Advertisement

அத்தியாயம் 15

மாறன் தனது அறையில் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கௌதம் மற்றும் மஞ்சுளாவோடு பேசிக்கொண்டிருக்க, நந்தகோபாலோடு உள்ளே நுழைந்தான் அன்வர்.

“கௌதமும், மஞ்சுளாவும் அந்த பிளம்பர் மூர்த்தியின் ரூமை செக் பண்ணதுல ஏதாவது எவிடன்ஸ் கிடைச்சதா? மாறன்” 

“எதுவும் இல்ல சார். கொஞ்சம் துணிமணி, காசு, சமைக்க பாத்திரம் அவ்வளவுதான்” காண்டாகி கூறினாள் மஞ்சுளா.

எதிர்பார்த்ததுதான் என்பது போல் புருவம் உயர்த்தியவன் “அடுத்து என்ன மூவ்?” என்று மாறனை ஏறிட

“மூர்த்தி சொன்னது போல போன்ஸ் எல்லாம் அந்த பெட்டில போட பட்ட பின்னால எவனோ போன்ல இருந்து வீடியோஸ் எல்லாம் எடுத்திருக்கான்னு வச்சிக்கிட்டாலும். கரெக்ட்டா அந்த பொண்ணுங்க அட்ரஸ் எப்படி தெரிஞ்சிருக்கும்?” மாறன் கேள்வி எழுப்ப

“அப்போ வெளில நடக்குற கம்பனி மீட்டிங் டைம்ல போன்ஸ் ஹேக் பண்ண படல கம்பனில நடக்குற மீட்டிங் டைம்லதான் ஹேக் பண்ண பட்டிருக்குனு சொல்லுறீங்க” என்றான் அன்வர்.

“மூர்த்திக்கு வேல கொடுக்குறதே கம்பனி சோ அவங்களுக்கும் அட்ரஸ் தெரிஞ்சிருக்குனு சொல்லவாறீங்களா சார்” கௌதம் தான் ஊகித்தது சரியா எனும் விதமாக கேட்டான்.

“மூர்த்தி போன ஹேக் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. சின்ன டிவைச பொருத்தினால் அவன் போன்ல இருக்குற மொத்தமும் இவன் கைல வந்துடும். அதே மாதிரி இருக்குற போன்ஸ்ஸ எல்லாம் டிவைஸ் வச்சி எடுத்தவன் கண்டிப்பா நியூ மாடல் போன் எல்லாம் ஹேக் பண்ணி எடுத்திருப்பான். அதுக்கு அவனுக்கு லேபரோட  நம்பர் தேவை பட்டிருக்கணும் அப்போ அவன் கம்பனி ஆளாத்தானே இருக்கணும். ஏன்னா அவன் எஸ்.எம்.எஸ் மூலமாத்தான் ஹேக் பண்ணி இருக்கான்” மாறன் தான் ஊகித்ததை சொல்ல

“என்ன சார் சொல்லுறீங்க? அப்போ அவன் மூர்த்தி போன மட்டும் ஹேக் பண்ணலயா? கம்பனில இருக்குற மொத்த லேபர்ஸோட போனையும் ஹேக் பண்ணி இருக்கானா?” அதன் விபரீதம் அச்சத்தை விளைவிக்க மஞ்சுளாவுக்கு வியர்க்கவே ஆரம்பித்திருந்தது.

“மூர்த்தியோட போன மட்டும் ஹேக் பண்ண அவன் என்ன வி.வி.ஐ.பியா? இல்ல அவன் போன்லதான் வீடியோஸ் இருக்கு என்று வெத்தலைல மை வச்சி பார்த்தானா?” நந்தகோபால் கிண்டல் செய்ய

“எல்லாரும் மூர்த்தி மாதிரி சைக்கோவா இருக்க மாட்டாங்க. சிலபேர் சோசியல் மீடியால பொண்ணுங்க கூட சேட்டிங்க என்ற பேர்ல கடலை வறுத்துகிட்டும் இருப்பாங்க” கௌதம் சொல்ல

“டேய் ஹேக்கரோட டார்கெட் பொண்ணுங்கடா… பசங்க இல்ல” நந்தகோபால் அவன் மேல் காய்ந்தான்.

