Advertisement

அத்தியாயம் 1
சென்னை ECR ரோடு. நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த ரங்களேர் ஜீப் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது வெற்றி எனும் வெற்றிமாறன்.
ஆறடியில் அளவான தேகம்தான். மாநிறத்தில் சின்ன கண்களோடு, மீசை கூட அடர்த்தியாக, கொஞ்சம் சுருட்டை முடி. சிரித்தால் அழகாக இருப்பான். ஆனால் அவனோ அழுத்தக்காரனாக இருந்தான். முகத்தில் எப்பொழுதும் ஒருவித இறுக்கம் இருந்தது. சிரிப்பை தொலைத்த முகம். சிரிக்க பிடிக்கவில்லையோ? காரணம் தெரியவில்லை.
“டேய் வெற்றி மெதுவா போடா… இவ்வளவு கோபம் ஆகாது” அருகில் அமர்ந்திருந்த மணிமாறன் கூற,
“நீ தானே என்ன பார்க்கணும்னு வந்த, நான் இப்படித்தான். பார்த்திட்ட இல்ல. இனி வராத” என்றவன் வேகத்தை குறைக்கவே இல்லை.
அவனை எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்று மணிமாறன் சிந்தித்தவாறே பாதையை கவனிக்க, குரைத்தவாறே பாதை நடுவில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது.
“டேய் வெற்றி வெற்றி பார்த்து” மணிமாறன் கத்தும் பொழுதே ஜீப் நாயை  மோதி விடக் கூடாது என்று இடது புறம் திருப்ப, வண்டி எதோ ஒரு கல்லில் ஏறி, இறங்க வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூன்று தடவை உருண்டு, கவிழ்ந்து தூரப்போய் பெரிய சத்தத்தோடு தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.
கடலலையின் சத்தம் காற்றில் கலந்து மெதுவாக வீசிக்கொண்டிருக்க, வண்டிக்குள் இருமல் சத்தம் மட்டும் கேட்டது. சாலையின் மின்விளக்கு வெளிச்சத்தில் இருமுவது வெற்றியா? மாறனா? என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரிதான் இருந்தனர். வெற்றி சாம்பல் நிறத்தில் சட்டையும் கருப்பு ஜீன்சும் போட்டிருக்க, மாறன் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்டும் போட்டிருந்தான். இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் இருளில் போட்டிருந்த துணியை கொண்டு யார் வெற்றி? யார் மாறன்? என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
எவ்வளவு நேரம் இருவரும் விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தார்கள் தெரியவில்லை. யார் முதலில் பார்த்தார்கள்? யார் அம்பியூலன்சை அழைத்தது? யார் காவல்துறைக்கு தகவல் சொன்னது எதுவும் தெரியாது.
விடிந்தும், விடியா காலை பொழுதில் அந்த இடமே பரபரப்பராகி இருவரும் அம்பியூலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த நேரத்தில் வாகன நெரிசல் இல்லாததால் வண்டி மருத்துமனையை சீக்கிரம் அடைந்து விட, வெற்றியும், மாறனும் உடனடியாக, தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவரின் உடைகளும் கலையப்பட்டு, உடைமைகளும் பத்திரப்படுத்தப்பட்டு வீட்டுக்கும் தகவல் அனுப்பட்டதிருந்தது.
“டாக்டர் ஆக்சிடன்டுல இந்த பெர்சன்ட்டோட ஹார்ட் பலமா அடிபட்டிருக்கு இவரை காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் போலயே. பல்ஸ் ரேட் குறைஞ்சிக்கிட்டே போகுது” சீனியர் டாக்டர் தனது அனுபவத்தில் பேசலானார்.
கட்டிலில் சுயநலவற்று கிடைந்தவனை அவசரமாக உள்ளே வந்து பரிசோதித்து விட்டு கருமமே கண்ணாக தனது வேலையை பார்த்த இதய மருத்துவர் வஜ்ரவேல் சில மணித்தியாலங்களுக்கு பிறகு வாய் திறந்தார்.
