Advertisement

அத்தியாயம் 9
வெற்றியின் அறைக்கு வந்த மாறனுக்கு அறை சுத்தமாக இருப்பதை கண்டு சந்தோஷமாகவே இருந்தது. 
பூபதி பாண்டியனின் கூற்றின்படி வெற்றி போதைப்பொருளுக்கு அடிமையானவன். அவன் அறையை அவன் பூட்டியே தான் வைத்திருப்பான். எந்த காரணத்துக்காகவும், யாரையும் அறைக்குள் விடமாட்டான். சுத்தம் செய்ய கூட யாரையும் விட மாட்டான் அவனேதான் அறையை சுத்தம் செய்து கொள்வதாக தாத்தா செல்வபாண்டியன் முதற்கொண்டு கூறினார்.
“அவன் இறந்தபின்தான் அவன் அறையை ஒழுங்கு படுத்த முடிந்ததா? பரவாயில்லை. பூட்டி வைத்தாலும் அறையில் தூசி படியாதபடி பராமரிக்கின்றனர். இது நிச்சயமாக அன்னையின் வேலையாகத்தான் இருக்கும்” என்றெண்ணியவாறே அறையை ஒருமுறை சுற்றி வந்தவன் பரிசோதிக்கலானான்.
வெற்றியின் அலைபேசி கிடைத்தால் அவனை பற்றி தகவல் திரட்டலாம் என்று தோன்ற வெற்றியின் அலைபேசியை மற்றும் இதர பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு வைத்ததாக அன்னை சொன்னது நியாபகத்தில் வந்தது. 
கபோர்ட்டை திறந்தவனுக்கு வெற்றியின் துணிகள் அடுக்கி வைத்திருப்பது தெரிய, எல்லாம் சாதாரண உடைகளாகிக்ப் போக அதை வைத்து அவன் என்ன வேலை பார்த்தான் என்று  அறிந்துகொள்ள முடியவில்லை.
ஏதாவது ஐ.டி கார்ட் கிடைக்குமா என்று தேடினால் அதுவும் கிடைக்கவில்லை. சரி அலைபேசியை தேடலாம் என்று பெட்டியை தேட, அது கப்போர்டின் அடியில் இருந்தது. கூடவே வெற்றியின் மடிக்கணினியும்.
“லேப்டாப் எதற்காக உபயோகித்திருப்பான்” என்று அதை ஆன் செய்ய பாஸ்வோர்ட் கேட்டது. “என்னவாக இருக்கும்?” என்று சிந்தித்த மாறன் வெற்றியின் பிறந்த திகதியை கொடுக்க, தவறு என்று காட்டியது மட்டுமல்லாது, மேலும் இருமுறைதான் முயற்சிக்க முடியும் என்றும். தவறினால் உள்ளே இருக்கும் அத்தனை தகவல்களும் அழிந்து விடும் என்று எச்சரிக்கை ஒலி எலிப்பியது.
பதட்டமடைந்த மாறன் அதை சற்று நேரம் தள்ளி வைத்து சிந்திக்கலானான். “இவ்வளவு சிகியூரிட்டி லாக் போட்டு பத்திரப்படுத்தும் அளவுக்கு அதில் என்ன இருக்கின்றது? பேசாமல் பாஸ்வேர்டை ஹாக் செய்ய கொடுக்கலாமா? என்ற எண்ணம் கூட வந்தது.
நிதானித்தவனுக்கு பாஸ்வர்ட் ஏன் ஷாலினி சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது? அவளுடைய பிறந்தநாள்? அவர்கள் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட நாள்? இல்லாவிடின் காதலை சொன்ன நாளாக கூட இருக்கலாம்.
நினைக்கும் பொழுதே நெஞ்சம் வலித்தது, காதலை பற்றி சிந்திக்கும் நேரமா இது? கடமையை செய்யும் நேரமல்லவா?
