Advertisement

அத்தியாயம் 14

கன்னத்தில் இடியாய் விழுந்தத அடியில் திடுக்கிட்டு விழித்தான் பிளம்பர்.

ஜீன்ஸ் பாண்டில் கண்ணுக்கு கூலரை போட்டுக்கொண்டு யார் இவர்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இருந்த இருவரையும் அச்சத்தோடு பார்த்தவன் “யார் சார் நீங்க? எதுக்கு என்ன கடத்துனீங்க?” ஒன்றும் புரியாது குளறியவனாக கேட்டான்.

“அவன் முன்னால் ஒரு முக்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்த அன்வர் “உன் பேரென்ன” என்று கேட்க,

“மூர்த்தி. நான் சாதாரண பிளம்பர் சார். என்ன போய் எதுக்கு கடத்தி வச்சி டாச்சர் பண்ணுறீங்க?” தன்னை எதற்கு கடத்தி இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமலும், தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாமலும் குழம்பி நின்றான்.

“நீ ரொம்ப பேசுற. உன் பேர் மூர்த்தி. நீ சாதாரண பிளம்பர் தான். ஆனா நீ ஒரு கம்பனில ஜோஇன் பண்ணி வேல பாக்குற. அதோட பேர் ஹெல்ப் லைன். நீ எந்த வீட்டுக்கு வேலைக்கு போகணும், எப்ப போகணும் என்று உன் கம்பனிதான் உன்ன அனுப்புவாங்க” மாறன் நிறுத்தி நிதானமாக, ஒவ்வொரு தகவலையும் கூறி முடித்தான்.

“இதுல என்ன சார் தப்பு?” தான் செய்து கொண்டிருக்கும் தப்பு உள்ளுக்குள் உறுத்தினாலும் நல்லவன் போல் பேசினான் மூர்த்தி. 

 “மேலோட்டமா பார்த்தா எந்த தப்பும் இல்ல. சாதாரண பிளம்பர் பொண்ணுங்க தனியா வசிக்கும் வீட்டுக்குள்ள புகுந்து அவங்க குளிக்கிறத வீடியோ எடுக்கிறியா?” கன்னம் கன்னமாக அறைந்தான் மாறன்.

வலியில் துடித்த மூர்த்தி “சார் சார் என்ன விட்டுடுங்க இனிமேல் இந்த தப்ப பண்ண மாட்டேன். என்ன மன்னிச்சிடுங்க” தான் இதற்காகவா கடத்தப்பட்டோம் என்று புரிந்த போது கதறலானான்.

“இது கூட ஒரு மனநோய் தான் மாறன் முன்ன எல்லாம் பொண்ணுங்க ஆத்துல, குளத்துல குளிப்பாங்க, அத மறைஞ்சிருந்து பார்த்தானுங்க, இப்போ வாஷ்ரூம்ல குளிக்கிறத வீடியோ எடுத்து பாக்குறானுங்க, கேட்ட தப்பில்லன்னு வியாக்கியானம் பேசுவானுங்க. ஒரு பொண்ணு சம்மதம் இல்லாம ஒரு ஸ்டில் கூட எடுக்க கூடாது அது கூட தெரியாம திருட்டுத் தனமா வீடியோ” அன்வரும் மூர்த்தியை தாக்க, வலி தாங்க முடியாமல் கதறினான்.

“பிரபா உன்ன போலீஸ்ல புடிச்சி கொடுத்தா உன் கம்பனி உன்ன வேலைல இருந்து தூக்கல. தப்பா இருக்கே” யோசனையாக கேட்பது போல் அவனையே ஏறிட

“யார் சார் பிரபா?” முழித்தான் மூர்த்தி.

