஆழமான குரலில் எல்லோர் இதயத்தையும் ஊடுருவியது அவளது பாடல்..

 

இங்கே ஆரியனும் அவள் பாடலைக் கேட்டு அப்படியே மெய் மறந்து உறக்கத்தின் விளிம்பிற்கே சென்று இருந்தான்.. அந்த ரயில் பெட்டி அமைதியின் உறைவிடமாக இருந்தது அப்போது..

 

ஒரு சிறு அசைவு இருந்தால் கூட அந்த சத்தம் அந்த பாடலுக்கு இடையூறாக அமைந்து விடுமோ என்று எல்லோருமே இரவின் அமைதியோடு ஐக்கியமாகி இருந்தார்கள்..

 

சிறிது நேரம் அப்படியே அந்த பெட்டியின் வாயிலில் நின்று விட்டு தங்கள் இருக்கைக்கு இரண்டு தோழிகளும் வரும்போது சுற்றி இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தார்கள்.. அன்று எல்லோரையும் தாலாட்டு பாடி தூங்க வைத்து பெருமை யாழினியையே சேர்ந்தது..

 

அதன் பிறகு யாழினி நடுவில் இருந்த பெர்த்தில் ஏறி படுத்து விட அமைதியாக காவியாவும் மேல் பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டாள்..

 

நன்றாக சயனித்த பிறகு தான் கவனித்தாள் யாழினி.. அவளினீ எதிர் புறமாக இருந்த பெர்த்தில் ஆரியன் ஆழ்ந்த உறக்கத்தில் சீரான மூச்சு வெளியேறிக் கொண்டிருக்க புன்னகை முகமாகவே உறங்கி இருந்தான்.. அந்த அப்பழுக்கில்லாத அழகான முகத்தை பார்த்தபடியே அப்படியே உறங்கிப் போனாள் யாழினியும்..

 

அதன் பிறகு நான்கு மணி நேரம் கழிந்தது.. பின் இரவு இரண்டு மணி அளவில் ஏதோ ஒரு வனாந்திரமான இடத்தில் ரயில் திடீரென நின்று விட அப்படி சடார் என ரயில் நின்றதில் நிறைய பேர் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்திருந்தார்கள்.. அப்படி எழுந்திருந்தவர்களில் யாரழினியும் ஒருத்தி.. 

 

ரயிலுக்கு வெளியே ஏதோ சலசலவென மக்களின் பேச்சு சத்தம் கேட்க ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து கொண்டாள் யாழினி.. இத்தனைக்கு நடுவிலும் காவியா நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.. 

 

சட்டென எதையும் யோசிக்காது என்ன நிகந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பரபரவென்று வேகமாக தன்னுடைய பெர்த்தை விட்டு கீழே இறங்கினாள் யாழினி.. 

 

எதிர்பாராத விதமாக அதே நேரம் ஆரியனும் எழுந்து அந்த வழியாக நடந்து வர இறங்கும் போது ஒரு காலை கம்பியில் வைத்துவள் இன்னொரு காலை எடுத்து கீழே வைக்கும் போது அதை ஆரியனின் தோளில் வைத்து விட அவனின் தோளில் கால் பட்ட நொடி அதை உணர்ந்த அதிர்ச்சியில் அப்படியே தடுமாறி மீண்டும் ஒரு முறை அவன் கைகளில் பூ மாலையாய் விழுந்தாள் யாழினி..

 

அரை நிமிடம் இருவரிடம் எந்த சலனமும் இல்லை.. ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே இருக்க முதலில் சுதாரித்த ஆர்யன் “உங்களுக்கு இதே வேலை தானா? எப்படா நான் வருவேன்? எப்ப என் மேல விழலாம்னே காத்துகிட்டு இருந்தீங்களா?” 

