Advertisement

அத்தியாயம் 23
“யார் நீ? இப்போ என் புருஷன். முன்ன என் சீனியர். கம்பியூட்டர்னா உனக்கு உசுரு. நான் கூட ரெண்டாம் பட்சம்தான். அப்படி பட்ட நீ கைநிறைய சம்பளம் வாங்குற வேலைல சேர்ந்திருக்கலாம். இல்ல ஏதாவது கம்பனி நடத்தி இருக்கலாம். அதற்குண்டான பணத்தை நீ உன் தாத்தாகிட்ட கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். ஆனா நீ எதோ ஒரு கம்பியூட்டர் சென்டர் ஆரம்பிச்சிருக்க. அதுல கூட நல்ல வருமானம் தான். நீ நினைச்சி இருந்தா இங்க சம்பாதிச்சத வச்சி கூட கம்பனி ஆரம்பிச்சி இருக்கலாம். ஆனா நீ செய்யல. ஏன் செய்யல? வலுவான காரணம் இல்லாம நீ எதையும் செய்ய மாட்ட. ஏன்னா நீ என் வெற்றி” என்றவளை இறுக அணைத்து முத்தமிட்டான் வெற்றி.
“உன்ன தவிர வேற யாராலயும் என்ன புரிஞ்சிக்க முடியாது என்று நல்லாவே தெரியும் ஷாலு. நான் என்ன செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு நீ நினைக்கிற இல்ல. அது  போதும். எனக்கு கம்பியூட்டர் கேம்ஸ் மட்டுமல்ல, ஹாக்கின்லயும் இன்டரஸ்ட் இருந்தது. கம்பியூட்டர்ல எத்தனை விதமான கோர்ஸ் இருந்தாலும் தேடிதேடித் படிச்சேன். அதுக்கு கம்பியூட்டர் உதவிருச்சு. எனக்கு இந்த டிகிரி எல்லாம் தேவ இல்ல. ஆணிவேர் வரைக்கும் போகணும் என்ற ஆச, அத வெறின்னு கூட சொல்லாம்.
அப்படி விளையாட்டுத்தனமா நான் என்டர் ஆனா இடம்தான் டார்க் வெப். அதுல எவ்வளவு விஷயங்களை கத்துக்கிட்டேன். சீசீடிவி, ட்ராபிக் லைட்ஸ் எல்லாம் ஹேக் பண்ண நான் மார்டன் வண்டிய கூட ஹேக் பண்ணி இருக்கேன்.
இதெல்லாம் பண்ணது யாரையும் கஷ்டப்படுத்த இல்ல. கத்துக்க.
ஆனா எவ்வளவு அப்பாவி பெண்கள் பாதிக்க படுறாங்க என்று தெரிய வர்ரப்ப அவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணேன்.
என்னால என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் தனியா பண்ணேன். என்ன மாதிரியே மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறவங்க இருப்பாங்க. அவங்கள தேடி பிடிச்சேன். யார் போன வேணாலும் ஹேக் பண்ணி அவன் எப்படி பட்டவன் என்று தெரிஞ்சி கிட்ட பின்னால அவன் நமக்கு உதவுவானா? மாட்டானா? போலீஸ்ல மாட்டி கொடுத்து விடுவானா? என்றெல்லாம் தெரிஞ்சிகிட்டேன். இப்போ இருக்குற ஸ்மார்ட் போன் ஒரு மனுசன பத்தி ஜாதகத்த  பார்காமலையே காட்டிக் கொடுத்து விடும்.
அரசாங்க உத்தியோகத்துல இருக்குற பலபேர் எனக்காக வேல செய்யிறாங்க. காசுக்காக இல்ல. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும். வரும் சந்ததியர்களின் எதிர்காலத்துக்காகவும் மட்டும்தான். ஆனா அவங்களுக்கு நான் யார்னே தெரியாது.
ஆனா எனக்கு என் கூடவே இருக்க நாலு பேர் தேவைப்பட்டிருச்சு. தைரியமான, நம்பிக்கையான, எந்த வேலையானாலும் இறங்கி வேலை செய்ய கூடியவங்களா நாலு பேர்”
“அது என்ன நாலு பேர் ஏன் எட்டு பேரா வச்சிக்க மாட்டியா?” சிரித்தாள் ஷாலினி.
