Advertisement

அத்தியாயம் 12
பத்து நாட்கள் வேகமாக கரைந்தோடி இருந்தது. மாறன் தினமும் பூபதியிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக வந்து போகலானான். அவனுக்குமே வெற்றியாக மாறுவதோ, வாழ்வதோ பிடிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் ஷாலினிதான். வெற்றி போல் இருக்கும் தன்னை பார்க்கும் போதே அவள் மனம் தடுமாறுகிறாள். இதில் இவன் வெற்றி போல் நடந்து கொண்டால் அவள் மனம் என்ன பாடுபடும்.
தனக்குள் நடக்கும் மாற்றம் மாறன் மறந்து விட்டாலும் வெற்றியின் மூளையை பொருத்தியதன் விளைவுகள் இருப்பதை உணரத்தான் செய்கின்றான். ஷாலினியை பார்க்கும் பொழுது அவன் மனமும் அல்லவா தடுமாறுகிறது. தடம் புரள்கிறது.
ஷாலினி மயங்கி விழுந்த உடன் அவளை ஒரு அறையில் அனுமதித்து மருத்துவம் பார்க்க, பூபதி யார் இந்த பெண் என்று விசாரித்தார்.
வெற்றி இறந்து விட்டான் என்றதும், அதிர்ச்சியில் மயங்கி விழும் அளவுக்கு இவளுக்கும் வெற்றிக்கும் என்ன உறவு? என்ற கேள்வி அவர் மண்டையை குடைந்தது.
“அவ வேற யாரும் இல்ல. நம்ம வீட்டுக்கு மருமகளா வர வேண்டிய பொண்ணு. வெற்றி உசுருக்கு உசுரா லவ் பண்ண பொண்ணு. அவ லவ் பண்ணவன் செத்துட்டான்னா ஷாக் ஆகாதா? அதுவும் பெத்த அப்பாவே கொன்னுட்டதா சொன்னா ஷாக் ஆகாதா?” மாறன் கோபமாக சொல்ல, பூபதிக்கு பேச்சே வரவில்லை.
வெற்றி எவ்வளவு மனவேதனையில் இருந்தான் என்பதையும், மாலினி சொன்ன ஒரு வார்த்தைக்காக ஷாலினியை விட்டு விலகி இருந்ததையும் கூறியவன் “சந்தோசமா ஷாலினியோட வாழ வேண்டியவன இப்படி அநியாயமா கொன்னுட்டியே, நீ அப்பவே இல்ல பாவி…” கத்தி அழ ஆரம்பித்தான் மாறன்.
தனக்கே ஆறுதல் தேவைப்பட்டிருந்த நிலையில் பூபதியால் மாறனை ஆறுதல் படுத்த முடியவில்லை.
தன்னை தேற்றிக் கொண்ட மாறன் ராகவேந்திரனை அழைத்து மருத்துவமனைக்கு வருமாறு கூறியவன் அவன் வந்த உடன் தான் மாறன் என்றும், ஷாலினி காதலித்தது தன்னுடைய இரட்டையான வெற்றியை என்றும், வெற்றி இறந்து விட்டான் என்றும் அதை ஷாலினிக்கு உணர்த்தியதால் அவள் அதிர்ச்சியால் மயங்கி விழுந்து விட்டதாகவும் அவளை பார்த்துக் கொள்ளும்படியும் கூற, ராகவேந்திரனுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 
ராகவேந்திரன் ஷாலினியை அழைத்து செல்லும் பொழுது மாறன் மறைந்திருந்து பார்த்தான். அழுதவாறே செல்லும் ஷாலினியை அவன் கடைசியாக பார்த்தது அன்றுதான். அதன்பின் அவன் அவளை சந்திக்க முயற்சி செய்யவுமில்லை. அவள் அவனை தொடர்பு கொள்ளவுமில்லை.
ஷாலினியின் உணர்வுகளை மாறனால் புரிந்துகொள்ள முடியும். மாறனாலும் ஷாலினியை பார்க்காமலும், நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதனாலயே வெற்றியாக மாறுவதை அவன் வெறுத்தான். அதனாலே பூபதியிடம் தான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூற, பூபதியும் அவனை மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.
