Advertisement

EPILOGUE
ஏழு வருடங்களுக்கு பிறகு
“தாத்தாவை சுட்டுடாதடா… வலிக்கும்டா…” செல்வபாண்டியன் ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டு குரல் கொடுக்க,
“சுட்டா தாத்தா செத்துடுவேன்டா. தாத்தா பாவம்டா…” தர்மதுரை இன்னுமொரு தூணுக்கு பின்னால் மறைந்தவாறு குரல் கொடுக்க, கொள்ளுப் பேரன்களான வெற்றிமாறனும் இளமாறனும் ஆளுக்கொரு பொம்மை துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர்களின் தலை தெரிந்தால் சுட்டு வீழ்த்த காத்துக் கிடந்தனர்.
வெற்றிக்கு மணிமாறன் எப்படிப்பட்டவன், எப்படி இருந்தான், எப்படி வாழ்ந்தான் என்றெல்லாம் புரிந்து போக, போலீஸ் வேலையில் இருப்பதும் அதை சரிவர செய்வதும், மணிமாறன் யாரோடெல்லாம் எவ்வாறெல்லாம் பழகினான் என்பதை அறிந்திருந்தமையால் எந்த சிக்கலும் இல்லாமல் அவனால் அவன்தான் மணிமாறன் என்று உலகத்தை ஏமாற்ற முடிந்தது.
அவனுக்குள் இருந்த ஒரே கேள்வி மணிமாறன் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் லதா தன்னை பற்றி ஒரு வார்த்தையேனும் மணிமாறனிடம் சொல்லவுமில்லை. தன்னை தேடி வரவுமில்லை என்பதே.
மணிமாறனாக அன்னையை கண்டு உணர்ந்தவனுக்கு லதா பாசமிகுந்த அன்னையாக தெரிய இது பற்றி அவளிடமே கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தவன். ஷாலினியிடம் பேசி அவளையும் அழைத்துக்கொண்டு சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களும் அவனது வீட்டில் தங்க முடிவு செய்தான்.
ஷாலினிக்கு லதாவின் மீது எந்த கோபமுமில்லை. தன்னுடைய பேச்சுக்கு எதிர்வினைதான் லதாவின் பேச்சு என்று அறிந்திருந்தமையால் அத்தையை கட்டிக்கொண்டு நலம் விசாரிக்க, லதாவாலும் கோபத்தை இழுத்துப் பிடித்திருக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தி மனக்குமுறல்களையெல்லாம்  கொட்டித் தீர்க்கலானாள்.
“கோபத்துல ஒரு வார்த்த சொல்லிட்டேன் அதுக்காக இவன் அவ்வளவு பேசுவானா?” மாறன் வெற்றியாக மாறி பேசியதை கூற,
“சாரி மம்மி எனக்குதான் மூளைல கோளாறுனு தெரியுமே உனக்கு” அன்னையின் கன்னங்களை கிள்ளி குழந்தை போல பேசி சமாதானப்படுத்த முயன்றான் வெற்றி.
“அவன நான் யாருக்கு கொடுத்தேன் உங்க அப்பாக்கு தானே கொடுத்தேன். அவரை நம்பி கொடுக்கல. உங்க தாத்தாவ நம்பி கொடுத்தேன். அவர் அவன நல்லாதானே வளர்த்தாரு. என்ன தேடி வராதீங்கன்னு உங்கப்பாகிட்ட சொன்னா வர மாட்டாரா? என் பையன கொடுத்ததே அவன் அம்மாவ தேடுவான். என்ன புரிஞ்சிக்குவாரு. என்ன தேடி வருவார்னுதான். கடைசிவரைக்கும் என் பையன் கிட்ட என்ன சொன்னார்னு தெரியல என் மேல வெறுப்புலயே செத்தே போய்ட்டான்” குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் லதா.
“என்ன மம்மி நீ இதுக்கு போய் அழுற?  வெற்றி நிச்சயமா உன்ன புரிஞ்சிப்பான். ஆமா என் கிட்ட அவனை பத்தி ஏன் சொல்லல? எனக்கொரு தம்பி இருக்கான்னு சொல்லி இருந்தா நானே அவனை தேடி வந்திருப்பேனே” மாறனாக கேட்டான் வெற்றி.
