Advertisement

அத்தியாயம் 16

ஷாலினி கொடுத்த ஆரஞ்சு ஜூஸை அருந்தியவாறே ஷாலினியை சைட் அடித்துக் கொண்டிருந்தான் மாறன். அவன் செய்வது சரியா? தவறா? என்றெல்லாம் யோசிக்கவுமில்லை. வெற்றிக்கு துரோகம் செய்வதாக நினைக்கவுமில்லை. ஏன் அவளை பார்த்துக் கொண்டிருக்கின்றான்? தெரிந்து பார்க்கின்றானா? அறிந்து பார்க்கின்றானா? புரியாமல் பார்க்கின்றானா? அவனுக்கே தெரியாத ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

“ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாமா?” புடவை முந்தியை இடுப்பில் சொருகியவாறு தோசை கரண்டியை கையில் வைத்துக் கொண்டு ஷாலினி கேட்ட விதத்தில் சாப்பிட்டு விட்டு வந்தவனுக்கு மறுக்க மனம் வரவில்லை. தலையசைத்து “சரி” என்று சொல்ல அவளும் தோசை வார்க்க ஆரம்பித்தாள்.

சாம்பாரை தாளித்த பொழுது அதனால் வெளிப்பட்ட ஆவி முகத்தில் அடிக்க சூடு தாங்காமல் கண்களை மூடி உதடு குவித்து ஒரு வித மேனரிசம் செய்தவளை கதவில் சாய்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் மெல்ல அடியெடுத்து அவளை நெருங்கினான்.

“காலையிலையே எப்படி வேர்குது பாரு?” அவள் புடவை முந்தியை இழுத்து முகத்தில் பூத்த வியர்வை துளிகளை ஒற்றி எடுத்தவன் “பக்கா பொண்டாட்டி மெட்டீரியல் ஆகிட்ட ஷாலு. நீ காலேஜ் படிக்கிறப்போ நான் கூட கல்யாணத்துக்கு அப்பொறம் நான்தான் சமைக்கணுமோனு நெனச்சேன்” என்று புன்னகைக்க

கண்களை அகலவிரித்து மாறனை பார்த்தவளுக்கு அவன் மாறனாக தெரியவில்லை வெற்றியாகத்தான் தெரிந்தான். எங்கே வெற்றி என்று அழைக்கப் போய் மயங்கி விழுந்து விடுவானோ. சுயநினைவுக்கு வந்து விடுவானோ என்ற அச்சம் ஷாலினியின் மனதில் உருவாக அவனை இறுக அணைத்துக் கொண்டவள் விசும்ப ஆரம்பித்தாள்.

“ஏய் ஷாலு என்னடா? என்னடா ஆச்சு?” அவள் முகத்தை தன் நெஞ்சிலிருந்து நிமிர்த்திய மாறன் அவள் கண்களையே பார்த்தவாறு கேட்க

சோபையாக புன்னகைத்தவள் “எங்க நீ என் காதலை ஏத்துக்கொள்ளாம போய்டுவியோ? எங்க நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோன்னு நான் தினம் தினம் கண்ணீர் வடிக்காத நாளே இல்ல தெரியுமா?”

“இதுக்கு போயா அழுகுற? சொல்லு என்ன பண்ணனும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” தீவீர முகபாவனையில்தான் கேட்டான் மாறன்.

“இங்கயே, இப்போவே, இன்னைக்கே பண்ணிக்கலாமா?” ஷாலினி ஒரு முடிவோடு கேட்க சம்மதமாக தலையசைத்தான்.

அவனை அழைத்துக் கொண்டு பூஜையறைக்கு சென்ற ஷாலினி “இது எங்க அம்மாவோட தாலி அக்கா அவ கழுத்துல ஏறனும் என்று ஆசைப்பட்டா. என் கழுத்துல ஏறத்தான் விதி இருக்கு போல” என்றவள் அவள் அன்னையின் புகைப்படத்தில் மாட்டப்பட்டிருந்த தாலியை எடுக்க குனிந்தாள்.