மாறன் அடித்த அடியில் “சொல்லுறேன் சார் சொல்லுறேன். நம்ம கம்பனில ரெண்டே ரெண்டு பிளம்பர் தான் குமார் டெங்கு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தான். அந்த நேரத்துல என்னையும் வேலைய விட்டு நிறுத்திட்டா கம்பனிக்கு நஷ்டம் என்றுதான்…” மூர்த்தி இழுக்க

சத்தமாக சிரித்த மாறனும் அன்வரும் அவனை “என்ன காதுல பூ சுத்த பாக்குறியா?” என்பது போல் பார்க்க “சார் நான் உண்மையைத்தான் சொல்லுறேன். எனக்கு இது ஒண்ணுதான் வீக்கனஸ் மத்தபடி நான் நல்லா வேல பார்ப்பேன்” என்றான்.

“சரி சொல்லு நீ எடுத்த வீடியோ எல்லாம் யார் யாருக்கு ஷார் பண்ணுற? யார் யார் கூட சேர்ந்து பார்த்து என்ஜோய் பண்ணுற? எத்தனை பொண்ணுங்களை மிரட்டி காசு பார்த்திருக்க? எத்தனை பொண்ணுங்களை பாலியல் தொந்தரவு பண்ணி இருக்க?”

“யார் சார் நீங்க? போலீசா? இல்ல அந்த பொண்ணுகளோட அண்ணன்களா?” மாறனும் அன்வரும் அமைதியாக இருப்பதை பார்த்து “சார் என்ன சார் அக்கியூஸ்ட் கிடைக்கலன்னு இருக்குற எல்லா கேஸையும் என் தலைல கட்டலாம்னு பாக்குறீங்களா? நான் என்னமோ வீடியோ எடுத்தேன். தினமும் அத பார்த்து ரசிக்கிறேன். அவ்வளவுதான். என்ன போய் செக்ஸ் டாச்சர் பண்ணுறதாகவும், மிரட்டி காசு புடுங்கறதாகவும் சித்தரிக்கிறீங்க” உள்ளுக்குள் அச்சம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மூர்த்தி பேசினாலும் அவன் குரல் கொஞ்சம் நடுங்கித்தான் ஒலித்தது.

நந்தகோபால் அவனது அலைபேசியை அலசி ஆராய்ந்து கொண்டு வரும் தகவலை வைத்துதான் இவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்று தெரியவரும். இவனை வைத்துதான் அந்த ஆறடி டாட்டூ ஆசாமியை பிடிக்க எண்ணி இருந்தான் மாறன்.

“அப்போ நீ எந்த பெண்ணையும் ரேப் பண்ணல” அவன் முன் அமர்ந்தவாறே கேட்டான் மாறன்.

“சார் பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி சார். கசக்கி பிழிய கூடாது. வந்தா வாசம் பிடிப்பேன் அவ்வளவுதான்”

மூர்த்தியின் பேச்சுக்கள் அன்வருக்கும், மாறனுக்கு எரிச்சலை கூட்டியதோடு அவர்கள் எதிர்பார்த்த உண்மையும் கிடைக்காததால் தலைவலிக்க ஆரம்பிக்க, இருவரும் வெளியே வந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து மாறி மாறி புகைக்க ஆரம்பித்தனர்.

“என்ன மாறன் இவன் ரொம்ப உத்தமன் மாதிரி பேசிகிட்டு இருக்கான். எனக்கு வர ஆத்திரத்துக்கு ரேத்த காயம் வரும் வரைக்கும் அடிச்சி துவைக்க தோணுது” கோபத்தை அடக்கியவாறு கூறினான் அன்வர்.

“உசுரு போய்ட்டா. கிடைச்ச ஒருத்தனையும் விசாரிக்க முடியாம போயிடும்னு பொறுமையா இருக்கேன். இல்லனா அவன் சோலி முடிஞ்சிருக்கும்” வெறுப்பை கக்கினான் மாறன்.

அவர்கள் அடுத்த சிகரெட்டை பாதி புகைக்கும் பொழுது நந்தகோபால் அங்கே வந்து சேர்ந்தான்.