“என்ன சொல்ல வந்தீங்க மாறன்?” கௌதமையும், நந்தகோபாலையும் முறைத்தவாறே கேட்டான் அன்வர்.

“அப்படி பேசுற பொண்ணுங்க எந்த மாதிரி? எங்க தங்கி இருக்காங்கனு தெரிய வாய்ப்பிருக்கு? அவங்களுக்கும் ஆபத்து வரலாம்”

“யு ஆர் ரைட் மாறன். ஆனா நம்கிட்ட வந்த இந்த காலேஜ் பொண்ணுங்க கேஸஸ் தவிர வேறெந்த கேஸுமே வரலையே” சந்தேகமாக கேட்டான் அன்வர்.

“மாலினி கேஸ மறந்துட்டீங்க அன்வர். அவ தற்கொலை செய்துகொண்டதாகத்தான் ஊருக்கே தெரியும். ஆனா அவ கொலை செய்யப்பட்டா என்று நமக்கு தெரிஞ்சாலும் ஏன்? என்ற கேள்விக்கு இன்னும் நமக்கு பதில் தெரியல. மாலினி போல இன்னும் நம்ம பார்வைக்கு வராத பெண்கள் எத்தனை பேர் இருப்பாங்க?”

“ஆமா சார்?” அச்சத்தோடு சொன்னாள் மஞ்சுளா.

“நந்தினி, சுதா, பிரபா, லேகா இந்த நாலு பேர்லயும் லேகாவை அவன் சீண்டவே இல்ல. பிரபாவையும் அவன் ஒன்னும் பண்ணல. சுதா அண்ட் நந்தினியை மிரட்டி இருக்கான். நாம உடனடியா பிரபா அண்ட் லேகாவை விசாரிக்கணும். அவங்க ரெண்டு பேரும் எங்க இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. முக்கியமா ஒருத்தர் வரது மத்தவங்களுக்கு தெரியக் கூடாது” என்றான் மாறன்.

“அடுத்த வேட்டையா?” என்பது போல் பார்த்த கௌதம் “ஓகே சார்” என்று சலியூட் வைத்து விட்டு வெளியேறினான்.

“சார் நான் போய் கம்பனில என்குயரி பண்ணவா?” நந்தகோபால் கேட்க

“இல்ல. நீங்க போய் கம்பனில சிகிரியூட்டியா ஜோஇன் பண்ணுங்க. கூடவே பழனிவேலையும் கூட்டிட்டு போங்க. மீட்டிங் நடக்குறப்போ தான் உங்களுக்கு வேல இருக்கு” சிரித்தான் மாறன்.

“போலீஸ்காரனுக்கு தமிழ்ல காவல்காரன்னு ஏன் சொல்லுறாங்கனு இப்போ புரியுது” கிண்டலடித்தவாறு வெளியேறினான் நந்தகோபால்.

“சிகியூரிட்டியா போனா மீட்டிங் நடக்குறப்போ போன் கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற பாக்ஸ்ல எவன் கை வைக்கிறான்னு கண்டு பிடிக்கலாம் இல்ல சார்” உட்சாகமானாள் மஞ்சுளா.

“கை வைக்காம கூட ஹேக் பண்ணலாம். இது ஒரு குரூப் பண்ணது போல எனக்கு தோணல ரெண்டு குரூப் சம்பந்த பட்டிருக்கு” என்றான் மாறன்.

“என்ன சொல்லுறீங்க சார்” குழம்பிய மஞ்சுளா புரியாது கேட்டாள்.

“ஆமா மாறன் எஸ்.எம்.எஸ் மூலம்தான் ஹேக் பண்ணுறான்னா அவனுக்கு லேபரோட போன் நம்பர்ஸ் மட்டும் போதுமே, எதுக்கு மீட்டிங் டேய செலெக்ட் பண்ணி மூர்த்தியோட போன்ல இருந்து வீடியோச எடுத்தான்?” அன்வரும் தன் சந்தேகத்தை முன் வைக்க

“கம்பனிக்கு உள்ள ஒருத்தன். வெளில ஒருத்தன். என்ன புரியலையா? கம்பனிக்கு உள்ள இருக்குறவனுக்கு மூர்த்தியோட போன் தேவ படல, எஸ்.எம்.எஸ் மூலமா போன் எல்லாத்தையும் ஹேக் பண்ணி இருக்கான். கம்பனிக்கு வெளில இருக்கிறவன் தான் டிவைச பொருத்தி மூர்த்தியோட போன்ல இருக்குற வீடியோஸ் எல்லாத்தையும் ஆட்டய போட்டிருக்கான்” என்று மாறன் சொல்ல அன்வரும் மஞ்சுளாவும் அதிர்ந்தனர்.