“என்னடி கிண்டலா? நான் எவ்வளவு சீரியஸ்ஸா பேசிகிட்டு இருக்கேன். கிண்டல் பண்ணுறியா?” அவளை பிடித்து கிள்ள
“விடு வெற்றி கடிச்சிடுவேன்” கத்த ஆரம்பித்தாள்.
அலைபேசி அடிக்கவே இயக்கி காதில் வைத்தான் வெற்றி. “சார் ஆள பாலோ பண்ணிக்கிட்டுதான் இருக்கோம். எப்போ வேணாலும் தூக்கிடலாம்” என்றான் செல்வம்.
“பாத்து பாத்திரம் டா…” என்று வெற்றி சொல்ல
“பக்குவமா தூக்கிடுறோம் பாஸ்” என்றான் ராபின்.
“டேய்…” என்ற வெற்றி சிரித்தவாறே அலைபேசியை துண்டிக்க,
“சோ அந்த நாலு பேர் இதுக்கா?” ஷாலினி புருவம் உயர்த்தினாள்.
உன் அடியாளா? கைக்கூலியா? கொத்தடிமையா? எது வேண்டுமானாலும் அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால் அவள் கேலிதான் செய்தாள். என்று வெற்றிக்கு நன்றாகவே தெரியும்.
“எல்லா வேலையையும் நான் தனியா பார்க்க முடியாது. ஹெல்ப்புக்கு நாலு பேர் வேணும். இந்த மாதிரி வேலைகளை செய்ய அது மட்டுமில்ல. வழிதவறி போகும் இளைஞ்சருக்கு வழிய காட்டணும் முதல் படியாகத்தான் இந்த நாலு பேர்.
அது மட்டுமில்ல மக்களுக்கு நல்லது செய்யிற கூட்டம் ரெண்டு விதமா இருக்காங்க. ஒரு கூட்டம் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யணும் என்று நினைக்கிற கூட்டம். அடுத்த கூட்டம் நாப்பது பேர் நல்லா இருக்க நாலு பேர பலி கொடுத்தாலும் பரவா இல்லனு நினைக்கிற கூட்டம். நான் ரெண்டாவது கூட்டத்தை வெறுக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இன்னல்களை அனுபவிச்சாதான் அவங்க கேட்டது கிடைக்கும்னா அத பெற்றுக்கொடுக்குற இடத்துல இருக்கிறவன் ஒரு சைக்கோவா, இல்ல தீவிரவாதியா, இந்த மாதிரிதான் இருப்பான். போராளினா தன்னோட உயிரை துச்சமா நினைக்கணும். அடுத்தவன் உயிரை பலி கொடுத்து சொன்னதை நிறைவேற்ற கூடாது.
நான் தனி மக்களுக்கோ, என் ஜாதிக்கோ, என் மதத்துக்காகவோ இந்த வேலைய செய்யல. மக்களுக்காக செய்யிறேன். நல்லவங்களுக்காக செய்யிறேன்”
அவன் பேசப்பேச இப்படிப்பட்ட நல்லவனையா கெட்டவன் என்று அவன் தந்தையே கொல்ல துணிந்தார் என்று நினைக்கும் பொழுது ஷாலினிக்கு அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.
இது அழுவதற்கான நேரமுமில்லை. வெற்றியின் முன் அழுது அவனை இமோஷனலாக கஷ்டப்படுத்தவும் ஷாலினிக்கு எண்ணமில்லை. விழித்தட்டி, தொண்டையை கனைத்து சரி செய்து கொண்டவள் புன்னகை முகமாக அவனை ஏறிட்டு  “நீ கொலையே பண்ணாலும் நான் உன் கூட இருப்பேன் வெற்றி. ஆனா என் அக்காவ கொன்னவன நான் பார்க்கணும்” பிடிவாதம் பிடித்தாள் ஷாலினி.
அவளை அழைத்து செல்ல வெற்றிக்கு இஷ்டமில்லை. ஆனால் மறுக்கவுமில்லை. “கெட் ரெடி” என்றவன் குளிக்க சென்றான். 
ஷாலினி தயாராகி வர, வெற்றி வண்டி சாவியோடு நின்றிருந்தான்.
“எவ்வளவு நாளைக்கு அப்பொறம் உன் கூட வண்டில போக போறேன்” என்றாள் ஷாலினி.
“அடிப்பாவி. இவ்வளவு நாளா என் கூட தான்டி போன” புன்னகைத்தான் வெற்றி.
