Advertisement

அத்தியாயம் 22

தனது துணிப்பையோடு வீட்டுக்குள் நுழையும் மாறனைக் கண்டு அதிர்ச்சியாக பார்த்த லதா அவன் வெற்றியாக இருந்தால் நிச்சயமாக இங்கு வந்திருக்க மாட்டான் என்று தோன்ற “என்னடா மாறா? இந்த பக்கம்?” கோபத்தை அடக்கியவாறு கிண்டலாக கேட்டாள்.

என்னதான் வெற்றி தான் பெற்ற மகன் என்றாலும் தான் விட்டு சென்றது கணவனிடத்தில் அவனை கணவன் நல்ல முறையில் தானே வளர்த்தார். என்ன குறை வைத்தார்? வெற்றி ஒன்றும் விடலை பையன் இல்லையே,  தனக்கும் கணவருக்கும் இடையிலான பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் தன் மீது இவனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது என்று மகன் மீது கோபமும், அவனுக்கு உண்மையை சொல்லவில்லை என்று மாமனார் மற்றும் கணவன் மீதும் லதாவுக்கு கோபம் இருக்கத்தான் செய்தது.

உண்மையை சொல்லா விட்டால் என்ன? அம்மா சென்றதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா? படித்த, வளர்ந்த ஆண் மகன் இல்லையா? அப்படியே தன் மீது கோபம் இருந்தால் தன்னை தேடி வந்து தன்னிடம் கேட்டிருக்க வேண்டாமா? என்ன நடந்தது என்று தான் சொல்லி இருக்க மாட்டேனா? நான் என்ன அவனை பிரிய வேண்டும் என்று தூக்கிக் கொடுத்தேனா? கார் கதவை திறந்த உடன் இருந்த குழந்தையை தானே தூக்கிக் கொடுத்தேன். அது ஏன் இவனுக்கு புரியவில்லை. இதை ஏன் இவனிடம் இவர்கள் சொல்லவில்லை.

அது மாறனா? வெற்றியா? என்று பார்த்துதான் கொடுத்தேனா? இல்லையே சொல்லப் போனால் பெயர் வைக்க முன்னே தூக்கி கொடுத்து விட்டேன். இவனுக்கு வெற்றிமாறன் என்று பெயர் வைத்திருப்பதாக மாமனார் அலைபேசி வழியாக தந்தைக்கு கூறிய பின்தான் மாறனுக்கு மணிமாறன் என்றே நான் பெயர் வைத்தேன். என்னதான் மாறன் அண்ணனாக இருந்தாலும் வெற்றியை நான் நினைக்காத நாளே இல்லை. என்னை பற்றி நன்கு அறிந்திருந்த என் கணவனும் என் மாமனாரும் வெற்றியிடம் எதையும் சொல்லாதது பெரும் தவறு.

காலம் கடந்து வயதான காலத்தில் மாமனாரை வார்த்தையால் வதைத்து என்ன பயன்? இத்தனை வருடங்கள் பிரிந்திருந்த கணவனோடு இப்பொழுதுதான் சேர்ந்து வாழவே ஆரம்பித்திருக்கின்றாள் இந்த நேரத்தில் கணவனையும் வார்த்தையால் வதைத்து நடந்தவைகளை நியாபகப்படுத்தி மனதளவில் கஷ்டப்படுத்த வேண்டுமா என்று அமைதியாக இருக்கின்றாள்.

மூளை அறுவை சிகிச்சை செய்து மாறனை காப்பாற்றியது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, மாறன் வெற்றியாக மாறுவதையெல்லாம் லதாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. தான் வளர்த்த தன்னுடைய மகன்தான் தன்னை இவ்வாறெல்லாம் பேசுவதாக எண்ணி கோபத்தில் இருந்தவள் அவனை கண்டதும்  கொதித்தாள்.