“அப்படினா ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா?” புரியாது குழம்பிக் கேட்டான் அன்வர்.

“சம்பந்தம் இருந்தா ஒரே வழில போய் இருப்பானுங்க. ரெண்டு வெவ்வேறான வழில போய் போன ஹேக் பண்ண வேண்டிய அவசியம் இல்லையே” மாறன் யோசனையாகவே கூறினான். போலீஸில் சிக்கினாலும் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று திட்டம் போட்டு இவ்வாறு செய்திருப்பார்களோ என்ற எண்ணம் கூட மாறனின் மனதில் வந்து போனது.

“ஒருத்தன கண்டு பிடிக்கவே கிட்டத்தட்ட மூணு மாசம் ஆச்சு மாறன். இதுல ரெண்டு பேர் என்றா? அவன் எப்படி கண்டு பிடிக்கப் போறோம்? அதுவும் இந்த பொண்ணுங்க கேஸுல சம்பந்தப்பட்டிருக்குறவன் யார்னு தெரியலையே” தலை வலிப்பது போல் இருக்க நெற்றியை தடவியவாறே அமர்ந்து கொண்டான் அன்வர்.

“மூர்த்தியோட போன்ல இருந்த எல்லா வீடியோவும் நம்ம கேஸுல சம்பந்தபட்ட பொண்ணுங்க வீடியோஸ். அதன்படி பார்த்தா கம்பனிக்கு வெளில இருக்கிறவன் என்றும் சொல்லலாம். அந்த பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்தத வச்சி பார்த்தா கம்பனிக்கு உள்ள இருக்கிறவன் என்றும் சொல்லலாம்” என்ற மாறனின் முகம் தீவீர சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

“என்ன சார் நீங்களே இப்படி தெளிவா குழப்பினா எப்படி? ஒரு முடிவுக்கு வாங்க” மஞ்சுளா மேசையிலிருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து அருந்தினாள்.

“எனக்கும் ஒன்னும் சுத்தமா புரியல மாறன். ஐம் டோட்டலி பிளாங்க்” என்றான் அன்வர்.

“சீ கைஸ் நமக்கு கிடைச்ச ஒரே ஆதாரம் மூர்த்தியும் அவன் போனும் தான். அவன் சொன்னது போன பாக்ஸ்ல போட்டுட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணுறான்னு. கம்பனிக்கு உள்ள இருக்குறவனுக்கு மூர்த்தியோட போன் நம்பர் தெரியும். ஆனா மூர்த்தியோட பழைய மாடல் போன ஹேக் பண்ணுறது சாத்தியமா?” மாறன் கேள்வி எழுப்ப

“அப்போ அவனே மீட்டிங் நடக்குற டைம்ல டிவைசை பொருத்தி மூர்த்தியோட போன்ல இருக்குற வீடியோசை எடுத்திருப்பான்னு சொல்லுறீங்களா?”

“இருக்கலாம். அநேகமா நாம தேடுறவன் கம்பனிக்கு உள்ளதான் இருக்கணும். வெளியவும் ஒருத்தன் இருக்க வாய்ப்பிருக்கு என்று நான் சந்தேகம்தான் படுறேன்” மாறன் சிரிக்க

“ஒரு நிமிஷம் கதிகலங்க வச்சிட்டீங்க சார். அவன் கம்பனிலையே இருக்கட்டும். உள்ள போய் பிடிச்சிடலாம்” நிம்மதி பெருமூச்சு விட்டாள் மஞ்சுளா.

“அதுக்குதான் நந்தகோபால் சிகியூரிட்டியா ஜோஇன் பண்ண சொன்னேன்” மாறனின் புன்னகை மாறவே இல்லை. இந்த கேஸை பொறுத்தவரையில் எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கக் கூடும் என்றுதான் மாறன் இப்படி குழப்பி இருந்தான்.