அவனுடைய பிறந்த நாளின் பொழுது அவளின் பிறந்தநாள் எப்பொழுது என்று கூறி இருந்தாள். அதை கூறியதும் அவனுக்கு மறந்து விட்டதாக நினைத்துதான். இல்லையென்றால் அவனிடமல்லவா கேட்டு குடைந்திருப்பாள். அவள் பிறந்த திகதியை மேசையிலிருந்த குறிப்பு புத்தகத்தில் குறிக்கலானான்.
வெற்றியும், ஷாலினியும் எப்பொழுது சந்தித்தார்கள் என்று மாறன் கனவில் கண்டான். அந்த திகதியையும் குறித்துக்கொண்டான்.
வெற்றி எப்பொழுது ஷாலினியிடம் காதலை சொன்னான் என்பதுதான் மாறனுக்கு தெரியவில்லை.
ஷாலினியிடம் கேட்டால் தனக்கு நியாபகம் இல்லை என்று நினைத்து தன்னிடம் கூறி விடுவாள் ஆனால் இந்த நடுநிசியில் அவளுக்கு அலைபேசி அழைப்பு விடுக்கத்தான் மாறனுக்கு மனம் வரவில்லை.
மடிக்கணினியை அப்புறப்படுத்தியவன் பெட்டியை ஆராயலானான்.
அதில் வெற்றியின் பெயரில் சொந்தமான ஒரு கடை இருப்பதற்கான ஆவணம் இருந்தது.
“கடையா? என்ன கடை இது? என்ன வியாபாரம் பண்ணான்?” என்று ஆராய அது ஒரு கேமிங் சென்டர் என்று குறிப்பிட பட்டிருந்ததோடு அதை சட்ட பூர்வமாக பதிவும் செய்திருந்தான்.
பூபதியிடமோ, செல்வபாண்டியனிடமோ வெற்றி பணம் கேட்டதே இல்லை. ஆனால் அவனிடம் விலை உயர்ந்த வண்டி இருந்தது.
அதை பற்றி தந்தையான பூபதி அதட்டிக் கேக்க, முறைத்து விட்டு செல்வானே ஒழிய அவனிடமிருந்து பதில் மட்டும் வராது. வெற்றி சொல் பேச்சு கேட்பதில்லை. யாரையும் மதிப்பதில்லை. அவன் இஷ்டப்படி நடந்துகொள்வதால் அவன் தப்பான வழியில் செல்வதாக பூபதிபாண்டியன் எண்ணி இருந்தார்.
ஆனால் அவன் லீகலாகவே ஒரு கேமிங் சென்டரை நடத்திக் கொண்டுதான் இருந்திருக்கின்றான். வெற்றிக்கு போதை பழக்கம், பெண்களுடனான பழக்கம் இருந்ததா? மாறனுக்கு தெரியவில்லை. அதை கண்டுபிடிக்க, அந்த கேமிங் சென்டருக்கு போனால்தான் அறிந்துகொள்ள முடியும் என்றெண்ணியவன்.
வெற்றியின் அலைபேசியையும், மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு அறையை பூட்டி விட்டு தனதறைக்கு வந்தவன் தூங்கலானான்.
காலை உணவின் பொழுது மாறன் அவனாகவே தான் இன்று வெற்றியின் கடைக்கு செல்வதாகவும். கடை மாதக் கணக்கில் கேட்பாரற்று கிடப்பதால் அவனது வருமானம் எல்லாம் என்னவாகிறது தெரியவில்லை என்று பேச
“வெற்றியோட கடையா? என்ன கடை?” செல்வபாண்டியன் புரியாது கேக்க, மற்றவர்களும் அவனை ஏறிட்டனர்.
