Advertisement

அத்தியாயம் 19

குளித்து பட்டு வேட்டி சட்டையில் மாறன் பூஜையறையில் நின்றிருக்க, ஷாலினி பட்டுபுடவையில் தயாராகி பூஜையறைக்குள் நுழைந்தாள்.

கொண்டையிட்டு மல்லிகை பூச்சூடியிருந்த அவளது தோற்றமே வித்தியாசமாக மாறனின் கண்களுக்கு தோன்ற கண்சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.

“இப்படியே பார்த்துகிட்டு இருக்க போறியா? இல்ல தாலி கட்ட போறியா?” புன்சிரிப்போடு கேட்டாள் ஷாலினி.

சிரித்தவாறே “தாலி கட்டிட்டு பார்த்துகிட்டே இருக்கேன்” என்றவன் ஷாலினியின் அன்னையின் புகைப்படத்தில் மாட்டியிருந்த தாலியை கையில் எடுத்தான்.

பூஜையறையில் வைத்திருந்த எல்லா கடவுள்களையும் கும்பிட்டவர்கள் ஷாலினியின் பெற்றோர்களையும் வணங்கிய பின் வெற்றியாக மாறியிருந்த மாறன் ஷாலினியின் கழுத்தில் பொன்தாலி பூட்டினான்.

இதுதானா இதுதானா

எதிர்பார்த்த அந்நாளும்

இதுதானா இவன்தானா

இவன்தானா மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா

பகலிலும் நான்

கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானேன்

திருமண நாள் எண்ணி

நகா்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல்

பாடிக்கொள்வேன்

ஷாலினிக்கு சந்தோசத்தில் கண்களில் நீர்கோர்த்தது. அவள் எதற்காக அச்சப்பட்டாளோ இனி அதைப்பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக மாறன் முழுவெற்றியாக மாறி அவளுக்கு கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது.

தினமும் காலையில் அவளோடு உணவுண்பவன் அதை அவளுக்கான நேரமாக ஒதுக்கி அவளோடு கழிப்பதை அவளும் ரசிக்க, அவனை புரிந்துகொள்ள முடிந்தது. மாறனை முழு வெற்றியாக எப்படி மாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் அவளை விட்டு செல்ல மாட்டான் என்ற நம்பிக்கையும் வந்தது.

நேற்றிரவு யாமினியிடம் அவளை மனைவி என்று அறிமுகப்படுத்தியதியிலையே அவனது அன்பின் ஆழத்தை உணர்ந்து கொண்டாள். அதனாலயே முத்தமிட்ட பொழுது எல்லை மீறியவனை தடுக்காமல் அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து அவனோடு ஒன்றினாள்.

ஆனால் காலையில் எழுந்த உடன் வீட்டுக்கு செல்லலாம். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பவனை ஷாலினியால் சமாதானப்படுத்தத்தான் முடியவில்லை. அவன் மாறனாக அல்லாவா மாறி இருந்தான்.

“ஊரக் கூட்டி, விருந்து வச்சாத்தான் கல்யாணமா? கல்யாணம் பண்ண நானும், நீயும், தாலியும் இருந்தா பத்தாதா? மேளதாளம் கொட்டி நாதஸ்வரம் இசைச்சாதான் சார் என் கழுத்துல தாலி காட்டுவீங்களோ?” என்று மாறனை பார்த்து குத்தலாக கேட்க

குற்ற உணர்ச்சியில் குமுறிக்கொண்டிருந்தவனுக்கு ஷாலினி அவன் மேல் கோபமாக இருப்பதாக தோன்ற இன்னைக்கே, இப்பொழுதே, இப்பவே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றான்.

இதைத்தான் ஷாலினி எதிர்பார்த்தாள். அவன் வாயால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்த்தாள். சொல்லி விட்டான். அவன் பெற்றோரை விட்டு அவனை விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஷாலினிக்கு இல்லை. அவன் அவளோடு தனியாக இருந்தால்தான் வெற்றியாக இருப்பான் என்பதனால்தான் உடனே திருமணம் ஆகா வேண்டும் என்று இவ்வாறு பேசினாள்.  

