காதலின் தீபம் ஒன்று..!! – 14
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
தன் தந்தையோடு தன் வீட்டிற்கு சென்ற யாழினி அங்கே அவளின் அன்னை படுக்கையோடு படுக்கையாய் சுருண்டு படுத்திருக்க அதை பார்த்து பதறி போனவள் அவள் அருகே ஓடி சென்று “அம்மா.. என்னம்மா ஆச்சு..? நீ ஏன்மா இப்படி ரொம்ப இளைச்சு கருத்து போயி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி ஆயிட்ட.. என்னமா.. என்ன பிரச்சனை உனக்கு..? நான் போன வாட்டி பார்க்கும்போது நல்லா தானமா இருந்த..? எட்டு மாசத்துல இப்படி உரு குலைஞ்சு போய் இருக்கியே மா..? என்ன ப்ராப்ளம் மா?”
கண்களில் கண்ணீர் அதுவாய் வழிந்து கொண்டிருக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் தன் அன்னையின் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்த விழிகளோடு அவளை ஆராய்ந்த படி கேட்டாள் யாழினி..
“ஒன்னும் இல்லடா யாழி.. அழாத ப்ளீஸ்.. எனக்கு ஒன்னும் இல்ல..” ரொம்பவும் சிரமப்பட்டு அவளுடைய தாய் பேச அவளுக்கோ அவள் நிலையை கண்டு உள்ளுக்குள் பதைபதைத்து போனது..
தன் தந்தை பக்கம் திரும்பி “அப்பா.. என்னப்பா ஆச்சு அம்மாக்கு.. என்னப்பா ப்ராப்ளம்.. ஏன்ப்பா இப்படி இருக்காங்க..? போன வாட்டி போகும்போது உடம்பு சரியில்ல.. ரொம்ப தலைவலின்னு சொன்னாங்க.. அதுக்கு டாக்டர் கிட்ட போயிட்டு வந்து ஸ்கேன் எடுக்கணும்.. அது இதுன்னு சொன்னாங்க.. அப்புறம் நான் ஃபோன் பண்ணும் போது கூட நீங்க அம்மாக்கு ஒன்னும் இல்ல.. ஸ்ட்ரெஸ்னால அடிக்கடி தலைவலி வருதுன்னு தானே பா என் கிட்ட சொல்லி இருந்தீங்க.. ஆனா இப்ப அம்மாவை பாத்தா அப்படி தெரியலையே பா.. உண்மைய சொல்லுங்க பா.. என்னப்பா பிரச்சனை..”
தன் தந்தையின் தோளை பிடித்து உலுக்கி கத்தி கதறியபடி கேட்டாள் அவள்..
அவரோ கண்ணை மூடி தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டவர் “அம்மாடி என்னோட கொஞ்சம் வா.. சொல்றேன்..” என்று அவளை தனியே இன்னொரு அறைக்கு அழைத்து சென்று கதவை தாழிட்டு அவளிடம் அவள் தாயின் நிலையை பற்றி விளக்க ஆரம்பித்தார்..
“அம்மாடி உங்க அம்மாக்கு பிரைன் டியூமர் மா.. அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ்க்கு வந்துருச்சு.. மருந்து கொடுத்து அவளுக்கு ரொம்ப வலி இல்லாம டாக்டர்ஸ் பார்த்துக்கறாங்க.. அவ்வளவுதான்.. உங்க அம்மா நம்மளோட ரொம்ப நாள் இருக்க மாட்டா டா.. அவ கொஞ்சம் கொஞ்சமா நம்மள விட்டு போயிட்டு இருக்கா..”
கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகி விழ சுவற்றில் சாய்ந்து கையை மார்புக்கு குறுக்காக கட்டி நின்ற படி கண் மூடி சொல்லிக் கொண்டிருந்தவரை நம்ப முடியாமல் பார்த்து இருந்தாள் யாழினி..
அப்படியே உறைந்து போனவள் நெஞ்சில் கை வைத்து பின்னாலேயே நகர்ந்து அங்கு இருந்த கட்டிலில் தன் காலில் ஜீவனற்று போனது போல் சடாரென தளர்ந்து அமர்ந்தாள்..
