Advertisement

அத்தியாயம் 8
அன்வர் இவர்ககளுக்காக வாசலிலையே காத்துக் கொண்டு நின்றிருந்தான்.
“சாப்பிட்டே பேசலாமா?” அன்வர் கேக்க,
“பாய் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என்ன சார் ஸ்பெஷல் பிரியாணியா?” வயிற்றை தடவியவாறே கேட்டான் நந்தகோபால்.
“சப்பாத்தி, தோசை ரெண்டும் இருக்கு. பிரியாணி எல்லாம் நைட்டுல சாப்பிட கூடாது. அதுவும் எங்களை மாதிரி இரவுல கண்முழிச்சு வேல பாக்குறவங்க சாப்பிடவே கூடாது. இல்லையா மாறன்” அன்வர் சொல்ல
“என்ன சார் நீங்க? நாம பாக்குற வேலைக்கு மூணு நேரம் ஒழுங்கா சாப்பிட முடியுமா என்ன? கிடைக்கிற நேரம் சாப்பிட்டு கிட்டாதான்” என்றான் நந்தகோபால் விடாது.
“ஏன் சார் இது உங்களுக்கே நியாயமா இருக்கா? நைட்ல ஸ்டேஷன்ல இருக்குறப்போ டைலி பிரியாணி தானே சாப்பிடுவீங்க. இது எனக்கே தெரியும், இவங்களுக்கு தெரியாதா? சார் நாம இங்க என்ன விருந்துக்கா வந்திருக்கோம். வேலைய பார்க்கலாம்” மஞ்சுளா நந்தகோபாலின் புறம் குனிந்து கூற,
“மஞ்சுளாவுக்கு ரொம்ப பசிக்குதாம் சார். இருக்குற சப்பாத்தி, தோசையாவது கொடுக்கட்டாம்” நந்தகோபால் சொல்ல இன்ஸ்பெக்டரை முறைக்க முடியாமல் நின்றிருந்தாள் மஞ்சுளா.
வரும் பொழுது ஒருவரையொருவர் கேலி செய்தவாறு சிரித்துப் பேசிக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்த மாறனும் இவர்களின் பேச்சை ரசிக்கலானான்.
உள்ளே செல்ல மூன்று வயது பெண்குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்க அது அன்வரின் குழந்தை என அன்வர் அறிமுகப்படுத்த குழந்தையும் அனைவருக்கும் தனது பெயரோடு தந்தையின் பெயரை கூறி விட்டு விளையாட ஆரம்பித்தது.
“என்ன சார் உங்க பேரையும் சேர்த்து சொல்லுறா?” மஞ்சுளா கொஞ்சம் ஆச்சரியமாக கேட்க
“விளையாடுற பிஸில இருக்க. இல்லனா உங்கள கேள்வி கேட்டிருப்பா. வாங்க நாம சாப்பிட்டே பேசலாம்” என்று உணவுண்ண அழைத்து செல்ல அன்வரின் மனைவி சம்சுளுஹா உணவுகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“ளுஹா எல்லாம் தயாரா?”
அனைவரையும் பார்த்து “வாங்க” என்றவள் கணவனை பார்த்து “ஆ… சாப்பிடலாம்” என்று கூற, அன்வர் அனுமதி கூறும்வரை யாரும் அங்கு காத்திருக்கவில்லை. அனைவரும் அமர்ந்து பரிமாறிக் கொண்டனர்.
சாப்பிடும் பொழுது யாரும் மறந்தும் வேலையை பற்றி பேசவில்லை. சம்ஸ் என்றால்? அரபியில் சூரியன் தானே என்று ஆரம்பித்து அன்வரின் மனைவியின் பெயருக்கான அர்த்தம் கண்டு பிடிப்பதிலிருந்து அன்வர் காதல் திருமணமா? நிச்சயக்கப்பட்ட திருமணமா? என்று ஆராய்ந்து சிரித்துப் பேசியவாறே உணவுண்ண பேச்சு திசைமாறி மாறனின் திருமணத்தில் வந்து நின்றது.
“சார் நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்க போறீங்களா? அரேஞ் மேரேஜா?” கேட்டது இன்ஸ் நந்தகோபால்தான்.