“போ போய் குளிச்சிட்டு வா, என்றவள் அவனுக்காக வாங்கிய வேட்டி சட்டையை கையில் கொடுத்து தானும் குளித்து தயாராகி வந்தாள்.

இதோ யாரும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு தனியாக காலை உணவை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஷாலினி பொங்கல் செய்து கொண்டிருக்க, மாறன் அவளை பின்னாலிருந்து அணைத்தவாறு தோற்பட்டையில் தாடையை பதித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷாலினியும் அவன் கன்னத்தை தடவுவதும், கன்னத்தின் மீது கன்னம் வைப்பதுமாக “சீனியரே நாம வெளிநாட்டுல போய் செட்டில் ஆகிடலாமா?” வார்த்தைகளை கோர்த்தெடுத்து கேட்டாள். 

இவன் வெற்றியல்ல மாறன் என்று அறிந்துகொண்ட பின் விலக்கியவள். வெற்றி மாறனுக்குள் உயிர்ப்போடு இருப்பதை கண்களால் பார்த்தபின் அவனை அடைய நினைத்தவள், அவனை யாராவது மாறன் என்றோ! வெற்றி என்றோ! அழைத்தால் சுய உணர்வை அடைவதையும் அறிந்து கொண்டபின், தினமும் காலை வேளையில் அவனோடு கழித்த பொழுதுகளில் வெற்றியை எவ்வாறு உயிர்ப்போடு வைத்திருப்பது என்பதை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.

சீனியர் என்று அவள் வெற்றியைத்தான் அழைத்தாள். ஆனால் அந்த பெயருக்கும் மாறனுக்கும் எதோ ஒரு சம்பந்தம் இருக்கவே மாறன் அதனால் தடுமாறாமல் இருக்க, ஷாலினி மாறனை சீனியர் என்றே அழைக்க ஆரம்பித்தாள்.

மூளை சம்பந்தமான புத்தகங்களை தேடிப்படிப்பதோடு, இணையத்தளத்திலும் தேடிப்படிக்கலானாள்.

வெற்றியாக மாறிய மாறன் மீண்டும் மாறனாக மாறாமல் இருக்க, மாறன் சம்பந்தப்பட்டது எதுவும் அவனை நெருங்க கூடாது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டவள் வெளிநாட்டில் தாங்கள் இருவரும் சென்று குடியேறலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அவளுக்கு உதவத்தான் ராகவேந்திரன் இருக்கானே.

அவள் நினைத்தது போலவே மாறனே திருமண பேச்சையும் எடுத்து திருமணமும் நடந்தேறி விட்டது. அடுத்த கட்டமாக அவனை அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விட வேண்டும். முதல் கட்டமாக தேன்நிலவுக்கு செல்ல வேண்டும். தேனிலவுக்கு செல்வது போல் வெளிநாட்டில் செட்டிலாகி விட வேண்டும். இதுதான் ஷாலினியின் திட்டமாக இருந்தது.

“வெளிநாட்டுலயா? சொந்த வீட்டை விட்டு நீ போவியா? என்னால நம்ப முடியல” மாறன் அவளை ஆச்சரியமாக பார்க்க,

“அம்மா ஆசைப்பட்ட வீடு, அப்பா ஆசையாசையா கட்டிய வீடு. எனக்கு அதை விட நீ முக்கியம்” மனதில் நினைத்தவள் “போலாம்னுதான் கேட்டேன்” அவன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“செட்டில் எல்லாம் ஆகா முடியாது. நமக்கு எப்பவும் தாய்நாடுதான். வேணும்னா ஹனிமூன் போயிட்டு வரலாம்” என்றான்.

“ஹப்பாடா… ஒருவழியா வெளிநாட்டுக்கு ஹனிமூன் போக சம்மதிச்சிட்ட” கைதட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தினாள் ஷாலினி.