அன்று லதா வீட்டுக்கு வந்து விட்டு சென்ற பின் மாறன் பலதடவை அலைபேசி அழைப்பு விடுத்தும் லதா அவனிடம் பேசவில்லை. அதை வைத்தே வீட்டுக்கு வந்த பொழுது என்னவோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவன், அன்னையாக லதா வெற்றியின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியவன் லதாவே பேசும்வரை அமைதியாக இருந்தான். ஆனால் லதா இன்றுவரை மாறனோடு பேசவே இல்லை.

இன்று அன்னை கேட்ட தொனியிலையே போலீஸான அவனுக்கு தெரியாதா? கட்டின மனைவியை விட்டு வந்தியா? அல்லது அவள் உன்னை துரத்தியடித்தாளா என்று கேட்காமல் கேட்கின்றாள் என்று.

“என் வீட்டுக்கு வர நான் யார்கிட்டயும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. இந்த வீட்டுல எனக்கு இடமில்லை. உரிமை இல்லனு சொல்லுங்க இப்போவே கிளம்பிடுறேன்” என்றவன் அன்னையை தீர்க்கமாக பார்க்க, பேசியது வெற்றியா? மாறனா? லதாவுக்கே ஒருகணம் புரியவில்லை.

“என்ன நான் உள்ள போகவா? இல்ல வெளிய போகவா?” கர்ஜிக்க

“என்னப்பா வெளிய நின்னு பேசிகிட்டு இருக்க? உள்ள வா…” செல்வபாண்டியன் வந்து அழைக்கவும் லதாவை முறைத்து விட்டு உள்ளே சென்றான் மாறன்.

அந்த பார்வையில் இவன் மாறனாக வரவில்லை வெற்றியாகத்தான் வந்திருக்கின்றன என்று நினைத்தாள் லதா.

என்னதான் ஷாலினியை பிரிய வேண்டும் என்று விட்டு வந்தாலும் அதை வீட்டில் சொல்ல மாறனால் முடியவில்லை. ஷாலினி தனக்கு துரோகமிழைத்தாள் என்று யாரிடமும் சொல்ல மனம் வரவில்லை. அதனாலையே லதாவிடம் வெற்றியாக நடந்துக் கொண்டான். அவனுக்கும் ஆச்சரியம்தான். வெற்றி எப்படி பேசுவான் என்று மாறன் ஒருநாள் அவனோடு இருந்த பொழுது பார்த்ததுதான். அதுபோக மாறன் வெற்றியாக மாறும் பொழுது அவன் எப்படியெல்லாம் நடந்துகொள்கின்றான் என்று மாறனுக்கு இப்பொழுது நியாபகத்தில் இருப்பதால் லதாவை ஈசியாக ஏமாற்ற முடிந்தது. வேறு வழியுமில்லையே.

“எங்க உன் பொண்டாட்டி வரலையா?” செல்வபாண்டி ஆசையாக வாசலை நோக்க,

“அவ ஸ்கூல் ட்ரிப் போய் இருக்கா வர ரெண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் நான் தனியா இருக்கணுமா? அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவன் மாடிக்கு செல்ல,

“வீட்டுக்கு வந்தா மட்டும் வீட்டுலையா இருக்கான்?” முணுமுணுத்தாள் லதா.

தான் தான் சரளமாக பொய் சொன்னேனா? “அதுசரி போலீஸ்காரனுக்கு பேசவா கத்துக் கொடுக்கணும்” முணுமுத்தவாறே குளிக்க சென்றான் மாறன்.  

காலையில் எழுந்தால் ஜோக்கின் செல்வதும், யோகா மையம் செல்வதும், அதன் பின் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையங்களுக்கு செல்வதும் நேரங்காலத்தோடு வீட்டுக்கு வந்து உண்டு விட்டு உறங்குவதும்தான் மாறனின் அன்றாட வேலையாக இருந்தது.