முதல் நாளே தனக்குள் ஏற்படும் மாற்றங்களை மாறன் கூற, வெற்றியாக மாறும் பொழுது அவன் நடந்துகொண்ட இரண்டு நிகழ்வுகளை பூபதியும் அவனிடம் விலாவரியாக கூறி இருந்தார்.
“அம்மாவையா அப்படி பேசினேன்” மாலினி பேசியதன் தாக்கம்தான் லதாவிடம் அப்படி பேச வைத்திருப்பது புரிந்தது. “அம்மா வெற்றியை தாத்தா கைல கொடுத்துட்டு போனதாலதான் மாலினி வெற்றியை வேணாம்னு சொன்னதா அவன் ஆழ் மனசுல பதிஞ்சி போச்சு. அதான் அப்படி பேசி இருப்பான்” என்றான் மாறன்.
“எல்லாம் உன்னாலதான். எல்லாம் உன்னாலதான். என்ன அவ வேணாம்னு சொன்னதும் உன்னாலதான். நீ மட்டும் எங்களை விட்டுட்டு போகாம இருந்தா அவ என்ன வேணாம்னு சொல்லி இருக்க மாட்டா… எனக்கு அவ கிடைச்சிருப்பா…” ‘இப்படித்தான் அன்னக்கி கத்தின’ வெற்றியாக மாறிய பொழுது மாறன் என்ன கூறினானோ அதை கூறினார் பூபதி.
“ஆமா அவ அவனு சொன்னது மாலினிய. கடைசியாக சொன்னது ஷாலினிய” தன்னையும் அறியாமல் அன்னையிடம் வெற்றியாக கோபத்தை வெளிக்காட்டி இருப்பதை அறிந்து மாறனுக்கு கவலையாக இருந்தது.
வெற்றியை நினைத்து மாறனுக்கு வருத்தமாக இருந்தாலும் லதாவை நினைக்கையிலும் கவலையாகத்தான் இருந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்னை சந்தோசமாக சிரித்துப் பேசியதை பார்த்ததும் இல்லை. பண்டிகைகளை கொண்டாடியதுமில்லை. வெற்றி லதாவுக்காக எவ்வளவு ஏங்கினானோ, லதாவும் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறாள் ஆனால் பூபதியின் மேல் இருந்த அவள் கோபமும், வெறுப்பும் பாசத்துக்கு முன்னால் வெற்றி கொண்டு வெற்றியை பார்க்க விடாமல் செய்திருந்தது. 
மாறனின் ஒவ்வொரு பிறந்தநாளின் பொழுதும் அவனுக்காக கோவிலுக்கு செல்லும் அன்னை, அவனுக்காக சமைக்கும் அன்னை, அவனுக்கு ஊட்டி விடும் அன்னை என்று லதாவை பார்த்தவனுக்கு அவள் கண்களில் சோகம் குடியிருப்பதையும் பார்த்திருக்கின்றான்.    
சிறு வயதில் என்ன? என்ன? என்று கேட்டால் லதா ஏதாவது கூறி மழுப்பி விடுவாள். வளர்ந்தபின் தந்தையை விட்டு பிரிந்ததனால் அந்த நியாபகம் வருவதனால் சோகமாகி விடுகிறாள் என்று எண்ணிக் கொள்வான் மாறன். ஆனால் உண்மையில் வெற்றியை நினைத்துதான் அன்னை சோகமாக இருக்கின்றாள் என்று இப்பொழுதாதான் புரிகிறது. இவ்வளவு பாசத்தை வைத்துக் கொண்டு எதற்காக அவனை பிரிந்திருந்தார்கள் என்று நினைக்கும் பொழுது அன்னை மீது கோபமும் வருகிறது. ஆனால் அவளுடைய நிலையிலிருந்து பார்த்தால் அவள் அனுபவித்த வேதனையும் கொஞ்சநஞ்சமல்லவே.    