வெற்றி என்ன செய்து கொண்டிருந்தான் என்று இவர்களுக்கு தெரியாது என்று மாறனுக்கு தெரியும். இருந்தாலும் தந்தை அவனை அநியாயமாக கொன்றதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
மாறனை போல் கோமாவுக்கு சென்று அதன்பின் மூளை சாவு அடைந்த ஒருவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறிய பின் அவன் மூளையை அறுத்தெடுப்பது என்பது கூட கொடூரம்தான். இருந்தாலும் அவன் உயிரோடு இருந்து வீட்டுக்கும், அவனுக்கும் பாரமாக இருப்பதை விட அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலபேர் உயிரோடு இருப்பார்கள் அதன் மூலம் அவன் வாழ்வான் என்று அவன் வீட்டார் எண்ணியே உடற்பாகங்களை தானம் செய்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒருவனுடைய மூளையை அறுத்து தனக்கு பொருத்தி இருந்தால் கூட பரவாயில்லை. வெற்றிக்கு இதயத்தில் இரத்த கசிவு, இதய மாற்று சிகிச்சை செய்திருந்தால் அவன் பிழைத்திருப்பான். இன்று அவன் ஷாலினியோடு சந்தோசமாக வாழ்ந்திருப்பான் என்று மாறனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஷாலினியை அவன் பார்த்த நொடி காதலில் விழ, காரணமும் வெற்றியின் மூளையின் பகுதி தானோ என்று மாறனுக்கு சந்தேகமாகவே இருந்தது. போலீஸ்காரனுக்கு எதில் எதிலோ சந்தேகம் வர, மாறனுக்கு தனக்குள் பூத்த காதலை கூட சந்தேகப்பட வேண்டிய நிலை. இது காதலா? சாபமா?
வெற்றி நல்லவனோ! கெட்டவனோ! அவன் தனது சகோதரன், பூபதியின் மகன் அவர் அவனுக்கு இழைத்தது மாக கொடூரம். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவருக்கு தெரியப்படுத்த வேண்டிதான் சாப்பிடும் பொழுது இந்த பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன ஏதுன்னு போய்தான் பார்க்கணும்” என்றவனும் எதுவும் சொல்ல பிடிக்காமல் அனைவரிடமுமிருந்து விடைபெற்றான்.
அவன் பின்னால் ஓடி வந்த பூபதி “உண்மையிலயே வெற்றி கடை வச்சிருந்தானா?” என்று கேக்க,
“என்னையே சந்தேக படுறீங்களா?” வெற்றியை கொன்றதும் இல்லாமல் செத்தவனை கூட விடாமல் சந்தேகப் படுறாரே என்ற கோபம் மாறனுள் கணக்க, அவனை சந்தேகப்படுவதாக  கோபத்தை காட்டினான்.   
“இல்லப்பா.. வெற்றி என்ன செஞ்சிகிட்டு இருந்தான்னு தெரியல. போலீஸ்காரன் நீ கண்டுபிடிச்சிருக்க” என்றார் பூபதி.
அவரை ஒரு ஏளனப் பார்வை பார்த்தவன் “ஏன் என் பின்னாடி டிடெக்டிவ்வ அனுப்ப தெரிஞ்ச உங்களுக்கு வெற்றி பின்னாடி அனுப்ப தெரியலையா? ஒவ்வொருநாளும் நீங்க ஏற்பாடு பண்ண டிடெக்டிவ் சோமசுந்தரம் மாறு வேஷத்துல வந்தா நான் கண்டுபிடிக்காம போய்டுவேனா?”
“நான் டிடெக்டிவ் வச்சது இவனுக்கு தெரியுமா?” தெரிந்தும் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தானா?”  அதிர்ச்சியாக மகனை பார்த்தார் பூபதி.  
“வெற்றி என்ன பண்ணான்னு தெரிஞ்சிக்க வேணாமா? என் வண்டிய பலோவ் பண்ணுங்க” என்றவன் பதிலை எதிர்பார்க்காமல்  வண்டியில் ஏற பூபதியும் அவர் வண்டியில் ஏறி இருந்தார்.
போலீஸ்காரனுக்கு பிடரியிலும் கண் இருக்க வேண்டும். என்னதான் பூபதி வைத்த டிடெக்டிவ் சோமசுந்தரம் தினமும் மாறு வேஷத்தில் மாறனை பின் தொடர்ந்தாலும் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்த கதையாக அவர் செல்வது என்னமோ அவருடைய பழைய வண்டியில்தான். அது ஒன்று போதாதா? மாறனின் சந்தேகப்பார்வை அவர் மீது விழ.
