Advertisement

அத்தியாயம் 20

கரிகாலனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைத்து கேஸையும் மூடி ஒரு மாதம் சென்றிருந்தது.

இந்த ஒரு மாதத்தில் மாறனின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

ஷாலினிக்கும் மாறனுக்கும் திருமணமான செய்தி பூபதியும், லதாவும் ஒரு திருமணத்துக்கு போன போதுதான் அறிந்துக் கொண்டிருந்தனர். அதுவும் டி.ஐ.ஜியின் மூலம்.

டி.ஐ.ஜிக்கு லதாவை நன்றாகவே தெரியும். நலம் விசாரித்தவர் “என்னம்மா பையனுக்கு ஜாதக தோஷம் இருக்கா? இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிடீங்க?” என்று கேட்டதும்தான் லதா முழிக்கலானாள்.

என்ன சொல்கிறார் இவர் என்று லதா உளறும் முன் பூபதி என்ன நடந்தது என்று அறியாவிட்டாலும் “ஆமாம்” என்று சமாளித்து வீடு திரும்பி இருந்தார்.

கொஞ்சம் நாட்களாக இரவில் மாறன் வீட்டுக்கு வருவதில்லை. காவல்நிலையம் சென்றாலும் அவனை காண முடியாது. பகல் பொழுதில் திடிரென்று வீட்டுக்கு வருபவன் லதாவின் கையால் உணவுண்டு விட்டு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவான். அப்பொழுதாவது திருமணமான விஷயத்தை கூறி இருக்கலாம். அன்னை வருத்தப்படுவாள் பிறகு கூறிக்கொள்ளலாம் என்று மறைத்து விட்டான் மாறன்.

கேஸ் விஷயமாக அலைகிறான் என்று நினைத்தால் திருமணம் செய்துகொண்டானா? தங்களுக்கு சொல்லாமல்? இதை லதாவால் முதலில் நம்பக் கூட முடியவில்லை. சொன்னது டி.ஐ.ஜி என்றதும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மாறன் இப்படியொரு காரியத்தை செய்து விட்டான் என்றதும் தாங்கவே முடியவில்லை. கணவனிடம் விசாரிக்க சொன்னவள் அவன் ஷாலினியை திருமணம் செய்திருப்பதை அறிந்து மேலும் அதிர்ந்தாள்.

“ஏங்க இப்படி பண்ணினான்? அவன் கல்யாணத்த எப்படி எல்லாம் பண்ணனும் என்று கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டானே? அந்த பொண்ணத்தானே அவனுக்கு நாம கேட்டுப் போனோம். அவளும் மாட்டேன்னு சொன்னா. ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா நாம குறுக்க நிற்போமா? சொல்லுங்க? சந்தோசமா ஊரக் கூட்டி கல்யாணம் பண்ணி வைப்போமே” கண்ணீர் சிந்தினாள் லதா. 

என்ன நடந்திருக்கும் என்று பூபதியால் ஊகிக்க முடியவில்லை. ஆனாலும் ஷாலினி ஏதோ செய்திருக்க வேண்டும் என்று மட்டும் அவருக்கு புரிந்தது. அதனால் மனைவியிடம் எதையும் அவரால் கூற இயலாத சூழ்நிலை கைதியானதால் அமைதியையே கடைபிடித்தார்.

லதா அமைதியாக இருக்கவில்லை. தந்தையையும், மாமனாரையும் அழைத்துக்கொண்டு ஷாலினியின் வீட்டுக்கு சென்றாள். தன் மகனை வேண்டாம் என்ற ஷாலினி திருட்டு கல்யாணம் செய்துகொண்ட கோபம் வேறு அவளுக்குள் கனன்றது.

வந்தவர்களை ஷாலினியும் நல்லமுறையில்தான் வரவேற்று உபசரித்தாள்.

என்னதான் கோபம் இருந்தாலும் லதா வந்ததோ சடங்குகளை செய்து ஷாலினியை அவள் வீட்டுக்கு அழைத்து செல்ல. ஷாலினியோ இது என் அன்னை வாழ்ந்த வீடு என் வீட்டை விட்டு நான் வரமாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னதோடு. அவள் தன் கணவனோடு தனியாக இருக்க ஆசைப்படுவதாகவும் கூறினாள்.

