Advertisement

அத்தியாயம் 21

ஷாலினி கண்விழிக்கும் பொழுது மாறன் அவள் அருகில் இல்லை. குளியலறையில் இருப்பான் என்று நினைத்தவள் மீண்டும் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவன் அருகில் இல்லாமல் தூங்க கூட முடியவில்லை.

“சீனியர் சீக்கிரம் வா… உன்ன கட்டிக்கிட்டு தூங்கணும்” என்று இவள் குரல் கொடுக்க, எந்த பதிலும் வராது போகவே போர்வையை விலக்கியவள் குளியலறை பக்கம் கண்களை செலுத்த கதவு பூட்டி இருந்தாலும், தண்ணீர் சத்தம் கேட்கவில்லை என்றதும் மாறன் உள்ளே இல்லை என்பதை புரிந்துக் கொண்டு அலைபேசியில் நேரத்தை பார்த்தாள்.

காலை எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருக்க, “எங்கே போனான் இவன்? அதுவும் என் கிட்ட சொல்லாம? இந்த குளிருல?”

நேற்றிரவு ஹேக்கரை பற்றி பேசியதில் ஷாலினிக்கு தனியாக இருக்கவே பயமாக இருந்தது. வீட்டுக்குள் நுழைந்து கேமரா பொறுத்துவான் என்று மாறன் கூறி இருக்க, “அப்போ எங்களை பின் தொடர்ந்து இங்கேயும் வந்துடுவானா? இங்கேயும் கேமரா வச்சிருப்பானா?”

மாறனை நெருங்காமல் விலகி நிற்பவளை அள்ளி அணைத்தவன் “இங்க வந்த உடனே செக் பண்ணிட்டேன். எந்த கேமராவும் இல்ல. நீ நிம்மதியா இருக்கலாம்” என்றான்.

அதன்பின்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. தனக்கு ஆபத்து இல்லையென்றதும், தன்னை தனியாக அறையில் விட்டு விட்டு வெளியே சென்று விட்டானா? எங்கே சென்றிருப்பான்? இந்த ஊரு அவன் வளர்ந்த ஊரு. செல்வதற்கா இடமில்லை என்பது நியாபகம் வர மாறனுக்கு அழைப்பு விடுத்தால் அவன் அலைபேசியை அறையிலையே விட்டு சென்றிருந்தான்.

ஷாலினிக்கு கொஞ்சம் பயமாக கூட இருந்தது. மாறனை அந்த ஹேக்கர் கடத்தி விட்டானோ என்று கூட எண்ணினாள். தெரியாத ஊரில் யாரிடம் உதவி கேட்பது என்று வெடவெடத்தவள் கட்டிலை விட்டு இறங்கும் பொழுதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் மாறன் ஜோகின் செல்வதாக எழுதி வைத்து விட்டு சென்றிருப்பது கண்ணில் பட்டது.

“அடப்பாவி இந்த குளிருல என்னொரு ஜாகிங் வேண்டி கிடக்கு? இழுத்து போர்த்திக்கிட்டு தூங்க வேண்டாமா?” சிரிப்பு கூட வந்தது.

யார் என்றே தெரியாத அந்த ஹேக்கரால் தான் எவ்வளவு பயந்து விட்டோம் என்பது நன்றாக புரிந்தது. “கண்ட கண்ட சினிமாவை பார்த்து விட்டு என்னமா யோசிக்கிற ஷாலு” தன்னையே திட்டிக் கொண்டாள். 

ஷாலினிக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மாலினியை கொன்றவன் அவளை ஒன்றும் செய்யவுமில்லை. அவள் போனை ஹேக் பண்ணவுமில்லை. வீட்டில் கேமரா பொருத்தி இருக்கவுமில்லை. அவன் மாலினியை கண்காணித்து கொலை செய்யவில்லை. சடனாக எடுத்த முடிவு. காரணம் தெரியவில்லை.

தொலைபேசி வழியாக டீ ஆடர் செய்தவள் முகம் கழுவ சென்றாள்.