அதே நேரம் மாறனின் அலைபேசி அடிக்கவே அதை இயக்கி காதில் வைத்தவன் “இதோ வந்துட்டேன் கௌதம்” என்றவன் ஷாலினியை பார்த்து “பூஜை அறைல நாம என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்” என்று கேட்டவன் “எனிவே எனக்கு லேட் ஆச்சு ஷாலினி. நான் நாளைக்கு வர்றேன்” அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று கிளம்பி இருந்தான்.

மாறனாக மாறி கிளம்பும் அவனை வெறிக்க வெறிக்க பார்த்திருந்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புலப்பட்டது. அது மாறன் அவளோடு தனியாக இருக்கும் பொழுது வெற்றியாகத்தான் இருக்கின்றான். மாறனாக அல்ல. அவன் மாறன் என்று நியாபகப்படுத்தும்வரைக்கும் வெற்றியாகத்தான் இருக்கின்றான். மாறன் செய்யும் வேலையை நியாபகப்படுத்தும்வரைக்கும் வெற்றியாகத்தான் இருக்கின்றான். மாறன் என்று யார் அழைத்தாலும், அது ஷாலினியாக இருந்தாலும் வெற்றியாக இருப்பவன் மாறனாக மாறி விடுகின்றான்.

அன்று அவன் மாறனாக அவளை முத்தமிடவில்லை வெற்றியாகத்தான் முத்தமிட்டு இருக்கின்றான் இவள் வெற்றி என்று அழைத்ததனால்தான் சுயநினைவுக்கு வந்திருக்கின்றான். தான் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிய அவளை விட்டு விலகி இருந்தான்.

அப்படியாயின் அவன் ஏன் மயங்கி விழுகின்றான். அவன் மயங்கி விழுவதால், கோபப்படுவதாலும் அவன் உடல்நிலை பாதிக்கும் என்று அவன் தந்தை கூறுகின்றார். அதனால்தான் மாறன் வெற்றியாக மாறக் கூடாது என்று சொல்கின்றார்” யோசனையில் ஆழ்ந்தவாறே பாடசாலை செல்ல தயாரானவள் “கோபம். கோபம் வந்து அவன் வெற்றியாக மாறினால் மட்டும்தான் மயங்கி விழுகின்றான் மற்றபடி  நான் அருகில் இருக்கும் பொழுது அவன் வெற்றியாக மாறிய ஒவ்வொரு தடவையும் அவன் மயங்கி விழவில்லை” என்று புரிந்துபோக முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது.

“அப்போ அப்போ நான் மாறன கிஸ் பண்ணல. என் வெற்றியைத்தான் கிஸ் பண்ணேன்” சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவள் பாடசாலை கிளம்பி இருந்தாள்.

ஷாலினி கண்டு பிடித்த உண்மை பூபதிக்கு கூட தெரியவில்லை. ஷாலினி என்பவளால் மட்டும்தான் வெற்றியை உயிர்ப்பிக்க முடியும். அன்னை இல்லாமல் வளர்ந்த வெற்றி சிறு வயதிலையே அவன் கேட்டது கிடைக்க, கிடைக்காமல் போனால் அடம்பிடிக்கும் குழந்தையாகத்தான் வளர்ந்தான். கோபமும் அதிகமாக வரும். அது லதாவின் மீது இருக்க, யாராவது அன்னையை பற்றி பேசினால் சீறிப் பாய்ந்தான்.

அவனுக்குள் இருந்த மொத்த நேசத்தையும் அவன் காதலாக கொட்டியது ஷாலினி ஒருத்தி மீதுதான். பார்த்த உடன் காதலா? பேசி பழகிய பின் காதலா? என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. அவள் அவன் வாழ்க்கையில் வந்த பின்னால்தான் அவன் எண்ணங்கள் மாறிப் போனது. சின்ன வயதிலையே அன்னையை இழந்து தந்தையோடு அவள் வாழும் வாழ்க்கை கிட்டத்தட்ட அவன் வாழ்க்கைக்கு ஒத்துப்போக தன்னையே பார்ப்பதை போன்று பார்த்தவனுக்கு அவளது பேச்சு, நடவடிக்கை, குணம் என்று எல்லாம் பிடித்துப்போக, அது எந்த புள்ளியில் காதலாக மாறியது? எவ்வளவு ஆழமானது என்று கூட தெரியவில்லை.

