Advertisement

அத்தியாயம் 17

எது சரி? எது தவறு? யார் தீர்மானிப்பது? கடவுளா? நம்மை ஆண்ட மன்னர்களா? ஆளும் அரசியல்வாதிகளா? பெற்றவர்களா? ஆசான்களா? நமக்கு நாமேவா? யார்? 

லேகா சொன்ன ஆரம்ப விஷயங்களை சொன்ன பிரபா தொடர்ந்தாள். “லேகா ஒரு பயந்தாங்கோழி சார். ஆச இருந்தாலும் மாட்டேன்னுதான் முதல் வார்த்த வாயில இருந்து வரும். அவளை சம்மதிக்க வைக்குறதே ரொம்ப கஷ்டம். அவ வேணாம். அவ ஒரு பழம் நாம மட்டும் போலாம்னு நந்தினி சொல்லுவா. தப்பு பண்ணா சேர்ந்துதான் செய்யணும் இல்லனா அவ நம்மள போட்டுக் கொடுப்பான்னு சுதா சொன்னா.

அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா. அவளுக்கு ஆச இருக்கு பயப்படுறா. நான் கூட்டிட்டு வரேன்னு சேர்ந்துதான் எல்லாம் பண்ணோம்.

ஆனா எனக்கே தெரியாம நந்தினியும் சுதாவும் நைட் கிளப் போய் வந்துகிட்டு இருந்திருக்காங்க”

“அதெப்படி உங்களுக்கு தெரியாம போகும்” மாறன் நம்பாமல் கேட்க

“சினிமால பப்பு, நைட் கிளப் எல்லாம் வேற விதமா காட்டுவாங்க. உண்மையாகவே அப்படித்தானா? இல்ல சும்மா சொல்லுறாங்களானு ஒரு ஆர்வம் எனக்குள்ள இருந்தது. அங்க போனதே எப்படி இருக்கு? என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான். போன உடனே லேகாவை பயமுறுத்திட்டேன்” என்றவள் முகத்தில் அன்றைய நியாபகத்தின் காரணமாக சிறிதாக புன்னகை மலர்ந்த முகம் இன்றைய சூழ்நிலையின் காரணமாக சுருங்கியது.

“ரெண்டாவது தடவ போலாமான்னு சுதா கேட்டப்போ லேகா முடியாதுனு உறுதியா சொல்லிட்டா. நானும் மறுத்துட்டேன். எல்லார் கிட்டயும் வீட்டு சாவி கொத்து இருக்கு சார். அந்த வீட்டுக்கு மூணு கதவு. வாசல் கதவு, பக்க வாட்டில கதவு. சமயக்கட்டுல ஒரு கதவு. வாசல் கதவு வழியா போனாதான் என் ரரூம்ல, லேகா ரூம்ல சத்தம் லைட்டா கேக்கும். மத்த ரெண்டு கதவை திறந்தாலும் கேக்காது”

அந்த வீட்டுக்கு போய் இருந்ததால் அவள் சொல்ல சொல்ல மனக்கண்ணில் காட்ச்சி படுத்தலானான் மாறன்.

“அவங்க நைட்கிளப்புக்குத்தான் போறாங்க என்று உங்களுக்கு எப்படி தெரிஞ்சது”  

“நந்தினியும் சுதாவும் காலேஜுல இருந்து திடீரெண்டு காணாம போக ஆரம்பிச்சாங்க. சில நேரம் பாடம் நடக்குறப்போ. சிலநேரம் காலேஜ் முடிஞ்ச பிறகு. லேட் நைட்ல வருவாங்க. கண்ட கண்ட பசங்க கூட வண்டில வந்து இறங்க ஆரம்பிச்சாங்க. லேகா ரொம்ப பயந்து போனா. “அவங்க பெர்சனல் லைப்ல நாம ரொம்ப இன்வோல் ஆகா முடியாது. என்ன செய்யிறோம்னு தெரிஞ்சிதானே செய்யிறாங்க” என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினேன்.

