Advertisement

அத்தியாயம் 5
“எங்கடா… நம்ம தலைவன காணோம்.  காலேஜுக்கு ஒருநாள் கூட லீவு போட மாட்டானே” பாலா எனும் பாலமுருகன் தேட
“பஸ்ஸ மிஸ் பண்ணி இருப்பானோ?” ராகவன் கூற,
“அவன் எங்கடா… பஸ்ஸுல வாரான்? பைக்ல இல்ல வாரான்” ரமேஷ் கூறினான்.
“ஆமா இல்ல. அப்போ பைக்கு பஞ்சாரா? மீண்டும் ராகவ் கேள்வி எழுப்ப
“பைக்கை அப்படியே போட்டுட்டு லிப்டு கேட்டு வந்திடுவான். அவனை பத்தி தெரியாதா?” இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த பிரவீன் வாய் திறந்தான்.
“அப்போ ஏன்டா… இன்னும் வரல?” பாலா மண்டையை பிச்சிக்காத குறையாக வாயிலையே நோக்கியவாறு இருக்க,
“ஒரு வேல வீட்டுல யாருக்காவது ஏதாவது…” ரமேஷ் பதட்டமானான்.
“மச்சான் அவன் அப்பா டாக்டர். யாருக்கு என்ன ஆனாலும் அந்தாளு பாத்துக்குவார்னு வெற்றி சொல்வான். எந்த காரணத்துக்காகவும் அவன் வராம இருக்க மாட்டான்” என்றான் பிரவீன். அவன் பேச்சில் ஒரு உதாசீனம் தெரிந்தது.
“இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி? போன் போட்டு பார்க்கலாம்” என்றான் பாலா.
“பலவாட்டி போட்டுட்டேன் மாமு எடுக்க மாட்டேன்குறான். அநேகமா சைலண்ட்டுல போட்டிருப்பான் போல” ரமேஷ் உதட்டை அசைத்து தனது முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்ததை தெரிவித்தான்.
இவர்கள் எல்லாரும் வெற்றியின் நண்பர்கள் அவனுக்காகத்தான் காலேஜ் நுழைவாயிலில் இருக்கும் மரத்தடியில் காத்துக் கிடந்தனர்.
“அதோ வராண்டா…” வெற்றி பைக்கில் வருவதை கண்டு ராகவ் கூச்சலிட, வெற்றியும் அவர்களின் அருகில் வண்டியை நிறுத்தி இருந்தான்.
“என்னடா பைக் பஞ்சாரா? இவ்வளவு லேட்” பாலா விசாரிக்க,
“என் காதுதான் மச்சான் பன்ச்சர் ஆச்சு” இளித்தவாறே பதில் சொன்னான் வெற்றி.
“என்னடா.. சொல்லுற?” புரியாது குழம்பினர் அனைவரும்.
“ரங்கநாயகி இல்ல ரங்கநாயகி.. அதான்டா.. தேர்ட் இயர் அவளா வந்து பிரேக் அப் சொல்லிட்டு போனாடா…” என்ற வெற்றி குத்தாட்டம் போடாத குறையாக தோழர்களை உலுக்கினான்.
“என்னடா சொல்லுற?” ராகவ் அதிர்ச்சியாக கேட்க
“நிஜமாவா?” ரமேஷ் பரபரக்க,
“அப்போ ஈவினிங் ட்ரீட் இருக்கு. பார்ட்டி பண்ணுறோம்” என்றான் பாலா
அனைவரும் சந்தோசத்தில் துள்ள பிரவீனின் முகம் மட்டும் கடுகடுவென இருந்தது.
பிரவீன் ஒரு ஜட்ஜின் மகன். பணத்தில் குறைவுமில்லை. பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கின்றான். ஆனால் வெற்றியை சுற்றுவது போல் எந்த பெண்ணும் அவனை சுற்றுவதுமில்லை. கண்டுகொள்வதுமில்லை என்ற கோபம் அவனுள் இருக்க, வெற்றியோடு  இருந்தே அவனை சீண்டலானான்.  
“என்னடா பிரவீன்”
“ஏன்டா அவனவனுக்கு பிகருங்க மடங்க மாட்டாளுங்கன்னு ஏங்குறாளுங்க. உனக்கு ஒண்ண கழட்டி விட முன்னால இன்னொன்னு ப்ரொபோஸ் பண்ணுது. காலேஜ் பிளே பாய் என்ற பேர் வேற. அந்த ரங்கநாயகிக்கு என்னடா கொறச்சல் அவளை போய் கழட்டி விட்ட?”