அவளை தன்புறம் திருப்பியவன் “என்ன நீ நான் உன்ன வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்னு இப்படி சீட் பண்ணியா?” என்று பொய்யா முறைக்க,

“நீ வாங்குற சம்பளத்துக்கு ஊட்டிக்கு கூட்டிட்டு போறதுக்கே யோசிப்ப இதுல எங்க வெளிநாட்டுக்கு போவ? அதான் போட்டுப் பார்த்தேன் சிக்கிட்ட” சிரித்தாள் ஷாலினி. அவன் எப்படி பேசினாலும் அவளிடம் பதில் காத்திருந்தது.

“ஏன் ஊட்டி என்ன செவ்வா கிரகத்துலையா இருக்கு? போலீஸ்காரனால போக முடியாதா என்ன? சொல்லு எந்த நாட்டுக்கு போகணும்? எப்போ போகலாம்?” ரோஷம் வந்தவனாக உறுமினான்.

மாறன் சுயநினைவுக்கு வந்து விட்டானோ? என்ற ஆராய்ச்சி பார்வையுடன் “லண்டன் போலாம். ஒரு மாசம் அங்க இருக்கணும். லீவ் போடுவியா?”

“போட்டுடலாம்” என்றவன் அடுப்பை அனைத்து அவளையும் அணைத்திருந்தான்.

இந்த பக்கம் வளமை போல் கௌதம் மாறனுக்கு அழைப்பு விடுக்க, அவன் அலைபேசி அனைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்த வண்ணம் இருக்க,  “சார் போன ஸ்விட்ச் ஆப் பண்ண மாட்டாரே. என்ன புதுசா?” யோசித்தவாறே வீட்டுக்கு அழைக்க லதாதான் பேசினாள்.

மாறன் வீட்டுக்கு வரவில்லை என்றதும், நந்தகோபாலுக்கு விஷயத்தை சொன்னவன் மாறனின் லொகேஷனை ட்ரெஸ் செய்யுமாறு கண்ட்ரோலரூமுக்கு தகவல் கொடுத்தவாறே வண்டியில் ஏற, நந்தகோபால் ஏறிக் கொண்டான்.

               

தினமும் தன்னோடு காலை நேரத்தை கழிப்பவன் அழைப்பு வந்த உடன் கிளம்புவது போல் இன்றும் சென்று விடுவானோ என்ற அச்சம் ஷாலிக்கு இருக்க மாறனின் அலைபேசியை அனைத்து வைத்தாள்.

இதை அறியாமல் மாறன் ஷானியோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்க, அவனைக் காணவில்லை என்று கௌதமும், நந்தகோபால் கடைசியாக அவன் அலைபேசி இயக்கத்தில் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஷாலினியோடு அமர்ந்து உணவுண்டவன் தேனிலவுக்கு லண்டன் செல்லலாம் என்று அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க லண்டன் செல்ல டிகர்ட் புக் பண்ணலாம் என்று இணையத்தில் டிராவல் ஏஜென்சிகள் டீட்டைல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

வாசலில் போலீஸ் வண்டி வந்து நிற்கவும் எட்டிப் பார்த்தவன் நந்தகோபாலையும், கௌதமையும் பார்த்த உடன் “இங்க என்ன செய்யிறீங்க?” எதோ அவர்கள் இவன் கொடுத்த வேலையை விட்டு வேறு வேலை பார்ப்பது போல் பேச அதிர்ந்தனர் அவர்கள்.

“சார் அந்த வாத்திய தூக்கிட்டோம். நீங்க ஸ்டேஷனுக்கு வரல. உங்க போனும் ஆப்பாகி இருக்கு. அதான் உங்கள தேடி வந்தோம்” என்றான் கௌதம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஷாலினி உள்ளே இருந்து வந்து இவர்களை கண்டு சற்று அதிர்ந்தாலும், இன்முகமாக உள்ளே வரும்படி அழைத்தாள்.

அப்பொழுதுதான் கௌதமும், நந்தகோபாலும் மாறனும், ஷாலினியும் வேட்டி சட்டையில் இருப்பதை கண்டனர்.

சுயநினைவுக்கு வந்த மாறனுக்கு கேஸ் நியாபகம் வந்த நேரம் “சாரி சார்” என்றான் நந்தகோபால்.

“என்ன இவர் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து இருக்கிறார்” என்ற அதிர்ச்சியில் கௌதம் வாயடைத்து பார்த்த வண்ணம் இருந்தான்.

