Advertisement

அத்தியாயம் 13
ஷாலினி அவள் வேலையில் கவனமாகி பாடசாலை சென்று வந்து கொண்டிருந்தாள்.
தந்தையின் இழப்பால் மீண்டு வர அக்கா மாலினி அருகில் இருந்தாள். அக்கா மாலினியை இழப்பை ஈடு செய்ய யாரும் இல்லை என்றாலும் அவளை கொன்றவனை கண்டு பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கவே அவளே தன்னை மீட்டுக் கொண்டாள்.
அடுத்த அடியாக அவள் நேசித்த ஒரே ஜீவன் வெற்றியின் இழப்பை அவளால் தாங்க முடியவில்லை. அழுது கரைந்தால் எங்கே மாறன் அவளை தேடி வந்து விடுவானோ என்று அஞ்சியே  தான் சாதாரணமாக இருப்பதாக காட்டிக் கொண்டு பாடசாலைக்கு சென்று வரலானாள். குழந்தைகளோடு ஐக்கியமானால் கொஞ்சம் நேரம் அவளுடைய பிரச்சனைகளை மறந்து தான் போனாள் பெண்.
ஆனால் இரவின் தனிமையில் வெற்றியின் நினைவுகள் அவளை ஆட்கொள்ளும் போது அவளால் நடந்தது அனைத்தும் கனவா? நிஜமா?  கற்பனையா? என்று பிரித்தறிய முடியாதபடி மூளை மங்கிப் போய்விடும். அழுது அழுது ஓய்ந்தவளுக்கு வெற்றி உயிரோடு இல்லை என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
அதைவிட பூபதி சொன்ன வெற்றியின் மூளையை பொருத்தியதால் மாறன் சில நேரம் வெற்றியாக மறுக்கின்றான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
வெற்றிக்கு மணிமாறன் என்றொரு இரட்டை சகோதரன் இருப்பது ஷாலினி அறிந்ததே. அதை  வெற்றியே அவளிடம் ஒருதடவை உணவகத்தில் சந்தித்துக் கொண்ட போது கூறி இருந்தான்.
“என்ன சீனியர் பலத்த யோசனையில் இருக்கிறீங்க போல?” சிந்தனையோடு அமர்ந்திருந்த வெற்றியை பார்த்தவாறு அவன் முன்னால் வந்தமர்ந்தாள் ஷாலினி.
புன்னகைத்தவன் “ஒன்றுமில்லை” என்னும் விதமாக தலையசைத்து மழுப்ப
“நீ ஒண்ணுமில்ல என்றாலே ஏதோ விஷயம் இருக்கு வெற்றி சொல்லு என்ன விஷயம்” அவன் கைகளை பற்றியவள் கண்களாளேயே சொல்லு இல்லை விடமாட்டேன் எனும் விதமாக மிரட்டினாள்.
அவள் செயல் வெற்றியை ஈர்த்தது மட்டுமல்லாமல் அவள்தான் அவனுக்கு ஆறுதலும் கூட தனது அன்னையும், தந்தையும் தான் பிறந்த உடன் பிரிந்து விட்டதாகவும், தன்னுடைய இரட்டை அன்னையோடு ஊட்டியில் இருப்பதையும் கூறினான் வெற்றி.
“என்னது நீ டுவின்ஸ்ஸா. வாவ் சினிமால வரமாதிரி அம்மாகிட்ட ஒரு பையன், அப்பாகிட்ட ஒரு பையன் சூப்பர். ஆமா உன் ரெட்டை பேர் என்ன பார்க்க உன்ன மாதிரியே இருப்பானா?”
“மணிமாறன். நான் அவன இன்னும் மீட் பண்ணல”
“போட்டோ கூட கிடையாதா?”
“இல்லை”
“உன்ன மாதிரியே இருந்தாலும் நேருல வந்தா நானே ஆயிரம் வித்தியாசம் சொல்வேன்” சிரித்தாள் ஷாலினி.