“என்னப்பா சொல்றீங்க நீங்க? இவ்வளவு நாள் ஏன்பா என்கிட்ட சொல்லவே இல்ல..? ஒவ்வொரு வாட்டியும் ஃபோன் பண்ணும் போது அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னீங்க.. ஸ்ட்ரெஸ் தலைவலின்னு டாக்டர் சொல்லிட்டாரு.. சரியாக கொஞ்ச நாள் ஆகும்னு சொன்னீங்க.. அதை நம்பி தானே பா நான் அங்கேயே இருந்தேன்.. இப்ப இப்படி தலையில இடியை இறக்குற மாதிரி ஒரு விஷயத்தை சொல்றீங்களே பா.. இப்ப நான் என்னப்பா பண்ணுவேன்..? என்ன பண்ணுவேன்.. அப்பா ஏதாவது பண்ணி அம்மாவை காப்பாத்த முடியுமா பா? எங்கயாவது வெளிநாடு கூட்டிட்டு போய் ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ணி அம்மாவை காப்பாத்த முடியுமா? நீங்க கேளுங்க டாக்டர்கிட்ட.. ஏதாவது வழி இருக்கும் பா..” தன் தந்தையின் சட்டையை பிடித்து அவர் முகத்தை பார்த்தபடி கெஞ்சும் குரலில் இறைஞ்சினாள் அவள்..
அவரோ தலையை இடவலமாய் ஆட்டியபடி “இல்லடா.. அந்த ஸ்டேஜ் எல்லாம் உங்க அம்மா தாண்டிட்டா.. ஒன்னும் பண்ண முடியாத நிலைமையில தான் நாம இருக்கோம்டா.. அவ நம்ம கிட்ட எல்லா விஷயத்தையும் மறைச்சுட்டா.. அவ கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னாடியிலிருந்தே ரத்த வாந்தி எடுத்துட்டு இருக்காம்மா.. ஆனா அதை நமக்கு தெரியாம எப்படியோ மறைச்சி இருக்கா.. இப்ப கூட அவளா சொல்லல டா.. நீ உன் காலேஜ் கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி உன்னோட மியூசிக் க்ளாஸூக்கு போயிருந்த.. அப்போ நான் வீட்டுக்கு வந்தப்போ அவளுக்கு ரொம்ப இருமலா இருந்துச்சு.. பொழுது சாயற வேளையில எவ்வளவு சோர்வா இருந்தாலும் படுக்காதவ அன்னைக்கு ரூம்ல பெட்ல படுத்து இருந்தா.. ரொம்ப இருமல் அதிகமா இருக்கேன்னு கிட்ட போய் பார்த்தேன்.. இருமி இருமி சோர்ந்து போய் மயக்கமாயிட்டா.. அவ வாயில ரத்தம் வழிஞ்சுட்டு இருந்தது.. அதை பார்த்து அப்படியே உடைஞ்சு போயிட்டேன்டா நானு..”
அன்றைக்கு அவர் பார்த்த காட்சி கண் முன் நடப்பது போல் முகத்தை சுருக்கி அந்த வலியை முகத்தில் பிரதிபலித்தார் அவர்..
“அன்னைக்கு நான் இருந்த நிலைமையை உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. நான் எல்லாம் அவளுக்கு புருஷனா எதுக்கு உயிரோட இருக்கேன்னு தோணுச்சு.. அப்புறம் அவளை தூக்கிட்டு டாக்டரை பார்க்க போனேன்.. ஆனா அப்பவே ரொம்ப லேட் ஆயிடுச்சு.. அந்த டாக்டர் எதுவும் பண்ணமுடியாதுன்னு சொன்னாலும் அதை நம்பாம அவளை ஊர்ல இருக்கிற அத்தனை பெரிய பெரிய ஹாஸ்பிடல்க்கும் கூட்டிட்டு போனேன்.. ஃபாரின்ல இருந்து டாக்டர்ஸ் எல்லாம் வரவழைச்சு கூட பாத்தாங்க டா.. எல்லாரும் கைவிட்டுட்டாங்கடா..”
ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்து யாழினியை பார்த்து “இதுல எனக்கு ரொம்ப வேதனையை கொடுத்த விஷயம் என்ன தெரியுமா? அவளை எதுக்குடி இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சேன்னு கேட்டா உங்களுக்கு வீண் செலவு வைக்க கூடாதுன்னு தான் மறைச்சேன்னு சொல்றா டா.. அப்படி ஒரு பதிலை சொன்னப்போ எனக்கு அவளை அப்பவே என் கையால கொன்னு போடணும் போல இருந்தது.. இன்னிக்கி என்னை ஒண்ணுமே செய்ய முடியாத ஒரு கையாலாகாதவனா நிக்க வெச்சி இருக்கா டா உங்கம்மா.. கொஞ்சம் கொஞ்சமா அவ உயிர் போறதை பார்ககற தண்டனையை எனக்கு கொடுத்திருக்கா.. உங்க அம்மாவை நான் உயிருக்கு உயிரா தானே பார்த்துக்கிட்டேன்.. எனக்கு எதுக்கு மா இப்படி ஒரு தண்டனை கொடுத்தா அவ..?”
சின்ன குழந்தை போல் குலுங்கி குலுங்கி அழுதவரை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை யாழினிக்கு.. திடீரென தன் வாழ்க்கையை யாரோ இருட்டடித்தது போல் இருந்தது அவளுக்கு..
அவர் தலையை தன் தோளில் தாங்கியவள் அவர் முதுகை வருடி விட்டு “ஐ அம் சாரிப்பா.. அந்த மாதிரி நேரத்துல நான் கூட உங்க கூட இல்லப்பா.. என்கிட்ட நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல..? நானாவது உங்க கூட இருந்திருப்பேன்.. நானும் உங்க கூட இல்லாம ரொம்ப தவிச்சு போயிருப்பீங்களேப்பா.. “
“ஆமாண்டா.. ஆனா ஒவ்வொரு முறையும் அவ முன்னாடி நான் உடைஞ்சு அழும்போது அவளும் என் கூட சேர்ந்து அழுதா.. அப்பதான் அந்த டாக்டர் சொன்னாரு.. இப்படியே அழுதிட்டு இருந்தா அவங்க ஸ்ட்ரெஸ் அதிகம் ஆகி வியாதியும் தீவிரமாயிடும்.. அவங்க உங்க கூட இருக்கற நாட்கள் கம்மி ஆயிடும்னு.. அப்பதான் முடிவு பண்ணேன்.. அவ இருக்கிற வரைக்கும் உங்க அம்மாவை கொஞ்சம் சந்தோஷமா வச்சுக்கணும்னு.. அதான் நான் அவ முன்னாடி அழக்கூடாதுன்னு தைரியமா இருக்கிற மாதிரி காட்டிகிட்டு இருக்கேன்.. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சு போயிருக்கேன்டா..”
இப்படி பேசிக் கொண்டிருந்தவர் தலையில் அடித்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்த படி அப்படியே மடங்கி அமர்ந்து கதற அதைப் பார்த்து நொறுங்கிப் போனாள் யாழினி.. அவர் தோளில் கை வைத்து அப்பா என்று குரல் தழுதழுக்க அவள் அழைக்க அவரோ அவள் கைகளில் தன் முகத்தை புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்தார்..