அதன் ஆழம் மாறனுள் பதிந்து இன்று அவளை பார்க்கும் பொழுதெல்லாம் உயிர்த்தெழ போதுமானதாக இருந்தது என்பதுதான் உண்மை.

கைக்கடிகாரத்தை பார்த்தவாறே வண்டி ஓட்டும் மாறனுக்கு ஷாலினியின் வீட்டில் அரைமணித்தியாலம் எவ்வாறு கரைந்தது என்று தெரியவில்லை. “அவளை பார்த்தாலே சொக்கி போயிடுறேன். யப்பா… என்ன கண்ணுடா… பார்க்க கூடாதுனு புத்தி சொன்னாலும் மனசு கேக்க மாட்டேங்குதே” புலம்பியவாறே காவல்நிலையத்தை அடைந்தவனுக்கு அங்கே அமர்ந்திருந்த யுவதியும், இளைஞ்சனும் கண்ணில் பட கூடவே நின்றிருந்த கௌதமிடம் கண்களாளேயே யார் என்று விசாரித்தவாறு தனது அறைக்குள் நுழைந்தான்.

மாறனின் பின்னால் வந்த கௌதம் “சார் லேகா சார். அது அவ ஹஸ்பண்ட். ஊருக்கு போனவளுக்கு கல்யாணம் ஆச்சு. நைட் ட்ரைன் புடிச்சி ஊருக்கு போய் கையோட கூட்டிகிட்டு வந்துட்டேன். அவ அப்பாவும், அண்ணன்களும் கலாட்டாவே பண்ணிட்டாங்க. நந்தினி இறந்த விஷயமா சின்ன என்குயரிதான் வந்துட்டு போங்க இல்லனா கோப்ரேட் பண்ணாத குத்தத்துக்காக உங்கள தூக்கி உள்ள வச்சிடுவாங்கனு சொன்னா பொம்பள புள்ளய உள்ள வச்சிடுவியான்னு என்னையே அடிக்க வந்துட்டாங்க” விரக்தியாக சொன்னான் கௌதம்.   

“என்னடா காலையிலையே காமடி பண்ணிக்கிட்டு” மாறனுக்கு சிரிப்பாக இருந்தாலும் ஊர்க்காரர்கள் மத்தியில் தனியாக சிக்கியவனின் நிலையை எண்ணி பாவமாகத்தான் இருந்தது.

“என்ன சார் நீங்க வேற நான் கத சொல்லுறேன்னு நினைக்கிறீங்க. நல்லவேளையா படிச்சவன் ஒருத்தன் இருந்தான். போலீசை அடிச்சா அதுக்கும் சேர்த்து கேஸ் போடுவாங்க. என்குவரின்னுதானே சொல்லுறாங்க அனுப்பி வைங்க என்றான். அவன் சொன்ன பின்னாடியும் பொண்ணும் மாப்பிள்ளையும் நாளைக்குள்ள ஊருக்கு வரலைனா என் வீடு தேடிவந்து வீட்டை கொளுத்திடுவோம்னு மிரட்டித்தான் அனுப்பி வச்சாங்க சார்” நொந்தவனாக சொல்ல, மாறனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சரி உள்ள அனுப்பு. ஆமா அந்த பிரபாவ எத்தனை மணிக்கு வர சொன்ன?” கைக்கடிகாரம் ஒன்பது என்று காட்ட அதை பார்த்தவாறே கேட்டான்.

“பத்தரை மணிக்கு சார்”

“குட். அந்த பொண்ண மட்டும் உள்ள அனுப்பு. அவ ஹஸ்பன அங்கேயே புடிச்சி வை. இல்லனா அவ வாய தொறக்க மாட்டா” என்றவன் இருக்கையில் அமர கௌதம் வெளியேறினான்.

சிறிது நேரத்தில் லேகா தயங்கித் தயங்கி உள்ளே நுழைய “பயப்படாம வந்து உக்காருமா… போர்மல் என்குயரிதான்” என்றவன் மேசையின் மீதிருந்த தண்ணீர் கிளாஸை கொடுக்க மடமடவென அதை அருந்தியவள் மாறன் என்ன கேட்பானோ என்று அச்சோத்தோடு அவனையே பார்த்தாள்.