“பட் அது உங்கண்ணன்டா… நீ இல்ல. இப்போ வண்டிய எடுக்குறியா?” 
“என்னமோ ஷாப்பிங் போறது போல சந்தோசமா போற, நாம கொலை பண்ண போறோம் டி…” மனைவியை அதட்டலானான்.
“அப்படியா? நா என்னமோ வாக்கின் போய், சுடச்சுட டீயோட பஞ்சி, பானிபூரி, மசால வடை எல்லாம் சாப்பிட போறோமோன்னு நினச்சேன்” சிரிக்காமல் கையை கட்டிக்க கொண்டு சொல்ல,
“உனக்கு வாய் ஜாஸ்தியாகிருச்சு டி…” என்றவன் அவள் புறம் குனிய,
அவனிடமிருந்து விலக்கியவள் “ஆ… ஆஹ்… இப்போதான் குளிச்சிட்டு வந்தேன். திரும்ப ஆரம்பிக்காத மிஷனுக்கு லேட் ஆகுது. அவன் அதட்டினால் இவள் மிரட்டலானாள்.
“சரி டி… பொண்டாட்டி” என்றவன் வண்டியை இயக்க, ஷாலினி ஏறிக்கொண்டாள்.
வண்டி வேகமெடுத்த பொழுது மணி இரவு ஏழு மணிதான். அவன் வண்டியை நிறுத்தும் பொழுது ஏழு முப்பதை தாண்டி இருக்க, நகரத்துக்கு ஒதுக்கு புறமான பகுதியில் ஒரு தென்னம் தோப்புக்குள் வண்டி நின்றதும் “ரொம்ப இருட்டா இருக்கு வெற்றி” என்று ஷாலினி சொல்லும் பொழுதே அவர்களின் புறம் இரண்டு டாச் லைட்கள் அடிக்கப்பட வெற்றி ஷாலினியின் கையை பிடித்துக் கொண்டு வெளிச்சம் தெரிந்த பக்கம் நடந்தான்.
அங்கே ஒரு வீடு. “கரண்ட் வசதி கூட இல்லையா? என்று ஷாலினி யோசிக்க பெட்ரோமாக்ஸ் லைட் மெல்லிய ஒளியில் எரிந்து கொண்டிருக்க கொஞ்சம் நேரத்தில் அந்த வெளிச்சத்துக்கு கண்கள் பழக்கப்பட்டதும் தான் பார்த்தாள் வராந்தாவும், சமையலறையும் கொண்ட பழைய குடிசை. பாவனையில் இல்லாததால் மட்டைகள் ஒரு புறமும், தேங்காய்கள் ஒரு புறமும் கண்டமேனிக்கு போடப்பட்டிருக்க, வெற்றி சொன்ன ஹேக்கரையும் காணவில்லை. மாலினியை கொன்ற கொலைகாரனையும் காணவில்லை.
“இந்த நால்வரையும் நம்பி வெற்றி தன்னை அழைத்து வந்தது சரியா?” ஒருகணம் வெற்றியின் பங்காளிகளையே சந்தேகம் கொண்ட ஷாலினி வெற்றியின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
ஆனால் வெற்றியோ “ஆள் உள்ளத்தானே இருக்கான்? மயக்கத்துலையா இருக்கான்? எப்படி கட்டிப் போட்டிருக்கீங்க?” என்று கேள்விகளை அடுக்கினான்.
அவனது கேள்விகளுக்கு பதில் சொன்னவர்கள் ஷாலினியை பார்த்து “மன்னிச்சிக்கோங்க அண்ணி இந்த மாதிரி சூழ்நிலையில உங்கள சந்திக்க வேண்டியதா போச்சு” மன்னிப்பு வேண்டிய பின்தான் ஷாலினிக்கு ஆசுவாசமாக மூச்சே விட முடிந்தது. 
“சரிடா நீங்க போய் சாப்பிட்டு வாங்க. அதுக்குள்ள நான் ஆள முடிச்சிடுறேன். அப்பொறம் நீங்க வந்து அடக்கம் பண்ணிடுங்க” என்று வெற்றி சொல்ல, மறு பேச்சின்றி நால்வரும் கிளம்பி இருந்தனர்.
“ஆமா நீ யாரை கடத்தினை? நாம யாரை கொல்ல போறோம்” புரியாது கேட்டாள் ஷாலினி.