அவரை தூக்கிக் கொண்டு வந்து விசாரிப்பது அவ்வளவு சிரமமா என்ன? அப்படி விசாரிப்பதை விட அவர் யாரு? என்ன? எதற்காக மாறனை பின்தொடர்ந்து வருகிறார். யார் சொல்லி வருகிறார்? அந்த யாரைத்தான் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்தும் விட்டான்.
அவன் டாக்டர் வேணுகோபாலின் க்ளினிக்கு சென்றது தந்தைக்கு இவர் மூலம்தான் தெரிய வந்திருக்கக் கூடும் என்று புரிந்தது.
இவரை அனுப்பி விடலாமா? அல்லது வைத்திருக்கலாமா? என்று சிந்திக்க, வைத்திருக்கலாம் என்று முடிவெடுத்தான்.
அதற்கு காரணனமும் அவனுக்கு நடந்த விபத்து, கொலை முயற்சியா? விபத்தா? இன்னும் தெரியவில்லை. இவனை யாராவது பின் தொடர்ந்தால் நிச்சயமாக சோமசுந்தரத்தின் கண்ணில் பட்டுவிடும் என்றெண்ணினான்.
சோமசுந்தரத்தை தந்தை தன்னை பின் தொடருமாறு அனுப்புவதை கண்டு பிடித்த பின் அமைதியாக இருந்தவனுக்கு, வெற்றிக்கு அவர் செய்த கொடூரத்தை நினைக்கையில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சொல்லி இருந்தான்.  
அண்ணாசாலையிலுள்ள அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்சில் முதலாம் மாடியில் இருந்தது வெற்றியின் கடை.
மாறன் பூபதி வரும்வரையெல்லாம் காத்திருக்கவில்லை. விறுவிறுவென வேக எட்டுக்களை வைத்து கடைக்குள் நுழைந்தான்.  கேம் சம்பந்தமான சீடீக்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததோடு பல பேர் அமர்ந்து கணினியில் கேம் விளையாடக் கூடிய வசதி அங்கிருந்து.
ஆனால் ஒரு பத்து பேர் மட்டும் விளையாடிக் கொண்டிருக்க, மாறனை கண்டுகொள்ள அவர்கள் தயாராக இல்லை. மாறனும் கடையைத்தான் கண்ணால் அலசினான்.
பொதுவாக இப்படி ஒரு கடையை வைக்க எதிர்ப்பு வரும். அதற்கு முதல் காரணம் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இங்கு வந்து விடுவார்கள் என்று. ஆனால் வெற்றி லீகலாகத்தான் இதை நடாத்துகின்றான்.
கதவில் ஒரு அறிவிப்பு இருந்தது மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்று. அப்படி என்றால் இங்கு யார் வந்தாலும் மெம்பர்ஷிப் எடுத்துதான் விளையாட வேண்டும். ஐடி ப்ரூப் மற்றும் அட்ரஸ் வேறு கொடுக்க வேண்டும். போலீஸான மாறனுக்கு அந்த சின்ன அறிவிப்பு தன் சகோதரனின் நேர்த்தியை கூற, இவன் தப்பானவனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான்.
கூடவே சில அறிவிப்புகள், புட் நோட் அல்லோவ்ட், நோ ஸ்மோக்கிங். என்றெல்லாம் இருந்தது.
“சார்” காக்கிச்சட்டையை பார்த்ததும் அழைக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தித்தவாறே அழைத்திருந்தான்மாறனின் பின்னால் வந்து நின்றவன்.
மாறன் அவன் புறம் திரும்பியதும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த பார்வையை வீசியவன் சாலியூட் வைத்தான்.
“என்னய்யா நீ போலீசா?”
“இல்ல சார்… நீங்க செத்து போய்ட்டீங்கனு” என்றவாறே மாறனின் பெயரை பார்த்து விட்டு எச்சில் விழுங்கினான்.
“அப்போ எந்த போலீசை பார்த்தாலும் இப்படி சாலியூட் வைப்பியா?”