“ஹார்ட் டிரான்ஸ்பர் பண்ணா உயிரை காப்பாத்த வாய்ப்பு இருக்கு. ஆனா அதுக்கு இவருக்கு பொருத்தமான ஹார்ட்  கிடைக்கணும். நெஞ்செலும்பு நொருங்கிப் போச்சு. எலும்பெல்லாம் சரி பண்ணி ஆபரேஷன் பண்ணனும். அதுக்கு டாக்டர் முகேஷ வர சொல்லிடீங்களா?  நெஞ்செலும்பு உடைஞ்சி ஹார்ட்டுல குத்தினதுல  ஹார்ட் தன்னோட இயக்கத்தை மெல்ல மெல்ல நிறுத்தி இருக்கு. செயற்கையா எத்தனை நாள் சுவாசம் கொடுக்க முடியும். ஒரு உயிரை காப்பாத்துறது தானே நம்ம வேல. பார்க்கலாம்”
“ஹார்ட் என்ன மரத்துலையா காய்க்குது உடனே கிடைக்க? உடனே ஹார்ட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியாதா? நெஞ்செலும்பு நொருங்கிப் போச்சு. ஆபரேஷன் பண்ண முடியாது என்று இவரை இப்படியே விடுறதுதான் சரி”
“இவரோட பேரன்ட்ஸ் கிட்ட என்ன சொல்லுறது?”
“உண்மையைத்தான் சொல்லணும். இவர் ப்ரதருக்கு ஹார்ட்ல எந்த ப்ரோப்ளமும் இல்லையே. அவரை காப்பாத்தலாமே” டாக்டர் வஜ்ரவேல் ஒரு உயிரையாவது காப்பாத்திடலாம் என்ற நம்பிக்கையில் பேச
“கடவுள் அங்கதான் பிரச்சினையே வச்சிருக்கான். அவருக்கு தலைல பலமா அடிபட்டத்துல மூளையோட ஒரு பக்கம் நசுங்கிப் போச்சு. கோமால இருக்கான். சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல” உதட்டை சுளித்த விதத்தில் அவன் இன்னும் சில மணிநேரங்களில் இறந்து விடுவான் என்று சொல்லாமல் சொன்னார்.
“என்ன சொல்லுறீங்க?”  டாக்ட்ட வஜ்ரவேல் அதிர்ச்சியை முகத்தில் அப்பட்டமாகவே காட்டினார்.
“ஆமா தி கிரேட் நியூரோசார்ஜன் டாக்டர் பூபதி பாண்டியன வர சொல்லி இருக்கேன். அவர் வந்து பார்த்துட்டுதான் எதுனாலும் சொல்லுவாரு”
“என்ன? ஓஹ்… மை கார்ட்” ஒரே மாதிரி பிறந்தது மட்டுமல்லாமல் ஒரே நாளில் இறக்க போகும் இந்த அண்ணன் தம்பியை நினைத்து கவலையான டாக்டர் வஜ்ரவேல் முகம் மலர்ந்தார்.
“என்ன டாக்டர் நான் இந்த பசங்க அல்பாயுசுல போறத நினைச்சி கவலை படுறேன். நீங்க சிரிக்கிறீங்க?” சீனியர் டாக்டர் தனது வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துட்டேன் என்பதை போல் பேச
“என் பெர்சன்ட்டுக்கு ஹார்ட் கிடைச்சிருச்சு. நியூரோ பூபதி வந்து பார்த்த பிறகு அந்த பையனோட ஹார்ட்ட இந்த பையனுக்கு பொருத்துரத பத்தி பேசுங்க, இவன் உசுரையாவது காப்பாத்திடலாம்.
“அட ஆமா… ஒரு பையனையாவது காப்பாத்திட்டா அந்த வீட்டாளுங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க”
யார் வீட்டு பசங்க என்று அறியாமளையே ஒரு உயிரை காப்பாற்ற போகும் மகிழ்ச்சியில் இவர்கள் பேசிக்கொண்டு நடந்தனர்.