“ஏன் அங்க உக்காந்து இருக்கிறவன் உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று வெற்றி சொல்ல அங்கே யாரையும் காணாமல் மிரண்டாள் ஷாலினி.
“வெற்றி விளையாடாத” அவன் கையை மேலும் இறுக்கியவள் அச்சத்தில் நா குளறினாள்.
ஏற்கனவே அவன் வெற்றியா? மாறனா? என்ற குழப்பம். இதில் சைக்கோ போல் யாரும் இல்லாத இடத்தில் யாரை சொல்கிறான்? ஷாலினி வியர்வையில் குளித்து மயக்கம் வருவது போல் இருக்க, வேகமாக மூச்சு வாங்கினாள்.
“ஏய் ரிலேக்ஸ் பயந்திட்டியா? வா” என்றவன் அவள் கையை விலக்கி விட்டு இந்த தேங்காய் எல்லாம் அப்புறப்படுத்து” என்றவாறே அப்புறப்படுத்த ஆரம்பிக்க, ஷாலினி புரியாது முழித்தாள்.
“நீ சரிப்பட்டு வர மட்ட. இங்கயே நில்லு” என்றவன் ஒரு ஆள் நுழையக் கூடிய விதமாக தரையில் தோன்றிய பலகையை தள்ளித் திறந்தவன் படியில் இறங்க வாயை பிளந்தாள் ஷாலினி.
   வெற்றி கண்ணை விட்டு மறைந்ததும் ஷாலினி அவசர அவசரமாக அவன் இறங்கிய படியில் இறங்கினாள். அது பலகையால் செய்யப்பட்டிருக்க, சத்தம் எழுப்பியதால் அவளை திரும்பிப் பார்த்த வெற்றி “டோன்ட் மேக் நோய்ஸ்” வாயில் விரலை வைத்து கூறியவன் முன்னால் நடக்க அவனை இவள் பின் தொடர்ந்தாள். 
உள்ளே ஒரு பெரிய அறை. இரத்தவாடை வீச கைக்குட்டையால் மூக்கை பொத்தியவளுக்கு அங்கே மின்சார வசதியோடு நாளா புறமும் மின் குமிழ்கள் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். கூடவே “எதற்கு மேல லைட் போடாம இருந்தாங்க?” என்ற கேள்வி தோன்றாமலும் இல்லை. ஆனால் அதை இப்பொழுது வெற்றியிடம் கேட்கத்தான் முடியவில்லை.
ஷாலினி சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே வெற்றி மயக்கத்தில் இருந்த மனிதனின் முன்னால் சென்று ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
“ஷாலு நீ இவன் பின்னாலயே இரு” என்றவன் அவளை அவன் பின்னாடி நிற்க வைத்தான்.
“ஆமா இவர எதற்காக கடத்தினான். இவரா அக்காவ கொன்னாரு?” குழம்பிய முகபாவனையிலையே வெற்றி சொன்னதை செய்தாள் ஷாலினி.
வெற்றி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வாளி நிறைய தண்ணீர் இருக்க, அதை தூக்கியவன் மயக்கத்தில் இருந்தவரின் மேல் ஊற்றி அவரை குளிப்பாட்டி தெளிய வைத்தான்.
சிரமப்பட்டு கண்களை திறந்தவரோ தன் முன்னால் அமர்த்திருப்பவனை கண்டு “டேய் மாறன் காப்பாத்துடா” என்று கத்த வெற்றி உதடு வளைத்து புன்னகை செய்தான்.
“நான் வெற்றிமாறன் சார்” என்றவனை புரியாது பார்த்தவர் “என்ன சொல்லுற நீ? நீ எப்படி உசுரோட வந்த?” நா வறண்டு உதடுகள் காய்ந்து பேச்சே வரவில்லை. அவர் வேறு யாருமில்லை. டி.ஐ.ஜி. விஸ்வநாதன்.
“உங்க கையாள கொன்னவன் எப்படி உசுரோட வந்தான்னு ஆச்சரியமா இருக்கா? எங்க இருந்து ஆரம்பிக்கலாம். நீங்க பண்ண எக்சிடண்ட்டுல இருந்து ஆரம்பிக்கலாமா? இல்ல. அந்த பொண்ணுங்க கேஸ்ல இருந்து ஆரம்பிக்கலாமா?” வெறியோடு பேசினான் வெற்றி.