“அந்த பொண்ணுங்க பிரபாகிட்டயும் லேகா கிட்டயும் என்ன விசாரிக்க போறீங்க மாறன்?” குற்றவாளியை தான் நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோமே இந்த பெண்களை எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்வர் கேட்டிருந்தான்.

ரெண்டு பேரா ஒருத்தனா என்று கன்போர்ம் பண்ணிக்கத்தான்” என்றான் மாறன்.

“ஓகே மாறன் நாளைக்கு பார்க்கலாம் குட் நைட்” அன்வர் விடைபெற, மஞ்சுளாவும் கிளம்ப ஆயத்தமானாள்.

வீட்டுக்கு வந்தால் லதாவின் தொணதொணப்பு தாங்க முடியவில்லை என்று நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான் மாறன். லதாவும் மாறன் ஏதோ கேஸ் விஷயமாக அலைவதை அறிந்திருந்தமையால் நேரம் சென்று வருவதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

வெற்றியின் மடிக்கணினியை கைப்பற்றியதோடு சரி, ஷாலினி திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டு அதன் பின் நடந்த கலவரத்தால் அதை திறந்து பார்க்கும் எண்ணம் கூட வராமல் அப்படியே வைத்திருந்தான் மாறன்.

நியாபகம் வந்திருந்தாலும், கேஸ் விஷயமாக அலைந்ததில் நேரம் தான் கிடைக்கவில்லை. இன்று நேரங்காலத்தோடு வீடு செல்ல நேர்வதால் வெற்றியின் மடிக்கணணியை திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு சென்றான் மாறன்.

பூபதியும் மாறன் வெற்றியாக மாறுவதை தடுத்து முழு மாறனாக மாற்றுவதில் ஆராய்ச்சிகளை இரகசியமாக மேற்கொண்டிருந்தார். மூளையை அறுவை சிகிச்சை செய்து இன்னொரு மனிதனுக்கு பொறுத்தலாமா? என்று ஆராய்ச்சி செய்தவர் அதன் பக்க விளைவுகளை பற்றி யோசிக்கவே இல்லை.

ஒரு மனிதனுடைய நியாபகங்கள் அனைத்தும் மூளையில் அல்லவா பதிந்திருக்கிறது. அதை இன்னொருவருக்கு பொருத்தினால்? அந்த நியாபகங்கள் இவருக்கு வரும் என்று பூபதி நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.

வெற்றியின் நியாபகங்களால் மாறனின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடுமோ என்று அஞ்சி வெற்றியின் நினைவுகளை எவ்வாறு மறக்கடிப்பது? என்று சிந்த்தித்தவருக்கு ஷாலினியை சந்தித்தால்தான் மாறன் வெற்றியாகவே மாறுகின்றான் என்ற உண்மையும் புலப்பட்டது.

மாறனையும் ஷாலினியையும் சேர்த்து வைக்க எடுத்த முடிவு தப்போ என்று சிந்தித்தவாறே மருத்துவமனையை விட்டு கிளம்ப எத்தனிக்க ஷாலினி அவர் முன் வந்து நின்றாள்.

அவள் வீட்டில் நடந்த சம்பவத்தில் லதாவை பேசியதற்கு மன்னிப்பு கேட்க வந்தாளோ? என்று ஒருகணம் பூபதிக்கு தோன்ற அப்படியாயின் வீட்டுக்கு அல்லவா வர வேண்டும் என்று கூட தோன்றியது.

கைக்கடிகாரத்தை பார்த்தவாறே “என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க? என்ன விஷயம்?” என்று கேட்டார் பூபதி.

“நான் வெற்றியை பத்தி பேசணும்” என்றவள் உடனே “இல்லை” என்று தலையசைத்து மாறனை பத்தி பேசணும் என்றாள்.

அவளை அமரும்படி கூறியவர் தானும் அவரது இருக்கையில் அமர்ந்து கூறுமாறு சைகை செய்ய,

“எனக்கு என் வெற்றி வேணும். மாறனுக்குள் இருக்குற என் வெற்றி எனக்கு வேணும்” தீவீர முகபாவனையோடு கூறினாள் ஷாலினி.