“நிச்சயமாக வந்திருப்ப, அப்படி வந்தா உங்கப்பா நம்ம கூட சேர்ந்து வாழ்ந்திருப்பார். இதோ இப்போ இருக்கோம் இப்படி” வெறுமையாக புன்னகைத்தாள் லதா.
பூபதிக்கு என்றைக்குமே அவரது ஆராய்ச்சிதான் முக்கியம். குடும்பத்தை பற்றியெல்லாம் பெரிதாக எண்ணுபவர் அவரல்ல. இப்பொழுதும் கூட மாறனின் இடது மூளையை வெற்றிக்கு பொருத்தியதால் வெற்றி மாறனாகவே வாழ்ந்தான் என்பதை கண்டு விட்ட மகிழ்ச்சியில் மீண்டும் ஆராய்ச்சியை துவங்கி இருந்தார். அதனால் வீட்டுக்கே வருவதில்லை. அதைத்தான் லதா சொல்லிக்காட்டினாள்.
லதாவின் மடியில் தலைவைத்து படுத்தவாறே “ஆனாலும் மம்மி நீ வெற்றியை பத்தி பேசி நான் கேட்டதுமில்லை. அவனுக்காக எதையும் செஞ்சி நான் பார்த்ததுமில்லை” வேண்டுமென்றே வம்பிழுத்தான் வெற்றி.
“அட போடா ஒவ்வொரு பொறந்த நாளுக்கும் உனக்கு வாங்குறது போலவே அவனுக்கும் துணி வாங்கி அனுப்பி வைப்பேன். அத உங்கப்பா அவனுக்கு கொடுத்தாரோ என்னவோ” என்று அன்னை சொன்னதும் அதிர்ந்தான் வெற்றி.
அவனது பிறந்தநாளைக்கு பார்சலில் துணி இருக்கும். தந்தை தான் கொடுப்பார். அதை யார் அனுப்பினார்கள் என்று பூபதி இதுவரை சொன்னதில்லை. சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. கவரை படித்தால் வெற்றி தெரிந்துகொள்வான் என்ற எண்ணம். பூபதி அதிகம் பேசுபவரும் அல்லவே. ஆனால் அவனோ தந்தை தனது பிறந்தநாளை மறக்காமல் இருக்கிறார் என்ற சந்தோசத்தில் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலில் கவரை பிரித்து எரிந்து விடுவான். அது அன்னை கொடுத்தது என்று அறியாமலே போய் இருக்க, அன்னையின் மேல் அவனுக்கு கோபம் வரவும், தந்தையின் மீது பாசம் வரவும் இதுவே காரணமாக அமைந்திருந்தது. 
லதாவின் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டு “சாரி மம்மி” என்றவனுக்கு தான்தான் வெற்றி என்று சொல்ல மனம் ஏங்கினாலும். மாறன் இறந்து விட்டான் என்று சொல்லி அவளை கண்ணீர் கடலில் ஆழ்த்த மனம் வரவில்லை மௌனமாகவே இருந்து விட்டான்.
அதன்பின் வந்த நாட்கள் அன்னை மகன் உறவு நண்பர்களை போல் மாறி இருந்தது. வெற்றியும் ஷாலினியும் இரண்டு நாட்கள் இங்கே இருந்தால். லதா ஐந்து நாட்களும் அவர்களோடு வந்து அங்கே இருந்தாள். அதற்கு காரணமாக ஷாலினியின் கர்ப்பமும் அமைத்து விட்டது. இரட்டை குழந்தை வேறு. லதாவுக்கு அவளை தனியாக விட மனம் வரவில்லை. தான் எவ்வளவு மனதளவில் இன்னல்களை அடைந்தோம். சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்தோம் என்பது நியாபகத்தில் வர அவள் அருகிலையே இருந்தாள்.
ஷாலினி வெற்றி என்று அழைப்பதை கவனித்து “என்ன நீ மாறனை போய் வெற்றி என்று கூப்பிடுற?” கடிந்தாள் லதா.  