“நீ என்ன சொல்லுற?” புரியாதவர் போல் நடித்தார் விஸ்வநாதன்.
“அட அட அட பாவம் சார் நீங்க உங்களுக்கு ஒண்ணுமே தெரியல இல்ல. நான் சொல்லுறேன் சார். பொறுமையா கேளுங்க.
மாலினி. என் வைப்போட அக்கா ஒருநாள் என்ன சந்திக்க வந்தா. வந்தவ என்ன சொன்னா தெரியுமா? அவ ப்ரெண்டுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்னு சொன்னா. ஏன்னா நான் பண்ணுறது ஆப் ஸ்க்ரீன் போலீஸ் ஜாப் ஆச்சே. ஆனா அவளுக்கு இது எப்படி தெரியும்னு கேட்டேன்.
நான் ஒருத்தர் உசுர காப்பாத்தினேன் அவர் மாலினியோட கொலிக். அவர்தான் என் நம்பர் கொடுத்து பேச சொன்னாராம். வந்த பிறகுதான் அது நான்னு தெரிஞ்சி கிட்டதாக சொன்னா. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு அவளுக்கும் கொஞ்சம் ஆச்சரியம்தான். என்ன சார் பண்ணுறது வெளிஉலகத்துக்கு கொஞ்சம் வேஷம் கட்ட வேண்டி இருக்கே. சரி விஷயத்துக்கு வருவோம்” என்றவன் கொஞ்சம் நேரம் அமைதியாக விஸ்வநாதனையே பார்த்திருக்க, அவருக்குள் ஒருவித அச்சம் பரவ ஆரம்பித்தது.
அவ பிரெண்டோட புருஷனுக்கு ஒரே ஒரு தங்கச்சி. அவளை யாரோ அசிங்கமா வீடியோ எடுத்து வச்சி மிரட்டுறானாம். பண்ணக் கூடாததையெல்லாம் பண்ண சொல்லுறானாம். சின்ன பொண்ணு இல்லையா பயத்துல அண்ணிகிட்ட சொல்லிட்டா. அவங்களும் தங்களோட போன்ல இருந்து சொன்னா எங்க அந்த ஹேக்கருக்கு தெரிஞ்சிடுமோன்னு பி.சி.ஓல இருந்து மாலினிக்கு போன் பண்ணி இருக்காங்க. மாலினி என்ன பண்ணுறதுனு யோசிச்சு, கொலிக் சொன்னதை கேட்டு என்ன தேடி வந்தா. சரி இந்த கதையை அப்படியே கொஞ்சம் நேரத்துக்கு ஸ்டாப் பண்ணலாம். இப்போ உங்க குடும்பக் கதைக்கு வரலாம். சரியா?” என்றவனை ஷாலினியும் புரியாது பார்த்திருந்தாள்.
என்ன சுத்தி ஏதாவது இல்லிகள் எக்டிவிடீஸ் இருக்கானு நான் தேடிப்பார்ப்பேன். நான் இப்படித்தான் சார். போர் அடிச்சா இந்த மாதிரி வேலையைத்தான் செய்வேன். பொண்ணுங்க போனுக்கு அன்னவுன் எஸ்.எம்.எஸ் அனுப்ப பட்டிருக்கிறது தெரிய வந்தது. அத யாரு அனுப்பி இருப்பான்னு கண்டு பிடிக்க, எனக்கு அஞ்சு நிமிஷம்தான் தேவ பட்டது. ஆனா அவன் நோக்கம் என்னனு மட்டும் புரியல. அவன் யாரு என்னனு கண்டு பிடிச்சேன். உங்க பையன் என்றதும் தூக்கி வாரி போட்டிருச்சு.
உங்கள பத்தி என் டேடா ப்ளாக் மார்க் இல்லாத அக்மார்க் நல்ல மனுஷன்னுதான் சொல்லிச்சு. நேர்மையான போலீஸ் ஒபிசருக்கு இப்படி ஒரு பையனா?
நீங்க நல்லவராச்சே பையன கண்டிப்பீங்கனு நான் உங்களுக்கு இந்த விசயத்த கன்வே பண்ணேன்.
ஆனா கறைபடியாத உங்க காக்கி சட்டிக்கும் உங்க பையனாள உங்க பேருக்கும் களங்கம் வந்துடும் என்று பயந்து அழகான ஒரு திட்டத்தை போட்டீங்க. அது தவிர தேர்ட் ஐ நான் வேற இருக்கேனே. என்ன வேற முடிக்கணுமே.