“எல்லா டீட்டைளையும் கலெக்ட் பண்ணிட்டியா?” அன்வர் கேட்க

“எஸ் சார்” என்றவாறே கோப்பை மாறனின் கையில் கொடுத்தான் கோபால்.

“அவன் போன் பண்ண ஒரே நம்பர் அவன் அம்மாதான் சார். அவங்க ஊருல இருக்காங்க. அவனுக்கு ரெண்டு நம்பர்ல இருந்து அடிக்கடி போன் வரும். ஒன்னு அவன் அம்மா நம்பர். அடுத்தது ஹெல்ப் லைன் கம்பனி நம்பர். வாரத்துல நாலு அல்லது அஞ்சு நாள் வேலைல பிசியா இருப்பான். எட்டு மணிக்கு ஆரம்பிச்சா. மாலை அஞ்சு, ஆறு மணிவரைக்கும் வேல பார்ப்பான். மத்த ரெண்டு அல்லது மூணு நாள் ஏதாவது பொண்ணு கூட ரூம்ல கூத்தடிப்பான். ப்ரெண்ட்ஸ்னு சொல்லிக்க யாருமில்ல” கோபால் சொல்ல

“அப்போ அவன் சொன்னது உண்மையா?” அன்வர் மாறனை ஏறிட

“சார் இது அவனோட செல்போன். பழைய மாடல் இதுல ஒரு டூ ஜீபீ ரெம்ம போட்டு பொண்ணுங்க குளிக்கிற வீடியோவை எடுத்து வச்சிருக்கான். அநேகமா போன மறந்து வச்சிட்டதா டிராமாத்தான் பண்ணி இருப்பான். இல்ல டூல்ஸ் ஏதாவது மறந்துட்டதா சொல்லி இருப்பான்”

“இந்த டப்பா செல்போன்ல வாட்ஸ்அப் மட்டும் தானே இருக்கும். இதுல யாருக்காவது வீடியோ ஷார் பண்ணி இருக்கானா?” அந்த பழைய நோக்கியா போனை திருப்பி திருப்பி பார்த்த மாறனுக்கு சுத்தமாக புரியவில்லை.

இதிலா அவன் வீடியோ எடுத்தான்? இதில் எடுத்த வீடியோவை வைத்தா பெண்களை மிரட்டினான்? இல்லை இதில் எதோ இருக்கிறது.

“எந்த வீடியோவும் ஷார் பண்ணப் படல சார். ஏன்னா அவன் வாட்சப் யூஸ் பண்ணல”

“என்னய்யா சொல்லுற?” அன்வரும் குழம்பிப் போய் கேட்க

“ஆமாம் சார். அவன் போன் நம்பரை வச்சி இதற்கு முன் வேற செல்போன் உபயோகித்தானா? இல்ல வேற நம்பர் உபயோகித்தானா? என்றெல்லாம் பார்த்தாயிற்று எதுவும் இல்ல. பேஸ்புக் போன்ற சோசியல் மீடியால கூட இல்ல” கோபாலும் கிடைத்த ஒருவனும் பிரயோஜனம் அற்றவனாகிப் போனதில் விரக்தியாகவே பேசினான்.

“என்ன மாறன் இப்படியாகிருச்சு?” அன்வர் நெற்றியை தடவ

“நாம சரியான ரூட்லதான் போய்கிட்டு இருக்கோம் அன்வர். இவன் செல்போன்ல இருந்த வீடியோவ இவனுக்கு தெரியாமளையே யாரோ எடுத்திருக்காங்க. அது அந்த ஹெல்ப் லைன் கம்பனில இருக்குற ஒருத்தன். அத இந்த மூர்த்திதான் சொல்லணும்” என்ற மாறன் உள்ளே நுழைந்தான்.

