Advertisement

அத்தியாயம் 11  
விபத்து நடந்து மாறன் கண்விழிக்கும் பொழுது வெற்றியின் பிரேஸ்லட் அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் இருக்க அதை அணிந்து கொண்டான். இன்று ஷாலினி பிரேஸ்லட்டை பற்றி கேட்டதும் தான் அதை பற்றிய நியாபகம் அவனுக்கு வந்தது. யோசித்து பார்த்ததில் இதற்கும் முன் அவன் அதை அணிந்திருக்கவில்லை என்ற நியாபகம் அவனுக்கு இருந்தது. அதை பார்த்ததும் ஏன் அணியத் தோன்றியது என்றும் அவனுக்கு புரியவில்லை. அணிந்து கொண்டான். அது வெற்றியுடையது என்று ஷாலினி சொல்லித்தான் அவனுக்கு தெரிய வந்தது. ஒரு வேலை வெற்றியின் மூளையின் பகுதியை பொருத்தியதன் விளைவால் அவனது பொருளை பார்த்ததும் அதை அணியும் ஆசை வந்திருக்குமோ? இல்லை. அவன் காஸ்லியான வண்டி வீட்டில் தான் இருக்கிறது. ஒருதடவையாவது அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.  ஷாலினி கொடுத்ததாக சொல்கிறாளே! அதனால்தான் அதை அணிய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் வந்திருக்கும். ஷாலினி இவள்தான் அவன் உயிர். இவளை பார்த்தால்தான் வெற்றியின் மூளை விழித்துக் கொள்கிறது.
தனக்கு அவள் மேல் ஏற்பட்ட காதல் வெற்றியின் மூளையை பொருத்தியதால்தான் வந்தது என்ற முடிவுக்கு வந்தான் மாறன்.
“நீ வெற்றிக்கு கொடுத்ததா? எப்போ கொடுத்த?” ஷாலினி கொடுத்ததனால் தான் அவனையும் அறியாமல் அதை அணிந்து கொண்டான் என்று மாறனுக்கு புலப்பட்டது. அதை விளக்கமாக கேட்க முட்பட்டான்.
“உன்ன கடைசியா சந்திச்சப்போ என் அக்கா கேஸ் விஷயமா பேசினேன். அப்போ என் அக்கா உன்ன சந்திச்சு பேசியதையும் என் கிட்ட சொல்லிட்டான்னு சொன்னேனே. அது சரி நீதான் எக்சிடண்ட் ஆனதுல எல்லாத்தையும் மறந்துட்டியே” என்ற ஷாலினி அவள் வெற்றியிடம் என்ன கூறினாளோ, மாலினிக்கும் வெற்றிக்கும் இடையில் என்ன நடந்ததோ அதை மாறனிடம் மீண்டும் கூறலானாள்.
ஷாலினிக்கு வெற்றியை பிடித்திருந்தது. வெற்றிக்கும் தன்னை பிடித்திருக்கும் என்று ஷாலினி அவன் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் புரிந்துகொண்டிருந்தாலும், அவனே தன்னிடம் காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தாள். 
ஆனால் வெற்றி தன் நண்பன் பிரவீனிடம் போட்ட பந்தயத்தின் காரணமாக ஷாலினி தன்னிடம் காதலை சொல்லும் தருணத்துக்காக காத்திருந்தான்.
இப்படியே இருவரும் காலேஜில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, தங்கையிடம் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்க ஆரம்பித்தாள் மாலினி.
ஷாலினியிடம் நேரடியாகவே நீ யாரையாவது காதலிக்கின்றாயா? என்று மாலினி கேட்டிருக்க, “அக்கா…” என்று அவளை கட்டிக் கொண்டவள் “எப்படிக்கா? நான் என் மனசுல என்ன நினைச்சாலும் அப்படியே கண்டு பிடிக்கிற?” என்றவள் வெற்றியை பற்றி கூறலானாள்.