“சிலநேரம் அவன் வெற்றியா மாறுறான் அத்த அப்போ வெற்றியாதான் கூப்பிடனும். இல்லனா நான் தொலைஞ்சேன்” என்று சமாளிக்க லதாவும் அவன் வெற்றியாக மாறும் தருவாய் இதுவா என்று ஷாலினியிடம் கேட்டு இன்னும் அதிகமாக பாசத்தைக் கொட்ட,
“ஏன்டி இப்படி பண்ணுற? பாவம்டி அம்மா…” என்றவன் இனிமேல் தன்னை மாறன் என்றே அழைக்கும்படி உத்தரவிட்டிருந்தான். அது அவனுக்கு வெளியே செல்லும் நேரங்களில் பாதுகாப்பாகவும் இருந்தது. ஷாலினி யார் முன்நிலையிலாவது வெற்றி என்று அழைத்து, பிரச்சினையை உண்டு பண்ணி விடக்கூடாதே.
வெற்றி சொன்னது போல் அவனுக்கு டி.சி.பியாக பதவி உயரவும் கிடைத்தது. முதல் கேஸ் காணாமல் போன டி.ஐ.ஜியை தேடித் கண்டுப்பிடிப்பதேயாகும்.
வீட்டில் வண்டியும், அலைபேசியும் இருக்க, அவர் எங்கே சென்றிருக்க முடியும்? மாலை ஆறு மணிக்கு பிறகு சீசீடிவி வேலை செய்யவில்லை. அவரை யாரும் கடத்தியதாகவும் தெரியவில்லை. அவராகவேதான் காணாமல் போய் இருக்க வேண்டும். காணாமல் போனவரைக் கூட தேடித் கண்டு பிடிக்கலாம். தலைமறைவானவரை எப்படி கண்டு பிடிப்பது? அதுவும் டி.ஐ.ஜி போன்ற டெக்னலாஜியை கையாள தெரிந்தவரை என்று உயர் அதிகாரிகளிடம் பேசி கேஸை இழுத்து மூடி இருந்தான்.
சட்டத்தால் முடிக்க முடியாத எத்தனையோ வழக்குகளை ராபின், செல்வம். பஷீர் மற்றும் நிதிஷை வைத்து முடிக்க ஆரம்பித்தான்.
இதற்கிடையில் ஷாலினி இரட்டை ஆண்குழந்தையை பெற்றேடுக்க அவர்களுக்கு வெற்றிமாறன், இளமாறன் என்றே பெயர் சூட்டினான் வெற்றி.
“யோவ் சீனியரே இது உனக்கே நியாயமா இருக்கா? உன் பேர எதுக்குயா உன் பையனுக்கு வச்சிருக்க?” ஷாலினி கிண்டலாகவும், புரியாதும் கேட்க
“என்ன யாரும் வெற்றின்னு கூப்பிட போறதும் இல்ல. என் வேலைய எடுத்து செய்ய இன்னொரு வெற்றி வேணாமா?” என்றான்
ராகவேந்திரனுக்கு கூட வெற்றியின் இந்த மறுபக்கம் தெரியும் அவனும் இவனுக்கு உதவ காத்துக்கொண்டுதான் இருந்தான். ராகவேந்திரரின் கூற்றுப்படி “சாவெல்லாம் இவனுங்களுக்கு மோட்ச்சம் கொடுக்குறது போல மாறன். இவனுங்க சாகவும் கூடாது அதே சமயம் வாழவும் முடியாதபடியான தண்டனையை கொடுக்கணும்” என்று சொல்ல
ஷாலினியிடம் “உன் மாமாவும் நீயும் சரியான சைக்கோபாத் கிளர்ஸ்டி” என்பான் வெற்றி.
“என் மாமா சொல்லுறதுதான் சரி” ஷாலினியும் வாதாடுவாள்.
“என்ன சரி? அவனுக மூச்சு விடுறதே இன்னொருத்தங்க ஆக்சிஜன்னு நான் நினைக்கிறன். பூமிக்கு பாரம்னு நான் நினைக்கிறன். செத்து தொலையட்டும்” என்பான் வெற்றி.