“என்ன விட்டுடுங்க சார். உங்க தங்கச்சி வீடியோவ உங்க கிட்டயே கொடுத்துடுறேன்” என்றவன் மீண்டும் “அத வச்சிக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க? அத பார்க்கும் போதெல்லாம் என்ன அடிக்க தோணும், தேடி வருவீங்க. அத உங்க கண்ணு முன்னாடியே அழிச்சிடுறேன் சார். என்ன விட்டுடுங்க” கெஞ்சலானான். போலீஸாக இருந்தால் துப்பாக்கியை வைத்து மிரட்டி இருப்பார்கள். இவர்களிடம் துப்பாக்கி இல்லை. ஆகா இவர்கள் தான் வீடியோ எடுத்த பெண்களின் அண்ணன்கள் யாராவதாக இருக்கும் என்று எண்ணி பேசினான் மூர்த்தி. 

“நீ வீடியோ எடுத்த ஒவ்வொரு பொண்ணும் எங்க தங்கச்சிங்க தான்ட நாயே” என்ற மாறன் சரமாரியாக அடிக்க ஆரம்பிக்க,

“மாறன் அவன் செத்துடுவான் மாறன்” அன்வர் அவனை தடுக்க,

“வீடியோவையும் எடுத்துட்டு என்ன பேச்சு பேசுறான் பாருங்க அன்வர். இவன எல்லாம் சும்மா விடலாமா?”

“முதல்ல நமக்கு தேவையான இன்போர்மேஷன கெதர் பண்ணலாம்” என்ற அன்வரின் கண்கள் கூட வேங்கையின் கண்களாக மாறி இருந்தன.

“சரி சொல்லு வாரத்துல எத்தனை நாள் கம்பனிக்கு போவ?” அவன் முன்னால் அமர்ந்தவாறே கேட்டான் மாறன்

“இதெல்லாம் எதுக்கு சார் கேக்குறீங்க?”

“பதில் சொன்னா சார் உன்ன அனுப்பிடுவாரு. சொல்லுடா” என்றான் நந்தகோபால்.

“நிஜமாவா?” என்றவனுக்கு மாறனை பார்க்கும் பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“வாரத்துக்கு ஒருக்கா எல்லாம் இல்ல சார். மாசத்து ஒருக்கா லேபர் மீட்டிங் நடக்கும். அப்போ எல்லாரும் போகணும்”

“எப்போ நடக்கும்?” கேட்டது அன்வர்தான்.

“மாசத்துல லாஸ்ட் சண்டே நடக்கும்” அடிப்பார்களோ என்ற அச்சத்திலையே பேசினான் மூர்த்தி.

“கம்பனில நடக்குமா? இல்ல வெளில எங்கயாச்சும் நடக்குமா?” மாறன் யோசனையாக கேட்க

“சிலநேரம் கம்பனில நடக்கும், சிலநேரம் வெளில நடக்கும்”

“அப்போ உன் செல்போன் எங்க இருக்கும்?” மூர்த்தியின் கண்களை பார்த்து கேட்க,

“யாரும் உள்ள போகும் போது செல்போன் எடுத்துட்டு போகக் கூடாது. வெளிய ஒரு பாக்ஸ் வச்சிடுவாங்க அதுல போட்டுட்டு போகணும்” மாறன் எதற்கு கேட்கிறான் என்று தெரியாமளையே உண்மையை உளறினான்     

“நினச்சேன்” என்ற மாறன் அடுத்த நொடி இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து மூர்த்தியின் நெத்தியில் வைத்திருந்தான்.

“சார் சார் என்ன சுட்டுடாதீங்க சார்” துப்பாக்கியை பார்த்ததும் உடல் வெட வெடக்க வியர்வையில் குளித்தவன், மாறனின் காலடியில் விழ முயன்றான். 

“நீதானே சொன்ன உன்ன அனுப்பிட சொல்லி அதான் அனுப்பிட போறேன். வெளிய இல்ல. பரலோகத்துக்கு” மாறனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“மாறன் இது கவர்மண்ட் கன். சுட்டா நீ டிபார்மண்ட்டுக்கு பதில் சொல்லணும்” அன்வர் நியாபகப்படுத்த

“அதுக்காக இவன விட்டுடலாம்னு சொல்லுறியா?” அன்வரை முறைத்தான் மாறன்.