“நீ சொன்னா நல்ல பையனாதான் இருப்பான்” என்ற மாலினி வேறெதுவும் பேச வில்லை. ஷாலினி தூங்கும்வரை பொறுமையாக இருந்தவள் அவள் அலைபேசியை அலசி ஆராய்ந்து வெற்றியின் அலைபேசி எண்ணை அறிந்து கொண்டதுமல்லாது, அவன் யார் என்பதையும் புகைப்படத்தில் பார்த்துக் கொண்டாள்.
அடுத்த நாளே ஷாலினி கூறிய தகவல்களை வைத்து வெற்றியை பற்றி தீவிரமாக விசாரிக்கவும், அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்கவும் ஆரம்பித்தாள் மாலினி.
வெற்றி காலேஜில் ஒரு பிளேபாயாக இருப்பது தெரிய வந்ததோடு, அவன் அன்னையும் தந்தையும் பிரிந்து விட்டார்கள். என்பதையும் அறிந்து கொண்டவள் ஷாலினியின் அலைபேசியிலிருந்து எடுத்த வெற்றியின் எண்ணுக்கு அழைத்து தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் அவனை சந்திக்க வேண்டும் என்று கூற, இந்த கொஞ்சநாளாக தனக்கு எக்ஸாம் நடைபெறுவதால் முடிந்த பின்னால் வெற்றியும் வருவதாக சம்மதம் தெரிவித்தான். எக்ஸாம் முடிந்த அன்று மாலையே மாலினியை ஒரு ரெஸ்டூரண்ட்டில் சந்தித்தான்.
ஷாலினியின் ஜாடை கொஞ்சம் தெரிய அவளை அடையாளம் கண்டுகொள்வது ஒன்றும் வெற்றிக்கு சிரமமாக இருக்கவில்லை. வெற்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள “தெரியும் ஷாலினியோட போன்ல போட்டோஸ் பார்த்திருக்கிறேன்” என்றாள் மாலினி.
“அப்படி உக்காந்து பேசலாமா?” என்ற வெற்றி குடிக்க குளிர்பானமும் வரவழைத்திருந்தான்.
மாலினி மறுக்கவில்லை. அவனிடம் ஷாலியை காதலிக்கின்றாயா என்று நேரடியாக கேட்கவில்லை. தன்னுடைய குடும்பத்தை பற்றித்தான் கூறினாள். அவளுடைய அன்னை ஷாலினி பிறந்த உடன் இறந்து விட்டதாகவும், தந்தை சமீபத்தில்தான் இறந்துவிட்டதாகவும். அதிலிருந்து ஷாலினியை மீட்டெடுக்க அவள் எவ்வளவு மெனக்கிட்டாள் என்பதையும் கூறியவள்.
பிறப்பிலிருந்தே அனாதையாக வளர்வது ஒரு விதம் கொடுமை என்றால், இளமையில் பெற்றோரை இழந்து சொந்தங்களால் ஒதுக்கப்பட்டு அனாதையாவது ஒரு வித கொடுமை. “பரிமாதாபமாக பார்ப்பாங்க. அப்போ நினச்சேன் யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது. சொந்தகால்ல நிக்கனும்னு. நிக்கிறேன். ஷாலினியும் நிப்பா. எனக்கு ஒரேயொரு ஆசைதான். நானும் சரி ஷாலினியும் சரி கல்யாணம் பண்ணி போற குடும்பம் மாமனார், மாமியார், நாத்தனார், கொழந்தைனார்னு பெரிய குடும்பமா இருக்கணும் என்று”
மாலினி பேச பேச அவன் மைன்ட் வாய்ஸ் “இப்போ சொந்த கால்ல இல்லையாம்மா நிக்குறாங்க? ஒருவேளை கடன் வாங்கி வந்திருப்பாங்க போல” என்று நக்கல் பண்ண, அவள் கடைசியாக சொன்னவைகளை கேட்டு “இதெல்லாம் எதற்கு என் கிட்ட சொல்லுறாங்க?” என்று பார்த்தான்.