என்னதான் லதா பூபதியின் மேல் கோபமாக இருந்தாலும், மறைமுகமாக வெற்றியின் இறப்புக்கு காரணமாக அமைந்தாலும் மாறனுக்கு அன்னை மேல் பாசம் அதிகம். அதனால் அவளை எந்த வழியிலும் காயப்படுத்த மாறனுக்கு இஷ்டமில்லை. அன்னைக்காகவும் வெற்றியாக மாறுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றியாக மாறி அன்னையின் மனதை காயப்படுவது மட்டுமல்லாது எல்லா உண்மையையும் கூறிவிடவும் கூடும் என்றுதான் தன் சகோதரனை கொன்ற கோபம் இருந்தாலும் தந்தையிடமே ட்ரீட்மெண்ட்டுக்காக வந்தான்.
கடவுளின் படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதன். மனிதன் மனிதனை பெற்றேடுக்கத்தான் முடியும். படைக்க முடியாது. படைக்க முடிந்தால் மனிதன் கடவுளாவான்.
எல்லா உயிரினங்களையும் படைத்த கடவுள் மனிதனை மட்டும் ஆறறிவாக படைத்ததன் காரணம்தான் என்ன? மனிதன் கடவுளுக்கு நிகரானவன் என்பதனாலையா? அல்லது ஆறறிவை கொடுத்து நான் செய்பவைகள் அனைத்தையும் செய்ய முடியுமா? என்று கேட்டு சவால் விடுகின்றானா?
அவன் கொடுத்த அருட்கொடைகளை வைத்து பூமியில் சமாதானமாக வாழாமல் சண்டை பிடிக்கவென்றே காரணம் கண்டு பிடித்துக் கொண்டு திரியும் அவன் படைத்த மனிதனை பார்த்து “ஏய் அற்ப பதரே! கடல் கொந்தளித்தால்? பூமி நடுங்கினால்? காற்றே விஷமானால்? எங்கே செல்வாய்?” என்று கேட்டால் மனிதர்களின் நிலைதான் என்ன? நினைத்த நொடியில் அவனால் செய்து விட முடியாத என்ன?
மனிதனின் அறிவும், கண்டுபிடிப்பும் ஒரு எல்லைதான். பூபதியும் சாதாரண மனிதன்தான். மூளையை அறுவைசிகிச்சை செய்து பொருத்தி மனித உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த மனிதன்தான். அதில் வெற்றியும் கண்டார்.
ஆனால் கடவுள் படைத்த சிக்கலான மனித மூளையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன் மாறன் வெற்றியாக மாறுகின்றான் என்று தெரிந்தவருக்கு அதை தடுக்கும் வழி தெரியவில்லை.
மாறனை ஹிப்னோடிசம் செய்து பார்த்ததில் வெற்றியுடைய மிக முக்கியமான நியாபகங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தன. அவற்றை அழிக்க முயன்றாலோ, மறக்க செய்ய மருந்து கொடுத்தாலோ மாறனுக்கு நியாபக மறதி ஏற்படக் கூடும்.
அது அவன் வேலைக்கு மட்டுமல்ல, உடல்நலனையும் பாதிக்கும். அதனால் பூபதி அதை மறுக்க, மாறனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
ஷாலினியை சந்தித்தால்தான் வெற்றி வெளிப்படுவானாயின் அவளை சந்திக்காமல் தவிர்ப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால் லதாவை பார்க்கும் பொழுது அல்லது பேசும் பொழுது வெற்றியாக மாறுவதை எவ்வாறு தடுப்பது? அன்னையை காயப்படுத்தி விடுவேனோ என்று அஞ்சி  வீட்டுக்கு செல்லாமல் இருக்க முடியுமா என்ன? லதாவை பார்க்காமல், பேசாமல் மாறனால் நிச்சயமாக இருக்க முடியாது.
“இந்த டேப்லட் போட்டுக்க மாறன். இது உன்ன எமோஷனலாகாம கண்ட்ரோல்ல வச்சிக்கும். எமோஷனல் ஆனாதான் அடிக்கடி வெற்றியா மாறுற” என்றார் பூபதி.
“தலைவலிக்கு ஒரு மாத்திரை. எமோஷனல் கண்ட்ரோல் பண்ண ஒரு மாத்திரை, இந்த வயசுலயே என்ன இப்படி பண்ணிட்டல்ல” வெறுமையாக தந்தையை பார்த்தவன் அதை வாங்கிக் கொண்டு காவல்நிலையம் கிளம்பிச் சென்றான்.