என் கிட்ட என்ன சொன்னீங்க? உங்க பையன கையும் களவுமா பிடிக்கணும். அவன கொல்லாம விட மாட்டேன். எனக்கு எல்லா ஆதாரத்தையும் கொடுங்க என்று கேட்டீங்க. அது மட்டுமில்லாம. போலீஸ்ல இருக்குற எல்லாரோட வீட்டு லேடீஸ் போனையும் அவன் ஹேக் பண்ணி இருக்குறதாகவும் சொன்னீங்க.
நீங்க நேர்மையானவராச்சேன்னு உங்கள நான் நம்பி உங்கள நேர்ல சந்திச்சு சுதால இருந்து மாலினிவரைக்கும் எல்லா டீட்டைளையும் கொடுத்தேன். நீங்க என்ன பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைஞ்சாப்போவே நான் சுதாரிச்சி இருக்கணும் உங்களுக்கு மணிமாறன தெரிஞ்சிருக்குனு. கேஸ்ல மும்முரமா இருந்ததுல விட்டுட்டேன். அதுதான் நான் பண்ண ஒரே தப்பு.
என்கிட்டே இப்படி பேசி எல்லா டீட்டைளையும் வாங்கி கிட்ட நீங்க மாலினியையும், பூங்குழலியையும் கொன்னீங்க. ஏன்னா அவங்களுக்கு உங்க பையன பத்தி தெரிஞ்சிருக்குமோ என்ற பயத்துல கொன்னுட்டிங்க. மாலினி என் வைப்போட அக்கானு தெரியாம கொன்னுட்டிங்க.
என்ன பலோவ் பண்ணி என் ஜீப்பை எக்சிடண்ட் பண்ணீங்க அப்போதான் உள்ள நானும் மாறனும் இருக்குறத பார்த்தீங்க. மாறன் மயக்கத்துல இருந்தான். நான் இருமிக்கிட்டு இருந்தேன். எங்க ரெண்டு பேரையும் செக் பண்ண நீங்க அவன் போலீஸ் ஐ.டி கிடைச்சதும் அவன் யாரு நான் யாருனு கண்டு பிடிச்சிட்டீங்க. என் தலைல இரும்பு ராடால அடிச்சீங்க. நான் செத்துட்டதா நினைச்சி அவன் ஐ.டிய என் மேல தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டிங்க.
இங்கதான் நீங்க ஒரு தப்பு பண்ணிடீங்க. ரெண்டு பேரையும் கொன்னு இருக்கணும். இல்லையா, ஐடிய அவன் பாக்கெட்டுல வச்சிருக்கணும்” என்று மாறன் புன்னகைக்க டி.ஐ.ஜி விஸ்வநாதனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.  
“என்ன சார் நான் சொன்ன கத போர் அடிக்குதா? இப்போ தான் சார் ட்விஸ்ட்டே இருக்கு. எங்கள பெத்த எங்கம்மாவ தெரிஞ்சி வச்சிக்கிட்டு நீங்க. எங்கள பெத்த அப்பாவ பத்தி முழுசா தெரிஞ்சிக்காம போய்ட்டிங்களே சார். அவர் ஒரு நியூரோ சார்ஜன்ட். அவர் ஒரு ஆராய்ச்சி பண்ணாரு. என்ன தெரியுமா? மனுஷனோட மூளையை இன்னொரு மனுசனுக்கு பொறுத்த முடியுமங்குற ஆராய்ச்சி”
“பைத்தியமா இவன் {ரொம்ப நேரம் நல்லாதானே பேசிகிட்டு இருந்தான்}” என்று பார்த்தார் விஸ்வநாதன்.
“என்ன சார் நம்ப முடியலையா? நீ நம்பலானா? எனக்கு ஒன்னும் நஷ்டமில்லை. ஏன்னா அதுதான் உண்மை. எங்கப்பா என்ன பண்ணிட்டாரு மணிமாறனோட மூளையை அறுத்து எனக்கு வச்சிட்டாரு. அவருக்கு அவரோட ஆராய்ச்சி சக்ஸஸாக்கணும் எங்குற வெறி. பெத்த பையனையே பலி கொடுத்துட்டாரு.
ஆனா நீங்க பண்ண வேலையால செத்தது நான்னு வீட்டுல எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. கண்ணு முழிச்சி நானும் மணிமாறனா வாழ ஆரம்பிச்சேன்.