“எப்படி இப்படி அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்க முடியும்?” ஷாலினியால் நம்பவே முடியவில்லை.
“கண்முன்னால் வந்தால் ஆயிரம் வித்தியாசம் கண்டு சொல்வதாக சொன்னியே உன்னால அவனை அடையாளம் தெரியல. வெற்றி என்று ஏமாந்துட்ட. அடென்டிகள் ட்வின்னா பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். ஏன் அவங்க டி.என்.ஏ கூட ஒரே மாதிரிதான் இருக்குமாம்” அவள் மூளை விழித்துக்கொண்டு எடுத்துரைக்க,
“இல்லை இல்லை. என் வெற்றியோட காதலை அவன் கண்ணுல பார்த்தேன். அதெல்லாம் பொய்யில்லை.
“அப்படினா அந்த மணிமாறன் உன்ன லவ் பண்ணுறான்னு சொல்லுறியா?” அவள் மனசாட்ச்சி அவளை கேட்க, அதிர்ச்சியில் புலம்புவதை நிறுத்தினாள் ஷாலினி.
“வெற்றியோட காதலை இல்லை. நீ அவனோட காதலதான் அவன் கண்ணுல பார்த்திருப்ப, நீ வெற்றியா நினைச்சி கிஸ் பண்ணாலும் அவன் உன்ன வெற்றியா கிஸ் பண்ணல இல்லை. அவன் அவனாகத்தானே நின்னான். நீ வெற்றி வெற்றி என்று அவனை வெறுப்பேத்த போய்தான் அவன் உண்மைய சொன்னான். நீ மாறன் என்று மட்டும் கூப்பிட்டு இருந்திருந்தா இந்நேரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆகி இருக்கும்” அவள் மனதில் என்னென்னமோ எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருக்க அதை இழுத்து நிறுத்தியவள்
“சிவா, சிவா… ” கன்னத்தில் போட்டுக் கொண்டு “என் வெற்றியை தவிர நான் வேற யாரையும் நினைச்சி கூட பார்க்க மாட்டேன்” தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ஆனாலும் வெற்றி என நினைத்து மணிமாறனிடம் அவள் நெருக்கமாக நடந்து கொண்ட தருணங்கள் நியாபகம் வரும் பொழுது அவளையே வெறுக்கலானாள்.
நடந்ததை மாற்ற இயலாது எல்லாவற்றையும் கடந்துதான் வந்தாக வேண்டும் அதைத்தான் அவள் அக்கா மாலினியும் அடிக்கடி சொல்லுவாள், வெற்றியும் விரும்புவான். அவர்களுக்காகவேண்டியே தன்னை மாற்ற முயன்று வெற்றியும் கண்டாள்.
பகல் பொழுதில் எந்த பிரச்சினையும் இல்லை இரவில்தான் தனிமை அவளை பாடாய் படுத்தும். தான் நேசித்தவர்கள் யாருமே தன்னருகில் இல்லாததை எண்ணி அழுது கரைவாள். அவளாகவே அவளை தேற்றிக்கொண்டு அடுத்த வேலையை பார்ப்பாள்.      
இறந்த வெற்றியின் முகத்தை கடைசியாக அவளால் பார்க்கத்தான் முடியவில்லை. அவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அவனை தரிசித்து விட்டு வரலாம் என்று எண்ணியவளுக்கு அவனை எங்கே அடக்கம் செய்தார்கள் என்று தெரியவில்லை. அதை மணிமாறனிடமா கேட்க வேண்டும் என்று நினைக்கையில் கசந்தது. பூபதியின் நியாபகம் வர சற்றும் யோசிக்காமல் அவர் மருத்துவமனைக்கு சென்றாள்.
பூபதியின் முன்னால் நின்றவளுக்கோ எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. பூபதிக்கும் ஷாலினியை பார்த்த அதிர்ச்சியில் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“வாம்மா… நல்லா இருக்கியா? உடம்பு எப்படி இருக்கு?” பொதுவாக கேட்டவர் அமைதியாக அவளையே பாத்திருக்க, அவர் கேள்விகளுக்கு தலையசைத்து பதில் சொன்னவள் தட்டுத் தடுமாறி வெற்றியை எங்கே அடக்கம் செய்திருப்பதாக கேட்டாள். 