இந்த பத்து நாளிலும் கேஸில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. எஸ்.ஐ கௌதமிடம் கொடுத்திருந்த வேலையை அவன் கனகச்சிதமாக முடித்திருந்தான். அதை பற்றி பேச அனைவரையும் அறைக்கு வருமாறு அழைத்தான் மாறன்.
“நந்தகோபால் அந்த டாட்டூவை பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?” நியாபகம் வந்ததன் அடையாளமாக நெற்றியை தடவியவாறே கேட்டான் மாறன்.
“சார் சிட்டில டாட்டூ போடுற எல்லா இடத்துலயும் விசாரிச்சதுல அஞ்சே அஞ்சு இடத்துலதான் இந்த டார்டு போடுறாங்க. இவன் போட்டோவை காட்டி விசாரிச்சேன். முகம் தெளிவா இல்லாததனால் யாராலயும் சரியா அடையாளம் தெரியல”
“அப்போ கில்லர் அந்த அஞ்சு இடங்கள்ல ஏதோ ஒரு இடத்துலதான் இந்த டார்டுவ போட்டிருக்கான்னு சொல்லுறீங்க”
“கண்டிப்பா”
“சார் இன்னொரு விஷயம் அந்த வீட்டுல சில முடிகள் கிடச்சதனால டி.என்.ஏ டெஸ்ட் பண்ணதுல வேற வேற ஆட்களோட முடின்னு வருதுன்னு சொல்லுறாங்க, ஒரே குழப்பமா இருக்கு” என்றாள் மஞ்சுளா
“போரான்சிஸ்ல எனக்கு போன் பண்ணாங்க. அவன் விக் போட்டிருந்திருப்பான் எங்குற சந்தேகம் எனக்கு இருந்தது. தலைமுடியும், தாடியும் அவனோடது இல்ல. அதான் வேறவேற ஆட்களை காட்டுது” மாறன் சொல்ல
“வேணும்னு போட்டுக்கிட்டு வந்திருப்பானா?” கௌதம் கேள்வி எழுப்ப,
“இருக்கலாம். இல்ல அவன் அந்த வீட்டை விட்டு போகும் பொழுது யாரும் அவனை அடையாளம் தெரியக் கூடாதுனு ஒட்டு தாடியும், விக்கும் போட்டுக்கிட்டு வந்திருப்பான்” என்றான் மாறன்.
வீடியோல அவன் முகம் க்ளியரா இருந்திருந்தா தாடியையும், தலைமுடியையும் நீக்கி அவ யார்னு இந்த நேரம் கண்டு பிடிச்சிருந்திருக்கலாம்” என்றான் கௌதம்.
“கௌதம் எல்லா காலேஜுக்கு போய் விசாரிச்சியே சுமாரா எவ்வளவு பேர் வெளிய தங்கி படிக்கிறாங்க”
“40% வெளியேதான் சார் படிக்கிறாங்க”
 “இவங்க எல்லார் மொபைலையும் செக் பண்ணுறது சாத்தியமே இல்ல” மஞ்சுளாவும், நந்தகோபால் ஒரே நேரத்தில் சொல்ல
“கில்லருக்கும் இவங்க எல்லாரையும் ஒரே நேரத்துல கண்காணிக்க முடியாது. இந்த நாலு பொண்ணுங்களும் மரியா காலேஜ். பூங்குழலியும்தான். மத்த மூணு பொண்ணுங்களும் சென்தோமஸ் காலேஜ் ரெண்டு காலேஜும் அஞ்சி கிலோ மீட்டருக்குள்ள இருக்கு. மாலினிக்கும் இந்த ரெண்டு காலேஜுக்கு எந்த சம்பந்தம் என்றுதான் பார்க்கணும்.