“உன் குடும்பத்த பத்தி விசாரிச்சேன். உன் அப்பா ஏதோ ஆராய்ச்சி என்று இருந்ததால உங்கம்மா பெத்த உடனே உன்ன உன் தாத்தா கைல கொடுத்துட்டு உங்கப்பாவ விட்டுட்டு போய்ட்டாங்களாம்”
அதை சொன்னதும் வெற்றியின் உள்ளம் எரிமலையாய் கொதிக்க ஆரம்பித்திருந்தது.
“நீ எந்த நோக்கத்தோட ஷாலினி கூட பழகிரியோ எனக்கு தெரியல. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்து என் தங்கச்சி வாழுறது எனக்கு பிடிக்கல” கத்தி இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வெற்றியின் இதயத்தை கீறி இருந்தாள் மாலினி.
வெற்றியின் மனதில் வலி இருந்தாலும் அதை மறைத்தவன் “ஏன் உங்க தங்கச்சி இந்த அனாதையாத்தான் காதலிக்கிறேன்னு உங்ககிட்ட சொன்னாளா?” எள்ளலாக கேட்டான்.
மாலனிக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். அதை முகத்தில் காட்டாது. “உன்ன பிரெண்டுன்னுதான் சொன்னா. ஒருவேளை நீ அவளை காதலிக்கிறேன்னு சொல்லப்போய் நல்லவனா இருக்கானேன்னு ஷாலினியும் உன்ன காதலிக்க ஆரம்பிச்சிடுவாளோன்னுதான் தான் உன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்”
லதாவை பற்றி பேசியதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவன் “என் மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்ல. அப்படி எண்ணம் இருந்தாலும் அத சொல்லவும் மாட்டேன். இது என் மேல சத்தியம்” என்றான் வெற்றி. அவன் அவ்வாறு சொல்லக் காரணம் அவன் உண்மையாக ஷாலினியை காதலிக்கவில்லையே. ஷாலினியைத்தான் அவனை காதலிக்க வைக்க முயன்றானே.
“சந்தோசம் இன்னிக்கிதான் உனக்கு காலேஜ் கடைசி நாள்னு ஷாலினி சொன்னா. இதற்கு அப்பொறம் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சிகொள்ள போறதில்ல. உன்னால எந்த பிரச்சினையும் வராதுன்னு நம்புறேன்” என்ற மாலினி கிளம்பி இருந்தாள்.
ஷாலினியே வந்து அவனிடம் காதலை சொன்னால் கூட பிரவீனிடம் அழைத்து சென்று அவள் சொன்னதை சொல்ல வைத்து பந்தயத்தில் தான் ஜெயித்து விட்டதாக சொல்லத்தான் எண்ணி இருந்தான். அதனால் மாலினி பேசி சென்ற விஷமோ, பேசிய விதமோ வெற்றியை கொஞ்சம் கூட அசைக்கவில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு மாலினி பேசியவைகளை தூக்கிப் போட்டவன் வீடு திரும்பினான்.
அடுத்தநாள் காலேஜ் பேயார்வல் டே அனைவரிடமும் விடைபெற்றவனுக்கு ஷாலினிடம் விடைபெற வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. அதற்கு காரணம் மாலினி லதாவை பற்றி பேசி அவன் மனதை கீறி இருந்ததால் இவளுடன் இனி பழகக் கூடாது என்ற முடிவில் இருந்தான். அவளாகவே அவனை தேடி வந்தாள்.
“சார் கிளம்பிட்டீங்க போல?”
“ஆமா ஷாலு” என்றான் வெற்றி. என்னதான் முடிவெடுத்தாலும் முகத்தில் அடித்தது போல் பதில் சொல்ல வெற்றியால் முடியவில்லை.
“அடுத்து என்ன? மேல்படிப்பு பாரின்லயா? இல்ல இங்க சென்னைலயா?” என்னை விட்டு போக போறியா? என்று மறைமுகமாக கேட்டிருக்க,
“ஓபியஸ்லி பாரின்தான்” என்றான். இங்கிருந்து சென்ற பிறகு அவளை சந்திக்க போவதில்லை. அதனால் அவளை காயப்படுத்தாமல் பிரிந்து விடலாமே என்ற எண்ணத்தில் நல்ல முறையில் பேசினான் வெற்றி.