 

அவன் கேட்ட மறுநொடி அவன் கைகளில் இருந்து இறங்கி நேராக நின்றவள் “சாரி.. சாரி.. சாரி.. தெரியாம… அ.. அது.. நீங்க வந்தது தெரியாம.. எதோ இப்படி நடந்துடுச்சு.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல.. ரொம்ப சாரி.. நான் வேணும்னே எதுவும் பண்ணல.. தெரியாம தான் விழுந்துட்டேன்..”

 

ரொம்பவும் கலங்கி போய் அதே சமயம் எல்லோரும் எழுந்து விடப் போகிறார்களே என்ற கலக்கத்தில் மிகவும் மெல்லிய குரலில் பேசியவளை சிரிப்போடு பார்த்தவன் “இட்ஸ் ஓகே.. யாரும் வேணும்னே இப்படி மேல வந்து விழ மாட்டாங்க.. ஒரு சாரி சொன்னா போதும்.. நான் நீங்க சாரி சொல்லலைன்னு சொன்னதுக்காக இத்தனை சாரி சொல்ல தேவையில்லை..”

 

“இல்ல.. வெளியில எதோ சத்தம் கேட்டுது.. ட்ரெயின் வேற நிற்கும் போது ஒரு மாதிரி இழுத்து நிறுத்துன மாதிரி இருந்துதா.. அதான் என்னவோ ஏதோன்னு நினைச்சு படபடன்னு இறங்கினேன்.. அதனால தான் கவனிக்காம உங்க மேல.. ரொம்ப சாரி..”

 

அவள் மறுபடி மறுபடி முகத்தை சங்கடமாக வைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்க அவனோ “ஐயையோ.. உங்ககிட்ட சாரி கேட்கலன்னு கம்ப்ளைன்ட் பண்ணது தப்பா போச்சு.. எத்தனை சாரி கேப்பீங்க..? சரி விடுங்க.. நானும் அதுக்கு தான் இறங்கி வந்தேன்.. வாங்க போய் பார்க்கலாம் என்ன ஆச்சுன்னு.. ஆனா போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. அது என்ன.. இந்த நடு ராத்திரியில ஏதோ ஒரு அத்வான காட்டில ட்ரெயினை நிறுத்தி இருக்காங்க.. நீங்க பாட்டுக்கு தைரியமா இறங்கி போய் என்ன நடந்ததுன்னு பார்க்கிறேன்னு கிளம்புறீங்க.. இது என்ன இடம்னு கூட தெரியல.. வெளில இருக்குற ஆளுங்க எல்லாம் என்ன ஆளுங்கன்னு தெரியாது.. இந்த மாதிரி எல்லாம் இனிமே தனியா போகாதீங்க.. நீங்க வேற ரொம்ப பயந்த சுபாவமா இருக்கீங்க.. அட்லீஸ்ட் உங்களோட அந்த அதிரடி ஃப்ரெண்ட் இருக்காங்களே காவியா.. அவங்களை கூட்டிகிட்டு போனீங்கன்னாலாவது அவங்களுக்கு பயந்துகிட்டு உங்களை யாரும் சீண்டாம இருப்பாங்க.. அவங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாம ரொம்ப பத்திரமா பாத்துக்குவாங்க..”

 

அவன் பேசியதை கேட்டு சிறிது வெட்கத்தோடும் சங்கடத்தோடும் சிரித்தாள் யாழினி.. 

 

“சரி.. நம்ம பேசுற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்திட போறாங்க.. வாங்க.. கீழ இறங்கி பாத்துட்டே பேசலாம்..” என்று சொல்லி அவன் முன்னே நடக்க அவன் பின்னாலேயே நடந்தாள் யாழினி..

 

இருவரும் வண்டியிலிருந்து இறங்கவும் நிறைய பயணிகள் வண்டியில் இருந்து இறங்கி என்ன ஆயிற்று என்று தெரியாமல் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தார்கள்.. சில பயணிகள் டிடிஆர் இருக்கும் இடம் தேடி முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்..