ஆனாலும் பெண்கள் மீது வன்கொடுமை செய்வோரை மட்டும் கொல்வதில்லை. அவர்களை ராகவேந்திரன் கடத்திக் கொண்டு சென்று லண்டனில் பழைய இடிந்த கோட்டையின் கீழ் இருக்கும் அவன் கட்டிய சிறைச்சாலையில் அடைத்து சித்திரைவதை செய்து வருகின்றான். மாலினியை இழப்பை இன்னும் அவனால் தாங்க முடியவில்லை. திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் அவனுக்கு இல்லையென்றான்.
ஆனால் ஷாலினி விடவில்லை. கண்டிப்பாக திருமணம் செய்துகொண்டே ஆகா வேண்டும் என்று பெண் பார்க்கவும் செய்தாள்.  
“டோன்ட் போர்ஸ் மீ ஷாலினி. எனக்காக தோன்றினா நானே உன் கிட்ட சொல்லுறேன். அதுவரைக்கும் என்ன விட்டுட்டு” என்றான். ஷாலினியும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
ஏழு வருடங்களாகியும் ராகவேந்திரன் திருமணம் செய்துகொள்ளவில்லை. இங்கேதான் ஸ்கூலை நடாத்திக் கொண்டு இருக்கின்றான். அவன் அண்ணனும் குடும்பத்தாரும் அவனை அவன் போக்கில் விட்டிருந்தனர்.
ஷாலினியும் வாரத்துக்கு ஒருநாள் குழந்தைகளோடு சென்று பார்த்து விட்டு வருவாள். அப்படியாவது அவனுக்கு திருமணத்தின் மீது ஆசைவராதா என்று. குழந்தைகளிடம் பாசமாக இருப்பான். ஷாலினிக்கு பெண்குழந்தை பெற்றுக்கொள்ளும்படியும் பிறந்தால் மாலினி என்று பெயர் வைக்கும்படியும் கூறுவான்.
“அதுசரி” முணுமுணுப்பவள் முறைப்பாள்.
ஷாலினி வெற்றிக்கு பிறந்த இளமாறனும், வெற்றிமாறனும் தந்தையை போல் துப்பாக்கியும், கையுமாகத்தான் சதா அழைக்கின்றனர்.
“என்னடா இது விளையாட்டு சாமான் வாங்கினா வித விதமா வாங்க மாட்டீங்களா? வீடு பூரா துப்பாக்கியா இருக்கு” லதா தான் கத்துவாள்.
வெற்றியும், ஷாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வதோடு சரி.
ஷாலினி ஸ்கூலுக்கு, வெற்றி காவல் நிலையத்துக்கும் சென்றால் போதும் வீடு ரணகளம்தான்.
“எங்க இருந்துதான் இவனுங்களுக்கு ஐடியா கிடைக்குதோ” திட்டியவாறே லதா பொருட்களை அடுக்கி வைப்பாள். இந்த வாண்டுகள் மிஷன் என்ற பெயரில் துப்பாக்கிகளை மட்டுமே வைத்து வித விதமா விளையாடுவது மட்டுமல்லாது, “பாட்டி ஹாண்ட்ஸ் அப்” என்று லதாவியே பலமுறை கதிகலங்க வைப்பதுதான் லதாவின் எரிச்சலுக்கு காரணம். 
“உங்க வீட்டுல என்ன வேணாலும் விளையாடுங்க தாத்தா வீட்டுல நோ துப்பாக்கி” லதா என்னதான் மிரட்டினாலும் வாண்டுகள் மறைத்துக்கொண்டு எடுத்து வந்து விடுவார்கள்.
இன்றும் அப்படித்தான். அழுத்தினால் எதோ பந்து சென்று படும் துப்பாக்கியாம். அதை வைத்து தாத்தாக்களை விரட்டிக் கொண்டிருந்தனர்.
வேகமாக வந்து பட்டால் வலிக்கும். வாண்டுகள் வேறு கொஞ்சம் உடம்பு தூணுக்கு வெளியே தெரிந்தால் போதும் “திருடன் அங்கதான் பதுங்கி இருக்கிறான்” என்றவாறே சரமாரியாக சுட்டுக் தள்ள ஏராளமான கோலிக்குண்டு பந்துக்கள் வேகமாக பட்டு தெறிக்க தாத்தாக்கள் வலியையும் தாண்டி விளையாட்டில் ஐக்கியமாகி இருந்தனர்.