அவள் பிடிவாதம் பிடிக்கக் காரணம் வெற்றி என்றால் தனியாக இருக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணமும் வெற்றிதான். அவர்கள் தனியாக இருந்தால்தானே வெற்றி வெளிப்படுவான். மாறன் தனிக்குடித்தனம் போனால் தானும் வருவதாக லதாவே கூறி இருக்க, லதா இருக்கும் இடத்தில் மாறன் மாறனாகத்தான் இருப்பான். ஷாலினியை லதா சீண்டினால் மட்டும் வெற்றி ஆவேஷமாகத்தான் வெளிப்படுவான். ஷாலினிக்கு அவன் காதலாக வேண்டும். அது அவர்கள் தனியாக இருக்கும் பொழுதுதான் நிகழும். முழுக்க முழுக்க சுயநலமாக சிந்தித்து முடிவெடுத்த ஷாலினி. கொஞ்சம் கூட யோசிக்காமல் கருணையே இல்லாமல் பேசினாள்.

தன்னுடைய பெற்றோர் வாழ்ந்த வீடு அதனால் வர முடியாது என்பதை கூட லதா ஏற்றுக் கொண்டாள். தனியாக இருக்க வேண்டும் என்றதும் முகம் மாறினாள்.

ஒரு பெண் திருமணமானால் புகுந்த வீட்டில் அல்லவா இருக்க வேண்டும்? இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று யாரும் கூற வில்லையே, அங்கேயும் வந்து செல்லலாமே. அது என்ன தனியாக இருக்க வேண்டும் என்பது?

லதாவுக்கு ஷாலினியின் மீது கோபம் கோபமாக வந்தது தான் பெற்று வளர்த்த மகனை இவள் தன்னிடமிருந்து பிரிக்க நினைப்பாளா? ஒரு நாளும் நடக்காது.

மனதில் நினைத்ததை வார்த்தையாகவே ஷாலினியிடம் கேட்டு விட்டாள்.

“என் மகனை என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குறியா?”

“என்ன அத்த இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றவளின் மனசாட்ச்சியோ அதைத்தான் செய்ய போவதாக கூறியது. 

“இங்கபாரு நடிக்காத. உன் வீட்டுல நீ இருக்குறது எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. என் பையன் எங்க கூட இருக்கணுமா இல்லையா? இங்கயும் அங்கேயும் இருக்குறதுல என்ன பிரச்சினை?” நேரடியாகவே கேட்டாள் லதா.

“இங்க என் கூட இருந்தா வெற்றியாக இருப்பான். அங்க வந்தா மாறனாக இல்ல மாறிடுவான்” அதை சொல்ல முடியாமல் திணறியவள் “இங்க பாருங்க அத்த நானும் வேலைக்கு போறேன். உங்க பையனும் வேலைக்கு போறான். என் வீட்டுல இருந்தாதான் ரெண்டு பேருக்கும் வசதியாக இருக்கும்” சமாளிக்க முயன்றாள்.

“இதுதான் உன் பிரச்சினையா?” என்பது போல் ஷாலினியை முறைத்த லதா கோபத்தை அடக்கியவாறு அமர்ந்திருக்கும் பொழுதுதான் இவர்கள் அமர்ந்திருப்பதை கவனிக்காமல் உள்ளே நுழைந்த மாறன் தனக்கு லீவ் கிடைத்த சந்தோசத்தில் தேனிலவுக்கு செல்லலாம் என்பதை கூற சப்ரைசாக வீடு வந்தவன் ஷாலினியை தட்டாமாலை சுற்ற ஷாலினி அவன் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு கிழே இறங்கினாள்.

இதை பார்த்த லதாவுக்கு கோபம் இன்னும் அதிகமானது. மாறன் வீட்டுக்கும் வருவதில்லை. அவன் உடமைகளை யாரிடமாவது அனுப்ப சொல்லி போன் தான் செய்கின்றான். லதாவிடம் சரியாக பேசுவதுமில்லை. நலம் விசாரிப்பதுமில்லை.

மகன் கேஸில் முழு ஈடுபாடோடு இருக்கின்றான். ஒழுங்காக உணவு உட்கொள்கின்றானா? தூங்குகின்றானா? அன்னையாக லதா கவலைகொள்ள, இவன் என்னடா என்றால் ஷாலினியை திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்கின்றான்.