அந்த கணம் ஷாலினியின் முகமும் நேற்றிரவு அவளை முத்தமிட்டதும், அவனே அவளை விலக்கியதும் நியாபகத்தில் வந்தது.
முத்தமிட்டுக் கொண்டிருத்தவனை விலக்கி “ஐ லவ் யூ” வெற்றி என்றால் அவனும்தான் என்ன செய்வான்.
“எனக்கு தூக்கம் வருது ஷாலினி” என்று அவளை விலக்கி விட்டு தூங்க சென்றவனுக்கு தூங்கத்தான் முடியவில்லை.
அவள் வேண்டாம் என்று ஒரு மனம் சண்டை போட, அவள்தான் வேண்டும் என்று ஒரு மனம் சண்டை போட தூக்கத்தை தொலைத்தான் மாறன்.  
“ஒரு தோசை ரெண்டு சப்பாத்தி சாப்பிட உங்களுக்கு ஒன் ஹவர் ஆகியிருக்கு வாங்க இப்போவாச்சும் வேலைய பார்க்கலாம்” என்று மிரட்டும் தொனியில் கூற, அன்வர் சிரித்தவாறே கைகழுவ சென்றான்.
அன்வர் அனைவரையும் ஒரு அறைக்கு அழைத்து செல்ல, அந்த அறையில் கேஸ் சம்பந்த மான கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
வேலை என்று வந்த பிறகு யாரும் வீண் பேச்சுக்களை பேசவில்லை. மாறனும் நேரடியாகவே விசயத்துக்கு வந்தான்.
“பூங்குழலி என்ற பொண்ணு ஹாஸ்டல்ல தற்கொலை பண்ணி இருக்கா. அவ பேரன்ட்ஸ் என்னடான்னா அவ தற்கொலை பண்ணல அவளை யாரோ கொலை பண்ணி இருக்காங்கனு கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க. ஆனா அது கொலைதான். அத யார் பண்ணாங்கன்னுதான் கண்டுபிடிக்க முடியல. அந்த பொண்ணு கேஸ விசாரிச்சதுல அவ ரூம் மேட் நந்தினி. ரெண்டு பேருமே விலேஜ் கேர்ள்ஸ் தான். ரெண்டு பேருக்கும் வீட்டுல மாப்புள பார்த்து நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு. நந்தினி வெளிய போய் இன்னும் மூணு ப்ரெண்ட்ஸ்சோட வீடெடுத்து தங்கி படிச்சுக்கிட்டு இருக்குறப்போ தற்கொலை பண்ணிக்கிட்டா. அதுல ஒருத்தி சுதா” தான் எதற்காக அன்வரை தேடி வந்தான் என்பதை சொல்லி விட்டான்.
“சுதா கேஸை மினிஸ்டர் லக்ஷ்மிகாந்த் என் கைல கொடுக்குறப்போ இலக்ஷன் டைம். ஓட்டுக்காகத்தான் இத பண்ணுறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. நான் முதல்ல பண்ணது அவரையும், அவர் பொண்ணையும் கண்காணிச்சதுதான்” என்றான் அன்வர்.
“ஏன் சார் மினிஸ்டர் பொண்ணு யாமினி மனநல காப்பகத்துல அந்த அழுகை அழுததே அத பார்த்துமா உங்களுக்கு சந்தேகம் வந்தது?” குறுக்கிட்டு கேட்டான் இன்ஸ்பெக்டர் நந்தகோபால்.
“சிலநேரம் உண்மை நம்ம கண்முன்னாலேயே இருக்கும். சின்ன திரையால் நம்மால பார்க்க முடியிறதில்ல. நாம போலீஸ் எல்லார் மேலையும், எந்த நேரமும் சந்தேகமாகத்தான் பார்க்கணும். அப்போதான் ஒரு க்ளியரான முடிவுக்கு வந்து கலப்ரிட்ட பிடிக்க முடியும்”
“சூப்பர் சார்” என்றாள் மஞ்சுளா.