முகம் கழுவி விட்டு வந்தவளுக்கு மாலினியின் நியாபகம்தான். அவள் இருந்திருந்தால் ஷாலினியின் மாலை பொழுது போரடிக்காமல் சென்றிருக்கும். அவர்களின் சின்ன வயது நியாபகங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தவள் டீயும் வந்து சேர, மணியை பார்த்தவள் மாறனை காணாமல் சோர்வானாள். 

டீயை பருகிக் கொண்டிருக்கும் பொழுது மாறன் வந்து சேர்ந்தான்.

“என்ன சீனியரே காலைல எங்க போய்ட்டிங்க? பழக்கத்தை இங்க வந்தும் மாத்த முடியாது போலயே” டீயை கப்பில் ஊற்றிக் கொடுத்தவாறு கூற,

“என்ன பண்ணுறது ஷாலு” என்றவனின் பார்வையோ அவள் தன்னை சந்தேகப்படுகிறாளா? என்று ஆராய்ந்தான். ஏனினில் அவன் அவளுக்கு சொல்லாமல் சென்ற பயணம் வேறல்லவே.

ஆனால் ஷாலினியோ மாலினியின் நினைப்பாகவே இருந்தாள்.

“என்ன பொண்டாட்டி காலையிலையே என்ன யோசனை?” ஷாலினி கொடுத்த டீயை வாங்கிக் கொண்டவன் அவள் தலையை கோதிவிட்டவாறே கேட்டான்.

“அக்காவை பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தேன். அவளை கொன்னவனை எப்படி கண்டு பிடிக்க போறேன்னு தெரியல” சோகமாக சொன்னாள்.

உன் அக்கா போன் ரெகார்ட் கூட தரவா செக் பண்ணிட்டேன் பி.சி.ஓல இருந்து ஒரு கால் வந்திருக்கு. அதுவும் ஒரே ஒரு தடவ. அந்த ஏரியாவுல சீசீடிவி இல்லாததுனால அக்காக்கு போன் பண்ணது யார்னு தெரியல. ஆனா அதற்கு பிறகு உன் அக்கா யாருக்கு போன் பண்ணி இருக்கா தெரியுமா?”

“யாருக்கு?” புரியாது கேட்டாள் ஷாலினி.

“வெற்றிக்கு”

“வெற்றிக்கா…?” என்றவள் அவனை ஆராய்ச்சியாக பார்த்து விட்டு “வெற்றிக்கு எதற்கு போன் பண்ணினாள்?”

“வெற்றியை அவ சந்திச்ச பிறகுதான் உன் கிட்ட அவனை பத்தி நல்ல விதமா சொல்லி இருக்கணும்” என்றான் மாறன்.

“ஒருவேளை அப்படியும் இருக்குமோ? வெற்றி நல்லவன் என்று கூறி சில நாட்களிலையே அக்கா இறந்து விட்டாளே” யோசனையாக மாறனை ஏறிட்டவள் “அக்கா கொலைக்கும் வெற்றிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”

“நிச்சயமாக?”

“வெற்றிதான் அக்காவை கொன்னுடதாக சொல்லுறியா?” மாறனை முயன்ற மற்றும் முறைத்தாள் ஷாலினி.

அவளை சிரிப்போடு பார்த்தவன் “நான் அப்படி சொல்லல. எதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்னான்னு கண்டு பிடிக்கணும். அப்போ உன்ன பத்தி பேச சந்திச்சிக்கிட்டாங்க என்றுதான் நினச்சேன். ஆனா இப்போ ஏன் அந்த போன் காலுக்கு பிறகு சந்திச்சு இருக்கக் கூடாது என்று தோணுது” மாறனுக்கு சில காட்ச்சிகள் தோன்றி மறைந்ததாலையே அவன் இப்படி கூறி இருந்தான். அதில் மாலினியும், வெற்றியும் பேசிகொண்டவைகள் அவ்வாறு இருக்க, மாறனுக்கு அவர்கள் பேசியவைகள் சரியாக நியாபகத்தில் இல்லை.

“நீ இப்போ என்ன சொல்ல வர? எனக்கு ஒண்ணுமே புரியல” குழம்பினாள் ஷாலினி.