“அவளோட நான் வாழ்ந்த 25 வருஷத்து வாழ்க்கை.. எல்லாம் கனவாக போகுதுடா.. முதல்ல நான் கூட நினைச்சேன்.. உன்னை இங்க கூப்பிட்டு அவளோட இருக்க சொல்லலாம்னு.. உனக்கு சொன்னா நீயும் வேதனை படுவ.. இங்க வந்து அவ முன்னாடி நீ அழுதுகிட்டே இருந்தா அது அவளுக்கு வியாதியை இன்னும் அதிகப்படுத்தும்.. அவ நம்மளோட இருக்கிற போற நாளை குறைக்கும்.. அது மட்டும் இல்லாம அவளோட இந்த நிலைமைனால உன் படிப்புக்கு எந்த ஒரு தொந்தரவும் வரக்கூடாது அவ சொன்னா.. அவளுக்கு உன்னை பெரிய பாடகியா பாக்கணும்னு ரொம்ப ஆசை மா.. அவளோட ரொம்ப பெரிய கனவு அது.. அந்த கனவை நீ அடையறதுக்கு அவளால எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு அவ நினைச்சா.. அதான் உன்கிட்ட இதை பத்தி எதுவுமே சொல்ல வேணாம்னு அவ சொன்னா.. அதனால தான் நான் உன்கிட்ட சொல்லல டா.. ஆனா நாளுக்கு நாள் அவ உடல்நிலை ரொம்ப மோசமாகிகிட்டே இருக்கு.. அதனால தான் உன்கிட்ட இதுக்கு மேல மறைக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.. லீவுக்கு கூட உன்னை வர வைக்க வேண்டாம்ன்னு தான் அவ சொல்லிட்டு இருந்தா.. ஆனா ஒரு வேளை அவளுக்கு திடீர்னு ஏதாவது ஆயிருச்சுன்னா.. “
அவர் வாயை சட்டென தன் கையால் மூடினாள் யாழினி தலையை இட வலமாய் ஆட்டி கலங்கிய விழிகளோடு அவரை பார்த்தவளின் தலையை வருடியவர் “அவர் பேசுற நிலைமையில இருக்கும்போதே நீ அவளை வந்து பார்த்து பேசணும்னு நினைச்சேன் டா.. இப்பவே அவளுக்கு அடிக்கடி மூச்சு வாங்குது.. ரொம்ப பேச முடியல.. கொஞ்சம் பேசினாலே இருமல் வந்துடுத்து.. போகப்போக எப்படி இருக்குமோ தெரியல.. இந்த பத்து நாள் நீ இங்க இருக்கும் போதே எப்படி உன் துக்கத்தை உங்க அம்மா முன்னாடி அடக்கி வைப்பேன்னு எனக்கு தெரியாது.. ஆனா உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்.. அவ முன்னாடி அழுதுறாத.. அது அவளை இன்னும் சீக்கிரம் நம்ம கிட்ட இருந்து கூட்டிட்டு போயிரும்..”
அதை கேட்டவள் தன்னைத் தானே கட்டுப்படுத்தி கண்ணீர் சிந்த கூடாது என்று எண்ணிய படி கண்ணை துடைத்து விட அதுவோ துடைக்க துடைக்க கண்ணீரை சொறிந்து கொண்டே தான் இருந்தது.. அவள் பேச்சைக் கேட்காமல் அவளுடைய விழிகள் குளமாவதை தடுக்க முடியாமல் திணறிப் போனாள் அவள்.. உள்ளுக்குள்ளே இருந்த பெருவலி தொடர்ந்து கண்ணீராய் அவள் விழி வழியே பொழிந்து கொண்டே இருந்தது..
தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டவள் மறுபடியும் கண்ணீரை துடைத்தபடி தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு தன் அன்னையை பார்க்க போனாள்.. ஆனால் அவள் அன்னையை பார்த்த நொடி கண்கள் மறுபடியும் குளமாக காத்திருக்க அந்த கண்ணீரை உள்ளுக்குள்ளே இழுத்துக் கொண்டவள் தன் முகத்தில் சிரமப்பட்டு ஒரு புன்னகையை கொண்டு வந்து தன் தாயின் அருகில் செல்ல அவரோ மருந்தின் வீரியத்தில் உறங்கிப் போயிருந்தார்..
இவ்வளவுக்கு பிறகும் கண்ணீர் திரும்பவும் ஆறாய் பெருகி விழ அந்த இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென தன் தந்தையிடம் சென்றவள்..
“அப்பா.. ப்ளீஸ் பா.. நான் காவியா வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் பா.. எனக்கு அவளை பார்க்கணும் பா..”
அவள் கெஞ்சவும் அவரோ அங்கே ஆரியன் இருப்பானே என்ற நினைப்பில் “அது.. இப்போ அங்க வேண்டாமே டா.. அந்தப் பையன் அங்க இருப்பான் இல்ல?” என்று இழுக்க “ப்ளீஸ் பா.. அவளுக்கு தான் பா என் வலி புரியும்.. நான் அவளோட கொஞ்சம் பேசினா எனக்கு கொஞ்சம் தைரியம் கிடைக்கும் பா.. ப்ளீஸ் பா.. என்னால இங்க ஓப்பனா அழ கூட முடியலப்பா.. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் பா..”
அதற்கு மேல் அவளை மறுத்து பேச முடியாமல் “சரி போய்ட்டு சீக்கிரம் வா..” என்றார் அவர்..