அப்போதான் அந்த பொண்ணுங்க கேஸ மணிமாறன் கைலயே கொடுத்திருக்கீங்கனு தெரிஞ்சிகிட்டேன். தப்பு, தப்பு, தப்பு. அப்போ நான் வெற்றியா இல்லையே. நான் தான் மணிமாறனா கேஸ ஹாண்டல் பண்ணேன். வெற்றியா இருந்திருந்தா உங்க சங்க கடுச்சி துப்பி இருப்பேன். மாறனுக்குத்தான் ஒண்ணுமே தெரியலையே ஆரம்பத்துல இருந்து விசாரிக்க ஆரம்பிச்சான்.
அவன உங்களுக்கு நல்லாவே தெரியும். எப்படி கேஸ விசாரிப்பான்னு தெரியும். அதனாலதான் அன்னக்கி அவன நீங்க கொல்லாம உங்க திட்டத்துக்கு அவனையே பயன்படுத்திக்க நினைச்சீங்க.
கேஸும் நீங்க சொன்ன திசைலதான் போச்சு. கரிகாலனுக்கு தன்னோட மனைவி துரோகம் பண்ணிட்டாளே என்ற வருத்தம் பழி வாங்கணும். ஆனா கொலை பண்ணி ஜெயிலுக்கு போக இஷ்டமில்லை. அட கரிகாலன் மேட்டர் உங்க கிட்ட எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே.
ஹெல்ப்லைன் கம்பனி உங்க அக்கா பொண்ணோட கம்பனி. அக்காவும் மாமாவும் இறந்துட்டாங்க. அத நடத்துறது உங்க அக்கா பொண்ணோட வீட்டுக்காரர். உங்க பையன் அங்க அடிக்கடி போவான். அந்த நேரம் மூர்த்தி இந்த பொண்ணுங்க குளிக்கிற வீடியோவை பாக்குறத பார்த்திருக்கான். பழைய மாடல் ஹேக் பண்ண முடியல எப்படியோ அந்த வீடியோஸ் எல்லாம் அவன் போனுக்கு ஏத்திகிட்டான்.
இந்த பொண்ணுங்களுக்கு உங்க பையனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த பொண்ணுகளும் உங்க பையனும் கரிகாலனோட இன்ஸ்டார்ட்டியூட்டலாதான் படிச்சாங்க. உங்க பையனுக்கு சுதா மேல காதல். அது காதல் எங்குறத விட ஆசை, மோகம்னுதான் சொல்லணும். அவளை அழகா இருப்பா, நல்லா படிக்கிறா. திறமையான பொண்ணும் கூட. அவளை மாதிரி ஒருத்திதான் தனக்கு பொருத்தமா இருப்பான்னு நினைச்சான்.
ஆனா சுதா உங்க பையன ரிஜெக்ட் பண்ணிட்டா. ஒருவேளை அவன் ஒரு ஹேக்கர்னு தெரிஞ்சிருந்தா ரிஜெக்ட் பண்ணி இருக்க மாட்டா. ஒரு கட்டத்துக்கு மேல உங்க பையன் டாச்சர் பொறுக்க முடியாம அறைஞ்சிட்டா. அது உங்க பையனோட ஈகோவை டச் பண்ணிருச்சு.
பிரபா அங்கேயே சுதா பண்ணது தப்புனு கண்டிச்சா, பிரபாவோட பார்வைல காலேஜ் வாழ்க்கைல பசங்க பொண்ணுங்க பின்னாடி சுத்துறது சாதாரணம். மூஞ்சிக்கி நேரா பிடிக்கலைனு சொல்ல பொண்ணுங்களுக்கு உரிமை இருக்கு, கைநீட்டுறது தப்புனு சொல்லுறவ.
லேகா பயத்துல அழவே ஆரம்பிச்ச நேரம் நந்தினி மட்டும்தான் சுதாவுக்கு சப்போர்ட்டா நின்னு உங்க பையன திட்ட ஆரம்பிச்சா. உங்க பையன் கோபமா அங்க இருந்து போய்ட்டான்.
“என்னடா நடக்குது இங்க? என்று ஷாலினி பார்த்திருக்க,
“இதுக்கே இப்படி மூச்சு வாங்குனா எப்படி இன்னும் இருக்கு” என்றான் வெற்றிமாறன்.

Advertisement