“எங்க விசாரணையில பிரபா எல்லாத்தையும் சொல்லிட்டா. நீதான் அது உண்மையா? பொய்யான்னு? சொல்லணும்” என்றான் மாறன்.

“என்ன சார் சொன்னா?” எச்சில் கூட்டி விழுங்கிய விதமே போலீஸ் விசாரணையின் போது அவள் எதையோ மறைத்திருக்கின்றாள் என்று புரிந்தது.

“எல்லாமே… ஒவ்வொண்ணா நான் சொல்லுறதைவிட நீயே சொல்லிடு. அதுதான் உனக்கு நல்லது” என்ற மாறன் லேசாக புன்னகைத்த விதத்தில் லேகாவுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

“சார் நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். இது என் வீட்டுக்காரருக்கோ, எங்க வீட்டுக்கோ தெரிய வேணாம். ஏற்கனவே சுதா, நந்தினி கூட வெளில தங்கினதுல வீட்டுல பிரச்சினை. ரொம்ப செலவு பண்ணி கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. வரும் போது அவர் திட்டிகிட்டேதான் வந்தாரு” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்திருக்க, மாறன் சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தான்.

“படிக்கலைனா வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என்ற பயத்துலையே காலேஜுக்கு வந்தேன். ஹாஸ்டல்லதான் நந்தினி பழக்கமானா. பிரபா, பூங்குழலி, சுதா நந்தினி, லட்சுமி, பிரியா, கீதா என்று எல்லாரும் ஒரே செட்தான். மத்த பொண்ணுங்க மினிஸ்டர் லக்ஷ்மிகாந்த் பொண்ணு யாமினியோட வாலுங்களா இருந்தாங்க. இது எங்களுக்கு பிடிக்கல.

ஹாஸ்டல் சாப்பாடு சரியில்லை. நைட்டுல சினிமா போக முடியல. நான் வெளில தங்கலாம்னு இருக்கேன்னு பிரபா சொன்னா, சுதாவும் ஆமாம்பா வெளில தங்கினா சுதந்திரமா இருக்கலாம்னு சொல்ல, நந்தினியும் வீட்டுல கேட்டு சொல்லுறதா சொன்னா. பூங்குழலி அப்பவே மறுத்துட்டா. எனக்கு ரெண்டு மனசு. வீட்டுல கேக்கலாமா? வேணாமா? கேட்க போய் படிப்பை பாதியிலையே நிறுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களோ என்ற பயம் வேறு.

ஒருவழியா அப்பா போன் பண்ணப்போ… என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் வெளில வீடெடுத்து தங்க போறாங்க. நான் மட்டும் தனியா ஹாஸ்டல்ல இருக்கணும்னு சொன்னேன். எங்க அப்பாக்கு காத்து, கருப்புனா பயம். ஹாஸ்டல்ல பேய், பிசாசு இருக்குமோனு பயந்துகிட்டு என்னையும் ப்ரெண்ட்ஸ் கூட வெளில தங்க சொல்லிட்டாரு. நானும் சந்தோசமா அவங்க கூட போனேன்” என்றவள் மேசையிலிருந்த தண்ணீர் கிளாஸிலாசை பார்க்க மாறன் அதை நிரப்பிக் கொடுக்க, ஒரு மிடறு அருந்தினாள்.

“ஆரம்பத்துல, பார்க், பீச், சினிமா, காலேஜ் என்று எங்க வாழ்க ஜாலியாதான் போய் கிட்டு இருந்தது. எங்க நாலு பேர்லயும் சுதா நல்லா படிக்கிற பொண்ணு மட்டும் இல்ல. கொஞ்சம் வசதியான குடும்பமும் கூட. ஒருநாள் அவ நைட் கிளப் போலாமான்னு கேட்டா. அப்படினா என்னனு கேட்டேன். ஹோட்டல் மாதிரின்னு சொன்னாங்க. நானும் சரினு சொன்னேன். நந்தினி வேணாம்னு சொன்னா. போனதே இல்லையே ஒரே ஒருதடவை போய் பார்க்கலாம்னு சுதா கெஞ்ச, நந்தினியும் சம்மதம் சொல்ல நாங்க போனோம். குடியும் கூத்துமா இருக்குறத பார்த்து நான் மிரண்டுட்டேன். குடிக்க கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்தாங்க நான் குடிக்க போனப்போ பிரபா தடுத்து இங்க தண்ணி கூட குடிக்காத, போதை மருந்து கலந்திருக்கக் கூடும். இங்க இருக்குற யாரையும் நம்ப முடியாதுனு சொன்னா.