“அப்பா.. இங்க என்ன பண்ணுறீங்க?” உள்ளே நுழைந்த நரம்பியல் மருத்துவர் பூபதி பாண்டியன் தனது தந்தையை அங்கு கண்டு சற்று அதிர்ச்சியாகவே ஓட்டமும் நடையுமாக அவரிடம் வந்து நின்றார்.
“ஐயா… பூபதி… நம்ம வெற்றிக்கு எக்சிடண்ட் ஆச்சுன்னு போன் வந்துச்சுப்பா…. அவனை காப்பாத்துப்பா…” துண்டை வாயில் வைத்தவாறு அழுது கொண்டிருந்தார் அந்த வயதான வெற்றிமாறனின் தாத்தாவான செல்வபாண்டியன்.
“நம்ம வெற்றிக்கா?” அதிர்ச்சியில் தள்ளாடிய பூபதி பாண்டியனுக்கு வயது ஐம்பதை தொட்டு இருக்கும்.
“மாறா… ஐயோ… என் மாறனுக்கு என்ன ஆச்சு…” அந்த மருத்துவமனையே அலறும்படி கத்தியவாறு உள்ளே நுழைந்தாள் லதா.
“லதா கொஞ்சம் அமைதியா இருமா…” லதாவின் தந்தை தர்மதுரை மகளை ஆறுதல் படுத்த முயன்றவாறே வர, மருத்துவமனையில் கதறல் குரல்களை கேட்டுப் பழகிய பூபதிக்கு அப்பெண்ணின் குரல் மிகவும் பரீட்சயமாக சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
“எனக்கு இவர் வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் இவரோடு வாழ விரும்பல. என்ன உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க அப்பா…” அவள் குரல் அது. அவரின் மனைவியின் குரல். பல வருடங்கள் கழித்து மனைவியை கண்டத்தில் மேலும் அதிர்ந்து நின்றார் பூபதி பாண்டியன்.
   
அழுதவாறே வந்த லதா கணவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் பழைய நினைவுகள் மின்னல் போல் ஓடி மறைய தந்தையின் கையை இறுக பற்றிக்கொண்டவள் அப்பொழுதுதான் மாமனாரும் அங்கு நிற்பதை கவனித்தாள்.
அவளுக்கோ ஒரே குழப்பம். விபத்து நடந்தது மணிமாறனுக்கு என்றல்லவா தகவல் வந்தது. இவர் இங்கே என்ன செய்கின்றார். அப்போ? அவன் அவள் பெற்ற மற்ற குழந்தை என்ன ஆனான்?” சட்டென்று கணவனை பார்த்தவள் கண்களாளேயே பதில் வேண்டி நின்றாள்.
ஆனால் பூபதி பாண்டியனுக்கு மனைவியின் தாய்பாசமும், பரிதவிப்பும், கண்களுக்கு தெரியவில்லை. பல வருடங்கள் கழித்து காணும் மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்.
இத்தனை வருடங்கள் கழித்து கணவனின் பார்வையில் அன்பை கண்ட லதாவுக்கு மனதுக்குள் மெல்லிய தடுமாற்றம் வந்தாலும், கணவனா? மகனா? என்ற நிலையில் தாய்பாசம்தான் வென்றது. கணவனை முறைத்து விட்டு தந்தையிடம் “மாறன் எங்க இருக்கான்னு கேளுங்க” கணவனை மருத்துவமனையில் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் வர அழுகை நின்றது.
தர்மதுரையும் மருமகனிடம் “மாறனுக்கு ஆக்சிடன் ஆச்சுன்னு போன் வந்தது” மொட்டையாகவே கேட்டிருக்க, பூபதியும் வெற்றியைத்தான் கேட்பதாக நினைத்தார்.