“நம்ம காலத்துல இதெல்லாம் இல்லையே தர்மா” செல்வபாண்டியன் மறைந்தவாறே சொல்ல
“இருந்திருந்தா கோழி திருடனை எல்லாம் பிடிச்சிருப்பேன்” மூச்ச வாங்கியவாறே சொன்னார் தர்மதுரை.
“போதும் விளையாடினது. வந்து சாப்பிடுங்க” லதா கத்த
“பாட்டி மிஷன் கம்ப்ளீட் பண்ணாம நோ புட், நோ வோட்டர்” வெற்றிமாறன் கூற,
“சட் அப் பாட்டி. திருடன் நாம இருக்குற இடத்தை கண்டு பிடிச்சி நம்மள எட்டக் பண்ணுவான்” இளமாறன் வாயில் விரல் வைத்து மெதுவாக கூற.
“இவனுங்க நம்மள கொல்லாம இன்னைக்கி சாப்பிட மாட்டாங்க போல. வா அடிபட்டு விழுந்திடலாம்” தர்மதுரையிடம் கூறியவாறே முதுகை காட்டிக் கொண்டு வந்து பந்துக்களை வாங்கிக் கொண்டு தரையில் சரிந்தார் செல்வபாண்டியன். அவரை தொடர்ந்து தர்மதுரையும் விழ, இரண்டு வண்டுகளும் அருகில் வந்து துப்பாக்கியால் பாடியை  தட்டிப்பார்த்து விட்டு ஹைபை கொடுத்துக் கொண்டனர்.
“என்னங்கடா இன்னைக்கும் தாத்தங்களை போட்டு தள்ளிட்டீங்களா?” என்றவாறே உள்ளே நுழைந்தான் வெற்றி.
தந்தையை கண்டதும் துப்பாக்கிகளை போட்டுவிட்டு தாவிச்சென்று அவன் தோளில் ஏறிக்கொள்ள வெற்றியும் அவர்களை தூக்கிக் கொண்டான்.
மதிய சாப்பாடு லதா கையால்தான் சரியான நேரத்துக்கு வந்து விடுவான் வெற்றி. லதா பரிமாற அனைவரும் அமர்ந்துகொள்ள “ஷாலு சாப்பிட்டாளா?” கேட்டவாறே வாண்டுகளுக்கு ஊட்டிவிட்ட வெற்றி தானும் சாப்பிட்டான்.
“என்ன அவ தலைபிரசவம் போல இப்படி வாந்தி எடுத்து சோர்ந்து போய் படுத்து கிடக்குறா? அவளை டாக்டர் கிட்ட காட்டு மாறா. சரியா சாப்பிட மாட்டேங்குறா. இன்னைக்கும் சூப்புதான் கொடுத்தேன்” கவலையாக சொன்னாள் லதா. 
“ஏன்டா வெற்றி உங்கப்பா போன் பண்ணலயாடா?” செல்பபாண்டியன் கேட்க அவனோ அன்னையைத்தான் பார்த்தான். எனோ செல்வபாண்டியன் அவனை மணிமாறன் என்று அழைப்பதே இல்லை. அவர் வளர்த்த பேரனை அவருக்கு அடையாளம் தெரியாதா? “நீ மணிமாறனாகவே இருக்கட்டும். ஆனா எனக்கு நீ வெற்றிதான்” என்று வெற்றி என்றே அழைக்க, யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“ஐம் வெற்றி” என்று வாண்டு வெற்றி கத்த, அவன் வாயில் சோற்றை திணித்து வாயை அடைத்தான் வெற்றி.
வெற்றி அன்னையை பார்த்ததற்கு காரணம் தாத்தாவின் அழைப்பல்ல தந்தை அமேரிக்கா சென்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. ஆரம்பத்தில் சென்று வந்தவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வரவே இல்லை. அலைபேசி அழைப்பு விடுத்தாலும் தான் ரொம்ப பிசி என்பதாகத்தான் சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு துண்டிப்பார்.