ஷாலினியை இறக்கி விட்டவன் அப்பொழுதுதான் இவர்களை கவனித்தான். கொஞ்சம் வெக்கம் கூட வந்தது. சமாளித்துக் கொண்டு “எப்போ வந்தீங்க?” என்று கேட்டதுதான் தாமாந்தம் லதா மகனை அறைந்திருந்தாள். ஷாலினியின் மேல் இருந்த மொத்த கோபத்தையும் மாறனின் மேல் அல்லவா காட்ட முடியும். மருமகளை அடித்தால் அதற்கும் ஒரு கேஸை புக் பண்ணி மகனே உள்ளே தள்ளி விடுவான்.

மாறனை எதற்காகவும், ஒருநாள் கூட அவள் அடித்ததில்லை. இன்று அறைந்தே விட்டாள். மாறனுக்கு மட்டுமல்ல தாத்தாக்களுக்கும் அதிர்ச்சி.

“அத்த…” ஷாலினி கத்த

“ஓஹ்… நான் அத்த என்று உனக்கு இப்போதான் தெரியுதா? என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டியே பாவி.

மாறன் எவ்வளவு அன்பான மகன். அவனை லதா எப்படியெல்லாம் சீராட்டி பாலூட்டி வளர்த்தாள். அவனும் அன்னை மீது எவ்வளவு பாசமாக இருப்பான். இவளால் இந்த ஷாலினியால் அவன் அம்மாவையே மறந்து விட்டான் என்ற கோபம் லதாவின் கோபத்தை அதிகப்படுத்தியதோடு, இயல்பில்லையே அன்னையர்களுக்கு உண்டான அச்சம் மருமகள் வந்தால் எங்கே மகனை பிரித்து விடுவாளோ என்ற அச்சம் வேறு லதாவை ஆட்கொண்டிருக்க, அதற்கேத்தது போல் ஷாலினியும் பேச தன் மகன் தனக்கில்லை என்றே முடிவு செய்த லதா கோபத்தில் வார்த்தையை விடலானாள்.

“லதா பொறுமையாக பேசு” செல்வபாண்டி அதட்ட

“வார்த்தையை விடாத. அவ உன் மருமக” என்றார் தர்மதுரை.

“மருமக, மருமக. இவளதானே இவனுக்கு கட்டிவைக்க பார்த்தேன். இவ தானே இவன வேணாம்னு சொன்னா. வேணாம்னு சொன்னவ எதற்காக யாருக்கும் சொல்லாம்கொள்ளாம என் பையன கல்யாணம் பண்ணிகிட்டாளாம்?” பொருமினாள் லதா.

கோபம் கோபம் கோபம் கண்மூடித்தனமான கோபம் மட்டுமே லதாவிடம் வெளிப்பட்டது. அது பாசத்தின் வெளிப்பாடு. பாசப் போராட்டம்.

“ஏன்டா  இப்படி பண்ண? யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணி இருக்க? நாங்க என்ன செத்தா போய்ட்டோம். இவதான் வேணும்னு சொன்னா? நாங்க வேணாம்னா சொல்ல போறோம்? ஏன் இப்படி பண்ண?” லதா மாறனை உலுக்க அவனிடமிருந்து எந்த பதிலும் வராது போகவே அவனை தள்ளி விட்டவள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

உண்மையான காரணத்தை கூற முடியாமல் மாறன் தலை கவிழ அவன் கையேடு கையை கோர்த்துக் கொண்ட ஷாலினி “இங்க பாருங்க அத்த இவன் என்ன விரும்புறான். நான் இவன விரும்புறேன். கல்யாணம் பண்ண நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருந்தா போதாதா?” என்றவள் மறந்தும் மாறன் என்று அவனை அடையாளப்படுத்தவில்லை.

“யேன்மா… அவன் வீட்டாளுங்க நாம இருக்கோம். எங்க கிட்ட ஒரு வார்த்த சொல்ல மாட்டீங்களா?” தர்மதுரைக்கு கோபம் வந்தது.

“வயசான காலத்துல பேரன் கல்யாணத்த பார்க்க முடியாதபடி பண்ணிட்டியேம்மா” என்றார் செல்வபாண்டி. அவர் பாசமாக வளர்த்த வெற்றி உயிரோடு இல்லை. அவன் இருந்தாலாவது அவனது திருமணத்தை பார்த்திருக்கலாம். அதுவும் இல்லை என்ற கவலை அவர் குரலில் தேங்கி இருந்தது.