நைட்கிளப்பில பார்த்தவனோட சுதா வந்திறங்கினத பார்த்த பின்னால தான் நந்தினியும் சுதாவும், எங்களுக்கு தெரியாம நைட்கிளப் போறது தெரிய வந்தது. இத பத்தி நான் கேட்டப்போ. எங்க பெர்சனல் லைப்ல நீ இன்வோல் ஆகதனு சொல்லிட்டாங்க.

ஒன்னும் பிரச்சினை இல்ல. எவனையும் வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டேன். அவங்களும் கூட்டிகிட்டு வரல அதனால எந்த பிரச்சினையும் வரல. இதுதான் சார் நடந்தது” என்றாள் பிரபா.

“போலீஸ் விசாரிச்சப்போ ஏன் இதப்பத்தி சொல்லல” கண்டனப் பார்வையை செலுத்தியவாறே கேட்டான் மாறன்.

“நந்தினி, சுதா போன்ல அவங்க ரெண்டு பேரும் தப்பா இருந்த வீடியோ இருக்கிறதா போலீஸ்ல சொன்னாங்க. எங்க நாங்க நைட்கிளப் போனதையும், அவங்க ரெண்டு பேரும் பசங்க கூட சுத்தினத்தையும் பத்தி சொன்னா எங்க பேருக்கும் களங்கம் வந்துடும் என்று நான் ரொம்ப பயந்தேன். என்ன விட லேகா அழுது தெரியாது என்று சொல்லணாம்ன்னு கெஞ்சினா. எனக்கும் சரினு தோணிருச்சு” தான் செய்தது சரி எனும் விதமாக பேசினாள் பிரபா.

லேகா சொன்னதையே பிரபாவும் சொன்னதில் அவள் பொய் சொல்லவில்லை என்று புரிந்தது. ஆகா ஹேக்கர் இவர்களை க்ளோசாக வாட்ச் பண்ணிய பிறகுதான் காரியத்தில் இறங்கி இருக்கின்றான். என்று மாறனுக்கு புரிய மிரட்டல் போன் கால் எப்போ வர ஆரம்பித்தது என்று கேட்டான்.

மாறன் கேட்ட கேள்வியில் மூர்த்தியை பத்து நிமிடங்களுக்கு மேலாக வசைமழையில் நனைய வைத்துக் கொண்டிருந்த பிரபாவை தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான் மாறன்.

“எனக்கு அன்னவுன் நம்பர்ல இருந்து நான் வீட்டுல இருக்கும் போதுதான் போன் வந்தது. நான் கண்டுக்கல. அப்பொறம் நான் குளிக்கிற வீடியோ வரவும் முதல்ல பயந்துட்டேன். நேரா அப்பாகிட்ட போய் பேசினேன். அப்பாதான் நீ எந்த தப்பும் பண்ணல இல்ல. அப்போ நல்லா யோசி இந்த வேலைய எவன் பாத்திருப்பான்னு யோசினு சொன்னாரு. நானும் யோசிச்சேன். கால் வரதுக்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் அந்த பிளம்பர் வந்துட்டு போனான் இது அவன் வேலையா இருக்கும்னு நெனச்சேன். அவனை பிடிச்சி கொடுத்தேன்”

“அவன் போன்ல எந்த வீடியோவும் இல்லனு அவனை போலீஸ் விட்டுட்டாங்க இல்ல” மாறன் தனக்கு தெரியாத ஏதாவது கிடைக்குமா என்று பிரபாவின் வாயை கிளறினான்.

“அதுதான் சார் எனக்கும் புரியல. அந்த வீடியோல இருந்தது என் வாஷ்ரூம்தான். அவனை தவிர யாரும் வரல. ஒருவேளை போலீஸ் தேடுறத தெரிஞ்சி மெமரி கார்ட மறச்சி வச்சிருந்திருப்பான்” தான் புத்திசாலி என்று நிரூபித்தாள் பிரபா

“அவனை பிடிச்சி கொடுத்த பிறகு எந்த காலும் வரலையா?” தெரிந்தே கேட்டான் மாறன்

“இல்ல சார்”

“சரிம்மா நீ போலாம்” என்ற மாறன் யோசனையில் ஆழ்ந்தான்.