வீட்டுக்கு போலாம்னு சொல்லிகிட்டே இருந்தேன். நந்தினியும், சுதாவும் யார்னே தெரியாத பசங்க கூட டான்ஸ் ஆடினாங்க. ஒருவழியா அன்னக்கி வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டோம். என்னால நம்பவே முடியல. இப்படி எல்லாமா இருக்காங்களான்னு? ரெண்டு நாள் பிரபாகிட்ட புலம்பிகிட்டே இருந்தேன்.

ஒருநாள் நந்தினி ஒரு பையன் கூட வந்து வண்டில இறங்கினா. அப்போ பிரபா ‘யார்டி அவன் உனக்குத்தான் வீட்டுல மாப்புள பார்த்து மேரேஜ் பிக்ஸ் ஆச்சேனு கேட்டா’ ‘ப்ரெண்டுடி’ என்ற நந்தினி வேற எதுவும் சொல்லல. அது யாரு நமக்கு தெரியாத பிரெண்டு? நம்ம காலேஜ் கூட இல்லையேன்னு நானும் பிரபாவும் பேசிக்கிட்டோம். ரெண்டு மாசத்துக்கு அப்பொறம் வேற ஒருத்தன் கூட வந்து இறங்கினா. கேட்டா அதே பதில். பிரபாவும் “நீ என்னவேனா பண்ணு எவனையும் வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு வரக் கூடாதுனு சொல்லிட்டா” நந்தினி சிரிச்சலே தவிர எதுவும் சொல்லல.

சுதாவும் நந்தினி போலவே கண்ட கண்ட பசங்க கூட காலேஜுல இருந்து கிளம்பி லேட்டா வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. எனக்கு பயமா இருக்கு பிரபானு சொன்னேன் “அவங்க பெர்சனல் லைப்ல நாம ரொம்ப இன்வோல் ஆகா முடியாது. என்ன செய்யிறோம்னு தெரிஞ்சிதானே செய்யிறாங்க” என்று சொன்னா. நானும் பிரபாவும் காலேஜ் போய் வந்துகிட்டு இருந்தோம். அப்பொறம் தான் நந்தினி சூசைட், சுதா மெண்டல் ஆனது…” அவ்வளவுதான் என்பது போல் மாறனை பார்த்தவள் அமைதியானாள்.

“அப்போ நீயும் பிரபாவும் எந்த தப்பும் பண்ணாதே இல்லையா?” மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியவாறே அவளை ஒரு பார்வை பார்த்தான் மாறன்.

அந்த பார்வையில் உள்ளுக்குள் அச்சம் பரவ, குரலிலும் மிரண்டவள் உளற ஆரம்பித்தாள். “ஒரே ஒரு தடவ தம்மடிச்சி இருக்கேன் சார், பியர் குடிச்சேன் சார். இருமல் வந்தது சார். அந்த நாத்தம் குடலை புடுங்கிருச்சு சார். பியர் கூட கசந்தது. அப்பா மேல சத்தியமா அப்பொறம் நான் அத தொடவே இல்ல சார். அப்பாகிட்ட கூட தம்மடிக்காத, தண்ணியடிக்காத பையனா பார்த்து கட்டிவைக்க சொன்னேன் சார்” என்றவள் குரல் ஆரம்பத்தில் வேகவகமாகவும் கடைசியில் தாழ்ந்தும் ஒலித்தது.

லேகா ஆண்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவள் என்று அவள் அப்பாவின் மீது செய்த சத்தியத்திலையே புரிந்துகொண்டான் மாறன். அவள் சகோதர்கள், தந்தைக்கு அச்சப்படுபவள் காதலில் விழ வாய்ப்பே இல்லை. அவர்களின் மீதிருந்த அச்சத்தால்தான்  சமூகவலைத்தளங்களை கூட உபயோகிக்கவில்லை. ஒரு டப்பா செல்போனை உபயோகித்திருந்தாள்.    

“உன்ன யாராவது போன் பண்ணி மிரட்டினாங்களா?”