“ஓகே… உன் கனவு உன் லட்ச்சியம். அது ரொம்ப முக்கியம்” என்றவாறே அவன் கையை பிடித்து பிளாட்டினம் பிரேஸ்லட்டை அணிவித்தவள் “ஆல் தி பேஸ்ட்” என்று புன்னகைக்க, வெற்றியும் புன்னகைத்தான்.
அன்று மாலை இன்முகமாக பிரியாவிடை கொடுக்க வேண்டிய நேரத்தில் ப்ரவீனோடு உருண்டு புரண்டு சண்டை போட்டுக்கொண்டுதான் வீடு திரும்பி இருந்தான்.
தான் பந்தயத்தில் வெற்றி பெற்றதாக பிரவீன் துள்ளிக் குதிக்க, வெற்றியும் அதை சகஜமாகத்தான் எடுத்துக் கொண்டான். ஆனால் பிரவீன் விடாது. “உனக்கெல்லாம் உண்மையான காதலே கிடைக்காது. நீயும் உன் அப்பா போல உன் அம்மா விட்டுட்டு போனா மாதிரி தான் உனக்கும் நடக்கும்” என்று வாய் விட்டிருக்க, மாலினி பேசியதால் கனன்று கொண்டிருந்தவன் பிரவீனின் மேல் பாய்ந்திருந்தான்.
இதை பார்த்துதான் பூபதி லதாவிடம் காலேஜ் கடைசி நாளன்று குடித்து விட்டு வந்ததாக கூறினான். போட்ட சண்டையால் குடித்து விட்டுத்தான் வந்திருந்தான். பிரவீன் பேசிய பேச்சுக்களால் அடுத்த நாளே வண்டியோட்டி சென்றவன் நிதானம் தவறி லாரியில் மோதி இருந்தான்.
அதனால் வெற்றி எண்ணியது போல் அவனால் வெளிநாடு செல்ல முடியவில்லை. விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, நடக்க முடியாமல் ஆறுமாதம் கட்டிலில் கிடந்தான்.
பூபதி அவனை ஒரு ஆண் தாதியை வைத்து பார்த்துக் கொண்டதோடு, அவர் மருத்துமனையே கதி என்று இருக்கலானார். செல்வபாண்டியன் கூடவே இருந்தாலும் அவரால் அவனை பார்த்துக்கொள்ள முடியாதே. பேச்சுத் துணைக்கு இருந்தாலும், ஒரு சில மணிநேரம்தான்.
இத்தனை வருடங்கள் உள்ளத்தில் உறங்கி இருந்த அன்னையின் பாசமும், தேவையும் அவனுக்கு அந்த கணம் தேவைப்பட்டது. தன்னை வேண்டாம் என்று விட்டு சென்ற லதாவின் மீது பன்மடங்கு கோபம் பெருகியது.
அந்த கோபத்தால் பூபதியிடமும், செல்வபாண்டியனிடமும் எரிந்து விழ, ஆரம்பித்தான்.
தான் படித்த கல்லூரியிலையே மேற்படிப்பை தொடர்ந்தவனுக்கு மீண்டும் ஷாலினியை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. விபத்தால் அவன் கால் ஊனமாகவில்லை அவன் மனம் ஊனமாகிப் போக, விளையாட்டுத்தனத்தை கைவிட்டிருந்தான்.
ஷாலினியை காதலிப்பதை மெதுவாகத்தான் உணர ஆரம்பித்தான் வெற்றி. உணர்ந்து கொண்ட பொழுது  அவளிடம் அதை சொல்ல முடியாமல் விலகிச் செல்ல முயன்றான். அதை கண்டு கொண்டு ஷாலினி விசாரிக்க, மழுப்பலானான்.
ஆனால் ஷாலினி அவனை காதலிப்பதாக சொல்லிவிட்டே கல்லூரி இறுதி படிப்பை முடித்து விட்டு அவனுக்காக காத்திருப்பதாக கூறிச் சென்றாள்.