நான்கு பெண்கள் ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். கொஞ்சம் பழைய வீடு என்று பழுது பார்க்க ஹெல்ப் லைன் கம்பனி மூலம் ஆட்கள் வந்து வேலை பார்க்கின்றார்கள். அங்கே தங்கி இருக்கும் எல்லா பெண்களுடைய குளியலறையிலும் கேமரா வைக்கப்பட்டு குளிக்கும் வீடியோ எடுக்கப்படுகிறது.

கம்பனி நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் கேமரா வைத்திருக்கலாம். ஆனால் குளியலறையில் மட்டும்தான் கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் பிளம்பர் மூர்த்திதான் கேமரா வைத்தான். அவன்தான் வைத்தான் என்பதற்கு ஆதாரமாக அந்த பெண்கள் குளிக்கும் வீடியோவும் அவன் செல்போனிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் அதே வீடியோவை வைத்துக் கொண்டு யாரோ ஒருவன் அந்த பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தேடிப்பார்த்து லேகா நல்லவள் என்றும், பிரபா புத்திசாலி என்றும் முடிவு செய்து அவர்களை விட்டு விட்டவன் சுதாவையும், நந்தினியையும் டாச்சர் செய்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நந்தினியையும் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சுதாவையும் தள்ளி இருக்கின்றான்.

மூர்த்தியுடைய அலைபேசியிலிருந்த வீடியோக்கள் அந்த மர்ம நபருக்கு எவ்வாறு கிடைத்தது?

இந்த பெண்களை இவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? இந்த பெண்கள் தவிர, மற்ற காலேஜ் பெண்களையும் தேர்ந்தெடுத்திருக்கின்றான் அது எப்படி?

சைக்கோ இப்படி நல்லவளா? கெட்டவளா என்று தேடிப்பார்த்தா வேட்டையாடுவான்? அப்படிப்பார்த்தால் அவன் சைகோவே இல்லை என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் பூங்குழலியை கொன்றதை வைத்து அவன் சைக்கோ என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். அல்லது பூங்குழலி நந்தினி. சுதா போல் ஏதாவது தப்பு செய்தாளா? அவள்தான் ஹாஸ்டலை விட்டு வெளியே செல்லவே இல்லையே.

அந்த டார்ட்டூ ஆசாமியும் சைக்கோவும் ஒரே ஆளா?

இந்த எல்லா கேள்விகளுக்கும் மாறனுக்கு விடைக் கிடைத்தால் குற்றவாளியை நெருங்கலாம்.

அலைபேசி அடிக்கவே இயக்கி காதில் வைத்த மாறன் “சொல்லுங்க அன்வர்” என்று சொல்ல

“குட் நியூஸ் என்று சொல்லுறதா? பேட் நியூஸ் என்று சொல்லுறதா தெரியல மாறன். எனக்கு கோயம்புத்தூருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. ஹேக்கிங் கேஸ் இனி முழுக்க முழுக்க உங்களோடது” என்றான்.

“என்ன சொல்லுறீங்க? என்ன திடிரென்று” மாறன் சற்று அதிர்ந்தான். ஆனாலும் போலீஸ் வேலையில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல் மறுநொடி சாதாரணமாக பேசினான்.

“ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்ததுதான். சுதா கேஸ பாக்குறதால மினிஸ்டர் என் ட்ரான்ஸ்பர ஹோல்டு பண்ணி வச்சிருந்தார். உங்கள பத்தி சொல்லி புரிய வச்சேன். அவரும் ஓகேனு சொல்லிட்டாரு. அவரும், அவர் பொண்ணு யாமினியும் எப்ப வேணாலும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண தயாரா இருக்காங்க”

“எப்போ கிளம்புறீங்க?”

“சொந்த ஊருக்கு போறோம்னு சொன்னதும் என் பொண்டாட்டி இப்போவே பேக் பண்ண ஆரம்பிச்சிட்டா. நாளன்னைக்கே”

“அப்போ நாளைக்கு உங்க வீட்டுல எல்லாரும் மீட் பண்ணலாமா? முடியுமா?”