“மச்சான் பொண்ணுக எல்லாம் பட்டாம்பூச்சி மாதிரி கொஞ்சம் நேரம் இளைப்பாற பூக்கள்ல உக்காருங்க. அப்போ நாம பிடிச்சாதான் உண்டு. இந்த துரத்தி போய் பிடிக்கிறது எல்லாம் எனக்கு செட் ஆகாது. தானா மடியனும். அப்படி வர பொண்ணுகளைத்தான் நான் கேர்ள் ப்ரெண்டா வச்சிக்கிறேன். ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணுகளை வச்சிகிட்டாதான் தப்பு. ஒன்ன பிரேக் அப் பண்ண பிறகு இன்னொன்ன வச்சிக்கிறது தப்பே இல்ல. இல்லையாடா…” அருகில் இருந்த பாலாவிடம் கேட்க, அவனும் மண்டையை ஆட்டினான்.
“என்ன இழவோ? எத்தனை லவ்வு? எத்தனை பிரேக் அப்பு? உனக்கே நியாபகம் இருக்காது. சரி அந்த ஷாலினியையாவது உண்மையா லவ் பண்ணுறியா?” தன் திட்டத்தை அமுல் படுத்த இறங்கினான் பிரவீன்.
“அவளா வந்தா ஏத்துப்பேன். இல்லையா? கண்டுக்க மாட்டேன்” என்றான் வெற்றி.
“அவ நல்ல பொண்ணுடா… அவ உன்னயெல்லாம் லவ் பண்ண மாட்டா” கடுப்பானான் பிரவீன்.
“என்னடா… பொண்ணுக்கல்ல நல்ல பொண்ணு? கெட்ட பொண்ணு? எல்லாரும் அவங்க பாயிண்ட் ஒப் வீவ்ள சரியாதான் இருப்பாங்க. நாம்மலத்தான் முட்டாளாக்குவாளுங்க. சும்மாவா லவ் பண்ணுறேன்னு வந்து நிக்கிறாளுக? அழகா இருக்கான். பைக் வச்சிருக்கான். காலேஜுல பேரு இருக்கு. காசு செலவு பண்ணுவான். இதெல்லாம் பார்த்துதான் காதலிக்கிறேன்னு இளிப்பாளுங்க” கொதித்தான் வெற்றி.
லதா பூபதியை விட்டு சென்ற கோபம், தான் அன்னையில்லாமல் அம்மா பாசத்துக்கு ஏங்கியது. தந்தை மருத்துவமனையே கதி என்று இருக்க தந்தை பாசமும் கிட்டவில்லை. தாத்தா செல்வபாண்டி மட்டும்தான். அவரும் லதா விட்டு சென்றதையே புலம்ப வெற்றிக்கு லதாவின் மீது வெறுப்பு. ஆனால் பூபதி லதாவை பற்றி குறை கூறவில்லை. வெற்றி பலதடவைகள் கேட்டும் “என் வேலையாலதான் உங்கம்மா என்ன விட்டு போய்ட்டா” என்பார்.
ஆக மொத்தத்தில் ஆணோ, பெண்ணோ தங்களது நிலையில் சுயநலமாக யோசிப்பது தப்பே இல்லை என்ற மனப்பாங்கில் வளர்ந்தவன் வெற்றி. 
அவனை சுற்றி வரும் பெண்களும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் வருவார்கள். அப்படி வருபவர்களை அவன் பயன்படுத்திக்கொள்வான். “அதில் என்ன தப்பு?” என்ற எண்ணம் அவனுக்கு. அவர்களின் தொண தொணப்பும், சைகைகளும் அவனுக்கு பிடிக்கவில்லையென்றால் கண்டுகொள்ள மாட்டான் அதில் அவர்களே இவனிடம் கத்தி விட்டு பிரேக் அப் சொல்லி விடுவார்கள். காதை குடைந்து கடந்து விடுவான் வெற்றி.
“பட்டாம்பூச்சி மட்டுமல்ல அந்த பூவும் பொண்ணுதான் மச்சி. நீ சொல்லுறது மத்த பொண்ணுகளுக்கு சரியா இருக்கும் ஷாலினிக்கு செட் ஆகாது” ஆணித்தரமாக கூறினான் பிரவீன்.