 

இங்கே எதுவும் தெரியாது போல.. அந்த பக்கம் போனா டிடிஆர் கிட்ட கேட்கலாம்.. என்னோட வரீங்களா.. போய் கேட்டுட்டு வரலாம்.. இல்ல.. நீங்க வேணா ட்ரெயினுக்கு உள்ள போயிடுங்க.. நான் கேட்டுட்டு வந்து உங்களுக்கு சொல்றேன்..”

 

அவன் அப்படி சொன்னதும் அவனோடு நடக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாமல் “இல்லை.. நானும் உங்களோட வரேன்.. எனக்கும் தூக்கம் எல்லாம் வரல.. உள்ள போனா எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க.. அதனால நானும் உங்களோட வரேன்..” என்றாள்..

 

“ஓகே.. வாங்க போலாம்..”

 

“அப்புறம் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. காவியா பாக்க தான் அப்படி சண்டைக்காரி மாதிரி தெரியறா.. ஆனா ரொம்ப நல்லவன்.. ரொம்ப ஈஸியா எல்லாரோடயும் பழகிடுவா அவ.. எல்லாருக்கும் எவ்வளவு ஹெல்ப் பண்ணுவா தெரியுமா? நான் அவ இருக்கிற தைரியத்துல தான் ஊட்டி வரைக்கும் கிளம்பி வரேன்.. இல்லன்னா எங்க ஊரிலேயே எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காலேஜ்ல தான் எனக்கு பிடிக்காத  ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை படிச்சு இருப்பேன்..”

 

“ஓ.. நீங்க காலேஜ் சேர்றதுக்காக தான் ஊட்டிக்கு வரீங்களா? எந்த காலேஜ்.. சொல்லலாம்ன்னா சொல்லுங்க.. உங்களுக்கு சொல்ல தயக்கமா இருந்தா சொல்ல வேண்டாம்..”

 

“இல்ல இல்ல.. அப்படில்லாம் ஒன்னும் இல்ல.. சொல்றேன்.. ட்ரினிடி மியூசிக் அகாடமில தான் நான் சேர போறேன்..”

 

“ஓ.. நானும் அங்கதான் சேரப்போறேன்.. நீங்க இவ்ளோ அழகா பாடும் போதே நான் கெஸ் பண்ணி இருக்கணும்.. மியூசிக் காலேஜ்ல தான் சேருறதா இருப்பீங்கன்னு.. நான் வந்து இன்ஸ்ட்ருமென்டல் மியூசிக் கத்துக்குறதுக்காக வரேன்.. நெஜமாவே நம்ம சந்திப்பு கொஞ்சம் அதிரடியா இருந்தாலும் உங்களை மீட் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம்..”

 

அதற்குள் டி டி ஆர் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார்கள் பேசிக் கொண்டே அவர்கள்.. எதிரே அவர் வர “ஹலோ சார்.. என்ன ஆச்சு? ஏன் வண்டி நின்னுடுச்சு?”  “இல்ல.. ஒரு அரை கிலோமீட்டர் தள்ளி டிராக் உடைஞ்சிருக்கு போல.. அதனால வண்டி காலையில் வரைக்கும் நகராது.. எப்படியும் கோயம்புத்தூர் போய் சேர நாளைக்கு சாயந்தரம் ஆயிரும்னு நினைக்கிறேன்..”

 

“யூ மீன் இன்னிக்கு.. மணி 2 சார்.. அடுத்த நாள் ஆரம்பிச்சிருச்சு..” அவன் சொல்ல “ஆமா ஆமா.. இன்னைக்கு சாயந்தரம்..”

 

“அப்போ வண்டி கிளம்பறதுக்கு எப்படியும் நாளைக்கு மதியம் ஆயிடுமா? இங்க ஒரே பொட்டல் காடா இருக்கு.. இங்க எதுவும் கிடைக்கும்னு தோணல.. எப்படி நாளைக்கு மத்தியானம் வரைக்கும் இங்கே சமாளிக்க முடியும்..”