தூங்கும் பொழுது வெற்றியுடைய நியாபகங்களும் எல்லாம் வர ஆரம்பிக்க மாறன் எடுத்துக் கொண்ட சிகிச்சை முறையால் அவனால் தன்னை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.

ஷாலினி அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுக்கவுமில்லை. அவள் அவனை சந்திக்க முயற்சி செய்யவுமில்லை. தேடி வரவுமில்லை.

அது போதும் மாறனுக்கு ஷாலினி தன்னை காதலிக்கவே இல்லை. அவளுக்கு தன்னை பற்றிய சிந்தனையே இல்லை என்று தனியாக இருக்கும் பொழுது மட்டும் அவள் நினைவுகளில் சிக்கி தத்தளித்து தவிப்பவன் புலம்பித தள்ளுவான். ஆனால் அவளை விவாகரத்து செய்யவும் மாறன் யோசிக்கவில்லை. அப்படியொரு சிந்தனை அவனுக்குள் தோன்றவுமில்லை. அது ஏன் என்னு அவன் சிந்திக்கவுமில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கலானான்.  

நாட்கள் உருண்டோட ஒருநாள் தூக்கத்திலிருந்து கண்விழித்த மாறன் அறையே வித்தியாசமாக தெரிய “இது என் அறையே இல்லையே” என்று யோசித்தவன் ஜன்னலை திறந்தால் தான் இருப்பது வீடு என்று புரிந்தது. கண்ணாடியின் முன் நின்று தன்னுடைய உருவத்தையே பார்த்திருந்தவனுக்கு நடந்தவைகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் சடசவென மூளையில் உதிக்க ஆரம்பிக்க, தலைவலியில் துடித்தவன் கட்டிலை பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டான்.

ஆழமாக மூச்சு விட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் விபத்து நடப்பதற்கு முன், நடந்த பின் என்று அனைத்தையும் பொறுமையாக, நிதானமாக, சிந்திக்கலானான். நடந்தவைகள் அனைத்தும் கனவா? கற்பனையா? நிஜமா? ஒருகணம் அவனாலையே நம்ப முடியவில்லை. இன்று அவன் கண்விழித்தது மணிமாறனாக அல்ல வெற்றிமாறனாக. 

சட்டென்று அவன் உதட்டில் புன்னகை மலர கபோட்டை திறந்து தன்னுடைய லப்டப்பை எடுத்துக் கொண்டு நேராக சென்றது தன்னுடைய கம்பியூட்டர் சென்டருக்குத்தான்.

இன்று அவன் ஜாகிங் செல்லவுமில்லை. யோகா மையம் செல்லவுமில்லை. உதட்டில் தவழ்ந்த புன்னகை மட்டும் மாறவே இல்லை. வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவனுக்கு ஷாலினியின் நியாபகம் வரவே அவளை அழைத்தான். அவளது அலைபேசி எடுக்கப்படவில்லை என்றதும் ராகவேந்திரனை அழைத்தான்.

“சொல்லுங்க மாறன். என்ன பண்ணனும்?” ராகவேந்திரன் கேட்க,

“மாலினியை யார் கொலை பண்ணது என்று கண்டு பிடிச்சிட்டேன். அவன் இப்போ லண்டன்லதான் இருக்கான். அங்க வச்சி அவனை என்ன பண்ணாலும். யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க. அவன் எங்க இருக்கான்னு நான் உங்களுக்கு அரைமணித்தியாலத்துல போன் பண்ணுறேன். ஷாலு எங்க?” என்ன பேச வேண்டுமோ அதை கூறியவன். என்ன கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேட்க, ராகவேந்திரனுக்கே மாறன் வித்தியாசமாக தெரிந்தான்.

“ஷாலினி அவ வீட்டுலதான் இருக்கா. நான் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அவ வரமாட்டேன்னு சொல்லிட்டா. என் வெற்றி வருவான் நான் அவனுக்காக இங்க இருக்கணும் என்று சொல்லிட்டா” சோகமாக சொன்னான் ராகவேந்திரன்.