“அன்னைக்கி லைப்ரரில நானும் அவளும் மட்டும் இருந்தப்போ யாருன்னே தெரியாத என் கிட்ட எப்படி பேசினா? அவளும் சாதாரண பொண்ணுதான்” தனக்கு எல்லா பெண்களும் ஒன்றுதான் என்றான் இவன்.
“ஆ… லைப்ரரி கதவு என்ன தானா மூடிக்கிச்சா? நாங்க தானே வெளிய இருந்து மூடி வச்சோம். உள்ள வேல இருந்ததால கம்பியூட்டர் லேப் வேற பூட்டி இருந்தது. ஸ்கெட்ச்சு போட்டு ஷாலினியை அங்க வர வச்சது யாராம். நாங்க தானே. நீ நல்லவன், வல்லவன், உத்தமன் என்று நினைச்சி பேசி இருப்பா… உன்ன பத்தி தெரிஞ்சிருந்தா பேசி கூட இருக்க மாட்டா..”
“இப்போ நீ என்ன சொல்ல வர?” கடுப்பான வெற்றி பிரவீனை முறைத்தான்.
“நீ எப்படியும் ஷாலினியை லவ் பண்ண போறதில்ல” என்றவன் “உன்னால ஷாலினியை உன்ன லவ் பண்ண வைக்க முடியுமா? உன் பின்னால அலைய வைக்க முடியுமா?” வெற்றியை இறுக்கவென்றே கேட்டிருக்க,
“ஏன் முடியாது?” திமிராக பதில் சொன்னான் வெற்றி.
“நல்லா யோசிக்சிக்க. எப்பவும் பொண்ணுங்கதான் உன் பின்னால வருவாளுங்க. மொத தடவ நீ ஒரு பொண்ணு பின்னால போகணும். அதுவும் நீ அவ பின்னாடி அலையிறது அவளுக்கு தெரியாம போகணும்”
“நான் என்ன டிடெக்டிவ்வா?” வெற்றியின் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை.
“என்னடா பிரவீன். வெற்றி கூடவே பந்தயமா? இதெல்லாம் அவனுக்கு அல்வா சாப்பிடுறது போல. இல்லையாடா மச்சான்” பாலா ஏத்தி விட வெற்றி தலையசைத்தான்.
“சரி நமக்கு இன்னும் எட்டு மாசம்தான் காலேஜ் லைப் அதுக்குள்ள ஷாலினியை மடக்கி காட்டு” சவால் விட்டான் பிரவீன்.
“அவளை மடக்க எதுக்குடா எட்டு மாசம்? ஒரு வாரம் போதும்” தன்னை பற்றி பெருமை பாடினான் வெற்றி.
“இல்ல மச்சான் உனக்கு புரியல. எல்லா பொண்ணுங்களும் உனக்கு ஐ லவ் யு சொல்லுவாளுங்க நீ டக்குனு ஓகே சொல்வ. அதே மாதிரி நீ ஷாலினிக்கு சொன்ன உடனே அவ ஓகே சொன்னா ஓகே. நோ சொன்னா என்ன பண்ணுவ? பந்தயத்துல தோத்துட்டோம்னு ஒத்துக்கிறியா? முதல்ல அவகிட்ட போய் லவ் சொல்ல தைரியம் இருக்கா?”
“ஏன் நான் ஆம்பள இல்லையா? இல்ல என்ன கோழைன்னு சொல்லுறியா?” கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் வெற்றி.