ஷாலினிக்கு அவர்களை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு வெற்றி முக்கியம். அவனை உயிர்ப்போடு கொண்டு வருவது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் ஒருத்திதான் அறிவாள்.

“இவளுக்கு எங்க மாமா பந்தபாசத்த பத்தி தெரியும். பொறந்த உடனே பெத்தவள காவு வாங்கிட்டா. அப்பா இல்லாத அனாதை. அக்காவும் அல்பாயுசுல போய்ட்டா. சொந்த பந்தம் சேர்த்துகிறது இல்ல. அருமை தெரியாதவ” கோபத்தில் கொப்பளித்தாள் லதா.

லதாவின் வார்த்தைகள் ஷாலினியின் மனதை குத்திக் கிழிக்க மாறனை பிடித்துக் கொண்டிருந்த கையின் பிடி இறுகியது. மாறன் அவளை பார்க்க கண்களில் கோர்த்த நீரை சிரமப்பட்டு இமைத்தட்டி உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.

ஷாலினியை ஏதாவது சொன்னால் வெற்றியால் பொறுக்க முடியுமா? அதுவும் தான் வெறுக்கும் லதா சொன்னால்?

கோபத்தில் கண்கள் சிவந்தவன் போதும் நிறுத்து” என்று உரத்த குரலில் கத்த அங்கிருந்த அனைவருமே ஒரு நொடி ஆடித்தான் போனார்கள். “பெத்த புள்ளைய அனாதையா விட்டுட்டு போன நீயெல்லாம் பேசுற பாரு. அத கேக்கணும் எங்குறது இவ தல விதி. அதுவும் எங்க நின்னுகிட்டு அவ வீட்டுக்குள்ளேயே நின்னுகிட்டு” புலியின் சீற்றமும், சிங்க கர்ச்சனையும் ஒன்று சேர்ந்த குரலில் லதாவே மிரண்டாள்.

அவன் பார்வையும், குரலும் தொனியும் லதாவுக்கு அச்சத்தைக் கொடுக்க, ஷாலினியின் முகம் மலர்ந்தது.

“அப்பா வெற்றி…” என்றார் செல்வபாண்டி. அவர் வளர்த்த பேரனின் கோபத்தை பற்றி அவருக்கு தெரியாதா? கோபம் உச்ச கட்டத்தை அடைந்தால் அவன் எவ்வளவு மூர்கமானவன் என்று கண்கூடாக பார்த்திருப்பவர் தானே. இவன் மாறன் என்பதையும் மறந்து “கோபத்தை குறைடா… தாத்தாவால தாங்க முடியாது” என்றவர் துண்டை வாயில் வைத்துக் கொண்டு வாய் மூடி அழ ஆரம்பித்தார்.

தர்மதுரையோ வெற்றி என்பவன் இப்படி ஒரு கோபக்காரனா என்பதை அதிசயமாக பார்த்திருந்தார். மாறன் சில நேரம் வெற்றியாக மாறுவது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். இன்றுதான் அவன் கோபத்தின் உச்சத்தை பார்த்தனர்.     

“புருஷன் கூட வாழ பிடிக்கலைனு எந்த தாயாவது பெத்த பையன விட்டுட்டு போவாளா? நீ போன. ஏன்னா நீதான் கல்நெஞ்சக்காரியாச்சே. பால் கொடுக்காம விட்டுட்டு போனியே இப்போ மட்டும் பாசம் பொத்துகிட்டு வருதோ? அவளை எதுக்கு குத்தம் சொல்லுற? நான்தான் அவளை அந்த வீட்டுக்கு போகக் கூடாதுனு சொன்னேன். நீ இருக்குற வீட்டுல நமக்கு என்ன வேல?”

லதாவின் மீது மாறன் எவ்வளவு பாசம் வைத்தானோ வெற்றி அவ்வளவு வெறுத்தான். அன்னையாக என்ன ஒரு மனுஷியாக கூட மதிக்காமல் எடுத்தெறிந்துதான் பேசினான். ஷாலினியை பேசினால் அவன் இரத்தம் சூடாகும் என்பதை மறந்து லதா பேசியது தவறு. அவனை நிதானப்படுத்த ஷாலினி என்பவளால் மாத்திரம்தான் முடியும். 