ஷாலினி அவர்களுக்கு குடிக்க, பாயாசம் கொண்டு வந்து கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டவர்களுக்கு மாறனிடம் திருமணத்தை பற்றி கேள்வி கேட்கத்தான் தைரியம் வரவில்லை.

“ஷாலினி நான் ஸ்டேஷன் போறேன். முக்கியமான கேஸ். நீ ரெஸ்ட் எடு” என்றவன் இவர்களோடு கிளம்பி இருந்தான்.

செல்லும் அவனை நிறுத்த வழியில்லாமல் பார்த்திருந்தாள் ஷாலினி.

அவளுக்கு மாறன் போலீஸ் வேலையில் இருப்பது எந்த பிரச்சினையும் இல்லை. அவன் மாறனாக போலீஸ் வேலையில் இருப்பதுதான் பிரச்சினையாக இருந்தது. அவனை அழைத்துக் கொண்டு சீக்கிரம் லண்டன் சென்று விட வேண்டும். சென்ற பின் இங்கிருக்கின்றவர்களோடு எந்த தொடர்ப்பும் இல்லாமல் இருந்தால் அவன் வெற்றியாகவே இருந்து விடுவான் என்று நினைத்தவள் அதற்குண்டான வேலைகளை பார்க்க ராகவேந்திரனை சந்திக்க சென்றாள்.

காவல்நிலையம் செல்லும்வரை மாறனுக்கு சுகந்தியின் கணவன் கரிகாலனை பற்றி கௌதம் பல தகவல்களை கூற நேரடியாக விசாரணை அறைக்குள் நுழைந்தான்.

இருக்கையில் அமர்ந்திருந்தவனோ கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணிந்து வயது முப்பத்தி அஞ்சுக்குள் இருக்கும் மரியாதைக்குரிய தோற்றமாக இருந்தாலும், அவன் போலிஸைக் கண்டு அஞ்சவில்லை என்று அவன் கண்கள் சொன்னதோடு. “உங்களால் என்னை ஒன்றும் செய்ய இயலாது” என்று திமிராக அமர்ந்திருந்தான்.

“சொல்லுங்க வாத்தியாரே ஏன் இப்படி எல்லாம் பண்ணீங்க? எதற்காக பண்ணீங்க?” மாறன் நேரடியாகவே கேள்வி எழுப்ப

“நான் எதுவுமே பண்ணல” என்றான் கரிகாலன்.

“நான் என்ன சார் பண்ணேன்?” என்று கேட்டிருந்தாளோ?  “ஐயோ நான் ஒன்னும் பண்ணல” என்று அச்சப்பட்டு சொல்லி இருந்தாலோ மாறன் யோசித்திருப்பான். எதுவுமே செய்யவில்லை என்று தெனாவட்டாக பதில் சொல்பவனிடம் எதுவோ இருக்கு என்று மாறனின் உள்மனம் கூற, வெளியே சென்று கௌதம், மஞ்சுளா, நந்தகோபால் மூவரையும் அழைத்தான்

“இந்த ஆள் எல்லாம் பண்ணி இருப்பான்னு எனக்கு தோணுது. இந்த ஆள் பேனர் போன் ஏதாவது யூஸ் பண்ணுறானா? இவனுக்கும் அந்த பொண்ணுகளுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா? முதல்ல இவனுக்கு இவன் பொண்டாட்டி அந்த டார்ட்டூ சனி கூட தொடர்புள்ள இருந்தது தெரியுமா? எல்லாத்துக்கும் ஆதாரம் கலெக்ட் பண்ணுங்க” என்றவன் யார் யாருக்கு என்ன வேலை என்று பிரித்துக் கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தான்.

“நான் போகலாமா சார்” என்று கரிகாலன் மாறனை ஏறிட

“என்ன அவசரம் கரிகாலன் “உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு” என்று அவனை கேட்டான்.

“என்குயரில இதெல்லாம் கேப்பாங்களா?” ஆச்சரியமாக கேட்பது போல் மாறனை கிண்டல் செய்தான் கரிகாலன்.