“பசங்க மாதிரி பொண்ணுகளுக்கு தாராள மனசு கிடையாது மச்சான். யார் வேணாலும் ப்ரொபோஸ் பண்ணுவாங்க என்று காத்துகிட்டு இருக்க மாட்டாங்க ஓகே சொல்ல” வெற்றியை நக்கலாக பார்த்தவன் “சரி விடு நா எதுக்கு உனக்கு லவ்ல அட்வைஸ் பண்ணனும்? இது ஹெல்ப் பண்ணுற மாதிரி இருக்கு. உனக்கு எட்டு மாசம் டைம் அதுக்குள்ள ஷாலினிய உன் கேர்ள் ப்ரெண்டா எங்களுக்கு இன்டெர்டியுஸ் பண்ணுற?” என்ற பிரவீன் நடையை கட்ட,
“இதெல்லாம் ஒரு பந்தயமா? எனும் விதமாக நின்றிருந்தான் வெற்றி”
அலறாம் அடிக்கவே கண்விழித்த மணிமாறன் “அடப்பாவி அண்ணா. நீ பிளே பாயா? என்னயெல்லாம் பொண்ணுங்க பார்க்க கூட மாட்டாளுங்களே. என்னமா வாழ்ந்திருக்க, எனக்கே பொறாமையா இருக்குடா… டேய் அண்ணா சுமாரா எத்தனை பொண்ணுங்க கூட சுத்தி இருப்ப? அடுத்த வாட்டி கனவுல வரும் போது மறக்காம சொல்லிட்டு போ…” சுவரில் இருந்த வெற்றியின் புகைப்படத்தை பார்த்து கூறியவன் குளிக்க சென்றான்.
குளிக்கும் பொழுதும் இதே சிந்தனைதான். வெற்றியின் கடந்தகாலம் தனக்கு எதற்காக கனவாக வருகிறது? ஒருவேளை நான் ஷாலினியை காதலிக்கிறதால எனக்கு நடந்தத சொல்ல வரானோ?
வெற்றி ஷாலினியை லவ் பண்ணல. அன்னக்கி ஷாலினி என்ன வெற்றியா நினைச்சிதானே எதோ பேசிட்டு போனா. அப்போ அவ வெற்றியை காதலிக்கிறாளா? ப்ரவீணோட போட்ட பந்தயத்துல வெற்றி வெற்றி பெற்றிருந்தா ஷாலினி என்ன கண்டதும் வண்ட வண்டையா திட்டி இருப்பா. பிரவீன் வெற்றி பெற்றிருந்தாலும் ஷாலினி வெற்றி கூட சுமுகமான பழகி இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்னதான் நடந்திருக்கும்.
“இந்த இளவெடுத்த காதல் இத்தனை வருஷம் கழிச்சி என் அண்ணன் பார்த்த பொண்ணு மேலதான் வரணுமா? இது வரமா? சாபமா? என்று  கூட தெரியல?” சிந்தனையிலையே குளித்து விட்டு வந்தவன் காவல்நிலையம் செல்ல தயாரானான்.
“வெற்றியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரிஞ்சிக்காம ஷாலினி இருக்குற திசை பக்கம் கூட தலை வச்சி படுக்கக் கூடாது” முணுமுணுத்தவாறே சாப்பாட்டு மேசையில் வந்தமர, லதா பரிமாறினாள்.
“என்ன மாறா பலத்த யோசனைல இருக்க போல? ” மனைவி பரிமாறியத்தை உண்டவாறே கேட்டார் பூபதி.
“அட நம்ம அப்பவே பெரிய நியூரோ தானே இவர் கிட்டயே கனவ பத்தி சொல்லலாமா?” தந்தையை ஏறிட்டவன் “வேற வினையே வேணாம். நாம ஒரு நல்ல சைக்காட்ரிக்ஸ்ஸ பார்க்கலாம்” என்ற முடிவுக்கு வந்தவன் “வேறென்ன எல்லாம் கேஸ் விசயமாத்தான்” என்றவன் அமைதியா சாப்பிடலானான்.
“அப்பாகும் பையனுக்கும் எவ்வளவு சொன்னாலும் மண்டைல ஏற மாட்டேங்குது. வீட்டுக்குள்ள வரும் போது உங்க கேஸெல்லாம் வாசல்ல கழட்டி விட்டு வாங்க” என்றாள் லதா.
“யேம்மா… மாப்புள டாக்டர். புள்ள போலீஸு. ஒரு கொலை நடந்தா ரெண்டு பேரும் சந்திச்சிக்க மாட்டாங்களா? கேச பத்தி பேசிக்க மாட்டாங்களா? வீட்டுல பேசினா என்ன தப்பு?” தர்மதுரை சிரிக்க
“அதானே எத்தனை சினிமால பார்த்திருக்கோம்” ஒத்தூதினார் செல்வபாண்டியன்.