“மாறா…” லதா அதிர்ச்சியடைய

“என்ன மாறா… மாறானு கதறுற? நான் வெற்றி. வெற்றிமாறன். சன் ஒப் பூபதிபாண்டியன். கிராண்ட் சன் ஒப் செல்வபாண்டியன் ஒன்லி. என் அம்மா நான் பெத்த உடனே இறந்துட்டா. நானும் எங்க அம்மாவ காவுகொடுத்துட்டுதான் பொறந்தேன். உண்மைய சொன்னா எங்க அம்மா நான் பொறந்த உடனே வேணாம்னு சொல்லிட்டாங்க” வெறிபிடித்தவன் போல் சிரித்தான் வெற்றி.

 செல்வபாண்டியனுக்கு வெற்றியை பார்த்ததில் சந்தோசப்படுவதா? மாறனுக்குள் அவன் இருந்து மாறனை வதைப்பதை நினைத்து கவலைகொள்வதா ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சியாக பார்த்திருந்தார்.

“வெற்றி காம்டவன்” ஷாலினி அவனை ஆசுவாசப்படுத்த முயல.

“இந்த பொம்பள உன்ன பேசுவாளா? அதுவும் உன் வீட்டுல இருந்துகிட்டு” ஷாலினியின் தோள்பட்டையை பிடித்தவாறு பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று லதாவின் புறம் திரும்பி  “வெளில போ…” வீடே அதிரும்படி கத்தினான்.

எங்கே அவன் மயங்கி விழுந்து விடுவானோ என்ற அச்சம்தான் ஷாலினிக்குள் இருந்தது.

“தாத்தா நீங்க எப்போ வேண்டுமானாலும் இந்த வீட்டுக்கு என்ன பார்க்க வரலாம். இது உங்க பேரன் வீடு” செல்வபாண்டியனை பார்த்து சாந்தமாக கூறியவன் அறைக்குள் நுழைந்தான்.

லதா அழுதவாறே வெளியேற, தாத்தாக்கள் இருவரும் அவள் பின்னால் வெளியேறி இருந்தனர்.

கதவை பூட்டி விட்டு ஷாலினி ஓடி வந்தது மாறனை பார்க்கத்தான். அவளை பார்த்ததும் “ஸாரி ஷாலு” என்று அவளைக் கட்டிக் கொண்டு புலம்பியவனை அணைத்து ஆறுதல் படுத்த அவளைக் கட்டிக் கொண்டே தூங்கியும் போனான்.

மாறன் மயங்கவில்லை என்பது ஷாலினிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது மட்டுமல்லாது பெரும் ஆறுதலையும் கொடுத்தது. அதற்கு காரணம் அவன் தினமும், யோகா, தியானம் என்று மனதை ஒருநிலை படுத்துவதுதான் என்பதை உணர்ந்தவளுக்கு வெற்றியாகவே அவன் இருந்து விட மாட்டானா? என்ற பேராசையும் உருவானது.

தூங்கும் அவனை பார்த்தவாறே நிம்மதியாக தூங்கினாள் ஷாலினி. 

அழுதவாறே வீடு சென்ற லதா கணவனிடம் நடந்த எல்லாவற்றையும் கூற பூபதி கேட்டது “வெற்றியாக மாறி பேசிய மாறன் மயங்கி விழவில்லையா?” என்றுதான்.

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன கேக்குறீங்க?” கணவனிடம் காய்ந்தாள்.

“அவன் அடிக்கடி மயங்கி விழுந்தா அது அவன் உசுருக்கே ஆபத்தாகிடலாம். பேரலைஸ் கூட வரலாம். அதற்காகத்தான் கேக்குறேன்” பொறுமையாக சொன்னார் பூபதி.

“இல்லப்பா மயங்கி எல்லாம் விழல. உள்ள போய் கதவை அறஞ்சி சாத்தினான். அவன் பொண்டாட்டிகிட்ட அவனை பாத்துக்க சொல்லிட்டு வந்துட்டோம்” என்றார் செல்வபாண்டியன்.

பூபதிக்கே இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. தனது ட்ரீட்மென்டில் செய்ய முடியாததை ஷாலினி செய்திருக்கின்றாள். அப்படி என்ன செய்தாள்?  மாறன் யோகா மையம் செல்வது அவர் அறிந்ததுதான் ஆனால் அது பூபதியிக்கு சட்டென்று நியாபகத்துக்கு வரவில்லை.