ஆனால் வெற்றிக்கு ஆக்சிடன் ஆனதை இவர்களுக்கு யார் தகவல் சொன்னார்கள் என்று அவருக்கு புரியவில்லை. பெத்த பாசம், பேரன் என்ற பாசம் இவர்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று எண்ணினார்.
“ஆமாம் மாமா வெற்றிக்கு ஆக்சிடன் ஆச்சுன்னு அப்பாக்கு போன் வந்திருக்கு. நான் ஹாஸ்பிடலுக்கு ஒரு கேஸ் விஷயமா வந்தேன். இருங்க விசாரிக்கலாம்”
பூபதி சொன்னதும்தான் தாமதம் “அவனுக்குமா?” இடிந்து அமர்ந்தாள் லதா.
அவளின் “அவனுக்குமா?” என்றதில் பூபதி பாண்டியனுக்கு தனக்கு வந்த போன் கால் நியாபகத்தில் வந்தது.
“டாக்டர் அதிகாலையிலையே ஒரு ஆக்சிடன்ட் கேஸ். ட்வின்ஸ். அண்ணன், தம்பி பார்க்க ஒரே மாதிரி இருக்காங்க, ஒருத்தனுக்கு மண்டைல செம்ம அடி. ஒருத்தனுக்கு நெஞ்சுல, ரெண்டு பேரையும் காப்பாத்துறது கஷ்டம். டாக்டர் வஜ்ரவேல் ஒன் தி வே டு ஹாஸ்பிடல். நீங்க கொஞ்சம் வர முடியுமா?” 
சீனியர் டாக்டரின் சாதாரண அழைப்பு அது. கிளம்பி வந்தவருக்கு தான் எத்தனை அதிர்ச்சி. அடிபட்டு கிடப்பது தனது பிள்ளைகளா? கால்கள் தள்ளாட மனைவின் அருகில் அமர்ந்து விட்டார் பூபதி பாண்டியன்.
எவ்வளவு க்ரிட்டிக்கல் கண்டிஷனில் இருந்திருந்தால் சீனியர் டாக்டர் அப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பார் என்று பூபதியால் புரிந்துகொள்ள முடிந்தது. பிரசவ வலியில் மனைவி துடித்த பொழுது அவளை கையில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றது, குழந்தைகளை பெற்றுடுத்த பொழுது அவர்களை கையில் வாங்கியது என்று அனைத்தும் நியாபகத்தில் வர கண்களில் குளம் கட்ட கண்ணாடியை கழட்டி கண்களை மெல்ல துடைக்கலானார்.
லதாவை என்ன வார்த்தைகள் சொல்லி ஆறுதல் செய்வது என்று அவருக்கு தோன்றவில்லை. ஆறுதல் சொல்லும் நிலைமையிலும் அவரில்லை. ஒரு மருத்துவராக அவர் இப்பொழுது இல்லாமல் தந்தையின் மனநிலையில் அவருக்கே ஆறுதல் தேவைப்படும் நிலையில் இருந்தார். லதாவின் புறம் அவர் திரும்பவுமில்லை. ஒரு வார்த்தையேனும் பேசவுமில்லை.  
விசும்பிக் கொண்டிருந்த லதா “எனக்கு என் பசங்க வேணும் என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? எனக்கு தெரியாது. என் பசங்க எனக்கு வேணும்” மெதுவாக கூறியவள் சட்டென்று பூபதியின் புறம் திரும்பி அவர் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.
அங்கே வந்த சில ஸ்டாப் அவளை பிடித்து, தடுத்து பூபதியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
விபத்துக்குள்ளான தான் பெற்ற மகன்களை பாராமல் மனைவிக்கு வாக்குக்கொடுக்க முடியாமல் அமைதியாக அவர்களோடு கிளம்பி இருந்தார் பூபதி.
செல்லும் கணவனை கண்களில் நீர் வழிய பார்த்திருந்தாள் லதா.
 யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்? யார் அழுகிறார்கள்? யார் கதறுகிறார்கள்? யார் மரணிக்கிறார்கள்? யார் குணமாகி செல்கிறார்கள்? பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாத இடமாக விளங்கும் மருத்துவமனைகள் தனது இயக்கத்தை மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை.
பலமணி நேரம் கடந்த நிலையில், உள்ளே சென்ற கணவனும் வெளியே வராத நிலையில் பொறுமை இழந்து அமர்ந்திருந்தாள் லதா.
அப்பா எங்கே என்று கேட்ட மணிமாறனுக்கு இதுவரையில் சரியாக எந்த பதிலையும் கூறியதும் இல்லை. அவனோடு பிறந்த இரட்டையை பற்றி கூறியதுமில்லை.
இருவரும் சந்தித்தது, ஒன்றாக பயணம் செய்தது, விபத்துக்குள்ளானது எதுவும் அறியாமல் கணவனை மருத்துவமனையில் கண்ட நிம்மதியில் “அவர் பார்த்துக் கொள்வார்” என்ற தைரியத்தில் இருந்த லதாவுக்கு எந்த பதிலும் வராது போகவே, அவளது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. 
விபத்து என்று தகவல் சொன்னார்களே தவிர, மணிமாறனின் நிலையை கூறி இருக்கவில்லை. மருத்துவனைக்கு வந்தவள் பூபதியின் மனைவி என்றதும் அவருக்கு நிலைமை எடுத்துக் கூறப்பட்டிருந்தததோடு சரி. உள்ளே சென்ற அவர் இன்னும் வெளியே வரவில்லை.
“மாமா உள்ள என்ன நடக்காது என்று கேட்டு சொல்லுங்க. நான் என் பசங்கள பார்க்க முடியாதா?” எதுவோ நடந்து விட்டது என்று தாய் உள்ளம் பதறி துடித்ததில் மாமனாரிடம் வந்து நின்றாள் லதா.
“பசங்களா?” என்றவர் வெறுமையாக புன்னகைத்தார்.
“எனக்கு விவாகரத்துதான் வேணும். குழந்தையை காரணம் காட்டி என்ன இங்க தங்க வைக்கவும், உங்க மகன் கூடவும் வாழ வைக்கவும் முயற்ச்சி செஞ்சீங்கன்னா… இதோ உங்க மகனுக்கு பிறந்த குழந்தைகள்ல ஒன்ன நீங்களே வச்சிக்கோங்க. எனக்கு ஒரு குழந்தை போதும்” எந்த தாயும் செய்ய முனையாத காரியத்தை செய்து விட்டு சென்றவள் இன்று தாய்ப்பாசத்தில் துடிப்பதை கண்டவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
தவறெல்லாம் தனது மகன் பூபதியின் மேல் என்று தெரியும். “குழந்தைகளுக்காகவாவது இவள் பொறுமையாக இருந்திருக்க வேண்டாமா? இவளின் பிடிவாத குணத்தால் வெற்றி அன்னை இல்லாமலும், மாறன் தந்தை இல்லாமலும் வளர்ந்தான்.
மாறன் எப்படி பட்டவன் என்று கூட தெரியாது. ஆனால் வெற்றி. ரொம்பவும் மூர்க்கமானவன். கோபக்காரன். சொல் பேச்சி கேளாதவன். யாருக்கும் அடங்காதவன். அன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்திருந்தால் அவன் இப்படி ஆகி இருப்பானா?” செல்வாபாண்டியனால் இந்த நேரத்தில் கூட எண்ணாமல் இருக்க முடியவில்லை.