“அடியேய் பொண்டாட்டி நாம இங்க வந்தது கேஸ இன்வெஸ்டிகேஷன் பண்ண இல்ல ஹனிமூனுக்கு. வெளில எங்கயும் போக எனக்கு மனசு இல்ல. நா பேசாம ரூம்லயே இருக்கலாம்னு இருக்கேன்” கண்சிமிட்டி சொல்ல

அவனை மொத்தியவள் “ஒழுங்கு மரியாதையா என்ன வெளிய கூட்டிட்டு போற” என்று மிரட்ட அவளுக்கு பயந்தவன் போல் பாவலா செய்தவன் அவளை இழுக்காத குறையாக அறைக்குள் நுழைந்தான்.

காலை உணவுக்கு பின் இருவரும் கிளம்பி வெளியே சென்றனர். ஊட்டியில் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஷாலினி சொல்ல மாறன் மறுக்கவில்லை.

மாறன் மாறனாக இருந்தால் அவன் வளர்ந்த ஊர் அவன் படித்த பாடசாலை என்று எவ்வளவோ இடங்களுக்கு ஷாலினியை அழைத்து சென்றிருக்க முடியும், ஆனால் அவன் அவளிடம் அதை பற்றியெல்லாம் பேசவே இல்லை. ஷாலினிக்கு எப்பொழுதும் மாறனை பற்றிய சிந்தனை இல்லை. அவள் அவனிடம் அவன் படித்த பாடசாலை பற்றியோ, அவன் சுற்றிய இடங்களை பற்றியோ கேட்கப்போவதில்லை. 

இரவு உணவுக்கு பின் அறைக்கு வருபவர்கள் இரவு பொழுதை சந்தோசமாக கழித்து விட்டு உறங்க செல்கின்றனர். காலை ஆறுமணிக்கு எழும் மாறன் ஜோக்கிங் செல்வதாக வெளியே சென்றால் எட்டு மணி தாண்டி வந்து விடுவான். காலை உணவை உட்கொள்பவர்கள் வெளியே கிளம்பி சென்று விடுவார்கள். ஒருவாரம் தங்கலாம் என்று வந்தவர்கள் இரண்டு வாரம் ஊட்டியில் கழித்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.

வீட்டுக்குள் நுழையும் முன்னே மாறனின் கையை இறுக பற்றிக் கொண்டவள் ஹேக்கர் கேமரா பொருத்தி இருப்பானோ என்று கேட்க, வீடு முழுக்க பரிசோத்தித்த மாறன் இல்லை என்ற பின்தான் வீட்டுக்குள் நுழைந்தாள் ஷாலினி.

ஷாலினி வளமை போல் பாடசாலை சென்று வர, மாறன் காவல்நிலையம் சென்று வந்து கொண்டிருந்தான்.

மாறனோ எப்படியாவது உண்மையான ஹேக்கரை பிடிக்க வேண்டும் என்று அவன் எப்படியெல்லாம் யோசிப்பான். என்னவெல்லாம் செய்வான் என்று சிந்தித்துக் கொண்டிருக்க, ஷாலினியோ ராகவேந்திரனின் உதவியோடு மாறனை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்று குடியேற திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.  

பூபதி தன்னை வந்து பார்க்குமாறு மாறனுக்கு அலைபேசி அழைப்பு விடுக்க தந்தையை காண சென்றவனுக்கு அவன் வெற்றியாக மாறும் பொழுது மயங்கி விழவில்லை என்ற நற்செய்தியை கூறியவர் தலைவலி வருகிறதா என்று கேட்டார்.

“இல்ல இப்போ எல்லாம் தலைவலி வரது இல்ல. டேப்ளட் போடுறதையே நிறுத்திட்டேன்” என்றவன் தான் மயங்கி விழுவதில்லை என்பது தனக்கு தெரியும் என்பதையும் கூறி அவரது சிகிச்சை பலனில்லை என்றான்.

“ஷாலினி அப்படி என்ன மெடிசின் கொடுக்குறா உனக்கு?” ஷாலினியை பற்றி விசாரித்தவருக்கு ராகவேந்திரனை பற்றியும் அறிய நேர்ந்ததால் வெளிநாட்டிலிருந்து ஏதாவது மருந்து, மாத்திரைகளை கொண்டுவந்து கொடுக்கிறாளோ என்ற சந்தேகம் வந்திருக்கவே இந்த கேள்வியை கேட்டார்.