“அப்பா போலீஸ் சார். அவர் வீட்டுக்கு வரும் போது சாலியூட் அடிப்பேன். சடனா காக்கிசட்டைல உங்கள பார்த்ததும்…” என்று இழுக்க,
“அப்போ நீ என்ன வெற்றின்னு நினைச்சி சாலியூட் வைக்கல” என்றவாறே மாறன் அவன் தோளில் கை போட, பூபதியும் வந்து சேர்ந்தார்.
“இவர தெரியுமா?”  மாறன் அவனிடம் பூபதியை காட்டிக் கேக்க,
“தெரியாது” என்று தலையசைத்தான்.
“உன் பேரென்ன?”
“ராபின் சார். வயசு முப்பத்தி மூணு”
“இவர்தான் வெற்றியையும், என்னையும் பெத்தவாறு. வெற்றிக்கு கடை இருக்குற விஷயமே இன்னைக்குத்தான் எங்களுக்கு தெரியும். அவன் கடை அவன் பணம். எங்க போகுது? அப்பாவா இவர் தெரிஞ்சிக்க வேணாமா?” தான் இங்கு விசாரணைக்காக வரவில்லை என்பதை சொல்லாமல் சொன்னவன் ஆனால் விசாரிப்பேன் என்றான்.
“ஓஹ்… வாங்க சார்…” என்ற ராபின் மாறனையும் பூபதியையும் காரியாலய அறைக்கு அழைத்து சென்றான்.
“வெற்றி சாருக்கு கேம்னா ரொம்ப பிடிக்கும். எப்ப பார்த்தாலும் கம்பியூட்டர் முன்னாடி ஏதாவது ஒரு கேம் விளையாடிகிட்டே இருப்பாரு. சரியா சொல்லனும்னா எக்ஸ்பெரிமெண்ட்னு கூட சொல்லலாம். நமக்கு பிடிச்ச வேலைய பார்த்தா தானே சார் மனசு நிம்மதியா இருக்கும். அவருக்கு எது பிடிச்சிருக்கோ அதையே வேலையா பண்ண ஆரம்பிச்சி. இன்னைக்கி சக்ஸஸாகி இருக்காரு.
ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் கடைய சொந்தமா வாங்கினாரு. நாம கேமிங் சென்டர் மட்டும் வைக்கல சார். டாப் லெவெல்ஸ் எல்லாம் யூ டியூப்ல அப்லாட் பண்ணிடுவோம். போப்பியுள்ளர் கேம்ஸுக்கேன்னு தனியா யூ டியுப்ஸ் இருக்கு. மொத்தம் எட்டு யூ டியுப்ஸ். அதுல வரும் வருமானத்துலதான். இங்க வேல பாக்குறவங்களுக்கும், மென்டைன்ஸ் அப்பொறம் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சார் அணிப்பிடுவாரு” என்றான் ராபின்.
“இங்க எத்தனை பேர் வேல பாக்குறாங்க?” என்ற மாறன் தந்தையை முறைக்கலானான்.
“நாலு பேர்” அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்தனர் அந்த மூவரும். மூவரையும் ராபின் அறிமுகப்படுத, மாறனை கண்டு அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி, ஆச்சரியம் என்று விழி உயர்த்தியவாறே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். 
“வெற்றி இறந்துட்டான். எங்க கிட்ட அவன் கடைய பத்தி இன்போர்ம் பண்ணனும்னு உங்களுக்கு தோணலயா?” கொஞ்சம் கோபமாகவே பூபதி பாண்டியன் கேட்க
“சார்தான் யாரும் வந்து கேட்க மாட்டாங்க. நான் இல்லனாலும் எல்லாம் அப்படியே நடக்கட்டுன்னு சொன்னாரு” என்றான் பஷீர்.
பூபதியின் முகம் சட்டென்று கருமை கொள்ள, மாறனின் மனம் குளுகுளுவென இருந்தது.