காலம் கடந்து வந்திருக்கின்றாள். யாருக்கு என்ன ஆகிற்று என்றும் தெரியவில்லை. இவளை பேசி என்ன ஆகிடாப் போகிறது. மருமகளை ஆயாசமாக பார்த்தவர் “பூபதி உள்ளத்தானே இருக்கான். என்ன நடந்தாலும் அவன் வெளிய வந்து சொல்லட்டும். அதுவரைக்கும் பொறுமையா காத்திருப்போம்”
மகன் மருமகளை கண்டும் எதுவும் பேசாமல், விபத்துக்குள்ளாகி இருப்பது தங்களது மகன்கள் என்று தெரிந்தும் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாது அமைதியாக சென்ற தோற்றம் கண்ணில் நிற்க செல்வபாண்டியனுக்கு அவ்வாறு சொல்ல மனம் தூண்டியது.  
  லதாவின் பொறுமையின் எல்லைக் கோடு தாண்டிக் கொண்டிருக்க, ஓட்டமும் நடையுமாக ஒரு தாதி அங்கே பிரசன்னமாகி “மேடம் உங்க எல்லாரையும் சீனியர் டாக்டர் கூட்டிட்டு வர சொன்னாரு” மிகவும் பவ்வியமாக சொல்லியவாறே பொம்மை போல் முன்னாடி நடக்க, அவளை தொடர்ந்தனர் இவர்கள்.
தலைமை மருத்துவரின் அறையில் “ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சிருச்சில்ல பூபதி” சீனியர் டாகடர் விசாரிக்க
முகத்தில் கொஞ்சம் கூட சந்தோசத்தை பிரதிபலிக்காமல் ஒரு மருத்துவராக மாறி “அவன் கண்ணு முழிச்சாதான் எதுனாலும் சொல்ல முடியும் டாக்டர்” என்றார் இவர்.
மருத்துவர்களின் சம்பாஷணையை கேட்டவாறே உள்ளே வந்த அப்பா. மகள், மாமனார் மூவரும் கொஞ்சம் முகம் மலர, பூபதி எழுந்து கொண்டார்.
“எல்லாரும் உக்காருங்க. உக்காந்தாதான் நான் சொல்ல போற விசயத்த உங்களால தெளிவா புரிஞ்சிக்க முடியும்”
தலைமை மருத்துவர் அவரது இருக்கையில் இருக்க, அவரை சுற்றி நால்வரும் அமர்ந்திருந்தனர். பூபதிக்கு அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஏற்கனவே தெரியும் என்பதனால் மனைவியின் கையை பற்றிக் கொண்டார்.
கணவன் கைதொட்டதில் அவரை திரும்பிப் பார்த்த லதா என்ன நினைத்தாளோ தானும் கணவனின் கையை மறுகையால் இறுக பற்றிக் கொண்டு சோபையாக புன்னகைத்தாள். ஆனால் பூபதின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை மலரவில்லை.
“கடவுள் உங்களுக்கு ரெண்டு பசங்கள கொடுத்திருக்காங்க. காரணம் இல்லாமலா கொடுத்திருப்பார். எக்சிடன் ஆனதுல ஒருத்தன் தலைல பலமா அடிபட்டிருக்கு. இன்னொருத்தன் நெஞ்சுல பலமா அடிபட்டிருக்கு. நெஞ்சுல அடிபட்டவனுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பர் பண்ணி அவனை மட்டுமாவது காப்பாத்திடலாம் என்றுதான் நினைச்சோம். ஆனா… சடனா அவன் கண்டிஷன் க்ரிடிகளாகி இறந்துட்டான்”
“என்ன என்ன சொல்லுறீங்க?” பதறிய லதா கணவனை ஏறிட்டு “என்ன சொல்லுறாரு இவரு? யாரு? யாரு?” இறந்தது யார் யார் என்று அவள் வாய் கேட்டாலும், கண்கள் கண்ணீரை சிந்திக்க கொண்டே, தலை சொல்ல வேண்டாம் என்று தானாக ஆடியது.
அப்பொழுது கூட பூபதி ஒரு வார்த்தை பேசவில்லை அமைதியாக மனைவியை அணைத்துக் கொண்டு தோளை நீவி விட்டவாறு தலைமை மருத்துவர் சொல்வதை கவனிக்கலானார். 