மாலினி சொன்ன வார்த்தைகள் வெற்றியின் மனத்துக்குள்ள அலையடிக்க, ஷாலினியை தன்னால் நெருங்க முடியாது. ஒருநாளும் மாலினி அதற்கு சம்மதிக்க மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தான்.
ஒருகணம் ஒரே கணம் அன்னையும், தந்தையும் சேர்ந்தால் மட்டுமே தன்னால் ஷாலினியோடு சேர்ந்து வாழ முடியும் என்று லதாவை பற்றியும், மாறனை பற்றியும் விசாரிக்கலானான்.
மாறனுக்கு தனக்கு ஒரு சகோதரன் இருப்பதே தெரியாது என்று அறிந்துக் கொண்டவன். லதா தன்னை அவ்வளவு வெறுக்கின்றாளா? என்று அவனாகவே முடிவெடுத்து ஷாலினியை விட்டு தூரமானான்.
ஆனால் ஷாலினி தன் காதலில் பிடிவாதமாக, உறுதியாக நின்றாள். வெற்றியும் தன்னை விரும்புகின்றான் ஏதோ ஒரு காரணத்துக்காக தன்னை விட்டு விலகி ஓடுகின்றான் என்று மாலினியிடம் வெற்றியை காதலிப்பதாக கூற, மாலினியும் ராகவேந்திரனை காதலிப்பதால் தங்கையின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு தனக்கும் வெற்றிக்கும் இடையில் நடந்து சம்பாஷணையை கூறியவள் உடனே வெற்றியிடம் பேசுமாறு கூறினாள்.
இதற்கிடையில்தான் மாலினி இறந்து போனாள்.
அந்த நேரத்தில் இதை பற்றி பேச வேண்டாமென்று வெற்றியிடம் மாலினியின் கொலைகாரனை கண்டு பிடிக்க உதவி கோரி இருந்தாள் ஷாலினி.
“இப்போ புரியுதா? என்ன நடந்ததுன்னு? அதுக்கு அப்பொறம் நான் உன்ன ஸ்டேஷன்ல வந்து சந்திச்சேன். நீ உன் அண்ணன் பேர்ல இருந்தா நான் உன்ன கண்டு பிடிக்காம போய்டுவேனா?” மாறனை நன்றாகவே முறைத்தாள்.
“இவங்களுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கா?” என்று ஆச்சரியப்படுவதா? தன் சகோதரன் எவ்வளவு மனவேதனையை அனுபவித்திருப்பான் என்று கவலை படுவதா மாறனால் ஒருகணம் புரியாமல் இருக்கையில் அமர்ந்து விட்டான்.
“என்ன உக்காந்துட்டு? நான் காலைல கூட ஒன்னும் சாப்பிடல. இங்க வந்து எவ்வளவு நேரமாச்சு. குடிக்கவாச்சும் ஏதாவது கொடுத்தியா? லூசு, லூசு” மாறனை திட்டலானாள் ஷாலினி.
கைக்கடிகாரத்தை பார்த்த மாறன் மதியம் என்பதனால் “வா போலாம்” எதுவும் பேசாமல் அவளை அழைத்து சென்றது ஒரு உணவகத்துக்குத்தான்.
“உனக்கு என்ன பிடிக்குமோ ஆடர் பண்ணிக்க” என்றவனுக்கு சாப்பிட மனமே இல்லை.
“ஏன் நீ சாப்பிடல?”
“ப்ச்… பசிக்கல. நான் அப்பொறம் சாப்பிடுறேன். நீ சாப்பிடு” என்ற மாறன் எதையோ சிந்தித்துக் கொண்டே இருந்தான்.
“அப்போ எனக்கும் வேணாம். உன் கூட சேர்ந்து சாப்பிடலாம்னு பார்த்தேன். நீயே சாப்பிடலனா எனக்கு எதுக்கு” ஷாலினி கையிலிருந்த மெனு கார்டை கீழே போட்டு விட்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அவள் பிடிவாதம்தான் அவன் அறிந்தததே “சரி எனக்கும் சேர்த்தே ஆடர் பண்ணு சாப்பிடுறேன், நான் ஒரு போன் பேசிட்டு வரேன்” என்றவன் எழுந்து சென்று யாரையோ அழைத்து பேசிவிட்டு வந்தமர்ந்தான்.