“சுதாவ அட்மிட் பண்ணி மூணு மாசம் கூட ஆகல. உண்மையிலயே அவளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கா? இல்ல இவர்களாகவே கதைக்கட்டி விட்டங்களா? அப்படியே பாதிக்கப் பட்டிருந்தாலும் யாரால? இந்த எல்லா கேள்விக்கும் கண்டிப்பா எனக்கு பதில் தேவ பட்டிருச்சு”
“கிடைச்சிருச்சா?” மாறன் அன்வரின் முகத்தை விடாது பார்த்தான்.
“சுதாக்கு உண்மையிலயே மனநலம் பாதிச்சிருச்சு. யாரால என்ற கேள்விக்குத்தான் இன்னும் எனக்கு பதில் தெரியல. ஒரு வருஷமா தேடிகிட்டு இருக்கேன்”
“அப்போ மினிஸ்டரும் அவர் பொண்ணும் காரணம் இல்லையா?” “என்ன இவர் அப்போ அப்படி சொன்னார். இப்போ இப்படி சொல்கின்றாரே” என்று நந்தகோபால் கேட்க,
“சீசீடிவில மினிஸ்டர் பொண்ணு கண்ணீர் விட்டதற்காக நான் அவங்கள சந்தேக லிஸ்ட்டுல இருந்து நீக்கல, அவங்க சின்ன வயசுல எப்படி இருந்தாங்க, அவங்க குணநலம் எப்படி எங்குறவரைக்கும் விசாரிச்சேன். இன்க்ளூட் நம்ம மினிஸ்டரையும்.
பரம்பரபரம்பரையா மினிஸ்டரோட குடும்பம் ஊருமக்களுக்கு உதவி செய்திருக்கு, ஆண்டிருக்கு. அத வச்சுதான் மினிஸ்டர் ஓட்டு கேட்டு இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்காரு”
“அப்போ அவர் ரொம்ப… நல்லவருன்னு சொல்லுறீங்களா?” இன்ஸ்பெஸ்டார் நந்தகோபால் கொஞ்சம் கிண்டலாகவே கேக்க,
“நான் அப்படி சொல்லவே இல்லையே. அரசியலுக்கு வர்ரதே பணம் சம்பாதிக்க என்றாகிப் போனநிலைல லஷ்மிகாந்த் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனா அவர் அம்மா ஊருக்கே அன்னமிட்ட அன்னைனு இன்னமும் ஊரே கும்பிடுறாங்க”
“கொஞ்சம் நல்ல ரத்தமும் உடம்புல ஓடுதுனு சொல்லுறீங்க. அப்படித்தானே? ” என்றான் மாறன்.
“அதே அதே. அந்த அம்மா வளர்ப்புனாளையோ என்னமோ அவர் பணம் சம்பாதிக்க மட்டும் நினைக்காம, மக்களுக்கும் நல்லது பண்ணுறாரு. அவர் பொண்ணும் சின்ன வயசுலயே மாசத்துக்கு ஒருநாள் அனாதை ஆசிரமத்து போய்  துணி கொடுக்குறது, புத்தகம் கொடுக்குறதுனு ஈடுபட்டிருக்கா. இத மினிஸ்டர் ஓட்டு வாங்க உபயோகிப்பது ஒரு பக்கம் இருந்தாலும். அந்த பொண்ணு நல்ல எண்ணத்துலதான் பண்ணி இருக்கு. பெரிய ஸ்கூல்ல படிக்க வசதி இருந்தும் சாதாரண ஸ்கூல்லதான் படிக்கணும்ணு அடம்பிடிச்சிருக்கு. காலேஜும் அப்படித்தான். இதெல்லாம் கேஸ் கொடுத்து ஒரு மாசத்துலையே கண்டு பிடிச்சிட்டேன்”
“என்ன சார் நீங்க? கேஸ உங்க கிட்ட கொடுத்தப்போவே நீங்க அவங்கள சந்திக்கப்படாம இருந்திருக்கணும். ஒரு மாசம் வேஸ்ட் பண்ணிடீங்க” என்றாள் மஞ்சுளா.
“மஞ்சுளா சார பேச விடுங்க” என்றான் மாறன்.
“உங்க கோபம் புரியுது. நான் லாயர் இல்லியே கேஸ் கொடுத்தவன் க்ரிமினலா இருந்தாலும் அவன் பக்கம் நிற்க, நான் போலீஸ்” என்ற அன்வர் தொடர்ந்தான். “அந்த ஒரு மாசம் சுதா யார் கூட எல்லாம் பேசினா, பழகினா, அவ போன் டீடைல்ஸ், சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணேன்” என்றதும் தான் அவசரப்பட்டது மஞ்சுளாவுக்கு புரிந்தது.