“காரணம் இல்லாமல் போலீஸ்காரன் எதையும் கேட்கமாட்டான் கரிகாலன்” என்ற மாறனின் பார்வை “என் எல்லா கேள்விக்கும் நீ பதில் சொல்லித்தான் ஆகா வேண்டும்” என்றிருந்தது.

கரிகாலன் வாயை திறப்பது போல் தெரியவில்லை. மாறனும் அமைதியாக அவன் முன்னால் அமர்ந்திருந்தான். அவனுக்கும் விசாரணைக்கு சென்றவர்கள் வந்து சேர நேரம் தேவைப்பட்டிருந்தது.

நேரம் சென்று கொண்டே இருந்ததே தவிர இருவரும் அசருவது போல் தெரியவில்லை.

பொறுமை இழந்த கரிகாலன் “சார் ஒன்னு என்ன வெளிய விடுங்க. இல்ல என் மொபைலையாவது கொடுங்க நான் லாயருக்கு போன் பண்ணிக்கிறேன்”

“நான் இன்னும் விசாரிக்கவே இல்ல. கோப்ரேட் பண்ணாதானே உங்கள வெளிய விட முடியும். லாயர் கூப்டுற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணீங்க?” கரிகாலனை மடக்கியவன் மேசையை தட்டியவாறு அவனையே பார்த்திருந்தான்.

ஆறுமுகம் வந்து நந்தகோபால் வந்திருப்பதாக கூறவும் மாறன் எழுந்து செல்ல கரிகாலன் யோசனையாக அமர்ந்திருந்தான்.

வெளியே சென்ற மாறன் நந்தகோபால் சொல்ல அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் போதே கௌதமும், மஞ்சுளாவும் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் கூறிய தகவலை பாதிதான் கேட்டான். நந்தகோபாலை அழைத்துக் கொண்டு கரிகாலன் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

“என்ன கரிகாலன் போலீஸ் விசாரணையில் எதுவும் சொல்லக் கூடாதுனு பிடிவாதமா இருக்கீங்க. ஆனா எல்லா உண்மையையும் இந்த பைல்ல இருக்கு” கையில் இருந்த கோப்பை அவன் முன்னால் வைத்தவாறே அமர்ந்து கொண்டவன் கரிகாலன் மற்றும் சுகந்திக்கு எப்பொழுது திருமணம் ஆனது என்று ஆரம்பித்து, சனியும் சுகந்தியும் தொடர்பில் இருப்பதை அறிந்து வெளியூர் செல்வதாக அவர்களை வேவு பார்த்திருக்கிறாய் என்று கூற மறுத்தான் கரிகாலன்.

“நீங்க உண்மைய ஒத்துக்கொள்ள மாட்டீங்கனு தெரியும். ட்ரைன்ல போறீங்கன்னு சொல்லுற நீங்க ட்ரைன் டிக்கட் வாங்கவே இல்ல. பஸ்ஸுல போனேன்னு உடனே சொல்லிடாதீங்க. நீங்க உங்க வீட்டு பக்கத்துல உள்ள சபீனா லாட்ஜுல தங்கி இருந்ததுக்கான சீசீடிவி புட்டேஜ் இருக்கு” என்றான் மாறன்.

இவ்வளவு நேரம் மறுத்துக் கொண்டிருந்தவன் பாம்பாக சீறினான். “ஆமா சார் பொண்ணு பார்க்க போனப்பவே கேட்டேன் யாரையாவது லவ் பண்ணுறியான்னு. இல்லனு சொல்லி என்ன ஏமாத்திட்டு அவ காதலன் கூட கூத்தடிப்பாளா? அதான் ரெண்டு பேரையும் மிரட்டினேன்”

“காதலிச்சது ஒன்னும் தப்பில்ல. அத மறைச்சது கூட தப்பில்ல. நீங்க உங்க பொண்டாட்டிய சந்தோசமா பார்த்துக்கிட்டிருந்தா அவங்க எதுக்கு அவனை தேடி போய் இருப்பாங்க?” கரிகாலனை கோபப்படுத்தவென்றே பேசினான் மாறன்.