அன்னையிடம் பேசினாரா? என்பதற்காகத்தான் வெற்றி அன்னையை பார்த்தான். அவள் சோகமான பார்வையிலையே அவர் பேசவில்லை என்பதை புரிந்துகொண்டவன். “நான் போன் பண்ணுறேன்” என்றவன் சாப்பிட்டு முடித்து ஷாலினியை காண சென்றான்.
வாந்தி எடுத்த சோர்வில் ஷாலினி சுருண்டு படுத்திருந்தாள். வெற்றியை கண்டதும் இவள் எழுந்துகொள்ள முயற்சி செய்ய நாளே எட்டில் அவளை அடைந்தவன் அவள் அமர உதவி செய்து தானும் அமர்ந்து கொணடான்.
“என்னடி சாப்பிடுறது எல்லாமே வாந்தி எடுக்கிறியாம். ஒழுங்கா ஒன்னும் சாப்பிட மாட்டெங்குறியாம். அம்மா கம்பளைண்ட் பண்ணுறாங்க” மனைவியின் தலையை கோதியவாறே வெற்றி பேச
அவன் கையை தட்டி விட்டவள் “கம்பளைண்ட் பண்ணா புடிச்சி உள்ள வை” என்றாள். 
வெற்றிக்கு இருக்கும் வேலைக்கு அவளோடு நேரம் செலவிடுவதில்லை என்ற கோபம்தான் அது என்று வெற்றிக்கும் புரியாமலில்லை. அதற்காக அவன் மன்னிப்பு ஒன்றும் கேட்கவில்லை. இந்த குழந்தை உண்டாகும்வரை அவள் அவனோடுதான் அவன் செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டாள். போன தடவை போலல்லாது இந்த தடவை மசக்கை ரொம்பவே படுத்த பாடசாலைக்கும் லீவு விட்டவள் வீட்டில் ஓய்வெடுக்க கணவனின் அருகாமைக்காக ஏங்கலானாள்.
அவனின் வேலை பளு அவளுக்கு புரியாமலும் இல்லை. புரிந்தாலும் கோபம் வருகிறது. அதை அவனிடம் கட்டாமல் இருக்கவும் முடியவில்லை. 
“இது நல்ல ஐடியாவா இருக்கே. அப்போவாச்சும் நீ என் கூடவே இருப்ப இல்ல. இப்படி எனக்கு ஹெல்ப் பண்ணாம படுத்து கிடக்க மாட்ட இல்ல” வெற்றி கிண்டல் பண்ண, ஷாலினி முறைத்தாள். 
“ஹெல்ப்பா… உனக்கு ஹெல்ப் பண்ண போய் தான் நம்ம பசங்க துப்பாக்கியும் கையுமா அலையுறாங்க” அதற்கும் அவனையே வசைபாட
“பசங்க வளர்ந்தா என் பொறுப்ப அவனுங்க பார்க்க வேணாம்” சாதாரணமாக சொன்னான் வெற்றி.
“ஆமா சி.எம் போஸ்ட் பாரு உனக்கு அப்பொறம் உன் பசங்களுக்கு கொடுக்க”
“தப்பா சொல்லுரடி பொண்டாட்டி. சி.எம் போஸ்ட் எல்லாம் மக்கள் ஓட்டு போட்டு வர்றது” அவள் கன்னம் கிள்ளியவன் “ரொம்ப சூடா இருக்க. இங்க வா” என்று அவளை அணைத்துக் கொண்டு மாத்திரைகளை சரியாக சாப்பிடுகிறாளா என்று விசாரித்தான்.
அதற்கும் அவள் போலீஸாக நடந்துகொள்ளாதே எல்லாம் சரியாக சாப்பிடுவதாக கோபப்பட்டாள். ஆனால் அவன் அணைப்பிலிருந்து விலகத்தான் இல்லை.
உண்மையிலயே ஷாலினிக்கு வெற்றியின் மீது கோபமில்லை. தன்னிலைமையை எண்ணித்தான் கோபம். அந்த கோபத்தைத்தான் அவன் மீது காட்டுகின்றாள் என்று வெற்றிக்கும் தெரியும். அதனால்தான் இவ்வளவு பொறுமையாக பேசிக்கொண்டிருந்தான். மதிய உணவை சாக்காக வைத்து அவன் வீடு வருவதே அவளை பார்க்கத்தான்.