“சோ கில்லர் இந்த காலேஜுல படிக்கிறவனா? படிச்சிக் கொடுக்குறவனா? வேல பாக்குறவனா? அல்லது வந்து போறவனா கூட இருக்கலாம். ரெண்டு காலேஜ் எங்குறதால படிக்கிறவன், படிச்சி கொடுக்குறவன நாம தூக்கிடலாம். ஒரே நேரத்துல ரெண்டு காலேஜுல இந்த வேலைய பார்க்க முடியாது”
“சார் வேல பாக்குறவன்னு என்ன மீன் பண்ணீங்க?” புரியாது கேட்டாள் மஞ்சுளா
“ஆபீஸ் பாய், வாட்ச்மான். கண்டீன் நடத்துறவரு. இவர்களாக கூட இருக்க முடியாது. ஒரே நேரத்துல ரெண்டு காலேஜிலும் வேல பார்க்க முடியாதே. சோ வந்துட்டு போறவனாகத்தான் இருக்கணும்” என்றான் மாறன்
“வந்துட்டு போறவர்னா காண்டீனுக்கு புட் சப்ளையா?” கோபால் கொலையாளியை கண்டு பிடித்து விட்டதாகவே கேக்க,
“ஏன் காலேஜுல கரண்ட் ப்ரோப்ளம், தண்ணி பிரச்சினை, வேற எந்த பிரச்சினையும் வராதா? எலெக்ட்ரீஷியன் வரலாம், பிளம்பர் வரலாம், கட்டட வேலைகள் நடந்தா? பத்து, பதினஞ்சு பேர் வேலை செய்யலாம். வெளிய இருந்து பாடம் நடத்த ப்ரோபர்சேர்ஸ் கூட வரலாம்”
“சார் நாம் தேடிகிட்டு இருக்குறது ஒரு ஹேக்கர கட்டிடம் கட்ட, கரண்ட் வேல இதுக்கெல்லாம்” சந்தேகமாக கேட்டான் கௌதம்.
“படிச்சவன் விவசாயம் பார்க்கக் கூடாதுனு சட்டம் இருக்கா என்ன? அதே மாதிரிதான் இதுவும் அவனுக்கு தேவையான இரையை தேட அவன் எந்த வேஷத்துலையும் இருக்கலாம். சோ எல்லாரையும் தேடுங்க. அதோட வெளில தங்கி படிக்கிற பொண்ணுங்களை எஸ்ஸம்பல் பண்ணுங்க நான் அவங்க கூட பேசணும்” என்றான் மாறன். 
எஸ்.ஐ மஞ்சுளாவும், கௌதமும் இரண்டு காலேஜுக்கு சென்று அதிபர்களை சந்தித்து பேச, வெளியே தங்கி படிக்கும் மாணவிகளை மட்டும் தேடி அழைப்பது கொஞ்சம் சிரமம் எல்லாரையும் அழைக்கலாம் சொல்ல வேண்டியதை எல்லோருக்கும் சொல்லி விடுங்களேன் என்றார்.
அதுவும் சரிதான் என்று தோன்ற மாறன் மரியா காலேஜுக்கும், அன்வர் சென்தோமஸ் காலேஜுக்கும் சென்றனர்.
“ஹாய் கேர்ள்ஸ்” கௌதமோடு உள்ளே வந்த உடனே நட்பாக மாறன் ஆரம்பிக்க, இப்படி ஒரு வாட்டசாட்டமான இளைஞ்சனை எதிர்பார்க்காத பெண்களும் கோரஸாக “ஹாய்” என்றிருந்தனர்.
வளவள, கொழகொழ என்று பேசாமல் நேரடியாகவே விசயத்துக்கு வந்தான் மாறன். தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படக்கூடும்,  குறிப்பாக செல்போனால் என்ன என்ன ஆபத்து வரலாம் என்று அவர்களையே கேள்வி கேட்க, ஆர்வமாகவே பதில் சொல்ல ஆரம்பித்தனர் பெண்கள்.
“நம்ம சிட்டில ஒரு சைக்கோ வெளில தங்கி இருக்குற பொண்ணுகளை டார்கட் பண்ணி, அவங்க செல்போனை ஹேக் பண்ணி அவங்க அந்தரங்க போட்டோஸ் அண்ட் வீடியோஸ் எடுத்து மிரட்டி கிட்டு இருக்கான். இந்த காலேஜூலையே அப்படி ஒருசில சம்பவம் நடந்திருக்கு. இன்னும் யாராவது மிரட்ட படுறாங்களா?”