“இவனுக்கு எல்லாம் எதுக்கு மாறன் புல்லட்ட வேஸ்ட் பண்ணிக்கிட்டு” சிரித்தான் அன்வர்.

“சார் சார் என்ன விட்டுடுங்க சார்” கத்தினான் மூர்த்தி.

“பொண்ணுங்க குளிக்கிற வீடியோவாடா எடுக்குற? உனக்கு தண்ணிலதான்டா சாவு” அவன் வாயை அடைத்தான் மாறன்.

அடுத்த சில மணித்தியாலங்களில் கூவத்தில் மிதந்தது மூர்த்தியின் பிணம்.

“சார் கேஸ் நம்ம ஏரியா போலிஸ் ஸ்டேஷனுக்குத்தான் வரும் நான் பார்த்துகிறேன்” என்றான் நந்தகோபால்

“டி.ஐ.ஜி கேட்டா என்ன சொல்ல போறீங்க மாறன்” நக்கலாகவே அன்வர் கேக்க

அன்வர் வீட்டில் தேநீர் அருந்தியவாறு ளுஹா கொடுத்த பக்கோடாவை கொறித்துக் கொண்டிருந்த மாறனோ “அவனை புடிச்சி எந்த கேஸ்ல அன்வர் உள்ள போடுவீங்க? கொஞ்சம் நாள்ல வெளில வந்துடுவான். இவனுங்க எல்லாம் ஒரு வித சைக்கோ. ஒன்னு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும். இல்லையா செத்துடனும். கோட்டு கேஸுன்னு அலைஞ்சா டைம்தான் வேஸ்ட் ஆகும்.

பொண்ணுங்களுக்கு பாதுகாப்பில்லைனு சொல்லுறதும், நாம பாதுகாப்பா இருக்கிறதா நினைக்கிறதும் தப்பு. ஆபத்து எப்படி வேணா வரலாம். நம்ம பாதுகாப்பு நம்ம கைல. ஒவ்வொரு பொண்ணும் ஏதாவது ஒரு தற்காப்புக் கலைய கத்துக்கணும் அன்வர் சார்”

“சும்மாவே புருஷன தூக்கி போட்டு மிதிப்பாளுங்க, இதுல நீங்க வேற ஐடியா கொடுக்குறீங்களா?” அன்வர் சிரிக்க,

“சாருக்கு ரொம்ப அனுபவமோ” மாறனும் சேர்ந்து சிரித்தான்.

“அங்க மட்டும் என்னவாம்? ஆமா எப்போ கல்யாணம்? ஷாலினியை கூட்டிகிட்டு வாங்க மாறன்” அன்வர் சந்தோசமாக பேச மாறன் முகம் இருண்டது.

“ஓகே. அன்வர் சார் நான் கிளம்புறேன். நைட் ஆகிருச்சு” மாறன் அவசரமாக விடைபெற

“சார் சாப்பிட்டு போங்க. ஏங்க சொல்லுங்க” என்றவாறு ளுஹா வந்து நிற்க

“இல்ல சிஸ்டர் அம்மா எனக்காக வைட்டிங். இந்த கொஞ்சம் நாளா அவங்க கிட்ட ஒழுங்கா பேச கூட முடியல. ஓகே பை அன்வர் சார்” என்ற மாறன் ஒருகணமேனும் தாமதிக்காமல் அவன் ஜீப் வண்டியில் ஏறி வீட்டை நோக்கி பறந்திருந்தான்.

கேஸில் அடுத்த நடக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்ததால் அன்வரோடு பேசலாம் என்று நினைத்தவன் ஷாலினியை பற்றி பேச்சு வரவும் வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி வந்து விட்டான். 