“கண்டிப்பா. கேஸ்ல என்ன ஹெல்ப்புனாலும் கேளுங்க. அப்போ நான் வைக்கிறேன்”

“ஓகே” என்ற மாறனுக்கு அன்வர் கேஸிலிருந்து விலகியது டென்ஷனை கொடுத்தாலும் தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

மீண்டும் சிந்தித்த மாறனுக்கு பிரபாவும், லேகாவும் சொன்னதை வைத்து பார்த்ததில் ஹேக்கர் ஒரு முழு சைக்கோ என்று மட்டும் தெளிவாக புரிந்தது. மூர்த்தியின் அலைபேசியில் சுதா, நந்தினி, பிரபா மட்டுமல்லாது லேகாவினதும் குளிக்கும் வீடியோ இருந்தது. பிரபாவை மூர்த்தி மிரட்டியதாக நினைத்து பிரபா போலீசில் சிக்க வைத்தாள். தான் அவளை மீண்டும் தொந்தரவு செய்தால் அவள் மீண்டும் போலீசிடம் செல்லக் கூடும் என்று அவளை தொந்தரவு செய்ய வில்லை என்று எடுத்துக் கொண்டாலும் லேகாவை ஏன் தொந்தரவு செய்யவில்லை என்ற கேள்வி மாறனுக்குள் தோன்றவே லேகாவை விசாரிக்க வேண்டும் என்று அழைத்தான்.

பாவம் அவளுக்கு தன்னை ஒருவன் வீடியோ எடுத்ததே தெரியவில்லை. அவளது வாக்கு மூலத்தின்படி ஹேக்கர் அவளை பின் தொடர்ந்திருக்க வேண்டும். பீச்சில் அவள் பேசியத்திக் கேட்ட பின் அவளை மிரட்ட வேண்டாம் என்று முடிவு செய்த்திருக்கலாம். அதே போல் பிரபாவும் அப்பா சொல் பேச்சு கேட்பவள் என்ற முடிவுக்கும் வந்திருக்கலாம்.

சுதாவும், நந்தினியும் பசங்க கூட சுத்தி இருக்கிறார்கள். அது அவன் பார்வையில் தப்பாக தெரிந்திருக்கும் அதனால் மிரட்டி இருக்கலாம். அவன் நினைத்தது போலவே அவர்களும் தப்பான வழியில் சென்றிருக்க, அவர்களை டாச்சர் செய்திருக்கின்றான். இதனால் நந்தினி தற்கொலை செய்திருக்கின்றாள். சுதா மனநலம் பாதிக்கப்பட்டாள். பூங்குழலியை அநியாயத்துக்கு கொன்று விட்டான். எல்லாம் செய்த மூர்த்தியை ஒன்றுமே செய்யவில்லை. நல்ல நியாயம். சைக்கோவின் நியாயம்” நெற்றியை தடவியவாறே சிந்தித்தவனுக்கு அடுத்த ஹெல்ப் லைன் கம்பனி மீட்டிங் நடக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டியதை எண்ணும் போது கோபம் கோபமாக வந்தது.

நாட்கள் வேகமாக நகர மாறன் காலையில் யோகா மையத்துக்கு சென்று அதன் பின் ஷாலியினியோடு காலை உணவை உண்டு விட்டு காவல்நிலையம் வர ஆரம்பித்தான்.

ஒரு வாரம் சென்ற நிலையிலையே மனதை ஒருநிலை படுத்த முடிந்தவனுக்கு தன்னால் வெற்றி வெளிப்படும் பொழுது அவனை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

ஆனால் அவன் அறியாதது அவன் ஷாலினியோடு இருக்கும் பொழுது வெற்றியாகத்தான் இருக்கின்றான் என்று. அவளோடு இருக்கும் நொடிகளை மறந்து விடுவதன் இரகசியத்தை அவன் ஆராய்ச்சி செய்ய காவல்நிலையம் சென்ற உடன் மறந்து விடுவதால் மாறனும் அதை பற்றி பெரிதாக சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஷாலினியும் மாறன் வெற்றியாக முழுசாக மாற வேண்டும் இல்லையென்றால் தாலி கட்டிய பின் தன்னை விட்டு செல்வானோ என்று அஞ்சி கல்யாண பேச்சை எடுக்க மறுத்தாள். அவன் வரும் காலை பொழுதுக்காக காத்திருப்பவள் அவனுக்காக சமைத்து, அவனோடு உண்டு மகிழ்ந்தாள்.