“என்னம்மா சொல்லுற?” புரிந்தும் புரியாமலும் பூபதி அவளை ஏறிட

“வெற்றியோட மூளையைதான் மாறனுக்கு பொறுத்திட்டீங்களே அப்போ வெற்றியோட நியாபகங்கள் எல்லாமே அவனுக்குள்ள இருக்குல்ல. மாறன் அடிக்கடி வெற்றியா மாறுறத ஏன் முழுசா ஒரேயடியா வெற்றியா மாத்திடக் கூடாது?” ஷாலினியின் குரலும் முகமும் இதை செய்தே ஆகா வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.

“புரிஞ்சிதான் பேசுறியாம்மா? மூளை எவ்வளவு சிக்கலான உறுப்பு என்று உனக்கு தெரியாதா? பூமில மேடு பள்ளம் இருக்குறது போல மூளையின் மேற்பரப்புளையும் மேடு பள்ளம் இருக்கு. நியூரான்கள் பத்தி பேசிக் நாலேஜ் இருக்குல்ல.

ஒருத்தரோட உடம்புல ஆவி புகுந்த மாதிரி மந்திரம் சொல்லி துரத்துற வேல இல்லை இது. அப்படியே துரத்துறதா இருந்தாலும் வெற்றியைத்தான் துரத்தணும். அவன்தானே மாறனோட மூளைக்குள்ள புகுந்திருக்கான்” பூபதி ஷாலினிக்கு சிம்பலாக புரிய வைக்க முனைய அவரை வெளிப்படையாகவே முறைக்கலானாள்.

“அப்போ எதுக்கு நீங்க என் வெற்றிய கொன்னுட்டு உங்க பையன காப்பாத்துனீங்க? உங்க பையனோட ஹார்ட்ட கொடுத்து என் வெற்றிய காப்பாத்தி இருக்கலாம்ல. இப்போ எனக்கு என் வெற்றி வேணும்” கண்கள் சிவக்க கத்தினாள்

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளுமா. வெற்றியோட நெஞ்செலும்பு ஒடஞ்சி இன்டர்னல் ப்ளீடிங் ஓவராகி  கிரிட்டிகள் கண்டிஷன்லதான் இறந்தான்”

“எனக்கு உண்மை தெரியாது என்று நினைச்சீங்களா? வெற்றி கெட்டவன் என்று நீங்க நினைச்சதால மாறன காப்பாத்த முடிவு பண்ணீங்க என்று மாறன் நினைச்சுகிட்டு இருக்கான். ஆனா அது உண்மையில்ல. உங்களுக்கு உங்க ஆராச்சிய சோதிக்க மாறன பயன் படுத்திக்கிட்டீங்க, அதுக்கு வெற்றியையே பலி கொடுத்துட்டீங்க. மத்த காரணம் என்ன தெரியுமா? ரொம்ப நாளா பிரிஞ்சிருந்த உங்க மனைவி. மூளை அறுவை சிகிச்சை மூலம் மகனை காப்பாத்திட்டா உங்க மேல இருந்த மனக் கசப்பு நீங்கி உங்க கூட சேர்ந்துடுவாங்க என்று நீங்க ஒரு கணக்கு போட்டீங்க. அதே போல நடந்திருச்சு.

நீங்க கெட்டவனா நினைச்ச வெற்றியும் செத்துட்டான். உங்க ஆராய்ச்சியும் சக்ஸஸ். உங்க மனைவியும் கிடைச்சிட்டாங்க. உங்க போலீஸ் பையனும் உங்களுக்கு கிடைச்சிட்டான் இல்லையா?” வெற்றி இறந்ததை தாங்க முடியாத கோபம் மட்டுமே அவளிடம் வெளிப்பட்டது. இறந்தவனை உயிரோடு கொண்டுவர வழி இருந்தால் அதை எவ்வழியிலும் செய்து விட துடிக்கும் காதல் கொண்ட அவள் உள்ளம் மாறனின் உள்ளே இருக்கும் வெற்றியை உயிர்ப்பிக்க நினைப்பதில் என்ன தவறு? என்று அவளை கேட்க, சற்றும் யோசிக்காமல் கிளம்பி வந்து விட்டாள்.   