கேட்கும் பொழுதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்த்திருக்க, சிரமப்பட்டு அதை அடக்கிவள் புன்னகைத்தாள்.
“புதைக்கலமா, அவனை எரிச்சோம்” என்று பூபதி சொன்னதும் ஓவென அழ ஆரம்பித்தாள் ஷாலினி. 
“என்னம்மா ஆச்சு” என்று தனது இருக்கையிலிருந்து எழுந்த பூபதி அவள் அருகில் வந்திருந்தார்.
“டீ, காபி கூட சுட சுட சாப்பிட மாட்டான். அவனை போய் எரிச்சிட்டீங்களே” என்று கதற
ஆறுதல் சொல்ல அவள் தோளில் கை வைக்க முனைந்த பூபதியின் கை அவர் அதிர்ந்ததில் அப்படியே நிற்க, மாறன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்.
ஷாலினியை தந்தையின் அறையில் கண்டு அதிர்ந்தவனுக்கு அவள் அழுது கொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியோடு குழப்பத்தைக் கொடுக்க,  தந்தை அதிர்ந்து நின்றது எல்லாம் கண்ணில் பட்டாலும் கருத்தை கவரவில்லை.
“என்னாச்சு?” பதறியவனாக அவள் அருகில் ஓடிவந்திருந்தான் மாறன்.
அவன் குரல் கேட்டு அழுகையை நிறுத்தியவள் அவனை ஏறிட மாறனை கண்டு அவள் மனம் குதூகலிப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை முகத்தில் காட்டாது இருக்க, “நான் வரேன் அங்கிள்” என்று அங்கிருந்து ஓடாத குறையாக வெளியேறி இருந்தாள்.
அந்த நேரத்தில் மாறன் அங்கு வருவான் என்று தெரிந்திருந்தால் இவள் சென்றிருக்கவே மாட்டாள். என்ன வெக்கம் கெட்ட மனம் இது. வெற்றியை காதலித்து விட்டு மாறனை பார்த்ததும் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறது. வெற்றியை போலவே இருந்தால் மட்டும் மாறன் என் வெற்றியாகி விடுவானா? எந்த காரணத்தைக் கொண்டும் அவனை சந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் ஷாலினி.
“ஷாலினி எதுக்கு உங்கள பார்க்க வந்தா? உங்களைத்தான் கேக்குறேன். எதுக்கு அவ உங்கள பார்க்க வந்தா? நீங்க வர சொல்லித்தான் வந்தாளா?” கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அவள் உருவம் மாறனின் கண்களுக்குள் இம்சிக்க, தந்தையை உலுக்கலானான்.
சுயநினைவுக்கு வந்தவராக பூபதி அவரது இருக்கையில் சென்று அமர்ந்து அவள் வந்த காரணத்தைக் கூற, மாறனுக்கு அவளை நினைத்து பாவமாக இருந்தது.
கூடவே கோபமும் வந்தது. “நான் என்ன ராட்சசனா என்னை பார்த்ததும் தலை தெறிக்க ஓடுகிறாள்? இல்லை தீண்டாத தகாதவனா? பார்க்கக் கூட பிடிக்காமல் போகிறாள். பார்த்தால் பேச மாட்டாளா? எப்படி இருக்கிறாய் என்று நலம் கூட விசாரிக்க மாட்டாளா?” தந்தையிடம் கத்தியவன் இருக்கையில் அமர்ந்து விட்டான்.