வெற்றிக்கு பிடித்த உணவுகளைத்தான் ஷாலினி ஆடர் செய்திருந்தாள். உணவுகள் வந்து சேர்ந்த பொழுது “எப்படி உனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் கரெக்ட்டா நியாபகம் வச்சிருக்கேனா?”  
“இதெல்லாம்தான் வெற்றிக்கு பிடிக்குமா?” என்று மாறன் கேட்க
  “நீதான் வெற்றி உனக்கு பிடிச்சதுதான் இதெல்லாம்” என்றாள் ஷாலினி.
மாறன் மறுத்து பேசாவுமில்லை. அவளோடு வேறெதுவும் பேசாமலும் அமைதியாக மேசையில் இருந்த உணவுகளை ருசிபார்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் சிந்தனையில் தாயும், தந்தையும் திருமணமே செய்திருக்கக் கூடாது. அப்படி செய்தவர்கள் பிரிந்திருக்கக் கூடாது. அன்னை தன்னிடம் வெற்றியை பற்றி ஒருதடவையாவது கூறி இருக்க வேண்டும். கூறாதது எவ்வளவு பெரிய தவறு. அதனால் அவன் ஷாலினியை இழந்து இன்று உயிரையே விட்டு விட்டான். அதற்கு காரணம் தந்தை என்றாலும், அன்னையும் ஒரு காரணம் தான். 
அவனை வேண்டாம் என்ற மாலினியும் இன்று உயிரோடு இல்லை. அவன்தான் வேணும் எங்குற ஷாலினிக்கு என்ன பதில் சொலவதென்றும் தெரியவில்லை.   
“என் வீட்டுக்கு போக வலது பக்கம் இல்ல வண்டிய திருப்பணும்? நீ என்ன இடது பக்கம் திருப்புற? இப்போ நாம எங்க போறோம்?” புரியாது கேட்ட ஷாலினியின் மனதுக்குள் ஒருவேளை அவன் வீட்டுக்கு அழைத்து செல்கின்றானோ? அவனின் வீட்டாரிடம் அறிமுகப்படுத்தி திருமணத்தை பற்றி பேச போகின்றானோ?” என்ற சிந்தனை ஓட, முகம் மலர்ந்தவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவள் கேட்ட கேள்விக்கு மாறன் பதில் சொல்லவில்லை. அமைதியாகவே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவன் எண்ணமெல்லாம். ஷாலினியிடம் உண்மையை உள்ளபடி சொல்லிவிடுவதுதான் நல்லது. “வெற்றி உயிரோடு இல்லை என்பது அவளுக்கு மனவேதனையை கொடுக்கும். அதற்காக அவளை எத்தனை நாளை இருளில் வைத்திருப்பது? தந்தையை இழந்து மீண்டு வந்தவள், அக்காவை இழந்து மீண்டு வந்து விட்டாள். வெற்றி இல்லை என்ற உண்மை அறிந்தால் அதிர்ச்சியடைவாள் ஆனால் மீண்டு வருவாள். அதுதான் அவளுக்கு நல்லது. தனக்கும் நல்லது” நெஞ்சை நீவிக் கொண்டான் மாறன். அவன் மனம் கனத்து இருக்க மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
யாரிடம் அழைத்து சென்றால் அவள் புரிந்துகொள்வாளோ, அவரிடமே அழைத்து செல்வதுதான் சரியென்று அழைத்து வந்திருந்தான்.
அது வேறு யாருமல்ல அவனது தந்தை பூபதி பாண்டியன்தான். இன்று காலைதான் அவருக்கு வெற்றி நல்லவன் என்ற உண்மை தெரிந்தது. அந்த அதிர்ச்சியில் அவர் என்ன மனநிலையில் இருக்கின்றாரோ தெரியவில்லை.