“ஆஹ்… தட்ஸ் மை ஷாலு. அவ அங்கேயே இருக்கட்டும் அநேகமா இன்னக்கி நைட் இல்லனா நாளைக்கு நான் அவளை போய் பார்ப்பேன்” அவள கொஞ்சம் பத்திரமா இருக்க சொல்லுங்க. நா வந்திடுறேன்னு சொல்லுங்க” என்றவன் அலைபேசியை துண்டித்து விட்டு வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

வெற்றியின் லப்டோப்போடு உள்ளே வந்த மாறனை பஷீர் கொஞ்சம் அதிர்ச்சியாக பார்க்க, மற்றவர்களுக்கும் பேச்சே வரவில்லை.

“என்ன கைஸ் என்ன புதுசா பார்க்குற மாதிரி பாக்குறீங்க? அடையாளம் தெரியலையா?” என்றவன் அவர்களை தாண்டி காரியாலய அறைக்குள் நுழைந்து அங்கிருந்த இரகசிய கதவுக்கு கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைய,

“வெற்றி சார்” என்று முணுமுணுத்தவாறே ராபின் பின்னால் நுழைய அவனை தடுத்து நிறுத்திய நிதீஷ் “சாரோட லப்டப்பை எடுக்கிட்டு வந்து சீக்ரட் ரூமை திறந்தா அவர் சராக முடியுமா?” என்று ராபினை முறைத்தான்.

“இல்லடா அவர் நம்ம சார்தான்” என்று செல்வம் சொல்ல,

“சாரோட லப்டப்பை திறந்து இருப்பாரு அதுல நம்மள பத்தியும், நாம செய்யிற வேலைய பத்தியும் இருந்திருக்கும். கையும் களவுமா பிடிக்க வந்திருப்பார்” என்றான் பஷீர்.

“கேட்டா நம்மளுக்கு இத பத்தி எதுவும் தெரியாது. புரிஞ்சுதா?” என்றான் நிதிஷ்.

“சார் என்ன பண்ணுறாரு? நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு நம்ம ஜாதகமே அதுல தான்டா இருக்கு.  நாம இல்லனு சொன்னா விட்டுடுவாரா?” அவனை முறைத்தான் செல்வம்

இரகசிய அறையிலிருந்து எட்டிப் பார்த்த வெற்றிமாறன் “டேய் என்னங்கடா அங்கேயே நின்னுட்டிங்க? வேல பார்க்க வேணாமா?” என்று கேட்டதும் இவன் வெற்றியா? மாறானா? என்று குழம்பினர் நால்வரும்.

“சார் என்ன ரூம் சார் இது? இங்க இப்படி ஒரு ரூம் இருக்கிறதே எங்களுக்கு தெரியாது” என்றான் நிதிஷ்.

“ஆமாம்” என்றான் பஷீர்.

மற்ற இருவரும் குழப்பத்தில் இருப்பதைக் கண்டு “ஏன் நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? உங்க எல்லாருக்கும் போலீஸ்ல சேரனும் என்கிறது கனவு மட்டுமல்ல லட்ச்சியம். இதோ இவன் அப்பா நேர்மையான போலீஸ்காரர். லஞ்சம் வாங்கிட்டார்னு வேலைய விட்டு தூக்கினதால தற்கொலை பண்ணிகிட்டாரு. கரப்டட் போலீஸ்னு அந்த வேலை கூட இவனுக்கு கிடைக்கல” என்று நிதிஷை பார்த்தவன்.