ஷாலினியை நினைக்கக் கூடாது, அவளை சந்திக்கக் கூடாது என்று மாறன் முடிவெடுத்திருந்தாலும் அவனால் அவளை நினைக்காமலும் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியவில்லை. தினமும் அவள் பாடசாலை செல்லும் நேரத்தில் சென்று அவளறியாமல் பார்த்து விட்டுத்தான் வருகின்றான். நிர்மலாக இருக்கும் அவள் முகத்தை வைத்து அவள் சந்தோசமாக இருக்கிறாளா? சோகமாக இருக்கின்றாளா? அவனால் ஊகிக்க முடியவில்லை.
அவளை பார்த்தால் அவன் மனம் நிம்மதி அடைய, அவனும் தினமும் சென்று பார்த்து விட்டு வருகின்றான். வெற்றியின் மூளையின் உந்துதலாத்தான் தான் இவ்வாறெல்லாம் செய்வதாக பூபதியிடமும் கூறி இருந்தான். சீக்கிரம் முறையான ட்ரீட்மென்ட்டை தொடருமாறும் கேட்டுக் கொண்டிருந்தான்.
இன்று மாறன் கத்திய பொழுது பூபதிக்கு அவன் வெற்றியாக மாறி கத்தியது போல் தெரியவில்லை. ஷாலினியின் மேலிருந்த காதலால் கத்தியது போல்தான் தோன்றியது. அதை அவருமே நேரடியாக மகனிடம் கேட்டார்.
“நீ அந்த பொண்ண காதலிக்கிறியா? மாறா?”
“எந்த பொண்ண? ஷாலினியையா? அறிவிருக்கா உங்களுக்கு? எல்லாம் நீங்க பொருத்திய வெற்றியின் மூளையின் பகுதியாலதான் வந்தது. நான் அவள லவ் பண்ணல. யாராச்சும் ஒரு பொண்ண பார்த்த உடனே லவ் பண்ணுவாங்களா?” குதர்க்கமாகவே மாறன் பேச
“பண்ண மாட்டாங்களா?” பூபதியும் விடாது குடைந்தார்.
“டீனேஜ்ல வேணா பண்ணுவாங்க என் வயசுல எல்லாம் பண்ண மாட்டாங்க” உறுதியாக நின்றான் மாறன்.
“வெற்றி லவ் பண்ண பொண்ணுன்னு நீயே உன்ன கன்பியூஸ் பண்ணிக்கிற மாறன். நல்லா யோசி” பூபதி புரியவைக்க முனைய
“உன்கிட்ட ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தேன் பாரு என்ன சொல்லணும்” கோபமாக மாறன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
ஷாலினியை காதலிக்கின்றானா? இல்லையா? என்ற கேள்வியை ஆராய்ச்சி செய்ய மாறன் விரும்பவில்லை. அதற்கு காரணம் ஷாலினி ஒரு போதும் மாறனை காதலிக்க போவதில்லை என்றே எண்ணினான். அவனும் ஷாலினியை காதலிப்பது வெற்றிக்கு செய்யும் துரோகமாக நினைத்தான். இதனால் இதை பற்றி யோசிக்க கூடாது என்ற முடிவில் இருப்பவன் யார் சொல்லியும் ஷாலினியை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை.
மேலும் பத்து நாட்கள் சென்ற நிலையில் டி.ஐ.ஜியின் முன்னால் அமர்ந்திருந்தான் மாறன்.
“கேஸ கைல கொடுத்து மூணு மாசமாக்கிருச்சு. எக்சிடன் ஆனதுல ஒரு மாசம் ஆஸ்பிடல்ல படுத்து கிடந்த இந்த ரெண்டு மாசமா என்னத்த கிழிச்சு? அந்த பக்கம் அன்வர் ஒன்னத்தையும் சொல்லுறதில்ல. எல்லாரும் என்னையைதானே கேள்வி கேக்குறாங்க. அந்த பூங்குழலியோட பேரன்ட்ஸ் வேற மீடியா முன்னால போலீஸ்காரங்கள நம்பி பிரயோஜனம் இல்லனு பேட்டி கொடுக்குறாங்க. மீடியா காரனுங்க கிழிகிழினு கிழிக்குறானுங்க. என்ன நடக்குதுன்னு என் உசுர வாங்குறாங்க” கடுப்பாகி கத்திக் கொண்டிருந்தார் டி.ஐ.ஜி.