“ஐயோ இந்த நகரத்துல பொழுது போக மாட்டேங்குது நா பேசாம ஊருக்கு கிளம்புறேன்” என்று தர்மதுரை அடம்பிடிக்க,
“வாய்யா வாக்கிங் போலாம். நம்ம வயசுக்கு அதுதான் சரி” என்று செல்வபாண்டியன் இழுத்துக் கொண்டு போக மாறன் ஹோம் தியேட்டரில் சினிமா படங்களை போட்டுக் காட்ட வாய் பிளந்து பார்த்தவர் மகளை மடக்க ஆரம்பித்தார்.
“அப்பா… இந்த போலீஸ் ஸ்டோரி, டிடெக்டிவ் சீரியல் பாக்குறதோட நிறுத்திக்கோங்க இவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க சொல்லிட்டேன்” மாமனாரையும் முறைக்க தவறவில்லை.
“கோவிச்சுக்காத லதா. அப்பொறம் உன் மருமக நீ கோபக்காரி, கொடுமைக்காரின்னு சொல்லிட போறா….” என்ற மாறன் லதாவின் கன்னம் கிள்ளி விட்டு கைகழுவ எழுந்து செல்ல.
சாப்பிட்டுக்கொண்டிருந்த செல்வபாண்டிக்கு விக்க ஆரம்பித்தது.
“இந்தாங்க மாமா தண்ணீர்” லதா தண்ணீர் கொடுக்க,
அதை வாங்கி குடித்த செல்வபாண்டி “வெற்றியும் இப்படித்தான் பேசுவான். ரெண்டு பேரும் ஒண்ணா வளர்ந்திருந்த எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்றார்.
“மாறன் ரொம்ப அமைதியானவன். இப்படி குறும்பு பண்ண மாட்டான். ஆளே மாறிட்டான்” என்றார் தர்மதுரை.
பூபதிக்குத்தான் யோசனையாக இருந்தது.
“ஆமா எக்சிடண்ட் ஆனதுல இருந்தே ஒரு மாதிரிதான் இருக்கான். கோவிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சி விடணும்” என்றாள் லதா.
இவர்களின் பேச்சு எதுவும் மணிமாறனின் காதில் விழவில்லை. அவனின் சிந்தனை முழுக்க வெற்றியை சுற்றியே இருக்க அனைவரிடமும் விடைபெற்று காரியாலயம் செல்ல கிளம்பியவன்  தலை வலிக்கவே சோபாவில் அமர்ந்து விட்டான்.
“என்ன ஆச்சுடா மாறா?” லதா பதறியவாறு மகனிடம் வர
தலையில் கைவைத்தவாறே “தூரப்போ…” என்று கத்தினான் மாறன்.
அந்த குரலிலும், தொனியிலும் வெற்றியை கண்ட பூபதி “வெற்றி” என்று அழைக்க,
தந்தையை பார்த்தவன் “தல ரொம்ப வலிக்குது டேட்” வெற்றியாகவே மாறி இருந்தான்.  
“மாத்திரை போட்டியா?” அவனுக்கு அவசரமாக மாத்திரையை எடுத்துக் கொடுக்க,
“என்னங்க மாறான போய் எதுக்கு வெற்றின்னு கூப்பிடுறீங்க?” லதா புரியாது கேட்க,
“எல்லாம் உன்னாலதான். எல்லாம் உன்னாலதான். என்ன அவ வேணாம்னு சொன்னதும் உன்னாலதான். நீ மட்டும் எங்களை விட்டுட்டு போகாம இருந்தா அவ என்ன வேணாம்னு சொல்லி இருக்க மாட்டா… எனக்கு அவ கிடைச்சிருப்பா…” தலையில் இருந்து கையை எடுக்கவே இல்லை.
“மாத்திரையை போடு” மனைவிக்கு பதில் சொல்லாமல் மகனுக்கு மாத்திரையை புகட்டினார் பூபதி.
மாத்திரையை முழுங்கிய மாறன் மயங்கி விழ, அவனை சோபாவிலையே தூங்க வைத்தார் பூபதி.
“என்னப்பா ஆச்சு. ஏன் மாறன் வெற்றி மாதிரி பேசினான்?” செல்வபாண்டியன் அதிர்ச்சி மாறாமல் கேட்க, அதே அதிர்ச்சி மாறாமல் வெற்றி தன்னை எதற்கு குற்றம் சாட்டினான் என்றும் புரியாமல் அமர்ந்திருந்தாள் லதா.