லதாதான் தினமும் ஒருவேளையாவது தங்களோடு உணவுண்டவன் யோகா மையத்தில் இணைந்தபின் காலை உணவையும் வெளியில் சாப்பிடுவதாக எண்ணி வருந்தினாள்.   

இதற்கிடையில் வெற்றியின் மடிக்கணினியை அலசியவனுக்கு பெரிதாக அதில் ஒன்றும் இருப்பது போலும் தெரியவில்லை. எதற்காக இவ்வளவு சிகியூரிட்டி லாக் போட்டான் என்பதை மறந்த மாறனும் அதை எடுத்து வைத்தான்.

நாட்கள் உருண்டு சென்று மீட்டிங்குக்கான நாளும் வந்தது.

“சார் நான் நந்தகோபால் பேசுறேன் சார்”

“சொல்லுங்க நந்தகோபால். மீட்டிங் எத்தனை மணிக்கு நடக்குது? எங்க நடக்குது?”

“கம்பனிலதான் சார் நடக்குது. பதினொரு மணிக்கு”

“கேமரா பிக்ஸ் பண்ண முடிஞ்சதா?”

“பக்கவா பண்ணிட்டேன் சார்” என்றான் நந்தகோபால் இன்று கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டான்.

“வந்ததும் வந்துட்டோம். இருந்து பார்த்துட்டே போறோம்” என்றான் மாறன்

மாறன், கௌதம், மஞ்சுளா மூவரும் ஒரு மினி வேனில் ஹெல்ப் லைன் கம்பனி பக்கவாட்டில் அமர்ந்திருக்க, மீட்டிங்காக அங்கே வேலை பார்க்கும் அனைவரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

அலைபேசியை அனைத்து பெட்டியில் போட “என்ன சார்” என்றான் கௌதம்.

“கொஞ்சம் பொறுமையா இரு” என்ற மாறனுக்கு யோசனையாகத்தான் இருந்தது. அலைபேசி ஒன் இல் இருந்தால் தானே டிவைஸை பொருத்தி வீடியோஸ் மற்றும் போட்டோக்களை எடுக்க முடியும்.

“ஒருவேளை எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்களா இருக்கும். போன் ஒன் பண்ணதும் மெஸேஜ் வரும் இல்ல. அத பார்ப்பாங்க. பார்த்த உடன் போன் ஹேக் ஆகும். திட்டமிட்டே செய்யிறாங்க சார்” என்றாள் மஞ்சுளா.

பெட்டியில் போடப்பட்ட பின் அந்த பெட்டி மூடப்பட்டு மீட்டிங் நடக்கும் ஹாலில் பின்னாடி உள்ள மேசையின் மீதே வைக்கப்பட மாறனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது.

கௌதம் மீண்டும் “என்ன சார் இது?” என்றான்.

“நாம சறுக்கிட்டோம் சார். இப்படி வச்சா கண்டிப்பா யாரும் டிவைஸ் பொறுத்த வாய்ப்பே இல்ல. அப்போ வெளி ஆளு என்ற கேள்வியும் தேவ இல்ல. ஒன்லி எஸ்.எம்.எஸ் தான்” என்றாள் மஞ்சுளா

“ஆனா மூர்த்தியோட போனுக்கு எந்த எஸ்.எம்.எஸ்ஸும் வரல” என்றான் மாறன்.

“அப்போ எப்படி சார் அவன் போன்ல இருந்து வீடியோஸ் எல்லாம் எடுத்திருப்பான்? ஒரு வேல மெமரி கார்டையே கழட்டி எடுத்துட்டு போய் இருப்பானோ? ஆனா எல்லார் போன்லையும் அத பண்ண முடியாதே. சந்தேகம் வருமே” கௌதம் மண்டையை பிச்சிக்காத குறையாக கேட்க. மாறன் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தான்.

மீட்டிங்கைக்காக இரண்டு வாரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை. காத்திருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லையா? என்ற கேள்வி மாறனின் மண்டையை குடைய, திங்க், திங்க், திங்க் என்றது அவன் மூளை.