“அதுல அவளுக்கு யாரோ ஒருத்தன் இன்ஸ்டாகிராம்ல பிரென்ட் ரெக்வஸ்ட் கொடுத்து இருந்திருக்கான். இவ கண்டுக்கல என்றதும் மெஸேஜ் அனுப்பி இருக்கான். அத அவ பார்த்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன். அந்நிய ஆண்களோட பேசுறது தப்புனு நினைச்சி இருக்கலாம். ஒரே ஐபி அட்ரஸ்ல இருந்து பல அக்கவுண்ட் கிரியேட் பண்ணி ஒரே மெஸேஜை அனுப்பி இருக்கான். அது அவ குளிக்கிற வீடியோ”
“ஆமா எங்க விசாரணைல இது தெரிய வந்தது” மாறன் சொல்ல
“கிட்டத்தட்ட இருபது மெஸேஜ். ஏன் ஒரே ஒரு மெஸேஜை அனுப்பிட்டு அவளுக்கு போன் போட்டு மெசேஜ் பாருன்னு மிரட்டல?” அன்வர் கேள்வி எழுப்ப
“அனுப்பியவன் அவளுக்கு நல்லா தெரிஞ்சவன்னு சொல்லுறீங்களா?”
“அவன் வொய்ஸ்ச்ச இவ கண்டு பிடிக்க கூடாதுனு கூட நினைச்சி இருக்கலாம். ஆனா இப்போதான் வாய்ஸ் மாத்தி பேசுற ஆப்ஸ் நிறைய இருக்கே” சந்தேகத்தை கிளப்பி தானே பதிலையும் சொன்ன அன்வர் தான் இந்த கேஸில் எவ்வளவு தீவிரமாக இறங்கி இருக்கின்றான் என்பதை நிரூபித்தான்.      
“அப்போ கலப்ரிட் க்ளீன் பிளானோட வேலை செய்யிறான்” யோசனையாகவே சொன்னான் மாறன்.
“இயஸ். என்ன இவ்வளவு மெஸ்ஸேஜ்ன்னு கவனத்தை ஈர்த்து, அத எல்லாம் பார்க்க வச்சி, ஒரு பதட்டத்தை உண்டு பண்ணி இருக்கான்”
“சுதாக்கு தெரியாது ஒருத்தன்தான் எல்லா மெசேஜ்ஜையும் அனுப்பினதுனு இல்லையா?” என்றாள் மஞ்சுளா.
“ஆமாம். இருபது பேர் கிட்ட வீடியோ இருக்குன்னா இன்னும் எத்தனை பேர்கிட்ட இருக்கோ என்ற பயம். யார்கிட்டயும் சொல்ல தயங்கி படிப்புல கவனம் சிதறி இருக்கா. அந்த பயத்த ஹாண்டல் பண்ண அவளுக்கு ட்ரக்ஸ் தேவ பட்டிருக்கு. அவளுக்கு யார் மூலமாக ட்ரக்ஸ் கிடைச்சிருக்கும்னு விசாரிச்சேன். காலேஜ்ல ஒரு சில பசங்க ட்ரக்ஸ் எடுக்குறாங்க அவங்க தான் இவளுக்கு பழக்கி விட்டிருக்கானுங்க, அதற்காக பணம் தேவைப்பட்ட போதெல்லாம் பாலியல் தொழில்ல ஈடுபட்டிருக்கா, அதற்கும் அந்த பசங்கதான் மாமா வேல பாத்திருக்கானுங்க. அவனுகள அரெஸ்ட் பண்ணியாச்சு”
“குளிக்கிற வீடியோவை ஒருத்தன் அனுப்பினப்போவே நம்ம கிட்ட வந்திருந்தா, பிரச்சினை சால்வ் ஆகி இருக்கும். இப்படி வாழ்க்கையே தொலைச்சி கிட்டு நிக்குறா” கவலையாக சொன்னாள் மஞ்சுளா.