அடுத்த நாள் காலை வளமை போல் மாறனுக்கு தான் வெற்றியாக மாறி லதாவை என்னவெல்லாம் பேசினோம் என்பது மறந்து போய் இருக்க, “அம்மாவும், தாத்தாங்களும் வந்தங்களே? என்ன சொன்னாங்க? நமக்கு கல்யாணமானத நான் வீட்டுல சொல்லவே இல்ல” பதறினான் மாறன்.

அவனது கேள்வியிலையே அவன் மறந்து விட்டதை புரிந்துக் கொண்ட ஷாலினி “நீ சொல்லலைனா என்ன? நான் எப்பயோ சொல்லிட்டேன். நீயா வந்து சொல்லுவானு உங்கம்மா காத்துகிட்டு இருந்தாங்க. நீதான் சொல்லலையே அதான் அவங்களே கிளம்பி வந்துட்டாங்க”

“நா உள்ள வந்தது நியாபகம் இருக்கு. அம்மா திட்டினதும் நியாபகம் இருக்கு அப்பொறம் என்ன நடந்தது?” நெற்றியை தடவியவாறே நியாபகப்படுத்த முயன்றான்.

“அத்த உன் மேல கோபப்படுவாங்களா? எல்லாம் நடிப்பு. நீ தலையை தொங்க போட்டதும் அவங்களுக்கு மனசு கேக்கல. அவங்களே ஊட்டி விட்டுட்டு போய்ட்டாங்க”

“நிஜமாவா?”

“வேணும்னா சத்தியம் பண்ணவா?” ஷாலினி முறைத்தவாறே கேட்கவே நம்பினான் மாறன்.

“சரி நாம ஊட்டிக்கு போலாம். ஒருவாரத்துக்கு தேவையான துணியெல்லாம் பேக் பண்ணிடு”

“எப்போ கிளம்புறோம்” முகம் மலரக் கேட்டவளை அணைத்தவாறே “இன்னைக்கே என்றான் மாறன்.

அவன் சொன்னது போல் மதியம் அவன் வண்டியிலையே ஊட்டியை நோக்கி கிளம்பி இருந்தனர்.

ஷாலினி ட்ரைன்லயே போகலாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

“நான் என் வண்டியில்தான் வருவேன்”  அடம்பிடித்து அவளை வண்டியில் அழைத்து சென்றான்.

இரவானதும் ஓரிடத்தில் தங்கி இருந்து காலையில் பயணத்தை தொடர்ந்தனர்.

“எதுக்கு? ட்ரைன்ல போய் இருந்தா நைட் முழுக்க ட்ராவல் பண்ணி இருந்திருக்கலாம் இல்ல” ஷாலினி கடிய

“நாம ஹனிமூன் போறோம் பொண்டாட்டி. அவசர அவசரமா ஊட்டிய சுத்திப் பார்க்க போகல. ஹனிமூன் ட்ரிப் ப்ளஸ் ரோட் ட்ரிப் டைம் எடுத்து போலாமே என்ன அவசரம்?” என்று மாறன் கேட்ட பின்தான் ஷாலினியும் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

ஊட்டி வந்து சேர மதியம் ஆகி இருந்தது. அவர்கள் தங்கவென மாறன் ஏற்பாடு செய்திருந்தது அருவியின் அருகில் அமைந்த ஒரு ரிசார்ட்.

தனித்தனி குடில்களாக தேனிலவு ஜோடிகளுக்காகவேண்டியே அமைக்கப்பட்ட குடில்கள். ஒரு குடிலிலிருந்து மற்ற குடிலுக்கு கிட்டத்தட்ட இருநூறு அல்லது முன்னூறு மீட்ட இடைவெளி இருக்க, யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை.

வெளிவராந்தா, அறை. அறையோடு குளியலறை என சகல வசதிகளையும் கொண்ட குடில். எந்த நேரத்திலும் உணவை ஆடர் செய்து சாப்பிடலாம் அதற்கு வசதியாக தொலைபேசியும் அறையில் இருந்ததோடு வராண்டாவில் உணவுண்ண மேசையும் இருக்கவே அங்கே உணவை வைத்து விட்டு மணியடித்து விட்டு சென்று விடுவார்கள்.