“நம்ம கேஸ்ல சம்பந்த பட்ட எல்லா பொண்ணுங்க வீடியோஸும் மூர்த்தி போல இருக்கு. அப்போ அவன் போனதான் ஹேக்கர் ஹேக் பண்ணி இருக்கணும். அது கம்பனில ஹேக் பண்ண படலனா. வேற எங்க? நாம சறுக்கினாலும் சரியான பாதைலதான் போய்கிட்டு இருக்கோம். மூர்த்தியை விசாரிச்சோம் அவன் சொன்ன தகவலை வச்சுதான் இங்க நிக்கிறோம். எதையோ மிஸ் பண்ணிட்டோம் என்ன அது?” மாறன் கண்களை மூடியவாறே கேட்க

“அவனுக்கு அம்மா, கம்பனி தவிர வேற யார் கிட்ட இருந்தும் போன் வராது. அவன் அம்மாக்கு மட்டும்தான் போன் பண்ணுவான்” என்றாள் மஞ்சுளா.

“வேற”

“அஞ்சி அல்லது ஆறு நாள் வேலை செய்வான். மூணு அல்லது ரெண்டு நாள் பொண்ணுகளை கூட்டிகிட்டு வந்து ரூம்ல கூத்தடிப்பான் ப்ரெண்ட்ஸ்னு யாரும் இல்ல” என்றான் கௌதம்

“வேற”

“சண்டே ஆனா காலைல சர்ச்சுக்கு போவான் சார். மாலைல பாருக்கு போவான் சார்” என்றாள் மஞ்சுளா.

கண்களை திறந்த மாறன் “எக்சாக்ட்லி இத நான் பெருசா எடுத்துகல. சர்ச்சும் சரி, பாரும் சரி கூட்டம் கூடுற இடம்” என்றான் மாறன்.

“ரெண்டு வாரம் வேஸ்ட் ஆச்சு சார்” முனகினான் கௌதம்.

நெற்றியை தடவிய மாறனோ “இந்த ஒரு கேஸ் இப்படி படுத்தும்னு நான் என்ன கனவா கண்டேன்” வண்டிய திருப்பு சர்ச்சுக்கு போலாம்”

“ஏன் சார் அந்த மூர்த்தியை விசாரிக்கும் போது பெட்டியை எங்க வைக்கிறாங்கனு நீங்க கேக்கலையா?” கோபத்தை அடக்கியவாறு கேட்டான் கௌதம்.

“கேட்டேன். வெளில வைக்கிறதாதான் சொன்னான்”

“அப்போ இன்னக்கி மட்டுமா உள்ள வச்சாங்க” புரியாது கேட்டாள் மஞ்சுளா.

“இல்ல. வளமையாகவே இப்படித்தான் வைப்பாங்க என்று நந்தகோபால் தரவா விசாரிச்சு தகவல் கொடுத்தாரு நான்தான் பார்க்கணும்னு கிளம்பி வந்தேன்” என்ற மாறனை கண்ணாடி வழியாக முறைத்தான் கௌதம்.