மூணு மாதங்கள் முடிந்தால் வாந்தி நின்று விடும் என்பதால் அதை சொல்லியே அவளை சமாதானப்படுத்தியவன், குடிக்க ஜூசும் கொண்டுவந்து கொடுத்தான். கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்திருந்த பழச்சாறு இதமாக தொண்டையில் இறங்க ஷாலினியின் கோபமும் மட்டுப்பட்டது.
“உங்கம்மாவை இப்படி காரமாகவே கொடுக்க சொல்லு. உப்பு, சப்பு இல்லாத உணவா கொடுத்து கொல்லுறாங்க”
“காரம் பாப்பாக்கு ஆகாது டி. முறைக்காத”
ஷாலினி பதில் சொல்ல வாயை திறக்க வெற்றியின் அலைபேசி அடித்தது.
“சொல்லு பஷீர்” என்றவாறே அலைபேசியை ஸ்பீக்கர் மூடில் போட்டிருந்தான் வெற்றி.
“சார் மகாபலிபுர பீச்சல ஒரு காலேஜ் பொண்ணோட டெட் பாடி கண்டெடுக்க பட்டிருக்கு. அத போஸ்ட்மாட்டம் பண்ணது நம்ம பொன்னம்பலம்தான். பின்கழுத்துல ஏதோ  ஆபரேஷன் பண்ணப்பட்ட தடையம் இருக்குதாம். சந்தேகமா இருக்கிறதா சொன்னாரு”
“ஓகே”
“அந்த பொண்ணப்பத்தி விசாரிச்சேன். எந்த மாதிரியான இல்லிகள் ஏக்டிவிட்டீசும் இல்ல. ட்ராக் பழக்கம் கூட இல்ல. அந்த பொண்ணு ஒரு இன்சொமேனியா பெர்ஷண்ட்” 
“அப்படினா…”
“அதுதான் சார் தூக்கம் வராத வியாதி. ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு அலல்து மூணு மணித்தியாலம் தான் தூங்குவாங்க”
“கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு என்னதான் பண்ணுவாங்க?” குறிக்கிட்டாள் ஷாலினி.
வாயில் விரல் வைத்து அவளை தடுத்த வெற்றி “இந்த மாதிரி கேஸ் இன்னும் இருக்கா?”
“தமிழ்நாட்டுல இல்ல. கேரளால ஒரு பொண்ணு. டில்லில ஒரு பையன் மூணே பேர்தான். மூணு பேரும் தற்கொலை பண்ணிகிட்டதாகத்தான் போலீஸ் ரெகார்ட் சொல்லுது”
“ம்ம்… அந்த பொண்ணோட போன் டீடைல்ஸ் என்ன?”
“ஒண்ணுமே இல்ல. ஆனா மாசா மாசம் ரிமைண்டர் செட் பண்ணி இருக்கா. எதுக்குன்னு குறிப்பிடப்படல” 
“சோ அங்கதான் ஏதோ இருக்கு. அந்த பொண்ணு வீட்டுக்கு போய் அவ ரூமை செக் பண்ண முடிஞ்சதா?”
“பொண்ணோட பேர் நித்யா, சொந்த ஊர் கோயம்புத்தூர், செத்தது மகாபலிபுரம். காலேஜ் படிக்கிறது சென்னை. நிதிஷ் அவ ஹாஸ்டல் ரூம செக் பண்ண போய் இருக்கான் சார்”
“சம்திங் பிசி இல்ல”
“ஆமா சார்”
“ஓகே நான் வரேன். முடிஞ்சளவு தாவல் திரட்டி வைங்க” என்ற வெற்றி அலைபேசியை துண்டிக்க,
“தீயா வேலை செஞ்சி இவ்வளவு தகவல் திரட்டி இருக்கானுங்க. உனக்கு இதுவும் பத்தாதா?