சலனமே இல்லாமல் அமர்ந்திருந்த மாறனை பார்க்கையில் அவரின் கோபம் பன்மடங்காக பெருகியது. கோபத்தை காட்டினால் அவன் வாயிலிருந்து எதையும் கொண்டுவர முடியாது என்பதை அறிந்தவராக மேசையின் மீதிருந்த தண்ணீர் கிளாஸை கையில் எடுத்தவர் அதை மடமடவென்று அருந்தி விட்டு மாறனை ஏறிட்டார்.
மாறன் அமைதியாக அமர்ந்து அவரையே பார்த்திருந்தான் ஒழிய ஒரு வார்த்தை பேசவில்லை.
“பேசுறானா பாரு..” முறைத்தவர் அவரும் அமைதியாக அமர்ந்திருக்க அன்வர் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.
டி.ஐ.ஜிக்கு சாலியூட்டு வைத்தவன் அவர் அமருமாறு சைகை செய்த மறுநொடி மாறனின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“கேஸ்ல என்ன நடக்குது?” இருவரிடமும் பொதுவாகவே கேட்டார் டி.ஐ.ஜி.
“நம்ம கேஸ்ல சம்பந்தபட்டவன் ஒருத்தனா? பலபேரானு இன்னும் தெரியல. நாம அவனை ஹேக்கர்னே வச்சிப்போம். அவன் நமக்கு சவால் விட நம்ம குடும்பத்து பொண்ணுங்க போன ஹேக் பண்ணதா எனக்கு தோணல, அவனோட டார்கட் வெளில தங்கி படிக்கிற, வேலைக்கு போற பொண்ணுங்க. அவன் வழில நாம குறுக்க வரக் கூடாது என்றுதான் நம்ம வீட்டு பொண்ணுங்க போன ஹேக் பண்ணி இருக்கான்” அன்வர் சொல்ல
“சரிப்பா அந்த பூங்குழலியோட பெத்தவங்களுக்கு நாம என்ன பதில் சொல்ல போறோம். மீடியாக்காரனுங்க வேற நம்ம பத்தி கண்டதையும் எழுதுறானுங்களே. அவனுக வாய வேற மூடனும்” டென்ஷனானார் டி.ஐ.ஜி.
“பூங்குழலியோட பேரன்ட்ஸ் கிட்ட மீடியா முன்னால அப்படி பேச சொன்னதே நான்தான்” என்றான் மாறன்
“என்னய்யா சொல்லுற? நீயே நம்ம டிபார்ட்மெண்ட்ட பத்தி தப்பு தப்பா சொல்ல சொல்லி இருக்க? என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல?” கோபமாக மீண்டும் கத்த ஆரம்பித்தார் டி.ஐ.ஜி.
“நீங்க இப்படி கத்தினா நான் சொல்ல வந்தத உங்களால புரிஞ்சிக்க முடியாம போய்டும்” என்ற மாறன் அமைதியாகத்தான் இருந்தான்.
அன்வரை பார்த்தவர் இருவரும் சேர்ந்து எதோ செய்து வைத்திருக்கிறார்கள் என்று புரிய அமைதியாக மாறனை ஏறிட்டார்.
“நம்மள இருட்டுல வச்சிருக்கோம் என்று அவன் நம்பிகிட்டு இருக்குற வரைக்கும்தான் நாம அவனை நெருங்க முடியும். ஏன்னா அவன் கைல நம்ம வீட்டு பொண்ணுகளோட வீடியோஸ் அண்ட் போட்டோஸ் இருக்கு. பூங்குழலியோட கேஸ நான் பாக்குறதும் சுதாவோட கேஸ அன்வர் பாக்குறதும் அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.