இப்பொழுது போய் வெற்றி ஒரு பெண்ணை விரும்பி இருக்கின்றான் என்று ஷாலினியை வெற்றியின் காதலியாக அறிமுகப்படுத்தினால் அவருக்கு மாரடைப்பு கூட வரலாம். ஆனால் வேறு வழியில்லை. ஷாலினிக்கு உண்மை என்னவென்று தெரிந்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு மாறன் அவளை பூபதியின் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.
வெற்றியை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட பூபதிக்கு எந்த வேலையும் ஓடவில்லை. அதற்காக வீட்டுக்கு செல்லவும் முடியாதே. வீடு சென்றால் லதா கவலை தொய்ந்த அவர் முகத்தை பார்த்து விசாரிக்க ஆரம்பித்து விடுவாள். அவளிடம் உண்மையை ரொம்ப நேரத்துக்கு மறைக்க முடியாது உளரிக் கொட்டி மாட்டிக்கொள்வார். அதனால் மருத்துமனையில் அவருக்கேயான அறையில் அமர்ந்திருக்கும் பொழுதுதான் உணவகத்திலிருந்த மாறனிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் எங்கே இருக்கின்றார் என்று விசாரித்தவன் தான் இப்பொழுது அவரை சந்திக்க வருவதாக கூற, காலையில் நடந்தவைகளைத்தான் பேச வருவதாக எண்ணி மகனுக்காக காத்திருந்தார் பூபதி.
மாறன் ஒரு பெண்ணோடு வருவதை கண்ட பூபதிக்கு அவள் யாரென்றும் தெரியவில்லை. மாறன் எதற்காக அவளை அழைத்து வந்தான் என்றும் புரியவில்லை.
வந்தவனும் உள்ளே வந்த உடனே “அப்பா… இவ ஷாலினி நீங்க பண்ண ஆராய்ச்சியை பத்தி சொன்னேன் நம்ப மாட்டேங்குறா. அதான் உங்க கிட்டயே கூட்டிகிட்டு வந்தேன்” என்றான்.
சின்ன வயதில் பாடசாலை தன்னோடு படிக்கும் நண்பன் தான் கூறியதை நம்பவில்லையென்றால் பெற்றோரிடம் அழைத்து வந்து சொல்லுமாறு கூறுவது போல மாறன் கூற, பூபதி புரியாது பார்த்தார் என்றால் ஷாலினி அதிர்ந்தாள்.
“என்ன இவன் அப்பாவ அறிமுகப்படுத்தி கல்யாண விஷயம் பேசுவான்னு பார்த்தா, ஏதோ உளருறான்? என்ன ஆராய்ச்சி? எத பத்தி பேசுறான்? நாம எதுக்கு இங்க வந்தோம்?”
“உக்காரு ஷாலினி” என்றவன் “இவளிடம் எல்லா உண்மையையும் சொல்லியே ஆகா வேண்டும்” என்பது போல் பூபதியின் முன்னால் அமர்ந்துகொள்ள, யார் இந்த பெண் எனும் விதமாக அவளை பார்த்தார் பூபதி.
“ஒருவேளை மாறன் விரும்பும் பெண்ணா இவள்? அவன் விரும்பும் பெண்ணாக இருந்தால் இப்படி வந்து நிற்க மாட்டான். இவள்தான் மாறனை விரும்புவதாக கூறி இருக்க வேண்டும். இவளை துரத்த உண்மையை சொல்ல சொல்கின்றானா?”
யோசனையாகவே மகனை பார்த்த பூபதி “என்ன ஆராய்ச்சி” என்று கேட்டார். ஆராய்ச்சியை பற்றி ஷாலினியிடம் கூறுவதில் அவருக்கு என்ன தீங்கு வந்து விடப் போகிறது? ஆனால் மாறன் கேட்பதில் ஏதோ உள்குத்து இருப்பதை மட்டும் புரிந்துக் கொண்டார்.  
தான் ஷாலினி யார் என்று கூறாமல் தந்தையிடம் உண்மையை கூறச் சொன்னால் அவர் தனக்கே தண்ணி காட்ட பார்க்கின்றாரா?