“ஷாலினி எனக்கு அன்ப மட்டும்தான் கொடுக்குறா. எந்த சூழ்நிலையிலும் கூட இருக்கிறா. விட்டுட்டு போக நினைக்கல” ஒருகணம் வெற்றியாக மாறித்தான் பதில் சொன்னானோ மாறனை பூபதி துணுக்குற்று பார்க்க,

“யோகா, தியானம் என்று மனச சாந்த படுத்த முடிஞ்ச என்னக்கு மூளையை கட்டுப்படுத்த வழி தேடிகிட்டு இருந்தப்போ எங்க ஆசிரமத்து வந்த வர்மக்கலை தெரிஞ்ச ஒருத்தர் அவரோட குருநாதர் இந்த கொஞ்சம் நாளா ஊட்டில உள்ள ஆஸ்ரமத்துலதான் தங்கி இருக்கார்னு சொன்னாரு. ஷாலினியோட ஹனிமூன் போன இடத்துல ரெண்டு வாரமா அவர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன்” என்றவன் அமைதியாக தந்தையை பார்த்திருந்தான்.

“என்ன பைத்தியக்காரத்தனம்?” பூபதி கோபப்பட

“இங்லிஷ் மெடிசினால குணப்படுத்த முடியாது என்று கை விட்ட நிறைய நோயாளிகளை மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் என்று நம்ம பரம்பரை மருத்துவம்தான் குணப்படுத்தி இருக்கு. இதுவும் அது மாதிரிதான். நான் மயங்கி விழாம இருக்கக் காரணமே இங்க இருந்தவரோட வர்மக்கலையை உபயோகிச்சு அவர் என் தலை பகுதில பண்ண ட்ரீட்மண்ட் தான். முறையா பண்ணா ட்ரீட்மண்ட். அதையே எதிரியையும் வீழ்த்தலாம்”

“ஆனா இப்போவும் வெற்றி உனக்குள்ள தோன்றிகிட்டுதானே இருக்கான்” பூபதி இதெல்லாம் சரிப்பட்டு வரத்து என்றே பேச

“போக போக சரியாகும்” என்றவனுக்கோ அவன் ஷாலினியோடு இருக்கும் பொழுது வெற்றியாக மாறும் காலை பொழுது சில நேரம் நியாகத்தில் இருந்தது. அதை பற்றி கூறாமல் “மூளை எவ்வளவு சென்சிடிவ்வானது என்று நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியதில்லை. என்ன காப்பாத்த வெற்றியோட மூளையை பொறுத்திட்டீங்க. அதுவும் அவனை அநியாயமா கொன்னுட்டு. என்னதான் நீங்க அவனை காப்பாத்த முடியாது என்று சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. நான் டாக்டர் வஜ்ரவேல் கிட்ட பேசினேன். ஹார்ட் ட்ரான்ஸ்பர் பண்ணா அவன காப்பாத்தி இருக்க முடியும் என்று சொன்னாரு. என் ஹார்ட்ட கொடுத்து அவன காப்பத்தி இருக்கணும். அத பண்ணாம, உங்க ஆராய்ச்சி சக்ஸஸ் என்று சொல்லிக்கவே நீங்க அவன் மூளையை எனக்கு பொறுத்திட்டீங்க. இப்போ அவன் எனக்குள்ள ஆட்டம் காட்டினா அவனை இல்லாமலாக்க பாக்குறீங்க. அதுவும் அவன் உசுரோட இருக்கும் பொழுதே அவன் மூளையை அறுத்தெடுத்து. அம்மா கிட்ட சொன்னா உங்க சோலி முடிஞ்சிடும். ஏன் சொல்லாம இருக்கேன்னா… வயசான காலத்துலயாவது நிம்மதியா அவங்க கூட இருந்துட்டு போய் சேருங்க. நான் என்ன பண்ணுறேன் என்று நோண்டிகிட்டு இருக்காதீங்க. நான் ஒன்னும் குழந்தை இல்ல. புரியுதா?” ஒரு கணம் வெற்றியாகவும், மறுகணம் மாறானகாவும் பேசிவிட்டு செல்பவனை அதிர்ச்சியாக பார்த்திருந்தார் பூபதி.