ஹேக்கிங் பண்ணிதான் தெரியணும் என்று இல்லையே, நம்ம டிபார்மண்ட்டுலையே பல கறுப்பாடுகள் இருக்கே, காச கொடுத்தாவே தெரிஞ்சிடும். வாரத்துக்கு ஒருக்கா, எல்லா ஸ்டேஷனும் ஹேக் பண்ண பட்டு இருக்கா என்று நாம செக் பண்ணிக்கிட்டு வரது நமக்கு ப்ளஸ். அவன் உள்ள வந்து ஏதாவது டிவைச பொறுத்தாம முழு சிஸ்டத்தையும் ஹேக் பண்ண முடியாது. அப்படி சந்தேகப் படுகிறது போல யாராவது வந்தா அவனை அலேக்கா தூக்க ரெடியா இருக்கோம்.
பூங்குழலியோட கேஸ பொறுத்தவரைக்கும் அது கொலை. அத பண்ணவன் ஹேக்கர். ஆனா அத நாம மீடியால சொல்ல முடியாது. பூங்குழலியோட பெத்தவங்ககிட்ட நானே பெர்சனலா பேசி அவங்க பொண்ண கொலை பண்ணவன் ஏன் பண்ணான் என்ற காரணத்தை உட்பட தெளிவா கூறிட்டேன். அவங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க. அவங்கள வச்சே மீடியால நம்மள பத்தி தப்பா பிரெஸ் மீட் கொடுக்க வச்சேன். அத பார்த்த ஹேக்கர் நாம தப்பான ரூட்ல போறதா நினைச்சி சிரிச்சிகிட்டு இருப்பான். நம்மள இருட்டுல வச்சதா அவன் நினைக்க, அவன இருட்டுல வச்சிட்டு நாம அவன நெருங்குறதுதான் நம்ம திட்டம்”  இதுவரை செய்த அனைத்தையும் மாறன் தெளிவாக கூறி முடிக்க, 
“திட்டம் நல்லாத்தான் இருக்கு, ஆனா குற்றவாளிய இன்னும் நீங்க நெருங்கவே இல்லையே, இந்த வாய்ல வட சுடுற வேலையெல்லாம் இங்க வேணாம்” என்பது போல் டி.ஐ.ஜி பேச மாறன் அவரை முயன்ற மற்றும் முறைத்தான்.
அன்வர் அவருக்கு தாங்கள் என்னவெல்லாம் செய்ததாக கூற, “அப்போ நீங்க சந்தேகப்பட்டு யாரையும் அரெஸ்ட் பண்ணலையா?”
“ஒருத்தன தூக்கி இருக்கேன். அவன தூக்கின கையோடதான் உங்க போன். இங்க வந்துட்டேன். போய் தான் அவன் விசாரிக்கணும்” என்றான் மாறன்.
“குட் ஜாப். அவசர படாம குற்றவாளிய பிடிங்க, போங்க” இருவரையும் துரத்தாத குறையாக வெளியேற்ற சாலியூட்ட வைத்து விட்டு வெளியே வந்த மாறன் அன்வரிடம் பொருமலானான்.
“ஹேக்கிங் எஸ்.எம்.எஸ். யாருக்கு முதல்ல வந்தது கண்டு பிடிச்சு. அந்த டைம்ல யாரெல்லாம் காலேஜுக்குள்ள வந்து போனாங்கனு கண்டு பிடிச்சு, அவனுகள பலோவ் பண்ணி ஒரு க்ளூவும் கிடைக்காம ஒரு மாசமா மண்டை காஞ்சு போய் நாங்க உக்காந்து இருந்தா, இவரு உக்காந்த இடத்துல இருந்தே போன போட்டு வர சொல்லி கத்துவாரா? டியூட்டி பார்க்குறோமா? இல்ல இவருக்கு பதில் சொல்ல வேல பாக்குறோமா? ஒன்னும் புரியல” என்றவாறே இருவரும் வண்டியை நோக்கி நடந்தனர்.