“என்ன சார் தப்பில்ல? கலயாணம் பண்ணுறது சந்தோசமா வாழத்தானே? அம்மா அப்பா கூட இருக்க முடியாதுனு சொன்னா. அவ பேசினது கேட்டு அம்மாவும், அப்பாவும் ஊருக்கு போய்ட்டாங்க. எதுக்கு? நான் சந்தோசமா இருக்கணும் என்றுதானே? ஆனா அவ அவளோட காதலனை கூட்டிகிட்டு வந்து கூத்தடிச்சா விட்டுடுவேனா? நான் யார்னு காட்ட வேணாம்? அதான் என் பெட்ரூம்லயே கேமரா வச்சி வீடியோ எடுத்து அவளையும், அவ காதலனையும் மிரட்டினேன்.

தற்கொலை பண்ணிக்குவாங்கனு நினச்சேன் ஆனா இல்ல. நான் சொல்லுறத எல்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க, எனக்கும் அது புடிச்சிருந்தது” சத்தமாக சிரித்தான் கரிகாலன்.

“மதியம் ஆகிருச்சு உங்களுக்கு பசிக்கல? எனக்கு செம்மையா பசிக்குது?” என்று எழுந்துக் கொண்ட மாறன் கரிகாலன் கூறியதைக் கண்டுகொள்ளாமல் நந்தகோபாலுடன் வெளியேறினான்.

“சார் இவன் தான் சார் அந்த சைக்கோ” நந்தகோபால் கோபத்தில் சீற

“அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க” என்ற மாறனுக்கு சப்ரைசாக ஷாலினி காவல்நிலையத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு அனுப்பி இருப்பதாக கௌதம் கூற, அலைபேசியை ஆராய்ந்தவனுக்கு ஒரு மணித்தியாலயத்துக்கு முன்பாகவே கல்யாண விருந்து அனுப்புவதாக குறுந்செய்தி அனுப்பபட்டிருப்பது தெரிய அவளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தான்.

“ஹாய் டி பொண்டாட்டி”

“சொல்லுடா புருஷா சாப்டியா?”

“இனிமேல்தான் சாப்பிடணும். தேங்க்ஸ் டா… இருந்த வேலைல நான் மறந்துட்டேன். நல்லவேளை நீ அரேஞ் பண்ணிட்ட” என்றான் மாறன்.

“நீ பண்ணா என்ன? நான் பண்ணா என்ன? எல்லாம் ஒண்ணுதான்” ஷாலினி சொல்ல மாறனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“புதுமாப்பிள்ளை வேற ரொம்ப வேல பார்க்காம ப்ரீயா இரு. அப்போதான் வீட்டுக்கு வந்தா வேல பார்க்க முடியும்” சிணுங்களாக ஒலித்தது ஷாலினியின் குரல்.

உடனே அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும், அவனால் இப்போதைக்கு எங்கும் செல்ல முடியாது ஏன் நேரங்காலத்தோடு வீடு செல்ல முடியுமா என்பதைக் கூட அவனுக்கு சொல்ல முடியாத சூழ்நிலை. எதுவும் பேசாமல் அலைபேசியை துண்டித்தவன் சாப்பிட சென்றான். 

கரிகாலனுக்கு கொடுக்கப்பட்ட உணவை அவன் தொட்டுக் கூட பார்த்திருக்கவில்லை.

“என்ன கரிகாலன் பசிக்கல போல” அவன் முன்னால் அமர்ந்தவாறே கோப்பை புரட்டிய மாறன் “முத்துராமலிங்கத்துக்கும், தனலக்ஷ்மிக்கும் பிறந்த மூன்றாவது பையன் கரிகாலன். ஐடி கம்பனியில் கைநிறைய சம்பளம் வாங்கிய கரிகாலனுக்கு வேலை பறிபோனதால் ஒரு இன்ஸ்டிடியூடில் இங்லிஷ் வாத்தியாரா வேலை பாக்குறீங்க. உங்க கிட்ட படிச்சவங்கதான் சுதா, நந்தினி, லேகா, பிரபா, சுபத்ரா, ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா இந்த எல்லா பொண்ணுகளும் உங்க ஸ்டூடண்ட்ஸ் தானே” நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு தகவலையும் சொல்ல கரிகாலனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