“மண்டைய காய வைக்க போற கேஸா இருக்கப் போகுது. நீ வேணா பாரேன்” வெற்றி யோசனைக்குள்ளாக,
இவ்வளவு நேரமும் கோபமாக இருந்த ஷாலினியின் கோபம் எங்கே சென்றது என்று கூட தெரியாமல் அவனை அணைத்து ஆறுதல் படுத்தியவள் “டோன்ட் ஒர்ரி வெற்றி. எவ்வளவு கேஸ் பார்த்துட்டோம். இதையும் நீ கண்டிப்பா கண்டு பிடிப்ப” என்றவாறே அவன் கன்னத்தில் முத்தம் வைக்க,
“சரி நான் கிளம்புறேன்” என்றவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு கிளம்பி இருந்தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு
“என்ன அப்டேட்ஸ் பாய்ஸ்” நால்வரையும் வெற்றி ஏறிட
“இறந்து போன பொண்ணு பேர் நித்யா சார். சீசீடிவி புட்டேஜ் செக் பண்ணதுல. அவ ரிமைண்டர் வச்சி அன்னைக்கி போனது ஹெல்த்கேயார் ஹாஸ்பிடலுக்கு. அங்க அவ ஆரம்பத்துல உங்க அப்பாவை சந்திச்சிருக்கா சார். அதே மாதிரி. டில்லி பையன் லக்ஷமனும், கேரளா பொண்ணு வள்ளியும் மொதல்ல உங்க அப்பாவத்தான் சந்திச்சு இருக்காங்க” ராபின் சொல்லி முடித்தான்.
“என் அப்பா ரெண்டு வருஷத்துக்கு மேலா அமெரிக்கால இருக்காரு. அப்போ அவர் அதற்கு முன்னடியா இவங்கள சந்திச்சாரு? இல்ல சமீபத்துல சந்திச்சாரா? அவர்தான் கொலை பண்ணாரா?” வெற்றி அதிர்ச்சியாகவே கேட்க,
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் சார் சந்திச்சு இருக்காரு” என்றான் செல்வம்.
“அவர் நேரடியாக கொலை பண்ணலைனாலும், அவருக்கும் இவங்களோட கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு சார்” என்றான் நிதிஷ்”
“டீடைலா சொல்லு”
“இந்தியா முழுக்க உள்ள எல்லா காலேஜூலையும் இன்சொமேனியா பெர்சன்ட்ட பிரியா ட்ரீட் பண்ணுறதா காலேஜ் அளவுல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காங்க. இது அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தது. நூத்துக்கு ஒன்னு ரெண்டு பேர்தான். அதனாலதான் இந்தியா முழுவதும் தேடி இருக்காங்க” என்றான் பஷீர்.
“முக்கியமா காலேஜ் பசங்க. அந்த ஏஜ் குரூப்தான் தேவைப்பட்டிருக்கணும்” என்றான் ராபின்.
“அப்படினா நாம தேட வேண்டியது இன்சொமேனியா பெஸண்ட்ஸ் அதுவும் காலேஜ் பசங்க. இல்லையா?” என்று வெற்றி கேட்க 
“லிஸ்ட் ரெடி சார். பின்கழுத்துல இருந்த சிலிஞ்சர் கிரோட்டோன் சேகரிக்க வைக்கப்பட்டிருக்குனு சயின்டிஸ்ட் ஜோஷ் சொன்னாரு” என்று நிதிஷ் அவர்களது விலாசத்தோடு ஒரு பேப்பரை வெற்றியின் கையில் கொடுத்தான்.
“எங்க அப்பா இப்போ எங்க இருக்காரு? அமெரிக்காளையா? இல்ல சென்னைலையா?” சந்தேகமாக கேட்க
இந்த வேலையில் சொந்தபந்தமெல்லாம் பார்க்க கூடாது என்பதுதான் முதல் ரூலே.
“அவர் போன் சிக்னல் ஒவ்வொரு நாட்டையும் காட்டுது சார். எக்ஸ்சாட் லொகேஷன் தேடிகிட்டு இருக்கேன்”
“சீக்கிரம் அவரை கண்டுபிடி அவர் வாய் திறந்தாதான் எல்லா உண்மையும் வெளியே வரும்” என்றான் வெற்றி.
வெற்றிமாறனின் வேட்டை தொடரும்….

Advertisement