“கூல் மாறன் உன் புத்தி கூர்மையாளத்தான் இன்னக்கி அவன் நம்ம கைல சிக்கி இருக்கான் அவன விசாரிச்சாதான் அவன் மட்டுமா இல்ல, இன்னும் இதுல எத்தனை பேர் சம்பந்த பட்டிருக்காங்க என்று தெரிய வரும்” என்றான் அன்வர்.
“உண்மையிலயே அவன கண்டு பிடிக்க காரணமே நீங்கதான் அன்வர். நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்த தான். உண்மை நம்ம கண்ணு முன்னாடிதான் இருக்கும். ஒரு சின்ன திரையால் நமக்கு தெரியாம கூட போலாம்னு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?”
“நான் ஜீனியஸ் மாறன் ஏகப்பட்டது சொல்வேன்” அன்வர் கிண்டல் பண்ண
புன்னகைத்த மாறன் “எல்லா வீடியோவும் வாஷ்ரூம்ல குளிக்கும் போது எடுத்த வீடியோவா இருந்தது. ஏன் நாம தேடுறவன் ஒரு ப்ளம்பரா இருக்கக் கூடாதுனு தோணிருச்சு. பிரபா கேசுல ஒரு ப்ளம்பரை அவ போலீஸ்ல ஹாண்ட் ஓவர் பண்ணா. அவனே சுதா, நந்தினி வாஷ்ரூம்ல கூட கேமரா வச்சிருக்க கூடும். அவன பத்தி விசாரிக்க சொன்னேன். தொக்கா தூக்கிட்டேன்”
“அதான் சொன்னேன். நான் கோடு போட்டேன் நீங்க ரோடே போட்டுடீங்க. வாங்க போலாம் அவன விசாரிக்கிற விதத்துல விசாரிக்கலாம்” கேஸ் முடிவுக்கு வரும் என்ற நிம்மதியில் மாறனோடு கிளம்பி சென்றான் அன்வர்.
அந்த இரகசிய அறையில் ப்ளம்பரை ஒரு இருக்கையில் அமர்த்தி கைகளையும் கால்களையும் கட்டிப் போடப்பட்டிருக்க, வெளியே காவலுக்கு எஸ்.ஐ மஞ்சுளாவும் கௌதமும் நின்றிருந்தனர்.
அந்த இடம் நகரத்துக்கு சற்று ஒதுக்கு புறமாக இருந்தாலும், ஆள் நடமாட்டம் இருந்தாலும் வந்து போவோரை பற்றி அலட்டிக் கொள்ள யாரும் இல்லாததால் மப்டியிலையே அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
“மேடம் நாம சரியான ரூட்டுலதான் போய் கிட்டு இருக்கோமா? எனக்கு என்னமோ நாம தப்பான ரூட்டுல போற மாதிரியே இருக்கு” கௌதம் யோசனையாகவே சொல்ல
“இப்போ உனக்கு என்னய்யா பிரச்சினை? அதான் உன் வைப் காலேஜ் பிரச்சினை கூட தீர்ந்திருச்சே” மஞ்சுளா கிண்டலடிக்க ஆரம்பித்தாள்.
மாறன் கூறிய காலேஜ் மணிமேகலைக்கு வேண்டாம் என்று சொல்லவும் அதை அவனிடம் சொல்ல தைரியம் வராமல் கௌதம் தனது மனைவி மணிமேகலையின் காலேஜ் அட்மிஷனுக்காக அழுகாத குறையாக அங்கும் இங்கும் அலைய அதை பார்த்து மஞ்சுளாவும், நந்தகோபால் அவனை கிண்டல் செய்தவண்ணம் இருந்தனர். கௌதம் சுறுசுறுப்பாக வேலை செய்பவன். ஆர்வம் குறைந்து ஏதோ சிந்தனையில் காணப்பட மாறன் அழைத்து என்னவென்று விசாரிக்க, தயங்கியவாறு விஷயத்தை சொல்ல சத்தமாக சிரித்தான் மாறன்.