செல்வபாண்டியனை ஏறிட்ட தலைமை மருத்துவர் “ஐயா உங்க பையனாலதான் உங்க இன்னொரு பேரன் இன்னைக்கி உசுரோட இருக்கான். தலைல பலமா அடிபட்டு இடது பக்க மூள நசுங்கி போய் கோமால இருக்கிறவன் தான் செத்துப் போவான் என்று நான் நினச்சேன். ஆனா அவனுக்கு இறந்து போன இரட்டையோடு மூளையோட ஒரு பகுதியையே ட்ரான்ஸ்பர் ஆபரேஷன் செய்து அவன் உசுர காப்பாத்திட்டான். இப்படி ஒரு மகனை பெத்ததுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும். யு டன்ன கிரேட் ஜாப்” பூபதியை பாராட்டவும் மறக்கவில்லை.  
அவர் பேசி முடித்ததும் செல்வபாண்டியன் கண்களில் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டு, விட்டு அதே நிலையில் மகனை பார்த்தார்.
இளமையில் வறுமை கொடியது என்பார்கள். முதுமையில் தன் கண் முன்னால் தான் பெற்ற பிள்ளைகளின் மரணமும் கொடியதுதான். அதுவும் தான் உசுரையே பாசமாக வைக்கும் பேரப்பசங்க என்றால்? சொல்லவா வேண்டும்.
தர்மதுரையும், செல்வபாண்டியனும் அழுகையை அடக்கவில்லை. அழுதே பழக்கப்பட்டிராதவர்கள் அவர்கள். கண்களில் கண்ணீர் ஆறாக பெறுக, கட்டுப்படுத்தவும் வழிதெரியாமல், துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச நேரம் அவர்களை அவர்கள் போக்கில் விட்ட தலைமை மருத்துவர் “பாடிய பார்க்கலாமா?” என்று கேட்க, லதாவின் விசும்பல் குரலோடு அனைவரும் சடலங்கள் இருக்கும் அறைக்கு சென்றனர்.
நிர்மலான முகத்தோடு நிரந்தரமாக தூங்கிக் கொண்டிருந்தான் அவன். தலையில் ஒரு பெரிய கட்டு, நெஞ்சில் ஒரு பெரிய கட்டு என்று பார்த்ததும் லதா கதற ஆரம்பித்தாள். அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டார் பூபதி.
“ஐயா பூபதி யாருக்கு நெஞ்சுல அடிபட்டது? யாருக்கு தலைல அடிபட்டது என்று தெரியலையே? இதுல இறந்தது யாரு?” செல்வபாண்டியன் புரியாது குழம்ப, தர்மதுரையும் தான் வளர்த்த பேரான இது? அல்லது மற்ற பேரனா? என்று குழம்பினார்.
“டாக்டர் இது இறந்து போனவரோட துணிமணி” என்று ஒரு தாதி ஒரு பையை கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல, கணவனை விலக்கி விட்டு அவசர அவசரமாக அந்த பையை திறந்து எதையோ தேடினாள் லதா. அவள் தேடியது கிடைக்கவில்லை என்றதும் இறந்தவனின் முகத்தை பார்த்தவள் “பெத்த உடனே உன்ன வேணாம்னு விட்டுட்டு போனதுக்கு அம்மானு கூட கூப்டாம போய்ட்டியேடா” என்று அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“ஐயா பூபதி செத்துப் போனது நம்ம வெற்றியா?” துண்டை வாயில் வைத்துக் கொண்டு கதறினார் செல்வபாண்டி.
தர்மதுரை ஒருபுறம் அழ, யாரையும் சமாதானப்படுத்த தோணாமல் இறந்த மகனின் முகத்தை கண்ணீரோடு பார்த்திருந்தார் பூபதி.
ஆயிற்று வெற்றியின் இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தாயிற்று. அவனை எரித்து, சாம்பலை கூட கடலில் கரைத்து இன்றோடு ஐந்து நாட்கள் முடிந்து விட்டது. ஆனால் மணிமாறன் இன்னும் கண்விழிக்கவில்லை.