“இங்க பாருமா… நான் சொல்லுறத கொஞ்சம் புரிஞ்சிக்க. மாறன் கூட என்ன தப்பாதான் நினைச்சுகிட்டு இருக்கான்” என்றவாரே வெற்றி இறக்கும் முன் அவனது மூளையை அறுத்து எடுத்து மாறனுக்கு பொருத்தியது மட்டும் இவளுக்கு தெரிந்தால் தன்னை என்ன செய்வாள் என்று நினைத்து பார்க்க தலையை உலுக்கிக் கொண்டவர் “வெற்றிய காப்பாத்த முடிஞ்சிருந்தா கண்டிப்பா வெற்றிய காப்பாத்தி இருப்பேன். வெற்றியோட மூளையை பொருத்தலைனா மாறன காப்பாத்தி இருக்க முடியாது. மாறனையாவது காப்பாத்தணும் என்கிறதுக்காகத்தான் வெற்றியோட மூளையை பொருத்தினேன். வெற்றியும் என் பையானதான்மா… அவனோட இழப்பு எனக்கும் வேதனைதான். லதாவுக்கும் வேதனைதான். எங்க வேதனையை நாங்க பெத்த பையன் புரிஞ்சிக்கல. உன்னால புரிஞ்சிக்க முடியுமா?” சோகமானார் பூபதி.

“உங்க கதையை கேட்க நான் வரல. உங்க பையனோட சந்தோசம் முக்கியம்னு நினைக்கிறீங்க இல்லை. உங்க பையன் என் கூட வாழ்ந்தா சந்தோசமா இருப்பான்னு நினைக்கிறீங்க இல்லை. நாம சந்தோசமா இருக்க வேணாம்? எனக்கு என் வெற்றி வேணும். அடிக்கடி வெற்றியா மாறும் மாறன். நிரந்தரமா வெற்றியா மாறனும். என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ உங்க பையன் சந்தோஷமும், என் சந்தோஷமும் உங்க கைலதான் இருக்கு. நான் வரேன் மாமா” என்றவள் பூபதியின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்கு கிளம்பினாள்.

யோசனையில் ஆழ்ந்திருந்த பூபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மனித மூளை என்பது எவ்வளவு சிக்கலானது. வெற்றியின் மூளையை மாறனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் சரியாக பொருத்தி விட்டார்.

பக்கவிளைவாக அவனுக்கு தலைவலி ஏற்படும். அதற்காக மாத்திரையும் கொடுத்தார். அவர் எதிர்பார்க்காதது வெற்றியின் நியாபகங்கள் அனைத்தும் எப்படி அந்த சிறிய பகுதில் பதிந்து மாறனை சித்திரவதை செய்யும் என்றுதான்.

ஹிப்னோடிசம் செய்த போது கூட ஒழுங்காக வெற்றியோடு பேச முடியவில்லை. அவ்வாறு பேசி அவன் நியாபகங்களை கண்டறிந்து அழிக்க முயலலாம். முயற்சிதான் பண்ண முடியும். அதிர்ச்சியில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு மாறன் பக்கவாதத்தால் விழவும் கூடும் என்ற அச்சம் இருந்ததால் பூபதி அந்த எண்ணத்தை கைவிட்டார்.

மூளை நரம்புகள் பாதித்தால் என்ன என்ன விளைவுகள் ஏற்படக் கூடும் என்று அவர் அறியாததா? அப்படி இருக்க, ஷாலினி வெற்றியின் நியாபகங்களை உயிர்ப்பிக்க சொல்கின்றாள். அப்படியாயின் மாறனை கொன்றுவிட சொல்கின்றாளா? லதாவுக்கு என்ன பதில் சொல்வது?” பூபதிக்கு தலையே வலித்தது.

தனது ஆராய்ச்சியால் நன்மை பயக்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மகனை இழந்து அனைவரின் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்க வேண்டிய தன்நிலையை எண்ணி நொந்தே போனார் பூபதி.

நேரங்காலத்தோடு வீட்டுக்கு வந்த மாறனை ஆச்சரியமாக பார்த்த லதா “என்னப்பா இன்னக்கி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்க? வேல முடிஞ்சிருச்சா? இல்ல திரும்ப போக போறியா?”

“வேல எங்கம்மா முடியும்? மீதி வேலைய நாளைக்கு பார்க்கலாம்னு வந்துட்டேன். உங்க எல்லார்கூடையும் ஒண்ணா சாப்பிட்டு நாளாச்சே. தாத்தாங்க சாப்டங்களா?” என்றவாறே சோபாவில் அமர்ந்தான்.