பூபதியை சந்தித்து விட்டு நேராக மாறன் சென்றது டி.ஐ.ஜியை சந்திக்கத்தான்.

“வா மாறன். என்ன ஹனிமூன் போயிட்டு வந்துட்டியா?”

“ஆமா சார். என்ன விஷயமா என்ன வர சொன்னீங்க? ஏதாவது புது கேஸ் வந்திருக்கா?”

“நமக்கு ஒரு கேஸ் முடிய ஒரு கேஸ் வந்துகிட்டே தானே இருக்கும். கேஸும் வந்திருக்கு. இந்த கேஸ நான் தீரன் கிட்ட கொடுத்துடுறேன். உனக்கு இப்போதான் கல்யாணம் ஆகி இருக்கு. புது மாப்பிளை வேற, கொஞ்சம் நாள் லீவ் எடு. உனக்கு டி.எஸ்.பியா ப்ரோமோஷன் கிடைக்க போகுது. அந்த நல்ல செய்தியை நானே உன்கிட்ட சொல்லலாம்னுதான் வர சொன்னேன்” புன்னகை முகமாக சொன்னாலும் டி.ஐ.ஜியின் முகம் யோசனையாகவே இருந்தது.

“ரொம்ப சந்தோசம் சார். எல்லாம் நீங்க கொடுத்த ஹேக்கர் கேஸாலதான். ஒருவழியா கேஸ் முடிஞ்சிருச்சு. இனி எந்த பிரச்சினையும் இல்ல” பதில் புன்னகை செய்தான் மாறன்.

“ஆனா நீதான் இந்த கேஸ் இன்னும் முடியல உண்மையான ஹேக்கர் வெளியேதான் இருக்கான். ஏதாவது பண்ணுவான்னு பினாத்திக்கிட்டு இருந்த” என்று முறைக்க,

அவர் சொன்னதை கண்டுகொள்ளாமல் “சந்தேகப்படுறது போலீஸ்காரன் புத்தி இல்லையா சார். எனக்கும் ஆரம்பத்துல அப்படியொரு சந்தேகம் வந்ததுக்கு காரணம். ஹேக்கர் இந்த பொண்ணுங்களோட நிப்பாட்டாம மேலும் பொண்ணுங்களை டாச்சர் பண்ணுவான் அதற்காகத்தான் நம்ம டிபார்ட்மண்ட்டுல இருக்குற ஹயர் அபிஷியல்சோட வீட்டு லேடீஸ் போன் எல்லாம் ஹேக் பண்ணி இருக்கான்னு. ஆனா இந்த பொண்ணுகளை தவிர வேற பொண்ணுங்க யாரும் பாதிக்கப்படவுமில்லை. கொலை செய்யப்படவுமில்லை. நான் கூட உண்மையான ஹேக்கர் என்ன பாலோவ் பண்ணுவான்னு நினச்சேன். அப்படி ஏதும் நடக்கல. சோ கரிகாலன்தான் அந்த ஹேக்கர். நோ டவுட். கேஸ் க்ளோஸ்” என்றவனின் புன்னகை சொன்னது இதை நான் விடப்போவதில்லையென்று.

“வெறி குட் ப்ரோமொஷனோட புது கேஸ் வரும். அதுவரைக்கும் புது மாப்பிள்ளையா வீட்டுல இரு” என்று மாறனை வழியனுப்ப அவனும் சிரிப்போடு விடைபெற்றான்.

வீட்டுக்கு வந்தால் ஷாலினி இல்லாமல் போரடித்தது. அவள் பாடசாலை சென்றிருக்க, வீடு வர இன்னும் நேரமிருக்கவே என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. பேசாமல் தூங்கலாமா என்று பார்த்தால் தூக்கம் வந்தால் தானே தூங்க முடியும். டீவியை போட்டு அமர்ந்துகொண்டான்.