“ஏன் சார் அந்த மூர்த்தி நம்ம கிட்ட பொய் சொல்லிட்டானா” கோபமாக கேட்டாள் மஞ்சுளா 

“இல்ல. அவன் பொய் சொல்லல. பெட்டி மீட்டிங் நடக்குற இடத்துலயே பின்னாடி வைக்கப்படுறது மூர்த்தி கவனிச்சிருக்க மாட்டான். மீட்டிங் முடிஞ்ச உடனே பெட்டியை வெளிய எடுத்து வச்சி மொபைலை சிகியூரிடியே கொடுப்பாரு என்றுதான் நந்தகோபால் சொன்னாரு. சோ மொபைல் காணாமல் போக வாய்ப்பும் கம்மி” கண்களை மூடிய மாறன் “டேய் கௌதம் நீ முறைக்குற அனல் இங்க தெறிக்குது. நான் ஒன்னும் ஞானி இல்ல. கலப்ரிட் கம்பனிலதான் இருக்கான்னு உள்ள புகுந்து பிடிக்க. விசாரணைல என்ன துப்பு கிடைக்குதோ அதை வச்சுதான் மூவ் பண்ண முடியும். அங்க நான் மட்டும் இல்ல. அன்வரும் இருந்தாரு. அவருக்கு கூட சார்ச்சல, பார்ல விசாரிக்கணும் என்று தோணல. காரணம் அங்க கம்பியூட்டர்ஸ் யூஸ் பண்ண மாட்டாங்க. இதுதான் சரினு நமக்கு தோணுறது சில நேரம் தவறும். அத தான் யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுறாங்க. நீயாச்சும் இல்ல சார் சார்ச்சு போய் விசாரிக்கலாம், பார்ல போய் விசாரிக்கலாம்னு ஒருதடவையாவது சொன்னியா? ஏன் சொல்லல? ஏன்னா ஹெல்ப் லைன் கம்பனி எப்படிப்பட்ட கம்பனி? அங்க எந்த மாதிரியான ஆட்கள் வேலை பாக்குறாங்க? இந்த மாதிரி ஹேக்கிங் சர்ச்சுல நடக்குமா? பார்ல நடக்குமா? கம்பனில நடக்குமான்னு கேட்ட? ஸ்கூல் படிக்கிற பசங்க கூட கம்பனி என்றுதான் சொல்வாங்க”

“எது உண்மை என்று கேட்கவா முடியும்? அவனைத்தான் பரலோகம் அனுப்பிட்டீங்களே” கடுப்பாக மாறனை மனதில் வசை பாடிக்கொண்டிருந்த கௌதம் மாறன் அவன் பெயரை சொல்லி அழைத்த உடன் திடுக்கிட்டு கண்ணாடி வழியாக பார்த்து “யப்பா.. இவருக்கு நெத்திலையும் கண்ணு” முணுமுணுத்து விட்டு மாறன் சொல்வதையெல்லாம் காதில் வாங்கியவாறு அமைதியாக வண்டி ஓட்டினான்.   

“எனக்கு ஒரு விஷயம்தான் இன்னும் புரியல” மாறன் கண்களை திறந்து சொல்ல கௌதம் சர்ச் வந்து விட்டதாக வண்டியை நிறுத்தி இருந்தான்.

“என்ன சார்” என்று இருவருமே அவனை ஏறிட 

“சார்ச்ச்ல் இல்ல பார்ல இருந்து மூர்த்தியோட போன்ல இருந்து வீடியோசை எடுத்திருந்தாலும் ஹேக்கருக்கு விக்டமோட அட்ரஸ் எப்படி கிடைச்சது?”

மாறானது கேள்வியில் ஹேக்கர் கம்பனி ஆளாகத்தான் இருக்கக் கூடும் என்று மாறன் சந்தேகப்பட்டதில் எந்த தவறும் இல்ல என்று மஞ்சுளாவுக்கும் கௌதமுக்கும் புரிந்து போனது.

“ஆமா சார். எந்த பொண்ணுமே அந்த வீட்டு முன்னால ஒரு செல்பி கூட எடுக்கல. வீட்டை பத்தியோ, காலேஜ பத்தியோ எந்த போட்டோவும், டீடைலும் யார் போன்லையும் இல்ல. போன் நம்பர் கூட சொந்த அட்ரஸ் வச்சிதானே வாங்கி இருக்காங்க. ஹேக் பண்ணினாலும், ரெண்ட் ஹவுஸ் பத்தி எந்த டீடைலும் இல்லாம ஹேக்கர் இந்த பொண்ணுங்கள நெருங்கி இருக்கான்னா மூர்த்தி மட்டும் காரணம் இல்ல. அவங்கள நல்லா தெரிஞ்ச யாரோ. மூர்த்தி இல்லனா மூர்த்திக்கு தெரிஞ்ச யாரோ தான் இன்வோல் ஆகி இருக்கணும். அந்த யாரோ ஹெல்ப் லைன் கம்பனி என்று நீங்க சந்தேகப்பட்டது தப்பில்ல சார்” என்றாள் மஞ்சுளா.

அவளை மெச்சுதலான பார்வை பார்த்தவன் “நமக்கு கிடைச்ச ஒரே க்ளூ மூர்த்திதான் கைஸ் சோ லேஸ் கோ” என்ற மாறன் சர்ச்சுக்குள் நுழைந்தான்.

Advertisement