“ஒரு வேல வெற்றியோட ஆவி மாறன் உடம்புக்குள்ள….” தர்மதுரை என்னதான் நடக்க்கிறது என்று குழப்பத்திலையே பேச
“வெற்றியோட ஆவியியும் இல்ல. வெற்றியும் இல்ல. வெற்றியோட முளையோட ஒரு பகுதியை மாறனுக்கு பொறுத்தினதால வலி வரும் பொழுதெல்லாம் அந்த பகுதி ஏக்டிவ் ஆகுது. அந்த நேரத்துல இவன் வெற்றியாகவே மாறிடுறான்” என்றார் பூபதி.
“நம்ம வெற்றி சாகளடா பூபதி. நம்ம மாறன் உடம்புல ஒண்ணா இருக்கான்” கண்ணீர் மல்க செல்வபாண்டியன் கூற,
“எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாம நான் என் பையன் உசுர காப்பாத்த இந்த ஆபரேஷனை பண்ணிட்டேன். உசுரையும் காப்பாத்திட்டேன். மாறன் மாறனாகத்தான் வாழனும். வெற்றியாக இல்ல” ஒரு மருத்துவராக மாறினார் பூபதி.
 “ஏங்க என்னென்னமோ பேசினான் எனக்கு ஒன்னும் புரியல” லதா கண்ணீர் வடிக்க,
“வெற்றி தாய் பாசத்துக்கு ரொம்பவும் ஏங்கின குழந்த. என்னலையும் ஹாஸ்பிடல் வேலைனு அவனை ஒழுங்கா பாத்துக்க முடியல. அதனால நம்ம மேல கொஞ்சம் கோபத்துல தான் இருப்பான். ஆனா காலேஜ் பைனல் இயர் படிக்கும் போது எதோ நடந்திருக்கு. அதனாலதான் அவன் ரொம்பவே மாறிட்டான்”
 “அவன் அப்படி மாற நானும் ஒரு காரணம். உன் மேல இருந்த கோபத்துல, நீ பூபதிய விட்டு போனதையும், அவனை விட்டு போனதையும் அடிக்கடி அவன் கிட்ட சொல்வேன். அந்த பிஞ்சு மனசுல நஞ்ச விதைச்சிட்டேன்” செல்வபாண்டியன் லதாவிடம் மன்னிப்பு கேட்டார்.
“நீங்க உண்மையாத்தானே சொன்னீங்க. நான் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அவனை தொலைச்சிட்டேனே” லதா அழ
“அன்னக்கி காலேஜ் கடைசி நாள்னு போனவன் வந்து வீட்டுல இருக்குற பொருளெல்லாம் உடைச்சான். அப்பொறம் பைக்கை எடுத்துக்கிட்டு போனவன். நல்ல சரக்க குடிச்சி வண்டிய ஓட்ட முடியாம வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அன்னைல இருந்துதான் சரியா பேச மாட்டேன்குறான். அவன் கோபமும் அதிகமாச்சு” செல்வபாண்டியன் யோசிச்சு, யோசிச்சு பேசினார்.
“காலேஜ்ல கூடப் படிச்ச பொண்ண காதலிச்சு இருப்பானோ? அந்த பொண்ணு வேணாம்னு சொன்னதால இப்படி ஆகிட்டானா? முதல்லயே தெரிஞ்சிருந்தா அந்த பொண்ணுகிட்ட போய் பேசி இருக்கலாம்”
“அவனும் இல்ல. அந்த பொண்ணு யாருனு கூட தெரியல” பூபதி வெறுமையாக புன்னகைத்தார்.
“ஏங்க மாறன் எவ்வளவு நேரம் தூங்குவான்? கட்டிலுக்கு தூக்கிட்டு போலாமா?”
“இல்ல லதா.. இப்போ கண் முழிச்சிடுவான். முழிச்சா போலீஸ் ஸ்டேஷன் போயிடுவான். அவன் வேலைய பார்க்க விடு. அவனை நோயாளி மாதிரி ட்ரீட் பண்ணாத. அவனுக்கு ஒன்னும் இல்ல. அவன் முன்னாடி அழுகுறது. எமோஷனலா பேசுறது. எதுவும் வேணாம். நீங்க எல்லாரும் நார்மலா இருந்தா போதும். அவன் சரியாவான்”  என்ற பூபதி மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தார்.
கண்விழித்த மாறனுக்கு தான் வெற்றியாக மாறிய நொடிகள் நியாபகத்தில் இருக்கவில்லை. அவன் வீட்டாரிடம் விடைபெற்று காவல் நிலையம் கிளம்பி சென்றிருந்தான்.