“ஓகே சார். இதனாலதான் சுதா மனநலம் பாதிச்சிருக்கானு சொல்ல வாரீங்களா?” மாறன் யோசனையாகவே கேட்டான்.
“நோ மாறன். என்னால யார் சுதா குளிக்கிற வீடியோவை எடுத்தாங்க? அனுப்பினாங்கனு கண்டுபிடிக்க முடியல. அவ என்ன பண்ணாலும் கண்காணிக்கப்பட்டு அவளுக்கு அனுப்பப்பட்டுக்கிட்டே இருந்து இருக்கு. அதனாலதான் அவ மனநலம் பாதிக்கப்பட்டிருக்கா”
“என்ன சார். நம்மகிட்ட இல்லாத டெக்னோலஜியா? ஹகர்ஸா? அவனுகள கொத்தா தூக்க வேணாமா?” நந்தகோபால் கோபமாக சொல்ல,
“நம்ம ஹகார்ஸோட வீட்டுல இருக்குற சீசீடிவி,  பொம்பளைகளோட போன் எல்லாம் ஹக் பண்ணி டிபார்ட்மெண்ட்டுக்கே அனுப்பி இருக்கான். அதற் பிறகுதான் ஆட்டத்தையே ஆரம்பிச்சிருக்கான்”
“என்ன சார் சொல்லுறீங்க?” மாறனுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
“ஆமாம் மாறன். இந்த விஷயம் மேலதிகாரிங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த டார்க் வெப்ல டீல் பண்ணுறவங்கள பிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல. அதனால நாங்க ஒரு ஹகர தேடித் புடிச்சி அவனுங்கள கண்டு பிடிக்கலாம்னு திட்டம் போட்டோம். இதுல ரிஸ்க் இருந்தது. நாம கூட்டிகிட்டு வரவன் அவனுங்கள்ள ஒருத்தனா இருந்தா? சோ தீவீர வேட்டையில் ஒருத்தன டிஐஜி தேடி பிடிச்சாரு. அவன் யார்னு கூட யாருக்கும் தெரியல. அவருக்கு மட்டும்தான் தெரியும்”
“அப்போ அவரு அவனுகள புடிச்சிடுவார்னு சொல்லுங்க” சந்தோசமாக சிரித்தான் நந்தகோபால்.
“அவர் செத்துட்டாருனு டிஐஜி போன் பண்ணி சொன்னாரு” அன்வர் கவலையாக சொல்ல
“செத்துட்டாரா?” மூவருமே அதிர்ச்சியாகத்தான் கேட்டனர்.
“ஆமா எக்சிடெண்ட்னு சொன்னாரு”
“எக்சிடெண்ட்? எப்போ சொன்னாரு?” மாறன் யோசனையாக கேட்க அன்வர் சொன்னது அவனுக்கு எக்சிடண்ட் நடந்து வெற்றி இறந்து தினத்தைத்தான்.
டிஐஜி சொன்னது ஒருவேளை வெற்றியாக இருக்குமோ? என்று சிந்தித்த மாறனின் மூளையில் மின்னல் தாக்கியது போல் வந்து போக தலை வலிக்க ஆரம்பித்தது.
“என்னாச்சு சார்?” அன்வர் சாதாரணமாக கேக்க, நந்தகோபால், மஞ்சுளாவும் பதறினர்.
“ஒண்ணுமில்ல” என்ற மாறன் மாத்திரையை விழுங்கிக் கொண்டான்.
“மாறன் ஆல்மோஸ்ட் எல்லா பொண்ணுகளும் சூசைட் தான் பண்ணிகிட்டாங்கனு கேஸை கூட மூடின நிலைல, எப்படி இந்த கேஸை சூசைட் இந்த கேஸ் கொலைன்னு சொல்லுறீங்க?” தன் சந்தேகத்தை கேட்டான் அன்வர்.
மாறன் சொல்ல சொல்ல அவன் அறிவுக்கு கூர்மையை மெச்சியவன் “கீப் இட் அப் மாறன். நீங்க இந்த கேஸுக்குள்ள வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம்”
“ஆனாலும் இந்த டிஐஜிக்கு ரொம்பதான் குசும்பு நீங்களும் இதே கேஸத்தான் பாக்குறீங்கன்னு ஒரு வார்த்த சொல்லி இருந்தா. எப்பயோ இந்த கேஸ முடிச்சி இருக்கலாம்” மாறன் பொரும,
“நம்மள சோதிக்கிறதே அவர் வேல” சிரித்தான் அன்வர்.