“இங்க நீ என்ன வேல பாக்குற?” மாறன் அவனை ஏறிட
“கணக்கு வழக்கு எல்லாம் நான்தான் சார் பாக்குறேன்” என்றவன் மளமளவென கணினியில் சேமித்து வைத்திருந்த கணக்கு வழக்குகளை காட்டினான்.
“வெற்றி ஒரு மாசத்துக்கு எவ்வளவு செலவழிப்பான்” தந்தையை பார்த்தவாறு கேட்டான் மாறன்.
பூபதி பாண்டியனுக்கு வெற்றி இப்படி ஒரு கடையை வைத்து நாலு பேருக்கு வேலையும் கொடுத்திருக்கின்றான் என்பதே அதிர்ச்சியாக இருக்க, அநாதை ஆசிரமத்துக்கு பணம் கொடுப்பது பேரதிர்ச்சியாக இருந்தது. தான் அவனை தப்பாக எடை போட்டு விட்டோமோ? அப்படியென்றால் நான் பார்த்து எல்லாம் என்ன? அவரால் இன்னும் நம்ம முடியவில்லை? எது உண்மை?
“அனாவசியமா எந்த செலவும் பண்ண மாட்டாரு. ஆனாலும்…” பஷீர் இழுக்க
“நம்ம வாழ்க நம்ம கைல, இப்போ சந்தோசமா இருந்தா தான். பணத்தை சேமிச்சு வைக்கிறேன்னு வயசான காலத்துல இளமைல பண்ண வேண்டியத பண்ண முடியாம போகலாம்னு காஸ்ட்லீ பைக் வாங்கினாரு” என்றான் நிதீஷ் என்பவன்.
“டேய் சார் அத கூட மாசம் மாசம் அவர் பணத்துல இருந்து கட் பண்ணிக்க சொன்னாருடா…” என்றான் பஷீர்.
“என்ஜோய் பண்ணுற வயசுல என்ஜோய் பண்ணுங்கடா… ஆனா அளவா” “இதுதான் சார் அடிக்கடி சொல்லுற வார்த்த” என்றான் ராபின்   
“ஆமா சார். வெற்றி சார் ஒரு டைப்பான ஆளுதான். அவரை புரிஞ்சிகிட்டா ரொம்ப நல்லவர். அவரை இரிடேட் பண்ணா ரொம்ப கோவப்படுவாரு. பொல்லாதவரா மாறிடுவாரு” என்றான் செல்வம்.
“இந்த ட்ரக்ஸ், பொண்ணுங்க?” இந்த கேள்விக்குத்தான் மாறனுக்கு கண்டிப்பாக பதில் தேவை பட்டிருந்தது. 
“எங்களுக்கு தெரிஞ்சி இல்ல சார்” நாலு பேரும் ஒரே நேரத்தில் கூறினர். 
“ஓகே, நான் ப்ரீ டைம்ல வரேன்” என்ற மாறன் விடை பெற,
“சார் வெற்றி சாரோட பங்கு பணம் அப்படியே இருக்கு?” பஷீர் அதை என்ன செய்வது என்று மாறனிடமே கேட்டான்.
“அத இவர் கைலயே கொடுத்துடுங்க” தந்தையை கைகாட்டியவன் கிளம்பி விட்டான். அதற்கு மேல் அவனுக்கு அங்கிருக்க இஷ்டமில்லை. வெற்றி எந்த தவறும் செய்யவில்லை என்று தந்தைக்கு நிரூபித்து விட்டான்.
அவர் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்குமோ? அழுது கரைவாரோ? அது அவர்பாடு.
  காவல்நிலையம் செல்லும் பொழுதே ஷாலினியை அழைத்து வெற்றி உனக்கு எப்பொழுது காதலை சொன்னான் என்று கேட்டான்.
“என்ன வெற்றி சார். யாரோ மாதிரி பேசுறீங்க?” என்று அவள் சொன்னதும் சுதாரித்தவன்
“நான்தான், நான்தான் எப்போவாச்சும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கேனா?”
“சொல்லியே ஆகணுமா?” ஷாலினி மாறனின் அவசரம் புரியாமல் கேலி செய்ய, அவள் மேல் கோபம் கூட பட முடியாமல் தலையில் கைவைத்தான் மாறன்.