எவ்வாறு நந்தகோபால் சுகந்தியையும், சனியையும் கரிகாலன் வேவு பார்த்தான் என்று கண்டு பிடித்தானோ அதே போல் கௌதமின் விசாரணையில் இந்த பெண்களோடு கரிகாலன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

காரிகலந்தான் அந்த ஹேக்கர் என்பதற்கான எந்த ஆதாரமும் மாறனிடத்தில் இல்ல. ஆனால் இவர்களை இணைக்கும் புள்ளியாக இருப்பது கரிகாலன் மட்டும்தான். அவன் வாயை திறந்தால் தான் இந்த கேஸில் ஒரு முடிவை காணலாம். அதற்காக வேண்டியே பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கின்றான்.

“என்ன கரிகாலன் அந்த பொண்ணுகள உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?”

“ஏன் தெரியாது? நல்லாவே தெரியும். பணம் சம்பாதிக்க என்ன வேணாலும் செய்வாளுங்க. பணத்துக்காக மட்டுமா? வாழ்க்கைல முன்னேற, எவன் கூட வேணும்னாலும்..” அடுத்த வார்த்தையை முடிக்காது கெட்ட வார்த்தைகளாள் வசைபாட ஆரம்பித்தான்.

“என்ன இவன் ஒரு வாத்தியாரா இருந்துகிட்டு இப்படி எல்லாம் பேசுறான்” கண்ணாடிக்கு வெளியே நின்றிருந்த மஞ்சுளா கௌதமிடம் பொரும,

“இவன் எந்த பொண்ணால என்னத்த அனுபவிச்சானோ” என்றான் கௌதம்.

“அவளுங்க எல்லாம் பூமியில வாழவே தகுதி இல்லாதவளுங்க. அதனால அவளுங்கள எப்படி பழிவாங்க வேணுமோ அப்படி பழிவாங்கிட்டேன்” மீண்டும் சத்தமாக சிரித்தான் கரிகாலன்.

“எத சொல்லுறீங்க? சனீஸ்வரனை மிரட்டி அந்த பொண்ணுகள ரேப் பண்ண சொன்னதையா சொல்லுறீங்க?” போட்டு வாங்க பார்த்தான் மாறன்.

“உங்களுக்கு முதல்ல இருந்து சொன்னாதான் சார் புரியும்” கோணலாக சிரித்தவன் “மரியா காலேஜ், சென்தோமஸ் காலேஜ் இந்த ரெண்டு காலேஜுக்கு சென்டர்லதான் எங்க இன்ஸ்டிடியூட் இருக்கு. அதனால எல்லா மாணவர்களும் எல்லா சப்ஜெக்ட்டுக்கும் அங்க வருவாங்க. இங்லிஷ் கிளாசுக்கு பொதுவா கிராமத்து பசங்கதான் வருவாங்க. அப்படி வந்தவதான் நந்தினி.

அவளும் அவ உடையும். கிராமத்து பொண்ணு மாதிரியா சார் அவ ட்ரெஸ் பண்ணினா? என்னமோ அமெரிக்கால இருந்து வந்தவ போல” கோபத்தை அடக்க முடியாமல் காய்ந்தான்.

“டிரஸ் எப்படி பண்ணனும் எங்குறது அவவங்க விருப்பம். அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” கரிகாலனை மேலும் தூண்டினான் மாறன்.

“அவ வீட்டுல அப்படியா பண்ணுறா? ஊருக்குள்ள போகும் போது அப்படியா டிரஸ் பண்ணுறா? இல்லையே அந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு போறதா இருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா இங்க ஒரு வேஷம், ஊர்ல ஒரு வேஷம்னு பெத்தவங்கள ஏமாத்துறா. அவதான் என் மொத டார்கட்.