வண்டியில் சென்று கொண்டிருந்தவனுக்கு ஷாலினியின் நியாபகம் வர கோபம் பன்மடங்காக பெருகியது.

அவனை வேண்டாம் என்று சொல்ல லதாவை காயப்படுத்துவாளா? எல்லாம் தன்னை பெற்றவரை சொல்ல வேண்டும்.

பூபதிக்கு மாறன் வறட்டு பிடிவாதத்தால் ஷாலினியை விலக்கி வைத்து, தன் சந்தோஷத்தையும் இழந்து எங்கே தனிமரமாக வாழ்க்கையில் நின்று விடுவானோ என்ற அச்சம் உருவானது.

அதனால் நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் மனைவியிடம் ஷாலினியை பற்றியும், அவள் வெற்றியை காதலித்ததையும், வெற்றி அவளை காதலித்ததையும், தற்பொழுது மாறன் அவளை காதலிப்பதையும் விளக்கமாக கூறியவர். மாறனின் வாழ்க்கைக்காக நாம்தான் ஷாலினியிடம் சென்று பேச வேணும் என்று கூற, முதலில் இது சரிப்பட்டு வராது என்று மறுத்த லதாவும் இறந்து போன வெற்றியை நினைத்து ஷாலினி தனிமரமாக இருப்பதை போல், அவளை நினைத்து மாறன் இருந்து விட்டால் வாழ வேண்டிய இளையவர்கள் வாழ்க்கை வீணாகி விடும் என்று ஷாலினியிடம் பேச சம்மதித்தாள்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை ஷாலினி வீட்டில் இருக்கக் கூடும் என்று பூபதியும், லதாவும் அவளை காண சென்றனர்.

“வாங்க” என்று வரவேற்றவளுக்கு பூபதியை தெரிந்திருந்தாலும், லதாவை யாரென்று தெரியவில்லை. பூபதியோடு வந்ததால் அவரின் மனைவி, வெற்றியின் அன்னையாக இருக்கக் கூடும் என்று ஊகித்தாள்.

மனமகிழ்ச்சியாகவே அவர்களை வரவேற்று அமர சொன்னவளுக்கு இவர்கள் எதற்க்காக இங்கே வந்திருப்பார்கள் என்று புரியவில்லை. “இருங்க குடிக்க ஏதாச்சும் எடுத்து வரேன்” என்று ஷாலினி உள்ளே செல்ல முற்பட

லதா அவள் கைகளை பற்றிக் கொண்டு “தேவதை மாதிரி இருக்கேயேம்மா. உன்ன காதலிக்க என் பையன் குடுத்து வச்சவன்தான்” என்றாள்.

சோபையாக புன்னகைத்த ஷாலினிக்கு லதா வெற்றியைத்தான் சொல்கிறாள் என்று தான் அக்கணம் தோன்றியது. வெற்றியை சந்தித்தது முதல் நடந்த அத்தனையும் ஷாலினியின் கண்முன் வந்து செல்ல வெற்றி இல்லை என்பதும் நியாபகம் வந்து கண்களில் நீர் கோர்த்தது.

“தனியாவா இருக்க? பேசாம ஏன் கூட வந்து தங்கிடேன். எனக்கும் பொம்பள பசங்க இல்ல” ஷாலினியின் கையை விடாது லதா பேச ஷாலினிக்கு லதாவை பிடித்துப் போனது.

லதாவின் கையை பிடித்துக் கொண்டு அப்படியே செல்லலாம் என்று மனம் சொன்னாலும் அங்கே மாறன் இருப்பது நியாபகம் வர தலையை உலுக்கிக் கொண்டவள் “அப்பா ஆசையாசையா கட்டின தாஜ்மகால் அத்த இது. எங்கம்மாவோட கனவு இல்லம். எங்க குடும்பத்துல நான் மட்டும்தான் எஞ்சி இருக்கேன். நானும் வீட்டை விட்டு போய்ட்டா எப்படி?” லதாவின் பேச்சு பிடித்துப் போனதில் சகஜமாக அத்த என்று அழைத்திருந்தாள் ஷாலினி.