“என்னயா சார். இல்லையே” என்றவள் அன்னவுன் நம்பர்ல இருந்து மூணு தடவ போன் வந்தது நான் எடுக்கவே இல்ல. அப்பொறம் வரல சார்”

“எப்போ எல்லாம் வந்தது?”

“வீட்டுல ஒருதடவ, காலேஜ்ல, அப்பொறம் பீச்சில”

“பீச்சிலயா?” மாறனுக்கு சந்தேகமாகவே இருக்க “யார் யார் எல்லாம் பீச் போனீங்க? அங்க என்ன நடந்தது? விலாவாரியா சொல்லு”

“நாங்க நாலு பேரும்தான் போனோம். அலைல விளையாடிட்டு ஒரு போட்டு பக்கத்துல வந்து உக்காந்தோம். அப்போ என் போன் அடிச்சது அன்னவுன் நம்பரனால நான் போன் அடன்ட் பண்ணல. பிரபா கூட ‘போன் அடிக்குதில்ல எடுத்து பேசுடி’ என்று சொன்னா நான்தான் எனக்கு வீட்டுல இருந்து போன் வரும், இல்ல நீங்க மூணு பேரும் போன் பண்ணுவீங்க. மத்தாடி வேற யாரும் போன் பண்ண மாட்டாங்கன்னு சொன்னேன்.

உங்க அப்பா போன் வேல செய்யலைன்னா வேற யாராச்சும் போன்ல இருந்து கூப்டுவாங்கடி என்று நந்தினி சொன்னா. அதுக்கு நான் வீட்டு லேண்ட்லைன் நம்பர் இருக்கே பொறுமையா வீட்டுக்கு வந்து பேசுவாரு. இப்படி கண்டவங்க நம்பர்ல இருந்து போன் போட்டு பொண்ணு நம்பரை கொடுக்க மாட்டாருனு சொன்னேன்.

அதுக்கு சுதா உன் அத்த பையன், இல்ல மாமா பையன் போன் பண்ணி இருப்பான்டி என்று கிண்டல் பண்ணா. அப்பா அம்மாக்கு தெரியாம என்ன பேச்சு வேண்டி இருக்கு? அப்படியே பேசணும்னா அப்பா போன்ல இருந்து கூப்பிடட்டும்னு சொன்னேன். சரியான ரூல்சுக்கு பொறந்தவடினு சிரிச்சாங்க” என்றாள்.

“அதற்கு பிறகு போன் வரலையா” யோசனையாகவே கேட்டான் மாறன்

“இல்ல சார்”

கௌதமை அழைத்து லேகாவின் கணவனை அழைத்து வர சொல்ல அவனும் வந்து லேகாவின் அருகில் அமர்ந்தான்.

“சிரமத்துக்கு மன்னிக்கணும் தம்பி என்ன பண்ணுறது எங்க வேல அப்படி. உங்க பேரென்ன சொன்னீங்க?”  அவன் லேகாவை விசாரித்த தொனிக்கும் அவள் கணவனோடு பேசிய குரலுக்கும் இருந்த வித்தியாசத்தைக் கண்டு லேகா அதிசயமாக பார்த்திருந்தாள்.  

“சிவபாலன் சார்” பவ்வியமாக பதில் சொன்னான் லேகாவின் கணவனானவன்.

“குடும்ப பொண்ணு என்றெல்லாம் பார்க்க முடியாதே ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுத்தானே ஆகணும். லேகா போன செக் பண்ணதுல அவ வீட்டுக்கும், மூணு ப்ரெண்ட்ஸை தவிர வேறு யாருக்கும் பேசல” என்றவன் ஒரு கோப்பிலிருந்து லேகாவின் கால் ரெக்கோடை எடுத்து சிவாவின் கையில் கொடுக்க, அதை வாங்கி உன்னிப்பாகப் பார்த்தான்.

“அன்னவுன் நம்பர்ல இருந்து மூணு தடவ கால் வந்திருக்கு. தெரிஞ்சவங்க நம்பறானு விசாரிக்கணும். அதுக்குதான் வர சொன்னேன். உங்க நம்பறா?” என்று வேற கேட்க சிவா இல்லையென்றான்.