அவ போன ஹேக் பண்ணேன். அவ மூலமா அவ நாலு ப்ரெண்ட்ஸையும் டார்கட் பண்ணேன். அதுல சுதாவை மட்டும்தான் தேர்ந்தெடுத்தேன். அதே மாதிரி இருந்தவங்கதான் சுபத்ரா, ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா இந்த மாதிரி இருக்குறவளுங்களுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டணும் எங்குறதுதான் என் ஆச. புகட்டிட்டேன்” மீண்டும் சத்தமாக சிரித்தான் கரிகாலன்.

என்னதான் கரிகாலன் சட்டென்று தான்தான் எல்லாம் செய்ததாக சொன்னாலும் மாறனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒன்று நெருட “மூர்த்திக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.

“யார் மூர்த்தி?” என்றான் கரிகாலன் யோசனையாக

அவன் யோசிக்கும் விதமே மாறனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த “அந்த பொண்ணுக போன ஹேக் பண்ணினதா சொன்னீங்க. என்ன சொல்லி மிரட்டினீங்க? அத சொல்லவே இல்லையே” மாறன் ஆர்வமானவன் போல் கேட்க

“அந்த கூத்த ஏன் கேக்குறீங்க. ஒருநாள் குடிக்க பாருக்கு போனேன். அங்க ஒருத்தன் இவளுங்க குளிக்கிற வீடியோவை பார்த்துகிட்டு இருந்தான். அன்னைக்கி அவன் போன எப்படியாவது ஆட்டைய போடலாம்னு யோசிச்சேன். என் நேரம் அவன் யார் மேலையோ மோதி விழுந்துட்டான் அவன் போன் பார்ட் பார்ட்டா சிதறி கிடக்க, மெமரி கார்ட் மட்டும் தனியா இருந்தது. அத நான் ஆட்டைய போட்டுட்டேன்”

“அடப்பாவி நாங்க மூர்த்தி போன எவன் ஹேக் பண்ணி இருப்பான்? எவன் டிவைஸ் பொருத்தி இருப்பான்னு மண்டைய பிச்சிகிட்டா நீ அசால்ட்டா மெமரி கார்ட தூக்கிட்டு போய் இருக்க” கௌதம் சொல்ல

“இவன் மெமரி கார்ட தூக்கின நேரம்தான் பிரபா மூர்த்தியை போலீஸ்ல பிடிச்சி கொடுத்திருக்கணும். அதான் போலீசுக்கு எந்த எவிடன்சும் சிக்கல” என்றாள் மஞ்சுளா.

கரிகாலன் சொன்னவைகள் எல்லாம் சரியாக பொருந்தினாலும் மாறனின் உள்மனம் ஏற்க மறுத்தது. மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மாறன் யோசிக்க, உள்ளே நுழைந்தார் டி.ஐ.ஜி.

“வெல்டன் மாறன். நீ அந்த ஹேக்கர புடிச்சிட்டதா தகவல் வந்துச்சு”

“இவருக்கு யாரு தகவல் சொன்னது” என்று மாறன் பார்க்க நந்தகோபால் “நான்தான் சார் தகவல் சொன்னேன். ஒருவழியா இந்த தலைவலி கேஸ் ஓவர்” என்று புன்னகைக்க, நந்தகோபாலை முயன்ற மட்டும் முறைத்தான்.

கரிகாலன் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் எல்லா செக்ஷனிலும் கேஸ் பைல் பண்ணப்பட்டு உள்ளே தள்ளப்பட்டான்.

நாட்களோ நகர்ந்து கொண்டிருந்தது. டி.ஐ.ஜியிடம் மாறன் இதில் ஏதோ இருக்கு என்று கூற, முற்பட அவரோ அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. “கேஸ் க்ளோஸ். உனக்கு கல்யாணம் ஆச்சுல்ல. லீவ் எடு. ஹனிமூன் போ” என்று மாறனை துரத்தியடித்தார்.

மாறனால் என்ன செய்ய முடியும்? கரிகாலனிடம் பேசிப் பார்த்தான். அவனும் தான்தான் எல்லா குற்றங்களையும் செய்ததாக ஸ்தீரணமாக நிற்க, அவனுக்கு தண்டனை வழங்கிக் கொடுக்க மும்முரமாக இறங்கினான் மாறன்.

Advertisement