“ப்ளீஸ் என் லேப்டப் பாஸ்வோர்ட் மறந்துட்டேன். சொல்லு” மாறன் கெஞ்ச
“லேப்டப் பாஸ்வேர்டா? அது நாம பர்ஸ்ட் மீட் பண்ண நாளாச்சே” உளறினாள்.
“தேங்க்ஸ்” என்றவன் அலைபேசியை துண்டிக்க, மாறனை வசைபாட ஆரம்பித்தாள் ஷாலினி.
மாறன் காவல் நிலையம் சென்று வண்டியை நிறுத்தும் பொழுது ஷாலினி வாசலில் நின்றிருந்தாள்.
“என்ன இவ சண்டை போட கிளம்பி வந்துட்டாளா?” என்ற பார்வையோடு மாறன் இறங்க
“சார் இவங்க” ஏட்டு ஆறுமுகம் ஷாலினியை பற்றி கூற முற்பட
“எனக்கு தெரிஞ்சவங்கதான்” என்றான் மாறன்.
“தெரிஞ்சவங்கன்னா? எப்படி தெரியும் அதையும் கொஞ்சம் சொல்லேன். போன் பண்ணி பேசிகிட்டு இருக்கும் போதே கட் பண்ணுற? நீயும் போன் பண்ண மாட்டேங்குற? நான் போன் பண்ணாலும் கட் பண்ணுற? என்ன நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல?” கடுப்பாகி கத்தலானாள் ஷாலினி. 
அமைதியாக அவளை பார்த்தவன் “இன்னக்கி ஸ்கூல் போகலையா?” என்று கேட்க
“நான் என்ன பால்வாடி பாப்பாவா?” அவனை நன்றாகவே முறைக்க, மாறனின் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்தது.
அவனுக்குத்தான் அவள் என்ன செய்தாலும் கோபம் வராதே. “ஷாலு எனக்கு நிறைய வேல இருக்கு. நாம அப்பொறம் பேசலாம். ஓகே” என்று உள்ளே செல்ல அடியெடுத்து வைக்க
“அப்போ எனக்கு வேலைவெட்டி இல்லனு சொல்லுற?” அவன் வழியை மறித்து நின்றாள்.
“இப்படி பேசினா எப்படி?” கையை கட்டியவன் அவளையே பார்த்திருந்தான். அவள் ஒரு முடிவோடு வந்திருக்கின்றாள் அது என்னவென்ருதான் அவனால் ஊகிக்க முடியவில்லை.
“நான் ஒன்னும் சும்மா வரல என் அக்கா கேஸ் விஷயமா பேசத்தான் வந்தேன்” என்றவள் அவனை தாண்டி உள்ளே செல்ல, மாறனும் உள்ளே சென்றான்.
“என்னய்யா ஆறுமுகம். நம்மையா இந்தம்மாகிட்டு இப்படி பம்முறாரு” பழனிவேல் சொல்ல
“என்ன விஷயமாக இருக்கும்?” தலையை சொரிந்தார் ஏட்டு ஆறுமுகம்.
“ஒருவேளை அந்தம்மா பத்திரிக்கைல வேல பாக்குறாங்களோ?” பழனிவேல் மீண்டும் சந்தேகம் எழுப்ப,
“இருக்கும், இருக்கும்” என்றார் ஆறுமுகம்
உள்ளே வந்த ஷாலினி உரிமையாக அவன் முன் அமர்ந்து கொண்டு மாலினியின் மரணத்தை பற்றி என்ன கண்டு பிடித்தாய்? கேசில் என்ன முன்னேற்றம் உள்ளது என்று விசாரிக்கலானாள்.
“நிஜமாலுமே இவ கேஸ் சம்பந்தமாகத்தான் வந்திருக்காளா?” புருவம் உயர்த்திய மாறன். அவளிடம் சொல்ல முடியுமான தகவல்களை மட்டும் பகிர்ந்தான்.