“நீங்க லேகாக்கு உறவா? அந்நியமா?”

“சொந்த மாமா பொண்ணுதான் சார். ஒரே ஊரும் கூட” அவன் சொல்லிய விதத்திலையே தெரிந்தது ஏதேதோ பேசி இவளை அவனுக்கு கட்டி வைத்திருக்கிறார்கள். சுதா, நந்தினி பிரச்சினையால் லேகாவின் வாழ்க்கையிலும் நிம்மதி இல்லையென்று.

“ம்ம்.. நல்ல பொண்ணு தம்பி அப்பா நல்லாத்தான் வளர்த்திருக்காரு. நல்லா பார்த்துக்கோங்க” என்றவனை கண்களில் நீரோடு பார்த்தாள் லேகா.

“சார் இவ எந்த தப்பும் பண்ணலையே” என்ற சிவாவின் முகத்திலும் அச்சம்தான் இருந்தது. அதனாலயே லேகாவி கரிச்சிக் கொட்டிக் இருக்கின்றான் போலும்.

“தப்பெல்லாம் பண்ணுற பொண்ணா இவ? மூஞ்ச பார்த்தா தெரியாதா? என்ன ப்ரெண்ட்ஸ் எப்படிப்பட்டவங்கனு தெரியமாலே கூட இருந்துட்டா. அவளே ரொம்ப பயந்துதான் இருக்கா நீங்க வேற பேசி பய முறுத்தாதீங்க கூட்டிட்டு போங்க”

“திரும்ப வரணுமா?”

“திரும்ப வர இது என்ன கோவிலா போப்பா…” என்ற மாறனுக்கு லேகா சொன்னவைகளில் அவளுக்கு வந்த போன்கள் பற்றிய சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்தது. 

பத்தரை மணியளவில் பிரபாவும் வந்து சேர்ந்தாள். அவள் உள்ளே வரும் பொழுதுதான் லேகா வெளியேறிக் கொண்டிருந்தாள். லேகாவைக் கண்டு அவளுக்கு அதிர்ச்சிதான். மாறனின் உத்தரவின்படி அவர்கள் பேசிக்கொள்ளக் கூடாது. கௌதம் அவளை ஒருபக்கம் அவசரப்படுத்த, லேகாவின் கணவன் முறைத்த முறைப்பில் லேகாவே பிரபாவிடம் பேசாமல் கணவனோடு கிளம்பி இருந்தாள்.

மாறனிடம் பிரபா வந்திருப்பதாக கௌதம் சொல்ல லேகாவை சந்தித்தாளா என்றுதான் கேட்டான். “போறவங்கள பார்த்தாங்க சார். பேசிகல. லேகாவோட ஹஸ்பன் வேற முறைச்சிகிட்டே போனதால அவங்களும் பேச முயற்சி பண்ணல”

“ஒரு இருபது நிமிஷம் உக்கார வை அப்பொறம் அனுப்பு” என்றான் மாறன்.

அவன் ஏன் அப்படி கூறினான் என்று புரிந்துக் கொண்ட கௌதம் தலையசைத்து விட்டு பிரபாவிடம் வந்து “சார் முக்கியமான வேலைல இருக்காரு. இங்கயே இருங்க கூபிடுவாறு” என்றவன் அவள் எதிரே அமர்ந்து வேலை பார்கலானான்.

பிரபாவுக்கு பதட்டம் கூடியதே ஒழிய குறையவே இல்லை. “ஊரிலிருந்த லேகாவையே அழைத்து விசாரித்திருக்கிறார் என்றால் என்ன விஷயமாக இருக்கும்? அவள் வேறு பயந்தால் எல்லாவற்றையும் உளறி விடுவாள். இவர்களிடம் என்னவெல்லாம் சொல்லித் தொலைத்தாளோ?”

லேகா கூறிய தகவல்கள் மற்றும் மூர்த்தியை போலீசில் பிடித்துக் கொடுத்ததை வைத்துப் பார்க்கும் பொழுது பிரபா கொஞ்சம் புத்திசாலி, தைரியமான பெண்ணும் கூட. மாறனுக்கு பிரபாவின் பதட்டத்தை கூட்ட வேண்டும், அவள் லேகாவை பார்த்து குழம்ப வேண்டும் என்றுதான் அவளை அமர வைத்தான். யோசித்ததில் அவள் குழம்பி போன பின் அவளை உள்ளே அழைத்தான்.