காதல் பாடல்கள் ஒளிபரப்பப்பட ஷாலினியின் நியாயம்தான். ஊட்டியிலிருந்து வந்த மறுநாளே லண்டனுக்கு ஹனிமூன் செல்லலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“என்னடி அவசரம். இப்போதான் தானே ஊட்டிக்கு போயிட்டு வந்தோம்” அவள் நெற்றியில் முட்டியவாறு இவன் கேட்க

“என் அவசரம் என்னனு உனக்கு புரியாது” இவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல

வாயில் விரல் வைத்து கடித்தவாறே யோசித்தவன் “ஓஹ்.. அடுத்த கேஸ ஐயா கைல எடுக்குறத்துக்கு முன்னாடி அம்மா பாப்பாவை பத்தி யோசிக்கிறீங்களா?” இவன் ஒரு அர்த்தம் கண்டு பிடித்தான்.

“சீ.. போடா..” எரிச்சலாக ஷாலினி அவனை தள்ளிவிட்டு உள்ளே செல்ல,

அவள் வெக்கத்தில் செல்வதாக நினைத்து மாறன் அவளை இழுத்து கைகளில் ஏந்திக் கொண்டவன் “அந்த வேலைய வீட்டுலையே பார்க்கலாம்டி” அவள் திமிரத் திமிர அறைக்குள் செல்ல ஷாலினி அவள் தோள்களில் அடிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் ஒவ்வொரு இரவும் லண்டன் செல்லலாம் என்று அவள் ஆரம்பிப்பதும், இவன் மறுப்பதும் வாடிக்கையாக அவள் முகத்தை தூக்கிக் வைத்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

மாறனுக்கு லண்டன் செல்ல மனமில்லாமல் இல்லை. செல்ல முன் மாலினியை கொன்ற அந்த ஹேக்கரை கண்டு பிடித்து ஷாலினியின் முன் நிறுத்த வேண்டும். அவள் நிம்மதியடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆனால் ஷாலினிக்கு அந்த ஹேக்கரை விட, ன்ன சகோதரியை கொன்றவனை விட தன் காதல் முக்கியமாக இருந்தது. தன்னுடைய வெற்றி முக்கியமாக தோன்ற அவனை அழைத்துக் கொண்டு லண்டன் சென்று விட வேண்டும் என்ற முடிவோடு மாறனிடம் போராடலானாள்.  

ஒவ்வொரு சேனலாக மாற்றியவனுக்கு பார்க்க ஒன்றும் சரியாக அமையாததால் ஏதாவது திரைப்படம் பார்க்கலாம் என்று  சீடிக்கல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கப்போர்டை திறக்க, புதிதாக வந்த பார்சல் கண்ணில் பட்டது.

“என்ன இது? கவர் கூட பிரிக்கப்படாமல் இருக்கு? ஒருவேளை ஷாலினி எனக்கு சப்ரைசாக ஏதாவது வாங்கி வச்சிருக்காளோ?” என்று நினைத்தவன் அது ஷாலினியின் பெயரில் கொரியரில் வந்திருக்கவே அதை பார்க்கலாமா? வேண்டாமா? என்று ஒரு கணம் சிந்தித்தான்.

பார்க்கலாம் என்று முடிவெடுத்தவன் பொறுமையாக பிரிக்கலானான்.

அதில் இருந்தவற்றை பார்த்தவனுக்கு தன் மீதும், ஷாலினியின் மீது கோபம் கோபமாக வந்தது.

அதில் லண்டன் சென்று குடியேற தேவையான அனைத்து ஆவணங்களும், இருவரினதும் கடவுச்சீடுக்களும் மற்றும் விசா என அனைத்தும் இருந்தன.

ஹனிமூன் செல்லலாம் என்று கூறுபவள் எதற்காக குடியேற இத்தனையும் செய்தாள் என்று மாறனுக்கு புரியவில்லை. அவள் லண்டன் செல்லலாம் என்பதன் காரணம் இதுவா? தான் அழைத்தால் வரப்போவதில்லை என்று தன்னை சூட்சமமாக அழைத்து செல்ல போகிறாளா ஏன்?