மயான அமைதி……..
நந்தினி தற்கொலை செய்து கொண்டதையும், சுதாவுக்கு என்ன ஆச்சு என்பதையும், நந்தினிக்கு உதவப்போய் பூங்குழலிக்கு என்ன ஆச்சு என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியவன், பிரபா தன்னை வீடியோ எடுத்தவனை எப்படி கண்டு பிடித்து போலீசில் சிக்க வைத்தாள் என்பதையும் கூறினான்.
“நான் வர முன்பாகவே உங்க போன் எல்லாம் உங்க கிளாஸ்லயே வச்சிட்டு வர சொன்னேன். ஏன்னா கில்லர் உங்க செல்போன் மூலமா என் பேச்ச கேட்டுடக் கூடாதுன்னுதான். அப்படியே யாராச்சும் கொண்டு வந்திருந்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்ல. இந்த டிவைசால உங்க செல்போன் செயலிழந்து போய் இருக்கும்” மேசையின் மீதிருந்த சிறிய கருவியை காட்ட வாயை பிளந்து பார்த்திருந்தார் அனைவரும்.
“யாராவது உங்கள மிரட்டுறதா இருந்தா, பிளாக்மெயில் பண்ணாலோ பயப்படாதீங்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க”
மாறனை பார்த்து “சார் இது உங்க பெர்சனல் நம்பறா?” கூட்டத்தில் ஒரு சில குரல் மாறிமாறி ஒலிக்க கௌதமுக்கு சிரிப்பாக இருந்தது.
“இது இவனோட நம்பர் மா… இவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு” என்று சேர்த்து சொல்ல
“சார் அத இவங்க கேக்கவே இல்லையே” கௌதம் முகம் கோண மாறனை முறைக்க முடியாமல் நின்றான்.
“இங்கயே நின்னா எப்படி அடுத்த காலேஜுக்கு போலாம் வா…” மாறன் புன்னகைத்தவாறே வெளியேற
“சார் உங்களுக்கு கல்யாணம் ஆகலேயே உங்க நம்பர் கொடுங்க” யாரோ ஒருத்தி கத்துவது கேட்டது.
கௌதம் கூட்டத்தை பொதுவாக முறைத்து விட்டு மாறனின் பின்னால் ஓடி இருந்தான்.
இந்த இரண்டு கல்லூரிகளையும்தான் ஹேக்கர் தனது கைவராசியை காட்டி இருப்பது தெரிய வந்தாலும் சென்னையிலுள்ள மற்ற எல்லா காலேஜில் உள்ள பெண்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.
அதனால் இரண்டு நாட்களை ஒதுக்கி, அன்வரும் மாறனும் எல்லா கல்லூரிக்கும் சென்று எல்லா மாணவிகளையும் சந்தித்து பொதுவாகவே பேசலாயினர்.
“மாறன் காலேஜ் பொண்ணுங்க மட்டும்தான் அவனோட டார்கட்ன்னு நம்மால சொல்ல முடியாது. சோ வேலைபாக்குற இடங்களில்லையும் நாம அலர்ட் பண்ணனும்” அலைபேசி வழியாக மாறனை தொடர்பு கொண்டு பேசினான் அன்வர்.
“அதுக்காக ஆபீஸ் வாசல்ல போய் நிற்க முடியாது அன்வர். நாம சொல்லுறத காது கொடுத்து கூட கேக்க மாட்டாங்க”
“இல்ல மாறன். வேலைக்கு போற பொண்ணுங்க   தனியா வீடெடுத்து தங்குறது ரொம்ப ரேர். ஹாஸ்டல்லதான் தாங்குவாங்க. பிரைவேட் எங்குறதால ஆபத்து இருக்கும் என்ற எண்ணம்தான்”
“ஓஹ்..ஐ.சி சிட்டில எத்தனை பிரைவேட் ஹாஸ்டல் இருக்கு கணக்கு பார்த்து வார்னிங் கொடுக்க ஒரு வாரம் ஆகும்”
“நாம நேரடியா இறங்காம அந்த ஏரியா போலீஸ்ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துடலாம். அவங்க நேரடியா போனா கொஞ்சமாவது எச்சரிக்கையா இருப்பாங்க. எவனாச்சும் மிரட்டினா நம்ம கிட்ட வருவாங்க”
“நம்மாளுங்கள நம்புவாங்களா?” மாறனுக்கு நம்பிக்கை வரவில்லை.