“உன் தாத்தா சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டவரு. ஆனா உன் அப்பாவ தீவிரவாதின்னு முத்திரை குத்தி ஜெயில்ல போட்டாங்க. தீவிரவாதியோட பையன்னு இவனால் படிக்கக் கூட முடியல. குடும்பத்தோட தற்கொலை பண்ணிகிட்டாங்க. இவன் மட்டும்தான் பொழச்சான். எல்லாரையும் கொன்னு குவிக்கணும் என்ற பழிவெறி உனக்குள்ள கொழுந்துவிட்டு எரிந்தாலும் அப்பாவி மக்களை கொன்னா அது பாவம் அவங்கள கஷ்டப்படுத்துற பாவிகள தேடித் பிடிச்சி கொல்லனும் என்று முடிவு பண்ணின. அப்போதானே நீ ராபின் மீட் பண்ண” என்று பஷீரை பார்த்து கூறினான் மாறன்.

நிதிஷும், பஷீரும் அதிர்ச்சியாக “சார்” அவனை கட்டிக்கொள்ள ராபினும், செல்வமும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

அதே மாதிரிதான் ராபின் மற்றும் செல்வமும் போலீசாக வேண்டும் என்று லட்ச்சியத்தோடு இருந்தவர்கள். ஏழ்மையின் காரணமாக போலீஸ் வேலைக்கு லஞ்சம் கொடுக்க முடியாமல் செல்வமும், எல்லா தகுதிகள் இருந்தும் செலெக்ஷன் போது யாரோ ஒரு பெரிய கை கூறியதற்காக அவருடைய சொந்தக்காரனுக்கு ராபினின் வாய்ப்பு பறிபோனது.

இவர்கள் போலீஸில் சேர்ந்து நாட்டுக்காக வேலை செய்ய வேண்டும் என்று துடிக்கும் இளைஞ்சர்கள். நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞ்சர்கள். நாட்டுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் இளைஞ்சர்கள் இவர்கள். அதிகாரம், ஆள் பலம், அரசியல் என்று சமூகத்தில் இருக்கும் விஷமிகளால் பாதிக்கப்பட்டவர்கள். தங்களை போல் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணுபவர்கள்.

நான் யார் தெரியுமா? என்று கேட்பவனையும், என் அப்பா யார் தெரியுமா என்று கேட்பவனையும் வெறுப்பவர்கள். அவர்களுக்கு பாடம் புகட்ட காத்து கிடந்தவர்கள் ஒருநாள் வெற்றியின் ஹாக்கிங் சிஸ்டத்தில் மாட்டிக்கொள்ள இவர்களுக்கு அவனுடைய கம்பியூட்டர் சென்டரில் வேலையும் கொடுத்து அவர்கள் எதிர்பார்த்த வேலையையும் கொடுத்து நகரத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு காரணமானவர்களை சத்தமே இல்லாமல் முடித்து போலீஸுக்கு உதவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் போலீஸுக்குத்தான் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. 

“சார் நீங்க செத்து போய்ட்டதா… அது மட்டுமில்ல அன்னக்கி நீங்களே உங்க அண்ணன் மாதிரிதானே பேசினீங்க” என்றான் ராபின்.

மூளை அறுவை சிகிச்சை பற்றியெல்லாம் சொன்னால் புரிந்துக் கொள்வார்களா? இல்லை தன்னை பத்தியக்காரன் என்று சொல்வார்களா? வெற்றிமாறனுக்கே ஒரு நொடி குழப்பமாகத்தான் இருந்தது.

அதனால் “எக்சிடன்டுல நான் பழசெல்லாம் மறந்துட்டேன். அதுபோக, என் அண்ணன் போலீஸ் ஐடி வேற என் மேல கிடந்ததனால. என்பியூலன்சுல ஏத்தும் போது ஆள் மாறாட்டம் ஆகிப் போச்சு. ஐடன்டிகள் ட்வின் வேற செத்தது யார்னு வீட்டாளுங்களுக்கே தெரியல. எல்லாம் நிபாகத்துல வந்திருச்சு” என்றவனுக்கோ விபத்து நடந்த பொழுது என்ன நடந்தது என்று தெள்ளது தெளிவாக நியாபகத்தில் இருக்கவே உதடு வளைத்து புன்னகை செய்தான்.