 

“தெரியல தம்பி.. பக்கத்து ஊர்ல ஏதாவது டீ கடை இருக்கும்.. பார்த்து எதையாவது வாங்கி தின்னு சமாளிக்க வேண்டியது தான்.. வண்டி கிளம்பினா தானே போக முடியும்.. இல்லன்னா பக்கத்துல இருக்குற டவுனுக்கு போய் ஏதாவது பஸ் கிடைச்சா புடிச்சு போயிடலாம்.. ஆனா டவுனுக்கு போகவே ரொம்ப தூரம் நடந்து போகணும்.. இங்க ஒரு ரெண்டு கிலோ மீட்டர் நடந்து போனா டீக்கடை எல்லாம் இருக்கும்.. அங்க ஏதாவது சாப்பிட்டு நாளைக்கு காலையில ஓட்டிட்டோம்னா மதியம் ட்ரெயின் கிளம்பிடும்.. ஏதாவது பெரிய ஸ்டேஷன்ல நிக்கும் போது சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கலாம்..”

 

“ஓ.. சரி தேங்க்ஸ் சார்..” என்றவன் “வாங்க.. இனிமே வேற ஒன்னும் பண்ண முடியாது.. நம்ம இடத்துக்கு போய் வெயிட் பண்ணலாம்.. தூங்குறதுக்கு ட்ரை பண்ணுவோம்.. காலையில எழுந்து இந்த பிரச்சனையை எல்லாம் ஃபேஸ் பண்ணிக்கலாம்..”

 

மறுபடியும் அவர்களின் இருக்கைக்கு இருவரும் அமைதியாகவே வந்தார்கள்.. “சரி நீங்க உங்க பெர்த்ல ஏறி படுங்க.. நானும் தூங்குறேன்.. காலைல எவ்ளோ அலைச்சல் இருக்க போகுதோ தெரியல..”

இப்படி சொன்னவன் அவளுடைய பர்த்தில் அவள் பத்திரமாக ஏறி படுத்து கொண்டதை நின்று பார்த்துவிட்டு பிறகு தன் பெர்த்தில் ஏறி படுத்துகொண்டான்..

 

இன்னும் ஒரு மணி நேரம் சென்ற பிறகு திடீரென காவியா விழித்துக் கொண்டு “என்ன.. டிரெயின் ரொம்ப நேரமா நகராம ஒரே இடத்தில நிற்கிற மாதிரி இருக்கு..? கழுத்து எல்லாம் வேர்த்து வேற ஊத்திருச்சு.. ஏய்.. யாழி.. என்னடி ஆச்சு? ஏன் ட்ரெயின் ரொம்ப நேரமா இங்க நின்னுட்டு இருக்கு..?”

 

சத்தமாக அவள் கேட்க அந்த சத்தத்தில் அந்த பெட்டியில் இருந்த அனைவருமே விழித்துக் கொண்டார்கள்.. 

 

“மறுபடியும் ஆரம்பிச்சிட்டா.. இவளுக்கு சைலன்ட்டா எதுவுமே பண்ண தெரியாது போல.. எல்லாமே அதிரடி தான்.. சரியான ரவுடி..” முணுமணுவென சொல்லிக் கொண்ட ஆர்யன் “ஹலோ.. உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா சைலண்டா கேட்க தெரியாதா? சுத்தி இவ்வளவு பேர் தூங்கிட்டு இருக்காங்க.. இவ்வளவு சத்தமா பேசுறீங்க?”