“உக்காருங்க மிஸ் பிரபா” என்றவன் “லேகா எங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்க. நீங்களும் சொல்லிடீங்கன்னா பேர்தெரா நான் கேஸ மூவ் பண்ண முடியும்” என்றான்.

சாதாரணமாக அவளிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் திமிராக பதில் சொல்லி இருப்பாள். குழம்பிப் போய், பதட்டத்திதில் இருந்தவளின் மூளை சிந்திக்க மறுக்க “லேகா எல்லாத்தையும் சொல்லிட்டாளா?” என்று மாறனை கேட்டாள்.

“ஆமாம். ரெகார்ட் பண்ணல. பிகோரஸ் அவங்க பெர்சனல் வாழ்க்கை பாதிக்கும் இல்லையா. பண்ணி இருந்தா உங்களுக்கு போட்டு காட்டி இருப்பேன் அண்ட் ரெகார்ட் பண்ணுறதா இருந்தா என் ரூம்ல விசாரிக்க மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும் இல்லையா?” சாதுரியமாக பேசினான். லேகா போல் பிரபா அப்பாவி இல்ல. புத்திசாலி பெண். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று மாறனுக்கு தெரியாதா? 

சுற்றி முற்றி பார்த்தவளுக்கு தைரியம் வரவே “சார் காலேஜ் படிக்கும் போது அப்படி இப்படி தப்பு பண்ணுறது சகஜம் சார். பசங்க பண்ணா கண்டுக்குறது இல்ல. பொண்ணுங்க பண்ணா பெருசா பேசுவாங்க”

அவள் எந்த தப்பை பற்றி சொல்கின்றாள்? சிகரெட் புகைப்பதையா? மது அருந்துவதையா? போதை பழக்கத்தையா? அல்லது கண்ட கண்ட பசங்க கூட சுத்துறதையா? மாறன் அவளை திருப்பி எந்த கேள்வியும் கேட்காது அமைதியாக பார்த்திருந்தான்.

“சின்ன வயசுல இருந்து எங்க அப்பா என்ன தைரியமான பொண்ணாதான் வளர்த்தாரு. எது தப்பு? எது சரி? சொல்லி கொடுத்துதான் வளர்த்தாரு. ஆனாலும் டீனேஜ்ல எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்வாங்களோ அதெல்லாம் செஞ்சி பார்க்கணும் என்று ஒரு ஆச வரும். அந்த ஆச எனக்கும் இருந்தது.

எங்க ஏரியாலையே வாலு பொண்ணு சார் நான். வீட்டுக்கே வந்து கம்ளைண்ட் பண்ணுவாங்க. அப்பா அவங்க கிட்ட பொண்ண கண்டிக்கிறேன்னு சொன்னாலும். ‘காயம் ஏதாவது ஆகிடும்மா… பார்த்து” என்றுதான் சொல்வாரு. ஏன்னா நான் தப்பா எதுவும் பண்ண மாட்டேன்னு அவருக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை.

காலேஜ் படிக்கிறப்போ நானேதான் வீட்டுல சொல்லி ப்ரெண்ட்ஸ் கூட தங்குறேன்னு சொன்னேன். “சுதந்திரமா இருக்கணும் என்று நினைக்கிற. சரி. பத்திரமா இரு” என்றுதான் சொன்னாரு.

நாங்க நாலு பேருமே தப்பான பொண்ணுங்க கிடையாது சார். எதோ தம்மு அடிச்சி பார்க்கணும், தண்ணி அடிச்சி பார்க்கணும், நைட் கிளப்பு எப்படி இருக்குனு போய் பார்க்கணும் இதுதான் எங்க ஆசையா இருந்தது. எல்லாம் பண்ணோம்” என்றவள் உதடு கடித்து அமைதியானாள்.

அவள் சொன்னவைகளை பார்க்கும் போது மாறனுக்குமே இதில் என்ன தப்பிருக்கு என்றுதான் தோன்றியது. ஆனாலும் அவளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் அவன் கூறாமல் அமைதியாகத்தான் அமர்ந்திருந்தான்.

Advertisement