  
அன்வரிடம் விடைபெற்று வண்டியில் ஏறிய மாறனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. காவல்துறைக்கு யாரோ ஒருவன் அல்லது ஒரு குழு சவால் விடுவதற்காக பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டுகின்றனர்.
பிரபா போன்ற பெண்கள் அச்சப்படாமல் காவல்துறையை நாடுகின்றனர். சுதா போன்ற பெண்கள் தப்பான செயல்களில் ஈடுபட்டு மனநலம் பாதிக்கப்படுகின்றனர். நந்தினி போன்ற பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பூங்குழலி… அந்த பெண்ணால்தான் இந்த விசாரணையே மாறனிடம் வந்தது அவளை கொலை செய்திருக்கிறார்கள். அவள் நந்தனியோடு சென்று வருவதால் அவளும் நந்தினியை போல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறி இருக்கின்றனர்.
ஆனால் நந்தினியின் நடவடிக்கையில் எதோ தவறாக இருப்பதாக கவனித்துதான் பூங்குழலி அவளை விசாரித்து உண்மைகளை அறிந்து கொண்டிருக்கின்றாள். நந்தினியின் அலைபேசி ஹேக் செய்யப்பட்டிருந்தபடியால் அவள் பூங்குழலியிடம் பேசியவைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவன் பூங்குழலியை கொன்று விட்டான்.
அதுவும் எப்படி அவளுக்கு தகாத உறவுகள் இருந்தபடியாக காட்ட அவள் அலைபேசியை ஹேக் செய்து தேவையற்ற மெசேஜ்ஜை நிரப்பியது மட்டுமல்லாது. அவள் குடித்த நீரில் தூக்க மருந்தை கலந்து வைத்தவன் அவள் தூங்கிய பின் தூக்கிலிட்டு கொலை செய்திருக்கின்றான்.
போஸ்டமோட்டம் ரிப்போர்ட் என்னமோ தூக்க மாத்திரையால் தான் இறக்க மாட்டோமா என்று அச்சப்பட்டு தூக்கு மாட்டிக்கொண்டிருப்பதாக வந்திருக்க, அங்கேதான் மாறனுக்கு சந்தேகமே வந்தது. தூக்க மாத்திரைகளையே அளவுக்கு அதிகம் சாப்பிட்டிருக்கலாமே? எதற்காக அளவாக சாப்பிட்டு தூக்கில் தொங்க வேண்டும்?
மாலினியின் வலது கைக்கு பதிலாக இடது கையை அறுத்து கொலை என்று நிரூபித்தான்.
இவை அனைத்தையும் விட இது தற்கொலையல்ல கொலை என்று சந்தேகத்தை தூண்டவும், இது கொலை, இது தற்கொலை என்று மாறன் கண்மூடிக் கொண்டு பிரித்தறிய உதவியதும், கொலைகாரன் உபயோகித்த அதே டெக்னோலஜிதான்.
அவன் வந்து சென்ற தடம் இருக்கக் கூடாதென்று நினைத்து அந்த ஏரியா, வீடு என்று சீசீடிவிகளை இயக்க விடாது செய்தானோ, அதை வைத்தே மாறன் இலகுவாக கண்டு பிடித்திருந்தான்.
மாலினியின் கொலை நடந்த பொழுதும் அவள் வீடு இருந்த தெருமுனையில் உள்ள கடைகளில் எந்த சீசீடிவியும் குறிப்பிட்ட நேரம் எந்த காட்ச்சியையும் பதிவு செய்யவில்லை. அதே போல்தான் பூங்குழலி இறந்த அன்று ஹாஸ்டல் சீசீடிவிகள் எதுவுமே வேலை செய்திருக்கவில்லை.
இது ஒன்று போதாதா? மாறனின் மூளைக்கு தீனி போட, உடனே இறந்து போன பெண்கள் இறந்து போன அன்று என்ன நடந்தது என்று பார்க்குமாறு சீசீடிவி காட்ச்சிகளை கேட்டிருக்க, சீசீடிவி காட்ச்சிகள் இல்லாத எல்லா தற்கொலை கேஸையும் கொலை என்ற பட்டியலில் சேர்த்தான்.