 

அவன் எரிச்சலோடு கேட்க “நான் பேசினா வேற யாருக்கும் எரிச்சல் இல்லை.. உங்களுக்கு மட்டும் தான் ஆகவே மாட்டேங்குது.. பாருங்க.. வேற யாராவது என்னை ஏதாவது கேள்வி கேக்குறாங்களான்னு.. உங்களுக்கு எப்பவும் என்னோட ஏதாவது சண்டை போடணும்.. இப்ப இதை வச்சு ஆரம்பிக்கிறீங்களா? சரி.. கமான்..  ஸ்டார்ட் மியூசிக்..” என்று சொல்லிவிட்டு தன் காதுகளை கைகளால் அழுத்தமாய் அடைத்து கொள்ள அவனோ கோபமாய் அவளை முறைத்து விட்டு மறுபடியும் திரும்பி படுத்துக் கொண்டான்..

 

“ஏன் டி நீ வேற..? மணி மூணு ஆகுது.. இந்த நேரத்தில யாராவது இவ்ளோ சுத்தமா பேசுவாங்களா? முன்னாடி டிராக்ல ஏதோ விரிசல் விழுந்துடுச்சாம்.. அதனால டிரெய்னை நிறுத்தி வச்சிருக்காங்க.. நாளைக்கு மதியத்துக்கு மேல தான் ட்ரெயின் கிளம்பும்னு டிடிஆர் சொன்னார்.. நானும் ஆரியனும் போய் டிடிஆரை கேட்டுட்டு வந்தோம்..”

 

“என்னது..? நீயும் ஆரியனுமா..? ஓ.. அவ்வளவு பேசியாச்சா அவனோட..? என்னடி.. உரிமையா பேர் எல்லாம் சொல்றே.. என்னை விட க்ளோஸ் ஆயிட்டானா அவன் உனக்கு?”

 

அவள் யாழினியிடம் ஒரு சிறு பொறாமையோடு கேட்க அவள் பேசியது ஆரியன் காதில் விழுந்த மறுகணமே பொசுக்கென திரும்பி “ஹலோ மேடம்.. இந்த அவன் இவன்னு சொல்ற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.. நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து தானே பேசுறேன்.. அது என்ன..? நீங்க மட்டும் உங்க ஃப்ரெண்டு கிட்ட அவன் இவன்னு பேசுறீங்க.. கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க..”

 

“அப்படிங்களா சார்.. ஓகே சார்.. ஏன்மா யாழினி.. மஹாகணம் பொருந்திய ஸ்ரீமான் ஆரியன் அவர்கள் தங்களுக்கு மிக நெருக்கமான தோழராக ஆகிவிட்டாரோ? இந்த மருவாதி போதுமா சார்?” 

 

அத்தனை பல்லையும் காட்டி அவனுக்கு அழகு காட்டிக்கொண்டு காவ்யா கேட்க அவனுக்கு அவள் குறும்புத்தனத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது… எப்படியோ போங்க.. ஆனா  எனக்கு தூக்கம் வருது.. அட்லீஸ்ட் கொஞ்சம் மெதுவாவாவது பேசுங்க..” என்று சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கிப் போனான்..

 

“அப்படின்னா நாளைக்கு மதியம் தான் ட்ரெயின் கிளம்புமா? நம்ம போய் சேர நாளைக்கு சாயந்தரம் ஆயிருமாடி..”

 

“ஆமாடி.. சரி.. எனக்கும் தூக்கம் வருது.. தூங்குடி காவி.. முடியலடி ப்ளீஸ்..”

 

நீ தூங்க போக “ஹேய் யாழி.. எனக்கு தூக்கம் கலைஞ்சுருச்சுடி.. இப்ப தூக்கம் வரமாட்டேங்குது.. சரி வா.. அப்படியே இறங்கி கொஞ்சம் தூரம் நடந்துட்டு வரலாம்..”

 

“என்னது.. நடந்துட்டு வரலாமா? என்னடி விளையாடுறியா? எப்படிடி தனியா இந்த இருட்டுல வெளியில நடக்கிறது?”

 

“நீ அந்த ஆரியனோட மட்டும் நடந்து போன இல்ல? அப்ப மட்டும் இருட்டு இல்லையா?” 