பயணக்களைப்பு, பசி என்று வந்த உடன் உணவை ஆடர் செய்தவர்கள் குளித்து விட்டு உணவுண்டபின் தூங்கி இருந்தனர்.

தூங்கும் ஷாலினியை சிரிப்போடு பார்த்திருந்தான் மாறன். “வண்டியோட்டிகிட்டு வந்தது நானு இவ என்னமோ கல்லு ஒடச்சா மாதிரி தூங்குறா”

கோடை என்பதனால் அதிகம் குளிரவில்லை. ஆனாலும் ஷாலினி குளிருது என்று சுருண்டு படுத்திருந்தாள். மாறன் ஊட்டியில் வளர்ந்தவன் அவனுக்கு இந்த காலநிலை நன்கு பழக்கப்பட்டிருந்தது.

ஆறுமணியளவில் அவளை எழுப்பியவன் டீ கொடுத்து விட்டு தானும் அருந்தினான். இப்பொழுதெல்லாம் மாறன் டீ சாப்பிடுவதில்லை என்று சொல்வதில்லை. ஷாலினி கொடுத்தால் வாங்கிக் கொள்பவன் வெற்றியல்லவோ. டீயின் சுவைக்கு தன்னை பழக்கப்படுத்தி இருந்ததால் அருந்தலானான்.

மாறன் எப்பொழுது வெற்றியாக இருப்பான்? எப்பொழுது மாறனாக இருப்பான்? என்று அவனுக்கே தெரியவில்லை. நன்றாக பேசிக் கொண்டிருப்பான் திடிரென்று மறந்து விடுவான். ஷாலினிக்கு கவலையாக இருந்தாலும் சமாளிப்பாள்.

ஆனால் அவன் மறக்காதது அவன் பார்த்துக் கொண்டிருக்கும் கேஸை பற்றி மட்டும்தான்.

இப்பொழுதும் ஷாலினியிடம் கேஸை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தான்.

“எனக்கு என்னமோ இந்த கேஸுல இன்னும் என்னவோ மர்மம் இருக்குனு தோணுது என்னனு தெரியல”

“அதான் அந்த இங்லிஷ் வாத்தியார் தான் எல்லாம் பண்ணதா அவரே ஒத்துக்கிட்டாரே. அவர் வீட்டுல கூட ஒரு ரூம்ல கம்பியூட்டர் இருந்ததாகவும் அத கைப்பற்ற போன நேரம் வெடிச்சதாகவும் அதனால ஆதாரம் எல்லா சிதைஞ்சு போச்சுன்னு நியூஸ்ல சொன்னாங்களே! அப்போ போலீஸ் தரப்புல சொன்னது பொய்யா?”

“பொய்யில்லை உண்மைதான். ஆனாலும் என் சந்தேகம் தீரல”

“எனன சந்தேகம்?” மாறன் முழு வெற்றியாக மாற வேண்டுமானால் இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதை முடிக்காமல் அவன் மூளை ஓயாது என்பதை நன்கு புரிந்துக் கொண்ட ஷாலினி மாறனுக்கு உதவ நினைத்தாள். 

“அந்த கரிகாலனோட வீட்டு பக்கத்துல ரெண்டு லாட்ஜ். ஒன்னு சபீனா. மத்தது வனஜா. வனஜா பழைய லாட்ஜ் சீசீடிவி இல்ல. சபீனா லாட்ஜ்ல சீசீடிவி இருக்கு. வேவு பாக்குறவன் எந்த லாட்ஜ்ல தங்குவான்?”

“ஆதாரம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் சீசீடிவி இல்லாத லாட்ஜா பார்த்துதான் தங்குவான். அப்படியே தங்க நேர்ந்தாலும் முகத்தை மறைக்க கேப் போட்டுக்கிட்டு போவான்”

“எக்ஸ்சாட்லி ஆனா கரிகாலன் என்ன வந்து புடி எங்குறது போல சீசீடிவி முன்னாடி போன் பேசிகிட்டு இருந்தது மட்டுமில்லாம மூணு தடவ சீசீடிவியை உத்து பார்த்தான். இங்கதான் எனக்கு சந்தேகம் ஆரம்பிச்சது”

“அது சரி அவன் சபீனா லாட்ஜ்ல தங்கி இருந்தத யார் உங்க கிட்ட சொன்னாங்க?” ஷாலினி சந்தேகமாக கேட்க,