“என்ன பண்ணுறது மாறன். நாம உசுர கொடுத்து வேல பார்த்தாலும் சில பேர் அப்படி இப்படி இருக்குறதால மக்கள் நம்மகிட்ட வர தயங்குறாங்க”
“பப்ளிக்கா எனவுன்ஸ் பண்ணவும் பயமா இருக்கு ஏதாவது ஒரு வீடியோவை அவன் பாட்டுக்கு லீக் பண்ணி உட்டுட்டான்னா இத்தனை நாள் பார்த்த வேலைக்கு அர்த்தம் இல்லாம போய்டும்” மாறன் கவலையாக சொல்ல
“ஆமாம். இந்த கேஸுல பொறுமையாதான் போக வேண்டி இருக்கு. கொலை பண்ணான். ஸ்பாட்டுக்கு போய் எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி கொலையாளியை தேடி பிடிக்கிற மாதிரி இல்ல” அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் புலம்பினான் அன்வர்.
“டோன்ட் ஒர்ரி அன்வர் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் பார்க்கலாம்” மாறன் அலைபேசியை துண்டித்து விட்டு வெள்ளை பலகையை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அல்லது கொலை செய்யப்பட்டால்தான் இந்த கேஸில் நகர்வு இருக்கிறது என்றால் அடுத்த கொலை நடக்கும் போது கொலையாளியை கண்டு பிடித்து விடலாம். ஆனால் இதில் குற்றவாளி ஒரு ஹேக்கரும் கூட அவனை நெருங்க அவன் எப்படி ஹேக்கிங் செய்கின்றான் என்று அறிந்துகொள்ள வேண்டியதிருந்தது.
நந்தினி, சுதா, பூங்குழலி, சென்தோமஸ் காலேஜ் பெண்களான சுபத்ரா, ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா என்று அனைவரின் அலைபேசியையும் அலசி ஆராய்ந்து பார்த்தாயிற்று. அவர்களுக்கு வந்த அன்னவுன் மெஸேஜ் மூலமாகத்தான் அவர்களது அலைபேசி ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
அப்படி என்றால் அவர்களது அலைபேசி எண் இவனுக்கு எப்படி தெரிந்தது?
ஒருவருடைய அலைபேசியை ஹேக் செய்த பொழுது மற்றவர்களுடைய அலைபேசி எண்களை எடுத்திருக்கலாம்.
அவன் முதலில் எடுத்தது யாருடைய அலைபேசி எண்? என்பதை கண்டு பிடித்தால் அவன் யார் என்பதையும் கண்டு பிடித்து விடலாம் என்று மாறனின் புத்தியில் உதிக்க, மஞ்சுளாவை அழைத்து இறந்து போன பெண்களுக்கு வந்த ஹேக்கிங் மெசேஜில் யாருக்கு முதன் முதலாக வந்தது என்பதனையும், எப்பொழுது வந்ததையும் பார்க்குமாறு கூறினான்.
அதே நேரம் ராகவேந்திரன் அழைத்து தனது அண்ணன் லண்டனிலிருந்து அழைத்து உலகத்திலிருக்கும் தலை சிறந்த ஹேக்கர்ஸ் வேண்டுமானால் கூறுமாறு கூறியதாக கூற, மாறனும் தேவை ஏற்பட்டால் கூறுவதாக கூறியவன் ஷாலினி எப்படி இருக்கின்றாள் என்று மெதுவாகக் கேட்டான்.
இந்த பத்து நாட்களில் ராகவேந்திரனை அழைத்து ஷாலினி எப்படி இருக்கின்றாள்? என்ன நிலைமையில் இருக்கின்றாள் என்று விசாரித்தான்.