 

அவள் விவரமாய் கேட்க “அப்ப வண்டி நின்ன உடனே இறங்கி போனோம்.. எங்களை மாதிரியே நிறைய பேர் இறங்கி வண்டிக்கு என்ன ஆச்சுன்னு பாத்துட்டு இருந்தாங்க.. ஆனா இப்ப வண்டி நின்னு ஒன் ஹவருக்கு மேல ஆயிருச்சு.. இப்ப யாருமே கீழ இருக்க மாட்டாங்கடி.. தனியா நடந்து போய் ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ண? அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. பேசாம படுடி..”

 

அவள் அப்படி சொல்லவும் “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அதான் நான் இருக்கேன் இல்ல..? நான் பாத்துக்குறேன் வா..” என்று வேக வேகமாய் தன் பெர்த்தில் இருந்து இறங்கிய காவ்யா யாழினி கையையும் பிடித்து இழுக்க அவள் இழுத்த இழுப்பில் முன்னே விழ பார்த்தாள் யாழினி..

 

“அடியேய்.. ஏற்கனவே நானே இரண்டு வாட்டி விழுந்தாச்சு.. இன்னொரு வாட்டி விழுந்தேன் அவ்ளோதான்.. என் மானமே போயிரும்.. நானே வரேன் இருடி..” என்று மெதுவாக இறங்கி வந்தாள் யாழினி..

 

ஆரியனும் இவர்கள் பேசியதை கேட்டு எதிர்ப்புறமாக வாயை மூடி சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.. 

 

“சரி வா போலாம்..” என்று கையை கோர்த்து பெட்டியில் இருந்து இறங்கி இருளில் மெதுவாக நடந்தார்கள் இருவரும்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று பேர் காவியாவை போலவே அப்போதுதான் விழித்துக் கொண்டு ரயில் நின்றதை பற்றி மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.. 

 

மெதுவாக இருவரும் நடந்து ரயிலின் முகப்பிற்க்கே வந்துவிட “வாடி.. போதும்டி.. வா.. திரும்பி போலாம்.. ட்ரெயின் எஞ்சினே வந்துருச்சு..” யாழினி சொல்ல காவியாவோ எங்கேயோ உற்றுப் பார்த்திருந்தாள்..

 

“என்னடி பாக்குற..?” அதே திசையில் யாழினியும் பார்க்க அங்கே சிறிது தூரத்தில் மின்மினி பூச்சிகள் ஒரு புதரை சுற்றி பறந்து கொண்டிருக்க மினுமினுக்கும் நட்சத்திரங்களை தாங்கியது போல அந்த புதர் மின்னிக்கொண்டிருந்தது..

 

“அங்க பாருடி.. எவ்வளவு மின்மினி பூச்சி.. வாடி போய் பார்க்கலாம்..” காவியா அழைக்க “அங்க ரொம்ப தனியா இருட்டா இருக்கு டி.. வேணாம்.. அங்க யாருமே இல்ல.. சொன்னா கேளு..”

 

“அதான் அங்க யாருமே இல்லல்ல? அப்புறம் என்னடி ஆக்போகுது? வா.. போய் பாத்துட்டு ரெண்டு மின்மினி பூச்சியை புடிச்சிட்டு வரலாம்..”

 

சொன்னவள் அதோடு நில்லாமல் யாழினியின் கையை பிடித்துக் கொண்டு அந்த தண்டவாளத்திலேயே வேகமாக அந்த மின்மினி பூச்சிகள் இருந்து புதரை நோக்கி ஓடினாள்..

 

அந்தப் புதருக்கு அருகே சென்றவுடன் அந்த மின்மினி பூச்சிகளின் அழகில் மயங்கி

போய் இருவரும் அதோடு விளையாட ஆரம்பிக்க அதே நேரம் புதரின் இன்னொரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு அவர்களை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது..

 

தொடரும்..