“டேய் டாக்டரும், போலீஸ்காரனும் கிட்டத்தட்ட ஒரே வேலையாத்தான்டா பாக்குறாங்க. வீட்டுக்கு வந்தா முதல்ல குளிச்சிட்டு வா” என்றவாறே வந்தமர்ந்தார் தர்மதுரை.

“இன்னக்கி நான் எங்கயும் போகல ஆபீஸ்லதான் இருந்தேன்” என்ற மாறனின் மனசாட்ச்சியோ “ஏன் நீ ஷாலினி வீட்டு வாசல்ல அவ வெளிய வரும் வரைக்கு காத்துகிட்டு நின்னு அவ சேப்பா ஸ்கூலுக்கு போகும்வரைக்கும் பின்னாடியே பாலோவ் பண்ணியே” என்று கேலி செய்ய புன்னகை தானாக மலர்ந்தது.

“என்னப்பா இன்னக்கி டென்ஷன் இல்லாம வேல பார்த்தியா?” என்றவாறே செல்வபாண்டியன் வர தாத்தாக்களோடு சற்று நேரம் அமர்ந்து பேசியவன் உணவுண்டு விட்டே மாடிக்கு சென்றான்.

வெற்றியின் மடிக்கணினியோடு கட்டிலில் வந்தமர்ந்த மாறன் ஷாலினி சொன்ன வெற்றியும், ஷாலினியும் சந்தித்துக் கொண்ட திகதியை கடவுச் சொல்லாக கொடுத்து கணினியை திறந்தான்.

திரையில் {screen}நிறைய கோப்புறைகள் {folders}  இருக்கவே மாறனின் கண்களோ “என் தேவதை” என்ற கோப்புக்கு சென்றன.

அது யாரை பற்றி என்று அவன் மனமும், மூளையும் ஒரே நேரத்தில் யூகிக்கும் போதே அவனது விரல்கள் சுட்டியை அழுத்த கோப்பை திறந்திருந்தான். 

அதில் ஷாலினியின் புகைப்படங்களும் காலேஜில் அவள் வெற்றியோடு எடுத்த புகைப்படங்களும் அதன் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று பல இருக்க, ஒவ்வொன்றாக பொறுமையாக பார்க்க ஆரம்பித்தான்.

அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மாறனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. மாத்திரையை போடலாம் என்று அதை எடுத்தவனுக்கு மண்டைக்குள் பல காட்ச்சிகள் தோன்றி மறைய, கையில் எடுத்த மாத்திரை டப்பாவை கீழே போட்டவன் மயங்கி கட்டிலில் சரிந்திருந்தான். 

எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தான் என்று மாறனுக்கே தெரியவில்லை. தூக்கம் கலைந்து விழிப்பவன் போல் விழித்தவன் மணியை பார்க்க காலை ஐந்து மணி தாண்டி இருந்தது.

எழுந்து அமர்ந்தவன் மடிக்கணினி சார்ஜ் தீர்ந்து அணைந்து போய் இருக்கவே அதை சார்ஜில் போட்டுவிட்டு ஜோக்கிங் சென்றான்.

ஓடி ஓடி மாறனின் மூளை சுறுசுறுப்பாக ஷாலினியின் போட்டோக்களை பார்த்த போது தான் ஏன் மயங்கி விழ வேண்டும், அவளை பார்க்கும் போது மட்டும் ஏன் வெற்றியாக மாற வேண்டும் என்ற கேள்வி உதிக்க, அதை பற்றியே சிந்திக்க ஆரம்பித்தான்.

வெற்றி ஷாலினியை எவ்வளவு காதலித்திருந்தால் அவளுக்கு ஒன்று எனும் போது வெளிப்படுவான். புகைப்படங்கள் அனைத்தும் அவர்களின் நியாபகங்கள். வெற்றி ஷாலினியோடு வாழ்ந்த வாழ்க்கை. அதனால்தான் புகைப்படங்களை பார்த்ததும் வெற்றியின் மூளையின் பகுதி விழித்துக் கொண்டு நியாபகங்களை ஆராய தாங்கிக் கொள்ள முடியாமல்தான் மயங்கி விழுந்திருந்தான்.