ராகவேந்திரன் அவளை அவன் வீட்டுக்குத்தான் அழைத்து சென்றிருந்தான். இரண்டு நாட்கள் அழுது கரைந்தவள் மூன்றாவது நாள் தன்னுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாளாம்.  ராகவேந்திரன் தினமும் அவளை சென்று பார்த்து விட்டுத்தான் வருகின்றானாம். நான்காவது நாளிலிருந்து பாடசாலைக்கும் செல்ல ஆரம்பித்து விட்டாளாம்.
“இவ்வளவு சீக்கிரத்தில் ஷாலினி மீண்டு வந்து விடுவாள் என்று நான் எதிர்பார்க்க வில்லை மாறன். மாலினியோட கேஸ் விஷயமா உங்கள போய் பார்க்க நேர்ந்தா என்னையே பார்க்க சொன்னா. ஹோப் யூ கேன் அண்டர்ஸ்டாண்ட் ஹேர் பீலிங்ஸ்” அலைபேசியில் ராகவேந்திரன் குரல் வெறுமையாகவும், சோகமாகவும் ஒலித்தது.
ராகவேந்திரனை அழைத்து கேட்க மாறனுக்கு தயக்கமாக இருக்கவே ஒருவாரம் சென்ற நிலையில் அவன் அழைத்த பொழுது தயங்கியவன் மெதுவாக கேட்டிருந்தான்.
“அவளுக்கென்ன? நேரத்துக்கு சாப்பிடுறா, நேரத்துக்கு தூங்குறா, ஸ்கூல் போறா, வாரா. லைப்பை என்ஜோய் பண்ணுறா” மாறனிடம் பதில் இல்லை. “சாரி மாறன் நீங்க கேட்டா இப்படி சொல்ல சொன்னதே ஷாலினிதான்” என்ற ராகவேந்திரா அமைதியாக மாறனின் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்தது.
“தான் அவளை பற்றி விசாரிக்கக் கூடும் என்று அவளுக்கு தெரிந்திருக்கிறது. அவளை எண்ணி கவலைக்கொள்ள கூடாதென்று இவ்வாறு சொல்ல சொன்னாளா? என்ன பெண் இவள் விலக நினைத்தாலும் விடாமல் பிடித்து வைத்திருந்தாள். விலகி நின்றாலும் தூர நின்று காந்தம் போல் கட்டி இழுக்கின்றாள்” தலையை உலுக்கிக் கொண்டான் மாறன்
“நீங்க ஒருதடவை வந்து அவளை பார்த்து பேசுங்க. ரெண்டு நாள் சாப்பிடாம அழுதுகிட்டே இருந்தா, திடிரென்று பழையபடி ஆகிட்டான்னு என்னால சந்தோசபட முடியால. ஏதாவது பண்ணிப்பாளோணு பயமா இருக்கு”
:சீ,சீ ஷாலினி அப்படியெல்லாம் பண்ணிக்கற பொண்ணு இல்ல” பதறியவனாக கூறினான் மாறன்.
“உங்களுக்கு அவ மேல இன்ட்ரெஸ்ட் இருந்தா அவ கிட்ட பேசுங்க… நானும் பேசுறேன். ஒன்னும் தப்பில்ல மாறன். நான் என்ன சொல்ல…” ராகவேந்திரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அலைபேசியை துண்டித்திருந்தான் மாறன்.
இந்த உலகத்தில் வேறொருவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதே இல்லையா? செய்கிறார்கள். ஆனால் தனது சகோதரன் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? அதுவும் அவனது உருவத்தில் இருந்து கொண்டு? ஷாலினி தன்னை பார்க்கும் ஒவ்வொருநொடியும் வெற்றியை பார்ப்பது போல் இருக்காதா? உண்மையை அறிந்த பின் மாறன் என்று அழைக்க வேண்டிய என்னை வெற்றி என்று அழைத்து விட்டால் என் மனம் என்ன பாடுபடும்? அழைத்த பின் அவள் மனம் என்ன பாடுபடும்? நாம் பிரிந்திருப்பதுதான் இருவருக்கும் நல்லது. அவளை பார்க்கவே கூடாது. ராகவேந்திரன் அவளை பார்த்துக்கொள்வான்.
ஷாலினியை பற்றி நினைக்கக் கூடாது என்று அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் மாறன்.

Advertisement