“வாங்க இன்ஸு, வாங்க எஸ்.ஐ மேடம் ரெண்டு நாளா இந்த பக்கமே வரல” கிண்டலாகவே அவர்களை வரவேற்க்க, இவனுக்கு சாலியூட் வைத்தவர்கள் தற்கொலை செய்த பெண்களை பற்றி ஒப்பிக்கலாயினர்.
சந்தேகம் என்று வந்த உடன் காலேஜ் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட எல்லா கேஸையும் கையில் எடுத்திருந்தான் மாறன்.
“சார் நீங்க சந்தேகப்பட்டது சரிதான். காலேஜ் போற பொண்ணுகளை வச்சி ப்ரோஸ்ட்டிடூஷன்  நடத்துற கேங்க் ஒன்னு புதுசா உருவாக்கி இருக்கு” இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சொல்ல
“அதிகமான பொண்ணுகளை மிரட்டித்தான் இதுல ஈடுபடுத்தி இருக்காங்க சார்” என்றாள் எஸ்,ஐ மஞ்சுளா.
“மிரட்டினா? எப்படி? கத்திய காட்டியா? அதான் நாங்க இருக்கோமே வந்து கம்பளைண்ட் கொடுக்க வேணாம்” திமிராக சொன்னான் மாறன்.
“சார் அது வந்து…” மஞ்சுளா இழுக்க…
“அந்த பொண்ணுகளோட அந்தரங்க போட்டோஸ், வீடியோஸ் வச்சி மிரட்டி இருக்காங்க சார்” என்றார் கோபால்.
“ஓஹ்.. ஐ.. சீ. எப்படி? காலேஜ் வாஷ்ரூம்ல கேமரா வச்சிருக்கானுகளா?” தனது சந்தேகத்தை முன் வைத்தான் மாறன்
“நோ சார். காலேஜுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்ற மஞ்சுளா “சோஷியல் மீடியா மூலம் அறிமுகமாகி காதலிக்கிறேன் என்ற பேருல அவன் ரூமுக்கு கூட்டிட்டு போய்…” மேற்கொண்டு சொல்ல முடியாமல் திணற
“ஒரு போலீஸ் ஒபிசராக இருந்துகிட்டு இப்படி நடந்தத சொல்ல கூசினா வாழ்க முழுக்க எஸ்.ஐயாக இருக்க வேண்டியதுதான்” மஞ்சுளாவை முறைத்தவன் நந்தகோபாலை ஏறிட்டான்.
அவன் பார்வையை புரிந்துகொண்டவன் “ரூம்ல கேமரா செட் பண்ணி அந்த பொண்ணு கூட பண்ணதெல்லாம் வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி இருக்கானுங்க. சில பொண்ணுகள திடிரென்று உள்ள வந்த ப்ரெண்ட்ஸ் ரேப் பண்ணி இருக்காங்க. அதையும் அவ முன்னாடியே வீடியோ எடுத்து மிரட்ட ஆரம்பிச்சி இருக்கானுங்க. உள்ளூருல இருக்குற பொண்ணுகளை இப்படி மடக்கினவங்க தூரத்துல இருக்குற பொண்ணுகளை வீடியோ கால்ல கண்டதையும் பண்ண வச்சி அதையே அந்த பொண்ணுகளுக்கு அனுப்பி மிரட்டி யார் யார் கூடையோ அந்த பொண்களை அனுப்பி இவனுக்கு காசு பார்த்திருக்கானுங்க”
“அப்போ தப்பு பொண்ணுங்க மேலையும் இருக்கு. ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாதுனு இதைத்தான் பெரியவங்க சொல்லி இருக்காங்க”
“சார் காதலிக்கிறதுல என்ன சார் தப்பு?” மஞ்சுளா கோபத்தில் கத்த
“காதலிக்கிறது ஒருவகைள தப்புதான். நான் அத பத்தி பேச விரும்பல. காதல் எங்குற பேர்ல கல்யாணத்துக்கு அப்பொறம் பண்ணுறதெல்லாம் இப்போவே பண்ணனும்னு அலையுறது தப்பு இல்லையா?”
“காதலிக்கிற பையன் தானேனு நம்பி…” என்ற மஞ்சுளாவுக்கு பேச்சே வரவில்லை.