“ஆதாரம் கிடைச்ச சந்தோஷத்துல நானும் விட்டுட்டேன். அப்பொறம் நந்தகோபால கூப்டு கேட்டேன். அவன் கரிகாலனை பத்தி அவனோடு வீட்டு பக்கத்துல இருக்குறவங்கள விசாரிக்கிறப்போ டீ கடையில டீ சாப்பிட்டு கிட்டு இருந்த ஒருத்தன்தான் கரிகாலனை சபீனா லாட்ஜுல அடிக்கடி பாக்குறதா சொல்லி இருக்கான்”

“அவன் பார்தத சொல்லி இருப்பானே…”

“இல்ல ஷாலினி உனக்கு புரியல. ஒருத்தன பத்தி முழுசா விசாரிக்க, குறைஞ்சது ரெண்டு நாள் தேவை படும் ஆனா கரிகாலனை பத்தி விசாரிக்க போனப்போ அவனுக்கு ஏகேன்ஸ்ட்டா எல்லா ஆதாரங்களும் உடனே கிடைச்சது. திரும்பப் போய் நந்தன டீக்கடையில் விசாரிக்க சொன்னேன். லாட்ஜ் பத்தி தகவல் சொன்னவன் அந்த ஏரியாவே இல்லையாம். கடைக்காரர் அவனை அன்னைகித்தானாம் டீக்கடையில் பார்த்தாரு”

நீ வீணா மனச போட்டு குழப்பிக்கிற”

“இல்ல எல்லா பொண்ணுகளை தான்தான் டார்ச்சர் பண்ணதா ஒத்துக்கொண்டவன் உன் அக்காவை தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டான். உண்மைதான் அவனுக்கும் உங்கக்கா மாலினிக்கு எந்த சம்பந்தமும் இல்ல”

“என் அக்கா கொலை செய்யப்பட்டா என்கிறது உண்மை. ஆனா அத நீ தேடுற ஹேக்கர்த்தான் செஞ்சிருப்பான்னு என்ன நிச்சயம்? வேற யாராவதா இருக்கலாம்” என்றாள் ஷாலினி.

“சனிய மிரட்டி எல்லாம் செய்ய வச்சது போல, கரிகாலன் குத்ததை ஒத்துக்கொள்ளவும் ஏதாவது காரணம் இருக்கும். பூங்குழலியோட பேரண்ட்ஸுக்கு பதில் சொல்லணும், மேலடத்துல இருந்து ப்ரெஷர் சோ டி.ஐ.ஜிக்கு ஒரு குற்றவாளி தேவை கரிகாலன் கிடைச்சான் கேஸ க்ளோஸ் பண்ணிட்டாரு. மீடியாளையும் விஷயம் பரவிருச்சு. இப்போ அந்த ஹேக்கருக்கு நான் பார்த்த கேஸும் தெரியும். அது க்ளோஸ் என்றும் தெரியும்”

“இப்போ அவன் என்ன பண்ணுவான்னு நினைக்கிற?” ஷாலினியின் விழிகளில் அச்சம் நிரம்பி இருந்தது.

“அவன் புத்திசாலியா இருந்தா இந்த தப்ப திரும்ப செய்ய மாட்டான். அதி புத்திசாலியா இருந்தா நான் என்ன செய்ய போறேன்னு என்ன வாட்ச் பண்ணுவான்” சிரித்தான் மாறன்.

“ஏய் என்ன சொல்லுற?” பதறினாள் ஷாலினி.

“உன் போன், இல்ல என் போன், நம்ம லேப்டப்ஸ் ஹேக் பண்ண படலாம். வீட்டுல கேமரா வச்சி கண்காணிக்க படலாம். நாம வீட்டுல இல்லனு தெரிஞ்சி இப்போ கூட நம்ம வீட்டுக்குள்ள புகுந்திருக்க வாய்ப்பிருக்கு”

“டேய்…” குளிரில் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டிருந்தவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்க “ரிலேக்ஸ் ஷாலினி. நாம வந்த வேலைய முடிச்சிட்டே போலாம்” என்றவாறே அவளை கையில் ஏந்திக் கொண்டு உள்ளே நடக்க, ஷாலினியோ அவனை இறுக அணைத்திருந்தாள்.

Advertisement