“அப்போ கல்யாணம் பண்ணி என் பையன என்கிட்ட இருந்து பிரிச்சு, தனிக்குடித்தனம் கூட்டிகிட்டு இந்த வீட்டுக்குத்தான் வர போறியா? அதெல்லாம் முடியாது. நானும் என் பையன் கூட இங்கயே தான் இருப்பேன்” குழந்தை போல் அடம்பிடித்தாள் லதா.

“கல்யாணமா? என்ன சொல்லுறீங்க?” லதாவை புரியாத பார்வை பார்த்த ஷாலினி பூபதியை ஏறிட்டாள்.

அப்பொழுதுதான் அவர்கள் கொண்டு வந்திருந்த பூ, பழங்கள், மற்றும் நகை பெட்டியும் கண்ணில் பட்டது. லதாவோடு பேசிக்கொண்டிருக்கும் போது பூபதி எல்லாவற்றையும் அருகிலிருந்த மேசையில் அடுக்கி வைத்திருந்தார்.

“யாருக்கு கல்யாணம்? யாரோடு கல்யாணம்?” ஷாலினியின் குரலில் சீற்றம் இருந்தது.

அதை கவனிக்காத லதா சந்தோசமாக “மாறனோட கல்யாணத்த ஜாம்ஜாம்னு கொண்டாடணும். எனக்கு இருக்குறதுக்கு ஒரு பையன். உங்க வீட்டுலையும் நீ மட்டும்தான். ஒத்த புள்ளையா போய்ட்டிங்க. கல்யாணத்த சிம்பிளா பண்ண முடியுமா? சொல்லு” என்றவாறே ஷாலினியின் கன்னம் தடவ லதாவின் கையை தட்டி விட்டாள் ஷாலினி.

லதா அதிர்ந்து என்னவென்று கேட்கும் முன்பாகவே “அதானே பெத்த உடனே வெற்றியை வேணாம்னு தூக்கி கொடுத்தவங்க தானே நீங்க. ஒத்த புள்ளய பெத்துட்டேன்னு வாய் கூச்சமா சொல்லத்தான் செய்வீங்க. பெத்த புள்ளையையே தூக்கி கொடுக்க உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? நீங்க எல்லாம் ஒரு அம்மா. அவன் இறந்துட்டான்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம அவனை காதலிச்ச என் கிட்டயே உங்க பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லி வந்து நிக்கிறீங்க?  வெக்கமா இல்ல. அதெல்லாம் உங்க கிட்ட இருக்குமா என்ன? உங்களுக்கு உங்க பையனோட சந்தோசம் மட்டும்தான் முக்கியம் இல்ல. வெற்றியை நீங்க உங்க பையனாகவே பார்கலையே. நினைச்சி கூட பார்த்திருந்தா அவனை தேடி வந்திருப்பீங்களே

இதோ இவருக்கு உங்க சந்தோசம். நீங்களும் உங்க பையனும் மட்டும் நல்லா இருந்தா போதும். வெற்றி எப்படி போனாலும் பரவா இல்ல. அப்படித்தானே. கொலைகார குடும்பம்” பூபதியையும் விடாது ஆத்திரம் தீர திட்ட கோபத்தில் கண்கள் சிவந்திருந்த ஷாலினியின் கன்னம் தீயாய் எரிந்தது. மாறன் தான் அவளை அறைந்திருந்தான்.

ஷாலினியின் வீட்டுக்கு கிளம்பி வரும் பொழுதே லதா மாறனை அழைத்து ஷாலினியின் வீட்டுக்கு செல்வதாகவும், அவளை அவனுக்கு பெண் கேட்க போவதாகவும் கூற, மாறன் அலைபேசி வழியாகவே செல்ல வேண்டாம் என்று தடுத்தான்.