உடனே வேறு ஒரு அறைக்கு சென்று காவியாவை அழைத்தாள் யாழினி..
காவியாவை அழைத்தவளிடம் “சொல்லு யாழி.. வீட்டுக்கு போய் சேர்ந்துட்டியா?”
காவியா நிதானமாக கேட்க முதலில் அவளிடம் எதுவுமே சொல்ல முடியாமல் கேவி கேவி அழுது கொண்டிருந்தாள் யாழினி.. காவியாவுக்கோ அவள் அழுகையை கேட்டு மனம் பதைத்து போனது..
“ஏய் யாழி.. முதல்ல அழகையை நிறுத்து.. என்ன விஷயம்னு சொல்லுடி.. விஷயத்தை சொல்லாம அழுதுகிட்டே இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது.. ஒரே படபடப்பா இருக்குடி.. என்னடி விஷயம்..? வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்துட்டே இல்ல..? வழியில் ஏதாவது ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? இல்ல உங்க அப்பா உன்னை ஏதாவது ரொம்ப திட்டி அதிரடியா வீட்டை விட்டு விட்டு வெளியே அனுப்பிட்டாரா..? ஏன்னா அந்த மனுஷன் செய்யக்கூடியவர் தான்..”
அவள் பேசியதை கேட்க கேட்க அங்கே இருந்த இன்னொருவனுக்கோ பதட்டமும் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது..
யாழினியோ அவசரமாக அவளை மறுத்து “அதெல்லாம் இல்லடி.. எனக்கும் அப்பாக்கும் ஒன்னும் இல்ல.. நாங்க வீட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்.. எங்க அம்மாவுக்கு தான்..”
அவள் அழுது கொண்டே சொல்லமுடியாமல் திணறவும் “ஆன்ட்டிக்கா? என்னடி ஆன்ட்டிக்கு..? என்ன ஆச்சு..? நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள மேல இருந்து கீழ விழுந்துட்டாங்களா என்ன..? ஏதாவது அடி கிடி பட்டுருச்சா..?”
அவள் சின்னதாய் யாருக்காவது ஏதாவது அடிபட்டு இருக்குமோ என்ற நினைப்பிலேயே பேசிக் கொண்டிருக்க “இல்லடி காவி.. எங்க அம்மா கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போயிட்டே இருக்காங்கடி.”
“ஏன்டி..? என்ன ஆச்சு..? ஆன்ட்டிக்கும் அங்கிளுக்கும் ஏதாவது சண்டையா..? அதனால ஆன்ட்டி வீட்டை விட்டு போறேன்னு சொன்னாங்களா..? உங்க அப்பாவோட இன்னொரு பொண்ணு வாழ்ந்திருந்தா எப்பவோ மூட்டை கட்டிட்டு போயிருப்பா.. உங்க அம்மா ரொம்ப லேட்.. இப்படித்தான் உங்க அப்பாவை இவ்வளவு நாள் தாக்கு பிடிச்சாங்களோ தெரியல..”
“அடியேய்.. என் நிலைமை புரியாம விளையாடாதடி.. அவங்க என்னடி எங்க அப்பா விட்டுப் போறது? அதான் கடவுளே எங்க அப்பா கிட்ட இருந்து எங்க அம்மாவை பிரிச்சி ஒரேடியா கூட்டிட்டு போகணும்னு முடிவு பண்ணிட்டாரே.. எங்க அம்மா எங்களை எல்லாம் விட்டு ஒரேடியா இந்த உலகத்தை விட்டே போக போறாங்க டி..”
அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே ஒரு நொடி ஒன்றும் விளங்காமல் சிலையாகி நின்று இருந்தாள் காவியா..
அவள் நிலையைப் பார்த்த மகிழன் “என்ன ஆச்சு காவி.. யாழி என்ன சொல்றா?” அவன் காவியாவின் தோளை பிடித்து உலுக்கி கேட்டு கொண்டிருக்க அவளோ தான் கேட்டது நிஜம் தானா.. ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கிறோமா என்ற நினைப்பில் இருந்து வெளிவர முடியாமல் உறைந்து போய் நின்று இருந்தாள்..
🎼🎶🎵
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா
நீ பாடம்மா
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா
நீ பாடம்மா
🎵🎶🎼
தொடரும்..