வெற்றிமாறன் இப்படித்தான். இடத்துக்கு ஏற்றது போல், ஆட்களுக்கு ஏற்றது போல் பேசுவான். அது மற்றவர்களின் பார்வையில் பொய்யாக தெரிந்தாலும், அவனை பொறுத்தவரையில் அதுதான் சரி. எல்லா உண்மையைகளையும், எல்லோரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. ஆனாலும் அவன் சொன்னதில் முற்றாக பொய்யும் இல்ல. கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் இருந்தது.

வெற்றிமாறனை உயிரோடு பார்த்ததில் பசங்களுக்கு சந்தோசம் தாளவில்லை. ஒவ்வொருவராக தாங்கள் என்னென்ன வேலைகள் பார்த்தோம் என்று பெருமையாக கூற வெற்றிமாறனும் சபாஷ் போடலானான்.

“ஓகே கைஸ் நான் கடைசியா பார்த்த கேஸ் என்னனு உங்களுக்கு நியாபகம் இருக்கா?” வெற்றிமாறன் புன்னகையோடு கேட்க, அனைவரும் தலையசைத்தனர்.

“அந்த கேஸ நான் பொண்ணுங்களுக்காக, போலீசுக்கு உதவ ஒத்துக்கிட்டேன். கடைசில அந்த கேஸால எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு. ஆனா அந்த கேஸ் இன்னும் முடியல. அப்போ உங்க யாரையும் நான் இன்வோல் பண்ணாமாதான் வேல செஞ்சேன். ஏன்னா அதிகாரத்துல இருக்குற யாரையும் நம்ப கூடாது என்கிறது நம்ம பாலிசி. இப்போ நாம ஒண்ணா சேர்ந்து வேல செய்ய போறோம். எனக்காக நீங்க ஒருத்தன பலோவ் பண்ணனும் அவன் எங்க போறான் என்ன பண்ணுறான்னு எனக்கு அத்துப்படி. அத நானே உனகளுக்கு சொல்லிடுறேன். ஆள தூக்கி எங்க இடத்துக்கு கொண்டு வந்துடுங்க. அங்க வச்சி அவனை நான் முடிச்சிடுறேன்” என்றவன் யாரை பலோவ் செய்ய வேண்டும் என்பதை கூற, நால்வரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.

“என்ன பயமா இருக்கா?” வெற்றிமாறன் புன்னகையோடு கேட்க 

“யாரா இருந்தா என்ன சார்? வேலைனு வந்தா இறங்கி செய்வோம்” என்றான் பஷீர். 

“வேணும்மா நாங்களே முடிச்சிடவா?” ராபினும், செல்வமும் மாறி, மாறி கேட்டவாறே துப்பாக்கிகள் வைத்திருக்கும் கார்போர்டை பார்த்தனர்.

“இல்ல. அவன் என் கையாலதான் சாகனும். அவனை அலுங்காம, குலுங்காம தூக்கிட்டு மட்டும் வாங்க. அது போதும். அவன் கிட்ட பெர்சனலா நான் தீர்த்துக்கு வேண்டிய கணக்கு இருக்கு” என்றவன் ஷாலினியை  காண செல்லும் முன் ராபினை அழைத்து “லண்டன்ல இருக்குற ஒருத்தன ட்ராக் பண்ணனும் இது அவன் போட்டோ” என்று கொடுக்க, ராபினும் தலையசைத்து பெற்றுக்கொண்டவன் “பத்து நிமிஷம் பாஸ்” என்றான்.

என்னால வைட் பண்ண முடியாது. என் நம்பர். புது நம்பர். போலீஸ் நம்பர்டா…” தன்னுடைய அலைபேசி என்னை கொடுத்தவன் சிரித்தவாறே வெளியேறினான்.