“பெத்தவங்க படிக்க காலேஜ் அனுப்பினா காதலிக்கிறது. அது கூட தப்பில்ல. காதலிக்கிறது கல்யாணம் பண்ண தானே எதுக்கு வீட்டுக்கு பொய் சொல்லி அவன் கூட ஊற சுத்தணும்? அவனை கூட்டிகிட்டு நேரா வீட்டுக்கே போய் அப்பா… இந்த பையன எனக்கு பிடிச்சிருக்கு? வாழ்வோ, சாவோ, இவன் கூடதான்னு எந்த பொண்ணாவது தைரியமா சொல்லுறாளுங்களா? இப்போ இருக்குற அப்பாக்கள் ஜாதி, மதம், காசு பணம் தாண்டி கொஞ்சம் பொண்ணு வாழ்க்கையை பத்தியும் யோசிக்கிறாங்க. பெத்த பொண்ணுக்கு அப்பா பத்தி தெரியாதா? சொல்லி இருந்தா பெண்ணுக்காக அப்பா அந்த பையன பத்தி தேடி பார்க்க மாட்டாரா?”
இப்படியெல்லாம் உலகத்துல நடக்காது நந்தகோபால், மஞ்சுளாவும் முகத்தை திருப்ப, “அவன் கெட்டவனா இருந்தா அந்த பொண்ணு வாழ்க அவன் கிட்ட இருந்து மீட்கப்படும். எங்க வேல மிச்சம். இப்படி உலகத்துல நடக்காம இல்ல. என்ன ரொம்ப குறைவு அவ்வளவுதான். அப்பா மேல நம்பிக்கை இல்லாம காதலன் மேல நம்பிக்கை வச்சி வாழ்க்கையையே தொலைச்சி அப்பொறம் தற்கொலை என்ற முடிவை எடுக்குறாங்க. இதோ நாம அலைஞ்சிகிட்டு இருக்கோம்”
“ஆமா சார்” என்ற மஞ்சுளாவின் குரலில் வெறுமை மட்டும்தான்.
“எனக்கு ஒரு விஷயம் புரியல. இந்த பொண்ணு… பேர் என்ன?”
“நந்தினி சார்’
“நந்தினிக்கு வீட்டுல மாப்பிள பாத்திருக்காங்க அந்த பையன் கூட நிச்சயமும் ஆகிருச்சு. அப்படி இருக்கைல இவ யாரையும் காதலிச்சிருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி யார் கூடையும் வீடியோ கால்ல பேசி இருக்கவும் வாய்ப்பில்லை” தனது ஊகத்தை சொல்ல
“எஸ் சார் சோஷல் மீடியால தப்பான எந்த விதமான சாட்டும் இல்ல” நந்தகோபால் உறுதியாக சொல்ல.
“நந்தினி போன்ல இருந்த ஒரே வீடியோ நந்தினி யார் கூடையோ உடலுறவு கொள்ளுறது மட்டும்தான்” தைரியமாக பேசினாள் மஞ்சுளா.
“அப்போ அவளுக்கு எங்கயோ? எப்போயோ? என்னவோ? நடந்திருக்கு அதைத்தான் நாம கண்டு பிடிக்கணும். அவ ப்ரெண்ட்ஸ் யார் யாரு? அவ எங்கெல்லாம் போவா? எல்லா டீட்டைளையும் எடுங்க” என்ற வெற்றி அவர்களை அனுப்பி வைத்திருந்தான்.
“என்னடா… இந்த கேஸ் இப்படி இழுக்குது” என்றெண்ணியவாறு ஏதாவது க்ளூ கிடைக்குமா என்று நந்தினியின் வீடியோவை உன்னிப்பாக பார்கலானான் மாறன்.
“சார் இந்த சிட்டிலையே உங்க அப்பாதான் நம்பர் ஒன்னு நியூரோ” என்றவாறு வந்த ஏட்டு ஆறுமுகம் “என்ன இவரு போலீஸ் ஸ்டேஷன்லேயே பிட்டு படம் பாக்குறாரு” மிரண்டவாறு பார்க்க,
அவரை திரும்பியும் பாராமல் “ரெண்டாவது யாரு? அந்த டாக்டர் கிட்ட அப்பொய்ன்மெண்ட் இன்னைக்கே வேணும்” என்றான் மாறன்.    

Advertisement