தந்தையை முறைத்தவன் “நீங்க என்ன ஆராய்ச்சி பண்ணினீங்கன்னு உலகத்துக்கு வேணா தெரியாம இருக்கலாம். அம்மாக்கு நல்லாவே தெரியும். ஷாலினியை கூட்டிகிட்டு அம்மா முன்னாடி போய் நின்னா அவங்களே எல்லா உண்மையையும் சொல்வாங்க. எப்படி நானும், வெற்றியும் பிரிஞ்சோம் என்ற உண்மை உட்பட” தந்தையை மிரட்டவெல்லாம் இல்ல. அவர் மேசையில் இருந்த பேப்பர் வைட்டை சுழற்றியவாறு அமைதியாகத்தான் கூறினான்.
வெற்றியின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லதாவுக்கு உண்மை தெரிந்தால் என்னவெல்லாம் ஆகுமென்று இரண்டு பேருக்குமே தெரியும். மனைவியிடம் போய் நிற்பேன் என்றதும் பூபதியின் உடல் ஆட்டம் காண ஆரம்பித்தது. வியர்க்க கைக்குட்டையை எடுத்து நெற்றியை துடைத்துக்கொள்ள, மாறன் தண்ணீர் கிளாஸை கையிலையே கொடுத்தான்.
மாறன் கூறியதை பூபதி கவனித்திருந்தால் அமைதியாக இருந்திருப்பார். அவன் எப்படி வெற்றி இறந்தான் என்று கூறவில்லை. காரணம் ஷாலினி அருகில் இருப்பதனால்தான். அந்த உண்மையை தந்தையே கூற வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
அதை உணராத பூபதி லதாவிடம் போய் நிற்பேன் என்றதும் நடுநடுங்கிப் போனார்.
ஷாலினிக்கு ஒருநொடி அங்கே என்ன நடந்தது என்று சுத்தமாக புரியவில்லை. மாறனின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
தண்ணீரை அருந்திய பூபதி ஷாலினிக்கு புரியும் விதமாக சுருக்கமாக அவரது ஆராய்ச்சியை பற்றி கூறிமுடிக்க,
“சயன்ஸ் வளர்ச்சியடைஞ்ச உலகத்துல இது கூட சாத்தியம்தான் அங்கிள். வாழ்த்துக்கள். இதுக்கு போய் ஏன் பயப்படுறீங்க? மனுஷனோட உசுர காப்பாத்த தானே எல்லாம்” என்ன நடந்தது என்று அறியாமல் பூபதியை புகழ்ந்தாள்.
அவளை பாவமாக பார்த்த மாறன் “அந்த ஆராய்ச்சியை அவர் வெற்றிகரமா பண்ணி முடிச்சிட்டாரு. அதுவும் அவரோட ரெண்டு பசங்களையும் வச்சி”
மாறன் சொன்னதை உள்வாங்கியவள் “நீ என்ன சொல்லுற? எனக்கு புரியல” அதை சொல்லும் பொழுதே நா குளறி, இதயம் அடிக்க ஆரம்பித்திருந்தது.
தனக்கும் வெற்றிக்கும் நடந்த விபத்தை பற்றி கூறிய மாறன் தனக்கு தலையில் அடிபட்டு தான் கோமாவுக்கு சென்றதை கூற, பூபதி பாண்டியன் வெற்றியின் மூளையின் ஒரு பகுதியை மாறனுக்கு பொறுத்தித்தான் அவனை காப்பாற்றியதாக ஷாலினியிடம் கூறியது மட்டுமல்லாது சில சமயம் அவன் வெற்றியாக நடந்துகொள்வதாகவும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
“வெற்றி இறந்துட்டானா? இல்ல நீ பொய் சொல்லுற” மாறனின் சட்டையை பிடித்து உலுக்கியவளின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
“வெற்றியோட மூளை தான் என்ன இந்த பிரேஸ்லட்ட  போட சொன்னதும். உன்ன அடையாளம் காட்டியதும். நான் வெற்றி இல்லை ஷாலு. மாறன்” மாறன் கூறி முடிக்கும் பொழுதே ஷாலினி மயங்கி விழுந்திருந்தாள்.

Advertisement