நிற்காமல் பறந்த வண்டி நின்றது ஷாலினியின் வீட்டின் முன்னால்தான். மணியை அழுத்தியவன் புன்னகை முகமாகவே நிற்க கதவை திறந்த ஷாலினி அவனை கண்டு ஆனந்த அதிர்ச்சியில் அவனை கட்டிக் கொண்டாள்.

“எனக்கு தெரியும் வெற்றி நீ என்ன தேடி வருவான்னு” கண்ணீரோடு சொல்ல

“நான்தான் உன்ன இங்க தனியா இருக்காத, ராகவேந்திரா கூட போய் இருன்னு சொன்னேனே. சொன்ன பேச்சு கேட்க மாட்டியா?” அதே புன்னகை மாறாமல் கேட்டான்.

“முதல்ல உள்ளவா” என்றவள் அவன் தன்னை இடது கையால் அணைத்திருப்பதைக் கண்டு அவன் வெற்றியாகத்தான் வந்திருக்கின்றான் என்றும். தான் அவனை வெற்றி என்று அழைத்ததில் கோபம் கொள்ளவில்லையென்றும் புரிந்து போக, “வெற்றி உனக்கு எல்லாம் நியாபகம் வந்துருச்சா… என்று கேட்டாள்.

“உள்ள போய் பேசலாம் ஷாலு. இந்த லூசு இத்தனை நாளா உன்ன பிரிஞ்சி இருந்துட்டேன். கோபப்படாம, தண்டனை கொடுக்காம என்ன கொஞ்சம் கவனி டி… அப்பொறம் பேசலாம்” என்று அவள் இதழ்களை சிறை பிடிக்க, ஷாலினியும் அவனோடு ஒன்றினாள்.

தன் கணவன் வெற்றியாக இருக்கின்றானா? மாறனாக இருக்கின்றானா? என்று ஷாலினி அறிந்துகொள்வதே அவனது பழக்கவழக்கங்களால்தான். வெற்றி இடதுகை பழக்கமுடியவன். மாறன் வலதுகை பழக்கமுடியவன். அதை வைத்துதான் அவளால் பிரித்தறிய முடிந்தது. இதுநாள்வரை குழப்பமில்லாமல், மாறனிடம் மாட்டிக்கொள்ளாமல் வாழ முடிந்தது.

அன்று வெற்றி ஷாலினியை விட்டு செல்லும் பொழுது அவனது துணிப்பையை அவன் சுமந்து சென்றது இடதுகையில் அதனால்தான் அவள் அவனை வெற்றி என்றே அழைத்தாள். மாறனுக்குள் இருக்கும் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவதனால் இருவருடைய பழக்கவழக்கங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து இருந்த நேரம் அது. ஷாலினியால் மாறனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

கூடல் முடிந்தும் தன்னை அணைத்துக் கொண்டிருப்பவள் ஏறிட்டவன் “ஏன் இங்கயே இருந்த? போய் உன் மாமா வீட்டுல இருந்தாதான் என்னவாம்” கோபம்கொள்ளவுமில்லை, முறைக்கவுமில்லை, சிரிப்போடுதான் கேட்டான்.

“ஏன் புருஷன் என்ன தேடி வருவான் அதான் வைட் பண்ணேன்”

“ஆமா வைட் பண்ணுறவதான் ஒரு போன் கூட பண்ணாம இருந்தாளா?” அவள் நெற்றியில் முட்ட

“நான் போன் பண்ண போய் அந்த லூசு மாறன் எனக்கு டிவோர்ஸ் கொடுத்தாலும் கொடுப்பான். அதான் பண்ணல” என்றவள் ஏன் வெற்றி. நீ மறுபடியும் மாறனா மாறிடுவியா?”

“தெரியல. மாறினாலும் எல்லாம் நியாபகத்துல இருக்கும். அதனால எந்த பிரச்சினையும் வராது” தூங்கி எழுந்தால் என்னவாகுமோ என்ற அச்சம் வெற்றிக்குள்ளும் இருந்தது.