சிந்தித்துப் பார்த்தவனுக்கு அவன் வெற்றியாகத்தான் அவளோடு இருப்பதும், ஷாலினி அவனையல்ல வெற்றியைத்தான் காதலிக்கிறாள் என்பதும் தெள்ளத்தெளிவாக புரிந்து போனது. அவன் அவளை காதலிப்பது வரமல்ல “சாபம். சாபம். சாபம்” வீடே அதிரும்படி கத்தினான் மாறன்.

எத்தனை முறை அவளிடம் சொல்லி இருப்பான். “நீ என் மேல வச்சிருக்கிற காதல் எனக்கு கிடைத்தது வரம் என்று?  இல்ல. இல்ல. இந்த காதல் எனக்கு கிடைச்ச சாபம்”

தனக்குள் இருக்கும் வெற்றியை மாறன் முற்றாக அழிக்க நினைக்கவில்லை. கட்டுப்படுத்தத்தான் நினைத்தான். அதற்காத்தான் வர்மக்கலையை பயன்படுத்திக் கொண்டான். அதனால் அவனுக்கு வெற்றியாக மாறும் பொழுது நடப்பவைகளை நியாபகத்தில் இருக்க ஆரம்பித்ததில் ஷாலினி அவன் மாறனாக இருப்பதை விட வெற்றியாக இருக்கும் பொழுது காதலை எவ்வாறெல்லாம் கொட்டுகிறாள் என்று உணர்ந்துகொண்டான்.

“அவள் என்னை காதலிக்கவே இல்ல. வெற்றியை மட்டும்தான் காதலிச்சு இருக்கா. ஐ. ஹேட் யூ வெற்றி” அணிந்திருந்த சட்டையை கிழித்துக் கொண்டவன் ஒரு பத்தியம் போல் கதறினான்.

ஷாலினி வீட்டுக்கு வரும் பொழுது வீடே அமைதியாக இருந்தது. மாறனுக்கு இன்று எந்த வேலையும் இல்லை என்று தெரியும். ஆனால் அவளால்தான் நேரங்காலத்தோடு வீட்டுக்கும் வர முடியவில்லையென்ற கவலையோடு வீடு வந்தவள் வாசலில் ஆவணங்கள் அனைத்தும் கலைந்து கிடைப்பதைக் கண்டு துணுக்குற்றாள்.

அவள் பாடசாலைக்கு கிளம்பும் பொழுதுதான் ராகவேந்திரன் அனுப்பிய பார்சல் வந்தது. அதை மாறன் பார்த்து விடக் கூடாது என்றுதான் வாசலில் உள்ள கப்போர்டில் வைத்தாள். இது எப்படி அவன் கண்ணில் பட்டது?

எல்லா உண்மையையும் அறிந்துக் கொண்ட  மாறனுக்கு எப்படி புரிய வைப்பது ஷாலினிக்கு தலையே சுற்றியது.

ஷாலினி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மாறன் அறையிலிருந்து அவனது துணிப்பையோடு வெளிப்பட்டான்.

“வெற்றி எங்க போற?” என்று இவள் கேட்க,

“நான் வெற்றி இல்ல ஷாலினி மாறன். என்னால வெற்றியா உன் கூட வாழ முடியாது. நீ என்ன மாறனாக உன் வாழ்க்கைல ஏத்துக்கம் மாட்ட. நாம சேர்ந்து வாழறது சாபம்” அவள் முகம் பார்த்து பேசினால் அவளை பிரிய முடியாது என்று அறிந்தவன் அவளை பார்க்கவே இல்லை.

“என்னடா பேசுற?” ஷாலினியின் தொண்டை அடைத்தது. வார்த்தை வராமல் திணறியவள் அவனை தொட

அவள் கையை விலக்கியவன் “உடம்ப பாத்துக்க, ராகவேந்திராகிட்ட சொல்லிட்டேன். தனியா இருக்காதா. உன்ன வந்து கூட்டிகிட்டு போவாரு” என்றவன் அவளை திரும்பியும் பாராது வீட்டை விட்டு சென்று விட்டான்.

செல்லும் அவனின் பின்னால் “வெற்றி… வெற்றி…” என்று அழைத்தவாறே ஓடிய ஷாலினி வாசல் படியிலையே விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

 

Advertisement