“நான் உன் அம்மாடா… உனக்கு எது நல்லதோ அதை தான் செய்வேன்” என்றாள் லதா.

இங்கே வந்தால் இப்படி ஏதாவதுதான் நடக்கும் என்று அறிந்த மாறனும் ஷாலினியின் வீட்டுக்கு விரைந்திருந்தான்.  

“மாறா…” பூபதியும் லதாவும் ஒரே நேரத்தில் அழைக்க வாயில் விரலை வைத்து அனைவரையும் அடக்கியவன்.

“யார் உங்கள இங்க வர சொன்னது? நான் சொன்னேனா? கிளம்புங்க முதல்ல” என்று சத்தம் போட

“நான் பேசுறேன்டா…” லதா நெஞ்சில் கைவைத்து கண்ணீரில் கரைந்தாள்.

மாறன் அறைந்ததில் காளி அவதாரம் எடுத்திருந்த ஷாலினியோ கோப மூச்சுக்கலை வெளியிட்டவாறு “முதல்ல எல்லாரும் என் வீட்டுல இருந்து வெளிய போங்க” என்று கத்த

அவள் கழுத்தை பிடித்த மாறன் “அம்மா கிட்ட மரியாதையா பேசு”

மாறனின் கையை தள்ளி விட முயன்றவாறே “வலிக்குது” என்று முனக, கையை இழுத்துக் கொண்ட மாறனின் தோரணை அப்படியே மாறிப் போனது.

“என்ன கஷ்டப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என் ஷாலியையும் கஷ்டப்படுத்த இங்க வந்தியா? இன்னும் என்ன? செய்ய காத்துகிட்டு இருக்க? அதான் என்ன வேணாம்னு பொறந்த உடனே தூக்கிக் கொடுத்தல்ல நீ. இப்போ எதுக்கு வந்திருக்க? எங்களை நிம்மதியா இருக்கவே விடமாட்டியா? இங்கிருந்து போ” வெற்றியாக மாறி லதாவை பார்த்து கத்தியவன் ஷாலினியை இறுக அணைத்துக் கொண்டான்.

ஒருகணம் என்ன நடந்ததென்று லதாவுக்கும் புரியவில்லை. ஷாலினிக்கும் புரியவில்லை. நிலைமையை புரிந்துகொண்ட பூபதிதான் மாறனின் அருகில் வந்து “கண்ட்ரோல் யூர்செல்ப், ரிலேக்ஸ்” என்று அவனை ஆசுவாசப்படுத்த முயல,

“லவ் யு ஷாலினி” என்றவாறே அவள் தோளில் மயங்கி சரிந்தான் மாறன்.

“வெற்றி, வெற்றி எழுத்துரு” ஷாலினி அவனை உலுக்க,

“அவன் வெற்றி இல்லமா மாறன்” என்ற பூபதி அவனை சுமந்து கொண்டு சென்று வண்டியில் கிடத்த அழுதவாறே லதாவும் பூபதியின் பின்னால் சென்றாள்.

வெற்றியை ஒரு சில கணங்கள் பார்த்த சந்தோசம், அதிர்ச்சி என்று ஷாலினி “வெற்றி, வெற்றி” புலம்பியவாறே இருந்தாள்.

வெற்றியாக மாறிய போது தான் என்ன பேசினோம் என்று அறியாத மாறனும் ஷாலினி அன்னையை தப்பாக பேசியதாக கோபமாக இருக்கின்றான்.

லதாவும் மாறனிடம் ஷாலினியிடம் சென்று பேசுமாறு கெஞ்சிக் கொண்டு இருக்கின்றாள்.

மாறன் பிடிவாதமாக அதை மறுத்துக் கொண்டிருக்க, ஷாலினி மாறனுள் இருக்கும் வெற்றியை உயிர்ப்பித்து எப்படி என்ற யோசனையில் இருந்தாள்.

Advertisement