“என்ன சொல்லுற? வாஷ்ரூம்ல கேமரா வச்சி குளிக்கிறத வீடியோ எடுத்து அத அனுப்பி ப்ளேக்மெயில் பண்ணி கண்டதை பண்ண சொல்லி இருக்கானா? அப்படினா என் அக்கா?” அச்சப்பட்டவளாக கேட்டாள்.
“நீ பயப்படுற மாதிரி மாலினி போன்ல எதுவுமே இல்ல. ஆனா அவ சூசைட் பண்ணிக்கலைனு நமக்கு இருக்குற ஒரே க்ளூ அவ லெப்ட் ஹன் எங்குறது மட்டும்தான். ஆ… சீசீடிவியை ஆப் பண்ணி வச்சதும்”
“அப்போ எதற்காக அக்காவை கொலை பண்ணான்? எப்படி வீட்டுக்குள்ள வந்தான்?”
“இந்த ஹைடெக் திருடர்களுக்கு உள்ள நுழையிறது எல்லாம் அவ்வளவு சிரமம் இல்ல. திருட்டு ஒரு கலைனு சொல்லுவானுங்க. அதே மாதிரிதான் கொலையும். ஆனா கொலை பண்ணுறதுல பல வழி இருக்கு சைக்கோ கொலைகாரன் நின்னு நிதானமா ரசிச்சு பண்ணுவான். போராடுறவன் தான் பதட்டத்துல பண்ணுவான். மாலினிய கொலை பண்ணவன் பக்கா திட்டம் போட்டு பண்ணி இருக்கான். இதுல இன்னொரு விஷயம் இருக்கு நான் பாக்குற கேஸுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்க? இல்லையா? எங்குறதுதான்”
“புரியல”
பூங்குழலியின் கேஸை பற்றி கூறியவன் “உங்க அக்காவையும் அப்படியே கொன்னு போன்ல கண்டதை நிரப்பி இருக்கலாம். ஆனா அப்படி பண்ணாம வீட்டுக்கு வந்து போகுற ஒரே ஆம்புல உன் மாமா அண்ட் சீக்கிரம் கல்யாணமாக போகுது. அதனால, அவரால உங்கக்கா தற்கொலை பண்ணி இருக்கலாம். உன்னால கூட இருக்காம் எங்குற பழைய சந்தேகம் எல்லோருக்கும் வரும்னு நினைச்சி இருக்கான்”
“ஆமா.. பக்கத்துக்கு வீட்டுல எல்லாம் இதே கேள்வியைத்தான் கேட்டாங்க. ஏன் நீ கூட” என்ற ஷாலினி மாறனை முறைத்தாள்.
“நான் போலீஸ் மா… என் பார்வை வேற”
“சரி சொல்லு”
“நீயும் உன் மாமாவை சந்தேகப் படல. உன் மாமாவும் மாலினி ஏன் செத்தான்னு தெரியாம சோககீதம் பாடிகிட்டு இருக்காரு. இத அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்த்திருக்க மாட்டான். ஆனாலும் இன்னும் ஏதாவது பண்ண போய் மாட்டிக்குவோம்னு ஒதுங்கி இருப்பான்”
“அப்படினா உனக்கு என் மாமா மேல இருந்த சந்தேகம் போச்சா?” ஷாலினி சந்தேகமாகவே கேட்க
“அவர பத்தி விசாரிச்சேன். உனக்கு அவர உன் அக்கா அவர் ஸ்கூல்ல டீச் பண்ண போனப்போ தானே தெரியும். ஆனா அவருக்கு உங்கள உங்கக்கா காலேஜ் படிக்கிறப்போவே தெரியும். மனிசன் அப்போவே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்காரு. நேத்து நான் அவர்க்கு போன் பண்ணி பேசினேன். மாலினி சூசைட் பண்ணிக்கல கொலை பண்ணி இருக்கானுங்க தேடிகிட்டு இருக்கேன்னு”
“என்னது? அதுக்குதான் என்ன இங்க வர சொன்னாரா?” ஷாலினி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாது பார்த்தாள்.

 

 

Advertisement