“பரவால்ல விடு மாறனா மாறினா அவனையும் லவ் பண்ண முயற்சி செய்யிறேன்” என்று சிரிக்க,

“ஏய்…” அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “ஆமா நான் வெற்றி என்று நீ எப்படி நம்பின? எனக்கே என்ன தெரியல. என்ன நான் தேடி கண்டுபிடிக்கவே இத்தனை நாள் ஆகிருச்சு” பெருமூச்சோடு சொன்னவனுக்கு இறந்தது மணிமாறன் எனும் பொழுது பெரும் கவலையாக இருந்தது.

“உன் கண்ணுல பார்த்த காதல்தான். அத நீ பிரைன் டிரான்ஸ்பர் அது, இது என்று குழப்பிட்ட. மாறனுக்குள்ள நீ இருக்குறத பார்த்ததும். எனக்கு நீ வேணும்னு சுயநலமா முடிவு பண்ணி உன்ன உயிர்ப்போடு கொண்டுவர, அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினச்சேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னே பர்ஸ்ட்நைட் முடிஞ்சிருச்சு. அன்னைக்கி காலைல உன் முதுகுல இருந்த கோடான தளும்ப பார்த்தேன்.

உனக்கு நிஜாபாகம் இருக்கா? ப்ரவீனோட நீ உருண்டு புரண்டு சண்டை போட்டதுல மரத்துல மோதி கூரான வேர் கிழிச்சிருச்சு. ரெண்டு தையல் கூட போட்டாங்களே. காயம் ஆறி, வடு மறைஞ்சாலும். மெல்லிய கோடா கொஞ்சம் தெரியும். என்னதான் ஐடென்டிகள் ட்வின் என்றாலும் பிறந்த பின்னால உண்டாக்குற காயம் எல்லாம் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வருமா என்ன?”

“அப்போ ஏன் என் கிட்ட நான் மாறன் இல்ல. வெற்றி மாறன் என்று சொல்லல”

“உனக்கு ஏதாவது ஆகிடுமோ என்கிற பயம்தான். அது மட்டுமில்ல. எனக்கு உன் அப்பா மேல நம்பிக்கை இல்ல. நீ கெட்டவன் என்று உன்ன கொன்னு மணிமாறன் காப்பாத்த நினைச்சி அவரோட ஆராய்ச்சியை சக்ஸஸ் பண்ண துணிஞ்சவரு. இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சா என்ன செய்வாரோ என்ற பயம். அவர் சொன்ன அதிர்ச்சியினால் உனக்கு பிரலைஸ், இல்லனா, ஹார்ட் அட்டாக் வரும் என்ற பயம். அதனாலதான் லண்டன் போய் அங்க இருந்து உனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்னு முடிவெடுத்தேன். ட்ரீட்மெண்ட் சரிவரலானாலும். தனியா இருந்தா நீ நீயாகவே இருப்ப” அவனை இறுக அணைத்தவாறே பேசினாள் ஷாலினி.

வெற்றிக்கு ஒன்று மற்றும் நன்றாக புரிந்தது அது ஷாலினி அவனை எந்த அளவு காதலிக்கிறாள் என்று. அவள் அவன்மீது வைத்த காதல்தான் அவனை இன்று மீட்டுக் கொண்டு வந்திருந்தது. அவனை அணைத்துக் கொண்டவன் “ஷாலு மாலினியை கொன்னவன கண்டு பிடிச்சிட்டேன். பசங்க போன் பண்ணா நான் போகணும்”

“பசங்களா? யாரு அவங்க?” புரியாது கேட்டாள்.

“ஓஹ்… உனக்கு அவங்கள பத்தி தெரியாது இல்ல. முதல்ல என்ன பத்தி என்ன தெரியும்” புன்னகைத்தான் வெற்றிமாறன்.

Advertisement