“யோவ் இப்போவே பொண்டாட்டி காலடில விழுந்திட்டியா? சரி சரி எந்த காலேஜ்ல சீட் வேணுமாம் உன் பொண்டாட்டிக்கு?” கௌதம் பெயரை சொன்னதும் “யோ இதெல்லாம் ஓவரா தெரியலையா?” மணிமேகலையிடம் பேசி புரிய வைத்து அவளை காலேஜில் சேர்த்த மாறன் கௌதமின் டென்ஷானை போக்கி இருந்தான்.
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க மாம்” கௌதம் கோபமெல்லாம்ப்படவில்லை. சிரித்தவாறுதான் கேட்டான்.  இந்த ஒரு கேஸ் அவர்களை இணைத்திருந்தது மட்டுமல்லாது சகஜமாக பேசவும், பழகவும் வைத்திருந்தது.
“யோ இது உனக்கே அநியாயமா படல. சார் அவர் அறிவை பாவிச்சு ப்ளம்பரை புடிச்சி இருக்காரு. ஒரு க்ளூ கிடைக்காதான்னு எத்தனை நாளா கஷ்டப்பட்டோம். நீ என்னடான்னான்னா இப்படி பேசுற?” கண்டானாள் மஞ்சுளா.
“அது இல்லை மேடம் அந்த பொண்ணு நந்தினியோட வீடியோல இருந்தவன் ஆறடில லெப்ட் ஹண்ட்ல டாட்டூ போட்டிருந்தான். இவன் அஞ்சடில இருக்கான். டாட்டூ கூட இல்லையே” தாங்கள் பிடித்தவன் தவறானவன் என்றே கூறினான் கௌதம்.
“நீ சொல்லுறத வச்சி பார்த்தா தப்பாதான் தெரியுது. சார் வரட்டும், அவர் என்னதான் சொல்லுறாரு பார்க்கலாம்” இதுவரை மாறன் சொன்னபடிதான் செய்து கொண்டிருந்தார்கள். அவன் தனியாக செயல்படாமல் இவர்களிடமும் விளக்கம் கேட்பான். அந்த நம்பிக்கையில் தான் மஞ்சுளா ஏதாவது விஷயம் இருக்கும் என்று நம்பினாள்.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மாறனும், அன்வரும் அந்த இடத்துக்கு வந்து சேந்தனார்.  
“என்ன சார் ரெண்டு பேரும் பைக்ல வந்து இருக்கிறீங்க? உங்க வண்டி எங்க?” கௌதம் ஆச்சரியமாக கேட்டான். மாறன் தனது ரங்களேர் ஜீப் இல்லாமல் எங்கும் செல்வதில்லையே.
மப்டில வரலாம்னு டிரஸ் சேஞ் பண்ண அன்வர் வீட்டுக்கே போனோம். அங்கேயே வண்டிய விட்டுட்டு அவர் பைக்ல வந்தோம்” என்றவாறே உள்ளே நுழைந்தனர் இருவரும்.
“இவன தரவா செக் பண்ணிடீங்களா?” மாறன் கௌதமை ஏறிட
“ஆமா சார். அவன் செல்போன கோபால் சார் எடுத்துட்டு போனாரு வித் இன் ஒன்னு ஹவர் எல்லா டீட்டைளையும் கலெக்ட் பண்ணிக்கிட்டு இங்க வந்திடுவார் என்று சொல்ல சொன்னாரு” என்றான் கௌதம்
“ஒரே ஒரு செல் போன் மட்டுமா கிடைச்சது? வேற எதுவுமே இல்லையா?” அன்வர் சந்தேகமா கேட்க
“அவன் பைக் சாவியோட இன்னுமொரு சாவி அநேகமா அவன் தங்கி இருக்கும் ரூம் சாவியாக கூட இருக்கலாம் சார்” என்றாள் மஞ்சுளா
“அப்போ நீங்க ரெண்டு பேரும் போய் அவன் ரூம் செக் பண்ணுங்க. நாங்க இவன விசாரிக்கிறோம்” என்ற மாறன் மயக்கத்தில் இருந்த ப்ளம்பரின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான்.

 

Advertisement