செல்வபாண்டியனும், தர்மதுரையும் வீட்டிலையே அடைந்து கிடக்க, லதா மருத்துமனையில் மகனின் அருகில் தவமாய் தவம் கிடந்தாள்.
பூபதி நடைப்பிணமாக நடமாடியவாறு மருத்துவமனைக்கு வந்தும் சென்றும் கொண்டிருந்தவர், மகன் எப்பொழுது கண் திறப்பான் என்று காத்திருக்கலானார்.  
லதாவுக்கு கணவனின் மேல் முன் இருந்த கோபமெல்லாம் இப்பொழுது இல்லை. கணவனால்தான் இன்று தனது மகன் உயிரோடு இருக்கின்றான் என்ற எண்ணம் மனதில் நின்றிருக்க பூபதியை கண்டால் முகம் கொடுத்து பேச ஆரம்பித்தவள், மகனின் நிலையை பற்றி அவரோடு அமர்ந்து உரையாடவும் மணிமாறன் சின்ன வயத்தில் எப்படி இருந்தான் என்றும் கூற ஆரம்பித்திருந்தாள்.
மனைவி இணக்கமாக பேசுவதை இன்முகமாக பார்த்திருப்பதோடு சரி, வேறு எதையும் பெரிதாக எதிர்பாரார்க்காமல் அமர்ந்திருப்பார் பூபதி.
மணிமாறன் படுத்திருக்கும் அறையில் இருவரும் ஒன்றாக தேநீர், காலை மதியம் இரவு உணவு என்று சாப்பிட ஆரம்பித்திருக்க, லதாவே பூபதிக்கு பிடித்தது போல் தேநீர் கலந்து கொடுப்பாள்.
“எனக்கு என்ன பிடிக்கும் என்று உனக்கு இன்னும் நியாபகம் இருக்கா லதா?” தான் என்ன தவறு செய்தோம் என்று பூபதிக்கு புரியவே இல்லை. இவள் என்னை புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள முயலவில்லை என்ற எண்ணம்தான் அவர் மனதில் இருந்தது.
“எனக்கு உங்களோட வாழ்ந்த வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் நல்லா நியாபகம் இருக்கு” அவளது பதிலில் சந்தோசத்தை தாண்டி வலியும் வேதனையும் கொட்டிக் கிடந்ததது மட்டும்தான் உண்மை. ஆனாலும் கணவன் மீதான காதலும் ஆசையும் கூட அதிகமாகத்தான் இருந்தது.
தான் எதற்காக அவரை வெறுத்தேனோ. அதனாலயே இது தனது உயிரையே மீட்டுக்கொடுத்து தனக்காக கொண்டு வந்து கொடுத்திருக்கின்றார் அதற்காகவாவது அவர் செய்தவைகளை மன்னித்து விடலாம் என்றது அவள் காதல் கொண்ட மனம்.     
லதாவுக்கு மெல்ல மெல்ல, தாங்கள் குடும்பமாக வாழ்ந்தால்தான் என்ன என்ற ஆசை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்க, தங்களது வாழ்க்கையில் நடந்தவைகளை எண்ணிப்பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
பூபதி பாண்டியனுக்கும் மனைவியின் மாற்றங்கள் கண்களுக்கு தெரியாமல் இல்லை. அவளை காதலித்து ஒன்றும் அவர் மணக்கவுமில்லை. அதற்காக வேண்டா வெறுப்பாகவும் மணக்கவில்லை. அது கட்டயாக் கல்யாணம் என்று கூட சொல்லலாம். தான் எதையோ காதலிக்க, ஒரு பெண்ணின் மீது ஈடுபாடு வருமா? வந்தது அவள் தாயான போது, தனது மாவுகளை அவள் சுமந்த போது. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கண்ணாடியை கழற்றி விட்டு துடைத்துக் கொண்டார்.   

Advertisement