உண்மையிலயே அந்த ஏரியாவில், அல்லது அந்த கட்டிடத்தில் சீசீடிவிகள் பழுதடைந்து இருக்குமோ? என்ற சந்தேகமும் வராமலில்லை. அதையும் தரவாக விசாரிக்கும்படி நந்தகோபாலிடம் கூறி இருந்தான். 
 உண்மையிலயே இப்படி செய்பவனின் நோக்கம் தான் என்ன? சைக்கோவா? இல்ல போலீசுக்கு சேலஞ் பண்ணுறானா? இல்ல பழிவாங்க பண்ணுறானா? கரணம் புரியவில்லை. எப்படி கண்டு பிடிப்பது என்றும் தெரியவில்லை.      
வீடு வந்தவனை பிடித்துக் கொண்டாள் லதா. “சாப்பிட்டியா? உடம்பு முடியாதவன் இப்படி வேல, வேலைனு நைட்டுல ஊர சுத்தினா சரியா?”
“அம்மா நான் என்ன டீனேஜ் பையனா? ஊர் சுத்துறானு சொல்லுற? போலீஸ்மா… ஊர சுத்தி வராதே தான் என் தொழில்” மாறன் சிரிக்காம சொல்ல
“என்ன கிண்டல் பண்ணுறியா? நைட்டு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் காலைல கரெக்ட்டா எட்டு மணிக்கு கிளம்பிடுவ. ஒழுங்கா தூங்குறியா? சாப்பிடுறியா? ஒன்னும் தெரியல. வீட்டுல அம்மானு நான் காத்துகிட்டு இருக்கேன்னு கொஞ்சம் கூட அக்கறை இருக்கா? அதுவும் இல்ல.
பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தாதான் நீ எல்லாம் கொஞ்சமாச்சும் வழிக்கு வருவான்னு பொண்ணு பார்த்தா… ஐயையோ போலிஸானு அவளவளுங்க தெறிச்சு ஓடுறாளுங்க. என்னடா ரவ்டி பயலுங்கள கண்டாதானே ஓடணும். என் பையன் நேர்மையான போலிஸாச்சே இவன பார்த்து எதுக்கு தலை தெறிக்க ஓடுறாளுங்கன்னு விசாரிச்சா. போலீஸ் கூட பிரச்சினை இல்லையாம். நான் சொன்ன நேர்மைதானாம் பிரச்சினை. லஞ்சம் வங்காட்டியும் பரவால்லையாம். உசுரு போய்டுமாம். கல்யாணம் பண்ண கொஞ்சம் நாளையே விதவையாக முடியாதாம். எனக்கு வந்த கோவத்துக்கு அவளுங்க மூஞ்சிலையே குத்த தோணிச்சு. அப்பொறம் விட்டுட்டேன்”
“போலீஸ் கேஸ் ஆகிடும் என்றா?” மாறன் சிரித்தவாறே கேக்க
“ஆமாடா என் பையன் நேர்மையான போலீஸ் இல்ல. என்ன புடிச்சி அவனே உள்ள வச்சா ஊரு உலகம் என்னவெல்லாம் பேசும். அப்பொறம் அம்மாவையே தூக்கி உள்ள வச்சிட்டான்னு உனக்கு எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான். ஆப்ரிகால இருந்துதான் பொண்ணு கொண்டு வரணும்” லதாவும் நக்கல் பண்ணினாள்.
“போதும்மா… நடுராத்திரில காமடி பண்ணாதே… போ… போய் தூங்கு. செம்ம டயடா இருக்கு” கொட்டாவி விட்டவாறே சொல்ல
“பாலாச்சும் குடிடா பிளாஸ்குல வச்சிருக்கேன்” என்று எடுக்க போக
“நீ தூங்குமா நான் பாத்துக்கிறேன்” என்றவன் குளிக்க சென்றான்.
உடம்பில் நீர் விழ, விழ மாறனுக்கு நேற்றிரவு ஷாலினியியோடு கழித்த பொழுதுதான் நியாபகத்தில் வந்தது.