தன்னால் வெற்றியின் மூளை விழித்துக் கொள்ளும் பொழுது அதை கட்டுப்படுத்த முடிந்தால்? தான் மயங்கி விழாமல் இருக்க வாய்ப்பிருக்கு என்று தோன்ற அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிக்க மாறனுக்கு எதுவும் தோன்றவில்லை.

யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தவனுக்கு தந்தையின் நியாபகம்தான் வந்தது.

அவரிடம் கேட்டால் ஆராய்ச்சி, மருந்து மாத்திரை என்று பேசுவார் என்று தோன்ற என்ன செய்யலாம் என்றவனுக்கு கூகுள் ஆண்டவரின் நியாபகம் வர ஜோகினை முடித்துக் கொண்டு உள்ளே வந்தவன் லதா கொடுத்த க்ரீன் டீயை அருந்தியவாறு மடிப்படியேறி அறைக்குள் நுழைந்து அலைபேசியில்  ஹவ் டு கண்ட்ரோல் தி ஹியூமன் பிரைன் என்று தேட பல விதமான பதில்கள் வந்தாலும் “யோகா” என்ற பதில் மாறனை கவர்ந்தது.

உடனே சென்னையில் உள்ள யோகா மையங்களையும் அலைபேசியில் தேடி எடுத்தவன் அதில் சிறந்ததில் சேர முடிவு செய்தான்.

வெற்றியின் மடிக்கணினியை ஆராய நேரமின்மையால் அதை பத்திரமாக கப்போர்டில் எடுத்து வைத்தவன் காவல் நிலையம் கிளம்பி செல்லும் பொழுது யோகா மையம் சென்று ஆசிரியரை சந்தித்து பேசியவன் தினமும் காலையில் வருவதாக கூற, அவரும் சம்மதம் சொல்ல ஷாலினியை காண கிளம்பிச் சென்றான்.

அன்று வழமைக்கு மாறாக ஷாலினி சிரித்த முகமாக புடவையில் நடந்து வர மாறனுக்கு அவள் மீதிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை. அவளையே பார்த்திருந்தவனுக்கு அவள் தன் அருகில் வருவது தாமதமாகத்தான் புரிந்தது. சுதாரித்தவன் அங்கிருந்து நகர முடியாமல் அலைபேசியை காதில் வைத்து பேசுவது போல் பாவனை செய்யலானான்.

“என்ன சார் இந்த பக்கம்” என்றவளை அப்பொழுதுதான் பார்பது போல் பார்த்தவன் அலைபேசியை சட்டை பாக்கெட்டில் வைத்தவாறே “ஒரு கேஸ் விஷயமா போய் கிட்டு இருந்தேன். போன் வந்தது வண்டிய நிறுத்தி பேசிகிட்டு இருந்தேன். நீ என்ன இங்க பண்ணுற?” என்று ஜீப்பின் வெளியே தலையை விட்டு பார்த்தவன் “உன் வீடு இருக்குற ஏரியாவா?” தெரியாதது போல் கேட்டான்.

“ஆமா தினமும் காலைல இதே நேரத்துக்கு சாருக்கு போன் வரும் இங்க நிறுத்திதானே பேசுவீங்க. இந்த ஏரியால அப்படி என்ன கேஸ பாக்குறீங்க?” என்றவளின் முகத்தில் கேலிப்புன்னகை பெரிதாக விரிந்தது.

“தான் தினமும் இவளை பார்க்க வருவது இவளுக்கு தெரியுமா? தெரிந்தும் தெரியாதது போல் இருந்தாளா?” ஆச்சரியமாக மாறன் ஷாலினியை பார்க்க

“உள்ள வருவியா? மாட்டியா?” என்று கேட்டவள் திரும்பி நடக்க, மாறனும் வண்டியிலிருந்து இறங்கி அவள் பின்னால் நடந்தான்.

தினமும் அவன் அங்கிருப்பதை அறிந்திருந்தவள் இன்று மட்டும் எதற்காக அழைக்கிறாள் என்று மாறன் சற்றும் யோசித்துப் பார்த்திருக்கவில்லை. ஷாலினி என்பவள் வெற்றிக்கு தேவதை. மாறனுக்கு?

Advertisement