அவளுக்கு ஆபத்து என்றதும் தையும் சிந்திக்காமல் சென்றவனுக்கு அவள் காதலை ஒப்பித்து நெருங்கியும் வந்தாள். ஆனால் அவள் காதலிப்பது அவனது இரட்டையை.  அவனை விட்டு விலகி நின்றவனுக்கு உண்மையை கூற முடியவில்லை. கூறினால் அவள் நிலைமை என்னவாகும் என்று நினைக்கையில் மாறனுக்கு அச்சம் பரவியது.
சொல்லாமல் அவளை திருமணம் செய்து கொள்ளலாமா? எத்தனை காலம்தான் உண்மையை மறைக்க முடியும்? அறிந்துக் கொண்டாள் அவளை இவன் ஏமாற்றியதாக சண்டை போட மாட்டாளா? சண்டை போட்டால் கூட பரவாயில்லை. அவனை விட்டு செல்வதில்லையே குறியாக இருந்தால் அவன் நிலை?
உண்மையை கூறினால் விலகிச் செல்வாள் உண்மையை அவளாகவே அறிந்துக் கொண்டால் விட்டுச் செல்வாள். அவளை பாத்திருக்கவே கூடாது. பார்த்த உடன் அவளை காதலித்திருக்கவே கூடாது. அதுவும் தன் சகோதரனை காதலிப்பவளை காதலித்திருக்கவே கூடாது மனம் அலைக்கழிக்க குளித்து விட்டு வந்தான் மாறன். 
தலையை துவட்டியவனுக்கு கட்டிலின் அருகில் இருந்த விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிய தான் இதை எரியவிட்டு குளிக்க செல்லவில்லையே என்பது நன்றாக நியாபகத்தில் இருந்தது.
வீட்டாரை தவிர யாரும் அறைக்குள் வர முடியாதே என்று சிந்தித்தவாறே மின் விளக்கை அனைக்க போக விளக்கின் அருகில் சாவி ஒன்று கிடப்பதைக் கண்டவன் அதை கையில் எடுத்திருந்தான்.
அது தனது அறைக் கதவு சாவியை ஓத்திருக்கவே அது வெற்றியின் அறையின் சாவி என்றும், தந்தைதான் அதை இங்கே வைத்து விட்டு சென்றுள்ளார் என்றும் புரிந்தது.
அன்வர் கூறியது, தந்தை கூறியது என்று மாறனின் தலைக்குள் மாறிமாறி வந்து போக, வெற்றியின் அறையை திறந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
நேற்றிரவும் சரியான தூக்கமில்லை. கண்ணும் எரிய, தலையும் வலிக்க ஆரம்பித்திருந்தது. லதா சொன்ன பிளாஸ்கில் “பால் இருக்கு” என்றது நியாபகம் வரவே சமயலறைக்கு சென்றவன் பாலில் காபித்தூளை கலந்து சக்கரை கலக்கி அங்கேயே அருந்தினான்.
சூடாக உள்ளே செல்ல செல்ல உடலில் புத்துணர்ச்சி பாய இன்னுமொரு கப் காபியை கலந்தவன் அதை எடுத்துக் கொண்டு வெற்றியின் அறைக் கதவை திறந்தான். 
சுவற்றில் வெற்றி புகைப்படமாக அழகாக சிரித்துக் கொண்டிருந்தான். மாறனுக்கு தன்னையே கண்ணாடியில் பார்பதாகத்தான் தோன்றியது.
ஒருவனுடைய இரகசியங்களை அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால் முன்னைய காலங்களில் அவனுடைய நாட்குறிப்பை படித்தால் போதும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அவன் அலைபேசி அவனுடைய ஜாதகத்தையே கூறும்.
வெற்றியுடைய அலைபேசி எங்கே? என்று யோசித்தவனுக்கு எக்சிடண்ட் ஆனா பிறகு அவனுடைய உடைமைகள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு வெற்றியின் கப்போர்டில் வைத்தது நியாபகம் வந்தது.
காப்போடை திறந்து பெட்டியை எடுத்தவனுக்கு அலைபேசியும் கிடைத்தது கூடவே வெற்றி யார் என்ற உண்மையும் கிடைத்தது.

Advertisement